Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

39 திருமண அறிவிப்பு

39 திருமண அறிவிப்பு

எதிர்பாராத அந்த திடீர் அணைப்பினால் திணறிப் போனான் அமுதன். கண் இமைக்கவும் மறந்து, சிலையென நின்றான். அவனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவனை இப்படியெல்லாம் இதற்கு முன் யாரும் அணைத்துக் கொண்டதில்லை... அவனது அம்மா கூட அணைத்ததில்லை. அவன் யாரையும் அணைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லாதவன். ஒரு பெண்ணால் அவன் அணைக்கப்படுவது அது தான் முதல் முறை. அவனது இதயம் தாறுமாறாய் துடித்தது, அவள் அவனது மனம் கவர்ந்த பெண் என்ற போதிலும்...! ஒருவேளை, அவள் அவனது மனம் கவர்ந்த பெண் என்பதால் தான் அது அப்படி துடித்ததோ என்னவோ...! அவனது மூளை செயலிழந்தது. நிறுத்திய வேலையை மீண்டும் துவங்க, அவனது மூளைக்கு சில கணங்கள் தேவைப்பட்டன. எவ்வளவு பெரிய வீரர் கூட்டத்தையும் அனாயாசமாய் தன் வாள் சுழற்றலின் மூலம் வென்றுவிடக்கூடிய அந்த வீரன், ஒரு பெண்ணின் கரங்களுக்குள் தன்னிலை இழந்து நின்றான்.

தன்மயாவுக்கு என்ன ஆனது? அவனை அணைத்துக் கொள்ள செய்தது எது? அவள் உணர்ச்சிவசப்பட்டிருப்பது போல் தெரிகிறது. அதற்கு காரணம் என்ன?

"தன்... ம... யா..." மாவீரனான அவன் பேசவே தடுமாறினான்.

அவனை மேலும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டு, அவன் நெஞ்சில் தன் முகம் புதைத்து, அவனது நிலையை மேலும் கவலைக்கிடமாய் மாற்றினாள் அவள். அதற்கு மேல் எதைப் பற்றியும் யோசிக்க விரும்பாத அமுதன், மெல்ல தன் கண்களை மூடினான். அடுத்த சில கணங்களில் அவனது கரங்கள் அணிச்சியாய் உயர்ந்து அவளை சுற்றி வளைத்துக் கொண்டன. அவனை அறியாமல் அவன் முகத்தில் புன்னகை துளிர்த்தது. தன் மனதிற்கினியவளின் கரங்களில் அகப்பட்டு கிடப்பதில் தான் என்ன ஒரு சுகம்...!

அமுதனின் மரணம் பற்றிய உண்மையை சகிக்கவே முடியவில்லை தன்மயாவால். நிகழ்காலத்திற்கு சென்று விட வேண்டும் என்பதில் அவள் தீர்க்கமாய் இருந்தாலும் கூட, அவள் இல்லை என்றால் அமுதன் இறந்து விடுவான் என்று தெரிந்து கொண்டபின், அவளது மனம் திரும்பிச் செல்வதை பற்றி யோசிக்கவில்லை. அமுதனை தவிர வேறு எந்த எண்ணமும் அவள் மனதில் இல்லை. தன் வாழ்நாளில் சந்தித்ததிலேயே சிறந்த மனிதனான அவனை எப்படி அவள் மரணத்தின் வாயில் கொடுப்பாள்? அவனது மறைவை அவளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அமுதன் இல்லாத உலகத்தில், தான் தன்னந்தனியாய் விடப்படுவது போல் உணர்ந்தாள் அவள்.

அப்பொழுது தான் தன்மயாவுக்கு ஒரு உண்மை புலப்பட்டது. இதுவரை அவள் அமுதனை தவிர்த்து வந்ததெல்லாம் அவள் முழு மனதோடு செய்ததல்ல. அவள் மனம் ஏற்கனவே அமுதனிடம் வசப்பட்டு விட்டது. அவள் தான் அதை உணராமல் இருந்திருக்கிறாள். அதனால் தான், அமுதனின் மரணம் குறித்து அறிந்த பொழுது, தன் பெற்றோரை இழந்த போது அவள் மனதில் ஏற்பட்ட அதே வலியை அவள் உணர்ந்தாள்...!

வெளியே விளையாடிக் கொண்டிருந்த பெண்களின் சிரிப்பொலியை கேட்ட அமுதன், மெல்ல கண் திறந்தான். தன் அணைப்பில் இருந்த தன்மயாவை பின்னால் இழுத்து, அவளை பார்த்தபடி,

"உனக்கு என்ன நேர்ந்து விட்டது தன்மயா?" என்றான்.

தன்னை சுதாகரித்துக் கொண்ட தன்மயா, அவனது விதியை குறித்து அவனிடம் கூறுவதில்லை என்ற முடிவுக்கு வந்தாள். அவள் அவனை மணந்து கொள்ள சம்மதித்தது, அவன் மீது ஏற்பட்ட பரிதாபத்தினால் தான் என்று அவன் நினைக்க வேண்டாம் என்று எண்ணினாள் அவள். அவன் ஒரு மாவீரன். பரிதாப உணர்ச்சியை சகிக்காதவன்...! அதை அவனுக்கு பரிசளிக்க அவள் விரும்பவில்லை.

"ஒன்றுமில்லை..."

வியப்புக்குறிடன் அவளை பார்த்துக் கொண்டு நின்றான் அமுதன்.

"எதற்காக அப்படி பார்க்கிறீர்?"

"உனது அணைப்பிற்கான காரணத்தை கூறு. எதற்காக திடீரென்று என்னை அணைத்துக் கொண்டாய்?"

"தங்களை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது..."

"என்ன?" என்றான் நகைப்புடன்.

"தங்களிடம் நான் ஏற்கனவே கூறினேன்... எனது செயல்களால்  நீர் சங்கடத்திற்கு ஆளாக நேரிடும் என்று... இப்படித் தான், பிச்சியைப் போல் அவ்வப்போது ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றும்...! இப்பொழுது தங்களை அணைத்துக் கொண்டது போல..."

"அப்படி என்றால் காரணமின்றியா நீ என்னை அணைத்துக் கொண்டாய்?"

"உங்களை அணைத்துக் கொள்ள எனக்கு காரணம் வேண்டுமா?"

அமுதன் திகைத்தான்...!

"உனக்கு அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் மட்டும் தான் நீ என்னை அணைத்துக் கொண்டாய் என்று தோன்றவில்லை. ஏனென்றால், நீ உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டாய்...!"

தன்மயா வியப்பில் ஆழ்ந்தாள். அமுதன் அவளை படிப்பதில் கைதேர்ந்தவனாகி விட்டான் போலிருக்கிறது.

"நான் உணர்ச்சிவசப்பட்டேனா?" என்று சிரித்தபடி இல்லை என தலையசைத்தாள்.

கைகளை கட்டிக்கொண்டு புன்னகையுடன் நின்றான் அமுதன்.

"சரி, நான் தங்களிடம் உண்மையை கூறி விடுகிறேன்..."

கூறு என்பது போல் தலையசைத்தான்.

"தாம் என் மீது கொண்டுள்ள காதல் குறித்து எண்ணிய போது உணர்ச்சிவசப்பட்டேன். தாம் என்னை உமது பெற்றோரிடம் அழைத்து செல்வீர் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உங்களது வேகம் மிகுந்த நேர்மையான அணுகுமுறை என்னை வாயடைக்க செய்துவிட்டது. தாம் என் மீது கொண்ட காதல் உண்மையானது. நான் அதை புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேன். அற்ப காரணங்களுக்காக நான் தங்களை இழந்திருப்பேன்..."

"அப்படி என்றால் என்னை மணக்க நீ முழு மனதோடு சம்மதிக்கிறாயா?" என்றான் நம்ப முடியாமல்.

அவள் ஆம் என்று தலையசைத்தாள்.

"மெய்யாகத் தான் கூறுகிறாயா?"

"நான் எதை செய்தாலும் முழு மனதோடு தான் செய்வேன். ஒருவேளை, அதை என் மனதார செய்ய முடியாது என்று எனக்கு தோன்றினால், நான் அதை செய்ய மாட்டேன்"

மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள், அவள் பேச்சில் இருப்பது உண்மை தான் என்று நிரூபிப்பதற்காக. அமுதனின் மரணத்திற்கு தான் காரணமாக அமைவதை அவள் விரும்பவில்லை. அமுதன் என்று வரும் போது, இணைபிரபஞ்சம் என்பது ஒன்றுமில்லை என்றானது தன்மயாவுக்கு.

தன்மயா தன்னை முழுமனதோடு திருமணம் செய்து கொள்ள சித்தமாய் இருக்கிறாள் என்பதை அமுதனால் நம்ப முடியவில்லை. அவள் அவனை ஏற்றுக் கொண்டதால் அணைத்துக் கொண்டிருக்கிறாள். நம்பிக்கையின்மையை முகத்தில் தாங்கி மீண்டும் அவளை அணைத்துக் கொண்டான். அவனது அணைப்பிலிருந்து வெளிவராமல் அவனை ஏறிட்டாள் தன்மயா. மகிழ்ச்சியாய் அவளைப் பார்த்து புன்னகைத்த அவன்,

"என்னன்ன?" என்றான்.

"இவ்வளவு வீரக்களை பொருந்திய ஒருவரை நான் மணக்கப் போகிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை." என்றாள்.

அமுதனின் புன்னகை விரிவடைந்தது.

"நான் உன் காலத்து ஆண்களைப் போல் அல்ல..."

"தாம் அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் நீங்களாகவே இருங்கள். அது தான் தங்களின் சிறப்பு."

"நீ என்னை அணைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை என்னால் நம்ப முடியவில்லை."

"என்னாலும் கூடத்தான்."

"மணல் கடிகாரம் தொலைந்து விட்டது என்பதால் தான் என்னை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டாயா?"

அவன் அப்படி கேட்டதில் தன்மயாவுக்கு வியப்பு ஒன்றும் இல்லை.

"மணல் கடிகாரம் திரும்ப கிடைத்தாலும் நான் தங்களை மணந்து கொள்வேன்." அவள் கூறியதை கேட்டு திகைத்தான் அமுதன்.

"உனக்கு என்ன ஆயிற்று தன்மயா? உன்னிடம் திடீரென்று ஒரு மாறுதலை காண்கிறேன்...!"

அவனிடமிருந்து பின்னால் நகர்ந்த அவள்,

"சரி, நான் அரசரிடம் சென்று, உங்களை மணந்து கொள்ளப் போவதில்லை என்று கூறி விடுகிறேன்." என்று அங்கிருந்து செல்ல விழைந்த போது,

அவள் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தான், தன்மயாவை வியப்புக்கு ஆளாக்கி.

"விளையாட்டுக்காகவும் அப்படி கூறாதே, தன்மயா."

அவன் எதிர்பாராத விதமாய் தன் கரங்களை அவனது தோள்களின் மீது வைத்து,

"அப்படி என்றால், என் மீது ஐயுறுவதை நிறுத்துங்கள்." என்றாள்.

உதடு கடித்து புன்னகைத்தான் அவன்.

"என்ன?" என்றாள்.

"நீ கணிப்புக்கெல்லாம் அப்பாற்பட்டவள்."

"ஏன்?"

அவளுக்கு பதில் கூறாமல் அவள் தன் தோள்களின் மீது வைத்திருந்த அவளது கரத்தை ஏறிட்டான்.

"தங்களிடமிருந்து நான் விலகி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?"

அவன் பதில் கூறும் முன்,

"அப்படி எல்லாம் நடக்கும் என்று நினைக்காதீர்கள்... என்னால் அது இயலாது."

"என்ன செய்வாய்?"

"என்ன செய்வேன் என்று காட்ட வேண்டுமா?"

"காட்டப் போகிறாயா?" என்றான் புருவம் உயர்த்தி.

"ஏன் மாட்டேன்?"

அவன் கன்னங்களை பிடித்து கிள்ளி, தன் நெற்றியால் அவன் நெற்றியை மோதி, அவனுக்கு கிச்சு கிச்சு மூட்டினாள், அவனை பின்னோக்கி எகிரச் செய்து.

"என்ன செய்கிறாய் நீ?" என்றான் சிரித்தபடி.

"நான் தங்களிடம் இப்படி எல்லாம் தான் விளையாடுவேன்...!"  என்று அவனுக்கு கிச்சு கிச்சு மூட்டுவதை தொடர்ந்தாள்.

"ஐயோ! போதும் நிறுத்து" என்று அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு மூச்சு வாங்கினான்.

"நீ சிறிதும் நம்ப முடியாதவள்...!"

"என் கரங்களை விடுங்கள்."

"விடுகிறேன், ஆனால் மீண்டும் நீ அக்குளுப்பு செய்ய கூடாது."

கிச்சுகிச்சு என்பதை தான் அமுதன் அக்குளுப்பு என்கிறான் என்று புரிந்தது அவளுக்கு.

"சரி, அப்படி என்றால், என்னை உப்பு மூட்டை சுமந்து செல்லுங்கள்."

"அப்படி என்றால்?"

"எப்படி என்று நான் கூறுகிறேன்."

அவள் கரங்களை விட்டான். அவனது முதுகில் பாய்ந்து கழுத்தை கட்டிக் கொண்டாள். அமுதன் பேயறைந்தது போல் ஆனான்.

"உங்கள் காலத்தில் கணவன்மார்கள் மனைவியை இப்படித்தான் சுமந்து செல்லவர்களா?"

"அனைவரும் அப்படி செய்வதில்லை."

"இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?"

"ஒன்றுமில்லை." என்று சிரித்தபடி கீழே குதித்தாள்.

"நீ எப்பொழுதும் இப்படித்தான் இருப்பாயா?"

"இப்பொழுது நான் இப்படி இருக்கிறேன். வரும் நாட்களில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்?"

ஆம் என்று தலையசைத்த அமுதன்,

"உண்மையிலேயே  நீ என்னை மணந்து கொள்ள தயாரா?" என்றான்.

"உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நான் தங்களை மணந்து கொள்ள மாட்டேன் என்ற போது நிலையாய் நின்றீர்... இப்பொழுது குழம்பித் தவிக்கிறீர்...!"

"உனது காலம் மிகவும் முன்னேறிய காலம்... நீ இயந்திரங்களின் உதவியால் சுகமாய் வாழ பழகியவள்... அங்கு பயணம் செய்வதும் சுலபம்... அது மட்டுமல்லாது..."

அவனை நோக்கி முன்னேறிய அவள், விரல் நுனிகளால் அவன் வாயை பொத்தினாள், அவனுக்கு மயிர்கூச்செறிய செய்து!

"என்னை கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் எப்பொழுது என்னை காதலிக்க போகிறீர்கள்? ம்ம்ம்?"

பதில் கூறாமல் அவளை பார்த்துக் கொண்டு நின்றான் அமுதன். அனைத்தும் அவனுக்கு புதிதாய் தெரிந்தது. விளையாடுதல், கன்னம் கிள்ளுதல், கிச்சுகிச்சு மூட்டல், அனைத்தும் புதிதாய் இருந்தது. பெண்களின் இப்படிப்பட்ட செயல்கலெல்லாம் அவன் இதற்கு முன் அறிந்திறாதது. அவன் காலத்தை சேர்ந்த பெண்கள், நாணமும், அச்சமும் ஒருங்கிணைந்தவர்கள். தன் கணவனுடன் பேசக்கூட தயங்குபவர்கள். கணவனுடன் விளையாடுவதெல்லாம் அவர்கள் கனவில் கூட காணாதது. அவனது வருங்காலம் தன்மயாவுடன் இப்படித்தான் இருக்கப் போகிறதா...? என்றெல்லாம் யோசித்தபடி நின்றான்.

வெளியிலிருந்து வந்த சத்தம், அவனை மீண்டும் இயல் உலகிற்கு அழைத்து வந்தது.

"என்ன சத்தம் அது?" என்றாள் தன்மயா.

"அரசியார் வருகிறார்..."

"அரசியா?"

"ஆம், உனது மாமியார் தான் வருகிறார். உன்னை பிறகு வந்து உன்னிடத்தில் சந்திப்பதாய் அவர் கூறவில்லையா?"

"என் அறைக்கா வருகிறார்? அப்படி என்றால் நான் செல்ல வேண்டும்..."

அங்கிருந்து ஓடிப் போனாள் தன்மயா. அவள் அவளது அறைக்குள் நுழைந்த அதே நேரம், அரசி அன்பிற்கினியாள் முதல் தளத்திற்குள் நுழைந்தார். அமுதன் கணித்தது போலவே அவர் தன்மயாவின் அறைக்குத்தான் சென்றார். சில பணிப்பெண்கள் கையில் தட்டுடன் அவரை புடை சூழ்ந்து சென்றார்கள். அந்த தட்டுகளில் பட்டு துணிகளும், பலவிதமான ஆபரணங்களும் வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் அதை தன்மயாவின் அறையில் வைத்தார்கள். புரியாமல் அன்பிற்கினியாளை ஏறிட்டாள் தன்மயா.

"இவற்றையெல்லாம் நீ அணிந்து கொள்ள வேண்டும் என்று நான் வற்புறுத்துவதாக நினைக்க வேண்டாம். இதை வழங்குவது முறை. நீ இந்நாட்டின் இளவரசி என்பதால், இவை உன்னிடம் இல்லாமல் இருக்கக்கூடாது. உன்னிடம் எதுவும் இல்லை என்ற நிலையில் நீ இருக்க வேண்டாம். நாளை நமது அரண்மனையில் ஒரு வழிபாடு நடைபெற இருக்கிறது, உனது மற்றும் அமுதனின் நலன் வேண்டி...! நீ அமுதனுடன் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்"

சரி என்று தலையசைத்த தன்மயா, அவரது பாதம் தொட்டு வணங்கினாள்.

"நீண்ட காலம் மகிழ்ச்சியோடு அமுதனுடன் நீ வாழ வேண்டும்."

அவரது வாழ்த்தின் அர்த்தத்தை புரிந்து கொண்ட தன்மயா புன்னகைத்தாள். ஒரு தட்டிலிருந்து ஒரு நீண்ட, கணமான சங்கிலியை எடுத்து அதை தன்மயாவின் கழுத்தில் அணிவித்த அவர்,

"எங்கள் நாட்டிற்கும், வீட்டிற்கும் உன்னை வரவேற்கிறேன். இந்த நொடி முதல் நீ என் அறைக்குள் என் உத்தரவின்றி வரலாம்."

தன்மயா தலையசைத்தாள்.

"வருகிறேன்..."

அங்கிருந்து சென்றார் அன்பிற்கினியாள். கட்டிலில் அமர்ந்த தன்மயா தன் கழுத்தில் இருந்த சங்கிலியை பார்த்து, புன்னகை புரிந்தாள்.

வாகைவேந்தனின் திருமண செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அது சிலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு கோபத்தையும் தந்தது... கோபம் கொண்டவர்களில் காஞ்சனமாலையும் ஒருத்தி...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro