34 எதிர்பார்ப்பு
34 எதிர்பார்ப்பு
அரசரும் அரசியும் வருகிறார்களா என்று தன்மயா வழிமேல் விழி வைத்து காத்திருப்பதை கண்ட அமுதன்,
"தன்மயா" என்று மெல்லிய குரலில் அழைத்தான்.
அவனைப் பார்த்தாள் தன்மயா. அரியணையை பார்க்கச் சொல்லி அவளுக்கு சைகை செய்தான் அமுதன். அதை பார்த்துவிட்டு மீண்டும் அமுதனை நோக்கி திரும்பி,
"என்ன, அமுதே?" என்றாள்.
"அந்த அரியணையில் அரசியாக வீற்றிருக்க உனக்கு விருப்பம் இல்லையா?" என்றான்.
அந்தக் கேள்வி, அவளது விழிகளை விரிவடைய செய்தது.
"அதற்காக எத்தனை பேர் தங்கள் உயிரையும் விட காத்திருக்கிறார்கள் தெரியுமா?"
"தெரியும் அமுதே...! அதற்காக உயிர் விட்டவர்களின் வரலாறு குறித்து தங்களை விட எனக்கு மிக நன்றாகவே தெரியும். தன் உடன் பிறந்த சகோதரர்கள் என்று கூட பாராமல் அவர்களை கொன்று குவித்து விட்டு, ரத்த வெள்ளத்தைக் கடந்து சென்று அந்த அரியணையில் அமர்ந்த பலரது வரலாற்றை நான் படித்திருக்கிறேன்"
"அவ்வளவு சிறப்பு வாய்ந்த அரியணை உனக்காக விருப்பத்தோடு காத்திருக்கிறது. நீ எந்த முயற்சியும் மேற்கொள்ளாமலேயே அது உன் கட்டுப்பாட்டின் கீழ் வர விரும்புகிறது. அப்படி இருந்தும் நீ அதன் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கிறாயே, ஏன்?"
"ஏனென்றால் அதன் தன்மை பற்றி நான் நன்கு அறிவேன். அதனால் தான் அதை வேண்டாம் என்கிறேன். அது ஒரு போதை. அதில் விழுந்து உழல நான் விரும்பவில்லை. நான் சுதந்திரமான எண்ணங்களுடன் இருக்கவே விரும்புகிறேன்"
"என் நாட்டு சட்டத்திட்டங்கள் உன்னை கட்டுப்படுத்தும் என்று நினைக்கிறாயா? எந்த சட்ட திட்டமும் இன்றி சுதந்திரமாய் வாழ வேண்டும் என்று விரும்புகிறாயா?"
"இல்லை, நான் சட்டதிட்டங்களை பின்பற்றுவது குறித்து பயப்படவில்லை. என் பெற்றோரின் மறைவுக்குப் பிறகு, எனக்கென்று தனி சட்ட திட்டங்களை வகுத்து, அதன்படி நான் வாழ்ந்து வருகிறேன். அவற்றை கடந்து செல்ல நான் எப்பொழுதும் நினைத்ததில்லை. கேள்வி கேட்க யாரும் இல்லாதவள் நான். நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்க முடியும். அப்படிப்பட்ட தான் தோன்றித்தனத்தை நான் அறவே வெறுக்கிறேன். நான் ஒழுக்கத்தை மதிப்பவள்."
"பிறகு உன்னை தடுப்பது எது?"
"தனிப்பட்ட பல விடயங்கள் இருக்கிறது அமுதே...!"
"தனிப்பட்ட விடயமா? என்ன அது?"
"நான் இக்கால பெண்களைப் போல் இல்லை"
"அது நான் அறிந்தது தான். ஆண்களையும் வீழ்த்திவிடக்கூடிய வீராங்கனை நீ"
"நான் பேசுவது அது குறித்து அல்ல"
"ஓ... அப்படி என்றால், நீ உடைகளை பற்றி பேசுகிறாயா? உனக்கு பிடித்தமானவற்றை நீ அணிந்து கொள்ளலாம். நான் எங்கள் அரண்மனையில் இருக்கும் தையல் குழுவினரிடம் சொல்லி உனக்கு வேண்டிய உடைகளை வடிவமைத்து தர சொல்கிறேன்"
"உடை ஒரு பெரிய விடயமே அல்ல... விழாக்காலங்களில் புடவை உடுத்துவதை நான் வழக்கமாகக் கொண்டவள்..."
"ஆம், அது பற்றி நீ ஏற்கனவே ஒரு முறை கூறியிருக்கிறாய்"
"ம்ம்ம்"
"அப்படி என்றால், உன் காலத்தை சேர்ந்த மின்சாரம், கைபேசி, வாகனங்கள் இல்லாமல் வாழ முடியாது என்று நினைக்கிறாயா?"
பெருமூச்சுவிட்டு இல்லை என்று தலையசைத்தாள்.
"பிறகு உன் பிரச்சனை தான் என்ன?"
"என்னால் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்று தோன்றவில்லை"
"எனக்கு உன்னிடம் எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்று நான் எப்பொழுது கூறினேன்? எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை"
"இப்பொழுது இல்லாமல் இருக்கலாம்... ஆனால் நமக்கு திருமணமாகிவிட்டால் நிச்சயம் உங்களுக்கு எதிர்பார்ப்புகள் தோன்றும்"
"நீ என்ன கூற வருகிறாய் என்பது எனக்கு புரியவில்லை. உன் மனதில் ஏதோ இருக்கிறது என்று எனக்குப் புரிகிறது. அது எதுவாக இருந்தாலும் நேரடியாக கூறு"
பெருமூச்சு வீட்டு தன்மயா,
"நான் வெட்கப்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். எப்படி வெட்கப்படுவது என்ற அடிப்படை கூட எனக்கு தெரியாது. உண்மையை கூறப்போனால், அதையெல்லாம் நான் முயற்சித்து பார்த்தது கூட இல்லை. அது என் ரத்தத்திலேயே இல்லையென்றால் நான் என்ன செய்வது?" என்றாள் சலிப்புடன்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த அமுதன் பொறுக்க முடியாமல் சிரித்து விட்டான், தான் அமர்ந்திருப்பது அரசவை என்பதையும், மக்கள் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மறந்து...! தனக்கு வெட்கப்பட தெரியவில்லை என்று ஒரு பெண் புலம்புவதை அவன் கேட்பது அதுதானே முதல் முறை...! அவனது சிரிப்பு அங்கிருந்த மக்களின் கவனத்தை ஈர்த்தது. தன்னை மறந்து அவன் எதற்காக அப்படி சிரிக்கிறான் என்ற காரணத்தை புரிந்து கொள்ள முடியாத மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அனைவரும் அவர்களையே பார்ப்பதைக் கண்ட தன்மயா தவித்துப் போனாள்.
"அமுதே, அனைவரும் நம்மைத்தான் பார்க்கிறார்கள்...!" என்று தன் வாயை கையால் மூடி, கீழே குனிந்தபடி கூறினாள்.
தன் கையால் முகத்தை மறைத்துக் கொண்டு சிரித்தான் அமுதன்.
"அமுதே, தயவுசெய்து சிரிப்பதை நிறுத்துங்கள்" என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.
தன்னை கட்டுப்படுத்திக் கொள்வதற்காக உதட்டை கடித்து நேராய் அமர்ந்த அமுதன், மீண்டும் சிரித்தான். சங்கடத்துடன் தன் தலையை அழுத்திக் கொண்ட தன்மயா, ஒரு குரல் கேட்டு தலைநிமிர்ந்தாள்.
"இதில் நீ சங்கடப்பட ஏதுமில்லை, கண்ணே...! எப்பொழுதும் இறுக்கமாய் காணப்படும் எங்கள் இளவரசரை, தன்னை மறந்து நீ சிரிக்க வைத்திருக்கிறாய். அவர் உன்னுடன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை எங்களால் காண முடிகிறது. இறைவன் எப்பொழுதும் உங்களை மகிழ்வுடன் வைக்கட்டும்" என்றார் ஒரு வயதான பெரியவர்.
அவர் கூறியதை கேட்ட மற்ற சிலரும்,
"ஆமாம் ஆமாம்" என்றார்கள்.
அங்கிருந்த மக்களின் முகபாவத்தை ஊன்றி கவனித்தான் அமுதன். ஒரே ஒருத்தியை தவிர மற்ற அனைவருமே மகிழ்வோடு இருந்தார்கள். அந்த ஒருத்தி, சந்தேகம் இல்லாமல் காஞ்சனமாலை தான். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அவள் அப்படித்தானே இருப்பாள்...!
அமுதன் தன்மயாவை பார்த்து பொருளோடு புன்னகைக்க, அவள் சங்கடத்தில் நெளிந்தாள்.
"உனக்கு வெட்கப்பட தெரியவில்லை என்றா கவலைப்படுகிறாய்?" என்று கேட்டு சிரித்தான் அவன்.
தன்மயா அவனுக்கு பதில் அளிக்க நினைத்தபோது, அந்த அரசவை அமைதியானது. அரசரும் அரசியும் உள்ளே நுழைந்தார்கள். அனைவரும் எழுந்து நின்றார்கள். அரசியாருடன் அரசர் அரியணையில் அமர்ந்தார்.
"இந்த அரசவைக்கு நான் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். நம் நாட்டுக்கு உடனடியாய் ஒரு தளபதியை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். திருமாவளவர் உயிரோடு இருக்கிறார். இந்திர விழாவின் போது நடந்த ரத போட்டியில் அவர் வெளிப்பட்டுவிட்டார். விரைவிலேயே அவருக்கு உறுதுணையாய் நாமும் போர் களம் புக வேண்டி வரலாம். நமது சேனைகளை வழிநடத்தக் கூடிய திறம் மிகுந்த ஒரு தளபதி நம் நாட்டுக்கு அவசியம். அது மட்டும் அல்லாமல், நம் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், நம் நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்காகவும் இளவரசர் வாகைவேந்தர் சில திட்டங்களை வைத்துள்ளார். அவர் அது குறித்து இந்த அரசவையில் கூறுவார். அதோடு, புதிய தளபதி யார் என்றும் அறிவிக்கும்மாறு நான் இளவரசன் வாகைவேந்தனை கேட்டுக்கொள்கிறேன்." என்றார் அரசர் ஒப்பிலா சேயோன்.
தன் இருப்பிடத்தை விட்டு எழுந்து நின்ற அமுதன், தலை வணங்கினான். அரசவையின் மத்தியில் வந்து நின்ற அவன்,
"நம் நாட்டின் புதிய தளபதியை உங்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் பங்குபெற்ற அனைத்து போர்களிலும், என்னோடு தோளோடு தோள் நின்று, எனது வெற்றிக்கு காரணமாய் இருந்தவர். நம் நாட்டுப் படையின் உப தளபதி மட்டுமல்ல, எனது நண்பனும் கூட... நம் நாட்டின் புதிய தளபதி, அருகன்...!"
அருகன் அதிர்ச்சியில் உறைந்தான். அமுதன் தனக்கு இப்படி ஒரு உயர்ந்த பதவியை அளித்து தன் மதிப்பை உயர்த்தி பிடிப்பான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. நம்ப முடியாமல் அமுதனையை பார்த்துக் கொண்டிருந்தான் அவன். மக்களின் கரவொலி வானைப் பிளந்தது.
அவனை நோக்கி சென்ற அமுதன், அவன் கரத்தைப் பற்றி இழுத்தான். அப்பொழுது தான் தன் சுயநினைவை அடைந்தான் அருகன். தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தான்.
"வா..." என்று அவனை தன்னுடன் இழுத்து வந்தான் அமுதன்.
தங்கத்தட்டில் வைத்து, தளபதிக்கான மகுடம் கொண்டுவரப்பட்டது. அதை அருகனின் தலையில் சூட்டினார் அரசர் ஒப்பிலாசேயோன், அதிர வைக்கும் கரவொலியுடன்.
"வாழ்த்துக்கள்" என்றான் அமுதன் புன்னகையுடன்.
மக்களை நோக்கி திரும்பி நின்ற அருகன், தன் இடைக்கச்சையுடன் இணைக்கப்பட்டிருந்த வாளை உருவி எடுத்து, உறுதிமொழி கூறும் நோக்குடன் அதை உயர்த்தி பிடித்தான்.
"அருகனாகிய நான், என் தாய் நாட்டிற்கு உண்மையானவனாய் இருப்பேன். என் பொறுப்பை உணர்ந்து, முழு மூச்சுடன் பாடுபடுவேன். என் தாய் நாட்டின் எல்லைக்குள் எதிரியின் கால் படவும் அனுமதியேன்...!"
மென்று விழுங்கினாள் தன்மயா. இப்படித்தானே அமுதனும் தன் வாளை உயர்த்திப் பிடித்து, அவளை தவிர வேறு எந்த பெண்ணையும் மணக்க மாட்டேன் என்று உறுதிமொழி கூறினான்...!
அருகனை தளபதியின் இருக்கையில் அமர வைத்துவிட்டு, மீண்டும் அரசவையின் மத்தியில் வந்து நின்றான் அமுதன்.
"நான் நம் நாட்டில் இரண்டு திட்டங்களை கொண்டுவர விரும்புகிறேன். முதலாவது, நம் நாட்டு பெண்களின் பாதுகாப்பு குறித்தது. நம் நாட்டின் ஒவ்வொரு சிற்றூரிலும், இருபது இளைஞர்களை கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழுவில் ஐந்து பெண்கள் இடம் பெற்றிருப்பார்கள். அவர்கள் அரசு ஊழியர்களாய் கருதப்படுவார்கள். அரசு அவர்களுக்கு ஊதியம் வழங்கும். அந்த சிற்றூரில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கு அந்த இருபது பேர் கொண்ட குழுவே பொறுப்பு. அந்தக் குழுவில் எதற்காக பெண்களை இடம் பெறச் செய்தேன் என்ற கேள்வி எழலாம். அந்த குழுவில் பெண்கள் இருப்பதால், பெண்கள் தயக்கம் இன்றி குழுவை அணுகி, தங்கள் சங்கடங்களை பகிர்ந்து கொள்வார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்பது என் விருப்பம். அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் ஏராளமாக இருக்கிறது. பெண்களும் பல கலைகளையும் கற்றுத் தேர வேண்டும். அதனால் தான் பெண்களை அந்த குழுவில் இணைத்தேன். அந்தக் குழுக்கள், அவர்களது அறிக்கையை நேரடியாக என்னிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் என்னுடைய நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படுவார்கள். மக்கள் சுலபமாய் அணுகக் கூடிய விதத்தில் நமது அரசாங்கம் செயல்படும். அதற்காகத்தான் இப்படிப்பட்ட குழுக்களை அமைத்திருக்கிறேன். அந்த குழுக்களில் உள்ள பெண்களுக்கு, தன்மயா பயிற்சி அளிப்பாள்"
மீண்டும் அவை கரவொலியால் நிரம்பியது.
"இரண்டாவது திட்டம் உணவு பற்றியது"
*உணவு பற்றியதா?* என்ற முணங்கள் அந்த அவையில் எழுந்தது.
"நமது நாட்டு பெண்கள் கடின உழைப்பாளிகள். ஒவ்வொரு நாளும் சமையலறையில் பழியாய் கிடக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நாள் கூட ஓய்வு என்பதே இருப்பதில்லை. அதனால் ஒவ்வொரு திங்களின் கடைசி நாளன்று அவர்களுக்கு விடுப்பு வழங்கப்படுகிறது. அந்த நாளில், நம் நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும், அவர்களது ஊரில் இருக்கும் ஒரு பொது இடத்தில், அரசு விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நாளில், எந்த வேலையும் செய்யாமல், பெண்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாய் அந்த நாளை செலவழிக்கலாம். இதன் மூலம் அவர்களது மனதிற்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்று நம்புகிறேன்...!"
அவனை திகைப்புடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் தன்மயா. இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அவனுக்கு ஏன் தோன்றியது என்று அவளுக்கு புரிந்தது. அவனை தற்காலத்திற்கு அழைத்துச் சென்றபோது, அவர்கள் உணவருந்திய உணவகத்தில், ஒரு குடும்பத்தினர் உணவருந்தியத்தை
பற்றி தன்மையா அவனிடம் கூறினாள் அல்லவா? அப்போது தான் அவனுக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றியிருக்க வேண்டும். அவனது தற்கால பயணத்தின் மூலமாக தன் நாட்டிற்கு இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வருவான் என்று அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை. அமுதன் ஒரு மிகச் சிறந்த மனிதன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை! இந்த திட்டம், நிச்சயம் அவன் நாட்டைச் சேர்ந்த பெண்களிடம் அவனுக்கு ஒரு நன்மதிப்பை பெற்று தரும் என்பது உறுதி...! ஆனால் அமுதனின் அடுத்த வார்த்தைகள் அவளை திகைப்படையச் செய்தது.
"எனக்கு இப்படி ஒரு யோசனை தோன்ற காரணமாய் இருந்த தன்மயாவுக்கு நன்றி!" என்றான் அவன்.
மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து குதுகளித்தார்கள். அது யாருமே கொண்டு வராத திட்டம் என்பதால் அவர்களது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
"இளவரசர் வாகைவேந்தர் வாழ்க...!"
"இளவரசரின் தோழி தன்மயா வாழ்க!"
என்ற வாழ்த்தொலிகளை மக்கள் எழுப்பத் துவங்கினார்கள்.
தன்மயா தவித்துப் போனாள். அவளுக்கு மக்களிடம் நன்மதிப்பு ஏற்பட வேண்டும் என்று தான் அமுதன் அவள் பெயரை கூறினான் என்று புரிந்து கொள்வதில் அவளுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. மக்கள் அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவன் காட்டிய முனைப்பு அவளுக்கு அச்சத்தை தந்தது. போகிற போக்கை பார்த்தால், மக்களே அவள் அங்கிருந்து செல்வதற்கு இசைவளிக்க மாட்டார்கள் போலிருக்கிறது...!
அவை கலைந்தது. அமுதனின் புதிய திட்டங்களையும், அவன் அந்தத் திட்டங்களை வகுக்க காரணமாய் இருந்த தன்மயாவையும் பற்றி பேசியபடி மக்கள் கலைந்து சென்றனர்.
அமுதனை நோக்கி ஓடிவந்த அருகன் அவனை ஆரத் தழுவிக் கொண்டான்.
"நீ எனக்கு இப்படி ஒரு மதிப்பை அளிப்பாய் என்று நான் எண்ணவில்லை, அமுதா" என்றான் அவன் உணர்ச்சிவசப்பட்டு.
"நான் என்ன செய்தேன்?"
"அரசரிடம் என் பெயரை முன்மொழிந்தது நீ தான் என்று எனக்கு தெரியும்"
"நீ அதற்கு தகுதி வாய்ந்தவன்"
"என் மீது நீ கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி!"
"உனது வாய்மையும், நேர்மையும் தான் உன் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட செய்தது"
மீண்டும் அவனை உணர்ச்சிவசப்பட்டு அணைத்துக் கொண்டான் அருகன்.
அப்பொழுது, எழிலரசி அவர்களை நோக்கி ஓடிச் செல்வதை கவனித்தாள் தன்மயா.
"வாழ்த்துக்கள்!" என்றாள் அவள்.
"நன்றி இளவரசி!" என்று கரம் கூப்பினான் அருகன்.
"நம் நாட்டின் சட்டப்படி, நீ நமது பழைய தளபதியின் மாளிகையில் குடியேற வேண்டும்" என்றான் அமுதன்.
அதை ஒப்புக்கொண்டு தலையசைத்தான் அருகன்.
"நீ உன் பெற்றோரை சந்தித்து விட்டாயா?"
"இல்லை, அவர்கள் எனது தமக்கையை காண சென்றிருக்கிறார்கள். இந்நேரம் அவர்கள் வந்திருக்க வேண்டும்"
அருகனிடம் ஏதோ சொல்ல முயன்றாள் எழிலரசி.
"நான் எனது பெற்றோரை சந்திக்க வேண்டும், அமுதா, நான் சொல்லட்டுமா?" என்று கூறி அவளிடம் பேசுவதை தவிர்த்தான் அருகன்.
"அப்படியே ஆகட்டும்" என்றான் அமுதன்.
அருகன் அங்கிருந்து செல்லவும், எழிலரசியின் முகம் களை இழந்தது. எதற்காக அருகன் எழிலரசியை தவிர்க்கிறான்? அவன் அங்கிருந்து சென்றவுடன் அது ஏன் எழிலரசிக்கு வருத்தம் அளித்தது? என்ற கேள்விகள் அவர்களை கவனித்துக் கொண்டிருந்த தன்மயாவின் மனதில் தோன்றியது. அவர்களுக்கிடையில் ஏதாவது இருக்கிறதா? என்று எண்ணினாள் தன்மயா.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro