Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

44 விளையாட்டா?

44 விளையாட்டா?

முத்தமிடுவதை நிறுத்திவிட்டு, தன்மயாவை மயக்கத்துடன் ஏறிட்டான் அமுதன். அவள் தன் கட்டை விரலால் அவனது உதட்டை துடைத்த போது, அவன் கண்களை மூடினான். ரசனையுடன் அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள். அவன் அதை உணர்ந்தான். கண்களை திறந்து, வார்த்தைகளில் வடித்து விட முடியாத மனோபாவத்துடன் அவளை ஏறிட்டான். தன் விரல்களால் அவனது தலைமுடியை, அழகாய் கோதி விட்டாள். அவன் அன்பாய் புன்னகைத்தான்.

"நீ என்னை பித்து பிடிக்க செய்கிறாய்..." என்றான் அவள் கன்னத்தில் பிரண்ட கூந்தலை ஒதுக்கி விட்டவாறு.

"என்னை விட தாங்கள் எவ்வளவோ மேல்"

"அப்படி என்றால்?"

"நான் ஏற்கனவே தங்களால் பிச்சியாகி விட்டேன்..."

"அப்படியா?"

"எனக்கு எப்பொழுதும் உங்களுடனே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது..."

"அப்படி என்றால் நானும் பித்தன் தான்...! ஏனென்றால், எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது"

"நான் மட்டும் சோழ தேசம் வராமல் இருந்திருந்தால், தமிழகத்தின் ஏதாவது ஒரு இடத்தில் உலவிக்கொண்டு இருந்திருப்பேன்...! இங்கு வந்ததால் உங்கள் கைகளுக்குள் அகப்பட்டு கிடக்கிறேன்..."

"எங்கு உலவுவாய்?" என்றான் சிரித்தபடி.

"ஏதாவது ஒரு கோவில்... அல்லது, அருங்காட்சியகம்... அல்லது, ஆறு, அருவி என அலைந்து கொண்டிருந்திப்பேன்..."

"உனக்கு ஆற்றுக்கு செல்ல வேண்டுமா?"

"கோட்டைக்குள் ஆறு இருக்கிறதா?"

"கோட்டைக்கு வெளியே இருக்கிறது..."

"அப்படியா? அங்கு என்னை அழைத்துச் செல்கிறீர்களா?" அழகாய் கெஞ்சினாள்.

சரி என்று தலையசைத்தான் அமுதன்.

"எப்பொழுது?"

"இப்பொழுது..."

"இப்பொழுதா? உண்மையாகவா?" என்றாள் அவள் ஆர்வமிகுதியுடன்.

"ஆம்..."

"அரசர் மற்றும் அரசியின் இசைவை பெற வேண்டியது இல்லையா?"

"தேவையில்லை... நாம் சிறிது நேரத்தில் திரும்பி வந்து விடுவோம் அல்லவா?"

"அவர்கள் ஏதும் கூற மாட்டார்களா?"

"மாட்டார்கள். வா செல்லலாம்"

"பொறுங்கள். நான் மாற்று உடை எடுத்து வருகிறேன்"

"நீ ஆற்றில் நீராட போகிறாயா?"

"கூடாதா?" என்றாள் முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு.

உதடு கடித்து புருவம் உயர்த்தினான் அமுதன். அவனையும் அவள் நீராடச் சொல்லி, அங்கும் அவனுடன் நெருங்கி விளையாடினால், அவன் நிலை என்னவாகும்? நிச்சயம் அவள் அவனை நெருப்பின் மீது நிறுத்துவாள் என்று எண்ணினான்.

"சரி, நான் நீராட வில்லை" என்றாள் முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு.

"சரி, மாற்று உடை எடுத்துக்கொள். ஆனால், நான் நீராட மாட்டேன்..."

முகத்தை சுருக்கிய தன்மயா, சரி என்று தலையசைத்தாள். தன் உடைகளை எடுத்து ஒரு பையில் திணித்துக் கொண்டாள்.

"செல்லலாம் வாருங்கள்"

அவர்கள் மாளிகையை விட்டு வெளியே வந்தார்கள். அங்கு நின்றிருந்த வீரனுக்கு சைகை காட்டினான் அமுதன். தலை வணங்கிய அந்த வீரன், அந்த இடம் விட்டு சென்று, சிறிது நேரத்தில் ஒரு தேருடன் வந்தான். அதை அமுதனுக்கு முன்னால் நிறுத்திவிட்டு அந்த இடம் விட்டு அகன்றான். அமுதன் அதில் ஏறிக்கொள்ள, அதன் படிக்கட்டுகளின் மூலம் தன்மயாவும் ஏறிக்கொண்டாள். போர் ரதம் போல் இல்லாமல், அரச பெண்கள் பயணம் செய்யும் விதத்தில், அதில் இருக்கையும், படிக்கட்டும் இருந்தது. அமுதன் சாட்டையை சுழற்றவும், அந்த குதிரைகள் ரத்தத்தை இழுத்தபடி ஓடின.

அந்த தேரில் இருக்கை இருந்த பொழுதும், அமுதனுக்கு அருகில் நின்று கொண்டாள் தன்மயா. மக்களின் பார்வையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தாள் அவள். அவர்களது முகத்தில் மரியாதை நிறைந்திருந்தது. கை கூப்பி வணங்கி நின்றார்கள். அவர்களது திருமண செய்தி கோட்டைக்குள் பரவி விட்டது போல் தெரிந்தது.

"அமுதே...!"

"ம்ம்ம்?"

"நான் நினைப்பது உண்மையா?"

"என்ன நினைக்கிறாய்?" என்றான் புன்னகையோடு, அவள் என்ன கேட்க போகிறாள் என்பதை ஊகித்துவிட்ட அமுதன்.

"நம் திருமண செய்தியை மக்கள் அறிவார்களா?"

"அறிந்திருக்கத்தான் வேண்டும்"

"மெய்யாக தான் கூறுகிறீர்களா?"

"தங்கள் இளவரசனின் திருமண அறிவிப்பிற்காக அவர்கள் காத்திருந்தது நீ அறிந்தது தான். அறிவிப்பு வெளியானவுடன் அது பரவி விடுவது தவிர்க்க முடியாதது தானே?"

"மக்களுக்கு நம் திருமணத்தில் உடன்பாடு தானா?"

"ஏன் இருக்காது?"

"அவர்களைப் பொறுத்தவரை, நான் அயல் நாட்டினாள்"

"அதனால் என்ன?"

"ஒரு நாட்டின் இளவரசரின் திருமணம் என்று வரும்போது, அது அவரது சொந்த சமாச்சாரம் அல்ல... நாட்டின் எதிர்காலம்"

"அரசரும் அரசியும் அதில் உடன்படும் போது, மக்கள் ஏன் வேறுபட போகிறார்கள்?"

"இளவரசரின் நிலை என்பது, அனைவரையும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய நிலை அல்லவா?"

"எந்த அரசராலும் அப்படி முடிவு எடுக்க முடியாது, தன்மயா. ஏனென்றால், நாட்டில் இருக்கும் அனைவரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியம்"

"இருக்கலாம். ஆனால் முடிந்த அளவிற்கு எதிர்ப்புகளை குறைக்க முடியும் அல்லவா?"

"அதை எப்படி செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்"

"எப்படி செய்வீர்கள்?"

"கூடிய விரைவில் அதை நான் உனக்கு காட்டுகிறேன்"

"இப்பொழுது முடியாதா?"

"நாம் இப்போது ஆற்றுக்கு செல்கிறோம். நம்மிடம் நேரம் குறைவாகவே உள்ளது"

சரி என்று தலையசைத்தாள் தன்மயா.

அவர்களது ரதம் கோட்டையை விட்டு வெளியே வந்தது. அதை வடக்கு திசையில் செலுத்திக் கொண்டு சென்றான் அமுதன். சிறிது தூரம் சென்ற பிறகு, காவிரி ஆறு, அரை வட்ட வடிவத்தில் வளைந்து ஓடுவது தென்பட்டது. குதூகலமானாள் தன்மயா.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் ரதத்தை நிறுத்தினான் அமுதன். அந்த இடம் சோலை போல் காட்சி தந்தது. பூ மரங்களால் சூழப்பட்டிருந்த அந்த இடத்தில் காவிரி குறுகலாய் ஓடியது. அதனால் அதில் வேகம் அதிகமாய் இருந்தது. அதன் இடையில் குளம் போன்ற அமைப்பு தென்பட்டது. ஓடி வந்த தண்ணீர் அந்த குளத்தில் விழுந்து, எதிர் திசையில் பயணித்தது.

"இந்த இடம் மிகவும் அழகாய் இருக்கிறது." என்று நின்ற இடத்திலேயே குதித்தாள் தன்மயா.

"இந்த இடத்தில் ஆழம் அதிகம். பார் தண்ணீர் எப்படி சுழித்துக் கொண்டு ஓடுகிறது... அந்த சுழிகள் ஆபத்தானவை. அதனால் அந்த குளத்திற்குள் சென்று விடாதே...!" என்று எச்சரித்தான் அமுதன்.

சற்று நேரம் நின்று, ஆற அமர அந்த இடத்தை போதுமான அளவிற்கு ரசித்த பிறகு, மெல்ல ஆற்றில் இறங்கினாள் தன்மயா.

"தன்மயா..."

"கூறுங்கள்" என்றாள் பின்னால் திரும்பி அவனை பார்த்து.

"எச்சரிக்கையாய் இரு. நான் இப்பொழுது வந்து விடுகிறேன்"

"எங்கு செல்கிறீர்கள்?"

"அங்கு நன்கு கனிந்த வாழை பழங்கள் உள்ளன. அது மிகவும் சுவையாக இருக்கும். நான் அதை பறித்துக் கொண்டு வருகிறேன்"

அவள் சரி என்று தலையசைக்கவும், அந்த வாழை மரத்தை நோக்கி சென்றான் அமுதன்.

அப்பொழுது ஒரு குறும்புத்தனமான எண்ணம் அவள் மனதில் உதித்தது. அமுதனுடன் சற்று விளையாட எண்ணினாள். ஆற்றை விட்டு வெளியே வந்து, ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு, ஒரு பெரிய கல்லை தூக்கி அந்த குளத்திற்குள் எரிந்துவிட்டு, *வீல்* என்று கத்தினாள், அவள் அந்த ஆழமான குளத்திற்குள் தவறி விழுந்து விட்டது போல.

அவளது அலறலை கேட்டு ஆற்றை நோக்கி ஓடி வந்தான் அமுதன். அவளை அங்கு காணாததால், பதற்றம் அடைந்த அவன்,

"தன்ம...யா... எங்கே இருக்கிறாய்? தன்ம...யா..."

அவனது கண்கள் சட்டென்று கலங்கின. அவனது மனம் வேண்டாததை எல்லாம் யோசித்தது. யோசிக்காமல் அந்த குளத்திற்குள் குதித்த அவன், நீருக்குள் அவளை தேடினான். ஆனால் அவள் அங்கு இருந்ததற்கான அறிகுறியே இல்லை. குளத்தை விட்டு வெளியே எழுந்த அவன்,

"தன்ம...யா..." என்று மீண்டும் கத்தினான்.

மீண்டும் அவன் நீருக்குள் மூழ்க நினைத்தபோது, தன்மயாவின் சிரிப்பொலி கேட்டு நின்றான். அவள் ஒரு மரத்தின் பின்னால் இருந்து வெளி வருவதை கண்டான். கண்களை மூடி, நிம்மதி பெருமூச்சு விட்டான்.

"பயந்து விட்டீர்களா?" என்று அவள் மீண்டும் சிரித்தாள்.

தண்ணீரை விட்டு வெளியே வந்த அமுதன், ஒன்றும் கூறாமல், கீழே பார்த்தபடி அங்கிருந்த படித்துறையில் அமர்ந்தான். அவன் அப்படி அமர்ந்திருந்ததை பார்த்த தன்மயாவுக்கு விசித்திரமாய் இருந்தது. அவள் அதை விளையாட்டிற்காக தான் செய்தாள். அவள் மனதில் ஏதோ தவறாய் உணர்ந்ததால் அவனை நோக்கி மெல்ல நடந்தாள்.

கல் போன்ற முக பாவத்துடன் அமர்ந்திருந்தான் அமுதன். தான் தவறு செய்து விட்டதை உணர்ந்து வருந்தினாள் தன்மயா. அவளது செயல் அமுதனை இவ்வளவு தூரம் பாதிக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. மெல்ல அவனிடம் வந்த தன்மயா அவன் தோளை தொட்டாள். அவள் முகத்தை பார்க்காமல் எழுந்து நின்ற அமுதன்,

"செல்லலாம்" என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு, நடக்கத் தொடங்கினான்.

அவன் கரத்தை பற்றி நிறுத்திய தன்மயா,

"அமுதே...!" என்றாள். 

"தன்மயா, இப்பொழுது நான் எதைப் பற்றியும் பேச விரும்பவில்லை. வா செல்லலாம்" என்றான் உடைந்த குரலில்.

"என்னை மன்னித்து விடுங்கள், அமுதே!" என்ற அவளை, வலி நிறைந்த பார்வை பார்த்து,

"எல்லா உணர்வுகளுக்கும் மன்னிப்பை மருந்தாக்கி விட முடியாது, தன்மயா. சில உணர்வுகளை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. நீ என்னை நஞ்சு தோய்க்கப்பட்ட அம்பிலிருந்து காத்தாய். அன்று நான் அது குறித்து பெரிதாய் ஒன்றும் ஆலோசிக்கவில்லை. ஏனென்றால் என் போன்ற வீரர்கள் எப்பொழுதும் மரணத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள். ஆனால் நான் உன்னை காதலிக்க துவங்கிய பிறகு, இந்த வாழ்க்கையை எனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பாக நினைக்கிறேன். என்னுடைய வாழ்க்கையை அனுபவிப்பதற்காக அல்ல... என் வாழ்க்கையை உன்னுடன் இன்புற்று வாழ்வதற்காக...! அது கடவுள் எனக்கு அளித்த பரிசாய் கருதுகிறேன். நான் அடிக்கடி நினைத்துப் பார்த்ததுண்டு, ஏன் மக்கள் வீணே காதல் வயப்பட்டு, அதில் விழுந்து, தவித்து, சாகிறார்கள் என்று...! ஆனால் நான் உன்னை காதலிக்க ஆரம்பித்த பிறகு, உனக்காக நூறு முறை கூட செத்து உயிர் பெறலாம் என்று தோன்றுகிறது. நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கை இருப்பதாய் நான் கருதவில்லை. தண்ணீர் தெறிக்கும் சத்தம் கேட்டு சில நொடிகள் என் மூச்சே நின்று விட்டது. ஒருவேளை, நீ கிடைக்காவிட்டால் நான் இறந்து விடுவேனோ என்று எண்ணினேன். ஆனால் நீ, என் உணர்வுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாய். நான் கண்ணீர் வடிப்பதை காண வேண்டும் என்று விரும்புகிறாயா, தன்மயா? அல்லது, நான் உன் இழப்புக்காக வருத்தப்பட மாட்டேன் என்று எண்ணினாயா? என்ன நினைத்தாய் தன்ம...யா?" என்று குரலை உயர்த்தினான்.

"இல்லை... நான்..." தடுமாறினாள் தன்மயா.

"என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் இவ்வளவு தூரம் வருத்தம் கொள்வீர்கள் என்று நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. என்னை தங்கள் முன்னாள் கண்டவுடன் மகிழ்வீர்கள் என்று எண்ணினேன்..."

"செல்லலாம் வா, தன்மயா" என்று திடமாய் கூறிவிட்டு நடந்தான் அமுதன்.

வருத்தத்தோடு நின்றாள் தன்மயா. அப்படி விளையாடியதற்காக தன்னைத்தானே சபித்துக்கொண்டாள் அவள். அவளுக்கு தெரியாதா, அமுதன் தன் காலத்து ஆண்களைப் போல் அல்ல என்று...! பிறகு ஏன் இவ்வளவு பெரிய தவறை செய்தாள்?

அவளுக்காக ரதத்தில் காத்திருந்தான் அமுதன். அந்த ரதத்தில் படிக்கட்டுகள் இருந்ததால், அதில் அமுதனின் உதவி இன்றி ஏறிக்கொண்டாள் தன்மயா. அது போர் ரதமாக இருக்கக் கூடாதா என்று விரும்பினாள் அவள். அதில் ஏற அமுதன் அவளுக்கு உதவியிருப்பான் அல்லவா...!

வழி முழுக்க இறுக்கத்துடன் காணப்பட்டான் அமுதன். ஆனால் தன்மயா வேண்டுமென்றே அவனிடம் ஏதேதோ பேசியபடி வந்தாள். ஆனால் எதற்கும் அவன் பதில் கூறவில்லை. அவன் அப்படி இருந்ததை அவளால் தாங்கவே முடியவில்லை. யாரோ அவள் இதயத்தை பிழிவது போல் இருந்தது. அரண்மனைக்கு சென்று சேர்ந்த பிறகு அவனை சமாதானப்படுத்திவிட வேண்டும் என்று எண்ணி கொண்டாள்.

ஆனால் அவளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், அரண்மனை சென்று சேர்ந்த பிறகு, ரதத்தில் இருந்து கீழே குதித்த அமுதன், அவர்கள் அறைகள் இருந்த திசைக்கு எதிர்ப்புறம் நடக்க துவங்கினான்.

இயலாமையுடன் நின்றாள் தன்மயா. அவளது கண்கள் கலங்கின. அமுதனின் மௌனம், அவள் மனதில் பெரும் புயலை ஏற்படுத்தியது. முதல் தளத்திற்கு சென்று தன் அறைக்கு செல்லாமல் வெளியிலேயே அமுதனுக்காக காத்திருந்தாள். ஆனால் அமுதன் வரவில்லை.

மெல்ல இருட்டத் துவங்கியது. அரண்மனை பணியாளர்கள் சுளுந்துகளையும், பெரும் விளக்குகளையும் ஏற்ற துவங்கினார்கள். தன்மயா நம்பிக்கை இழக்கலானாள். அமுதனின் கோபத்தின் ஆழம் அவளுக்கு புரிந்தது. அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவன் தன் அறைக்கு வந்தால் தானே அவனை சமாதானபடுத்த அவள் எந்த முயற்சியும் மேற்கொள்ள முடியும்? அவன் எங்கு சென்றான் என்றே அவளுக்கு தெரியவில்லை. பிறகு அவள் என்ன செய்ய முடியும்? வெகு நேரம் நின்றதால் அவளது கால்கள் வலித்தன. தன் அறைக்குச் சென்ற தன்மயா, தன் கால்களை தானே பிடித்து விட்டுக் கொண்டாள்.

அதைக் கண்ட தவ்வை, அவளை நோக்கி ஓடிச் சென்று,

"நான் உங்கள் கால்களை பிடித்து விடுகிறேன்" என்றாள்.

தன் கால்களை பின்னால் இழுத்துக் கொண்ட தன்மயா, வேண்டாம் என்று தலையசைத்தாள்.

"இளவரசர் தன் அறைக்கு வந்தால், எனக்கு தெரியப்படுத்து" என்றாள்.

"அவர் இப்பொழுது தான் தன் அறைக்குள் சென்றார்..." என்றாள் தவ்வை.

"அப்படியா?" என்று கட்டிலில் இருந்து கீழே குதித்த தன்மயா, அமுதனின் அறையை நோக்கி ஓடினாள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro