30 அப்பாவிகள்
30 அப்பாவிகள்
ஓடும் ஆட்டோவில் இருந்து அமுதன் கீழே குதித்து ஓடியதை பார்த்து, தன்மயாவைவிட அதிகமாய் அதிர்ச்சி அடைந்தது ஆட்டோ ஓட்டுநர் தான். பிரேக்கை அழுத்தி அவர் ஆட்டோவை பத்தடி தள்ளி நிறுத்தினார்.
"ஏம்மா, சொன்னா வண்டிய நிறுத்த மாட்டனா? ஓட்ற ஆட்டோல இருந்து குதிச்சு ஓடுறாரு... கால் கீலு ஒடஞ்சா என்னமா ஆவுறது?"
"நீங்க அவரைப் பத்தி கவலைப்படாதீங்க, அண்ணா. அவரு ஓடுற குதிரையிலிருந்தே சாதாரணமா கீழே குதிப்பாரு..."
"ஓட்ற குதிரையில இருந்தா? அவருக்கு குதிரை கூட ஓட்ட தெரியுமா?"
"குதிரையெல்லாம் அவர் சொல்ற பேச்சை அப்படியே கேட்கும்"
"பெரிய ஆளா இருப்பாரு போல இருக்கு..."
"கற்பனை பண்ணி பாக்க முடியாத அளவுக்கு அவர் பெரிய ஆளு..." என்றபடி ஆட்டோவை விட்டு கீழே இறங்கிய தன்மயா, அமுதனுக்கு பின்னால் ஓடினாள். ஓட்டுனரும் அவளை பின்தொடர்ந்தார்.
"அவரு பெரிய ஆளா இருந்தா, எதுக்கு ஆட்டோவுல வராரு?" என்றார் அந்த ஆட்டோ ஓட்டுநர் அவள் பின்னால் ஓடியபடி.
"அவர் காரு பிரேக் டவுன் ஆயிடுச்சு"
இதற்குள் அந்த வாலிபர்களை நெருங்கி விட்ட அமுதன், அந்தப் பெண்ணின் மீது பாய்ந்தவனின் சட்டை காலரைப் பற்றி பின்னால் இழுத்தான். திடீரென்று அங்கு தோன்றிய ஒரு அந்நியனை பார்த்த வாலிபர்கள் அதிர்ந்தார்கள். அவர்கள் அமுதனை பின்னால் இழுக்க முயன்று தோற்றார்கள். அது அவ்வளவு சுலபமான காரியமாய் இல்லை. அந்த வாலிபனை ஓங்கி குத்திய அமுதன், அந்த பெண்ணிடமிருந்து அவனை பின்னால் இழுத்தான். அவர்கள் அனைவரும் சேர்ந்து அமுதனை கெட்டியாய் பிடித்துக் கொள்ள, ஒருவன் அமுதனின் வயிற்றில் குத்தினான். குத்தியவன் தன் கையை உதறியபடி பின்னோக்கி நகர்ந்தான், தன் கையில் வலியை உணர்ந்ததால். அவன் அமுதனை விசித்திரமாய் பார்த்தான். நம்ப முடியாத அளவிற்கு உறுதியுடன் இருந்த அவனது உடல், அவனுக்கு அதிர்ச்சி அளித்தது. அவன் இளவரசன் வாகைவேந்தன்...! வெல்ல முடியாதவன் என்று பெயர் எடுத்தவன்...! ஒவ்வொரு நாளும் மல்யுத்த பயிற்சி செய்து வந்தவன் ஆயிற்றே...!
"மச்சான், அவன் மெட்டல் டிரஸ் போட்டு இருக்கான்டா" என்றான் அந்த வாலிபன்.
இதற்கிடையில்,
அந்த பெண்ணிடம் ஓடிய தன்மயா, அவளை தரையில் இருந்து தூக்கி அமர வைத்தாள். அந்த ஆட்டோ ஓட்டுனர் அவளுக்கு உதவி செய்தார்.
"அண்ணா, உங்க கிட்ட தண்ணி இருக்கா?" என்றாள் தன்மயா.
தன் ஆட்டோவை நோக்கி ஓடிய அந்த ஆட்டோ ஓட்டுநர், தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். அந்தப் பெண்ணை தண்ணீர் குடிக்க செய்தாள் தன்மயா.
அந்த இளைஞர்களுக்கு மத்தியில், பம்பரமாய் சுழன்று கொண்டிருந்த அமுதனை பார்த்தாள் தன்மயா. சோழ நாட்டில் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற யவனனை சாட்டையால் அவன் வெளுத்து வாங்கியதை தான் அவள் ஏற்கனவே பார்த்திருக்கிறாளே...! அதை இங்கே செய்து முடிக்கும் வரை அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று எண்ணினாள் அவள்.
"டேய் மச்சான், இவன கண்ட்ரோல் பண்ணவே முடியல டா" என்று கத்தினான் ஒருவன்.
"அவன் ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கான்டா..."
"நான் தான் சொன்னேனே, அவன் மெட்டல் டிரஸ் போட்டிருக்கான்னு"
"நம்ம எல்லாரும் சேர்ந்து மொத்தமா ஒரே நேரத்துல அவன் மேல பாயணும், டா"
"வாங்க, டா"
அனைவரும் அமுதன் மீது பாய்ந்து, அவனது சட்டையை பற்றி இழுத்தார்கள், அவன் உலோகத்தலான உடையை அணிந்து கொண்டிருக்கிறானோ என்ற சந்தேகம் ஏற்பட்டதால். அமுதன் அதைப்பற்றி கவலைப்படவில்லை. தான் அணிந்திருந்த சட்டையை அவனே கழட்டி வீசிவிட்டு, உலோகம் போன்ற வெற்றுடலுடன் நின்றான். அவனது கோபம் தெறிக்கும் கண்களை பார்த்த அந்த வாலிபர்கள் மிரண்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் பந்தாடினான் அமுதன். அவர்களது வாய் உலர்ந்து போனது. கத்தினார்கள், கெஞ்சினார்கள், மிரட்டினார்கள், ஆனால் அமுதனிடம் ஒன்றும் பலிக்கவில்லை. அவனிடம் கருணை என்பதே இல்லை. அவர்கள் கருணைக்கு தகுதியானவர்கள் என்று அவன் எண்ணவில்லை.
திடீரென்று அவர்களில் ஒருவன் ஓடிச்சென்று தங்கள் காரில் இருந்து ஒரு நீண்ட பட்டாக்கத்தியை எடுத்தான். அதை பார்த்த தன்மயா தன் தலையில் அடித்துக் கொண்டாள்.
"அட கிறுக்கு பயலே...! அவரைப் பத்தி தெரியாம கத்தியை வேற எடுத்துக்கிட்டு போறானே...! அவரு அஞ்சாறு கிலோ இருக்கிற வாளையே மேல் துண்டு போல அனாவசியமா சுத்துவாரு... இந்த மட பய கத்தியை வெளியே எடுத்து, எமனை பந்தி போட்டு கூப்பிடுறானே..." என்று புலம்பினாள் தன்மயா.
தன்மயா எதிர்பார்த்தது போலவே அந்த நீண்ட கத்தியை பார்த்து உற்சாகமானான் அமுதன். கத்தியை பிடித்தவனின் விலாவில் ஓங்கி ஒரு குத்து விட, கத்தியை பிடித்திருந்த அவனது கரம் தளர்ந்து, கத்தியை கீழே விட்டான். அது தரையை தொடும் முன், அதை பற்றிய அமுதன், அந்த கத்தியால் அவர்கள் உடலில் கோடுகள் வரைய துவங்கினான். அமுதனுக்கு முன்னால் அவர்களால் தாக்குப் பிடிக்கவே முடியவில்லை. அவர்கள் தெறித்து ஓட துவங்கினார்கள். ஆனால் அமுதன் அவர்களை விட்டு விடுவதாய் இல்லை. அவர்களை துரத்திக் கொண்டு ஓடினான். அவன் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினாள் தன்மயா.
"அமுதே! விட்டு விடுங்கள்... போதும் நிறுத்துங்கள்..."
"நான் எப்படி நிறுத்துவது? இந்தப் பெண்ணை மானபங்கம் செய்ய அவர்கள் முயன்றார்கள்... அதுவும் ஒருவன் அல்ல, அறுவர்...!"
"நாம் அவர்களைப் பற்றி போலீஸிடம் புகார் அளிக்கலாம்"
"போலீஸ் என்றால்?"
"இந்நாட்டின் காவலர்கள்... சோழநாட்டின் வீரர்கள் போல"
அமுதனின் முகத்தில் நிம்மதி படர்ந்தது. நவீன யுகத்தின் காவலர்களும் அவன் நாட்டைச் சேர்ந்த காவலர்கள் போலவே இருப்பார்கள் என்று எண்ணினான் அவன்.
கீழே இருந்த அவனது சட்டையை எடுத்து உதறிவிட்டு அவனிடம் கொடுத்தாள் தன்மயா. அவன் கையில் இருந்த கத்தியை வாங்கி, தன் கைகுட்டையால் அதன் கைப்பிடியை துடைத்தாள். அவள் அப்படி செய்வதை விசித்திரமாய் பார்த்தான் அவன்.
"நீ என்ன செய்கிறாய்?" என்றான்.
"இதைப் பற்றி பிறகு கூறுகிறேன்" என்று அந்த கத்தியை தூக்கி எறிந்தாள் அவள்.
அவர்கள் அந்தப் பெண்ணிடம் வந்தார்கள்.
"ரொம்ப தேங்க்ஸ், அண்ணா" என்றாள் அவள்.
அமுதன் தன்மயாவை பார்க்க,
"அவள் தங்களுக்கு நன்றி கூறுகிறாள்" என்றாள் அவள் மெல்லிய குரலில்.
அந்தப் பெண்ணைப் பார்த்து தலையசைத்தான் அமுதன்.
"அவங்க யாரு? இங்க எதுக்கு வந்தீங்க?" என்றாள் தன்மயா.
"என்னோட வண்டி திடீர்னு நின்னுடுச்சு (என்றாள் சாலை ஓரத்தில் விழுந்து கிடந்த அவளது இருசக்கர வாகனத்தை காட்டி) கிக் ஸ்டார்ட் பண்றதுக்காக சென்டர் ஸ்டாண்ட் போட்டேன். அப்ப தான் இந்த பசங்க இங்க வந்தாங்க. நான் தனியா இருக்கிறதை பார்த்துட்டு என்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தாங்க"
"உங்க மொபைல்ல எஸ்ஓஎஸ் ஆப் இல்லையா?" என்றாள் தன்மயா.
அந்தப் பெண் இல்லை என்று தலையசைத்தாள்.
"அதை டவுன்லோட் பண்ணுங்க. உங்களை மாதிரி தனியா போறவங்களுக்கு அது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். அதை வச்சு நீங்க ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பிட்டா போதும், நீங்க இருக்கிற இடத்தை ட்ராக் பண்ணி போலீஸ் வந்துடுவாங்க" என்றாள்.
"உடனே செய்றேங்க" என்றாள் அந்த பெண்.
கீழே கிடந்த அவள் வண்டியை நோக்கி சென்ற ஆட்டோ ஓட்டுநர், சென்டர் ஸ்டாண்ட் போட்டு அதை உதைத்தார். மூன்றாவது உதையில் அது ஸ்டார்ட் ஆனது.
"தேங்க்ஸ், அண்ணா" என்றாள் அந்தப் பெண்.
தலையசைத்தார் அந்த ஆட்டோ ஓட்டுநர். இருசக்கர வாகனத்தில் அமர்ந்த அந்தப் பெண்.
"ரொம்ப தேங்க்ஸ்ங்க. உங்களை மறக்கவே மாட்டேன்" என்று கூறிவிட்டு அந்த இடம் விட்டு சென்றாள்.
அமுதனுடன் ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள் தன்மயா. மீண்டும் அவர்களது பயணம் தொடங்கியது. வீடு வந்து சேர்ந்த பிறகு ஆட்டோவுக்கான பணத்தை செலுத்தினாள் தன்மயா. உள்ளே வந்து, வழக்கம் போல் பூத்தொட்டியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து கதவை திறந்தாள்.
"இளவரசர் வாகைவேந்தர் வரவேண்டும்" என்றாள் அவள்.
இறுக்கமான முகத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான் அமுதன். அவன் இன்னும் அந்த சம்பவத்திலிருந்து இருந்து வெளியே வரவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள்.
"இன்னும் சினம் தணியவில்லையா?"
"எனக்கு அப்படிப்பட்டவர்களை பிடிப்பதில்லை"
"இதற்காகத்தான் தங்களை இங்கு அழைத்து வர வேண்டாம் என்று நான் நினைத்தேன்"
உள்ளே நுழைந்த அமுதன் அந்த வீடு பராமரிக்கப்படாமல் இருந்ததை கவனித்தான்.
"நீ இங்கு தங்குவதில்லையா?" என்றான்.
"இல்லை. நான் ஒரு பயணி என்பதால், இங்கு தங்குவதில்லை. பெண்கள் விடுதியில் தங்குகிறேன்"
"பெண்கள் விடுதி என்றால்?"
"ஊர் விட்டு ஊர் வந்து வேலை செய்யும் பெண்கள் தங்குவதற்காக ஏற்படுத்தப்படும் இடம்"
"பெண்கள் வேலைக்கு செல்வார்களா?"
ஆமாம் என்று தலையசைத்தாள்.
"எப்படிப்பட்ட வேலை?"
"ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் பெண்களும் செய்வார்கள்"
வியப்புடன் புருவம் உயர்த்திய அமுதன், அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பெட்டியை பார்த்தான்.
"இது என்ன?" என்றான்.
"இது தொலைக்காட்சி" என்று அதன் ஸ்வீட்ச்சை ஆன் செய்தாள்.
"இது தான் பொத்தான்... இதை அழுத்தினால் இந்த தொலைக்காட்சி வேலை செய்யும்" அதை ஆன் செய்தாள்.
அதில் படம் ஓடியது. தொலைகாட்சியின் அருகில் ஓடிச் சென்ற அமுதன், அதன் பின்னால் பார்த்தான்.
"என்ன பார்க்கிறீர்கள்?"
"இந்த பெட்டிக்குள் மனிதர்கள் இருக்கிறார்களா?" என்றான்.
"இல்லை" என்றாள் தன்மயா சிரித்தபடி.
"மந்திர பேழை போல் தான் இதுவும் வேலை செய்கிறது. நான் உங்களை படம் பிடித்த போது நீங்கள் என் கைபேசியில் உங்களை காணவில்லையா? அப்படித்தான் இதுவும்"
"நம் இருவரையும் இணைத்து உன் கைபேசி படம் பிடிக்குமா?"
"ஓ பிடிக்குமே..."
அவள் கைபேசியை எடுத்து அவர்கள் இருவரையும் சேர்த்து ஒரு செல்ஃபி எடுத்தாள் தன்மயா.
"நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்" என்று புன்னகைத்தான் அந்த புகைப்படத்தை பார்த்தபடி அமுதன்.
"நீங்களும் எங்கள் காலகட்டத்தை சேர்ந்தவர் போலவே இருக்கிறீர்கள், இளவரசே!" என்று சிரித்தாள் தன்மயா.
தொலைக்காட்சியை நோக்கி திரும்பிய அமுதன்,
"இந்தப் பெட்டிக்குள் நாம் என்ன வேண்டுமானாலும் காண முடியுமா?" என்றான்.
ஆம் என்று, சேனலை மாற்றினாள் தன்மயா.
"இது என்ன?" என்றான்.
"இதன் பெயர் ரிமோட். இதன் மூலமாக நாம் விருப்பமான படங்களை மாற்றிக் கொள்ள முடியும்"
அவளிடம் இருந்து அதை வாங்கி, ஒவ்வொரு சேனலாக மாற்றி பார்த்துக் கொண்டே வந்தான் அமுதன். அவனது கரம் அப்படியே நின்றது,
"பீம் பீம் பீம்... சோட்டா பீம், சோட்டா பீம்..." என்ற பாட்டு கேட்டபோது.
குழப்பத்துடன் தன்மயாவை ஏறிட்டான் அமுதன். அவள் கண்களை மூடி உதடு கடித்தாள்.
"சோட்டா பீம் தான் உங்கள் நாட்டின் தளபதி என்று கூறினாய் அல்லவா?"
அசடு வழிந்தபடி தலையை சொறிந்தாள் தன்மயா.
மங்கள் சிங்கை, பீம் துவைத்தெடுப்பதை பார்த்தான் அமுதன்.
"இவன் தான் உங்கள் தளபதியா?"
"என்னை மன்னித்து விடுங்கள் அமுதே! இது ஒரு பொம்மை சித்திரம். உங்களை திடீரென்று சந்தித்தபோது, நீங்கள் எங்கள் நாட்டை பற்றி கேள்வி எழுப்பினீர்கள். என்ன கூறுவது என்று தெரியாமல், மனதில் தோன்றியதை கூறிவிட்டேன்..."
தன் கைகளை கட்டிக்கொண்டு கண்களை சுருக்கி அவளைப் பார்த்த அமுதன்,
"வேறு என்ன பொய்கள் எல்லாம் நீ கூறியிருக்கிறாய்?" என்றான்.
"விவேக்... டோரா..."
"அப்படி என்றால் விவேக் என்பவர் துறவி இல்லையா?"
"இல்லை. அவர் ஒரு நடிகர். டோரா என்பவள் பீமை போலவே ஒரு பொம்மை சித்திரம். என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்களிடம் பொய் உரைத்துவிட்டேன். ஆனால் அதை வேண்டும் என்று செய்யவில்லை."
"போகட்டும்... ஆனால் இதற்குப் பிறகு என்னிடம் எதற்கும் பொய் கூறாதே" என்று தன் கழுத்தில் இருந்த வியர்வையை துடைத்தான்.
"நான் மின்விசிறியை ஓட விடுகிறேன்"
"மின்விசிறியா? அது எங்கே இருக்கிறது?"
தன் விரலை மேல் நோக்கி காட்டிய தன்மயா, அதன் ஸ்வீட்ச்சை ஆன் செய்தாள்.
"அது சுற்றுகிறது" என்றான் திகைப்புடன்.
"ஆம், அது இந்த அறைக்கு தேவையான காற்றை தரும்"
"இதுவும் விஞ்ஞானம் தானா?"
"ஆமாம்"
"இந்த காற்று வெப்பத்துடன் வீசுகிறது"
"ஏனென்றால், நாங்கள் அனைத்து மரங்களையும் வெட்டி விட்டோம்"
"எதற்காக?"
"கட்டிடங்களை எழுப்ப..."
"ஓ...! எனக்கு கொஞ்சம் தண்ணீர் தருவாயா?"
அப்பொழுது தான் அங்கு தண்ணீர் இல்லை என்ற ஞாபகம் வந்தது தன்மயாவுக்கு.
"கொஞ்சம் பொறுங்கள் நான் அதை வாங்கி வருகிறேன்"
"எங்கு செல்கிறாய்?"
"அருகில் இருக்கும் அங்காடிக்கு சென்று தண்ணீர் வாங்கி வருகிறேன்"
"என்ன்னன? தண்ணீரை விலை கொடுத்து வாங்க போகிறாயா?தண்ணீரை விலைக்கா வாங்குகிறீர்கள்?" என்றான் நம்ப முடியாமல்.
"ஆம், இப்பொழுதெல்லாம் தண்ணீரை கூட விற்கிறார்கள்"
"நம்பவே முடியவில்லை..."
"ஒரு ஆய்வின் படி, மூன்றாம் உலக போர் தோன்றுமானால், அது தண்ணீருக்காக தான் தோன்றும் என்று கூறி இருக்கிறது"
"இந்த காலகட்டத்தில் கூட போர்கள் நிகழ்கிறதா?"
"அது உங்கள் காலகட்டத்தில் இருந்ததை விட மிகவும் கோரமாய் இருக்கும்"
"அப்படி என்றால்?"
"தங்களிடம் இருக்கும் தளவாடங்களைக் கொண்டு மற்ற நாட்டை தாக்கிக் கொள்வார்கள்"
"எப்படிப்பட்ட தளவாடங்கள்?"
"வெடி பொருட்கள்" என்ற தன்மயா, தனது கைபேசியை எடுத்து, இரண்டாம் உலக போரின் போது, ஹீரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்ட காணொளியை எடுத்து அவனிடம் காட்டினாள். அதைப் பார்த்து அதிர்ந்தான் அமுதன். அதன் விளைவுகளை பார்த்தபோது அவன் இதயத்தை யாரோ பிழிவது போல் இருந்தது.
"இது என்ன மாதிரியான போர் முறை? மன்னர்கள் தானே போர் புரிய வேண்டும்? எதற்காக மக்களை இவர்கள் துன்புறுத்துகிறார்கள்?" என்றான் வேதனையுடன்.
"இக்காலக் கட்டத்தில் போர்கள் இப்படித்தான் நிகழ்கிறது"
"போர் அறம் என்பதே இவர்களுக்கு கிடையாதா?"
இல்லை என்று தலையசைத்த தன்மயாவை கவலையுடன் ஏறிட்ட அமுதன்,
"மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக ஏற்படும் என்றாய். அப்படி என்றால், ஏற்கனவே இரண்டு உலகப்போர்கள் நிகழ்ந்திருக்கிறதா?"
"ஆம், அவை உலகத்தின் வரலாறையே தலைகீழாய் புரட்டிப்போட்ட போர்கள். இப்பொழுது தாங்கள் கண்ட காணொளி, இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட விளைவு தான்."
"அதைப்பற்றி எனக்கு விளக்கமாக கூறு"
"அதை அவ்வளவு சாதாரணமாய் கூறி விட முடியாது"
"எவ்வளவு நேரம் ஆனாலும் நான் கேட்க தயாராக இருக்கிறேன்"
அவன் ஆர்வத்தை பார்த்து புன்னகை புரிந்தாள் தன்மயா. அப்பொழுது யாரோ அவர்கள் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. தன்மயா குழப்பமுற்றாள். அவர்கள் வீட்டின் கதவை யார் தட்டுவது? யோசித்தபடி சென்று கதவை திறந்தவள், அங்கு அவர்களை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனருடன் காவலர்கள் நின்று கொண்டிருப்பதை பார்த்தாள்.
"எங்க அவன்?" என்றார் ஆய்வாளர்.
"யாரு?" என்றாள் தன்மயா.
"ஆறு அப்பாவிகளை கொல்லப் பார்த்தானே... அவன் தான்"
தன்மயா அதிர்ச்சியுற்றாள். அப்பாவிகளா? இவ்வளவு விரைவாக அந்த ஆட்டோ ஓட்டுநரை வைத்து அவர்களது இருப்பிடத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால், அடிபட்ட அந்த வாலிபர்கள் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதை அவள் புரிந்து கொண்டாள். அதனால் தான் இவ்வளவு வேகமாய் காவலர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். தாங்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பது அவளுக்கு புரிந்து போனது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro