49 திருமணம்
49 திருமணம்
தன்மயாவின் கழுத்தில் அந்த சங்கிலியை அமுதன் அணிவித்ததை பார்த்து, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
"என்ன செய்துவிட்டீர்கள் அமுதே...! இந்த சங்கிலி எதற்காக இங்கு வைக்கப்பட்டிருக்கிறதோ...! அதைப் பற்றி அறிந்து கொள்ளாமல் எனக்கு அணிவித்துவிட்டீர்களே...!" என்றாள் தன்மயா பதற்றத்துடன்.
"அது எந்த ஒரு காரணத்திற்காக வைக்கப்பட்டிருந்தால் தான் என்ன? எப்படி இருந்தாலும் அது உன்னிடம் தானே வரப்போகிறது?" என்றான் சாதாரணமாய்.
"அதை நாம் எப்படி கூற முடியும்?"
அதைப்பற்றி தெளிவு பெற, தன் பெற்றோரை பார்த்த அமுதன், அவர்களும், அவனது தங்கையும் அதிர்ச்சியோடு நின்றதை கண்டான். எதற்காக அவர்கள் அந்த நிலைக்கு சென்றார்கள் என்று அவனுக்கு புரியவில்லை. என்ன தவறு நிகழ்ந்தது என்றும் தெரியவில்லை.
அன்பிற்கினியாள் தன் கண்களை மூடி, அந்த சங்கிலியை உமையம்மையின் கழுத்தில் இருந்து அவிழ்ப்பதற்கு முன் தான் வேண்டிக் கொண்டதை எண்ணிப் பார்த்தார்.
*என் மகனுக்கு தாம் இரண்டாவது வாய்ப்பு அளித்திருக்கிறீர்கள். அவன் தன்மயாவை மனதார காதலிக்கிறான். அவளுக்கு அவனை மணம் முடித்து வைப்பது சரியா, தவறா என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் அவன் விருப்பத்தின் படி நடந்து கொள்கிறோம். அவன் உயிரோடு இருக்கிறான். அதுவே எங்களுக்கு போதுமானது. அதனால், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், இந்த திருமணத்தை நிகழ்த்துவது என்று முடிவெடுத்து இருக்கிறோம், தாயே! இந்த நிமிடம் முதல் அவர்களது வாழ்வு தங்கள் பொறுப்பு. அவர்களை நல்வழியில் இட்டுச் செல்லுங்கள். எந்த வழி அவர்களை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைக்குமோ அந்தப் பாதையில் அவர்களை இட்டு செல்லுங்கள். அவர்கள் தங்களின் பிள்ளைகள். அவர்களை தங்களின் நிழலில் இருத்தி, அவர்களுக்கு எது நல்லதோ, அதை தேர்ந்தெடுக்க வையுங்கள்...!*
தனது வேண்டுதலை எண்ணிப் பார்த்தார் அன்பிற்கினியாள். தற்போது நிகழ்ந்தது என்ன என்பதை குறித்து அவரால் ஒரு முடிவுக்கு வர முடிந்தது. அவரது வேண்டுதலின் படியே, அவர்களுக்கு திருமணம் நிகழ்ந்ததாய் அவர் நம்பினார். அமுதன் அந்த சங்கிலியை அவனாக தன்மயாவின் கழுத்தில் அணிவிக்கவில்லை... அது அவர்களது விதி... நிர்ணயிக்கப்பட்ட விதி... கடவுளின் விருப்பம்...! தெய்வம் காட்டும் பாதையில் அவர்களது பயணம் துவங்கிவிட்டதாய் கருதினார் அவர்.
"அண்ணா, என்ன காரியம் செய்து விட்டீர்கள்!" என்றாள் எழிலரசி அதிர்ச்சியோடு.
"அப்படி நான் என்ன செய்து விட்டேன்? அவளுக்கு பிடித்த சங்கிலியை அவளுக்கு அளித்தேன்...!"
"அது சாதாரண சங்கிலி அல்ல அண்ணா... நீங்கள் அண்ணியின் கழுத்தில் உங்கள் திருமண நாளில் அணிவிக்க இருந்த திருமாங்கல்யம்!"
"என்ன...?" அதிர்ந்தான் அமுதன். அவனைவிட அதிகமாய் அதிர்ச்சி அடைந்தது தன்மயா தான். அவள் தன் கழுத்தில் இருந்த அந்த சங்கிலியை கழட்டிவிட முனைந்த போது, அவளது கரத்தை பற்றி அவளை தடுத்தார் அன்பிற்கினியாள். அவரை புரியாமல் பார்த்தாள் தன்மயா. தன் தலையை இடவலமாய் அசைத்து,
"தெய்வத்தின் சன்னிதானத்தில் நிகழ்ந்ததை மாற்றும் சக்தி நமக்கு இல்லை, மகளே! இது தான் இறைவனின் விருப்பம் என்றால், நாம் அதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்" என்றார்.
"நீ என்ன கூறுகிறாய்?" என்றார் ஒப்பிலாசேயோன்.
"ஆம் அரசே! தெரிந்தோ, தெரியாமலோ, தெய்வத்தின் முன்னிலையில் அமுதன் திருமாங்கல்யத்தை தன்மயாவின் கழுத்தில் அணிவித்து விட்டான். நாம் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்கள் கணவன், மனைவி ஆகிவிட்டார்கள். விதி வகுக்கும் பாதையில் தான் அனைத்தும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்"
"அப்படி என்றால் அவர்களது திருமணம்?"
"இது தான் அவர்களது திருமணம்! அது நிகழ்ந்துவிட்டது"
பொன்னால் ஆன குங்குமச்சிமிழை அமுதனை நோக்கி நீட்டிய அன்பிற்கினியாள்,
"இதை தன்மயாவுக்கும், அவளது திருமாங்கல்யத்திற்கும் இட்டுவிடு, அமுதா" என்றார்.
சிறு அசைவுமின்றி அவனையே பார்த்துக் கொண்டு நின்ற தன்மயாவை ஏறிட்டான் அமுதன். தன் வாழ்வில் என்ன நிகழ்கிறது என்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை அவளால். எதுவுமே அவளது கட்டுப்பாட்டில் இல்லை... எல்லாமே அவளை மீறி நிகழ்ந்து கொண்டிருந்தது.
அந்த குங்குமச்சிமிழிலிருந்து குங்குமத்தை எடுத்து அவளது நெற்றியில் இட்டு, பிறகு திருமாங்கல்யத்திலும் இட்டான் அமுதன்.
ஒப்பிலாசேயோனிடம் ரகசியமாய் ஏதோ கூறினார் அன்பிற்கினியாள். சரி என்று தலையசைத்த அவர், அவர்களுடன் இருந்த ஒரு மந்திரியாரை அழைத்து, ஏதோ கட்டளையிட்டார். அவரது கட்டளையை நிறைவேற்ற அங்கிருந்து விரைந்தார். அந்த அமைச்சர்.
அமுதனும் தன்மயாவும், அவர்களது தாள் பணிந்து ஆசி பெற்றார்கள்.
"நீடூழி வாழ்க!" என்று அவர்களை வாழ்த்தினார் ஒப்பிலாசேயோன்.
"நீங்கள் விரும்பிய அனைத்தையும் தெய்வம் உங்களுக்கு தந்தருளட்டும்" என்றார் அன்பிற்கினியாள்.
தன்மயா தன்னை பார்த்து இதமாய் புன்னகை புரிந்ததால், நிம்மதி பெருமூச்சு விட்டான் அமுதன். அவர்களது எதிர்பாராத திடீர் திருமணத்தினால் அவள் வருத்தத்தோடு இருப்பாள் என்று எண்ணினான் அவன். ஆனால் அவள் வெகு சாதாரணமாய் இருந்தாள். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவள் எப்படித்தான் தன்னை சமாளித்துக் கொள்கிறார்களோ என்று எண்ணி வியந்தான் அவன்.
"அமுதா! திருமணத்திற்கு பிறகு தம்பதிகள் நமது கோவிலுக்கு செல்வது வழக்கம்" என்றார் ஒப்பிலாசேயோன்.
சரி என்று தலையசைத்தான் அமுதன்.
"வாருங்கள்..." என்று நடந்தார் அரசர். அவர்களை பின்தொடர்ந்து வந்த அமுதனும் தன்மயாவும், நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட இரண்டு ரதங்கள் தயார் நிலையில் இருந்ததை கண்டார்கள். அந்த ரதங்களை சுற்றி சிறிய குதிரைப்படை பிரிவு காவலுக்கு நின்றது. அவர்களது உயிருக்கு பாதுகாப்பளிக்க அவர்கள் நிற்கவில்லை... தங்கள் இளவரசனின் திருமண செய்தியை கேள்விப்படும் மக்கள், மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து, அவர்களது பயணத்தை தடை செய்யக்கூடும் என்பதற்காக தான்.
அவற்றையெல்லாம் வியப்போடு பார்த்த தன்மயா, அமுதனுடன் ரகத்தில் ஏறி அமர்ந்தாள். முன்னாள் நின்ற ரதத்தில் எழிலரசியுடன் அமர்ந்து கொண்டார்கள் அரசரும் அரசியும்.
சாலையின் இரு புறங்களிலும் நின்றிருந்த மக்கள், அரச குடும்பத்தினரை மகிழ்வோடும் வியப்போடும் கண்டு களித்தார்கள். அமுதனின் திருமண செய்தி கோட்டை எங்கும் பரவியது.
கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இவ்வளவு குறுகிய நேரத்தில் இவை அனைத்தும் எப்படி இவர்களுக்கு சாத்தியப்பட்டது என்று மலைத்தாள் தன்மயா. வழிபாட்டை முடித்துக் கொண்டு அவர்கள் அரண்மனைக்கு திரும்ப, உச்சிப் பொழுது ஆகிவிட்டது.
புதுமண தம்பதியருக்கு சிறப்பான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒன்றன்பின் ஒன்றான தொடர்ச்சியான ஏற்பாடுகளை பார்த்த தன்மயா விக்கித்து நின்றாள். இவ்வளவு குறுகிய நேரத்தில் இவர்களால் இவ்வளவு தூரம் செய்ய முடிகிறது என்றால், குறிப்பிட்ட தேதியில் இந்த திருமணம் நிகழ்ந்திருந்தால், அவர்கள் என்னென்ன செய்திருப்பார்களோ என்று மலைத்தாள் அவள்.
மதிய உணவுக்கு பிறகு, சிறிது ஓய்வெடுத்த பின், அவர்கள் அரசவைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களது திருமணம் குறித்த செய்தி முறையாக அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதை முடித்துக் கொண்டு வந்த அவர்கள், தன்மயாவின் அறைக்கு செல்லும்படி பணிக்கப்பட்டார்கள்.
"தன்மயாவின் அறைக்கு எதற்காக அம்மா?" என்றான் அமுதன்.
"அண்ணா, அண்ணியாரின் அறையை தங்கள் மாமியார் வீடாக எண்ணிக் கொள்ளுங்கள்" என்றாள் எழிலரசி.
"ஓ..."
அவர்கள் இருவருக்கும் புத்தாடைகளை வழங்கினாள் எழிலரசி. அவர்கள் தயாராகும் வரை காத்திருந்த அவள், அவர்களை அன்பிற்கினியாளின் அறைக்கு அழைத்து வந்தாள்.
அழகிய வேலைப்பாடு அமைந்த ஒரு பொன் குங்குமச்சிமிழை தன்மயாவிடம் வழங்கினார் அன்பிற்கினியாள்.
"இது என் மருமகளுக்கு என் திருமண பரிசு...!"
"என்னிடம் இருக்கும் அனைத்துமே தாம் எனக்களித்த பரிசு தானே... இளவரசர் வாகைவேந்தர் உட்பட...!" என்று கூறி அம்மா மற்றும் மகனின் முகத்தில் புன்னகையை இட்டு வந்தாள் தன்மயா.
"அவை அனைத்தும் பழக்க வழக்கங்களுக்கு உட்பட்டது... இது அப்படியல்ல... ஒவ்வொரு நாளும் அமுதன் வெளியே புறப்படும் முன்பாக இதை அவனுக்கு வைத்துவிடு"
சரி என்று தலையசைத்தாள் தன்மயா.
"அதை இட்டுக் கொள்ள அவன் ஒவ்வொரு முறையும் விவாதம் செய்வான். ஆனால் அவன் கூறுவதை கேட்டு அவனை விட்டுவிடாதே...!"
அதைக் கேட்ட அமுதன் குறுநகை புரிந்தான்.
"தாம் இருவரும் இங்கு அமருங்கள். நான் இப்பொழுது வருகிறேன்" என்று அங்கிருந்து புன்னகைத்த படி சென்றார் அன்பிற்கினியாள்.
"தாம் எப்படி என்னிடம் விவாதம் புரிகிறீர்கள் என்று நானும் தான் பார்க்கிறேன்... " என்று அவள் சிரிக்க, அமுதன் புன்னகைத்தான்.
அவள் கையை பற்றிய அமுதன்,
"உனக்கு வருத்தம் ஏதும் இல்லையே?" என்றான்.
"எதற்காக?"
"நம் திருமணம் நிகழ்ந்த விதத்தை எண்ணி..."
"முதலில் சிறிது பதற்றமாக தான் இருந்தது. ஏனென்றால் அரசரும் அரசியும், அவர்களது அனுமதியின்றி நீங்கள் இந்த சங்கிலியை என் கழுத்தில் அணிவித்ததற்காக வருத்தம் அடைவார்கள் என்று எண்ணினேன். ஆனால் அவர்கள் வெகு இயல்பாய் நிகழ்ந்ததை ஏற்றுக் கொண்டார்கள். அது எனக்கு வியப்பளிக்கிறது"
"ஆம், நானும் கூட அவர்கள் இதை திருமணமாக ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்பதை எதிர்பார்க்கவே இல்லை"
"ம்ம்..."
"ஊழ்வினையின் பயனுக்கு மாறாக நடக்க வேண்டாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்"
"இருக்கலாம்..."
"ஆனால், நான் இதை வேறு விதமாய் பார்க்கிறேன்"
"எப்படி...?"
"உன்னை அணைத்துக் கொண்ட பிறகு, அனைத்தும் என் விருப்பப்படியே என் வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது..."
"என்ன? நீங்கள் என்னை அணைத்துக் கொண்டீர்களா? நான் தான் உங்களை அணைத்துக் கொண்டேன்... நீங்கள் நடுக்கத்தோடு நின்றீர்கள்" எள்ளலுடன் சிரித்தாள் அவள்.
"சிங்கங்கள் தான் மான்களை வேட்டையாடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்... முதன்முறையாக ஒரு மான் சிங்கத்தை வேட்டையாடுவதை கண்டேன். இந்த அழகிய மான் இந்த சிங்கத்தை வேட்டையாடத் துணிந்தது" என்றான் சிரித்தபடி.
"நான் மான் அல்ல பெண் சிங்கம்...!"
"ஓ... ஆனால், எல்லா நாளும் பெண் சிங்கமே ஆளுமையுடன் திகழும் என்ற தவறான கண்ணோட்டத்தில் இருந்து விடாதே... ஆண் சிங்கம் துணிந்து விட்டால், இணங்கி செல்வதை தவிர பெண் சிங்கத்திற்கு வேறு வழி இருக்காது" என்ற அவனது குரல் வெண்ணை போல் வழுக்கி கொண்டு சென்றது.
அவனை திகைப்புடன் பார்த்தாள் தன்மயா.
"இன்று நீ அதிகாரப்பூர்வமாய் இந்நாட்டின் இளவரசி ஆகிவிட்டாய் தெரியுமா?"
"ம்ம்..."
"இந்த உடையில் நீ ஆர்ப்பரிக்கும் அழகோடு இருக்கிறாய்"
"மெய்யாகவா?"
"ஆம்... அதற்காக, நீ இந்த உடையிலேயே இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதாய் எண்ண வேண்டாம். உனக்கு எந்த உடை பிடிக்கிறதோ அதை அணிந்து கொள்" என்றான் அமுதன்.
அந்த அறையின் நுழைவு வாயிலை எச்சரிக்கையுடன் பார்த்தபடி அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு,
"மிக்க நன்றி" என்றாள் தன்மயா.
அப்பொழுது காலடி சத்தத்தை கேட்ட தன்மயா, நேராய் அமர்ந்து கொண்டாள்.
அரசி அன்பிற்கினியாள், எழிலரசியுடனும் அவளது தோழிகளுடனும் அங்கு வந்தார்.
"தன்மயாவை அவளது அறைக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்றார்.
அவரை குழப்பத்துடன் பார்த்தான் அமுதன். அவளது அறைக்கா? ஒருவேளை அது ஏதாவது சடங்காக இருக்கும் என்று எண்ணினான்.
அமுதனை ஒருமுறை பார்த்துவிட்டு, எழிலரசியுடன் அங்கிருந்து சென்றாள் தன்மயா.
அமுதனிடம் ஒரு தங்க பேழையை கொடுத்த அன்பிற்கினியாள்,
"இவற்றின் எண்ணிக்கையை கணக்கிடு" என்றார்.
"எண்ணிக்கையா?" என்றபடி அந்த பேழையை திறந்த அவன், அந்த பேழை நிறைய கொற்கை முத்துக்கள் இருந்ததை கண்டான்.
"இந்த முத்துக்களை நான் எண்ண வேண்டுமா?" என்றான் குழப்பத்தோடு.
ஆம் என்று தலையசைத்தார் அன்பிற்கினியாள்.
"இதுவும் மணமகன் செய்ய வேண்டிய வழக்கமா?"
"அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்" என்றார் தன் சிரிப்பை அடக்கியபடி.
அந்த முத்துக்களை எண்ணத் துவங்கினான் அமுதன்.
"ஆயிரத்து நானூற்று எழுபத்து இரண்டு"
"நல்லது... அதை வைத்துவிட்டு உன் அறைக்கு செல்"
"ஆனால் இதை எதற்காக என்னை எண்ணச் சொன்னீர்கள்?"
"உனது அறைக்குச் செல். உன் கேள்விக்கான பதில் உனக்கு அங்கு கிடைக்கும்" என்றார்.
முகத்தை சுருக்கியபடி எழுந்து நின்றான் அமுதன். தன் அறைக்கு வந்த அவன், கதவை திறந்தான். அவனது அறை சொர்க்கம் போல் அலங்கரிக்கப்பட்டு இருந்ததையும், அங்கு அவனது மனைவி தேவதை போல் அமர்ந்திருந்ததையும் கண்ட அவன் விக்கித்து நின்றான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro