Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

32 மந்திரப் பொருள்

32 மந்திரப் பொருள்

வேதனையுடன் அமுதனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் தன்மயா. இதனால் தான் அவனை நவீன காலத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று அவள் எண்ணினாள். அதன் தன்மைகளைப் பற்றி அறிந்து கொண்டால், அவன் நிச்சயம் அவளை அங்கு திரும்பி செல்ல விட மாட்டான் என்று அவளுக்கு தெரியும்.

ஆனால், இப்பொழுது அதைப் பற்றி யோசித்து எந்த பயனும் இல்லை. அவள் அவனை நவீன யுகத்திற்கு அழைத்துச் சென்றாகிவிட்டது...! அதன் தன்மைகள் என்ன என்பது அமுதனுக்கும் தெரிந்தாகிவிட்டது...! அவன் தனது வாளின் மீது சூளுரைத்தும் ஆகிவிட்டது...! அதை இனி யாராலும் மாற்ற முடியாது. இப்போது அவள் என்ன செய்யப் போகிறாள்? ஒன்றும் புரியவில்லை.

"என்ன யோசிக்கிறாய், தன்மயா?"

அவள் ஒன்றும் இல்லை என்று தன் தலையை இடவலமாய் அசைத்தாள். பெருமூச்சு விட்ட அமுதன், கட்டிலின் மீது வைக்கப்பட்டிருந்த தன் உடை இருந்த பையை எடுப்பதற்காக கையை நீட்டினான், அப்பொழுது அந்த பை, அவன் கைபட்டு கட்டிலின் மறுபக்கம் விழுந்தது.

"பொறுங்கள் நான் எடுத்து தருகிறேன்" என்று, கீழே விழுந்த பையை எட்டி எடுத்து அவனிடம் கொடுத்தாள் தன்மயா. அவள் அதை எடுத்த போது, அந்த பையில் இருந்த  அமுதனின் மேலாடை கீழே விழுந்துவிட்டதை அவள் கவனிக்கவில்லை.

"உடை மாற்றிக் கொண்டு வருகிறேன்" என்றான் அமுதன். அவள் சரி என்று தலையசைக்கவும், குளியல் அறையை நோக்கி சென்றான்.

இதற்கிடையில்,

தன்மயாவின் அறையை பார்த்தபடி, எதிரில் இருந்த தோட்டத்தில் இங்கும் அங்கும் உளவியபடி பரிதவித்துக் கொண்டிருந்தாள் காஞ்சனமாலை. அவளது அந்தரங்கத் தோழியும் அவளுக்கு பின்னால் அலைந்து கொண்டிருந்தாள். அவளது பரிதவிப்புக்கு என்ன காரணம் என்றால், முந்தைய நாள் இரவு தன்மயாவின் அறைக்கு அமுதன் செல்வதை அவள் பார்த்தாள். அவள் அறையில் இருந்து அவன் வெளியே வரவில்லை. இன்னும் அங்கேயே தான் இருக்கிறான். இவ்வளவு நேரமாக அவளது அறையில் அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவளை அரண்மனைக்கு அழைத்து வந்த போது, அவள் தனது தோழி என்று கூறினானே? தோழியின் இடத்தில் இரவு நேரத்தில் அவனுக்கு என்ன வேலை? இரவு நேரத்தில் கலந்தாலோசிக்கும் அளவிற்கு அப்படி என்ன முக்கியமான வேலை இருக்க முடியும்?

"இளவரசி, எதற்காக இப்படி அலைந்து திரிந்து கொண்டிருக்கிறீர்கள்?" என்றாள் அவளது தோழியான உமையாள்.

"என் இடத்தில் நீ இருந்திருந்தால், நீயும் அப்படித்தான் செய்வாய்" என்றாள் காஞ்சனமாலை எரிச்சலுடன்.

"இல்லை, நான் தங்களைப் போல் இப்படி அலைந்து கொண்டிருக்க மாட்டேன்"

தன் விழிகளை சுருக்கி அவளை பார்த்த காஞ்சனமாலை,

"உன் மணாளன் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என்று விட்டு விடுவாயா?" என்றாள் காஞ்சனா கோபத்துடன்.

"இல்லை, அங்கு என்ன நடந்திருக்குமோ என்று இப்படி நிம்மதி இழந்து ஊகித்துக் கொண்டிருக்காமல், அவளது அறைக்கு சென்று அங்கு என்ன நிகழ்கிறது என்பதை தெரிந்து கொள்வேன்" என்றாள் உமையாள்.

சில நொடி தாமதித்த காஞ்சனமாலை,

"ஒருவேளை நம்மை யாராவது பார்த்து விட்டால் என்ன செய்வது?" என்றாள் தயக்கத்துடன்.

"பார்த்தால் என்ன? நீங்கள் ஒரு இளவரசி...! உறக்கம் வரவில்லை, அதனால் உலவி கொண்டிருக்கிறேன் என்று தாங்கள் கூறிவிடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இளவரசரின் மாளிகை வளாகத்தில் காவல் குறைவாக இருக்கும் என்பது தாம் அறியாததா? ஒருவரோ இருவரோ தான் இருப்பார்கள்..."

"அப்படியென்றால், அங்கு சென்று பார்க்கலாம் என்கிறாயா?"

"நிலவை பாருங்கள். உச்சிக்கு வந்துவிட்டது. நள்ளிரவில் அனைவரும் உறங்கிக் கொண்டு தான் இருப்பார்கள். இங்கிருக்கும் காவலர்களுக்கு நான் பரிச்சையமானவள் தான். நான் சமாளித்துக் கொள்கிறேன். அவர்கள் நம்மை நம்பாவிட்டாலும் அதைப்பற்றி என்ன கவலை?"

"சரி" என்று இருவரும் தன்மயாவின் அறையை நோக்கி நடந்தார்கள்.

அப்போது, முதல் மாடிக்கு செல்லும் வழியில் நின்றிருந்த ஒரு காவலன் அவர்களைப் பார்த்து,

"இந்நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்றான்.

"இளவரசி காஞ்சனமாலை பகலில் உறங்கி விட்டதால் இப்பொழுது அவருக்கு உறக்கமே வரவில்லையாம். அதனால் தான் நேரத்தைப் போக்க உலவிக் கொண்டிருக்கிறோம்..."

"ஓ..."

காஞ்சனமாலை ஒரு இளவரசி என்பதால், மேற்கொண்டு அவர்களை எதுவும் கேட்கவில்லை அந்த காவலன்.

தன்மயாவின் அறையை நோக்கி வந்த அவர்கள், சாளரத்தின் அருகே எச்சரிக்கையுடன் மறைந்து நின்று கொண்டார்கள். தன் கையை உள்ளே நுழைத்து, உட்புறமாக போடப்பட்டிருந்த திரைச்சீலையை மெல்ல விளக்கினாள் உமையாள்.

மணல் கடிகாரத்தை தன் கையில் வைத்துக்கொண்டு, அதை பார்த்துக் கொண்டிருந்தாள் தன்மயா. அது தன் வாழ்க்கையை எப்படி எல்லாம் மாற்றி விட்டது என்று எண்ணியபடி. அப்பொழுது உடையை மாற்றிக் கொண்டு குளியலறையில் இருந்து வெளியே வந்தான் அமுதன்  மேலாடை இன்றி. அதைக் கண்ட காஞ்சனமாலையும் உமையாளும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

"அவர் ஏன் மேலாடை அணியாமல் இருக்கிறார்?" என்றாள் காஞ்சனமாலை அதிர்ச்சியே வடிவாய்.

"நானும் அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன், இளவரசி" என்றாள் உமையாள் பதற்றத்துடன்.

"அவள், அவரது தோழி என்றால், எதற்காக அவர் மேலாடை அணியாமல் அவளுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறார்? அவர்களுக்குள் ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது" என்றாள் ஏமாற்றத்துடன்.

"எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது" என்றாள் உமையாள் கவலையுடன்.

அமுதன் மேலாடையின்றி நின்றதை பார்த்த தன்மயா, குழப்பத்துடன் முகம் சுருக்கினாள்.

"எனது மேலாடையை எடுத்துக் கொடு, தன்மயா" என்றான் கீழே விழுந்திருந்த தனது மேலாடையை சுட்டிக்காட்டி.

கீழே பார்த்த தன்மயா, அங்கு கிடந்த அவனது மேலாடையை பார்த்து,

"இது இங்கே விழுந்து விட்டதா?" என்றபடி அதை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

"ஆம், அது கீழே விழுந்து விட்டது" என்றபடி அவளிடம் இருந்து பெற்று, அதையும் தன் ஆபரணங்களையும் அணிந்து கொள்ளத் துவங்கினான்.

"கீழே விழுந்து விட்டதா? அவராக அதை களையாமல் அது எப்படி கீழே விழுந்தது?" என்றாள் காஞ்சனமாலை கிட்டத்தட்ட அழும் நிலைக்கு தள்ளப்பட்டு.

"நீங்கள் கூறுவது சரிதான், இளவரசி. அவர்களுக்குள் ஏதோ நிகழ்ந்திருக்கிறது. அதனால் தான் அவர் தனது உடையையும் ஆபரணங்களையும் களைந்திருக்கிறார்.

"நான் பயந்த படியே நிகழ்ந்துவிட்டது. அவள் அவரது தோழி அல்ல. அவர்களுக்குள் வேறு உறவு இருக்கிறது" என்றாள் கோபமாய்.

தன் வாளை எடுக்க முனைந்த அமுதன், தன்மயாவின் கையில் இருந்த மணல் கடிகாரத்தை பார்த்தான்.

"எதற்காக நீ அதையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்?"

"இது என் வாழ்வில் எப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது என்பதை பற்றி யோசித்து கொண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட மாற்றங்களை இது என் வாழ்வில் கொண்டு வரும் என்று தெரிந்திருந்தால், நான் நிச்சயம் இதை பெற விருப்பம் காட்டியிருக்கவே மாட்டேன்... "

"ஆனால் நீ அதை பெற்றுவிட்டாய்...! ஏனென்றால், நாம் ஒருவருக்காக ஒருவர் படைக்கப்பட்டவர்கள். அதனால் தான் நீ என்னிடம் வந்து சேர்ந்திருக்கிறாய். சற்று யோசித்துப் பார் தன்மயா, இதை பயன்படுத்தி நீ வேறு எங்காவது சென்றிருக்க முடியும். ஆனால் நீ செல்லவில்லை. எங்கள் நாட்டிற்கு தான் வந்தாய். என்னை சந்தித்தாய். நாம் ஒன்று கலந்து பழகினோம்...! வாழ்வில் நான் எத்தனையோ பேரை சந்தித்து இருக்கிறேன். ஆனால் யாருடனும் கலந்து பழகியதில்லை. உன்னுடன் மட்டும் தான் அது நிகழ்ந்தது"

காஞ்சனமாலையின் கண்கள் அதிர்ச்சியில் விரிவடைந்தன. ஒன்று கலந்தார்களா? அமுதன் கூறியதன் அர்த்தம் என்ன? அப்படி என்றால் அவர்கள் கலந்து விட்டார்களா?

அமைதியாய் இருந்தாள் தன்மயா. அவள் கையில் இருந்த மணல் கடிகாரத்தை வாங்கி, அங்கிருந்த வேலைப்பாடு நிறைந்த அழகிய மேசையின் மீது வைத்தான் அமுதன். காஞ்சனமாலையும், உமையாளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"அது என்ன?" என்றாள் காஞ்சனா.

"எனக்கும் அது என்னவென்று புரியவில்லை. இப்படிப்பட்ட ஒரு பொருளை நான் பார்த்ததே இல்லை" என்றாள் உமையாள்.

தன் கைகளை, தன் கால்முட்டியில் பதித்து, மணல் கடிகாரத்தை நோக்கி லேசாய் குனிந்த அமுதன்,

"நீ தான் என் வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கிறாய். நான் யார் என்று உனக்கு தெரியுமா? நான் இளவரசன் வாகைவேந்தன்...! நான் யார் முன்பும் குனிந்து நின்றதில்லை. ஆனால் இப்பொழுது அதை செய்வதில் எனக்கு தயக்கம் இல்லை. ஏனென்றால், உன்னால் தான் தன்மயா இன்று என்னுடன் இருக்கிறாள். என்னை பொறுத்தவரை, எனது வாளும் நீயும் ஒன்று தான்" என்றபடி பின்னால் திரும்பி, உணர்ச்சி குவியலாய் அவனையே  பார்த்துக்கொண்டிருந்த தன்மயாவை பார்த்தான் அமுதன்.

"அது என்ன? தன்மயா இங்கு வந்து அவருடன் இருக்க அது எப்படி காரணமாக முடியும்?" என்றாள் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாத காஞ்சனமாலை.

"இன்று காலை அரசவையில் அவள் எல்லோரிடமும் ஒரு மந்திரப்பேழையை காட்டினாள் என்று தங்களிடம் கூறினேன் அல்லவா? அது போல் இதுவும் ஏதோ ஒரு மந்திர பொருளாக இருக்கும் என்று நினைக்கிறேன். துறவி விவேக் தான் இதையும் அவளுக்கு கொடுத்திருக்க வேண்டும்" என்று தனது கற்பனை தேரை ஓட்டினாள் உமையாள்.

"அப்படித்தான் இருக்க வேண்டும். அதனால் தான் வாகைவேந்தர் அவளுக்கு பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பெண்களிடத்தில் நெருங்கி பழகாதவர் என்று நாம் அறியாததா? அந்த மந்திரப் பொருளை கொண்டு தான் அவள் அவரை தன்வயப்படுத்தி இருக்க வேண்டும்..."

"உண்மை தான் இளவரசி. அதனால் தான் இளவரசர் அவளிடத்தில் மயங்கி கிடக்கிறார்."

"அவர் ஒன்றும் மயங்கி கிடக்கவில்லை... அந்த மந்திர பொருளால் அவர் மயக்கப்பட்டு இருக்கிறார்"

ஆம் என்று தலையசைத்தாள் உமையாள்.

தன்மயாவை நோக்கி சென்ற அமுதன், அவள் தோள்களை பற்றி தூக்கி நிறுத்தினான். அவன் கண்களைப் பார்த்தபடி எழுந்து நின்றாள் தன்மயா. காஞ்சனமாலையும் உமையாளும் தங்கள் மூச்சை பிடித்துக் கொண்டு அவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவள் முகத்தை தன் கையில் ஏந்தி அவள் நெற்றியில் தன் இதழ் பதித்தான் அமுதன். மென்று விழுங்கியவாறு தன் கண்களை மூடினாள் தன்மயா. தற்கால ஆய்வின்படி நெற்றியில் வழங்கப்படும் முத்தம், மரியாதை நிமித்தம் வழங்கப்படுவது என்று அவள் படித்திருந்தாள். அது பற்றி அமுதனுக்கு தெரியாது தான்...! ஆனால், அவன் அந்த முத்தத்தை மரியாதை நிமித்தமாக தான் கொடுத்தான் என்று அவளுக்கு தெரியும்.

தன் பற்களை நறநறவென கடித்தாள் காஞ்சனமாலை. அவளை பரிதாபமாய் பார்த்தாள் உமையாள். அமுதன் வழங்கிய முத்தம் அவன் தன்மயாவின் மீது கொண்ட காதலை தெள்ளத் தெளிவாக விளக்கியது. தன்மயாவின் முகத்தை ஏறிட்ட அமுதன்,

"உன்னை சங்கடத்தில் ஆழ்த்துவதற்காக என்னை மன்னித்துவிடு, தன்மயா. நீ எனக்கு வேண்டும். அதை விரைவிலேயே நீ புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்" என்றான்.

தன்மயாவின் கண்கள் கலங்கின. கண்களை மூடி கண்ணீரை சிதறவிட்டாள் தன்மயா. அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை, அவள் முகத்தைப் பற்றி இருந்த தனது கட்டை விரல்களால் துடைத்து விட்டான் அமுதன்.

"எனக்கு அது வேண்டும்" என்றாள் காஞ்சனமாலை, உமையாளிடம் தன் பல்லை கடித்துக் கொண்டு.

"முத்தமா?"

அவள் தோளில் காஞ்சனமாலை ஒரு அடி போட, அந்த இடத்தை தேய்த்து விட்டாள் உமையாள்.

"அந்த மந்திர பொருள் எனக்கு வேண்டும்" என்று மணல் கடிகாரத்தை காட்டினாள்.

"அது உங்களுக்கு எதற்கு?"

"இளவரசர் கூறியதை நீ கேட்கவில்லையா? தன்மயா அவருடன் இருக்க அது தானே காரணம்...? அவளிடமிருந்து அதை நாம் கவர்ந்து விட்டால், அவர்கள் பிரிந்து விடுவார்கள்"

"என்ன ஒரு யோசனை...! நாம் அதை எப்படி கவர்ந்து வருவது?"

"நான் கூறியது படி நீ செய்தால், நாம் அதை கவர்ந்து விடலாம்"

"தங்களுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்"

அவளது திட்டத்தை கூறினாள் காஞ்சனமாலை. அதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டாள் உமையாள்.

"செல்..."

அந்த இடம் விட்டு அகன்றாள் உமையாள். தரைதளத்திற்கு வந்த அவள், அங்கு வைக்கப்பட்டிருந்த வெண்கலத்தால் ஆன பூச்சாடியை தள்ளிவிட்டு,

"ஐயோ கடவுளே...!" என்று கூச்சலிட்டாள்.

அந்த அலறல் சத்தம் கேட்ட அமுதனும், தன்மயாவும் திடுக்கிட்டார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட அவர்கள், எதைப் பற்றியும் யோசிக்காமல், அறையை விட்டு வெளியே ஓடினார்கள், மணல் கடிகாரத்தை அங்கேயே விட்டு...!

தன்மயாவின் அறைக்குள் நுழைந்த காஞ்சனமாலை, மணல் கடிகாரத்தை தன் கைகளால் தொடாமல், தன் முந்தானையால்  எடுத்துக்கொண்டாள். அதைப் பார்த்து அனல் கக்கிய அவள்,

"உன்னால் தான் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறார்களா? இனி எப்படி அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்று நான் பார்க்கிறேன்" என்றாள், அது தன்மயாவிடம் இருந்தால் மட்டும் தான் அவர்களால் பிரிய முடியும் என்ற உண்மை அறியாமல்.

அவளது முந்தானையில் அந்த மணல் கடிகாரத்தை வைத்து முடிச்சிட்டு கொண்டு, தரைதளத்திற்கு வந்தாள், உமையாள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று பார்க்க. கீழே விழுந்திருந்த அவளை தூக்கி விட்டாள் தன்மயா. அமுதனும் வேறு இரு காவலர்களும் அவர்களைப் பார்த்தபடி நின்றார்கள்.

காஞ்சனமாலையை பார்த்த உமையாள், *வேலை முடிந்து விட்டதா?* என்பது போல் கண்களால் கேட்க, தன் கண்களை இமைத்து, *முடிந்தது* என்றாள் காஞ்சனமாலை. தன் கால்களை உதறிக் கொண்டு,

"தங்களுக்கு மிக்க நன்றி!" என்றாள் உமையாள், தன்மயாவிடம்.

"இந்நேரத்தில் நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்றான் அமுதன் முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு.

"இளவரசி காஞ்சனமாலை பகலில் உறங்கி விட்டதால், அவருக்கு உறக்கம் வரவில்லை என்றார். அதனால் சற்று நேரம் தோட்டத்தில் உலவலாம் என்று வந்தார். நான் அவரை தேடிக் கொண்டு தான் வந்தேன், இளவரசே...!" என்றாள் உமையாள்.

சற்று நேரத்திற்கு முன் அவர்கள் இருவரும் ஒன்றாக சென்றதை பார்த்த காவலன், குழப்பத்துடன் முகத்தை சுருக்கினான்.

"உன்னால் நடக்க முடியுமா?" என்றாள் காஞ்சனா,  உமையாளிடம்.

"முடியும் இளவரசி...!" என்று மெதுவாய் நடக்க துவங்கினாள் உமையாள். காஞ்சனமாலையும் அவளுடன் சென்றாள்.

அமுதனும் தன்மயாவும், மீண்டும் தன்மயாவின் அறைக்கு வந்தார்கள். அங்கிருந்த தனது வாளை எடுத்துக்கொண்டு,

"நான் வருகிறேன்" என்றான் அமுதன்.

சரி என்று தலையசைத்த தன்மயா, மேசையை பார்க்க, அங்கு மணல் கடிகாரம் இல்லாதது கண்டு திகில் அடைந்தாள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro