Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

37 ஆயுள் ரேகை

37 ஆயுள் ரேகை

"நஞ்சு தோய்க்கப்பட்ட அம்பினால் அவன் மாய்க்கப்பட வேண்டும் என்பது விதி...! இந்நேரம் அவனுடைய வாழ்நாள் முடிந்திருக்க வேண்டும். அவன் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை"

ஒப்பிலாசேயோனும் அன்பிற்கினியாளும், அதிர்ச்சியாலும் குழப்பத்தாலும் திகைத்து நின்றார்கள்.

"அமுதன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறான். நலமுடன் இருக்கிறான்" என்றார் அரசர்.

"நிச்சயம் இருக்க முடியாது. அது எப்படி சாத்தியம்? விதியை எப்படி மாற்ற இயலும்?"

"இதற்கு என்ன கூறுவது என்று எனக்கு புரியவில்லை முனிவரே. அமுதன் உயிரோடு இருக்கிறான். அது தான் உண்மை. சற்று நேரத்தில் அவன் இங்கு வருவான். அப்பொழுது தாமே அவனை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்" என்றார் அரசர்.

"நஞ்சு தோய்க்கப்பட்ட அம்பினால் அவன் தாக்கப்பட இருந்தது உண்மை தான். ஆனால் ஒரு பெண் அவனை அதிலிருந்து காத்து விட்டாள்" என்றார் அன்பிற்கினியாள்.

"பெண்ணா? யார் அவள்?"

"அவள் அயல் நாட்டைச் சேர்ந்த பெண். நம் நாட்டைக் காண வந்திருக்கிறாள்"

"எங்கே அவள்? அவள் இங்கிருந்து சென்று விட்டாளா?"

"இல்லை. அவள் நம் நாட்டில் தான் அரசு விருந்தாளியாக தங்கி இருக்கிறாள். அவளை அமுதன் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளான்"

"அவள் குறித்து நான் தங்களிடம் மிக முக்கியமாய் பேச எண்ணி இருந்தேன்" என்றார் அரசர்.

மெய்தீர்த்தர் யோசனையில் ஆழ்ந்தார்.

"தயவு செய்து உள்ளே வாருங்கள் முனிவரே" என்று அவரை தனது அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அரசரின் மாளிகைக்கு வந்த முனிவர், ஆசனத்தில் அமர்ந்து கொண்டு,

"என்ன நடந்தது என்று தெளிவாக என்னிடம் விளக்கி கூறுங்கள்" என்றார்.

"நம் நாட்டின் தென்படை தளத்தில் அமுதன் தங்கியிருந்தான். அங்கு, ஒரு பெண்ணை கவர்ந்து செல்ல ஒருவன் முயன்றிருக்கிறான். அவனிடமிருந்து அந்த பெண்ணை அந்த அயல் நாட்டினள் காப்பாற்றிய போது தான் அமுதன் அவளை சந்தித்தான். அந்தப் பெண்ணிடம் நடந்தது பற்றி அமுதன் விசாரித்த போது, அந்த சம்பவத்தை அரங்கேற்றியது மதங்கன் என்ற உண்மையை கூறி இருக்கிறாள். ஆனால் அவள் நமது தலைநகருக்கு வந்து அரசரிடம் அது பற்றி கூற அச்சமுற்று இருக்கிறாள். அவளுக்கு பதிலாக, அதை செய்ய அந்த அயல் நாட்டுப் பெண் துணிந்திருக்கிறாள். அதனால் அவளை தலைநகருக்கு அழைத்து வந்தான் அமுதன். நகருக்கு வரும் வழியில் அமுதனை கொல்ல முயற்சி நடந்திருக்கிறது. அவன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அவன் மீது நஞ்சு தோய்க்கபட்ட அம்பு எய்யப்பட்டது. அப்பொழுது தான் அந்தப் பெண் அவனை காத்திருக்கிறாள்" என்றார் அன்பிற்கினியள்.

"இதை என்னால் நம்ப முடியவில்லை"

"ஏன் முனிவரே?"

"அவனது சாதகத்தில் அவனது இறப்பு தெளிவாய் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, கரிகாலன் வெளிப்படுவதற்கு முன்பே அமுதன் இறந்து விட வேண்டும். ஏதோ ஒரு போரில் தான் அவனது மரணம் நிகழும் என்று நான் எண்ணியிருந்தேன். அவன் கையில் இருக்கும் ஆயுள் ரேகையை கூட நான் கவனித்தேன். அது கூட நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருக்கவில்லை. அது மங்கலாகவும் இடையில் மிகப்பெரிய பிளவுடனும் இருந்தது. அப்படி இருக்கும் போது, அவன் எப்படி இன்னும் உயிரோடு இருக்கிறான்?" குழம்பினார் மெய்தீர்த்தர்

"இதன் பிறகு அவனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அவனது சாதகத்தை பார்த்து தாம் கூற முடியுமா?" என்றார் அரசர் பரிதவிப்புடன்.

"அவனது சாதகத்தில், அவனது மரணம் நிகழ வேண்டிய தினத்திற்கு பிறகு எந்த குறிப்பு இல்லை. அதனால் அவன் பிறப்பு குறிப்பை வைத்து நாம் எதையும் கணிக்க முடியாது"

"அப்படி என்றால் என் மகன் இறந்து விடுவானா?" என்றார் அன்பிற்கினியாள் நடுக்கத்துடன்.

"நான் ஒன்றும் கூறுவதற்கில்லை, அம்மா... "

"அந்த அயல் நாட்டுப் பெண்ணை அமுதன் மணக்க விரும்புகிறான். இன்று காலையில் தான் அதைப் பற்றி எங்களிடம் கூறினான். அவனுக்கு மணம் முடித்து வைத்து, அவன் மக்கள்செல்வத்தோடு வாழ்வதை நாங்கள் காண முடியாதா?"

யோசனையில் ஆழ்ந்த மெய்தீர்த்தர், அரசரைப் பார்த்து,

"நான் அந்த பெண்ணை சந்திக்கலாமா?" என்றார்.

"நிச்சயம் சந்திக்கலாம். அவர்கள் கோவிலில் இருந்து திரும்பி வந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் வந்தவுடன் அவளை இங்கு தருவிக்கிறேன்"

அரசர் தன் கைகளைத் தட்ட, ஒரு வீரன் உள்ளே ஓடிவந்து தலைவணங்கி நின்றான்.

"தன்மயாவை இங்கு அழைத்து வரும்படி வாகைவேந்தனிடம் கூறினேன் என்று சொல்" என்றார் அரசர்.

மீண்டும் தலை வணங்கி விட்டு அங்கிருந்து சென்றான் அந்த வீரன்.

"தாம் கலிங்கத்திலிருந்து எப்பொழுது திரும்பினீர்கள் முனிவரே?"

"கலிங்கத்திலிருந்து நேரடியாக இங்கு தான் வருகிறேன். இளவரசன் வாகைவேந்தனை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் தங்களுக்கு ஆறுதல் கூற வந்தேன். ஆனால் அவன் உயிரோடு இருப்பான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை, அவன் மரணித்திருந்தால், என்ன நிகழ்ந்திருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?"

ஒப்பிலாசேயோனும் அன்பிற்கினியாளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"உனது நாடு தவறானவர்களின் கரங்களில் அடிமைப்பட்டு கிடந்திருக்கும். நீ உனது நற்பெயரை இழந்திருப்பாய்"

"தாம் கூறுவது உண்மை தான் முனிவரே. மதங்கனும், வஞ்சக குருவும் இணைந்து நடத்திய பல கள்ளத்தனங்களை அந்த அயல்நாட்டு பெண் தான் தோல் உரித்து காட்டி நம் நாட்டை காத்தருளினாள். அவர்கள் நம்பிக்கை துரோகிகள். மணிமுடியை அபகரிக்க முயன்றார்கள். ஒருவேளை அவர்கள் தான் அமுதனை கொல்ல முயன்றிருக்க வேண்டும் என்ற எனக்கு ஐயம் இருக்கிறது"

"இருக்கலாம்..."

"இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் முனிவரே?"

"அவனது பிறப்பு குறிப்பை பொருத்தவரை அவனது வாழ்க்கை ஏற்கனவே முடிந்து விட்டது. நஞ்சு தோய்க்கப்பட்ட அம்பிலிருந்து அவன் காப்பாற்றப்பட்ட பின், அவன் வாழும் ஒவ்வொரு கணமும் அவனுக்கு இறைவனால் அருளப்பட்டது. அதற்கு மேல் என்ன கூறுவது என்று எனக்கு புரியவில்லை"

"அவனது வருங்காலம் குறித்து நாம் ஒன்றும் கணிக்க முடியாதா?"

"அவனது வருங்காலத்தை கணிக்க நமக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது"

"அது என்ன முனிவரே?"

"அவன் அந்த பெண்ணை மணக்க விரும்புகிறான் அல்லவா?"

"ஆம். அதில் அவன் உறுதியாகவும் இருக்கிறான்"

"அப்படி என்றால் அவளது கையில் இருக்கும் ரேகைகளை வைத்து நாம் அவனது வருங்காலத்தை கணிக்கலாம்"

"அந்தப் பெண்ணை மணக்க வேண்டும் என்ற அவனது முடிவு தங்களுக்கு சம்மதமா?"

"அவனது முடிவுக்கு சம்மதம் தெரிவிக்க நாம் யார்? அவன் இன்னும் உயிரோடு இருக்கிறான். அதைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீட்டிக்கப்பட்ட அவனது ஆயுள் குறித்து மகிழ்ச்சி கொள்ளுங்கள். அந்தப் பெண்ணை அவன் மணக்க விரும்பினால், மணந்து கொள்ளட்டும். அவள் அமுதனின் உயிரை மட்டும் காக்கவில்லை, இந்த நாட்டையும், இந்நாட்டு மக்களின் மகிழ்ச்சியான வாழ்வையும் காத்திருக்கிறாள். யாருக்கு தெரியும், ஒருவேளை அவள் தன் கணவனின் உயிரை காக்கும் சக்தி படைத்தவளாய் இருக்கலாம்"

அரசர் நிம்மதி அடைந்தார்.

"என்ன சிந்திக்கிறீர்கள்?திருமணத்திற்கு சம்மதம் தெரிவியுங்கள். நம் மகன் உயிரோடு இருக்கிறான். அதற்கு மேல் நமக்கு வேறு என்ன வேண்டும்? என்றார் அன்பிற்கினியாள்.

ஆம் என்று தலையசைத்தார் அரசர்.

அப்பொழுது தன்மயாவுடன் உள்ளே வந்தான் அமுதன். முனிவரை பார்த்த அமுதனின் முகம் மலர்ந்தது. அவரது பாதம் தொழுதான்.

"நீடூடி வாழ்க" அவனை வாழ்த்தினார் மெய்தீர்த்தர்.

"இவர் எனது குருநாதர்" என்றான் அமுதன், தன்மயாவிடம்.

அவரது பாதங்களை தொட்ட தன்மயா,

"வணங்குகிறேன், குருவே!" என்றாள்.

அவளது தன்மையான அணுகுமுறையை பார்த்த மெய்தீர்த்தர் நிம்மதி அடைந்தார்.

"மகிழ்வோடு வாழ்வாய், மகளே..." அவளை வாழ்த்தினார்.

அரசரை பொருள் பொதிந்த பார்வை பார்த்தார் மெய்தீர்த்தர்.

"எங்கள் குருநாதர் எவருடைய வருங்காலத்தையும் துள்ளியமாய் கணிக்க வல்லவர். உனது வருங்காலம் குறித்து தெரிந்து கொள்ள நினைக்கிறாயா, மகளே?" என்றார் அன்பிற்கினியாள்.

என்ன கூறுவது என்று புரியாமல் நின்றாள் தன்மயா. அவளுக்கு தன் வருங்காலம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் தான். ஆனால் அதை அரசர் முன்பும், அரசியார் முன்பும் செய்ய அவளுக்கு துணிவில்லை. ஆனால் அமுதன் துணிந்தான்.

"உனது கரத்தை அவரிடம் காட்டு, தன்மயா" என்றான்.

தன் கரத்தை மெய் தீர்த்தரை நோக்கி தயக்கத்துடன் நீட்டினாள் தன்மயா.

"உனது இடது கரத்தை காட்டு, மகளே!" என்றார் மெய்தீர்த்தர்.

வலது கையை இறக்கி விட்டு, இடது கையை நீட்டினாள். அவளது கையில் இருந்த ரேகைகளை பார்த்து வியந்தார் மெய்தீர்த்தர்.

"நீ உன் பிறந்த ஊரை விட்டு வெளியே சென்று குடியேறும் வாய்ப்புகள் நிரம்ப உள்ளது. ஆனால், நீ விரும்பினால் மட்டும் தான் அது நிகழும். இப்பொழுது இங்கே வந்திருக்கிறாய்... காரணம் இல்லாமல் அது நிகழவில்லை. உனக்கு இளவரசர் வாகைவேந்தருடன் மறைமுகமான தொடர்பு இருக்கிறது. அதனால் தான் நீ அவரது உயிரை காத்திருக்கிறாய்" என்று மேலும் எதுவும் கூறாமல் நிறுத்தினார்.

அவளையே பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்த அமுதனை ஏறிட்டாள் தன்மயா.

"அவளது திருமணம் பற்றி கூறுங்கள், குருநாதா" என்றான் அமுதன்.

"அவளுக்கு திருமணம் ஆகும் சமயம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அவளது திருமண வாழ்வு, மற்றவருக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும். அவள் தன் கணவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் முதுகெலும்பாய் திகழ்வாள். அவளது கணவன், அவளை கிடைப்பதற்கறிய செல்வம் என கொண்டாடுவான்"

குதூகலமாய் நின்றிருந்த அமுதனை பார்க்கவே இல்லை தன்மயா.

"நான் தன்மயாவை மணந்து கொள்ள விரும்புகிறேன், குருநாதா. அது குறித்து தாம் என்ன கூற நினைக்கிறீர்கள்?" என்றான் அமுதன் சிறிதும் தயக்கமின்றி.

அது தன்மயாவுக்கு அதிர்ச்சி அளித்தது. தன் விழிகளை விரித்து அவனைப் பார்த்த அவள், அரசரையும் அரசியையும் தன் ஓர கண்ணால் பார்த்தாள்.

"நல்ல தேர்வு" என்றார் மெய் தீர்த்தர் புன்னகையுடன். அது அமுதனுக்கு ஆச்சரியத்தையும், தன்மயாவுக்கு அதிர்ச்சியும் அளித்தது.

"நான் தன்மயாவை மணந்து கொள்ளலாமா?"

"தாராளமாய்..."

"ஆனால், நான் இந்நாட்டை சேர்ந்தவள் இல்லையே..." என்றாள் தன்மயா அவசரமாக.

"அதனால் என்ன, மகளே? நீ இளவரசன் வாகைவேந்தனை மணந்து கொண்டால், நீயும் இந்நாட்டை சேர்ந்தவளாகி விடப் போகிறாய்...!"

"இந்நாட்டின் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து நான் ஒன்றும் அறியேன்"

"இளவரசர் உன்னை என்னிடம் அறிமுகம் செய்து வைத்த போது நீ என் பாதம் பணிந்து வணங்கினாய். அதைவிட நீ தெரிந்து கொள்ள வேறு என்ன இருக்கிறது? நீ அனைத்தையும் கற்றுக் கொண்டு விடுவாய்... எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது" என்றார் மெய்தீர்த்தர்

என்ன கூறுவது என்று புரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டு நின்றாள் தன்மயா.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro