4 ஐயம்
4 ஐயம்
"நான் இன்னாட்டின் தென்திசை படையின் தளபதி. இளவரசர் வாகைவேந்தரின் தோழன். என் பெயர் அமுதன்" என்றான் அந்த வாலிபன்.
அதை கேட்ட தன்மயாவின் கண்கள் பிரகாசித்தன. அதை கவனிக்க தவறவில்லை அமுதன். அவளிடம் தோன்றிய குதூகலத்தின் காரணம் அவனுக்கு புரியவில்லை.
"தாம் ஒரு படைத்தலைவரா?"
"ஆம்"
"அப்படி என்றால், இந்த நாட்டின் அரசரையோ, இளவரசரையோ தங்களால் அணுக முடியும் தானே?"
தன் கண்களை சுருக்கி யோசனையுடன் அவன் தலையசைத்தான். இவள் எதற்காக அரசரையும் இளவரசரையும் பற்றி விசாரிக்க வேண்டும்?
அந்தப் பெண்ணின் பக்கம் திரும்பிய தன்மயா,
"பார்த்தீர்களா, தங்கள் முன்னாள் நின்று கொண்டிருப்பவர் ஒரு படைத்தலைவர். பெண்களை அபகரித்துச் சென்று, அவர்கள் வாழ்க்கையை நாசமாக்கும் அந்த காமுகனை பற்றி இவரிடம் கூறுங்கள்" என்றாள்.
"பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கும் காமுகனா? யார் அவன்?" என்ற கேள்வி வந்தது அமுதனிடமிருந்து.
மதங்கனின் பெயரை கூற முற்பட்டாள் தன்மயா. ஆனால் அந்தப் பெண், அவள் கையை பிடித்து வேண்டாம் என்று அவளை தடுத்து நிறுத்தினாள்.
"எதற்காக அவரை தடுக்கிறீர்கள்? அவரை கூறவிடுங்கள்" என்றான் அமுதன்.
"அந்த மனிதனின் பெயரை கூறினால், நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்றாள் தன்மயா.
"தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்"
"அவர் யாராக இருந்தாலுமா?"
"ஆம். யாராக இருந்தாலும்...! தாம் என்னை நம்பலாம்"
"ஒருவேளை, அவர், உங்கள் அரசாங்கத்தில் உயரிய பதவி வகிப்பவராக இருந்தாலும் கூடவா?"
அமுதனின் முகத்தில் மெல்லிய பதற்றம் தெரிந்தது.
"அப்பொழுதும் தங்கள் நடவடிக்கை நேர்மையாக இருக்குமா?" என்றாள் தன்மயா.
"அவர் அரசராகவே இருந்தாலும் நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றான்.
அது தன்மயாவை வியக்கச் செய்தது.
"அவரது பெயரை கூறுங்கள்" என்றாள் தன்மயா, அந்த பெண்ணிடம்.
அவள் மாட்டேன் என்று பயத்துடன் தலையசைத்தாள்.
"அவரின் பெயர் உங்களுக்கு தெரிந்தால், தாங்கள் கூறலாமே..." என்றான் அமுதன்.
"மதங்கன்..." என்று தயக்கமின்றி கூறினாள் தன்மயா.
தனது வாளின் பிடியை இறுகப்பற்றினான் அமுதன். தன்மயாவை பார்த்துக் கொண்டிருந்த அருகன், அதிர்ச்சியுடன் அமுதனை ஏறிட்டான்.
"மதங்கன் யார் என்று தங்களுக்கு தெரியுமா?" என்றான் அருகன்.
"யாராக இருந்தாலும், எடுக்கப்படும் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது அல்லவா?" என்றாள் தன்மயா.
அவளுக்கு அருகன் பதில் அளிக்கும் முன், அமுதன் பதிலளித்தான்.
"நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், அருகன் கேட்பது அதைப் பற்றி அல்ல. குற்றம் சாட்டப்படும் நபர் யாராக இருந்தாலும் அவருக்கு எதிரான சான்று வேண்டும். அந்த சட்டம் அனைவருக்கும் பொருந்தும். அது தளபதியானாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி. இந்த வழக்கை நாங்கள் அரசரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல தயாராக இருக்கிறோம். ஆனால் தங்கள் குற்றச்சாட்டு உண்மை என்பதை மெய்பிக்க, எங்களுக்கு சான்றுறுதி வேண்டும். அதற்கு, தாங்கள் எங்களுடன் அரசரிடம் வர வேண்டும்" என்றான் அமுதன் அந்த பெண்ணை பார்த்தபடி.
அந்தப் பெண்ணை பார்த்தாள் தன்மயா. அந்தப் பெண் முடியாது என்று அவசரமாய் தலையசைத்தாள்.
"தங்களால் அரசரை நெருங்க முடியாது என்று தானே ஆரம்பத்தில் தயங்கினீர்? ஆனால் இப்பொழுது, இவர்கள் தங்களை அவர்களுடன் அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறார்களே...! இப்பொழுது ஏன் தயங்குகிறீர்கள்?" என்றாள் தன்மயா.
அவளுக்கு பதில் கூறாமல், அந்தப் பெண் அங்கிருந்து ஓட்டமாய் ஓடி போனாள், மேற்கொண்டு எந்த பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ள விருப்பம் இல்லாமல்...!
"பெண்ணே, ஓடாதே நில். ஏன் ஓடுகிறாய்?" என்று பின்னால் இருந்து உரக்க கூவினாள் தன்மயா.
அவள் நிற்கவில்லை. பெருமூச்சு விட்டாள் தன்மயா.
"அவர் இந்த நாட்டை சேர்ந்தவர் என்பதால், தளபதிக்கு எதிராக குற்றம் சாட்ட அவர் பயப்படுவதில் நியாயம் இருக்கிறது. தனக்கு சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்று அவர் அஞ்சுகிறார். தாம் எம்முடன் தலைநகரம் வந்து, மன்னவரை சந்தித்து, இங்கு நடந்தவற்றை கூறலாமே. தங்களுக்கு அப்படிப்பட்ட சிக்கல்கள் ஏதும் இல்லையே..." என்றான் அமுதன்.
தன்மயா திகைத்தாள். அரசரை சந்திப்பதா? உண்மையிலேயே அவளுக்கு ஒரு அரண்மனைக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறதா? அவளுக்கு இப்படி ஒரு யோகமா? தன் மனக்கிளர்ச்சியை மறைக்க படாத பாடு பட்டாள் அவள். அவளுக்கு ஆனந்த கூத்தாட வேண்டும் என்று தோன்றியது. ஆனாலும், அவள் தன்னை அயல்நாட்டவள் என்று கூறிவிட்டதால், அவனது அழைப்பை உடனடியாக ஏற்றுக் கொள்வது பொருத்தமாக இருக்காது. அவள் தனது பயணம் குறித்து திட்டம் வகுத்து வைத்திருப்பாள் என்று அவர்கள் நினைப்பார்கள் இல்லையா? அதை உடனடியாய் மாற்றினால், அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால், தன் பயணம் குறித்த அட்டவணையை தயாரித்து வைத்திருப்பது போல் பாசாங்கு செய்ய முடிவு செய்தாள்.
"நான் தங்களுடன் வருவதா? நான் தான் இந்திர விழாவை காண பூம்புகார் செல்வதாய் கூறினேனே..." என்றாள் அதில் தனக்கு சிறிதும் விருப்பமில்லை என்பது போல.
"இந்திர விழாவிற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது...! தாம் எமது தலைநகரை கடந்து தான் பூம்புகார் செல்ல வேண்டும். அது மட்டுமல்லாது, இந்த ஆண்டு இந்திர விழா நடைபெறுவது ஐயம் தான்" என்றான் அமுதன்.
"அய்யய்யோ, என்ன இப்படி கூறிவிட்டீர்கள்? ஏன் இந்திர விழா நடைபெறாது என்கிறீர்கள்?" என்று உண்மையிலேயே பதட்டப்படுவது போல் கூறினாள்.
"இங்கு சில உள்நாட்டு குழப்பங்கள் நிலவிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்திரவிழா நடைபெறுமா என்பது ஐயமே..."
"இந்திர விழாவை கைவிடும் அளவிற்கா இங்கு குழப்பம் நிலவுகிறது?"
"சோழ இளவரசர் திருமாவளவர் பகைவர்களால் சிறைபிடிக்கப்பட்டு, எரித்து சாம்பலாக்கப்பட்டார்" என்றான் அமுதன், அவளது முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று அவளது முக பாவத்தை உற்று கவனித்தவாறு.
கரிகாலன் என்னும் பெயரில் இன்னும் திருமாவளவன் வெளிப்படவில்லை என்ற உண்மை அப்பொழுது தான் தன்மயாவுக்கு புரிந்தது. *கல்லணை கட்டப்படுவதற்கு முன்பு இருந்த காவிரி கரைக்கு அழைத்துச் செல்* என்று, எந்த ஒரு காலத்தையும் குறிப்பிடாமல் அவள் மணல் கடிகாரத்திடம் கேட்டதால், திருமாவளவன், கரிகாலன் என்று பெயர் பெறுவதற்கு முன்பிருந்த காலத்திற்கு அது அவளை இட்டு வந்து விட்டது போலிருக்கிறது.
"கவலைப்படாதீர்கள் கரிகாலர் வந்துவிடுவார்" என்றாள் யோசிக்காமல்.
"கரிகாலரா? யார் அவர்?" என்றான் அமுதன்.
தான் உளறி விட்டதை உணர்ந்து, தனது நாக்கை கடித்துக் கொண்டாள் தன்மயா.
"கரிகாலர் அல்ல... கலிகாலம் என்றேன்..." என்று சமாளித்தாள்.
அதை நம்ப அமுதனின் மனம் மறுத்தது. ஏனென்றால் அவள் கரிகாலர் வந்து விடுவார் என்று கூறியதை அவன் தெளிவாக கேட்டான்.
"தாங்கள் தலைநகர் வர சித்தமாய் இருக்கிறீர்களா?"
அந்த நாட்டின் மன்னனை சந்திப்பதை தவிர வேறு எந்த மாற்று எண்ணமும் தன்மயாவின் மனதில் இல்லை. ஒரு வேலை, அவளுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், அந்த நாட்டின் இளவரசனான வாகைவேந்தனையும் சந்திக்கும் வாய்ப்பு அவளுக்கு கிட்டலாம். அதோடு மட்டுமல்லாது, அவள் தலைநகருக்கு பயணம் செய்யவிருப்பது அந்த நாட்டின் படையை வழிநடத்தும் ஒரு அழகான படைத்தலைவனுடன்.
அமுதன் ஒரு படைத்தலைவன் என்பதால், அவன் மூலமாக பல விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அந்த நாட்டின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அவளுக்கு கிடைத்திருக்கிறது.
ஆனால்...
ஒருவேளை, அவளுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்வது? மதங்கனை பற்றி புகார் அளிக்க அந்த பெண் தயாராக இல்லை. அப்படி என்றால், அவன் மிகவும் ஆபத்தான மனிதனாக இருக்க வேண்டும். ஒருவேளை அவனால் அவளுக்கு ஏதாவது ஆபத்து விளைந்தால் என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. அவளிடம் மணல் கடிகாரம் இருக்கும் வரை, அவள் எதற்காக பயப்பட வேண்டும்? அதை திருப்பினால், அவள் இங்கிருந்து மறைந்து விட முடியாதா? அப்படி இருக்கும்போது, அரண்மனையை காண கிடைத்த இந்த அறிய வாய்ப்பை அவள் எதற்காக தவறவிட வேண்டும்?
அவள் இதைப் பற்றி எல்லாம் தன் மனதில் யோசித்துக் கொண்டிருந்த போது, அவளது எண்ணத்திற்கு தகுந்தாற்போல் அவளது முகம் மாறிக்கொண்டே இருந்தது... பயம், குதூகலம், மகிழ்ச்சிக்கான சாயல் தோன்றி மறைந்தது. அவளது முகமாற்றத்தை ஒருவன் கூரிய விழிகளால் ஆராய்ந்து கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு தெரியவில்லை. அவளது மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அமுதன் பக்கம் திரும்பிய அவள்,
"ம்ம்ம்... புகார் செல்ல வேண்டியவளை, புகார் அளிக்க வர சொல்கிறீர்கள்..." என்று தமிழோடு விளையாடியதை கண்ட அவர்கள் வியந்தார்கள்.
( பூம்புகாரரை புகார் என்று அழைப்பதும் வழக்கம். பகைவர்களே உள் வர அஞ்சும் அளவிற்கு பலமான கோட்டையையும், பாதுகாப்பு அரண்களையும் பெற்ற நகரம் ஆதலால், பகைவரும் புகார் என்ற பொருள் விளங்குமாறு புகார் என்று அழைக்கப்பட்டது)
"நான் எப்படி தங்களுடன் தலைநகர் வரை பயணம் செய்ய முடியும்?" என்றாள்.
"புகாருக்கு எப்படி சென்றிருப்பீர்களோ, அப்படித்தான்..."
"நான் தனியாக செல்வதாக இருந்தால், என் விருப்பத்திற்கு, வேண்டிய காலம் எடுத்துக்கொண்டு பயணித்திருப்பேன். ஆனால் ஒரு படைத்தலைவருடன் பயணம் செய்வது என்பது வேறானது அல்லவா? தங்களிடம் குதிரை இருக்கிறது. நான் என்ன செய்வது? எனக்கும் குதிரை ஏற்றம் தெரியும் தான். ஆனால் வெகு தூர பயணம் செய்ததில்லை"
"தங்களுக்கு குதிரை ஏற்றம் தெரியுமா?" என்றான் அவன் நம்ப முடியாமல்.
"ஓ... தெரியுமே"
அமுதனும், அருகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"தாங்கள் தலைநகர் வருவதாக இருந்தால், தங்களுக்கு ஒரு தேரை ஏற்பாடு செய்கிறோம்"
"எனக்கு தேரா? உண்மையாகத் தான் கூறுகிறீர்களா?" என்றாள் தன் ஆர்வத்தை மறைக்க முடியாமல்.
"எங்கள் படைத்தளம் அருகில் தான் இருக்கிறது. அங்கிருந்து ஒரு தேரை எடுத்துச் செல்லலாம்"
"அப்படி என்றால், தாங்கள் என்னை தங்கள் படைத்தளத்திற்கு அழைத்துச் செல்ல போகிறீர்களா?" அவளது முகத்தில் குதூகலம் ததும்பி வழிந்தது.
யோசனையுடன் ஆம் என்று தலையசைத்தான் அமுதன்.
"சரி, நான் தங்களுடன் வருகிறேன்" என்றாள் ஆர்வ கிளர்ச்சியுடன்.
"வாருங்கள் செல்லலாம்"
"கொஞ்சம் பொறுங்கள். நான் எனது பையை எடுத்து வருகிறேன்" என்று தன் பையை விட்டுவிட்டு வந்த இடத்தை நோக்கி ஓடினாள்.
அருகனை தன்னிடம் இழுத்த அமுதன்,
"நான் இந்த பெண்ணை நம்பவில்லை" என்றான்.
"தம்மை சந்தேகம் கொள்ள வைத்தது எது?" என்றான் அருகன்.
"அவள் கடல் கடந்து தனியாக வந்தேன் என்று கூறினாள். சதா கடலோடும் பெரும் வணிகர்களே பல முறை யோசித்து கடக்கும் கடல் பாதையை ஒரு பெண், துணைக்கு யாருமின்றி, தன்னந்தனியாக கடந்து வந்தேன் என்பதை எப்படி நம்ப முடியும்? அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. நான் அதை நம்பவில்லை. அதோடு மட்டுமல்லாது, அவள் இந்திர விழாவை காண வந்தேன் என்றாள். இந்திர விழாவை காண வேண்டுமென்றால் அவள் நேரடியாக பூம்புகார் சென்றிருக்கலாமே? அதை விடுத்து, கொற்கை துறைமுகம் வர வேண்டிய அவசியம் என்ன? இந்தப் பெண் நமது நாட்டிற்கு ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் வந்திருக்கிறாள் என்று தோன்றுகிறது. நமது நாட்டின் நிலைமை இப்பொழுது சரி இல்லை. திருமாவளவர் தீக்கிரையானார். இந்த சமயத்தில் நமது நாட்டிற்குள் அடி எடுத்து வைக்கும் ஒவ்வொருவரையும் நாம் தீவிரமாய் கண்காணிக்க வேண்டும். நமது படைத்தளத்தை காண அந்தப் பெண் துடிக்கிறாள். அவளுக்கு குதிரை ஏற்றம் தெரிந்திருக்கிறது. ஒரு சாதாரண பெண்ணுக்கு அது சாத்தியமல்ல. வீரக்கலைகளை பயின்ற இளவரசிகள் பலர், குதிரை ஏற்றம் கற்க திணறியதை நாம் கண்டிருக்கிறோம். இவள் நம்மை வேவு பார்க்க வந்தவளாக இருப்பாள் என்று நான் ஐயுறுகிறேன்"
"அதனால் தான் அவளை தலைநகருக்கு அழைத்துச் செல்கிறீரா?"
"ஆம், இவள் போன்றவர்களை நாம் சுதந்திரமாய் உலவ விடக்கூடாது. நமது கண் எல்லைக்குள் வைத்திருத்தல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அரசரை சந்தித்து மதங்கனை பற்றி அவரிடம் கூறியாக வேண்டும்"
"அதில் நீர் உறுதியாக இருக்கிறீரா?"
"ஆம். சமீப காலங்களில் அவரைப் பற்றிய குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது நமது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும். நமது நாட்டின் பெண்களின் வாழ்வை அவர் சீரழிப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவருக்கு எதிரான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்பட வேண்டும். அவருக்கு தண்டனை கிடைத்ததாக வேண்டும்"
"அரசியார் மன வருத்தம் கொள்வாரே...!"
"அதற்காக, நாம் நமது கடமையிலிருந்து வழுவுதல் ஆகாது. நமது தாய்நாடு என்று வரும்போது, நாம் மற்றவரைப் பற்றி யோசித்தல் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, மதங்கனை பற்றி அரசரிடம் கூற நமக்கு ஒருவர் கிடைத்திருப்பது இது தான் முதல் முறை. இந்த வாய்ப்பை நழுவ விட நான் தயாராக இல்லை. அவரைப் பற்றி அரசர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்"
"சரி, ஒருவேளை இந்த பெண் ஒரு வேவுக்காரியாக இல்லாமல், உண்மையிலேயே ஒரு பயணியாக இருந்தால்?"
"ஆம். அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அவளைப் பற்றி முழுதாய் எதுவும் அறிந்து கொள்ளாமல், அவளுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் இறங்க மாட்டேன்"
"சரி, நான் உமது தகவலுக்காக காத்திருப்பேன்"
"நல்லது... என்னுடைய ஆலோசனைகளை பின்பற்றிக் கொண்டிரு. இப்பொழுது, முன்னதாக சென்று நமது படைகளை எச்சரிக்கை செய்"
"அப்படியே ஆகட்டும்" என்று தன் குதிரை மீது ஏறிய அருகன், அந்த இடம் விட்டு அகன்றான்.
தனது பையையுடன் அங்கு வந்தாள் தன்மயா. முற்றிலும் வித்தியாசமாய் இருந்த அவளது பேக்பேக்கை பார்த்து முகம் சுருக்கினான் அமுதன். இப்படி ஒரு பையை அவன் இதற்கு முன் பார்த்ததே இல்லை.
*இந்தப் பெண், அவளுடைய உடை, வைத்திருக்கும் பை, அவிழ்த்துவிட்ட கூந்தல், அனைத்தும் விசித்திரமாய் இருக்கிறது* என்று முணுமுணுத்த அவன்,
"செல்லலாமா?" என்றான்.
"ஓ செல்லலாமே..."
"தங்கள் பையை கொடுங்கள். என் குதிரையின் சேனத்தில் வைத்து கட்டிக் கொள்கிறேன்"
அவனிடம் தனது பையை கொடுத்தாள் தன்மயா. தன் குதிரையில் அதை கட்டிய பிறகு, அவர்கள் இருவரும் படைத்தளத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro