Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

42 செயல்பட்ட திட்டம்

42 செயல்பட்ட திட்டம்

தன் இதழ்களை அமுதனின் இதழ்களின் மீது ஒற்றி, அவனது ரத்த ஓட்டத்தை நிறுத்தினாள் தன்மயா. பாவம் அந்த இளவரசன்...! இதெல்லாம் அவன் அறிய மாட்டானே! அதுவே இக்காலத்து இளைஞனாய் இருந்திருந்தால், அவனும் தன் திறமையை காட்டியிருப்பான். ஆனால் அமுதன், புலன்களை அடக்கக் கற்றவன். இவ்வளவு நாள் வரை, அதை பின்பற்றுவதில் அவனுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. ஏனென்றால், இது போன்ற சூழ்நிலைகளை அவன் இதற்கு முன் எதிர்கொண்டதில்லை. தன் செயலால் அவனை தன்மயா கொன்றாள் என்றே கூற வேண்டும். இப்படிப்பட்ட ரகசிய அனுபவங்களை எல்லாம் அவன் இதுவரை கற்பனை கூட செய்து பார்த்தது கிடையாதே...! அப்படி இருக்கும் பொழுது, எதிர்பாராத விதமாய் அவ்வாறு நடக்கும் பொழுது அவனும் என்ன தான் செய்வான்?

அவனிடமிருந்து மெல்ல விலகிய தன்மயா, அவன் கண்களை இறுக்கமாய் மூடியபடி நின்றிருப்பதை கண்டாள். தன் வயிற்றுக்குள் நண்டு குடைவது போல் இருந்தால், அவன் அப்படித்தானே இருப்பான்? அப்பொழுது தான், அவள் செய்து வைத்த வேலை என்ன என்பது அவளுக்கு புரிந்தது. அதன் விளைவு இப்படி இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

எத்தனையோ போர் முனைகளை தன் வீர தீர சாகசங்களால் கலங்கடித்த அந்த மாவீரன், தான் காதலித்த பெண்ணின் செய்கையால் கதிகலங்கி நின்றான். தன் கைகளை அவன் கன்னங்களில் இருந்து அகற்றாமல், தன்னை மறந்து அவனைக் கண்டு களித்தாள் அவள். இப்படி ஒரு காட்சியை அவள் எந்த திரைப்படத்திலும் கண்டதில்லை. ஒரு ஆணின் மனக்கிளர்ச்சியை இவ்வளவு அழகாய் வரித்து காட்டக்கூடிய தன்மை இதுவரை எந்த ஒரு திரைப்படத்திற்க்கும் இருந்ததில்லை. ஆணுக்கு வீரம் தான் அழகு என்றாலும், காதல் மயக்கம் கொண்ட வீரன் பேரழகு வாய்ந்தவன் என்பதை அன்று உணர்ந்தாள் தன்மயா.

அவனது அந்த அழகில் மதி மயங்கிவிட்ட அவள், மீண்டும் அவனை நெருங்கி, அவனது இதழ்களை தன் இதழ்களால் சிறை பிடித்தாள். அவ்வளவு நேரம் தன் கண்களை மூடிக்கொண்டிருந்த அவன்,  அதிர்ச்சியோடு கண்களை திறந்தான். என்ன செய்வதென்று புரியாத அவன், சிலை போல் நின்றான். அந்த நிலைமையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தைரியம் அவனுக்கு இருக்கவில்லை. ஆனால் தன்மயாவுக்கு அப்படிப்பட்ட சிக்கல் எதுவும் இல்லை. என் கணவனுடன் நான் இப்படித் தான் இருப்பேன் என்று அவள் தான் ஏற்கனவே கூறி விட்டாளே...! தான் கூறியதை தான் அவள் செயல்படுத்தினாள். அவளது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் அவளுக்கு எந்த தயக்கமும் இல்லை. அமுதன் அவளுடைய கணவனாக போகிறவன். அவர்களுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கப் போகிறது. அதில் தயங்க எதுவும் இருப்பதாய் அவளுக்கு தோன்றவில்லை. அதில் தயக்கம் காட்டவும் அவள் விரும்பவில்லை. அவள் யார், அவளது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை அமுதன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் அவள்.

அது மட்டுமல்ல, அவன் அவளுக்கு சொந்தமானவன். அவனை அவள் காதலிக்கிறாள். அவனை முத்தமிட வேண்டும் என்று அவளுக்கு தோன்றியதில் தவறு இருப்பதாய் அவள் நினைக்கவில்லை. மெல்ல அவனை விட்டு விலகினாள். அரை மயக்க நிலையில் இருந்த அமுதன், மெதுவாய் கண் திறந்தான். அவள் அவனது கண்களை முத்தமிட்டு மீண்டும் அவனை கண்களை மூடச் செய்தாள்.

"நான் உங்களை காதலிக்கிறேன்" என்று அவள் கூறியதை கேட்டு, திடுக்கிட்டு கண் விழித்தான் அமுதன்.

இப்படிப்பட்ட விதத்தில் கூட காதலை வெளிப்படுத்த முடியும் என்று அவன் அதுவரை நினைத்ததில்லை. அவ்வளவு ஏன், ஒரு பெண்ணால் காதலை இப்படி கூற முடியும் என்று கூட அவன் நினைத்ததில்லை. அவன் வாழ்ந்த காலத்தில், காதல் என்று வந்து விட்டாலே பெண்களுக்கு தெரிந்ததெல்லாம் வெட்கமும் நாணமும் தான். அவனது உடலில் இன்னும் கூட அதிர்வலைகள் இருந்து கொண்டு தான் இருந்தன. இறுக்கமாய் மூடியிருந்த அவனது கரத்தை பற்றிய அவள், அவற்றை தன் கன்னங்களில் வைத்துக் கொண்டாள். அவளை பார்த்து மெல்ல கண்ணிமைத்தான் அமுதன்.

"தாம் என்னை முத்தமிட மாட்டீரா?" என்று தன் கன்னத்தை அவனிடம் காட்டினாள்.

மென்று விழுங்கினான் அமுதன். அவளது அதித துணிச்சல், அவனுக்கு நடுக்கத்தை தந்தது. அவனைப் பார்த்து தன் புருவம் உயர்த்தினாள். தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட அமுதன், தன் இதழ்களால் அவள் கன்னத்தை தொடுவதற்கு தயாரானான். அவன் ஒற்றி எடுத்து விட வேண்டும் என்று தான் எண்ணினான். ஆனால் ஒற்றிவிட்ட பிறகு, எடுத்துவிட அவனால் இயலவில்லை. அவளது வழுவழுப்பான கண்ணம் ஏற்படுத்திய மயக்கம், அவனது இதழ்களை அவள் கன்னத்தில் அழுத்தமாய் பதிக்க செய்து, அவளிடம் நெருங்கச் செய்தது. தன் கண்களை மூடி அவனை அணைத்துக் கொண்டாள் தன்மயா.

இதற்கிடையில்...

எழிலரசி கொடுத்த தகவலை படித்துப் பார்த்த அரசி அன்பிற்கினியாள், திகைத்து நின்றார். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு முழு கண நேரத்தை எடுத்துக் கொண்டு, அதன் பிறகு வாய்விட்டு சிரித்தார். தனக்கு வரவிருக்கும் மருமகளின் திறமையை எண்ணி அவர் பெருமை கொண்டார். அந்தத் திட்டத்தை செயல்படுத்த எழிலரசியின் வருகைக்காக காத்திருந்தார்.

காஞ்சனமாலையின் தந்தையை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் அவர் தவித்துக் கொண்டிருந்தார். அமுதனுக்கு தன்மயாவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற அவர்களது முடிவு, நிச்சயம் அவர்களது நாட்டிற்கு சிக்கலை கொண்டு வரும் என்று அவருக்கு தெரியும். காஞ்சனமாலையின் தந்தையின் ஆதரவை அவர்கள் இழப்பார்கள். பல சிற்றரசர்களின் நன்மதிப்பை பெற்றவர் அவர். அவரை பகைத்துக் கொள்வது நல்ல சிந்தனையில் சேராது. இந்த சிக்கலில் இருந்து எப்படி விடுபடுவது என்று அவர் ஓயாமல் ஆலோசித்துக் கொண்டிருந்தார். இப்பொழுது அதற்கான வழியை தன்மயா கண்டுபிடித்து விட்டதால், அவர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

அவர்களது திட்டத்தின் படி, அரசி அன்பிற்கினியாள் அந்த அறையின் வாசலிலேயே காத்திருந்தார். அப்பொழுது தானே அவர்கள் பேசுவதை உமையாள் கேட்க முடியும்...! தங்கள் திட்டத்திற்கு தோதாக, அங்கிருந்த காவலாளிகளை கூட அனுப்பிவிட்டார் அன்பிற்கினியாள்.

எழிலரசி அவரது அறைக்கு வந்தவுடன், தங்களது நாடகத்தை அரங்கேற்ற அவர்கள் தயாரானார்கள்.

"என்னிடம் என்ன பேச வேண்டும் எழிலரசி?" என்றார் அன்பிற்கினியாள்.

"அம்மா, இளவரசர் வாகைவேந்தர், இளவரசி அல்லாத ஒரு பெண்ணை மணந்து கொள்ள தாம் எப்படி இசைவளித்தீர்கள்? அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணிலா கனவுகளுடன் காஞ்சனமாலை காத்திருக்கிறாள். அவளது தந்தை உங்களது முடிவை தெரிந்து கொண்டால், மிகுந்த சினம் கொள்வார். நாம் அவரது ஆதரவை இழப்போம். போரை கூட சந்திக்க வேண்டி வரலாம்"

"அவர்களது திருமணத்தை ஏற்றுக்கொள்ள எங்களுக்கு உறுதியான காரணம் இருக்கிறது" என்றார் அன்பிற்கினியாள்.

"அது என்ன என்பதை தெரிந்துகொள்ளத் தான் நானும் நினைக்கிறேன். இந்நாட்டின் இளவரசியாய் இருப்பதால், அதை தெரிந்து கொள்ளும் உரிமை எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன்"

"நிச்சயம் இருக்கிறது. ஆனால், இந்த ரகசியத்தை நீ யாரிடமும் கூறக்கூடாது"

"என்ன ரகசியம்?"

"அமுதனின் பிறந்த சாதகத்தில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது"

"சிக்கலா?"

"அமுதன் காஞ்சனமாலையை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் அவளது தந்தையார் கோபம் கொள்வார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்கள் திருமணம் செய்து கொண்டால், அவர் தன் வாழ்நாள் முழுக்க வருத்தப்பட நேரிடும்"

"தாம் என்ன கூறுகிறீர்கள்?"

"அமுதனின் சாதகத்தில் மிகப்பெரிய குறை இருக்கிறது"

"என்ன அது?"

"அமுதனை மணக்கும் பெண், அவனுக்கு வாரிசை தந்துவிட்டு இறந்து விடுவாள்"

"என்ன்னன?" என்று அதிர்ந்தாள் எழிலரசி.

"ஆம், அவனுக்கு வரப்போகும் மனைவிக்கு அற்ப ஆயுள். இப்பொழுது கூறு, நான் காஞ்சனமாலையை எப்படி அவனுக்கு மணமுடித்து வைப்பேன்? அவள் நம் அரண்மனையில் வளர்ந்த குழந்தை. அவளும் என் மகளைப் போன்றவள். அதனால் தான், நானும் உனது தந்தையும் அவளது வாழ்வை நெருப்பில் நிறுத்த விரும்பவில்லை. நம் நாட்டிற்காக அவளது வாழ்க்கையை பணையமாக்க நாங்கள் எப்படி துணிவது? ஆனால் தன்மயாவின்  கதை அப்படியல்ல. தன்மயாவுக்கு யாரும் இல்லை. அவளுக்கு என்ன நேர்ந்தாலும் கேள்வி கேட்பார் ஒருவரும் இல்லை. ஆனால் அதே நேரம், அவள் மூலமாக நம் நாட்டிற்கு எதிர்கால வாரிசும் கிடைத்துவிடும். அதனால் தான் இந்த திருமணத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்"

"அப்படி என்றால், அவளது மறைவுக்குப் பிறகு வாகைவேந்தர் வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்ளலாமா?"

பெருமூச்சு விட்ட அன்பிற்கினியாள்,

"அவன் எத்தனை பேரை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம். ஆனால் அவனுடன் யாரும் நிலைக்க மாட்டார்கள்...! அவனுக்கு ஒரு வரிசை கொடுத்துவிட்டு மாண்டு போவார்கள்"

"தாம் என்ன கூறுகிறீர்கள்?"

"ஆம், அப்படித்தான் அவனுக்கு விதிக்கப்பட்டு இருக்கிறது"

"இறைவா... என் அண்ணனின் வாழ்க்கை இப்படியா அமைய வேண்டும்?"

"தயவுசெய்து இந்த உண்மையை யாரிடமும் கூறி விடாதே. இந்த விடயம் தன்மயாவின் காதுகளுக்கு எட்டி, அவள் இங்கிருந்து ஓடி விட்டால், நம் நாட்டிற்கு வாரிசு கிடைக்காமல் போய்விடும். ஏனென்றால், எந்த இளவரசியின் பெற்றோரும் சாதக பொருத்தம் பார்க்காமல் அமுதனை மணக்க சம்மதிக்க மாட்டார்கள். அப்படி அவர்கள் பொருத்தம் பார்க்கும் போது, அவனைப் பற்றிய உண்மை வெளியாகி விடும்" என்றார் கெஞ்சலாக.

"இல்லை அம்மா, நான் இந்த உண்மையை யாரிடமும் கூற மாட்டேன். இது நம் நாட்டையும் இளவரசரையும் பற்றிய உண்மை ஆயிற்றே... இதை நான் எப்படி வெளியில் கூறுவேன்?"

அங்கிருந்து ஒரு நிழல் நகர்வதை அவர்கள் கண்டார்கள். அன்பிற்கினியாளை அமைதியாய் இருக்கும்படி சைகை செய்துவிட்டு, மெல்ல வெளியே எட்டிப் பார்த்தாள் எழிலரசி. காஞ்சனமாலையின் இருப்பிடம் நோக்கி தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்தாள் உமையாள். உள்ளே வந்த எழிலரசி கலகலவென சிரிக்க, அவளுடன் அன்பிற்கினியாளும் இணைந்து கொண்டார்.

"எப்படி தங்கள் மருமகளின் திட்டம்?" என்றாள் எழிலரசி சிரித்தபடி.

"நான் அவளை அமுதனுக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து மிகவும் கவலையோடு இருந்தேன். ஏனென்றால், அரசியாய் இருப்பதற்கு நற்குணங்கள் மட்டும் போதாது. நாட்டை நல்வழிப்படுத்த சில தந்திரங்களும் அறிந்திருக்க வேண்டும். மன்னருக்கு உறுதுணையாய் செயல்பட வேண்டும். நாட்டில் தலை தூக்கும் சிக்கல்களை தீர்க்க அவள் துணை புரிய வேண்டும். அதை தன்மயாவால் செய்ய முடியுமா என்ற ஐயம் எனக்கு இருந்தது. ஏனென்றால் அவள் அயல் நாட்டுப் பெண். நம் நாட்டின் வழிமுறைகளை அறியாதவள். ஆனால் இப்பொழுது, அவள் அதை செய்து காட்டுவாள் என்ற நம்பிக்கை எனக்கு பிறந்திருக்கிறது. அவள் நல்ல மனைவியாக மட்டும் அல்ல, நல்ல அரிசியாகவும் விளங்குவாள்" என்றார் அன்பிற்கினியாள் முழு திருப்தியுடன்.

அவர் கூறுவதை ஏற்றுக்கொண்டு தலையசைத்தாள் எழிலரசி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro