Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

60 திருமணங்கள்

60 திருமணங்கள்

அமுதனும் தன்மயாவும் அரசவையை நோக்கி நடக்க துவங்கினார்கள்.

"தன்மயா, உனது கல்லூரியின் கால அட்டவணை அனைத்தும் உனக்கு நினைவிருப்பதாய் கூறினாயே... நீ தஞ்சைக்கு சுற்றுலா சென்றது போல், அடுத்த முறை எப்போது சென்றாய் என்று உனக்கு நினைவிருக்கிறதா?"

"இருக்கிறது... அடுத்த வெள்ளிக் கிழமையன்று மாமல்லபுரம் சென்றோம்... எனது பெற்றோரை இழந்த துயரத்தில் இருந்த என்னை, அங்கு வர விருப்பமில்லை என்று நான் கூறிய பிறகும், அங்கு சென்றால் நான் என் துயரை சற்று மறப்பேன் என்று அனைவரும் வலுக்கட்டாயமாய் அழைத்துச் சென்றார்கள்"

"பெற்றோரை இழந்த துயரை மறக்கும் அளவிற்கு அங்கு என்ன இருக்கிறது?"

"மாமல்லபுரம் ஒரு கலை கோவில்... ஏழாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட ஏராளமான சிற்பங்கள் அங்கு இருக்கின்றன..."

"ஏழாம் நூற்றாண்டு என்றால்?"

"இன்றிலிருந்து 500 அல்லது 600 ஆண்டுகளுக்குப் பிறகு, பேரரசர் மகேந்திரவர்ம பல்லவரால் அவை செதுக்கப்பட இருக்கின்றன...! அப்படிப்பட்ட நகரம் உருவாக காரணமாய் இருந்த யோசனையை வழங்கிய அவரது புதல்வர் நரசிம்ம வர்மனின் பெயரை அந்த நகரத்திற்கு அவர் சூட்டப் போகிறார்"

"ஆனால் நீ அதை மாமல்லபுரம் என்றாயே...!"

"ஆம், பாரத தேசத்தில் இருந்த சிறந்த மல்லர்களை எல்லாம் வீழ்த்தியவர் என்பதால், நரசிம்மவர்மனுக்கு மாமல்லன் என்ற பட்டப்பெயர் கிடைத்தது"

"அவர் அவ்வளவு சிறந்த மல்லரோ?"

"மிகச்சிறந்த மல்லர் மட்டும் அல்ல... தன் தந்தையை அவமதித்த செயலுக்கு பழி தீர்க்க, காஞ்சிபுரத்திலிருந்து பல லட்சம் பேரை கொண்ட காலாட்படை குதிரைப் படை, யானைப் படையுடன் கூடிய மிகப்பெரிய படை ஒன்றை திரட்டி, நற்பத்தி ஐந்து காதங்களை கடந்து, சாளுக்கிய நாட்டிற்க்கே சென்று, அதன் மன்னனான இரண்டாம் புலிகேசியை வென்று, அவரது தலைநகரமான வாதாபியை தீக்கிரையாக்கி, அங்கு தனது வெற்றியை பறைசாற்றும் வெற்றி கம்பத்தை நட்டு, சரித்திரத்தில் அழியா புகழ் பெற்றவர்..."

(ஒரு காதம் என்பது 16 கிலோமீட்டர்கள். காஞ்சிபுரத்திலிருந்து வாதாபி 722 கிலோமீட்டர்கள்)

"என்ன கூறுகிறாய் தன்மயா, பல லட்சம் பேர் கொண்ட சேனைகளுடன் நற்பத்தி ஐந்து காதங்களை கடந்து செல்வதா? அது எப்படி சாத்தியப்பட்டது? இத்தனை லட்சம் வீரர்கள் அவ்வளவு தூரம் செல்ல எத்தனை நாள் பிடித்திருக்கும்...?  அவ்வளவு பேருக்கும் உணவும் ஓய்வும் அளிக்க வேண்டும்... அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடன் பயணிக்கும் குதிரைகளுக்கும், யானைகளுக்கும் உணவளிக்க வேண்டும். ஒரு யானையே ஒரு நாளைக்கு பத்து வாழை மரங்களை மொத்தமாய் விழுங்குமே...! அப்படி இருக்கும்போது ஒரு பெரும் படைக்கே உணவளிப்பது என்றால்... அப்பப்பா நினைத்துப் பார்க்கவே மலைப்பாய் இருக்கிறது"

"ஆம், அவ்வளவு சிக்கல்களையும் களைய திட்டம் வகுத்து, அதில் வெற்றியும் கண்டவர் தான் நரசிம்ம வர்ம பல்லவர். அந்த போரில் வென்றதன் மூலம், வாதாபி கொண்டான் என்ற சிறப்பு பெயரையும் பெற்றார்...!"

"இன்னும் பல்லவ சாம்ராஜ்யம் என்ற ஒன்று உருவாகவே இல்லை...! இதற்குப் பின்னால் தோன்றப் போகும் அந்த அரசரா இவ்வளவு பெரிய சாதனைகளை செய்தார்?"

"ஆம்... அவ்வளவு பெரிய வரலாற்று பெருமைகளை உடையது தான் நமது தமிழகம்! மாமல்லபுரத்தில் இருக்கும் சிற்பங்களை காணத்தான் என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கிருக்கும் கடல் கோவிலை கண்டால் மனதிற்கு இதமாய் இருக்கும்..."

"இப்பொழுது சென்றாலும் அவைகளை காண முடியுமா?"

"ஆம், தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பல நாட்டை சேர்ந்தவர்களும், இன்றும் மாமல்லபுரம் வந்து, அந்த சிற்பங்களை கண்டு வியப்படைந்து வருகிறார்கள். இன்று மட்டுமல்ல, இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும்,  அவை நிலைத்து நின்று பல்லவர்களின் புகழை பறைசாற்றும்"

அமுதன் யோசனையில் ஆழ்ந்தான். அவன் மாமல்லபுரத்தை பற்றி யோசித்துக் கொண்டிருப்பது அவளுக்கு நன்றாக புரிந்தது.  யோசித்தபடியே அவர்கள் அரசவைக்கு வந்து சேர்ந்தார்கள். அவசர வேகத்தில் நடந்துவிட்ட அவர்களது திருமணம் பற்றி மன்னர் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் விவரித்துக் கொண்டிருந்தார். புதுமண தம்பதிகள் அமர, புதிய அரியாசனம் ஒன்று அங்கு வைக்கப்பட்டிருந்தது.

நேராக அரசரிடம் சென்ற அமுதன், அவரிடம் ஏதோ ரகசியம் உரைத்தான். அவனை வியப்போடு ஏறிட்ட ஒப்பிலாசேயோன், சரி என்று தலையசைத்தார்.

அவன் அரசரிடம் என்ன கூறினான் என்று புரிந்து கொள்ள முடியாத தன்மயா, முகம் சுருக்கினாள். அவளிடம் வந்த அமுதன், அவளை அழைத்துச் சென்று வழக்கமாய் அமரும் விருந்தினர் அறியாசனத்தில் அமர வைத்து அங்கிருந்த அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தினான். 

"இளவரசன் வாகைவேந்தனின் திருமணம் எதிர்பாராத விதமாய் இறைவனின் சன்னதியில் நிகழ்ந்து விட்டாலும், அது அனைவரின் முன்னிலையிலும் மறுபடியும் நிகழ வேண்டும் என்று அவன் விரும்புகிறான்" என்றார் ஒப்பிலாசேயோன்.

அமுதனை வியப்புடன் ஏறிட்டாள் தன்மயா. இதைப் பற்றி அமுதன் அவளிடம் ஒன்றுமே கூறவில்லையே...!

"ஏனென்றால் அவனது திருமணத்தில் அவனுடைய மாமனாரும் மாமியாரும் பங்கு பெற வேண்டும் என்று அவன் விரும்புகிறான். அவர்கள் நமது நாட்டிற்கு வருகை புரிய இருக்கிறார்கள்"

தன்மயா திகைப்படைந்ததோடு மட்டுமல்லாமல் உணர்ச்சிவசப்படவும் செய்தாள். அவர்களது திருமணத்திற்கு அவளுடைய பெற்றோர்களை அழைத்து வரவேண்டும் என்று அவளுக்கே தோன்றவில்லையே...!

"இன்று முதல் இளவரசன் வாகைவேந்தனின் திருமண வேலைகள் ஆரம்பமாகிறது. இப்பொழுது அரசவை கலையலாம்" என்றார் அரசர்.

"அவ்வளவு தானா?" என்றபடி எழுந்து நின்றாள் தன்மயா.

"ஆம், அவ்வளவு தான்... திட்டமிட்ட நிகழ்ச்சி தான் மாறிவிட்டதே...! நம் திருமணம் நடைபெற வேண்டும் என்ற எனது விருப்பத்தை நான் அரசரிடம் கூறாமல் இருந்திருந்தால், நாம் இருவரையும் அந்த அரியாசனத்தில் அமர வைத்து, நாம் செய்த சாதனைகளை கூறி நம்மை ஒவ்வொருவரும் தனித்தனியே புகழ துவங்கி இருப்பார்கள்..." குறுநகை புரிந்தான் அமுதன்.

"எனது பெற்றோர் நமது திருமணத்தை காண வேண்டும் என்று தான் இந்த திருமணம் நிகழ வேண்டும் என்று நினைக்கிறீர்களா?" அவனுடன் நடந்தபடி கேள்வி எழுப்பினாள்.

"அதற்காக மட்டுமல்ல... நமது திருமணத்தை கண்டவர் வெகு சிலரே. மக்கள் உன்னை இந்த நாட்டின் இளவரசியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், நமது திருமணம் அனைவரது முன்னிலையிலும் நடைபெற வேண்டும். உனக்குரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும். அதற்காகத்தான் நமது திருமணம் முறைப்படி நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன்"

பேசியபடியே அவர்கள் தங்கள் அறைக்கு வந்தார்கள். அவனை அணைத்துக் கொண்ட தன்மயா,

"தாங்கள் தான் உலகின் மிகச் சிறந்த கணவன்!" என்றாள்.

புன்னகையுடன் அமுதனும் அவளை அணைத்துக் கொண்டான்.

உண்மையான அன்பு மட்டும் இருந்துவிட்டால், எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் அது தம்பதிகளுக்கு இடையில் எந்த சிக்கல்களையும் ஏற்படுத்துவதில்லை தானே...!

.......

தங்கள் திருமணம் நடைபெறும் அதே நாளில், அருகன் மற்றும் எழிலரசியின் திருமணத்தையும் நடத்தும் படி வேண்டுகோள் விடுத்தான் அமுதன். அரசர் ஒப்பிலாசேயோனுக்கும், அரசி அன்பிற்கினியளுக்கும் அது நல்ல யோசனையாகவே பட்டது. அதனால் இரண்டு திருமணங்களையும் அவர்கள் ஒரே நாளில் நடத்துவது என்று முடிவு செய்தார்கள்.

அவர்களது திருமண நாளில், நிகழ்கால தன்மயா மாமல்லபுரம் சென்று விட்டதால், தன்மயாவின் பெற்றோர் அவர்களது திருமணத்திற்கு வருவதற்கு எந்த தடையும் இருக்கவில்லை. தன் மகளின் திருமண ஏற்பாட்டை கண்ட அவர்கள், மூக்கின் மீது விரலை வைத்தார்கள். அந்த ஏற்பாடுகள் எல்லாம் அவர்கள் கனவிலும் கூட யூகிக்க முடியாத அளவில் பிரம்மாண்டமாய் இருந்தது. தன்மயாவே கூட மலைப்பின் உச்சிக்கு சென்றாள் என்று தான் கூற வேண்டும். இளவரசனின் திருமணம் என்றால் சும்மாவா?

தங்கள் அரசரின் குடும்ப திருமணங்களை எண்ணி அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். தங்கள் இளவரசனும் இளவரசியும் சாமானியர்களை திருமணம் செய்து கொண்டதில் சிலருக்கு கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்தது. ஆனாலும் பெரும்பாலானவர்கள் அதை ஆதரித்தார்கள். அவர்களின் திருமணத்திற்கு தங்களால் இயன்றவற்றை பரிசளித்து மகிழ்ந்தார்கள். தங்கள் இளவரசரின் திருமணத்தை காண, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தலைநகருக்கு வரத் துவங்கினார்கள்.

தங்களது மகள், மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதை கண்ட ஆதித்தனும் நந்தினியும் உவகையில் ஆழ்ந்தார்கள். தன்மயா ஏற்கனவே மக்களுக்கு கராத்தே பயிற்றுவிக்க ஆரம்பித்து விட்டிருந்ததால், அவர்களுக்கு அவளை மிகவும் பிடித்துப் போயிருந்தது. அவளது எளிய அணுகுமுறை, மக்களுக்கு மகா திருப்தியை வழங்கியது... குறிப்பாய் பெண்களுக்கு...! மாதத்தில் ஒரு நாள், அவர்களுக்கு விடுமுறை கிடைக்க வழி செய்தவள் அல்லவா...? அதோடு மட்டுமல்லாது, அவளை தலைநகரின் பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச் சென்று, அவளை மக்களுடன் நெருங்கி பழகச் செய்தான் அமுதன். அவளது எளிமையையும் அக்கறையையும் கண்ட மக்கள் நெக்குருகி போனார்கள். அதனால் அவள் ஒரு வெளிநாட்டினள் என்ற அடையாளத்தை மக்கள் மறந்தார்கள்.

அவர்களது திருமணம் முறைப்படி நடந்தது. புதுமண தம்பதிகள், அலங்கரிக்கப்பட்ட ரதங்களில், தலைநகருக்குள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். அமுதனும் தன்மயாவும் இருந்த ரதம் முன்னாள் செல்ல, அவர்களை பின்தொடர்ந்து சென்றது அருகனும் எழிலரசியும் இருந்த ரதம்.

மக்கள் வீதிகளின் இரு புறங்களிலும் நின்று புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்கள். மேலும் சிலர், தங்கள் வீட்டு மேல் மாடத்தில் இருந்து அவர்கள் மீது பூத்தூவி வாழ்த்தினார்கள்.

ஊர்வலத்தை முடித்துக் கொண்டு இரண்டு தம்பதிகளும் அரண்மனைக்கு திரும்பினார்கள். அவர்கள் அரசவைக்கு அழைத்து வரப்பட்டு அனைவருக்கும் சம்பிரதாயப்படி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். தளபதியின் மாளிகைக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டாள் எழிலரசி. அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்துக் கொண்டு அவர்கள் தங்கள் அறைகளுக்கு திரும்ப இரவாகிவிட்டது.

தன்மயாவுடன் தங்கள் அறைக்கு வந்த அமுதன் அவளை பார்த்து புன்னகை புரிந்தான்.

"நீ இந்த அரச உடையில் மிகவும் அழகாய் இருக்கிறாய். என்னால் என் கண்களை உன்னில் இருந்து அகற்றவே முடியவில்லை"

"நேற்று இரவு படுக்கையில் இருந்த போது கூட இதையே தானே கூறினீர்?" என்று அவள் எள்ளலுடன் கேட்க, புன்னகைத்தான் அமுதன்.

"நான் என்ன செய்வது, அப்பொழுதும் நீ அழகாக இருந்தாயே...!"

சிரித்தபடி அவன் பக்கத்தில் அமர்ந்தாள் தன்மயா.

"அன்று நீ சமைத்த உங்கள் கால ஊன்சோறும், கோழி வறுவலும் பிரமாதமாய் இருந்தது"

அவர்கள் நிகழ்காலத்திற்கு சென்றபோது  சாப்பிட்ட பிரியாணியும், சிக்கன் 65வும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்ததால், அதை சமைத்துக் கொடுத்தாள் தன்மயா.

"அப்படியா?"

"ஆம், எனது பெற்றோர், எழிலரசி, அருகன் அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. அதற்கு வேண்டிய பொருட்களை எல்லாம் கொண்டு வரும்படி உனது அம்மாவிடம் நீ கூறியிருந்தாயா?"

"ஆமாம், உங்களுக்கு பிடித்த, எங்கள் காலத்தை சேர்ந்த ஒரே விடயம் பிரியாணி மட்டும் தானே! அதனால் தான் அதை சமைக்க தேவையான பொருட்களை கொண்டு வரும்படி அம்மாவிடம் கூறி இருந்தேன்"

"உன் காலத்தை சேர்ந்தவற்றில் எனக்கு பிரியாணி மட்டும் தான் பிடிக்கும் என்று நீ எப்படி நினைத்தாய்?"

"உங்களுக்கு என் காலத்தைச் சேர்ந்த வேறு என்ன பிடிக்கும்?"

"உன்னைத்தான்..."

புன்னகையுடன் இடவலமாய் தலையசைத்தாள் தன்மயா.

"தன்மயா..."

"ம்ம்ம்?"

"நாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்... ஒரு மகனும் ஒரு மகளும்..."

"ஓ..."

"அவர்கள் நிச்சயம் நல்ல பிள்ளைகளாக இருப்பார்கள்"

"எப்படி அவ்வளவு உறுதியாய் கூறுகிறீர்கள்?"

"அவர்களது தாயார் நீ ஆயிற்றே...!"

"உங்கள் காலத்திற்கு நான் மிகவும் அதிகப்படியானவள் என்று உங்களுக்கு தோன்றவில்லையா?" என்று சிரித்தாள். 

"இருக்கலாம்... ஆனால் எதை எப்படி செய்ய வேண்டும் என்று உனக்கு நன்றாகவே தெரியும். நீ பெரியோரை மதிக்கிறாய், எங்கள் வழிமுறைகளை பின்பற்றுகிறாய், எங்கள் மொழியை பேசுகிறாய், இதைவிட வேறு என்ன வேண்டும்?"

"இவை மட்டும் போதுமா?"

"அழகாகவும் புத்திசாலித்தனத்தோடும் இருக்கிறாய்... எல்லாவற்றிற்கும் மேலாக, என்னை ரசித்து ரசித்து காதல் புரிகிறாய்..."

"எந்த ஒன்றுமே அது சேர வேண்டிய கைகளில் சென்று சேர்ந்தால் தான் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். நான் தங்கள் கைகளில் வந்து சேர்ந்ததால் தான் எனக்கு அந்த மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது..."

"நல்லவேளை, நீ என் கைகளில் வந்து சேர்ந்தாய். இல்லாவிட்டால்..."

அவன் மேலும் ஏதும் கூறுவதற்கு முன் அவன் வாயை பொத்தினாள்.

"இல்லாவிட்டால் என்னவாகி இருக்கும் என்பதை பற்றியெல்லாம் நாம் யோசிக்க வேண்டாம், அமுதே! ஏனென்றால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை... நடக்கப் போவதுமில்லை..."

"நீ என்னுடன் இருப்பதால் தான் அப்படி நடக்காமல் போனது"

"நான் தங்களுடன் தான் இருப்பேன்" என்று அவனை அணைத்துக் கொண்டாள் தன்மயா.

தொடரும்...

குறிப்பு: அடுத்த பகுதியோடு காலங்களில் அவள் வருங்காலம்! நிறைவு பெறுகிறது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro