57 எதற்கும் தயார்
567எதற்கும் தயார்
அமுதனின் ஆற்றலை பற்றி அறியாமல் அவனிடம் இருந்த மணல் கடிகாரத்தை பறிக்க, அவனை நோக்கி ஓடினான் பலவீனனான வாகைவேந்தன். ஆனால் அமுதனை நன்கு அறிந்த அவனது பாட்டனார், அவனது முட்டாள்தனத்தை பார்த்து திகில் அடைந்தார்.
"வாகா... வேண்டாம்... அவன் கிட்ட போகாதே" என்று பதற்றத்துடன் குரல் எழுப்பினார்.
தனது கால்களின் வேகத்தை குறைத்து, ஓடுவதை நிறுத்த எண்ணியபடி, திரும்பி தன் தாத்தாவை பார்த்தான் வாகைவேந்தன். ஆனால் இதற்குள் அவன் அமுதனை நெருங்கி விட்டிருந்தான். அது போதாதா அமுதனுக்கு? எட்டிப் பிடித்தால் தொட்டுவிடும் தூரத்தில் இருந்த வாகைவேந்தனின் சட்டையின் காலரை பற்றி தன்னை நோக்கி இழுத்து, தனது இரும்பு கரத்தால் அவன் கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டான்.
அதை கண்ட ருத்ரமூர்த்தி அதிர்ச்சியின் எல்லைக்கு சென்றார். அவரது பெயரன் அகப்பட்டிருப்பது ஒரு இரும்பு மனிதனிடம்... கண்ணிமைக்கும் நேரத்தில் எப்படிப்பட்டவரையும் கொன்றுவிடும் ஆற்றல் படைத்தவன் அவன். இப்பொழுது அவனது கையில் அவரது பெயரன் சிக்கிக் கொண்டிருக்கிறான். ஒரே நொடியில் வாகைவேந்தனின் கழுத்தை திருப்பி போட்டு, பூலோகத்தை விட்டே அவனை அனுப்பிவிடுவானே அமுதன்!
"நீ என்ன காரியம் செய்து விட்டாய், வாகா? எதற்காக அவனிடம் சென்றாய் நான் தான் அவனைப் பற்றி உன்னிடம் ஏற்கனவே கூறி இருந்தேனே... அவனை அவ்வளவு எளிதாய் வீழ்த்த முடியாது என்று நான் கூறினேனே... இப்பொழுது, அவன் மரணத்தையும் வென்றவன்...!"
"வாகைவேந்தன் என்ற பெயரின் பொருள் அது தான்...! தன்னை சூழும் அனைத்து சிக்கல்களையும் வென்று வாகை சூடியவர் அவர்" கூறியபடி அமுதனிடம் செல்ல முயன்றாள் தன்மயா.
"நகராதே..." என்று அவளை எச்சரித்தார் ருத்ரமூர்த்தி.
"தாத்தா, என்னை எப்படியாவது காப்பாத்துங்க" என்று கெஞ்சியது அந்த நோஞ்சான்.
"இளவரசர் வாகைவேந்தரே! நான் உங்களை எச்சரிக்கிறேன்! எனது பெயரனை விட்டு விடுங்கள். இல்லாவிட்டால், நான் தன்மயாவை சுட்டு விடுவேன்" என்றார் ருத்ரமூர்த்தி, தன்மயாவை நோக்கி தன் துப்பாக்கியை பதற்றத்துடன் பிடித்தவாறு.
நோஞ்சானின் கழுத்தை சுற்றி இருந்த தனது கரத்தை இறுக்கினான் அமுதன்.
"தாத்தா..." என்று திணறினான் நோஞ்சான்.
"ருத்ரமூர்த்தி, துப்பாக்கியை கீழே போடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் பெயரனை தங்கள் வாழ்நாளில் நீங்கள் எப்பொழுதும் சந்திக்கவே முடியாது"
ருத்ரமூர்த்தி மட்டுமல்ல, அங்கு இருந்த அனைவரும் குழப்பம் அடைந்தார்கள், அமுதன் கூறுவதின் அர்த்தம் புரியாததால்.
தன் இடைக்கச்சையில் இருந்த மணல் கடிகாரத்தை எடுத்து, அதை ருத்ரமூர்த்தியிடம் காட்டினான் அமுதன். எதற்காக இத்தனை ஆண்டுகளாய் தவம் கிடந்தாரோ, அதை பார்த்த அவரது கண்கள் மின்னின.
"இதை திருப்ப, எனக்கு ஒரு கணம் போதும். உனது பெயரனை நான் என் நாட்டிற்கு இட்டுச் சென்று விடுவேன். அது எனது அரசாங்கம். அங்கு நான் என்ன செய்தாலும், என்னை கேள்வி கேட்பார் யாருமில்லை. உனது பெயரனுக்கு நான் அங்கு மிக கொடூரமான மரணத்தை பரிசளிப்பேன். என் நாட்டு மக்களை இரவும் பகலுமாய் அவன் மீது கல்லெறியச் செய்வேன். இவன் என்னை கொல்ல முயன்றான் என்று மட்டும் நான் எனது மக்களிடம் கூறினால், அனைவரும் இணைந்து அவனை அடித்தே கூழாக்கி விடுவார்கள். தனக்கென்று யாரும் இல்லாமல் அவன் பரிதாபமாய் உயிர் துறப்பான். எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன், யோசித்து செய்" எச்சரிக்கை விடுத்தான் அமுதன்.
அமுதனின் பிடியில் இருந்த தனது பெயரனையும், அவன் கையில் இருந்த மணல் கடிகாரத்தையும் மாறி மாறி பார்த்தார் ருத்ரமூர்த்தி. அவரது இத்தனை கால காத்திருப்பும், கடும் முயற்சிகளும் வீணாகப் போகிறது...! ஒன்றுக்கும் உதவாத அவரது பெயரன், அனைத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டான். அவருக்கு முன்னால் நிற்கும் இளவரசன் வாகைவேந்தனோ, ஒரு புலியையே கொல்லும் அளவிற்கு திறம் படைத்தவன்.
வாகைவேந்தனின் கழுத்தை நெறுக்கிய அமுதன் கூறினான்,
"பல யுகங்களை காண வேண்டும் என்று ஆவல் கொண்டாய் அல்லவா? நான் உன்னை அழைத்துச் செல்கிறேன்" என்றான் தன் பல்லை கடித்தவாறு.
"இளவரசே! தயவுசெய்து அப்படி எதுவும் செய்து விடாதீர்கள்..." பதற்றம் அடைந்த ருத்ரமூர்த்தி கெஞ்சினார்.
"துப்பாக்கியை கீழே போடுங்கள்... "
"சரி, நான் துப்பாக்கியை கீழே போட்டு விடுகிறேன். எனது பெயரனை ஒன்றும் செய்ய மாட்டேன் என்று எனக்கு வாக்கு கொடுங்கள்" பேரம் பேசினார் ருத்ரமூர்த்தி. அவருக்கு தெரியும், இளவரசன் வாகைவேந்தன் தான் அளித்த வாக்குறுதியை மீறமாட்டான் என்று.
"தாம் எந்த முட்டாள்தனத்தையும் செய்யாத வரை, நான் எதுவும் செய்ய மாட்டேன்...!"
ஏமாற்றத்துடன் தனது பெயரனை பார்த்தார் ருத்ரமூர்த்தி. மணல் கடிகாரத்தை அடைய எவ்வளவு அருமையான சந்தர்ப்பம் இது. தன்னை கையாலாகாதவனாய் உணர்ந்தார் அவர். இந்த சந்தர்ப்பம் நிச்சயம் அவருக்கு மறுபடியும் கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால், வாகைவேந்தன் தன்மயாவை அழைத்துக் கொண்டு தனது காலத்திற்கு சென்று விடுவான். நிச்சயம் திரும்பி வரமாட்டான்.
"துப்பாக்கியை கீழே போடுங்கள் என்றேன்" என்றான் அமுதன்.
"இளவரசர் வாகைவேந்தரே நான் கூறுவதை கேளுங்கள். நீங்கள் ஒரு இளவரசர். அந்த மணல் கடிகாரம் உங்களிடம் இல்லை என்றால் அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதை என்னிடம் கொடுங்கள். பல யுகங்களை காண வேண்டும் என்ற எனது ஆசையை என் பெயரனுடன் இணைந்து நான் தீர்த்துக் கொள்வேன். நான் தங்களை இறைஞ்சி கேட்டுக்கொள்கிறேன்... தயவு செய்து கொடுத்து விடுங்கள்"
"மன்னித்து விடுங்கள் அதை தீர்மானிக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை. ஏனென்றால் இது எனக்கு சொந்தமானது அல்ல. இதன் சொந்தக்காரிக்குத் தான் அது குறித்த முடிவுகளை எடுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் அவளோ, நீங்கள் இதை பெற தகுதியற்றவர் என்று எண்ணுகிறாள். நான், என் மனைவியையும், அவளது முடிவுகளையும் மதிக்கிறேன். இதை அவள் தங்களுக்கு வழங்க சித்தமாய் இருந்தால், நான் அதை தடுக்க மாட்டேன். நீ என்ன நினைக்கிறாய் தன்மயா?" என்றான் அமுதன்.
"நான் என்ன நினைக்கிறேன் என்று தாம் அறிய மாட்டீர்களா, அமுதே?"
"ஆம், நான் அறிவேன். இவர் உனது பெற்றோரை கொன்றவர். இவரால் தான் நீ அனாதையாய் விடப்பட்டாய். தன்னந்தனியாய் இந்த உலகத்தில் வாழ, நீ பட்ட வேதனைகள் அனைத்திற்கும் இவர் தான் காரணம். நான் கூறுவது சரி தானே?"
அவள் ஆம் என்று தலையசைத்தாள். ருத்தரமூர்த்தியை நோக்கி திரும்பிய அமுதன்,
"நான் ஒருமுறை தன்மயாவுடன் நிகழ்காலத்திற்கு பயணமானேன். அவள் ஒரு காலப்பயணி என்றும், மணல் கடிகாரத்தை பயன்படுத்தித் தான் அவள் எனது நாட்டிற்கு வந்தாள் என்றும் அவள் கூறியதை நான் நம்பவில்லை. தன்னை நிரூபித்துக் காட்ட அவள் என்னை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தாள். அப்பொழுது ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய நினைத்த ஆறு பேரிடமிருந்து அந்த பெண்ணை நான் காப்பாற்றினேன். நான் நிகழ்காலத்தில் தங்கி இருந்தது ஒரே ஒரு முழு இரவு கூட இல்லை. அந்த குறுகிய நேரத்திலேயே எனக்கு இந்த நவீன உலகத்தின் மீது மிகுந்த வெறுப்பும் சலிப்பும் ஏற்பட்டுவிட்டது. ஆனால் இந்த காலகட்டத்தில் யாரும் இல்லாமல், மூன்று ஆண்டுகள் துணையின்றி தன்மயா வாழ்ந்திருக்கிறாள். அவளது போராட்டங்களை பற்றி நீர் எப்பொழுதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? உங்களுக்கு தேவையெல்லாம் மணல் கடிகாரம் மட்டும் தான், இல்லையா? அதை பெறுவதற்கு எந்த குற்றச் செயலையும் புரிய தாம் தயாராக இருந்தீர்கள். இப்பொழுதும் கூட, எதற்காகவும் நியாயத்தை கைவிடாத இளவரசன் வாகைவேந்தன் அதை உங்களிடம் கொடுப்பான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்..."
"நான் தவறு செய்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். மணல் கடிகாரத்தை அடைய நான் பல குற்ற செயல்கள் புரிந்தேன். ஆனால் இப்பொழுது, அந்த மணல்கடிகாரத்தை பயன்படுத்தி, அவள் தன் பெற்றோரை திரும்ப அடைந்து விட்டாள். இந்த நொடி முதல் அவள் அவர்களுடன் தானே இருக்கப் போகிறாள்? அது மட்டும் இல்லாமல், அவள் மணந்து கொண்டிருப்பது, யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாத இளவரசர் வாகைவேந்தரை...! நான் மட்டும் அவளை துரத்தாமல் இருந்திருந்தால், அவள் அதைத் தேடியிருக்க மாட்டாள். அவள் மணல் கடிகாரத்தை அடைந்த விதம் வேண்டுமானால் மோசமானதாக இருக்கலாம். ஆனால் அவள் அதன் மூலமாகத்தானே உங்கள் உயிரை காப்பாற்றினாள்...? இப்பொழுது தங்களுடன் மகிழ்ச்சியோடும் இருக்கிறாள்... உங்கள் நாட்டிற்கு மகாராணியாக போகிறாள்... இவற்றையெல்லாம் தாம் எண்ணிப் பார்க்கக் கூடாதா?" என்று அவனது மூளையை கழுவ முயன்றார் ருத்ரமூர்த்தி.
தன்மயாவின் முக பாவத்தை கவனித்தான் அமுதன்.
"நான் சொல்வதைக் கேளுங்கள். என்னையும் உங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். உங்கள் அனைவரையும் அங்கு விட்டுவிட்டு நான் மட்டும் திரும்பி வந்து விடுகிறேன். வேண்டுமானால், உங்களை அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்கிறேன்"
"அவர் நாட்டிலிருந்து விலையுயர்ந்த பொருள்களை கொள்ளையடித்துக் கொண்டு வருவதற்காகவா?" என்றாள் தன்மயா.
"உறுதியிட்டு கூறுகிறேன், அங்கிருக்கும் எந்த பொருளையும் நான் தொட மாட்டேன். மணல் கடிகாரத்தை உடனே என்னிடம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. உங்களுக்கு அதை எப்பொழுது கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போது கொடுத்தால் போதுமானது"
நமுட்டு புன்னகை பூத்தான் அமுதன்.
"அமுதே, அவர் கூறுவதை ஒப்புக் கொள்ளாதீர்கள்..." என்று கூச்சலிட்ட தன்மயாவை தன் கையை காட்டி நிறுத்தினான் அமுதன்.
"நீங்கள் என்னை குறைத்து மதிப்பிட்டு விட்டதாய் தோன்றுகிறது. நான் வலிய சென்று சிக்கலை இழுத்து விட்டுக் கொள்வேன் என்று நினைத்தீரா?"
இல்லை என்று அவசரமாய் தலையசைத்தார் ருத்ரமூர்த்தி.
"என் நாட்டில் குழப்பத்தை விளைவிக்கலாம் என்று நினைக்கிறீரா? உங்களைப் போன்ற தந்திரம் வாய்ந்த ஒரு மனிதனை என் நாட்டிற்குள் அனுமதிப்பேன் என்று நீங்கள் எப்படி நினைத்தீர்கள்?"
"நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டீர்கள்"
"உங்கள் கையில் இருக்கும் துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு, என்னிடம் சரணடையுங்கள். பிறகு நான் உங்களை புரிந்து கொள்ள முயல்கிறேன்"
"அமுதே! அவர் கூறுவது எதையும் நம்பாதீர்கள்... அவர் என்னை சுட்டாலும் கூட அவரை விட்டு விடாதீர்கள். மணல் கடிகாரம் அவர் கைகளில் நிச்சயம் கிடைக்கக் கூடாது. அவரைப் போன்ற கொடூரன் அதை பெற தகுதியற்றவன்" சீறினாள் தன்மயா.
"நீ மட்டும் அதைப் பெற தகுதியானவளா?" என்று எரிந்து விழுந்தார் ருத்ரமூர்த்தி
தன்மயா பதில் கூறும் முன் அமுதன் பதில் அளித்தான்.
"ஆம், அவள் மணல் கடிகாரத்தை பெற மட்டும் அல்ல, என் நாட்டின் மணிமகுடத்தை பெறவும் தகுதியானவள். நீர் அவளைப் பற்றி பேச துணியாதீர்... அவள் என் மனைவி! அவளைப் பற்றி பேசினால், நான் தங்களை கொல்லவும் தயங்க மாட்டேன்"
"இளவரசே, உங்களுக்கு அவர்கள் குடும்பத்தை பற்றி தெரியாது. அவர்களைப் போன்ற பேராசைக்காரர்கள் இந்த உலகிலேயே கிடையாது. நிகழ்ந்து கொண்டிருப்பது அனைத்தும் அவர்களது திட்டம் தான். இந்த நவீன யுகத்தில் பல மொழிகளை கற்க வாய்ப்பிருக்கும் பொழுது, அவளது தாத்தா, அவளுக்கு தூய தமிழையும் இலக்கியங்களையும் கற்றுக் கொடுத்து வளர்த்தார். பல யுகங்களுக்கும் சென்று அங்கு இருப்பவர்களுடன் பழக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை மனதில் வைத்தே அவர் அதை செய்தார். அவள் கால பயணம் மேற்கொண்டது இது முதல் முறையல்ல. இதுபோலவே பலமுறை, பல யுகங்களுக்கு சென்று பல இளவரசர்களையும் அவள் சந்தித்திருக்கிறாள். அவளது அழகினால் பல இளவரசர்களின் மனதை மயங்க செய்திருக்கிறாள். அதனால் தான், மணல் கடிகாரத்தை அடைய அவள் தகுதியற்றவள் என்றேன். நீங்களே கூறுங்கள் எதற்காக இப்படிப்பட்ட நவ நாகரிக மங்கைக்கு தமிழை கற்பிக்க வேண்டும் என்று அவள் தாத்தாவுக்கு தோன்றியது? ஏற்கனவே இங்கு ஒருமுறை வந்தேன் என்றீர்களே, யாராவது ஒருவர் இவளை போல் தமிழில் பேசி நீங்கள் பார்த்தீர்களா? அவர்களது திட்டமே உங்களைப் போல் பல இளவரசர்களை தன் வலைக்குள் வீழ்த்த வேண்டும் என்பது தான்"
அவரை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டு நின்றாள் தன்மயா. ஒரே ஒரு சிறிய புள்ளியை வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய கதையை ஒருவரால் கற்பித்துக் கூற முடியும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. தன் கண்களை சுருக்கியபடி நின்றிருந்த அமுதனை ஏறிட்டாள். அவன் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அவளால் கணிக்க முடியவில்லை.
அடுத்த நொடி அமுதன் கையில் இருந்த வாகைவேந்தன், திணறினான்.
"தாம் என்ன செய்கிறீர்கள், இளவரசே?" என்றார் ருத்ரமூர்த்தி.
"எவ்வளவு துணிவிருந்தால் என் மனைவியை பற்றி அவதூறு கூறுவாய்? அவளைப் பற்றி பேசக்கூடாது என்று நான் எச்சரித்தேன் அல்லவா...?"
"நான் உண்மையைத்தான் கூறினேன்"
"உண்மை என்ன என்பது உம்மை விட எனக்கு நன்றாகவே தெரியும். அவளை நான் நன்கு அறிவேன். அவள் எங்கள் அரண்மனையில் எங்களுடன் தான் தங்கி இருக்கிறாள். அவள் நினைத்திருந்தால், எங்கள் அரண்மனையில் இருந்து எத்தனையோ பொருட்களை களவாடி சென்றிருக்க முடியும். எனது தாயார், எங்கள் திருமண பரிசாக அவளுக்கு அளித்த குவியல் குவியலான ஆபரணங்களை தொட வேண்டும் என்று கூட அவளுக்கு தோன்றவில்லை. அவற்றை அணிந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் கூட அவளுக்குள் எழவில்லை. அவள் நினைத்திருந்தால், அந்த ஆபரணங்களை அள்ளிக் கொண்டு சென்று ஆடம்பரமான வாழ்க்கையை அவளால் வாழ்ந்திருக்க முடியும். ஆனால், அப்படி செய்வதற்கு பதிலாக, என்னுடன் இருந்து, என்னுடைய சிக்கல்கள் பலவற்றில் தீர்த்து வைத்தாள். நீ கூறுவதை எல்லாம் கேட்டு தலையாட்ட இளவரசன் வாகைவேந்தன் ஒன்றும் மதியற்றவன் அல்ல. என் மனதை மாற்றி விடலாம் என்று கனவு காணாதீர்கள். நான் என் பொறுமை இழந்தால், உங்கள் தலையை கொய்யவும் தயங்க மாட்டேன்" என்றான் ஆத்திரம் தெறிக்கும் கண்களுடன்.
அவரது தந்திரம் பலிக்காமல் போனதை உணர்ந்தார் ருத்ரமூர்த்தி. முழங்காலிட்டு அமர்ந்து தன் கையில் இருக்கும் துப்பாக்கியை தரையில் வைக்க போன அவர், அடுத்த நொடி, யாரும் எதிர்பாராத வண்ணம், தன் கையில் இருந்த துப்பாக்கியால் தன் பெயரனை சுட்டு அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro