8 இளவரசன் பற்றிய உண்மை
8 இளவரசன் பற்றிய உண்மை
அமுதனுடன் தன் பயணத்தை தொடர்ந்தாள் தன்மயா. பழமரங்கள் தந்த உயிர் வாசத்தை நுகர்ந்த படியும், அதன் நிழலின் அருமையை உணர்ந்த படியும்...!
செல்லும் வழியெல்லாம் அவர்களை பின்தொடர்ந்தது காவிரி. ஒவ்வொரு ஊரையும் சுற்றி வளைத்து காவிரி பாய்ந்து கொண்டிருந்த போதிலும், ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஐந்து குளங்கள் இருந்தன. அவற்றில் தண்ணீர் நிறைந்து தளும்பி கொண்டிருந்தது. அந்தக் குளங்களில், தாமரை, செங்கழுநீர், நீலோற்பலம் போன்ற வண்ணமயமான பூக்கள் பூத்துக் குலுங்கி, பார்ப்பவர் மனதை கொள்ளையடித்து கொண்டிருந்தன.
அந்த தண்ணீரின் வளம், அது சித்திரை மாதம் என்பதை அவளை நம்ப விடாமல் செய்தது. சித்திரை மாத வெயிலின் கொடுமை தெரியாத அளவிற்கு, செழித்து வளர்ந்திருந்த மரங்களும், குளிர்ந்த நீர் நிலைகளும் சிலுசிலுவென்ற காற்றுக்கு காரணமாய் இருந்தன.
அப்பொழுது, அறுவடை செய்த நெல்லை, குடியானவர்கள் போரடித்துக் கொண்டும், தூற்றிக் கொண்டிருப்பதை கண்டாள். நெல்லும் வைக்கோலும் குவியல் குவியலாய் குவித்து வைக்கப்பட்டிருந்தன. புது நெல்லின் வாசம் தன்மயாவின் நாசிக்குள் புகுந்து, உள்ளிறங்கி, அவள் மனதை தொட்டது. புது நெல்லின் வாசம் குறித்து, அமரர் கல்கி, பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிட்டிருந்தது அவள் நினைவுக்கு வந்தது. அவரது வார்த்தைகள் எவ்வளவு உண்மை...! இந்த வாசம் எவ்வளவு பரவசத்தை தருகிறது...! மனிதர் ஒவ்வொன்றையும் அனுபவித்து எழுதியிருக்கிறார் என்று எண்ணினாள் தன்மயா...!
மெல்ல இருட்டத் துவங்கியது. முற்றிலும் வெளிச்சம் குறைந்துவிட்ட நிலையில், அவர்கள் அப்போது வந்தடைந்திருந்த சிற்றுரில் தேரை நிறுத்தினான் அமுதன்.
மிகப்பெரிய மரத்தடியில் சில பெரியவர்கள் அமர்ந்திருந்தார்கள். அங்கு வந்து நின்ற தேரை பார்த்ததும், அவர்கள் எழுந்து நின்றார்கள். அவர்களிடம் வந்த ஒருவர்,
"தாம் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" என்றார்.
"என் பெயர் அமுதன்..." அவன் மேலும் எதுவும் கூறுவதற்கு முன்,
"தென் படையின் தளபதி...! இளவரசர் வாகைவேந்தரின் நண்பர்...! தாங்கள் தானா?" என்றார் அந்த பெரியவர்.
தேரின் மீது பறந்து கொண்டிருந்த கொடியையும், அமுதனின் மிடுக்கான தோற்றத்தையும் வைத்து அவர் அதை புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
ஆம் என்று தலையசைத்தான் அமுதன்.
"தங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். தங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் இந்த ஊர்த்தலைவன். என் பெயர் அகவழகன்"
"நல்லது... ( தன்மயாவை சுட்டிக்காட்டி) இவர் அரசு விருந்தாளி. அயல்நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார். அவரை நான் தலைநகருக்கு அழைத்துச் செல்கிறேன். இன்று இரவு இங்கு தங்கி செல்ல நினைக்கிறேன்"
"தாங்கள் இங்கு தங்குவதற்கான ஏற்பாட்டை நான் செய்து தருகிறேன். அல்லது, தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றால், என்னுடைய இல்லத்திலேயே தாங்கள் தங்கி ஓய்வு பெறலாம்"
"அப்படியே செய்கிறோம்" என்றான் அமுதன், எதைப்பற்றியும் யோசிக்காமல். அகவழகனின் இல்லம், தன்மயாவை தங்க வைக்க பாதுகாப்பானதாக இருக்கும் என்று எண்ணினான் அவன்.
"வாருங்கள் செல்லலாம்"
அவர்களுடைய ரதத்தில் ஏறிக்கொண்டார் அகவழகன். எந்த சிரமமும் இல்லாமல், அந்த முதியவர் ரதத்தில் தாவி ஏறிய விதத்தைப் பார்த்து வாயடைத்துப் போனாள் தன்மயா. அவர் அவளைப் பார்த்து புன்னகை புரிய, அவள் கை கூப்பி,
"வணங்குகிறேன்" என்றாள்.
"தாங்கள் அயல் நாட்டைச் சேர்ந்தவர் என்று தளபதியார் கூறினாரே...? தாம் அருமையாய் தமிழ் பேசுகிறீர்களே...!"
"நான் தமிழ் அறிவேன், ஐயா..."
"தமிழ் எங்கும் வியாபித்து இருக்கிறது என்று கேட்டிருக்கிறேன். இன்று நேரில் காண்கிறேன்" என்றார் அந்த பெரியவர் பெருமிதத்துடன்.
அகவழகன் தன் வீட்டுக்கு வழி காட்ட, அத்திசையில் தேரை செலுத்தினான் அமுதன்.
"நான் தங்களிடம் ஒன்று கேட்கலாமா?" என்றார் அகவழகன் அமுதனிடம், தன் குரலை தாழ்த்தி.
தனது காதுகளை கூராக்கிக் கொண்டாள் தன்மயா.
"என்ன கேட்கப் போகிறீர்கள்?"
"நம் இளவரசர் வாகைவேந்தர் பற்றி ஒரு செய்தி கேள்விப்பட்டோம். அது உண்மையா?"
"அவரைப் பற்றி என்ன கேள்விப்பட்டீர்?"
"தற்போது அரண்மனையில் தங்கியிருக்கும், பன்னீர்வனத்தின் இளவரசி காஞ்சனமாலையை, இளவரசர் வாகைவேந்தர் மணந்து கொள்ள வேண்டும் என்று அரசர் நிர்பந்தித்ததால், இளவரசர் அவர் மீது மன வருத்தத்தில் இருப்பதாகவும், அதனால் தான் நமது இளவரசர் இப்போது எல்லாம் அரண்மனைக்கு செல்வதில்லை எனவும், கேள்விப்பட்டோம்"
"அப்படியா?" என்றான் அமுதன் அதை அவன் அப்போது தான் கேள்விப்படுவது போல.
"தங்களுக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாதா?"
"எனக்கு எப்படி தெரியும்?"
"தாம் இளவரசரின் நெருங்கிய தோழர் ஆயிற்றே...! அப்படி என்றால், தாம் அது பற்றி அறிந்திருக்க வேண்டும் அல்லவா?"
"நான் அவருடைய நெருங்கிய தோழனாக இருப்பதற்கு காரணமே, நான் அவரது சொந்த விடயங்களில் தலையிடுவதில்லை என்பதாலும், மற்ற யாரிடத்திலும் அவரைப் பற்றி பேசுவதில்லை என்பதாலும் தான்" என்றான் அலட்டிக் கொள்ளாமல்.
"நாம் இந்த நாட்டின் குடிமக்கள். நம் இளவரசரின் திருமணத்தை காண மிக்க ஆவலாக உள்ளோம். ஆனால் அவரைப் பற்றி கேட்கும் எந்த செய்தியும் நமக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை" என்றார் வருத்தத்துடன்.
"அவர் இளவரசர். நம்மைப் போல் அல்ல. மிகப்பெரிய பொறுப்புகள் அவரது தோள்களில் உள்ளன. அவர் அரண்மனையை விட்டு வெளியேறியதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அரண்மனையில் இருந்து கொண்டும், உல்லாசமாய் பொழுதை கழித்துக் கொண்டும், அவர் இருக்க முடியாது அல்லவா?"
"இளவரசரின் திருமணத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் தான் தங்களிடம் அது பற்றி கேட்டேன்"
"இளவரசர் குறித்து இவ்வளவு விடயங்களை தெரிந்து வைத்திருக்கும் தாங்கள், அவர் ஏன் காஞ்சனமாலையை மணந்து கொள்ள விரும்பவில்லை என்ற காரணத்தையும் அறிந்திருக்க வேண்டுமே...!"
"அதுவும் நாங்கள் கேள்விப்பட்டோம். நமது இளவரசர், பன்னீர்வனத்தின் இளவரசி, காஞ்சனமாலையை தன் சகோதரியாக பாவிக்கிறார் என்பதால் தான் அவரை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்"
"அது தங்களுக்கு எப்படி தெரிந்தது?"
"அதைப் புரிந்து கொள்வதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது? இளம் வயதில் அனைவரும் ஒன்றாய் கூடி விளையாடிய குழந்தைகள். அந்த சமயத்தில், இளவரசருக்கு அந்த பெண்ணை மணந்து கொள்ளும் எண்ணம் நிச்சயம் இருந்திருக்காது. அதனால் அவளை தன் சகோதரியாகத் தான் அவர் பாவித்திருப்பார். அப்படி இல்லை என்றால், எதற்காக அவளை மணந்து கொள்ள விருப்பம் இல்லாமல் அவர் இருக்க வேண்டும்?" அமுதனை அவர் திருப்பி கேள்வி கேட்டார்.
"எது எப்படியோ, உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும் அல்லவா? அதுவரை நாம் அனைவரும் காத்திருக்க வேண்டியது தான்" என்றான் அமுதன்.
பெருமூச்சு விட்ட அகவழகன், நிச்சயம் அமுதனிடமிருந்து இளவரசர் பற்றிய எந்த விபரமும் தனக்கு கிடைக்காது என்று புரிந்து கொண்டார்.
அவர்கள் அகவழகனின் இல்லம் வந்து சேர்ந்தார்கள். ரதத்திலிருந்து கீழே குதித்த அமுதன், தன்மயாவை நோக்கி தன் கையை நீட்டினான், அவள் கீழே இறங்க உதவுவதற்காக. ஆனால் அவன் எதிர்பாராத வண்ணம், அவன் தோள்களை அழுத்தி, கீழே குதித்தாள் தன்மயா அவனுக்கு அதிர்ச்சி அளித்து.
அவர்கள் அந்த வீட்டினுள் நுழைய முற்பட்டபோது, உள்ளிருந்து வந்த கூச்சலை கேட்டு நின்றார்கள்.
"தெரிந்து கொள் பெண்ணே, நீ கண்ணீர் சிந்துவதால் எந்த பலனும் இல்லை. இந்த குடும்பத்திற்கு ஒரு வாரிசு வேண்டும். எங்களுக்கு இருப்பது ஒரே பிள்ளை. எங்கள் பெயரனை காண நாங்கள் எவ்வளவு நாள் காத்திருப்பது? நான் ஒரு நல்ல மாமியார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், என் குடும்பத்தின் வாரிசு என்று வரும் பொழுது, என்னால் எந்த சமாதானத்தையும் ஏற்க முடியாது. புரிகிறதா உனக்கு?"
பிரச்சனை என்ன என்பதை அமுதனும், தன்மயாவும் புரிந்து கொண்டார்கள். ஒரு மாமியார் தன் மருமகளிடம் தன் குடும்பத்திற்கு வாரிசை பெற்று தந்தே ஆக வேண்டும் என்று கட்டளையிட்டு கொண்டிருந்தார். பெருமூச்சு விட்டாள் தன்மயா. சில பிரச்சனைகள் எந்த காலகட்டத்திலும் மாறாது போலிருக்கிறது.
அவர்கள் இருவரையும் காத்திருக்க சொல்லி வேண்டிக்கொண்டு, உள்ளே விரைந்தார் அகவழகன்.
அடுத்த சில நொடிகளில் அந்த வீடு அமைதியானது.
அந்த வீட்டின் இரு பக்கங்களிலும் அகலமான திண்ணைகளும்(1), அதற்கு ஏற்ற நீண்ட இறைவானமும்(2) (தாழ்வாரம்) இருந்தன. அந்த இறைவானத்தில் படர்ந்திருந்த முல்லை கொடியின் மலர்களின் கும்மென்ற வாசம், அந்த இடம் முழுவதையும் ஆட்சி புரிந்தது.
அந்த தாழ்வாரத்தில் சில புறாக்கள் சிறகடித்துக் கொண்டிருந்தது.
அவற்றை பார்த்துக் களித்த வண்ணம், அந்த திண்ணையில் அமர்ந்து கொண்டாள் தன்மயா.
வெளியே வந்த அகவழகன் அவர்கள் இருவரையும் உள்ளே வருமாறு வேண்டினார். அமுதனை பின்தொடர்ந்தாள் தன்மயா. அந்த வீடு மிக விசாலமாய் இருந்தது. வீட்டின் மத்தியில், காற்றோட்டமான அழகான முன்றில்(3) (முற்றம்) காணப்பட்டது.
மரத்தாலான வழுவழுப்பான பெரும் தூண்கள், அந்த வீட்டை தாங்கிருந்தன. அந்த வீட்டின் மூளைக்கு மூளை வைக்கப்பட்டிருந்த பெரும் விளக்குகள், அந்த வீட்டிற்கு வேண்டிய வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருந்தன. மின்விசிறியே இல்லாமல் காற்றோட்டாமாய் இருந்த அந்த பழைமையான வீடு, ஒரு வித பரவசத்தை தந்தது தன்மயாவுக்கு.
அவர்கள் இருவரையும் தன் மனைவிக்கும் மருமகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தார் அகவழகன். வழக்கம் போலவே, வித்தியாசமான உடை அணிந்த தன்மயாவை, அவர்கள் வித்தியாசமாய் பார்த்தார்கள். சின்ன பெண்ணாக இருந்த அந்த மருமகளின் கன்னத்தில் ஈரத்தைக் கண்ட தன்மயா, அவளுக்காக வருத்தப்பட்டாள்.
"உணவு தயாராக இருக்கிறது. சாப்பிட வாருங்கள்" என்றார் அகவழகனின் மனைவி நித்தியகல்யாணி.
"நாங்கள் வரப்போகிறோம் என்று தங்களுக்கு தெரியாதே... எப்படி எங்களுக்கு உணவு சமைத்து வைத்தீர்கள்?" என்று அழகிய தமிழில் கேட்ட அந்த அயல்நாட்டு பெண்ணை (தன்மயா ) அவர்கள் அதிசயம் போல் பார்த்தார்கள்.
அவர்களது பார்வையின் பொருளை உணர்ந்து கொண்ட அமுதன்,
"அவர் தமிழ் அறிவார்" என்றான்.
"கூடுதலாக சமைப்பது எங்கள் வழக்கம் அம்மா" என்றார் நித்தியகல்யாணி.
"ஓ..."
"வரகரிசி சோறும், வழுதுணங்காயும்,(4) சாத்தமுதும் சமைத்திருக்கிறேன்" என்ற நித்திய கல்யாணி,
"பொன்னி, உணவு கொண்டு வந்து இவர்களுக்கு பரிமாறு" என்று தன் மருமகளுக்கு கட்டளையிட்டார்.
அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. வழுதுணங்காய் என்று அவர் கூறியது கத்திரிக்காய் என்றும், சாத்தமுது என்பது ரசம் சாதம் என்றும் புரிந்து கொண்டாள் தன்மயா. ஆனால் அவை இரண்டும் தற்கால இந்தியாவில் உண்டது போல் அல்லாமல் வித்தியாசமாகவும், மிக சுவையாகவும், மனமாகவும் இருந்தது.
பதமாய் உதிர் உதிராய் வடிக்கப்பட்டிருந்தது வரகரிசி சோறு. கத்தரிக்காயில் நெய் மனந்தது...! குழைய வேகவைக்கப்பட்டு இருந்த அந்த காய்கள், அவள் தொண்டையில் வழுக்கி கொண்டு சென்றன. ரசம் சாதத்தை உண்ட அவள், அப்படிப்பட்ட ரசாயனமற்ற, உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவை சாப்பிட்டுவதால் தான் எந்த நோயும் இன்றி வாழ்ந்திருக்கிறார்கள். அக்கால மக்களின் உடல் உறுதிக்கு அவர்கள் சாப்பிட்ட உணவும் ஒரு காரணம் என்று எண்ணினாள்.
"மிகவும் அருமையாக சமைத்திருக்கிறீர்கள், அம்மா. வாய்க்கு வாய் புகழ வேண்டும் என்று தோன்றுகிறது" என்று கூறிய அவள், அவர்களது கண்களில் புதுமையாய் தெரிந்தாள். இந்த சாதாரண உணவுக்கு இப்படிப்பட்ட புகழுரையா!
இந்தப் பெண் வஞ்சம் இல்லாமல் அனைவரையும் புகழ்கிறாள் என்று எண்ணினான் அமுதன்.
"தாம் என் மருமகளின் அறையில் தாங்கிக் கொள்ளலாம். எனது மகன் இன்று இரவு வீடு திரும்ப மாட்டான்" என்றார் அகவழகன், தன்மயாவிடம்.
சரி என்று தலையசைத்த அவள், பொன்னியுடன் அவள் அறைக்குச் சென்றாள்.
"தங்கள் பெயர் பொன்னி தானே?"
"ஆமாம் அக்கா"
"என் பெயர் தன்மயா"
"நீங்கள் கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள்"
"இல்லை, நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள். நான் பாயில் படுத்து கொள்கிறேன்" என்றாள் தன்மயா.
"இல்லை அக்கா. எனக்கு கட்டிலில் படுத்து பழக்கம் இல்லை. என் கணவர் தான் வழக்கமாய் கட்டிலில் உறங்குவார்"
அதைக் கேட்ட தன்மயாவுக்கு சுருக் என்றது. கணவனும் மனைவியும் தனித்தனியாக உறங்குகிறார்களா?
"தங்கள் கணவர் உங்களை தரையில் உறங்க இசைவளிக்கிறாரா?"
"ஆம் அக்கா, அவர் எப்போதும் என்னை தொந்தரவு செய்வதில்லை"
"தொந்தரவு செய்வதில்லை என்றால்?"
"அவர் கட்டிலிலும் நான் தரையிலும் உறங்குவோம்"
பேச்சிழந்து போனாள் தன்மயா. அவர்களுக்கிடையில் தாம்பத்தியம் நிகழ்ந்ததா இல்லையா என்ற ஐயம் எழுந்தது அவளுக்கு.
"எங்கள் நாட்டில் கணவனும் மனைவியும் ஒன்றாக, அணைத்துக் கொண்டு உறங்குவார்கள்" என்று அவள் முகத்தை கவனித்தபடி, வேண்டுமென்றே கூறினாள்.
"அணைத்துக் கொண்டா?" என்று முகத்தை மூடிக்கொண்டு வெட்கப்பட்டாள் அந்த பெண்.
பொன்னியை விசித்திரமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் தன்மயா.
*கட்டிப்பிடிக்கிறதுக்கே இப்படி ஒரு ரியாக்ஷன்னா, அப்போ மத்ததுக்கு? அது சரி, இந்த மாதிரி விஷயமெல்லாம், நம்ம காலத்து பொண்ணுங்க சிலருக்கே புரியாம தானே இருக்கு! ஆனா இங்க, ஆம்பளைக்கு கூட இந்த விஷயம் பத்தி விவரம் இல்லாம இருக்காங்க போல இருக்கே...! அந்த காலத்து மக்கள் இவ்வளவு நல்லவங்களா?* என்று நினைத்த தன்மயாவுக்கு விளங்கிப் போனது. இந்தப் பெண்... இல்லை இல்லை இந்த தம்பதியருக்கு தாம்பத்தியம் பற்றிய விபரம் தெரியவில்லை. அதனால் தான் அவள் இன்னும் குழந்தை பெறாமல் இருக்கிறாள்.
*அது சரி... சோஷியல் மீடியாவும், சாட்டிலைட் டிவியும் இருந்திருந்தா, அது எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்திருக்கும்...! இதைப்பத்தி எல்லாம் பேசுற அளவுக்கு இந்த பொண்ணுக்கு ஃபிரண்ட்ஸ் கூட இல்ல போல இருக்கே? இதையெல்லாம் இந்த பொண்ணுக்கு சொல்லி புரிய வைக்காம, இவங்க அம்மா என்ன செஞ்சுகிட்டு இருக்காங்களோ தெரியலையே...! ஒருவேளை அவங்க அம்மாவும் இப்படித்தான் வெக்கப்படுவாங்களோ? ஐயோ பாவம் இந்த பொண்ணு* என்று பரிதவித்தாள் தன்மயா. அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால் ஏதாவது செய்தே தீர வேண்டும் என்று எண்ணினாள் அவள்.
தொடரும்...
குறிப்பு: தாம்பத்தியம் பற்றிய இப்படி ஒரு நிகழ்வை நான் இதில் எழுதினேன் என்பதற்காக, அக்கால தமிழர்களுக்கு அதைப் பற்றி எல்லாம் ஒன்றுமே தெரியாது என்று கூறுவதாக எண்ணிக் கொள்ள வேண்டாம்.
என் நெருங்கிய தோழியின் அம்மாவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் இது. எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து விட்ட இக்காலத்திலும் இதைப் பற்றியெல்லாம் தெரியாத ஓரிருவர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் இதை யாரும் சரித்திர நிகழ்வாய் பார்க்க வேண்டாம். இந்த நிகழ்வு, கதையின் ஓட்டத்திற்கு தேவைப்படுவதால் இதை எழுதுகிறேன். நன்றி.
சான்று :
(1)திண்ணை என்பது அக்கால மக்களின் வீடுகளில், வழிப்போக்கர்கள் தங்குவதற்காக அமைக்கப்படும் இன்றியமையாத கட்டமைப்பாக இருந்தது.
தெற்றி பாவை திணி மணல் அயரும் (புறம் 233: 1,2)
(2) தாழ்வாரத்தின் இறங்கிய பகுதி இறப்பை (இறைவானம்) எனப்படும்.)
இல் இறைச் செரிஇய ஞெலிபோல் (புறம் 315 : 4)
(3) முன்றில் என்பது, வீட்டின் முன் பகுதி அமைப்பில் பயனுள்ள திறந்தவெளி இடமாகும்.
முன்றில் முஞ்ஞையடு முசுண்டை பம்பி
பந்தர் வேண்டா பலர் தூங்கு நீழல் (புறம்.320:1-2)
(4) வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முர முரவென்றே புளித்த மோரும்
புல்வேளூர் பூதன் புகழ் பரிந்திட்ட
சோறெல்லா உலகும் பெறும். -அவ்வையார் தமிழ் பாடல் வெண்பா-35)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro