25 சான்று
25 சான்று
அமுதனின் காதலை குறித்து யோசித்துக் கொண்டிருந்தாள் தன்மயா. காதலிக்கும் பெண்ணிடம் ரோஜா பூவை நீட்டி காதலிக்கிறேன் என்று கூறுவது போன்ற சாதாரண காதல் அல்ல அது. இளவரசன் வாகைவேந்தனின் காதல்...! அவன் அதில் தீவிரமாய் இருப்பதாய் தெரிகிறது. இப்பொழுது அவள் என்ன செய்யப் போகிறாள்? அவனிடம் டைம் டிராவல், பேரலல் யூனிவர்ஸ் பற்றி எல்லாம் எப்படி சொல்லி புரிய வைக்கப் போகிறாள்? அவன் அவளை நம்புவானா? ஒருவேளை நம்பாவிட்டால்? அவளுக்கு குழப்பமாய் இருந்தது. முதலில் மதங்கனின் பிரச்சனையை தீர்ப்பது என்று முடிவுக்கு வந்தாள். அதன் பிறகு அமுதனிடம் சொல்லி புரிய வைக்க முயற்சிக்கலாம். அதற்கு தான் அவளுக்கு இரண்டு நாள் அவகாசம் இருக்கிறதே...! எப்படியாவது அவனிடம் பேசி புரிய வைத்துவிட வேண்டும்.
மறுப்புறம் அவளது முடிவை நினைத்து எந்த கவலையும் கொள்ளவில்லை அமுதன். அவள் தன் காதலை நிச்சயம் ஏற்றுக் கொள்வாள் என்று ஆணித்தரமாய் நம்பினான் அவன். அவள் நிச்சயம் தனக்கு ஏமாற்றம் அளிக்க மாட்டாள் என்பதில் அவனுக்கு சிறிதும் ஐயமில்லை...!
மறுநாள்
தன்மயாவின் அறைக்கு வந்தான் அமுதன். அவனை பார்த்து வழக்கம் போல் புன்னகை புரிந்தாள் அவள். அவளது நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அது அமுதனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
"நீ தயாரா, தன்மயா?"
"ஆம்"
"நீ எதற்காகவும் பதற்றப்பட வேண்டிய தேவையில்லை. நான் உன்னுடன் இருக்கும் வரை, உன்னை எந்த இடரும் அணுக விட மாட்டேன்"
"எனக்கு தெரியும்" என்றாள் தன் சிறிய கைப்பையை எடுத்துக்கொண்டு.
"வா போகலாம்"
அவர்கள் அரசவையை நோக்கி நடந்தார்கள். அமுதன் அரசவைக்குள் நுழைந்தபோது, அவன் போரில் புரிந்த சாகசங்களையும், அடைந்த வெற்றிகளையும் கூறி அவன் வரவேற்கப்பட்டான். அனைவரும் ஏற்கனவே அரசவைக்கு வந்துவிட்டிருந்தார்கள், மதங்கனையும் குருநாதரையும் சேர்த்து...! அரசனும் அரசியும் மட்டும் தான் வரவேண்டியவர்கள்.
எழிலரசியும் மற்ற இளவரசிகளுடன் மேல்மாடத்தில் அமர்ந்திருந்தாள். பணிப்பெண்களும் அவர்களுக்கு பின்னால் நின்றிருந்தார்கள். கிட்டத்தட்ட அரண்மனையில் இருந்த அனைத்து பெண்களும் அங்கு கூடியிருந்தார்கள், தன்மயா என்ன செய்து காட்டப் போகிறாள் என்று காண. அவர்களது முகங்களில் ஆவல் பளிச்சிட்டது, அவர்களுக்கு தன்மயாவை பற்றி தெரியும் என்பதால். அவள் செய்யும் அனைத்தும் புதுமையாகவே இருக்கும் அல்லவா! அவள் அவர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாள்.
தன்னை நோக்கி கையசைத்த பெண்களைப் பார்த்து புன்னகை புரிந்தாள் தன்மயா. தன்னை விழுங்குபவன் போல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த மதங்கனை பார்த்து வெட்கத்துடன் புன்னகை புரிந்தாள் அவள். அது மதங்கனின் முகத்தில் பெருமிதத்துடன் கூடிய புன்னகையை வரவழைத்தது. ஆனால், அது அமுதனுக்கு எரிச்சலை தந்தது என்று கூறத் தேவையில்லை.
"என்னுடன் வந்து, உன் இருக்கையில் அமர்ந்து கொள்" என்றான் அவன்.
அவனுடன் சென்றாள் தன்மயா. தனக்கு அடுத்ததாக போடப்பட்டிருந்த இருக்கையில் அவளை அமர வைத்தான் அமுதன்.
"மதங்கனை பார்த்து புன்னகைக்க வேண்டிய தேவை என்ன?" என்றான் அமுதன் கோபத்துடன்.
"புன்னகைப்பதால் என்ன சிக்கல் ஏற்பட்டுவிடப் போகிறது?" என்றாள் மேலும் அவனுக்கு எரிச்சலூட்டி.
அரசரும் அரசியும் அரசவைக்குள் வந்தார்கள். மரியாதை நிமித்தம், அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்றார்கள். அனைவரையும் அமரச் சொல்லி சைகை செய்துவிட்டு, அரசி அன்பிற்கினியாளுடன் சிம்மாசனத்தில் அமர்ந்தார் ஒப்பிலாசேயோன். அமுதனை ஏறிட்ட அவர்,
"வாகைவேந்தா, எதற்காக இந்த அரசவையை கூட்டி இருக்கிறாய்?" என்றார்.
தன் இருக்கையை விட்டு எழுந்து நின்றான் அமுதன்.
"மன்னவா! நமது நாடு சப்தமின்றி பெரும் பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அது நம் நாட்டின் நற்பெயர் குறித்து கேள்வி எழுப்புகிறது. நம் நாட்டின் பெண்கள், கீழ் மகன்களால் துன்புறுத்தப்படுகிறார்கள். பல சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் தோல்வியுறுகிறார்கள். இந்த கொடுமை நம் நாட்டின் எல்லைப்புற ஊர்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கொடூர மனம் படைத்தவர்களிடமிருந்து நம் நாட்டின் பெண்களை காக்க, எனக்கு ஒரு யோசனை தோன்றியது, அப்படிப்பட்ட ஒருவனுடன் என் விருந்தினர் சண்டையிடுவதை கண்ட போது...! அவர் பயன்படுத்திய அந்த வித்தையின் பெயர் கராத்தே என்பதாகும். நம் நாட்டுப் பெண்களுக்கு அந்த வித்தையை பயிற்றுவிக்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். அதன் மூலம் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்" என்றான் அமுதன்.
"இதன் மூலம், நம் நாட்டு பெண்களை காக்க வேண்டும் என்ற உமது கடமையிலிருந்து நீர் தப்பிக்க பார்க்கிறீரா இளவரசே?" என்றார் குருநாதர் எகதாளமாய்.
"இந்நாட்டு பெண்களுக்கு துணிச்சலை போதிக்க வேண்டியதும் இளவரசனின் கடமை தான். தொட்டதற்கெல்லாம் வேறு ஒருவரின் உதவியை நாடி நிற்காமல், அவர்களுக்கு நம்பிக்கை அளித்து, துணிவூட்ட வேண்டியது தான் நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் என்று கருதுகிறேன்"
"இயல்பிலேயே மென்மையான பெண்கள், எப்படி தனித்து போராடுவார்கள்?" என்றார் அமைச்சர் ஒருவர்.
"அவர்கள் மென்மையானவர்களாய் இருக்கும் வரை அவர்கள் போராட மாட்டார்கள். அதனால் தான் அவர்களுக்கு இப்படிப்பட்ட வித்தைகளை கற்றுத் தர வேண்டும் என்கிறேன்."
மேல்மாடத்தில் அமர்ந்திருந்த பெண்களை பார்த்த அமுதன்,
"உங்களுக்கு சண்டையிடுவதில் விருப்பம் இல்லையா?" என்றான்.
"நாங்கள் ஒவ்வொரு நாளும் சண்டையிட்டு கொண்டு தானே இருக்கிறோம், இளவரசே!" என்றாள் தாமரை.
"ஆம் இளவரசே! நேற்று கூட அவள் இன்பவல்லியுடன் சண்டையிடும் போது அவளை கால்வாயில் முக்கி எடுத்து விட்டாள்" என்றாள் எழிலரசி, அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்து.
"உங்களுக்கு இந்த வித்தையை கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா?" என்றான் அமுதன்.
"ஆம், இருக்கிறது" என்றார்கள் அனைவரும்.
"அது எப்படிப்பட்ட வித்தை என்பதை நாங்கள் காணலாமா?" என்றார் அரசர்.
தன்மயாவை ஏறிட்ட அமுதன்,
"அதை செய்து காட்டுகிறாயா, தன்மயா?" என்றான்.
சரி என்று தலையசைத்த தன்மயா, அந்த மிகப்பெரிய அரசவையின் மத்தியில் வந்து நின்றாள். அவள் அரசரைப் பார்த்து தலை வணங்க, அவரும் தலைவணங்கி அதை ஏற்றார்.
"இவளை பார்த்தாள், ஒரு அறையை கூட தாங்க மாட்டாள் போலிருக்கிறதே...!" என்றார் ஒரு அமைச்சர் எகத்தாளமாய்.
அந்த அரங்கம் சிரிப்பொலியால் நிரம்பியது. ஆனால், யாரும் எதிர்பாராத வண்ணம்,
"முடிந்தால் அறைந்து பாருங்கள்" என்று சவால் விட்டாள் தன்மயா.
பெருமையுடன் புன்னகைத்தான் அமுதன்.
"வாருங்கள்... வந்து அறைந்து பாருங்கள்" என்று அரைக்கூவல் விடுத்தாள் தன்மயா.
"போகட்டும்... நீர் எமது விருந்தாளி...!" என்றார் அந்த அமைச்சர்.
"தாம் அதைப்பற்றி கவலை கொள்ள வேண்டாம். நீர் அறைந்தாலும் நான் அழுது விட மாட்டேன்" என்று அரசரைப் பார்த்த தன்மயா,
"அவரை வந்து என்னை அறைய சொல்லுங்கள், அரசே!" என்றாள்.
"செல்லுங்கள் கார்க்கோடகரே...!" என்று ஆணையிட்டார் அரசர்.
தன்மயாவை நோக்கிச் சென்ற கார்க்கோடகன், அவளை அறைய தன் கரத்தை உயர்த்தினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் தரையில் விழுந்து கிடக்க, அவர் நெஞ்சின் மீது, தன் வலது முழங்காலை ஊன்றி நின்றாள் தன்மயா. வெகு சாதாரண *கட்டா*வை பயன்படுத்தி தான் அதை அவள் செய்தாள். அந்த அரசவை முழுவதும் கரவொலியால் நிரம்பியது.
"வேறு யாராவது முயற்சித்து பார்க்கிறீர்களா?" என்று தன் கண்களை ஓட விட்டாள்.
அனைவரும் அரசரை ஏறிட்டார்கள்.
"நான் தங்கள் அனைவருக்கும் இசைவளிக்கிறேன்...! நீங்கள் அவரை தாக்கலாம்" என்றார் அரசர்.
அங்கு வேல் தாங்கி காவல் புரிந்து கொண்டிருந்த வீரன் ஒருவன், அந்த வேலால் தன்மயாவை தாக்க முயன்றான். ஒரு சிறு நுட்பத்தை பயன்படுத்தி, அந்த வேலை அவன் கையில் இருந்து பிடுங்கி, அவன் நெஞ்சுக்கு குறி வைத்தாள்.
"ஆகா... ஆகா..." என பல குரல்கள் எழுந்தன.
அந்த வேலை தன் கையில் பற்றிக்கொண்டு தலைநிமிர்ந்து நின்றாள் தன்மயா.
"அருமை...! மிக அருமை...! இப்படி ஒரு திறமை வாய்ந்த பெண்ணை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை" என்று அவளை புகழ்ந்தார் அரசர்.
திகில் அடைந்து அமர்ந்திருந்த மதங்கனை பார்த்து புருவம் உயர்த்தி புன்னகைத்தாள் தன்மயா. அவளைக் கவர்ந்து சென்றுவிடலாம் என்று அவர்கள் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்களே! நடப்பதை பார்க்கும்போது, அவளை கவர்ந்து செல்வது அவ்வளவு சாதாரணமான விடயமாய் தெரியவில்லை...! விட்டால் அவள் அவர்களது தோலை உரித்து விடுவாள் போலிருக்கிறது. அவனை பதற்றம் ஆட்கொண்டது. ஏனென்றால் எந்த காரணத்திற்காகவும் இப்படிப்பட்ட ஒரு பெண்ணை தவறவிட அவன் தயாராக இல்லை. குருநாதரின் அறிவுரையை கேட்டுக் கொண்டிருந்தால், அவள் நிச்சயம் தனக்கு கிடைக்க மாட்டாள் என்பதை புரிந்து கொண்டான் மதங்கன்.
"உனக்கு என்ன வேண்டும்? நீ என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்" என்றார் அரசர்.
அவள் தன்னை திரும்பி பார்க்க மாட்டாளா என்ற எதிர்பார்ப்புடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் அமுதன். அவள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீக்கச் செய்யும் படி அவள் கேட்க வேண்டும் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் தன்மயா அவனை திரும்பி பார்க்கவில்லை. அது அவனுக்கு ஏமாற்றத்தை அளித்தது. மேலும் அவனுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில்,
"எனக்கு எதுவும் வேண்டாம் அரசே!" என்றாள் தன்மயா.
"உனக்கு ஒன்றும் வேண்டாமா?" என்றார் அரசர். அவரும் கூட ஏமாற்றமடைந்ததாய் தான் தெரிந்தது. அவரும் கூட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தன்மயா இந்த வழக்கிலிருந்து வெளியேறி விடுவாள் என்று எதிர்பார்த்திருக்கலாம்.
"நான் தங்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன். அதற்கு தங்களது இசைவு எனக்கு கிடைக்குமா?" என்றாள் தன்மயா, தன்மையாக.
"நீ என்ன வேண்டுமானாலும் கூறலாம். என்ன கூற போகிறாய்?" என்றார் எதைப் பற்றியும் யோசிக்காமல்.
"எங்கள் நாட்டில் விவேக் என்று ஒரு துறவி இருந்தார்...! பல கருத்துக்களை சொன்னதால் அவர் கருத்து கந்தசாமி என்று அன்பாக அழைக்கப்பட்டார்...! அவர் கூறிய பல கருத்துக்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன..."
"அப்படியா அவை என்ன கருத்துக்கள்?"
"இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்..."
"அப்படி என்றால்?"
"நாம் இறக்கும் வரை தான் நமக்கு மரியாதை. நாம் இறந்து விட்டால் அடுத்த நாள் பாலை ஊற்றி நம்மை இந்த உலகம் மறந்து விடும்...! அதனால் வாழும் வரை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் அடுத்தவரை கெடுக்காமலும் வாழ்ந்து விட்டுப் போ என்றார்"
"அடடா...!"
சிரித்து விடாமல் தலையசைத்தாள் தன்மயா.
"வேறு என்ன கூறியிருக்கிறார்?"
"மற்றவரின் பேச்சைக் கேட்டு கெட்டுப் போகாதே, பெற்றவரின் பேச்சைக் கேட்டு, வாழ்வில் முன்னேறு"
"அருமை, அருமை...!"
"வீட்டிற்கு ஒரு மரம் வளர்... அனைவரையும் சமமாய் நடத்து... பெண்களுக்கு கல்வியை போதி... என பல அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்"
அரசவையில் மிகுந்த கரவோலி எழுந்தது, முக்கியமாய் பெண்கள் பக்கம் இருந்து.
"அவரது மறைவுக்கு முன், அவரை சந்தித்து, அவரிடம் ஆசி பெற்றேன். அப்போது அவர் எனக்கு ஒரு மந்திர பேழையை வழங்கினார்"
"மந்திரப் பேழையா?"
"ஆம்... அந்த மந்திர பேழையின் ஆயுள் வெகு சொற்ப காலம் தான் என்றும், அதன் வாழ்நாள் முடிவதற்கு முன்பாக அதைப் பற்றி நான் யாரிடமாவது கூற வேண்டும் என்றும் கூறினார். அதனால் அதைப் பற்றி நான் தங்களிடம் கூற நினைத்தேன். ஏனென்றால் அதன் ஆயுட்காலம் நாளையோடு முடிவடைகிறது"
"என்ன பேழை அது?"
தன் இருக்கையை நோக்கி சென்ற அவள், தன் கைப்பையை எடுத்து, அதிலிருந்து தனது கைபேசியை வெளியில் எடுத்தாள். தன் கையை உயர்த்தி அதை அனைவரும் பார்க்கும்படி காட்டினாள். அதில் வீடியோ மோடை ஆன் செய்து, படம் பிடிக்கத் துவங்கினாள்.
"அந்த பேழையில் என்ன இருக்கிறது?" என்றார் அரசர்.
அவர் பேசியதை படம் பிடித்து நிறுத்திவிட்டு, அதை மீண்டும் ஓட விட்டாள்.
அந்த பேழையில் என்ன இருக்கிறது? என்று அரசர் கேட்டது அந்த திரையில் தோன்றியதை பார்த்து அனைவரும் வியந்தார்கள்.
"இந்த பேழை என்னைக் கூட காட்டுமா?" என்றார் அரசியார் ஆவலாய்.
அதையும் படம் பிடித்து ஓட விட்டாள்.
இந்த பேழை என்னைக் கூட காட்டுமா? என்று தான் கூறியதை பார்த்த அரசி அன்பிற்கினியாள், வெட்கத்துடன் தன் முகத்தை மூடிக்கொண்டார்.
கைபேசியை அமுதனை நோக்கி திருப்பினாள் தன்மயா. அவன் மலைப்புடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
"இதைப் பற்றி நீ என்னிடம் ஏன் கூறவில்லை?" என்றான். அதையும் படம் பிடித்து ஓட விட்டாள்.
இதைப் பற்றி நீ ஏன் என்னிடம் கூறவில்லை? என்றான் அமுதன், அந்த கைபேசியின் திரையில்.
அந்த அரசவை முழுவதும் முணுமுணுப்புகள் எழுந்தன. மந்திர பேழையை எண்ணி மக்கள் வியந்தனர். அதன் ஆயுள் முடியப்போகிறதே என்று வருந்தினர்.
"இது நாம் கூறும் அனைத்தையும் திரும்ப கூறுமா?" என்றார் அரசர்.
"ஆம் அரசே, அது அனைத்தையும் திரும்ப கூறும்"
"இது மிகவும் வியப்புக்குரிய பேழை. இதை தமக்களித்த அந்த துறவி மிகவும் உன்னதமான மனிதராய் இருக்க வேண்டும்"
"தாம் கூறுவது மிகச் சரி. அவர் மிகவும் உன்னதமான மனிதர்" பல பொய்களை கூறி வந்த தன்மயா, இந்த முறை கூறியது உண்மையைத் தான். தன்னால் இயன்ற நல்லதை செய்ய வேண்டும் என்று நினைத்த, மறைந்த நடிகர் விவேக் உண்மையிலேயே உன்னதமான மனிதர் தானே!
"அரசே, நேற்று இரவு, நான் இந்த மந்திர பேழையில் சிலவற்றை பதிவு செய்தேன்" என்றாள் தன்மயா, அமுதனை பார்த்தபடி. இப்போது அவனுக்கு புரிந்து விட்டது.
அக்கால மனிதர்களுக்கு எப்படி சொன்னால் விளங்கும் என்று தன்மயாவுக்கு புரிந்திருந்தது. அது ஒரு கைபேசி என்று கூறினால் அவர்கள் நிச்சயம் நம்ப மாட்டார்கள் என்று அவளுக்கு தெரியும். அதனால் அவர்கள் வழியிலேயே சென்று காய்களை நகர்த்திவிட்டாள்.
"என்ன பதிவு செய்தாய்?"
முதல் நாள் இரவு அவள் பதிவு செய்த காணொளியை ஓட விட்டாள்.
{"நான் கேள்விப்பட்டது உண்மையா?" என்றார் குருநாதர்.
"தாம் என்ன கேள்விப்பட்டீர்கள் குருநாதா?" என்றான் மதங்கன்.
"நீ அந்த அயல் நாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா?"
"ஆம் குருநாதா. எனக்கு அவளை மிகவும் பிடித்திருக்கிறது"
"அவளை உனக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக, அவளை மணந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?"
"அவள் ஒரு அரசு விருந்தாளியாக இருக்கும் பட்சத்தில், நான் வேறு என்ன செய்ய முடியும்?"
"நீ அவள் மீது குற்றம் சாட்டியிருக்கிறாய். வாகைவேந்தனும் தனது பதவியை துறப்பதாய் சூளுறைத்திருக்கிறான்...! இதைத் விட நமக்கு வேறு என்ன வேண்டும்? இதற்காகத்தானே நாம் வெகு நாளாய் காத்திருந்தோம்? வெண்ணெய் திரண்டு வரும் போது ஏன் பானையை உடைக்க பார்க்கிறாய்? இதை அப்படியே விட்டுவிடு. நான் ஓப்பிலா சேயோனின் மனதை மாற்றி, அவளை நாடு கடத்த செய்கிறேன். அவள் இந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பின், நீ அவளை அபகரித்துக் கொள். ஒரு பெண் அழகாய் இருக்கிறாள் என்பதற்காக, மன்னனாகும் வாய்ப்பை நழுவ விடப் போகிறாயா? அவள் வேவுக்காரி இல்லை என்பதை மெய்பிக்காமல் போனால், வாகைவேந்தனே அவனது பதவியை துறந்து விடுவான். நிச்சயம் அவனால் அவள் வேவுக்காரி அல்ல என்பதை மெய்பிக்க முடியாது. நமக்கு அது தெரியும். பிறகு வாரிசற்ற இந்த நாட்டிற்கு நீ அரசனாவாய். நான் அதை நிகழ்த்தி காட்டுகிறேன்"
"தாம் கூறுவது உண்மை... தாம் அதை நிச்சயம் செய்து காட்டுவீர்"
"நீ புரிந்து கொள்ள வேண்டியது அவ்வளவே தான். அவள் நாடு கடத்தப்பட்ட பின், அவளை உன்னுடையவளாக்கிக் கொள்"}
அனைவரது கண்களும், மதங்கனும் குருநாதரும் அமர்ந்திருந்த திசையை நோக்கி கோபத்துடன் திரும்பின. அமுதனோ பெருமையுடன் புன்னகைத்தான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro