51 திட்டம் தயார்
51 திட்டம் தயார்
என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற திட்டத்தை தன் மனதில் வகுத்தாள் தன்மயா. உறங்குவதற்கு முன் அதில் இருந்த நிறை குறைகளை அலசி ஆய்ந்து, அவற்றை நேர் செய்து விட்டே உறங்கினாள்.
மறுநாள் காலை
அமுதனின் நெஞ்சில் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் தன்மயா. ஆலயமணியின் ஓசை கேட்டு கண்விழித்தான் அமுதன். காலை நேர பூசை முடிந்து விட்டதை அந்த மணியோசை எடுத்துரைத்தது. குளியலறைக்குச் சென்று நீராட்டத்தை முடித்துக் கொண்டு வந்தான் அவன். தன்மயா இன்னும் உறங்கிக் கொண்டு தான் இருந்தாள். அவளது தோளை பிடித்து லேசாய் அசைத்து,
"தன்மயா..." என்றான்.
உறக்கம் கலையாத கண்களை திறந்து அவனை ஏறிட்டாள் தன்மயா.
"இன்று சில சடங்குகள் இருக்கும் என்று எண்ணுகிறேன். அவற்றை முடிக்க நம்மை அழைக்க யாராவது வருவார்கள். எழுந்து சென்று குளித்து தயாராகு" என்றான்.
"அரண்மனை பணிப்பெண்கள் இளவரசியை நீராட்டத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என்று கேள்வியுற்றிருக்கிறேன்...!" என்றாள்.
அதைக் கேட்டு சிரித்த அவன்,
"உனக்கும் அப்படிப்பட்ட ஆராதனைகள் நிகழ வேண்டும் என்று விரும்புகிறாயா?" என்றான்.
எழுந்து அமர்ந்த அவள், லேசாய் திறந்த கண்களுடன்,
"அப்படிப்பட்ட காட்சிகளை எல்லாம் நான் திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். அதனால் கேட்டேன்" என்றாள் தூங்கி வழிந்தபடியே சிரித்துக் கொண்டு.
"அது தான் முறை. ஆனால் நான் அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டேன்"
"ஏன்?"
"அதற்கு இடம் கொடுத்து விட்டால், என்னை கவனித்துக் கொள்கிறேன் என்ற பெயரில், பணியாட்கள் என் அறையை முற்றுகையிட்டு, இங்கேயே நிரந்தரமாய் தங்கி விடுவார்கள்... அது எனக்கு பிடிப்பதில்லை!"
"அதுவும் உண்மை தான். ஆனால் ஒரு இளவரசனின் வாழ்க்கை அப்படித்தானே இருக்கும்? ஏன் அது தங்களுக்கு பிடிக்கவில்லை?"
"எந்த இளவரசனும் எல்லா நேரத்திலும் இளவரசன் போலவே இருக்க முடியாது. நீ தான் எங்கள் படைத்தளத்தை கண்டாயே... அங்கு எந்த வசதிகளும் இல்லை. ஆனாலும் நாம் அதற்கு தகுந்தார் போல் அனுசரித்துத் தான் செல்ல வேண்டும். அப்படி இருக்கும் பொழுது, இந்த வசதிகளை நாம் பழகிக் கொண்டால், பிறகு மாற்றிக்கொள்ள சிரமப்பட வேண்டி இருக்கும் அல்லவா?"
"ம்ம்ம்..."
"நீராட்டத்தை முடித்துக் கொண்டு வா. நாம் வழிபாட்டுக்கு அழைக்கப்படுவோம் என்று நினைக்கிறேன்"
"அப்படியா?" என்று கட்டிலை விட்டு இறங்கிய அவள் குளியல் அறைக்கு சென்றாள்.
நீராட்டத்தை முடித்துக் கொண்டு ஒரு மெல்லிய பட்டு துணியை சுற்றிக்கொண்டு வெளியே வந்தாள் தன்மயா. அதை கண்ட அமுதன்,
"உனக்கு இருந்தாலும் இவ்வளவு துணிச்சல் ஆகாது தன்மயா!" என்றான்.
"என் துணிச்சலுக்கு என்ன குறை?"
"உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால், உன் கணவனின் முன் இந்த நிலையில் வந்து நிற்பாய்!"
"ஏன்?" என்றாள் தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு.
"உன் உடலை சுற்றி இருக்கும் அந்த துணி எனக்கு வேண்டும் என்று நான் விருப்பப்பட்டால் என்ன செய்வாய்?"
அதைக் கேட்டு வாய்ப்பிளந்த தன்மயா,
"இளவரசர் வாகைவேந்தரே...! உங்களுக்கே இது அதிகப்படியாய் தெரியவில்லையா?" என்றாள்.
"ஏன்...? நீ என் மனைவி தானே? தன் மனைவியிடம் இளவரசன் வாகைவேந்தனுக்கு எதுவுமே அதிகப்படியில்லை" என்றபடி அவளை நெருங்கினான்.
"அமுதே! நான் தங்களை எச்சரிக்கிறேன்...! என்னிடம் நெருங்க துணியாதீர்கள்!"
"நிச்சயம் துணிவேன்...!"
"நான் பூசைக்கு செல்ல வேண்டும் என்று கூறினீர்களே..."
"அதனால் என்ன?"
"தாம் என்னை தொட்டால், நான் மறுபடியும் நீராட வேண்டும்"
"அப்படியா?" என்றான் சிரித்தபடி.
"என்னிடம் விளையாடாதீர்கள் அமுதே!" எச்சரித்தாள் அவள்.
அவளது எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அவளை நோக்கி முன்னேறினான். கட்டிலை நோக்கி ஓடிய தன்மயா, கட்டிலுக்கு அந்த பக்கம் நின்று கொண்டாள்.
"துணிச்சலோடு என்னை எச்சரிக்கை செய்தாயே! பிறகு ஏன் ஓடுகிறாய்? அதே இடத்தில் நின்று என்னை எதிர்கொள்ள வேண்டியது தானே?" என்றான் எள்ளலுடன்.
"நல்ல பிள்ளையாக இங்கிருந்து சென்று விடுங்கள். இல்லாவிட்டால்..."
"இல்லாவிட்டால் என்ன செய்வாய்?"
கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டிலில் உருண்டு அடுத்த பக்கம் சென்று, அவள் சுதாகரிக்கும் முன், அவளது இடையை சுற்றி வளைத்து, தன்னை நோக்கி இழுத்து, தன் மடியில் அவளை அமர வைத்த அமுதன்,
"நீ என்ன கூறினாய்?" என்றான் ரகசியமாய்.
ஒன்றும் கூறாமல் அவனை பின்னால் திரும்பி பார்த்தாள் தன்மயா.
"அரைகுறை ஆடையில் என் முன் வந்தது மட்டுமின்றி, என்னை எச்சரிக்கை செய்யவும் துணிந்தாய் அல்லவா...!" அவள் தோளில் ஒட்டிக் கொண்டிருந்த ஈர கூந்தலை ஒதுக்கியபடி கூறிய அவன்,
"இளவரசன் வாகைவேந்தனுக்கு எச்சரிக்கை விடுக்கும் முன், பலமுறை யோசிக்க வேண்டும்!" என்றான்.
அவனை நோக்கி திரும்பிய அவள், அவனது கன்னத்தில் தன் விரலால் கோடு வரைந்தாள். மெல்ல கண்ணிமைத்தான் அமுதன். அவனது கன்னத்தை தன் இதழ்களால் வருடினாள். தன்னை மறந்து கண்களை மூடினான் அமுதன்.
சட்டென்று அவனை விட்டு விலகிய தன்மயா, அவனிடமிருந்து சிரித்தபடி ஓடினாள். திடீரென்று தனக்கும் அவளுக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி, அவனை கண்களை திறக்கச் செய்தது. தன்மயா தன்னிடமிருந்து விலகிச் செல்வதை கண்ட அவன்,
"தன்...மயா..." என்றான் கண்களை இறுக்க மூடி.
ஓடுவதை நிறுத்திவிட்டு அவனைப் புன்னகையுடன் திரும்பி பார்த்தாள். கண்களை திறந்த அமுதன், தன்னை மென்மையான பார்வை பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட அவளது புன்னகை மறந்தது. அவனது அந்தப் பார்வை, அவள் மனதை ஏதோ செய்தது. ஏமாற்றம் தந்த வேதனை அவன் முகத்தில் தெரிந்தது. மீண்டும் அவனிடம் ஓடி சென்று, அவனை அணைத்துக் கொண்டாள். தன் காதலை மொத்தமாய் கொட்டி அவனை முத்தமிட்டாள். அவளது அந்த செயல், மீண்டும் குளித்தே தீரவேண்டும் என்பதை தவிர வேறு வழியில்லாத நிலைக்கு அவர்களை இட்டுச் சென்றது.
"என்னை ஏன் பித்துப் பிடிக்க செய்கிறாய்?" என்றான்.
"பிச்சியை மணந்தவனின் நிலை இது தான்"
சிரித்தபடி அவளை அணைத்துக் கொண்டான்.
"போதும்... என்னை செல்லவிடுங்கள். யாராவது வந்தால் சங்கடமாக இருக்கும்!"
"நீ எதற்காகவும் சங்கடப்பட வேண்டிய அவசியம் இல்லை"
"நான் என்னைப் பற்றி கூறவில்லை. நம்மை அழைக்க வருபவர்கள் சங்கடப்படுவார்கள் என்றேன்!" என்றாள் தன் சிரிப்பை அடக்கியபடி.
சில நொடி திகைத்த அமுதன் வெடித்து சிரித்தான்.
"உன்னை போன்ற ஒரு குறும்புக்காரியை நான் பார்த்ததே இல்லை!"
சிரித்தபடி மீண்டும் குளியலறைக்கு சென்றாள் தன்மயா. கட்டிலில் சாயந்தபடி, அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அவள் வெளியே வந்ததும், அமுதனை குளிக்க செல்லும்படி அவள் சைகை செய்ய, அவன் தலையசைத்து விட்டு சென்றான்.
அப்பொழுது கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்த தன்மயா, அங்கு எழிலரசி நின்றிருந்ததை கண்டாள்.
"வணங்குகிறேன் இளவரசி தன்மயா!" என்று தலை வணங்கினாள் எழிலரசி.
"எப்போதிலிருந்து இளவரசி எழிலரசி என்னை பரிகாசம் செய்ய துவங்கினார்?" என்றாள் கிண்டலாக.
"இது பரிகாசம் அல்ல! சம்பிரதாயம்!" என்ற எழிலரசி, இருமுறை கைதட்டினாள்.
அடுத்த நொடி சில பணிப்பெண்கள் அவர்களது அறைக்குள் நுழைந்தார்கள். மெத்தை விரிப்பு, தலையணை அனைத்தையும் மாற்றி விட்டு அந்த அறையை சுத்தப்படுத்தினார்கள்.
பல துளைகளைக் கொண்ட செம்பால் ஆன கூண்டு போல் இருந்த ஒரு பாத்திரத்தை கொண்டு வந்தாள் ஒரு பணிப்பெண். மனதை மயக்கும் நறுமண புகை அந்த கூண்டிலிருந்த துளைகளின் வழியாக வந்த வண்ணம் இருந்தது. ஒரு நாற்காலியில் தன்மயாவை அமர வைத்தாள் எழிலரசி. அந்தப் புகை கூண்டை கொண்டு வந்த பணிப்பெண், அந்த நறுமண புகையால் தன்மயாவின் ஈரக் கூந்தலை காய வைத்தாள். அந்த இதமான நறுமணம் அந்த அறை முழுவதும் பரவியது.
தான் கொண்டு வந்த உடைகளை தன்மயாவை அணிய செய்தாள் எழிலரசி.
"இப்பொழுது தாம் என்னுடன் வர வேண்டும்" என்றாள் எழிலரசி.
"எங்கு வரவேண்டும்?"
"வழிபாடுக்கு தயாராவதற்கு..."
"நீ செல் எழிலரசி, நான் வருகிறேன்"
"சீக்கிரம் வந்து விடுங்கள்"
"சரி"
தான் அழைத்து வந்த பணிப்பெண்களுடன் அங்கிருந்து சென்றாள் எழிலரசி. அமுதனுக்காக காத்திருந்தாள் தன்மயா. அவன் குளியலறையை விட்டு வெளியே வந்ததும் அவளை நோக்கி ஓடினாள்.
"உன் கூந்தலின் மனம் மனதை மயக்குகிறது" என்றான் அமுதன்.
அலமாரியில் இருந்து அன்பிற்கினியாள் கொடுத்த குங்குமச்சிமிழை வெளியில் எடுத்த தன்மயா, அதை அமுதனிடம் காட்ட அவன், நமுட்டு புன்னகை பூத்தான்.
"ஒவ்வொரு நாளும் இதை தங்களது நெற்றியில் வைத்து விட வேண்டும் என்பது அரசியாரின் கட்டளை!"
அதில் இருந்து குங்குமத்தை எடுத்து அவன் நெற்றியில் வைத்துவிட்டு, தன் விரலில் ஒட்டி இருந்த குங்குமத்தை அவன் கன்னத்தில் தடவி விட்டு கலகலவென சிரித்தாள் அவள்.
தன்னை கண்ணாடியில் பார்த்து புன்னகைத்தான் அமுதன்.
"வழிபாட்டிற்கு தயாராவதற்கு நான் எழிலரசியின் அறைக்கு செல்கிறேன்"
"அந்த வழிபாடு எதற்காகவென்று எழிலரசி ஏதாவது கூறினாளா?"
"இல்லை... ஒன்றும் கூறவில்லை"
"சரி, அது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும். உனது காலத்திற்கு செல்வதற்கான திட்டத்தை வகுக்க சொன்னேனே.... அது என்னவாயிற்று?"
"திட்டம் தயாராக உள்ளது. என் பெற்றோரின் பிரேத பரிசோதனை ஆய்வு முடிவின்படி, அவர்கள் இறந்தது இரவு பத்தரை மணியளவில். அதே நாளில், அந்த நேரத்திற்கு சற்று முன்பாக நாம் அதே இடத்திற்கு சென்றால், என் பெற்றோரைக் கொன்றது யார் என்று கண்டுபிடித்து விடலாம்"
"பிரேத பரிசோதனை ஆய்வு என்றால் என்ன?"
"இறந்தவரின் உடலை அறுத்து, அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டுபிடிக்கும் மருத்துவ சோதனை அது"
"மரணத்திற்கான காரணத்தை கூட கண்டுபிடித்து விட முடியுமா?" என்றான் வியப்போடு.
"ஆம், கண்டுபிடித்து விடலாம்"
"ம்ம்ம், நீ என்ன செய்யப் போகிறாய்?"
"என் தாத்தாவின் நண்பர் தம்பிரான் நமக்கு உதவி செய்வார். ருத்ரமூர்த்தியை தண்டிக்க நமக்கு உதவக்கூடிய ஒரே நபர் அவர் தான்"
"ருத்ரமூர்த்தி யார்?"
"அவர் தான் என் பெற்றோரை கொலை செய்திருக்க வேண்டும் என்று நான் ஐயம் கொள்கிறேன். அவர் தான், மணல் கடிகாரத்தை பற்றி தெரிந்து கொள்ள, அனைவரையும் விசாரித்திருக்கிறார். அவருடைய ஆட்கள் தான் என்னை துரத்தினார்கள். அதனால் தான், நான் மணல் கடிகாரத்தை பயன்படுத்தி இங்கு வந்தேன்..."
"இன்று இரவு, நாம் உனது காலத்திற்கு செல்ல போகிறோம் இல்லையா?"
"நாம் அதைப் பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம். நான் இப்பொழுது செல்ல வேண்டும்"
சரி என்று தலையசைத்தான் அமுதன். அவள் அங்கிருந்து செல்ல நினைத்தபோது, அவள் கரத்தை பற்றி தடுத்து நிறுத்தினான்.
*இப்பொழுது என்ன?* என்பது போல் அவள் அவனை பார்க்க,
"இந்த உடை உனக்கு மிகப் பொருத்தமாய் இருக்கிறது..." என்றான்.
அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து சிரித்தபடி ஒடி சென்றாள் தன்மயா!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro