9 தன்மையாவின் தவிப்பு
9 தன்மையாவின் தவிப்பு
*தலைவனைப் பிரிந்த தலைவி பசலை நோயால்(1) வாடினாள்* என்று சங்க இலக்கியத்தில் படித்தது தன்மயாவுக்கு நினைவுக்கு வந்தது.
காதலின் உணர்வைச் மிக அழகாக சொல்ல கூடிய கவிஞர்கள் வாழ்ந்த காலம், சங்க காலம். அந்த சங்க காலத்தை சேர்ந்த பொன்னி, விவரம் இல்லாமல் இருந்தது, தன்மயாவுக்கு ஆச்சரியம் அளித்தது. எல்லா காலகட்டத்திலும் விதிவிலக்குகள் உண்டு போலிருக்கிறது.
பொன்னியின் மாமியாரும், அவளது அம்மாவும் எப்படி குழந்தை பெற்றார்கள் என்று புரியவில்லை தன்மயாவுக்கு. இதை எப்படி எங்கிருந்து துவங்குவது என்றும் அவளுக்கு புரியவில்லை.
"நான் தங்களிடம் ஒன்று கேட்கலாமா?" என்றாள் பொறுக்க முடியாமல்.
"சொல்லுங்கள் அக்கா"
"நான் கேட்கிறேன் என்று என்னை தவறாக எண்ண வேண்டாம். எதற்காக தங்கள் மாமியார் உங்களிடம் சத்தமிட்டு கொண்டிருந்தார்?"
பெருமூச்சு விட்ட பொன்னி,
"தங்களைப் பார்த்தால் என் சகோதரி போல் இருக்கிறீர்கள். தங்களிடம் எனது பிரச்சனையை கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன். எனக்கு பதினான்கு வயதான போது எனக்கு திருமணம் நடைபெற்றது. இப்பொழுது எனக்கு பதினெட்டு வயதாகிறது. ஆனால் எனக்கு இன்னும் குழந்தை பேரு வாய்க்கவில்லை. அதனால் தான் எனது மாமியார் என்னை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கிறார்"
"தங்கள் கணவர் ஒன்றும் கூற மாட்டாரா?"
"அவரால் என்ன கூற முடியும்? நான் தான் அவர் குடும்பத்திற்கு வாரிசை அளிக்கவில்லையே...! மக்கள் கூறுவது சரியாகத் தான் இருக்கும்"
"மக்கள் என்ன கூறினார்கள்?"
"நான் சபிக்கப்பட்டவள் என்கிறார்கள். அதனால் தான் எனக்கு குழந்தை பேரு வாய்க்கவில்லையாம்"
"குழந்தை பெற்றவர்கள் அனைவரும் வரம் வாங்கி வந்தவர்களும் அல்ல... குழந்தை இல்லாதவர்கள் சபிக்கப்பட்டவர்களும் அல்ல..."
"மக்கள் அப்படித்தானே அக்கா நினைக்கிறார்கள்...? தாங்களே கூறுங்களேன், நான் சபிக்கப்பட்டவள் இல்லை என்றால், எதற்காக கடவுள் எனக்கு குழந்தை வரம் அருளாமல் என்னை சோதிக்கிறார்? நான் தவறாமல் கோவிலுக்கு செல்கிறேன், அரசமரம் சுற்றுகிறேன், விரதம் இருக்கிறேன், ஆனாலும் கடவுள் என் மீது கருணை காட்ட வில்லையே"
*இவ்வளவு வேலை செஞ்சியே... செய்ய வேண்டிய வேலையை செஞ்சியா? எதை செய்யணுமோ அதை விட்டுட்டு, வேண்டாததை எல்லாம் செஞ்சுக்கிட்டு இருந்திருக்கு இந்த பொண்ணு* என்று முணுமுணுத்தாள் தன்மயா.
"தாங்கள் ஏதாவது கூறினீர்களா?" என்றாள் பொன்னி.
"தங்கள் கணவர் எங்கே இருக்கிறார்?"
"அவர் ஊர் காவலுக்கு சென்றிருக்கிறார். அது இந்த ஊரின் விதிகளில் ஒன்று. ஒவ்வொரு இரவும், எட்டு பேர் கொண்ட குழு இந்த ஊரை காவல் காக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடும்பத்திலிருந்து ஒருவர் செல்வர். இன்று எங்கள் குடும்பத்தின் முறை"
"ஓ..."
"அவர் நாளை காலை தான் வருவார்"
"சரி, நான் எனது உடைகளை மாற்றிக் கொள்ள விரும்புகிறேன்"
"ஆமாம், இந்த உடையை பார்த்தால் வசதியாக இருப்பதாக தோன்றவில்லை. தாங்கள் எப்படி இந்த உடையை அணிந்து கொண்டிருக்கிறீர்கள்?" என்றாள் பொன்னி தயக்கத்துடன்.
"எனக்கு பழகிவிட்டது"
"ஆம். தாங்கள் குழந்தையாய் இருக்கும் போதிலிருந்தே இதை அணிந்து பழக்கப்பட்டிருப்பீர்கள்..."
சிரித்தபடி தன் பையில் இருந்த, முழங்கால் வரை இருக்கும் இரவு உடையை எடுத்தாள் தன்மயா.
"தாங்கள் அங்கு சென்று, உடை மாற்றிக் கொள்ளலாம்" என்றாள் பொன்னி, அந்த அறையின் மூலையில் இடப்பட்டிருந்த திரைச்சீலையை சற்றே விளக்கி.
தன்மயாவுக்கு புரிந்து போனது. அது பொன்னியின் கணவன் வீட்டில் இருக்கும் சமயத்தில் பொன்னி உடைமாற்றும் இடம் என்பது. அங்கு சென்று தன் உடைகளை மாற்றிக் கொண்டாள்.
"பொன்னி, நீங்கள் உறங்குங்கள். நான் இப்பொழுது வருகிறேன்"
"தங்களுக்கு ஏதாவது தேவையா?"
"நான் படைத்தலைவரை சந்தித்து, அவரிடம் முக்கியமான ஒன்றை கூற வேண்டும்"
சரி என்று தலையசைத்தாள் பொன்னி.
அமுதனை தேடிக் கொண்டு, அறையை விட்டு வெளியே வந்தாள் தன்மயா. முற்றத்தில் போடப்பட்டிருந்த மரக்கட்டிலில் அகவழகன் தனியே படுத்திருந்தார். அங்கு அமுதனை காணாத தன்மயா, அவனை இங்கும் அங்கும் தேடினாள். அவன் எங்கு உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு தெரியவில்லை. யாரிடம் கேட்பது என்றும் புரியவில்லை.
அப்பொழுது அவள் பக்கம் திரும்பிய அகவழகன், அவள் நிற்பதை பார்த்து,
"தங்களுக்கு ஏதாவது வேண்டுமா, அம்மா?" என்றார் எழுந்தமர்ந்து.
"படைத்தலைவரிடம் ஒரு முக்கியமான விடயத்தை கூற மறந்து விட்டேன். அவர் எங்கிருக்கிறார்?"
"அவர் வெளியில் திண்ணையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்"
"ஓ..."
"நான் தங்களுடன் வரட்டுமா?"
"வேண்டாம், ஐயா"
அந்த வீட்டின் பெரிய நுழைவு வாயிலின் அருகே சென்று அந்த கதவின் மிகப்பெரிய தாழ்ப்பாளை இரு கரங்களால் பிடித்து இழுத்தாள். கதவை திறந்து கொண்டு வெளியே வந்த அவள், அங்கு அமுதன் திண்ணையில் உறங்கிக் கொண்டிருப்பதை நிலவொலியில் பார்த்தாள். சத்தம் செய்யாமல், மிகப்பெரிய அந்தத் திண்ணையின் மீது மெல்ல தவழ்ந்து அவன் அருகில் வந்தாள். அவள் அவனை தொட்டு எழுப்புவதற்கு முன், அவள் கழுத்தில் கத்தியை வைத்து அவள் கரத்தை இறுகப்பற்றினான் அமுதன்.
"அய்யய்யோ... நான் தான், நான் தான்," என்று பயத்துடன் கத்தினாள்.
அவள் குரலைக் கேட்ட அவன்,
"தாங்களா? இந்நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்றான்.
"நான் தங்களை கொல்வதற்காக வந்தேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். பாருங்கள் என் கையில் ஒன்றும் இல்லை" என்று தன் கரங்களை நீட்டினாள்.
"இல்லை... நான் அப்படி நினைக்கவில்லை"
"தங்களிடம் ஒரு முக்கியமான விடயம் குறித்து பேச வந்தேன்"
"என்ன அது?"
"தங்களுக்கு நினைவிருக்கிறதா, நாம் இங்கு வந்த போது, அகவழகரின் மனைவி, அவரது மருமகளை திட்டிக்கொண்டிருந்தார்..."
ஆமாம் என்று தலையசைத்தான்.
"அதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும்"
அந்த பெண்ணிடம் பேசிய தன்மயா, அந்த பெண் மீது பச்சாதாபம் கொண்டிருக்கிறாள், அதனால் தான் அவளுக்கு உதவ நினைக்கிறாள் என்று எண்ணினான் அவன்.
"அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? இது அவர்களது குடும்ப பிரச்சனை. அதில் நாம் தலையிடுவது அழகல்ல"
"தாம் அப்படி கூறினால் எப்படி? தங்கள் ஒரு படைத்தலைவர் அல்லவா? இந்நாட்டின் மக்களின் மகிழ்ச்சியில் உங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது தானே?"
"ஆனால், இது அந்த குடும்பத்தின் வாரிசு சம்பந்தப்பட்ட விடயம். இந்த குடும்பத்தினர் தங்கள் மருமகளிடம் அதை எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?"
"அதைப் பற்றித்தான் நானும் உங்களிடம் பேச வந்தேன். அவர்களுக்கு வாரிசு வேண்டும்... ஆனால் வாரிசை பெறுவதற்கான எந்த வேலையும் இன்னும் துவங்கப்படவேயில்லை..."
"தாங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை"
"தம்பதியருக்கு இடையில் எதுவுமே நடக்கவில்லை என்று கூறுகிறேன்"
அதைக் கேட்டு திகைத்து நின்றான் அமுதன். அவன் உண்மையிலேயே சரியாக தான் கேட்டானா? அவன் என்ன புரிந்து கொண்டானோ அதைப்பற்றி தான் அவனுக்கு முன்னால் இருக்கும் பெண் பேசிக் கொண்டிருக்கிறாளா?
"தாங்கள் கூறுவது..." என்றான் அடங்கிய குரலில்.
"ஒன்றும் நடக்கவில்லை என்றால் ஒன்றுமே நடக்கவில்லை...! இந்த தம்பதியருக்கு தாம்பத்தியத்தை பற்றி எதுவுமே தெரியாது என்று நினைக்கிறேன்"
அதைக் கேட்டு அமுதன் அதிர்ந்தான். அந்த தம்பதியருக்கு தாம்பத்தியத்தை பற்றி தெரியாது என்பதற்காக அல்ல. ஒரு பெண் அதைப்பற்றி அவனிடம், தயக்கமோ, வெட்கமோ இன்றி வெளிப்படையாய் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதற்காக. அவளை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு நின்றான். அதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே அவனுக்கு புரியவில்லை. அவனுக்கு தெரிந்தவரை, அவன் நாட்டை சேர்ந்த பெண்கள் இது பற்றி தன் கணவனிடம் கூட பேச தயங்குவார்கள் என்று அவன் எண்ணியிருந்தான். அவ்வளவு ஏன், அவன் நாட்டு பெண்கள் அதைப்பற்றி பேசுவார்களா என்பது கூட சந்தேகம் தான். ஆனால் இந்தப் பெண்ணுக்கு அப்படிப்பட்ட தயக்கம் எதுவும் இல்லை. அந்த தம்பதியருக்கு தாம்பத்தியம் என்றால் என்னவென்று தெரியாது என்று இவள் கூறுகிறாள். அப்படி என்றால் இவளுக்கு அதைப் பற்றி தெரியுமா? எப்படி தெரிந்து கொண்டிருப்பாள்? இவளை பார்த்தால் திருமணம் ஆகாதவள் போல் தெரிகிறதே... அப்படி இருக்கும் பொழுது, எப்படி?
"இதைப் பற்றி தங்களுக்கு எப்படி தெரியும்?" என்றான் தயக்கத்துடன்.
"அந்தப் பெண் பேசியதில் இருந்தே நான் இதை தெரிந்து கொண்டேன். அந்தப் பெண் இதுவரை தன் கணவனை அணைத்துக் கொண்டது கூட இல்லை. அதைப் பற்றி பேசியதற்கு அவள் வெட்கப்படுகிறாள்" என்றாள் தன்மயா தவிப்புடன்.
"இல்லை... நான் கேட்டது அதைப்பற்றி அல்ல. இதைப் பற்றி தங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறேன்?" என்று அவன் தாம்பத்தியம் குறித்து வெளிப்படையாய் கேட்க முடியாமல், ஏகப்பட்ட தயக்கத்துடன் கேட்டான்.
"அவளும் அவள் கணவனும் தனித்தனியாக உறங்குவதாய் அந்த பெண் கூறுகிறாள். அவர் கட்டிலிலும், இவள் தரையிலும் உறங்குவார்களாம். அதை வைத்து புரிந்து கொண்டேன். அவர்கள் தனித்தனியாய் உறங்கினால், அவர்களுக்கு எப்படி குழந்தை பிறக்கும்?" என்றாள் அவள் பரிதவிப்புடன்.
பெருமூச்சுடன் தலையசைத்த அவன்,
"நான் தங்களிடம் கேட்டது, குழந்தை எப்படி பிறக்கிறது என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன்..."
"எங்கள் பாடநூலில் இருக்கிறது" என்றாள் அவள் அலுப்புடன்.
"என்ன கூறினீர்?" என்றான் தான் தவறாக கேட்டு விட்டோமோ என்று எண்ணி.
"நாங்கள் அவற்றை பாடசாலையில் கற்ப்போம் என்றேன்"
"என்னன்ன? பாடசாலையிலா? தாங்கள் இப்படிப்பட்ட விடயங்களை பாடசாலையில் கற்க்கிறீர்களா?" என்றான் அவன் அதிர்ச்சியோடு.
"ஆம்"
"அப்படி என்றால், தங்கள் நாட்டில் இருக்கும் அனைவரும் இதைப் பற்றி அறிவார்களா?"
"அறிவார்களே..."
"இதை என்னால் நம்ப முடியவில்லை. அதனால் தான் தங்கள் நாட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது"
அவன் கூறுவது சரி தான் என்று தோன்றியது அவளுக்கு.
"அவளது கணவனிடம் இதைப் பற்றி பேசி அவருக்கு புரிய வையுங்கள்" என்றாள் தன்மயா.
"நானா?"
"ஆம், தாங்கள் தான்"
"இது என்ன அசட்டுத்தனம்?"
"ஆம், இங்கு அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது!"
என்ன கூறுவது என்று புரியவில்லை அமுதனுக்கு
"வழியில் நாம் பார்த்த வழக்கு சம்பந்தப்பட்ட அந்த பெண், தன்னிடம் தவறாக நடந்து கொள்ள துணிந்தவனை மணந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் நினைத்தது எதற்காக? அந்த பெண் தன்னை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக தானே? அவள் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும் என்பதற்காகத் தானே? இதுவும் ஒரு பெண்ணின் மகிழ்ச்சி பற்றிய விடயம் தான். அவளது மாமனார் மாமியாருக்கு உண்மையான பிரச்சனை என்னவென்று தெரியவில்லை. அவளுக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு காரணம், அந்த பெண்ணிடம் ஏதோ குறை இருக்கிறது என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த தம்பதியரோ திருமணம் என்று நடந்து விட்டாலே குழந்தை பிறந்து விடும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தாம்பத்தியத்தை பற்றி எதுவும் தெரியவில்லை"
அமுதன் சங்கடத்தில் நெளிந்தான். அவன் எப்படி அந்த பெண்ணின் கணவனிடம் இதைப் பற்றி பேசுவது? இவள் கூறுவதை வைத்து பார்க்கும் போது, அந்த தம்பதியருக்கு தாம்பத்தியத்தை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லை போல் தெரிகிறது. அப்படி என்றால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து கற்பிக்க வேண்டும். அதை அவன் எப்படி செய்வது? இது தர்ம சங்கடம். அவன் இதைப் பற்றி எல்லாம் இதுவரை யாரிடமும் பேசியதில்லை. உண்மையை கூறப்போனால், இது மற்றவரிடம் பேசக்கூடிய விடயமே இல்லை. அப்படி இருக்கும் போது, முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவனிடம் எப்படி அவன் அதை பற்றி பேச முடியும்? நிச்சயம் முடியாது. இதற்கு வேறு ஒரு வழி இருக்கிறதா என்று ஆராய வேண்டும்.
அவன் ஆழமாய் யோசித்துக் கொண்டிருந்ததை பார்த்த தன்மையா,
"என்ன யோசிக்கிறீர்கள்?" என்றாள்.
அவன் ஒன்றும் கூறாமல் அமைதியாய் நிற்கவே, அவள் மனதில் ஒரு எண்ணம் உதித்தது.
"எல்லாம் சரி.... தங்களுக்கு தாம்பத்தியம் என்றால் என்னவென்று தெரியுமா?" என்று கேட்டாளே பார்க்கலாம்...!
அவளுக்கு என்ன பதில் கூறுவது என்று அவனுக்கு தெரியவில்லை. இங்கும் அங்கும் பார்த்தபடி விழித்துக் கொண்டு,
"நான் இதற்கு ஒரு நல்ல வழியை கண்டுபிடிக்கிறேன்" என்றான்.
"உண்மையாகவா?" என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
அவன் ஆம் என்று தலையசைத்தான்.
"தவறு செய்ததற்காக தண்டனை கிடைப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் தவறு செய்யவில்லை என்பதற்காக தண்டனை கிடைப்பது என்ன நியாயம்?" என்றாள் அவள் முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு.
தன் சிரிப்பை அடக்க அரும்பாடு பட்ட அமுதன்,
"தாங்கள் சென்று நிம்மதியாய் உறங்குங்கள்" என்றான் தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு.
நிம்மதி பெருமூச்சு விட்டு அவள் அங்கிருந்து செல்ல நினைத்தபோது,
"அது சரி, தாம் எதற்காக வெளியில் தனியாய் உறங்குகிறீர்கள்?" என்றாள்.
"நல்ல காற்று வீசுகிறது. அதனால் தான்"
"வீட்டின் உள்ளே கூட நல்ல காற்றோட்டம் இருக்கிறது"
"ம்ம்ம்"
"தாங்கள் எதற்காக வெளியில் படுத்திருக்கிறீர்கள் என்று நான் ஊகம் செய்யட்டுமா?"
தன் முகத்தை சுருக்கி அவளைப் பார்த்தான் அமுதன்.
"தங்கள் இளவரசர் வாகைவேந்தர் பற்றி அகவழகன் கேட்கும் கேள்விகளில் இருந்து தப்பிக்கத்தானே வெளியே வந்தீர்?"
சில நொடி திகைத்த அவன், ஆம் என்று தலையசைத்தான். புன்னகையுடன் அங்கிருந்து சென்றாள் தன்மையா.
அவள் முகத்தில் நிம்மதி தெரிந்தது. அந்தப் பெண் பற்றி யோசிக்கும் போது மேலும் குழம்பினான் அமுதன். இந்தப் பெண் ஒரு வேவுக்காரியாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா? அவள் ஒரு வேவுக்காரியாக இருந்தால், நிச்சயம் மற்றவர் விவகாரத்தில் தலையிட மாட்டாள். ஒற்றர்களுக்கு வழங்கப்படும் மிக முக்கிய கட்டளை, தங்களை சுற்றி நடக்கும் எந்த ஒரு காரியத்தை பற்றியும் அவர்கள் கவலை கொள்ளக்கூடாது, அவர்களது கடமையை மட்டும் தான் செய்ய வேண்டும் என்பது தான். ஆனால் இந்தப் பெண் அந்த வகையில் சேரவில்லை. தனது நேரத்தை ஒதுக்கி, நடந்து கொண்டிருந்த வழக்கைப்பற்றி அறிய நினைத்தாள். இந்த தம்பதியரின் பிரச்சினையை தெரிந்து கொண்டு பரிதவித்து நின்றாள். அவள் நிச்சயம் நாடகமாடவில்லை. அப்படி என்றால், அவள் உண்மையாகவே தங்கள் நாட்டிற்கு வந்த பயணி தானா?
தன்மயாவை பற்றி யோசித்தபடி மீண்டும் திண்ணையில் படுத்தான் அவன். அப்பொழுது தன்மயா அவனிடம் கேட்ட கேள்வியை எண்ணி அவன் முகத்தில் குறும்பு புன்னகை அரும்பியது. தங்களுக்கு அதைப் பற்றி தெரியுமா? இடவலமாய் தன் தலையசைத்து சிரித்தான் அவன். அந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பது அவனுக்கு ஒன்றும் பெரிதல்ல. அதற்கு ஒரு தீர்வை அவன் ஆலோசித்து விட்டான். ஆனால், தன்மயா நினைத்த விதத்தில் அல்ல...!
தொடரும்...
(1) கன்றும் உண்ணாது
கலத்தினும் படாது
நல ஆன் தீம் பால் நிலத்து
உக்காஅங்கு
எனக்கும் ஆகாது,
என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர்
வேண்டும்
திதலை அல்குல் என்
மாமைக் கவினே- குறுந்தொகை-27.
(பசுவின் காம்பில் சுரக்கும் பால் அதன் கன்றுக்கு உரியது. ஆனால் அந்தக் கன்றினைக் காணவில்லை. சரி, பால் கறக்கும் பாத்திரத்தில் விழுந்ததா என்றால் அதுவும் இல்லை. பின்பு என்ன தான் ஆனது? கன்றும் உண்ணாது கலத்திலும் படாது அந்தப் பசுவின் பால் கீழே வழிந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.
இதைப் பார்த்த தலைவி, தனது தோழியிடம் சொல்கிறாள்:
"இப்படி கன்றும் உண்ணாது கலத்திலும் படாத இந்தப் பாலைப் போன்றதே என் அழகும் இளமையும். என் அழகை அனுபவிக்க வேண்டிய தலைவன் இங்கு இல்லை. அவன் வரும் வரை இந்த அழகையும் இளமையையும் இப்படியே நிறுத்தி வைக்கவும் என்னால் இயலாது.
ஆதலால் வீணாக வழிந்தோடும் பாலை வெற்று நிலம் பருகுவது போல் எனக்கும் ஆகாது என்னவனுக்கும் உதவாத இந்த அழகை பசலை நோய் பருகிக் கொண்டிருக்கிறது.")
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro