Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

40 திட்டம்

40 திட்டம்

தனது அறையில் அன்பிற்கினியாள் வைத்துவிட்டு சென்ற நகைகளை பார்த்தாள் தன்மயா. நம்ப முடியாத அளவிற்கு திடீர் மாறுதல்களை காணும் அவளது வாழ்க்கையை எண்ணி அவள் வியந்தாள். அவள் புராதன சிறப்புமிக்க ஒரு இளவரசனை மணக்கப் போகிறாள். வரலாற்று பின்னணியை கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவள் அவள். வரலாறு குறித்த ஆர்வத்தை அவளது தாத்தா அவளது மனதில் விதைத்து, அது விருட்சமாய் வளரவும் காரணமாய் இருந்தார். அவளுக்கு கல்வெட்டு மொழியை பயிற்றுவித்தார். அதன் காரணமாகவே அவள் ஒரு பயணியாய் மாறினாள். சோழ தேசத்திற்கு வந்த அவள், திருமிழலையின் இளவரசனான அமுதனை சந்தித்தாள். அவன் இளவரசன் என்ற உண்மை அறியாமல், அவனை கிண்டலும் கேலியும் செய்தபடி அவனுடன் பயணப்பட்டாள். அந்த பயணம் தான் அவர்களுக்கு இடையில் நெருக்கம் ஏற்பட காரணமாய் அமைந்தது.

தன்மயாவின் எண்ணச் சங்கிலி அறுபட்டது, எழிலரசியுடன் பெண்கள் குழாம் உள்ளே வருவதை பார்த்து. கட்டிலை விட்டு எழுந்து நின்று அவர்களை பார்த்து புன்னகை புரிந்தாள் தன்மயா. அவளை நோக்கி ஓடிச் சென்று, அவளை அணைத்துக் கொண்டாள் எழிலரசி.

"நீங்கள் எனக்கு அண்ணியாய் வர இருப்பதை நினைக்கும் போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை."

"எங்கள் மகிழ்ச்சிக்கும் அளவில்லை." என்றார்கள் மற்ற பெண்கள்.

"நீங்கள் எங்கள் நாட்டை விட்டு சென்று விடுவீர்கள் என்று எண்ணிய பொழுதெல்லாம் எங்களுக்கு வெறுப்பாய் இருந்தது. தெய்வாதினமாக, நீங்கள் என் அண்ணனை மணக்க ஒப்புக் கொண்டு விட்டீர்கள். இனி தாம் இங்கிருந்து சென்று விடுவீர்கள் என்ற அச்சமே எனக்கு இல்லை."

"என்னைத் தவிர வேறு யாராவது உனக்கு அண்ணியாய் வாய்த்திருந்தால், நீ மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டாயா?" என்றாள் தன்மயா.

"நிச்சயம் இல்லை." என்றாள் எழிலரசி யோசிக்காமல்.

"உங்களைப் போல் மகிழ்வாகவும் இனிமையாகவும் யார் இருப்பார் கூறுங்கள்? உங்களைப் போல் அடுத்தவரை மகிழ்ச்சியூட்டும் பெண்ணை நாங்கள் பார்த்ததே இல்லை. இளவரசர், ஒரு இளவரசியை மணந்து கொண்டால், எங்களுக்கும் அவளுக்கும் எந்த வேறுபாடும் இருந்திருக்காது. நாங்கள் அனைவரும் ஒன்று போல் தான் இருந்திருப்போம். ஆனால் நீங்கள் எங்களைப் போல் அல்ல. முற்றிலும் வேறுபட்டவர். எந்த வேறுபாட்டையும் தங்கள் செயலில் காட்டாதவர். நீங்கள் மற்றவரைப் போல் அல்லாமல் தோழமை மிக்க அண்ணியாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது."

"உன்னுடன் தோழமையுடன் இருப்பதால் எனக்கு என்ன கிடைக்கும்?" என்றாள் தன்மயா.

"நீங்கள் விரும்பிய எதுவானாலும் கிடைக்கும்."

"என் கணவனின் சகோதரியும் என்னுடன் தோழமையுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."

"இவ்வளவு தானா?"

"அது அவ்வளவு சுலபம் அல்ல."

"ஏன்?"

"நான் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையை மறைக்காமல் என்னிடம் நீ வெளிப்படையாய் பதில் அளிக்க வேண்டும்.  நமக்குள் பொய்யே இருக்கக் கூடாது."

"என்னிடம் தாம் என்ன கேட்க போகிறீர்?" என்றாள் தயக்கத்துடன்.

"நீ யாரையாவது காதலிக்கிறாயா என்று கேட்பேன்."

எழிலரசி திகைத்து நிற்க, மற்றவர்கள் வெட்கப்பட்டார்கள்.

"இதில் வெட்கப்பட எதுவும் இல்லை. இந்த வயதில், காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் பொதுவாய் நிகழ கூடியது தான்."

"அதனால் தான் இளவரசர் வாகைவேந்தர் தங்களை காதலிக்கிறாரா?" என்றாள் தாமரை.

"அதனால் தான் நானும் அவரை காதலிக்கிறேன்."

திடீரென்று அனைவரும் அமைதியானார்கள், தேன் குடுவையுடன் அமுதன் வருவதை பார்த்து. அனைவரும் தலை குனிந்து கொண்டார்கள். தேன் குடுவையை தன்மயாவிடம் கொடுத்தான் அமுதன். அங்கு வைக்கப்பட்டிருந்த ஆபாயணங்கள் அனைத்தையும் அவனது தாயார் தான் தன்மயாவுக்கு கொடுத்திருப்பார் என்று அவனுக்கு தெரியும். ஏனென்றால் அது அவர்களது முறை. அவைற்றை நிச்சயம் தன்மயா அணிந்து கொள்ள மாட்டாள் என்பதும் அவன் அறிவான்.

"நன்றி!" என்றபடி அவனிடமிருந்து தேன் குடுவையை பெற்றுக் கொண்டாள் தன்மயா.

அப்பொழுது தான் தன்மயா அணிந்திருந்த அந்த தடிமனான சங்கிலியை கவனித்தான் அமுதன். வியந்தபடி புன்னகைத்தான். அவனது புன்னகையின் பொருள் உணர்ந்த தன்மயா,

"இதை அரசியார் எனக்கு அணிவித்தார். நான் பார்க்க வேடிக்கையாக இருக்கிறேன் அல்லவா, அமுதே...!"

இல்லை என்று தலையசைத்தான் அமுதன். அவள் அமுதனை பெயர் சொல்லி அழைப்பதை கேட்ட பெண்கள் மெல்ல தங்கள் தலையை உயர்த்தினார்கள்.

"இங்கு என்ன நடக்கிறது?" என்றான் அமுதன்.

"இவர்கள் அனைவருக்கும் நான் அவர்களுக்கு அண்ணியாக வருவதில் மிகுந்த மகிழ்ச்சி." என்று சிரித்தாள் தன்மயா.

"நாளை உங்களுக்காக ஒரு பூஜை நடைபெற இருக்கிறது." என்றாள் எழிலரசி.

"ஆம், அம்மா கூறினார்" என்றாள் தன்மயா. அவளை அனைவரும் திகைப்புடன் பார்த்தார்கள்.

"என்ன? எதற்காக அனைவரும் என்னை அவ்வாறு பார்க்கிறீர்கள்?"

"கணவனின் தாயை அம்மா என்று அழைப்பதை அவர்கள் இதுவரை பார்த்ததில்லை." என்றான் அமுதன்.

"ஓ..."

"உங்கள் நாட்டில் பெண்கள் கணவனை பெயர் சொல்லி அழைப்பீர்களா?"

"கணவனை அடிக்கக் கூட செய்வோம்." என்று அவள் சிரிக்க அனைவரும் அதிர்ந்தார்கள்.

"அவர்களின் கணவர்கள் அவர்களை திருப்பி அடிக்க மாட்டார்களா?"

"எங்கள் நாட்டுப் பெண்களைப் பற்றி நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவர்களை அடித்தால், ஆண்களின் மீது வழக்கு பதிவு செய்யப்படும்."

"ஆனால் அவர்களும் தானே அவர்களது கணவர்களை அடிக்கிறார்கள்?"

"எங்கள் நாட்டின் சட்டத்தின்படி, மனைவி கணவனை அடிக்கலாம். ஆனால் கணவன் மனைவியை அடிக்கக் கூடாது. அது குற்றம்." என்றாள் தன் சிரிப்பை அடக்கியபடி.

அது அமுதனுக்கும் கூட புதிய செய்தி தான். தன்மயா அது பற்றி அவனிடம் கூறியதில்லை.

"ஆனால், அவர்கள் கணவனை அடித்துவிட்டு அவர்களோடு எப்படி வாழ்நாள் முழுவதும் மனம் ஒத்து வாழ இயலும்?"

"வாழ்க்கை முழுவதுமா? அதற்கு அவசியம் இல்லை. தன் கணவனை பிடிக்கவில்லை என்றால், அவர்களது திருமணத்தை ரத்து செய்து கொள்ளலாம்."

"பிறகு அவர்கள் எப்படி தனியாக வாழ முடியும்?"

"ஏன் தனியாக வாழ வேண்டும்? வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வாள்."

"என்ன்ன்னனன?" அனைவரும் அதிருந்தார்கள்.

நீ கூறுவது உண்மையா? என்பது போல பார்த்தான் அமுதன்.

"எங்கள் நாட்டில் ஆண்களும் பெண்களும் சமம். ஆண்கள் செய்யும் அனைத்து காரியங்ளையும் பெண்களும் செய்வார்கள்."

தன்மயாவின் கரத்தை பிடித்து தன் தலையின் மீது வைத்துக் கொண்டு,

"நீங்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டீர்கள் என்று எனக்கு உறுதி கூறுங்கள்" என்றாள் எழிலரசி தவிப்புடன்.

சிரித்தபடி தன் கையை இழுத்துக் கொண்டாள் தன்மயா. அமுதன் வாய்விட்டு சிரித்தான்.

"எங்கள் நாட்டில் இருக்கும் அனைத்து பெண்களும் அப்படி அல்ல. உன்னைப் போன்ற நல்ல பெண்களும் எங்கள் நாட்டில் இருக்கிறார்கள். எங்கள் நாடு அவ்வளவு ஒன்றும் மோசமாய் போய்விடவில்லை...!"

மீண்டும் அவள் கையைப் பிடித்து தன் தலையின் மீது வைத்துக் கொண்டு,

"அதைப் பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. நீங்கள் அப்படி இருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்."

"உன் அண்ணனை பார். நான் அப்படியெல்லாம் நடந்து கொண்டால், இவர் பொறுத்துக் கொள்வார் என்று நினைக்கிறாயா? என் தலையை கொய்த்து விட மாட்டாரா?"

"மாட்டார்... அவர் தங்களை மிகவும் காதலிக்கிறார்."

அமுதனை பார்த்து புன்னகை புரிந்த தன்மயா,

"நானும் அவரை மிகவும் காதலிக்கிறேன். அதனால் எங்கள் வாழ்வில் அப்படியெல்லாம் நிகழ வாய்ப்பில்லை. வாழ்நாள் முழுவதும் அவரோடு இருந்து, அவருக்கு உறுதுணையாய் நிற்பேன். நான் கூறுவது சரி தானே அமுதே? "

ஆமாம் என்று தலையசைத்த அமுதன்,

"தன்மயா என் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறாள்!" என்றான்.

அமுதனை பார்த்த தன்மயா,

"நான் இந்த பெண்களிடம் சற்று பேச வேண்டி இருக்கிறது..."  என்றாள்.

கண்களை சுருக்கினான் அமுதன். அவனிடம் ஏதோ சைகை செய்ய, அவன் தலையசைத்து அங்கிருந்து சென்றான். பெண்கள் அனைவரும் அவளை ஆர்வத்துடன் பார்த்தார்கள். தன்மயா அவர்களிடம் என்ன பேசப்போகிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு.

"எங்கள் திருமண அறிவிப்பை கேட்டு, இளவரசி காஞ்சனமாலை என்ன செய்தாள் என்று யாருக்காவது தெரியுமா?"

"வேறென்ன? அழுது கொண்டிருப்பாள்" என்றாள் தாமரை.

"அவள் ஏன் அழப்போகிறாள்? அவள் மற்றவரை தான் அழ வைப்பாள்" என்றாள் இன்பவள்ளி.

"அவள் இந்நேரம் வெந்து வெதும்பிக் கொண்டிருக்க வேண்டும்" - தேவநங்கை.

"அவளது முகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் எங்களுக்கு இன்னும் வாய்க்கவில்லை." - தாமரை.

"அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக மகிழ்ச்சி கொள். அவள் முகம் அனலைத்தானே கக்கி கொண்டிருக்கும்..." என்றாள் இன்பவள்ளி.

அவர்கள் சிரித்தார்கள்.

"அவள் இன்னும் தனது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. அவளது தந்தை எந்நேரமும் இங்கு வரலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்நேரம் அவருக்கு இது குறித்த தகவலை அவள் அனுப்பி இருக்க வேண்டும்" என்றாள் எழிலரசி.

"நான் அரசியை சந்திக்க வேண்டும்." என்றாள் தன்மயா.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"நீயும் என்னோடு வருகிறாயா, எழிலரசி?" என்றாள்.

"நிச்சயம் வருகிறேன்." என்று,
மற்ற பெண்களைப் பார்த்த எழிலரசி,

"தாம் அனைவரும் செல்லுங்கள். நாங்கள் அரசியை சந்தித்து விட்டு வருகிறோம்." என்றாள்.

சரி என்ற தலையசைப்புக்குப் பிறகு, அனைவரும் அங்கிருந்து சென்றார்கள்.

"வாருங்கள் போகலாம்." என்றாள் எழிலரசி.

அவளது கரத்தைப் பற்றி நிறுத்தினாள் தன்மயா. அவளை கேள்விக்குறியுடன் பார்த்தாள் எழிலரசி.

"நான் உன்னிடம் பேச வேண்டும்."

"நாம் அரசியாரை சந்திக்கப் போவதில்லையா?"

இல்லை என்று தலையசைத்தாள் தன்மயா.

"என்னிடம் என்ன பேச வேண்டும்? காஞ்சனமாலையை பற்றியா?"

"அருகனை பற்றி" என்றாள், அவளை பதற்றத்திற்கு உள்ளாக்கி.

"நீ அவரை காதலிக்கிறாயா?" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள், தலையை சுற்றி மூக்கை தொடாமல்.

தலை கவிழ்ந்தாள் எழிலரசி.

"அப்படி என்றால் நீ அவரை காதலிக்கிறாய்...!"

"ஆனால் அவர் என்னை காதலிக்கவில்லை." என்றாள் தயக்கத்துடன்.

"ஏன்?"

"ஏனென்றால் நான் இந்நாட்டின் இளவரசி!"

"அதனால் என்ன? அவர் இந்நாட்டின் தளபதியாயிற்றே...!"

"என்னை மணக்க அவர் சித்தமாய் இல்லை."

"ஏன்?"

"ஏனென்றால், இளவரசிகள் அவர்களது விருப்பத்திற்கு திருமணம் செய்து கொள்ள முடியாது. அது அந்நாட்டின் எதிர்காலம் குறித்த விடயம். ஒரு இளவரசி, இளவரசனை மணந்து கொண்டால், அது அந்நாட்டிற்கு வலுவூட்டும். அது தடைப்படுவதை அவர் விரும்பவில்லை."

தன்மயாவுக்கு புரிந்து போனது.

"ஆனால் எப்படி இளவரசர் வாகைவேந்தர் உங்களை மணக்க என் பெற்றோர் சம்மதித்தார்கள் என்பது தான் எனக்கு புரியவில்லை." என்றாள் எழிலரசி.

உள்ளூர நகைத்துக் கொண்டாள் தன்மயா. அதற்கு என்ன பெயர் கூறுவது, விதி என்பதை தவிர?

"எங்கள் திருமணம் பற்றி நீ உன் பெற்றோரிடம் வினவவில்லையா?"

"இல்லை. ஏனென்றால் இந்த திருமணத்தில் எனக்கு முழு சம்மதம். உங்களிடம் கூறுவதற்கு என்ன? எனக்கு காஞ்சனமாலையை பிடிக்காது. அவள் தலைக்கணம் பிடித்தவள். நிச்சயம் என் அண்ணன் அவளுடன் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்."

"அப்படி என்றால், இளவரசி காஞ்சனமாலை, நம் அரசரையும் அரசியையும் இது குறித்து கேள்வி எழுப்ப இருக்கிறாள். அப்படித்தானே?"

"நிச்சயம் செய்வாள். அவளுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை என் பெற்றோருக்கும் இருக்கிறது."

"இதில் நீ ஏன் உன் பெற்றோருக்கு உதவ கூடாது?"

"நானா. இந்த விடயத்தில் நான் எப்படி அவர்களுக்கு உதவ முடியும்? என்ன கூறினாலும் காஞ்சனமாலை சமாதானமாகமாட்டாள். அவள் ஒரு பிச்சி!"

"நான் கூறுவது படி நீ செய்தால், உன்னால் நிச்சயம் உனது பெற்றோருக்கு உதவ முடியும்...! காஞ்சனமாலையை சமாதானப்படுத்தவும் முடியும்!"

"அது எப்படி இயலும்?"

எழிலரசி என்ன செய்ய வேண்டும் என்பதை அவளிடம் விளக்கி கூறினாள் தன்மயா. அவளை அதிர்ச்சியோடு ஏறிட்டாள் இளவரசி.

"நான் கூறுவது படி செய்."

"தாம் மெய்யாக தான் கூறுகிறீர்களா?" என்றாள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல்.

"ஆம். அவளை தடுத்து நிறுத்த நமக்கு இருக்கும் ஒரே வழி இது தான். இல்லாவிட்டால், நம்மால் அதை செய்ய இயலாது. அது இந்நாட்டிற்கு கேடு விளைவிக்கும். நம் நாடு காஞ்சனமாலையின் தந்தையின் ஆதரவை இழக்கும். நான் கூறியபடி நீ செய்தால், அப்படி நேராது. அது மட்டுமல்லாமல், வேறு எந்த இளவரசியும் வாகைவேந்தரை மணக்க வேண்டும் என்று எண்ண மாட்டாள். யாராவது எண்ணினாலும், காஞ்சனமாலையின் தந்தையே அவளை தடுத்து நிறுத்தி விடுவார்"

"இது மிகச்சிறந்த உபாயம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தங்கள் பற்றி யோசித்துப் பார்த்தீர்களா?"

"எனக்கு என்ன நேர்ந்துவிடும்?"

"இது வெளியே தெரிந்தால் என்ன ஆகும்?"

"காஞ்சனமாலை நிச்சயம் இதை வெளியில் கூற மாட்டாள். அப்படியே அது வெளியில் கசிந்தாலும், அரசு ரகசியமாய் காப்பாற்றப்படும். அனைவரும் தங்களுக்குள்ளாகவே அதைப்பற்றி கிசுகிசுத்துக் கொள்வார்கள். ஆனால் அதை வெளியில் கூறும் தைரியம் ஒருவருக்கும் இருக்காது. ஏனென்றால் நான் ஒரு அயல் நாட்டுப் பெண். என்னை பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். இந்த நாட்டைப் பற்றி மட்டும் தான் கவலைப்படுவார்கள்."

அவளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள் எழிலரசி.

"தங்களுக்கு வியக்கத்தக்க அறிவாற்றல் இருக்கிறது. இது தான் என் அண்ணனை தங்கள் மீது காதல் கொள்ளச் செய்தது என்று நினைக்கிறேன்."

"காதலுக்கு அறிவாற்றல் தேவை இல்லை. ஏன் என்று தெரியுமா?"

எழிலரசி தெரியாது என்று தலையசைத்தாள்.

"காதலுக்கு கண் இல்லை என்று கூறுவார்கள்..."

"ஆமாம்"

"காதலுக்கு கண் மட்டுமல்ல... அறிவும் கூட கிடையாது." என்று தன்மயா சிரிக்க,  எழிலரசியும் இணைந்து சிரித்தாள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro