36 விதிக்கப்பட்டது...
36 விதிக்கப்பட்டது...
தாங்கள் புதைத்து வைத்து விட்டு சென்ற இடத்தில் மணல் கடிகாரத்தை காணாமல் காஞ்சனமாலையும் உமையாளும் அதிர்ச்சி அடைந்தார்lகள்.
"அய்யய்யோ இளவரசி... அது இங்கு இல்லை..." என்று பதட்டமாய் கூறியபடி அந்த இடத்தை மேலும் ஆழமாய் தோண்டினாள் உமையாள்.
"கவனமாக பார்...! அது எங்கு சென்று விடப் போகிறது? அங்கு தான் இருக்கும். நன்றாக தோண்டு...!" என்றாள் காஞ்சனமாலை, உமையாளை விட அதிக பதற்றத்துடன்.
அந்த மல்லிகைச் செடியை சுற்றி, கிட்டத்தட்ட ஒரு வட்டத்தையே தோண்டிவிட்டாள் உமையாள். ஆனால் அங்கு அந்த மணல் கடிகாரம் இல்லை. சோர்ந்து போய்விட்ட உமையாள் பெருமூச்சு விட்டபடி அமர்ந்தாள்.
"அது எங்கே சென்றது?" என்றாள் காஞ்சனமாலை பயத்துடன்.
"உண்மையிலேயே அது மிகவும் சக்தி வாய்ந்த மந்திர பொருளாக இருக்க வேண்டும். அதனால் தான் அது மறைந்து விட்டது" என்றாள் உமையாள்.
"இது அபசகுணத்தின் அறிகுறியாக இருக்குமா?" என்றாள் காஞ்சனமாலை நடுக்கத்துடன்.
"எனக்கு எப்படி தெரியும்? நானும் தங்களுடன் தானே இருக்கிறேன்?"
"அந்தப் பெண் தன்மயா, நாம் நினைத்ததை விட மிகவும் ஆபத்தானவளாக இருக்கிறாள்" என்றாள் காஞ்சனமாலை மனக்குமுறலுடன்.
"தாம் என்ன கூறுகிறீர்கள்?"
"அவளிடம் இருக்கும் வசிய சக்தியை பயன்படுத்தி அவள் அதை திரும்ப பெற்றிருக்க வேண்டும்"
"எப்படி கூறுகிறீர்கள்?"
"இளவரசர் வாகைவேந்தர் அரசவையில் தன்னை மறந்து அனைவர் முன்னிலையிலும் எப்படி நகைத்தார் என்று நீ பார்க்கவில்லையா? அது மட்டுமல்ல, அவள் படுக்கையில் எவ்வளவு கைதேர்ந்தவள் என்பதை அவரிடமே கூறினாள்..."
"அப்படியா?"
"ஆம்... இளவரசரால் அவளது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்று எவ்வளவு சாமர்த்தியமாய் கூறினாள் தெரியுமா?"
"உண்மையாகத்தான் கூறுகிறீர்களா?"
"ஆம்... எந்த ஆண் மகனால் தான் அப்படிப்பட்ட கூற்றை ஏற்றுக்கொள்ள முடியும்? யாராக இருந்தாலும் தானும் படுக்கையில் சளைத்தவன் அல்ல என்று காட்டத் தானே நினைப்பான்? அது ஆண்மைக்கு சவால் விடும் காரியம் அல்லவா?"
"இவற்றையெல்லாம் ஒரு பெண்ணால் எப்படி ஒரு ஆணிடம் வெளிப்படையாய் பேச முடிகிறது?"
"அதனால் தான் கூறுகிறேன், அவள் மிகவும் ஆபத்தான பெண் என்று. ஆண்களை எப்படி தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று அவளுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது" நெருப்பை கக்கினாள் காஞ்சனமாலை.
"அவளைப் பற்றி நாம் ஏன் அரசியிடம் கூறக்கூடாது?"
"நாம் அவரிடம் கூறிவிடலாம் தான்... ஆனால் அவர் இளவரசரிடம் அது பற்றி கேட்டால், நம்மை இளவரசர் சும்மா விடுவாரா? கொன்றுவிடுவாரே...!" என்றாள் எரிச்சலுடன்.
"நிச்சயம் செய்வார்...! ஏனென்றால், அவர் தங்கள் மீது ஏற்கனவே வெறுப்பில் இருக்கிறார்"
"நாம் ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க வேண்டும்"
ஆம் என்று தலையசைத்தாள் உமையாள்.
மறுநாள்
அரசர் ஒப்பிலாசேயோனும், அரசி அன்பிற்கினியாலும் அமுதனுக்காக குழப்பத்துடன் காத்திருந்தார்கள். அவர்களிடம் முக்கியமக பேச வேண்டும் என்று அமுதன் எதற்காக அவர்களுக்கு தகவல் அனுப்பினான் என்று அவர்களுக்கு புரியவில்லை.
"இது குறித்து உன்னிடம் அவன் ஏதாவது கூறினானா?" என்றார் ஒப்பிலாசேயோன்.
"இல்லை அரசே! அவன் அது பற்றி என்னிடம் ஒன்றும் கூறவில்லை" என்றார் அன்பிற்கினியாள்.
அவர்கள் அமுதனுக்காக காத்திருந்தார்கள். சற்று நேரத்தில் அங்கு வந்தான் அமுதன். அவர்களின் தாள் பணிந்து வணங்கிய பின்,
"நான் தங்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன்" என்றான்.
"சொல், அமுதா,"
"என் வாழ்வில், முதல் முறையாக, என் வருங்காலம் குறித்து நான் தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் ஒரு முடிவை மேற்கொண்டு உள்ளேன் தந்தையே"
"அமுதா, நீ இந்நாட்டின் இளவரசன்...! அரசனாக முடிசுட போகிறவன்...! எனக்கு உன் மீது முழு நம்பிக்கை உள்ளது. நீ நிச்சயம் தவறான முடிவை மேற்கொள்ள மாட்டாய் என்று எனக்கு தெரியும்" என்றார் ஒப்பிலாசேயோன்.
"என் மீது தாம் கொண்டுள்ள நம்பிக்கை குறித்து நான் புளங்காகிதம் அடைந்தேன், தந்தையே! நான் தங்களிடம் கூற விளைவது என்னவென்றால், நான் தன்மயாவை மணந்து கொள்ள விரும்புகிறேன்!" என்றான் அமைதியாய்.
அரசரும், அரசியும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டார்கள்.
"நான் அவளை மனதார காதலிக்கிறேன். என் வாழ்வை நான் அவளுடன் வாழ விரும்புகிறேன். வேறு யாரையும் அவள் இடத்தில் என்னால் ஏற்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை"
"அவள் அயல் நாட்டினாள். நமது பண்பாட்டை அறியாதவள். உடை முதல் நடை வரை அனைத்திலும் நம்மிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவள்" என்றார் அன்பிற்கினியாள்.
"அவள் அயல் நாட்டினள். ஆனால் நமது நாட்டை துரோகிகளிடம் இருந்து காப்பாற்றினாள். நம் நாட்டு பெண்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்றுவிக்க தயாராய் இருக்கிறாள். நமது பண்பாடு அவளுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவள் பெரியவர்களை மதிக்க தெரிந்தவள். ஒருபோதும் அவள் நமது பண்பாட்டை குறை கூறியதே கிடையாது. உண்மையை கூறப்போனால், நமது பண்பாடு அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவள் அதை வெகுவாய் விரும்புகிறாள். அவளது நடவடிக்கைகள் நம்மிடமிருந்து வேறுபட்டிருக்கலாம். ஆனால் அவை வெறுப்புக்குரியவை அல்ல. மனதில் படுவதை வெளிப்படையாய் பேசிவிடும் துணிச்சல் மிக்க பெண் அவள். நம் நாட்டு பெண்களிடமிருந்து அது அவளை வேறுபடுத்தி காட்டுவதால் அது தவறாகி விடாது. அவள் சுயமரியாதை உள்ள பெண். தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய திறமை படைத்தவள். அது அவளுக்கு தேவையும் கூட. ஏனென்றால் அவள் ஒரு பயணி..."
"அவள் உன்னை அனுசரித்துக் கொள்வாள் என்று நினைக்கிறாயா?" என்றார் அரசர்.
"நாங்கள் ஒருவரை ஒருவர் அனுசரித்துக் கொள்வோம் தந்தையே!"
"அரசியல் சூழல் பற்றி ஆலோசித்து பார்த்தாயா? திருமாவளவர் உயிருடன் இருக்கிறார். அவருடைய உதவியாளர்களும் எதிர்பாளர்களும் ஏற்கனவே இருவேறு பிரிவுகளாக பிரிய துவங்கி விட்டார்கள். அனைவரும் தங்களை வலிமைப்படுத்திக்கொள்ள முனைந்திருக்கிறார்கள். அதை திருமண உறவின் மூலம் நிலை நிறுத்திக்கொள்ள பார்ப்பார்கள். நீ ஒரு அயல் நாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டால், நாம் அவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்"
"எப்படி இருந்தாலும், நான் ஒரு பெண்ணை தானே மணக்க முடியும்? அப்படி என்றால், மற்றவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படத்தானே செய்யும்? அப்பொழுது மட்டும் மற்றவர்கள் நம் மீது கோபம் கொள்ள மாட்டார்களா? உண்மையை கூறப்போனால், மற்ற இளவரசிகளை தவிர்த்து விட்டு, அவர்களுள் ஒருத்தியை நான் மணந்து கொண்டால் தான் அவர்கள் நம் மீது மிகுந்த கோபம் கொள்வார்கள். நமது நட்பு நாட்டின் அரசர்களுக்குள் எவ்வளவு போட்டியும், பொறாமையும் நிலவுகிறது என்று நாம் அறிந்தது தானே? அவர்களுக்கு இடையில் நாம் வேறுபாட்டை உணர வைப்பதற்கு பதிலாக, நான் தன்மயாவை திருமணம் செய்து கொண்டால், அனைவரையும் அமைதிபடுத்தி விடலாம்"
வாயடைத்துப் போனார் ஒப்பிலாசேயோன். அவருக்கு என்ன கூறுவது என்று புரியவில்லை. ஏனென்றால் அமுதன் கூறிய எதுவும் தவறல்ல. சிற்றரசர்களுக்கு இடையில் போட்டியும் பொறாமையும் நிலவி வந்தது உண்மை தான். ஒருவர் மகளை விட்டு மற்றவர் மகளை மணந்தால், நிச்சயம் அது அவர்களுக்கு கோபத்தை தரும். இருந்த போதிலும் அவரால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
"தயவுசெய்து இருவரும் கலந்து ஆலோசித்த பின் முடிவை கூறுங்கள். தாம் என் மனதை உடைத்து விட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்" என்றான் உணர்ச்சிவசப்பட்டு.
அது ஒப்பிலாசேயோனை பதற்றத்தில் ஆழ்த்தியது. அமுதன் மனதை உடைப்பதை பற்றி பேசி விட்டானே...!
அங்கிருந்து நடந்தான் அமுதன்!
..........
தன்மயாவின் அறைக்கு வந்த அமுதன், கதவை தட்டினான். கதவை திறந்த தவ்வை, அமுதனை பார்த்ததும் வழி விட்டு பின்னால் நகர்ந்தாள். கட்டிலை விட்டு கீழே இறங்கி நின்றாள் தன்மயா.
"கோவிலுக்கு செல்லலாம் வா, தன்மயா," என்றான் அமுதன்.
"கோவிலுக்கா? எந்த கோவிலுக்கு?" என்றாள் தன்மயா ஆர்வத்துடன்.
"அன்று அனைவருடனும் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டாய் அல்லவா?"
"ஓ... அந்தக் கோவிலுக்கா? வாருங்கள் செல்லலாம்" அவனுடன் நடந்தாள் தன்மயா.
நான்கு புரவிகள் பூட்டப்பட்டு நின்றிருந்த ரதத்தில் தாவி ஏறிய அமுதன், தன்மயாவை நோக்கி கையை நீட்டினான். அவள் அவனது கரத்தை பற்றிக் கொள்ளவும், அவளை மேலே தூக்கி விட்டான் அமுதன். அவன் சாட்டையை சொடுக்க, அந்த குதிரைகள் ஓட துவங்கின. ஒரு சிறிய புரவிப் படை, தங்கள் இளவரசனை பின்தொடர்ந்தது.
அரண்மனையை விட்டு தன்மயா வெளியே வருவது அது தான் முதல் முறை. அகலமாய் இருந்த வீதிகள் அவளுக்கு ஆச்சரியம் அளித்தன. கோட்டைக்குள் இருந்த அங்காடி வீதியை அவர்கள் கடந்தார்கள். வியாபாரிகள் பலதரப்பட்ட பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். குயவர்கள் மண்பாண்டங்களையும், குடியானவர்கள் தானியங்களையும், சிலர் தின்பண்டங்களையும் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அனைத்தும் பண்டமாற்று முறையில் நடைபெற்றதை கவனித்தாள் தன்மயா. உப்பு விற்ற பெண், அதை கொடுத்து அதற்கு இணையாக நெல்லை பெற்றாள் (1). பாலை கொடுத்து தானியத்தை பெற்றாள் மற்றொருத்தி(2). அவற்றையெல்லாம் ஆர்வத்துடன் பார்த்தபடி சென்றாள் தன்மயா. தின்பண்ட கடையிலிருந்து வந்த வாசனை, அவள் நாவை ஊற செய்தது.
தேன் விற்கும் ஒரு கடையை அவர்களது ரதம் கடந்து சென்ற போது, அவளால் தன்னை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அந்த கடையில் மிகப்பெரிய தேனடை வைக்கப்பட்டிருந்ததை பார்த்து வியப்புற்றாள் அவள். அதிலிருந்து சொட்டு சொட்டாய் தேன் ஒழுகிக் கொண்டிருந்தது.
அமுதனின் தோளை, தன் விரலால் சுரண்டினாள் தன்மயா. அவள் பக்கம் திரும்பி, தன் புருவம் உயர்த்தினான் அமுதன். அந்த தேனடையை பார்க்கச் சொல்லி அவள் சைகை செய்தாள்.
"அது வேண்டுமா?"
அவள் ஆம் என்று தலையசைத்தாள். அவன் சரி என்று தலையை அசைத்தபடி, இரதத்தை செலுத்தி கொண்டு சென்றான். தேனடையில் இருந்து தன் கண்களை அகற்றாமல் அந்த இடத்தை கடந்தாள் தன்மயா.
"நான் அதை உனக்கு பிறகு கொண்டு வரச் செய்கிறேன்" என்றான் அமுதன்.
"சரி" என்று மகிழ்ச்சியுடன் சிரித்தாள் தன்மயா.
"நாம் இப்பொழுது செல்லும் கோவில், என் பாட்டனாரால் கட்டப்பட்டது. எங்கள் நாட்டிலேயே மிகப் பெரிய கோவில் அது தான்"
"அப்படியா?" என்றாள் தன்மயா அதை காணும் ஆர்வத்துடன்.
"ஆம். உனக்கு அது மிகவும் பிடிக்கும்"
அவர்கள் கோவிலை வந்தடைந்தார்கள். கோவிலில் இருந்த மக்கள், தங்கள் இளவரசனை கண்டதும் பூரித்து போனார்கள். மேலும் பலர் கோவிலை சூழ்ந்தனர். காவல் வீரர்கள், தங்கள் இளவரசனின் அமைதிக்கு பங்கம் நேராமல், அவர்களை தடுத்தார்கள்.
அந்த கோவிலை கண்ட தன்மயா புன்னகை புரிந்தாள். அது ஒன்றும் அவ்வளவு பெரிதாக இல்லை.
சேயோன் என்னும் முருகக் கடவுளை அவர்கள் வணங்கினார்கள். தன்மயாவுக்கு குங்குமமும், முல்லைச்சரமும் அளித்தார் பூசாரி. குங்குமத்தை சிறிய பொட்டாய் நெற்றியில் இட்டுக்கொண்டு, முல்லை சரத்தை தலையில் வைத்து க்ளிப் செய்து கொண்டாள். பூச்சரத்துடன் மிக அழகாய் இருந்த அவளை பார்த்து புன்னகை புரிந்தான் அமுதன்.
"எங்கள் கோவில் எப்படி இருக்கிறது?" என்றான்.
தன் கண்களை கோவிலில் ஓடவிட்டாள் தன்மயா.
"பெரிதாக இருக்கிறது அல்லவா?"
"அவ்வளவு ஒன்றும் சிறிதாக இல்லை" என்றாள்.
"நீ என்ன கூறுகிறாய்?" என்றான் அமுதன் ஏமாற்றத்துடன்.
"இதைப்போல் இருபது கோவில்களை உள்ளே வைத்து விடக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய கோவில்கள் தமிழகத்தில் கட்டப்பட்டுவிட்டன. தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோவில், திருவரங்கம் ரங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் என பல கோவில்கள் மிகப்பெரியவை"
அமுதனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
"உண்மையாகவா?"
"ஆம், பிற்காலச் சோழர்களின் தலைசிறந்தவராக கருதப்படும் ராஜராஜசோழன், தஞ்சையில் பெருவுடையார் கோவிலை கட்டியிருக்கிறார். அது பெரிய கோவில் என்றே அழைக்கப்படுகிறது. அந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இன்னும் அது கம்பீரமாய் அவரது சிறப்பை பறைசாற்றிக் கொண்டு நிற்கிறது."
"அது அவ்வளவு பெரிய கோவிலா?"
"ஆம்... அந்த கோவில் எனக்கு மிகவும் பிடிக்கும். அங்கு செல்லும்போதெல்லாம் ஓர் ஆத்மார்த்த உணர்வு ஏற்படும்"
"அதற்கு அப்படி என்ன சிறப்பு?"
"அதன் சிறப்புக்களை கூறிக் கொண்டே செல்லலாம். அந்த கோவிலின் விமானத்தின் உயரம் 216 அடிகள். தமிழில் உள்ள உயிர் மெய் எழுத்துக்கள் 216. சிவலிங்கத்தின் உயரம் 12 அடிகள். தமிழின் உயிர் எழுத்துக்கள் 12. சிவலிங்க பீடம் 18 அடிகள். தமிழின் மெய்யெழுத்துக்கள் 18. சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் இடையே உள்ள தூரம் 247 அடிகள். தமிழின் மொத்த எழுத்துக்கள் 247. என்று கணக்கிட்டு அந்த கோவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கோவிலின் விமானத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் ஒரே கல்லின் எடை மட்டும், நாம் நிற்கும் இந்த கோவிலின் எடைக்கும் ஒப்பானதாய் இருக்கும். முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்ட அதிசயம் அந்த கோவில்"
"இது எப்படி சாத்தியம், தன்மயா? தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் மலைகளே கிடையாதே...! சோழதேசம் பல ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சமவெளி ஆயிற்றே...! அவ்வளவு ஆறுகளையும் கடந்து, அவ்வளவு பெரிய கற்களை எப்படி கொண்டு வந்து ஒரு கோவிலை நிர்மாணித்திருக்க முடியும்?"
"அது தானே சோழர்களின் சாதனை...! யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத காரியத்தை அவர்கள் சாதித்துக் காட்டினார்கள்!"
அசந்து நின்றான் அமுதன்.
"அது மட்டுமல்ல, ராஜராஜனின் நிர்வாக திறமையும், நீர் மேலாண்மையும் இன்றும் கூட பலரை மூக்கின் மீது விரலை வைக்க செய்கிறது. பெருவுடையார் கோவிலை கட்டிய தலைமை சிற்பிக்கு, ராஜராஜ பெருந்தச்சன் என்று தனக்கு சமமான பெயரை வழங்கி, அவரை சிறப்பித்து அழகு பார்த்த பெருந்தன்மை வாய்ந்த அரசர் ராஜராஜ சோழன்...! கோவில் பணிக்காக ஒரு காசு கொடுத்தவர்களின் பெயரைக் கூட கோவில் கல்வெட்டில் பொறித்திருக்கிறார். அவரைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம்...! ஒரு நாள் போதாது...!"
அவள் கூறியதை எல்லாம் கேட்டு வியந்து நின்ற அமுதன்,
"கவலைப்படாதே, நாம் அவரைப் பற்றி நிரம்ப பேசலாம். நமக்கு தான் வாழ்நாள் முழுவதும் அவகாசம் இருக்கிறதே...!" என்றான் புன்னகைத்தபடி.
"நீங்கள் வெகுவாய் பிடிவாதம் பிடிக்கிறீர்கள். என் நிலையை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை"
"நீ தான் தன்மயா புரிந்துகொள்ள மறுக்கிறாய். உண்மையை கூறப்போனால், உனது உள்ளம் என்ன என்பது உனக்கே புரியவில்லை"
"தாம் என்ன கூறுகிறீர்கள்?" என்றாள் புரியாமல்.
"இந்த உலகில் இருக்கும் எதைப் பற்றியும் நீ உன் கணவனுடன் தயக்கமின்றி பேச விரும்புவதாய் கூறினாய். நீ உன் கணவனுடன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாய் என்றும் கூறினாய். உன் கணவனுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது வரை பேசினாய். அதெல்லாம் என்ன? ஏற்கனவே உன் மனதில் தோன்றுவதை எல்லாம் வெளிப்படையாய் என்னிடம் பேச நீ துவங்கி விட்டாய். உன்னை அறியாமல் நீ என்னுடன் இயல்பாய் இருக்க ஆரம்பித்து விட்டாய். உண்மையை உணர்ந்து கொள், தன்மயா. உன் மனம் விரும்பும் மணாளன் நான் தான். என்னால் உறுதியாய் கூற முடியும், உன்னால் என்னை மறக்க முடியாது...! என்னைத் தவிர வேறு யாரையும் உன் மனம் ஏற்றுக் கொள்ளாது. அதை புரிந்து கொள்"
தன்மயாவுக்கு வார்த்தைகளே வரவில்லை. அவளுக்கு தெரிந்தவரை, இதுவரை அவள் அமுதனிடம் பேசியது போல் யாரிடமும் இவ்வளவு இயல்பாய் பேசியது இல்லை. எப்படி அவள் கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு விடயத்தை அவனிடம் இவ்வளவு வெளிப்படையாய் பேசினாள் என்று அவளுக்கே புரியவில்லை. இத்தனைக்கும், அமுதன் அவள் காலத்து ஆண்களைப் போன்று முற்போக்கு எண்ணம் கொண்டவன் அல்ல...!
"நாம் செல்லலாம்" என்று புன்னகைத்தான், அவள் யோசிக்க துவங்கி விட்டதை உணர்ந்த அமுதன்.
அதே நேரம்...
அரண்மனை வெகுவாய் சூடேறிப் போனது, முனிவர் மெய் தீர்த்தரின் வருகையால்.…! அவர் சோதிடத்தில் நிபுணர்...! அவர் கூறிய எதுவும் பிசகியதில்லை...! அவர் அரசரையும் அரசியையும் காண வந்திருந்தார்.
அவர் வந்த செய்தி மன்னரை எட்டியது. அவரை வரவேற்க அரசரும் அரசியும் ஓடோடி வந்தார்கள்.
"வரவேண்டும் முனிவரே...!" தன் இரு கரம் கூப்பி அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார் ஒப்பிலாசேயோன்.
அரசரும் அரசியும் அவர் பாதம் பணிந்தார்கள். அவரது வருகையால் அவர்களது மனம் நிம்மதி அடைந்தது. தன்மயாவை மணந்து கொள்ள வேண்டும் என்ற அமுதனின் விருப்பத்திற்கு அவர் ஒரு நல்ல முடிவை கூறுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் முனிவரின் கேள்வி, அவர்கள் இருவரையும் குழப்பியது.
"ஈன்ற மகனை பறி கொடுத்துவிட்டு உங்களால் எப்படி களிப்புடன் இருக்க முடிகிறது?"
அவர்கள் இருவரும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"தாம் கூறுவது என்ன முனிவரே? தாங்கள் யாரைப் பற்றி பேசுகிறீர்கள்?"
"நான் தங்களிடம் வேறு யாரைப் பற்றி பேசுவேன்? தங்கள் மகன் வாகைவேந்தனை பற்றி தான்"
"வாகைவேந்தனை பற்றியா? நாங்கள் ஏன் அவனை இழக்க வேண்டும்? அவன் தான் எங்களுடன் இருக்கிறானே..."
"என்ன்னன? அவன் தங்களுடன் இருக்கிறானா? அது எப்படி சாத்தியமாகும்? அவன் இந்நேரம் இறந்திருக்க வேண்டுமே...!"
"தாம் என்ன கூறுகிறீர்கள்?" இருவரும் அதிர்ந்தார்கள்.
"நஞ்சு தோய்க்கப்பட்ட அம்பினால் அவன் மாய்க்கப்பட வேண்டும் என்பது விதி...! இந்த நேரம் அவனுடைய வாழ்நாள் முடிந்திருக்க வேண்டும். அவன் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை"
ஒப்பிலா சேயோனும் அன்பிற்கினியாளும், அதிர்ச்சியாலும் குழப்பத்தாலும் திகைத்து நின்றார்கள்.
தொடரும்...
1) கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி,
நெல்லின் நேரே வெண் கல் உப்பு எனச்
சேரி விலைமாறு கூறலின்- அகநானுறு 140-5-8
2) பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை இடைமகன் - குறுந்தொகை 221-3-4
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro