31 உறுதிமொழி
31 உறுதிமொழி
திகைத்தாள் தன்மயா. அப்பாவிகளா? அவர்களா?
"சார், அவங்க அப்பாவிங்க ஒன்னும் கிடையாது. ஒரு பொண்ண ரேப் பண்ண ட்ரை பண்ணாங்க"
"அதுக்கு? நீங்க அவங்களை அடிப்பீங்களா? உங்களுக்கு யாரு அந்த உரிமையை கொடுத்தது, மேடம்? நீங்க உங்க இஷ்டத்துக்கு நடந்துக்க முடியாது. நீங்க போலீசை கூப்பிட்டு இருக்கணும்" என்று லாஜிக்கே இல்லாமல் பேசினார் அந்த ஆய்வாளர்.
"நீங்க வர்ற வரைக்கும் நாங்க காத்திருக்கணும்னு சொல்றீங்களா சார்?"
"இருந்து தான் ஆகணும். நாங்க தான் என்ன செய்யணும், செய்யக்கூடாதுன்னு முடிவு பண்ற அதிகாரம் உள்ளவங்க. ஆளாளுக்கு அவங்க இஷ்டத்துக்கு நடந்துகிட்டா, அப்புறம் நாங்க எதுக்கு இருக்கோம்?"
"நீங்க வர்றதுக்குள்ள அந்த பொண்ணை அவங்க ரேப் பண்ணி இருப்பாங்களே, சார்..."
"அவங்க அப்படிப்பட்ட பசங்க இல்ல. அந்த பொண்ணு தான் அவங்ககிட்ட வம்புக்கு வந்திருக்கா"
"சார், அவங்க அந்த பொண்ணை அறையிறதையும், அவ மேல பாயுறதையும் நாங்க பார்த்தோம்"
"மேடம், தேவையில்லாம பேசறத நிறுத்துங்க. அவங்களை அடிச்சவனை கூப்பிடுங்க"
அவர்கள் பேசுவதை கேட்ட அமுதன் வெளியே வந்தான்.
"இவர்கள் யார்?" என்றான் அவன்.
"காவல் வீரர்கள்" என்றாள் தன்மயா.
"இவர்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்?"
அவர்கள் தூய தமிழில் பேசியதை பார்த்து முகம் சுருக்கினார் ஆய்வாளர். அவனிடம் சென்ற தன்மயா,
"அந்த வாலிபர்களை தாக்கி காயப்படுத்தியதற்காக, இவர்கள் உங்களை சிறை பிடிக்க வந்திருக்கிறார்கள்" என்றாள் ரகசியமாய்.
"என்ன? என்னை சிறை பிடிக்கவா? அவர்கள் ஏதோ தவறாக புரிந்து கொண்டிருக்க வேண்டும்"
"இல்லை, அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்" என்றாள் தாழ்ந்த குரலில்.
"நீ என்ன கூறுகிறாய்?"
"அந்த வாலிபர்கள் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்க வேண்டும்"
"அதனால்?"
"அவர்கள் காவலர்களை விலைக்கு வாங்கி விட்டார்கள் என்று நினைக்கிறன்..."
"காவலர்களை விலைக்கு வாங்குவதா? சட்டம் அனைவருக்கும் ஒன்று தானே?"
"அது இங்கு வேலை செய்யாது"
"அப்படி என்றால் இப்போது என்ன நிகழும்?"
"அவர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்தி, உங்களை குற்றவாளியாக்க முயல்வார்கள்"
"என்ன கூறுகிறாய்?"
"நாம் இங்கிருந்து உடனடியாக புறப்பட்டு சோழ நாடு செல்ல வேண்டும்"
"என்னை கோழை போல் ஓட சொல்கிறாயா?"
"தங்கள் துணிச்சலால் இங்கு ஆக கூடியது எதுவும் இல்லை"
"அப்படி என்றால் அவர்கள் அனைவரின் தலையையும் நான் கொய்துவிட்டு வருகிறேன்" என்றான் கோபமாய்.
"அவர்களிடம் துப்பாக்கி இருக்கிறது. அவர்கள் உங்களை சுட்டு கொன்றுவிடுவார்கள்"
"துப்பாக்கி என்றால் என்ன?"
"சற்று முன் உங்களுக்கு நான் தளவாடங்கள் பற்றி கூறினேன் அல்லவா? அது போலத்தான் அதுவும். அது கண்ணிமைக்கும் நேரத்தில் உங்களை கொன்றுவிடும்"
அமுதன் ஏதோ சொல்ல முயல, ஆய்வாளரின் குரல் கேட்டு நின்றான்.
"மேடம், இங்க என்ன நடக்குது? இவன் என்ன பேசிகிட்டு இருக்கான்?" என்றார் அவர்.
தன்மயாவின் பாதற்றம் அதிகரித்தது.
"ஒன்னும் தெரியாத அப்பாவிகளை கொலை செய்ய பார்த்ததுக்காக, நாங்க இவனை அரெஸ்ட் பண்றோம்"
"என்னது? கொலை செய்ய பாத்தாரா? அது உண்மை இல்ல" என்றாள் தன்மயா.
"அந்த பசங்களோட அப்பா அம்மா கேஸ் கொடுத்திருக்காங்க"
"சார், அந்த சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் தான் ஆகுது. அதுக்குள்ள அவங்க எப்படி சார் கேஸ் கொடுப்பாங்க? அதுவும் அதுக்குள்ள நீங்க எப்படி சார் எங்களை தேடி கண்டுபிடிச்சீங்க?" என்றாள் பொறுமை இழந்து.
"நீங்க கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்ல. நீங்க ஏதாவது சொல்லணும்னா ஸ்டேஷனுக்கு வந்து சொல்லுங்க. இவனை நாங்க கூட்டிக்கிட்டு போறோம்"
அமுதனின் பின்கழுத்தை பற்றி இழுக்க, அவனை நோக்கி தன் கையை நீட்டினார் ஆய்வாளர் . தன்மயா அதிர்ந்தாள். அந்த ஆய்வாளரை பிடித்து தள்ளிய அவள், அமுதனை கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் வந்து, கதவை சாத்தி தாளிட்டாள்.
"தன்மயா, நீ என்ன செய்கிறாய்?" என்றான் அமுதன்
"இங்கு நடப்பவற்றின் தீவிரத்தை உங்களுக்கு விளக்க எனக்கு நேரமில்லை"
காவலர்கள் வீட்டின் கதவை தட்டினார்கள். கதவை திறக்க முயன்றான் அமுதன். எதைப் பற்றியும் யோசிக்காமல் மணல் கடிகாரத்தை வெளியே எடுத்தாள் தன்மயா. அப்பொழுது அமுதனின் பழைய உடைகள் வைக்கப்பட்டிருந்த பை அங்கு இருந்ததை கண்டாள். அதை எடுத்து அமுதனிடம் கொடுத்துவிட்டு, அவன் கரத்தை பற்றிக் கொண்டு,
"என்னை மீண்டும் சோழ நாட்டிற்கு அழைத்த செல்" என்று மணல் கடிகாரத்தை திருப்பினாள்.
அடுத்த நொடி, அவர்கள் திருமிழலை நாட்டில் இருந்த, தன்மயாவின் அறையில் தோன்றினார்கள்.
"நீ என்ன செய்து விட்டாய் தன்மயா? எதற்காக என்னை இங்கு அழைத்து வந்தாய்?"
"வேறு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் உங்கள் மதிப்பை இழப்பதை நான் பார்க்க வேண்டும் என்று கூறுகிறீர்களா?"
"நம்மால் அவர்களை சமாளித்திருக்க முடியும், தன்மயா"
"அது நிச்சயம் உங்களால் முடியாது. அங்கு உங்களுக்கு என்ன நிகழும் என்பது உங்களுக்கு புரியவில்லை. உங்களை சிறையில் அடைத்திருப்பார்கள்"
"சிறையிலா? ஏன்? நான் என்ன தவறு செய்தேன்?"
"இது தவறா, சரியா என்பது குறித்த விடயம் அல்ல. செல்வாக்கு மிகுந்தவர்கள் யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கி விடுவார்கள். உங்களிடம் பணம் இருந்தால், யார் வேண்டுமானாலும் உங்கள் பின்னால் வருவார்கள்"
"இது மிகவும் இழிவான செயல்"
"ஆம், ஆனால் அது தான் உண்மை"
"அவர்களை கொல்வதற்கு என்னை நீ அனுமதித்திருக்க வேண்டும். அதன் பிறகு நீ என்னை இங்கு அழைத்து வந்திருக்க வேண்டும்" என்றான் கோபாவேசமாய்.
"தங்களால் எத்தனை பேரை கொல்ல முடியும்? எங்கள் நாட்டில் பாதிக்கும் மேலானவர்கள் அப்படித்தானே இருக்கிறார்கள்...!"
"மீதம் இருக்கும் பாதிப்பேரே உன் நாட்டிற்கு போதுமானவர்கள். அப்படிப்பட்ட இழிவானவர்கள் எதற்காக உயிரோடு வாழ வேண்டும்? அந்த கேடு கெட்டவர்கள் ஒரு பெண்ணின் வாழ்வை சீரழிக்க முயன்றார்கள். அவர்களை தண்டித்ததற்காக காவலர்கள் என்னை சிறையில் அடைக்க பார்க்கிறார்கள்... என்ன நாடு அது...?"
தன்மயா அமைதியாய் நின்றாள்.
"அப்பொழுதே அவர்களின் தலையை நான் கொய்திருப்பேன். நீ என்னை தடுத்து அவர்களை ஓடவிட்டிருக்க கூடாது"
"நான் தங்களிடம் ஏற்கனவே கூறினேன். உங்கள் நாட்டில் இருப்பது ஒரு மதங்கன். ஆனால் எங்கள் நாட்டில் வீதிக்கு வீதி பல மதங்கன்கள் இருக்கிறார்கள். நாம் அனைவரையும் தீர்த்துகட்டி விட முடியாது. இந்த உலகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இப்படித்தான் இயங்கும்"
"எனக்கு இது பிடிக்கவில்லை"
"உங்களுக்கு பிடிக்காது என்று எனக்கு தெரியும். அதனால் தான் தாம் என்னுடன் வருவதை நாம் விரும்பவில்லை"
"நீ அங்கு திரும்பி செல்வதை நானும் விரும்பவில்லை..."
தன்மயா கண்களை மூடினாள்.
"உன் மனதை தொட்டு சொல், தன்மயா, உனக்கு உண்மையிலேயே எங்கள் காலகட்டத்தை விட உன் காலகட்டம் பிடித்திருக்கிறதா?"
அவள் என்ன பதில் கூற முடியும்? சொர்க்கத்தை விடுத்து நரகத்தின் மீது யாராவது ஆர்வம் கொள்வார்களா?
"இணை பிரபஞ்சத்தை பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. மறுபடியும் உன் காலத்திற்கு நீ செல்லப் போவதில்லை. அவ்வளவு தான்" என்றான் உறுதியாய்.
கட்டிலில் அமர்ந்து தன் தலையை பிடித்துக் கொண்டாள் தன்மயா. அவள் அருகில் அமர்ந்த அமுதன்,
"தன்மயா, நான் சொல்வதைக் கேள். நீ அங்கு திரும்பிச் செல்வதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அந்த நரகத்தில்... இல்லை இல்லை, அது நரகம் அல்ல. நரகத்தில் செய்யாத தவறுக்கு தண்டனைகள் விதிப்பதில்லை. அப்படிப்பட்ட ஒர் இடத்தில் உன்னால் எப்படி வாழ முடியும்?"
"எனக்கு அது பழகிவிட்டது அமுதே! என்னால் முடியும்"
"உனக்கு வேறு வாய்ப்பு இருக்கும் போது நீ எதற்காக அங்கு செல்ல வேண்டும்?"
"இது, நான் மட்டும் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. நான் சொல்வதை ஆலோசித்துப் பாருங்கள். வரலாறின் படி, நீங்கள் வேறு ஒரு இளவரசியை மணக்க வேண்டியவர். நான் உங்களை திருமணம் செய்து கொண்டால், வரலாறு மாறிவிடும். வர இருக்கும் சந்ததிக்கு அது குழப்பத்தை விளைவிக்கும்"
"தன்மயா, நீ என்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா இல்லையா என்பது பற்றி நான் இங்கு பேசவில்லை. நீ அங்கு திரும்பி செல்லக் கூடாது என்பதை பற்றி தான் பேசுகிறேன். என்னை மணந்து கொண்டு உன்னை இங்கு இருக்க சொல்லவில்லை. உன்னை அங்கு அனுப்பிவிட்டு என்னால் இங்கு நிம்மதியாய் இருக்க முடியாது என்கிறேன். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு இடத்திற்கு நான் உன்னை எப்படி அனுப்புவேன்? அங்கு நியாயம், நீதி என்பதே இல்லையே...! மக்களை காக்க வேண்டிய காவல் வீரர்கள் அவர்களுக்கு எதிராய் இருக்கிறார்கள். நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறீர்கள்? இப்படிப்பட்ட வாழ்க்கை உனக்கு மறுபடியும் வேண்டுமா?"
பதில் கூறவில்லை தன்மயா. அவளுக்கு தெரியும், நவீன யுகம் குறித்து அமுதன் கோபமாய் இருக்கிறான், உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறான், ஏமாற்றமும் அடைந்திருக்கிறான். அவள் என்ன கூறினாலும் அவன் ஏற்கப் போவதில்லை.
அவள் கையை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்ட அமுதன்,
"என் அனுமதியின்றி நீ மணல் கடிகாரத்தை பயன்படுத்த கூடாது..." என்றான்.
தன்மயா அதிர்ந்தாள்.
"நீ எங்கள் விருந்தினராய் இங்கு இருக்க வேண்டும் என்று என் தந்தை விரும்புகிறார். அவரது அழைப்பை ஏற்று இங்கு இருந்து எங்களை மேன்மைப்படுத்து... செய்வாயா?"
இயலாமையுடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் தன்மயா.
"நீ என்னை ஏமாற்ற மாட்டாய் என்று நம்புகிறேன்"
"நீங்கள் என்னை சங்கடத்திற்கு ஆளாக்குகிறீர்கள்"
"நீ உன் காலத்திற்கு சென்றால், காலம் முழுக்க சங்கடப்பட்டு கொண்டே வாழ நேரிடும்"
"நான் மறுக்கவில்லை. ஆனால் நான் சென்று தான் தீர வேண்டும். ஏனென்றால் இது நிலையானது அல்ல என்று எனக்கு தெரியும். நான் இங்கு ஒரு பயணியாக வந்தவள்... ஒரு விருந்தாளி. அரசு விருந்தாளியாக இருப்பதை நான் பெருமையாய் நினைக்கிறேன். நான் அதை நிச்சயம் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நிரந்தரமாய் இங்கே தங்கி விடுவதும், தங்களை திருமணம் செய்து கொள்வதும் நிச்சயம் இயலாது. தாம் எதார்த்தத்தை ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும்"
"முடியாது... நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். வாகைவேந்தன் எப்பொழுதும் தோல்வியை ஒப்புக்கொள்பவன் அல்ல...! அதிலும் உன் விடயத்தில் நிச்சயமாய் அல்ல. நான் உன்னை காதலிக்கிறேன். உனக்கு மாற்று என்பதே கிடையாது. ஏனென்றால், உன்னை போல் யாரும் இல்லை. உன்னிடம் இருக்கும் நற்குணங்களை நான் பெரிதும் விரும்புகிறேன். என்னால் எப்படி உன்னை மறக்க முடியும்?"
"இந்த துயரம் நிலையானது அல்ல. தாம் ஒரு நல்ல பெண்ணை சந்தித்தால், என்னை மறந்து விடுவீர்கள்... அது மட்டுமல்ல..."
"போதும் நிறுத்து தன்மயா... இப்படி பேசாதே... நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? உடையை மாற்றுவது போல் நான் என் மனதை மாற்றிக் கொள்வேன் என்று நினைக்கிறாயா? நான் அந்த முறையில் வளர்க்கப்படவில்லை. உன் காலத்தை சேர்ந்தவர்களுக்கு வேண்டுமானால் அது எளிமையாக இருக்கலாம். எங்களுக்கு அது உயிர் வாங்கும் விடயமாகும்..."
தன்மயாவுக்கு என்ன கூறுவது என்றே புரியவில்லை.
"நான் உன் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளேன். உன் திறமைகளை ரசிக்கிறேன். உன் குண நலன்களை பெரிதும் மதிக்கிறேன். என் மீது அக்கறை இல்லாதது போல் காட்டிக் கொள்ள முயலாதே. பொன்னியின் சிக்கலை அறிந்து, அதை தீர்ப்பதற்காக நீ தவியாய் தவித்ததை நான் கண்டேன். வழியில் சந்தித்த ஒரு பெண்ணுக்காக உன்னால் அவ்வளவு கவலைப்பட முடிகிறது என்றால், என்னை விட்டு பிரிந்து சென்றால், எனக்காக நீ உன் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவாய் என்று எனக்கு தெரியும். நான் என் மதிப்பை இழப்பதைக் காண முடியாமல் என்னை உன் காலத்திலிருந்து அழைத்து வந்தாய்...! என் மீது உனக்கு இருந்த அன்பு தான் அதற்கு காரணம் என்பது எனக்கு தெரியும்...! இல்லை என்று மறுப்பாயா நீ?"
தன்மயாவின் கண்கள் குளமாயின அவளுக்கு என்ன கூறுவது என்று புரியவில்லை. அவன் கூறுவது அத்தனையும் உண்மையாய் இருக்கும்போது அவளால் என்ன கூற முடியும்?
"உன் மதியூகத்தால் என்னை ஏமாற்றிவிட்டு இங்கிருந்து உன்னால் சென்று விட இயலும். ஆனால் நான் உன்னை மறந்து விடுவேன் என்றோ, என்னுடைய வாழ்வை வேறொரு பெண்ணுடன் அமைத்துக் கொள்வேன் என்றோ மட்டும் நினைத்து விடாதே. அது நிச்சயம் நடக்காது"
"அமுதே, தயவு செய்து நான் கூறுவதை கேளுங்கள்"
"முடியாது..." தன் ஆபரணங்களோடு கட்டிலின் மீது அவன் அவிழ்த்து வைத்த தன் வாளை எடுத்த அமுதன், அதை உயர்த்தினான்.
"என் வாளின் மீது உறுதி இட்டு கூறுகிறேன், நான் உன்னை தவிர வேறொரு பெண்ணை மணந்து கொள்ள மாட்டேன்" என்றான் தன்மயாவை கூர்மையாய் பார்த்தவாறு.
நடுநடுங்கி நின்றாள் தன்மயா. வாளின் மீது உறுதி கூறுவது என்றால் என்னவென்று அவளுக்கு தெரியும். வீரர்கள் தங்கள் உயிரை விடுவார்களே தவிர, அவர்கள் தங்கள் வாளின் மீது ஏற்ற உறுதி மொழியை கைவிட மாட்டார்கள். கட்டிலில் இருந்து எழுந்து நின்ற தன்மயா,
"என்ன காரியம் செய்து விட்டீர்கள், இளவரசே...! நான் சொல்வதை ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?" என்றாள் பரிதவிப்புடன்.
"நீ தான் புரிந்து கொள்ள மறுக்கிறாய், தன்மயா. உன் காலம், நான் வாழ்வதற்கு ஏற்ற இடம் அல்ல என்று நீ கருதுகிறாய். அப்படி இருக்கும் பொழுது நீ மட்டும் ஏன் அங்கு செல்ல வேண்டும்? நான் எப்படி உன்னை அங்கு அனுப்பி வைப்பேன்? ஏன் நீ இங்கு என்னுடனேயே இருந்து விடக்கூடாது?"
தன்மயா ஏதோ கூற முயல, அவளை தடுத்த அமுதன்,
"இங்கிருக்க உனக்கு பிடிக்கவில்லை என்று மட்டும் கூற நினைக்காதே. நீ இங்கிருக்கும் ஒவ்வொரு மணித்துளியையும் எவ்வளவு களிப்புடன் கழிக்கிறாய் என்பதை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்"
வேதனையுடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் தன்மயா. இதனால் தான் அவனை நவீன காலகட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று அவள் எண்ணினாள். அதன் தன்மைகளைப் பற்றி அறிந்து கொண்டால், அவன் நிச்சயம் அவளை செல்ல விட மாட்டான் என்று அவளுக்கு தெரியும்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro