2 மணல் கடிகாரம்
2 மணல் கடிகாரம்
தன் கையில் இருந்த மணல் கடிகாரத்தை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு நின்றாள் தன்மயா. தம்பிரான் தாத்தா கூறிய மணல் கடிகாரம் இது தானா? அவளுக்கு ஆர்வம் கொப்பளித்தது. அவள் கையில் இருக்கும் அந்த பொருள், ஒரு டைம் மெஷின் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. அதை உடனடியாக சோதித்து பார்த்தாக வேண்டும் என்ற அவளது ஆர்வம் கரை கடந்து கொண்டிருந்தது.
அவளுக்கும் அவளது தாத்தாவிற்கும் இடையில் நடந்த உரையாடல் அவள் ஞாபகத்திற்கு வந்தது. அவர் அவளை ஒரு கேள்வி கேட்டார், *ஒருவேளை உன்னால் கடந்த கால நிகழ்வு ஒன்றை மாற்ற முடிந்தால், நீ என்ன செய்வாய்?* என்பது தான் அந்த கேள்வி. அப்பொழுது அவள் சின்ன பெண் என்பதால் அவளுக்கு அதற்கு பதில் அளிக்க தெரியவில்லை. அதனால் அவளது தாத்தாவையே அந்த கேள்விக்கு பதில் அளிக்குமாறு கேட்டாள்.
"மகாத்மா காந்தியை சாகாமல் தடுத்துவிடுவேன்" என்றார் அவர்.
அதனால், அதையே சோதித்துப் பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தாள் அவள். ஆனால் அந்த மணல் கடிகாரத்தை எப்படி உபயோகப்படுத்துவது என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் எதையாவது செய்தாக வேண்டும்.
"மணல் கடிகாரமே, என்னை புது டெல்லியில் இருக்கும் பிர்லா ஹவுஸுக்கு, 1948 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், மாலை 5 மணிக்கு கொண்டு செல்" என்று கூறிவிட்டு அந்த மணல் கடிகாரத்தை இப்படியும் அப்படியும் இரண்டு முறை திருப்பினாள்.
கண்ணிமைக்கும் நேரத்தில், 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி புது டில்லியில் இருந்த பிர்லா ஹவுஸில் அவள் தோன்றினாள். மகாத்மா காந்தி மெல்ல நடந்து வருவதை அவள் கண்டாள். அங்கிருந்த மக்களின் மீது தன் கண்களை ஓட விட்டாள். அந்தக் கூட்டத்தில் நின்றிருந்த கோட்சேவின் மீது அவளது பார்வை பதிந்து நின்றது. காவலர்களை நோக்கி விரைந்த அவள்,
"அவர்கிட்ட கன் இருக்கு. அவரை செக் பண்ணுங்க" என்றாள் ஹிந்தியில்.
முற்றிலும் நவநாகரிக்க உடையணிந்து இருந்த அவளை கண்ட அந்த காவலர்,
"நீ யார்?" என்றார்.
"அது இப்போ முக்கியம் இல்ல. அவனைப் பிடிங்க. இல்லனா அவன் காந்தியை கொன்னுடுவான்" என்று அவள் கத்த, அங்கிருந்த அனைவரது கவனமும் அவள் பக்கம் திரும்பியது.
கோட்சே அங்கிருந்து ஓட முயன்றான். காவலர்கள் அவனை சுற்றி வளைத்து சோதித்ததில் அவனிடமிருந்த துப்பாக்கி பறிக்கப்பட்டது. அவனை அங்கிருந்து கொண்டு சென்றார்கள். காவலர்கள் தன்மயாவை தேடிய போது, அவள் அங்கே இல்லை. காந்தியை காப்பாற்றி விட்ட மகிழ்ச்சியோடு மீண்டும் அந்த மணல் கடிகாரத்தை திருப்பி, நிகழ்காலத்திற்கு சென்று விட்டிருந்தாள் தன்மயா.
மீண்டும் தன் வீட்டில் தோன்றிய அவள், தனது கைபேசியை எடுத்து, காந்தியின் மரணம் குறித்து கூகுளில் தேடினாள். அவரது மரண தேதியில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் கடந்த காலத்திற்கு சென்று, கோட்சே காந்தி சுடாமல் தடுத்துவிட்டாள். ஆனாலும் ஏன் எதுவும் மாறவில்லை? அவளுக்கு குழப்பமாக இருந்தது. என்ன டைம் மெஷின் இது?
தனது டெடிபியர் பொம்மையில் இருந்த பஞ்சு அனைத்தையும் வெளியே இழுத்தாள். அதில் ஒரு கையடக்க டைரி இருந்தது. அதை எடுத்து அதில் எழுதி இருப்பது என்ன என்று படித்துப் பார்த்தாள். அது கல்வெட்டு மொழியில் இருந்தது. சந்தேகம் இல்லாமல், அது மணல் கடிகாரத்தை பற்றிய குறிப்புகள் அடங்கிய டைரி தான். அதைப் படித்தவள் ஆச்சரியம் அடைந்தாள்.
*அதை பயன்படுத்தி கடந்த காலத்திற்கு மட்டும் தான் செல்ல முடியும். எதிர்காலத்திற்கு செல்ல முடியாது*
*கடந்த காலத்திற்கு செல்லும் போது, அந்த காலத்தில் வாழ்ந்த மக்களுடன் கலந்து பழக முடியும்*
*ஆனால் நம்மால் எதையும் மாற்ற முடியாது. நாம் அங்கு ஏற்படுத்தும் மாற்றம், நாம் அங்கு இருக்கும் வரை மட்டும் தான் நிலைக்கும். நாம் அங்கிருந்து கிளம்பியவுடன் அனைத்தும் பழைய நிலைக்கு திரும்பிவிடும்*
*மணல் கடிகாரத்தை திருப்பி, எப்பொழுது வேண்டுமானாலும் நாம் நிகழ்காலத்திற்கு திரும்பலாம்*
*நிகழ் காலத்திற்கு திரும்பும் போது, எந்த இடத்தில் இருந்து மறைந்தோமோ, அதே இடத்தில் மீண்டும் தோன்றுவோம்*
*ஒருவேளை, டைம் டிராவல் செய்யும் ஒருவர், கடந்த காலத்திலேயே தங்க நேரிட்டால், அது ஒரு *இணை பிரபஞ்சத்தை* (Parallel Universe) உருவாக்கும். அது இயற்கைக்கு எதிரானது*
முகம் சுருக்கினாள் தன்மயா. இது என்ன ரகத்தை சார்ந்த டைம் மெஷின்? இதை பயன்படுத்தி எதையுமே மாற்ற முடியாது என்றால், எதற்காக மக்கள் இதற்கு பின்னால் அலைகிறார்கள்? இதை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்? கடந்த காலத்திற்கு சென்று, சுற்றி பார்த்துவிட்டு வரலாம். அவ்வளவு தான். அவளைப் போன்ற ஆய்வாளருக்கு அது பயனுள்ளதாக இருக்குமே தவிர, மற்றவர்களுக்கு அதனால் எந்த பயனும் இல்லை.
அவளுக்கு ஏதோ உறுத்தியது. இதனால் எந்தப் பயனும் இல்லை என்றால், எதற்காக அவளை துரத்துகிறார்கள்? எதற்காக தம்பிரானை கடத்தினார்கள்? அவள் எதையாவது தவற விடுகிறாளா? இருக்கலாம்...!
மறுநாள் தம்பிரானை சென்று சந்திப்பது என்று முடிவு செய்தாள் தன்மயா. மணல் கடிகாரம் பற்றிய அவளது சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்ள வேண்டும். அவருக்கு அதைப் பற்றி தெரிந்திருக்கலாம். அல்லது, அது எதற்காக பயன்படுகிறது என்பதாவது தெரிந்திருக்கலாம். அதை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு தன் விடுதிக்கு திரும்பினாள்.
அன்று முழுவதும் அவளுக்கு தூக்கமே வரவில்லை. அவளது எண்ணம் முழுவதும் அந்த மணல் கடிகாரத்தின் மீது குவிந்திருந்தது. கடந்த காலத்தை மாற்ற முடியும் என்பது எவ்வளவு அழகான விஷயம்...! அவளால் அதை மாற்ற முடியும் என்றால், அது எவ்வளவு பெரிய சாதனையாக இருந்திருக்கும்...!
அப்பொழுது அவளது மனதில் ஒரு உண்மை உரைத்தது. அவளிடம் அந்த மணல் கடிகாரம் கிடைத்த போது, அவள் காந்தியின் மரணத்தை தடுக்க நினைத்தாள். ஒருவேளை, இந்த மணல் கடிகாரம் வேறு யாரிடமாவது கிடைத்திருந்தால், அவர்களும் அப்படியேவா நினைத்திருப்பார்கள்? அந்த மணல் கடிகாரம் தீயவர்களின் கையில் கிடைத்தால் என்ன ஆவது? அவர்களும் காந்தியின் மரணத்தை தடுக்கவா நினைப்பார்கள்? நிச்சயம் இல்லை...! இரண்டாம் உலகப்போரின் முடிவை மாற்றி, ஹிட்லரை காப்பாற்ற நினைக்கலாம்...! அல்லது, அதை பயன்படுத்தி மோசமான தீவிரவாத கும்பலுக்கு உதவ நினைக்கலாம்...! அவர்களுக்கு அதிபயங்கர ஆயுதங்களை வழங்கலாம்...! அது மக்களின் நிம்மதியைக் கெடுக்கலாம்... ஏன், பல நாடுகளின் நிம்மதியை கூட கெடுக்கலாம்...! அது மிகப்பெரிய பொருளாதார சீர்கேட்டை ஏற்படுத்தலாம்...! எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் அழிந்துவிட்ட டைனோசர் இனத்தை மீண்டும் கொண்டு வந்தால் என்ன ஆகும்?
தன் கையில் இருந்த மணல் கடிகாரத்தை பார்த்து மென்று விழுங்கினாள் தன்மயா. எவ்வளவு பேராபத்தான பொருள் இது...! நிச்சயம் இது எந்த சமூக விரோதியிடமும் சிக்கிவிடக்கூடாது. இது சரியான நபரிடம் சென்று சேர வேண்டும். அரசாங்கத்தால் இது பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு தம்பிரான் தாத்தா தான் உகந்தவர். அவரிடம் இதை சேர்த்து விட்டால், மற்றதை அவர் கவனித்துக் கொள்வார். மறுநாள் இதை அவரிடம் கொடுத்து விடுவது என்று முடிவு செய்தாள்.
மறுநாள் காலை
தம்பிரானின் அறிவுரைப்படி, சென்னையை விட்டு சில நாள் வெளியே செல்வது என்ற முடிவுக்கு வந்திருந்தாள் தன்மயா. கோவில் நகரமான கும்பகோணம் செல்லலாம் என்று முடிவு செய்தாள். ஒரு மாத காலம் அங்கு தங்கியிருந்து, அந்த நகரின் கோவில்கள் பற்றி ஒரு புத்தகம் வெளியிடலாம் என்பது அவளது எண்ணம். அதனால் தேவையான அனைத்து பொருட்களையும் தனது பேக் பேக்கில் நிரப்பிக் கொண்டாள். மொபைல் சார்ஜர், பவர் பேங்க், டாப்(tab), டார்ச் லைட், தேவையான துணிமணிகள்.
சார்ஜில் போடப்பட்டிருந்த அவளது கைபேசி, முழுதாய் சார்ஜ் ஆன பிறகு, அதை எடுத்து கொண்டாள். இறுதியாய், மணல் கடிகாரத்தை எடுத்து தனது கார்கோ பேண்ட் பாக்கெடில் வைத்துக் கொண்டாள். அப்பொழுது காலை மணி 8:30. தம்பிரானை சந்தித்து விட்டு அங்கிருந்து, கும்பகோணத்திற்கு செல்ல, பேருந்து நிலையம் செல்ல வேண்டும். அவளுக்கு ரயில் பயணம் மிகவும் பிடித்த ஒன்று. அவளுக்கு வசதியாய் இருந்ததோடு மட்டுமல்லாமல், அவள் படித்தவற்றை எல்லாம் அசைபோடும் வாய்ப்பை ரயில் பயணங்கள் அவளுக்கு வழங்கின. கும்பகோணத்திற்கு செல்லும் திட்டம் திடீரென்று ஏற்ப்பட்டதால், அவளால் ரயில் பயணத்தை பற்றி யோசிக்க முடியவில்லை. ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்து பெற வேண்டும் அல்லவா?
முதுகு புறம் மாட்டிக்கொள்ளும் வசதியுடைய அந்த மிகப்பெரிய பையை தன் தோளில் மாட்டிக் கொண்டாள். அவள் எங்கு சென்றாலும் அந்த ஒரு பை தான். தன் விடுதியை விட்டு வெளியேறினாள்.
தம்பிரான் இல்லம் செல்ல பேருந்து நிறுத்தம் வந்தாள். சித்திரை மாதம் ஆரம்பித்து விட்டதால், வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. காலை நேரத்திலேயே சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர்கள், ஒழுகிய வியர்வையை துடைத்த வண்ணம் இருந்தார்கள். பள்ளி மாணவர்கள் சிலர் தங்கள் பள்ளியின் பேருந்துக்காக காத்திருந்தார்கள்.
"நியூஸ் பாத்தியா? போன மாசம் ஓபன் பண்ண பிரிட்ஜ், நேத்து உடைஞ்சி போச்சு" என்றான் ஒரு மாணவன்.
"ஆமாம், போட்ட பணம் எல்லாம் வேஸ்ட்" என்றான் மற்றொருவன்.
"அந்த இன்ஜினியர், காசு கொடுத்து சீட்டு வாங்குனார் போலருக்கு" என்று சிரித்தான் மற்றொருவன்.
"இவங்க அப்படியே படிச்சு கட்டிட்டா மட்டும்..." என்று ஒரு குரல் கேட்க, அவர்கள் அந்த பக்கம் திரும்பி பார்த்தார்கள்.
எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவரின் குரல் அது.
"மாங்கு மாங்குன்னு நாலு வருஷம் படிச்சு, இடிஞ்சு போற பிரிட்ஜை காட்றானுங்க...! இதெல்லாம் ஒரு படிப்பா? அந்த காலத்துல கட்டினாங்க பாரு...! ராஜராஜ சோழன் கட்டின பெரிய கோவில் ஆயிரம் வருஷத்துக்கு பிறகும் இன்னிக்கும் கம்பீரமா நிக்குது...! இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி கரிகாலன் கட்டின கல்லணை, இன்னைக்கும் தன்னோட வேலையை செஞ்சுக்கிட்டு, இதை எப்படிடா கட்டினாங்கன்னு அவனவன் தலையை பிச்சுக்கிற அளவுக்கு ஆச்சரியமான தொழில்நுட்பத்தோட, இன்னைக்கும் சுத்துப்பட்டு கிராமங்களுக்கு தண்ணியை பிரிச்சி கொடுத்துக்கிட்டு இருக்கு. ஆனா, அதைப் பத்தியெல்லாம் நம்ம யாருமே பேசறதில்ல. சாஞ்சுகிட்டே போற கோபுரத்தை உலக அதிசயம்னு சொல்றாங்க. அசையாம நிக்கிற கோபுரம் எல்லாம் இவனுங்க கண்ணுக்கே தெரிய மாட்டேங்குது...!"
"அதுக்கப்புறம் நம்ம நாட்டுல எத்தனையோ அணையை கட்டியிருக்காங்களே..." என்றான் ஒரு மாணவன்.
"கட்டினாங்க... டெக்னாலஜியை வச்சு, மெஷினை வச்சு கட்டினாங்க. ஆனா அந்த காலத்துல என்ன இருந்தது? மழை பெய்யும் போது காவிரியோட ஓட்டத்தை பார்த்திருக்கீங்களா? இப்பவே அப்படி இருந்ததா, ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி, எந்த அணையும் கட்டப்படாம, முழு வேகத்தோட ஓடின காவேரி எவ்வளவு சீற்றமா இருந்திருக்கும்? அதுக்கு நடுவுல ஒரு அணை கட்டுறது எவ்வளவு பெரிய விஷயம்? அதைப் பத்தியெல்லாம் எப்பவாவது யாராவது யோசிச்சீங்களா? முழங்கால் அளவு ஆழம் இருக்கிற காவிரி ஆத்துல இறங்கி நின்னு பாருங்க, அதோட ஓட்டத்தோட வேகம் என்னென்னு உங்களுக்கு தெரியும். ஆளை தள்ளும். அப்படி இருக்கும்போது, அவ்வளவு வேகத்தோட ஓடுற ஒரு ஆத்துக்கு நடுவுல ஒரு அணை கட்டியிருக்கான்னா, அவன் எவ்வளவு திறமைசாலியா இருக்கணும்? அவங்க எவ்வளவு பெரிய டெக்னாலஜியை தெரிஞ்சி வச்சிருந்திருக்கணும்?"
அங்கிருந்த சிறுசுகள் வாயடைத்து நின்றனர்.
"அதையெல்லாம் போய் பாருங்க..." என்றபடி அங்கு வந்து நின்ற பேருந்தில் ஏறினார் அந்த பெரியவர்.
தன்மயா செல்ல வேண்டிய பேருந்து, கூட்டத்துடன் வந்ததால், பேருந்தில் செல்லும் எண்ணத்தை கைவிட்டு, ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறினாள்.
அந்த பெரியவர் கூறிய வார்த்தைகள் அவளது காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அவர் கூறியது எவ்வளவு உண்மை! அவ்வளவு வேகத்துடன் சுழன்று ஓடிய காவிரியின் நடுவில் ஒரு அணை கட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை தானே? அந்த காலகட்டத்தில் காவிரி எப்படி பாய்ந்திருக்கும்? அதைச் சுற்றி இருந்த கிராமங்கள் எவ்வளவு பசுமையாய் இருந்திருக்கும்...? அதையெல்லாம் பார்த்து ரசித்த அப்பொழுது வாழ்ந்த மக்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்! என்று எண்ணி திளைத்தாள்.
அவள் சேர வேண்டிய இடத்திற்கு வந்து ஆட்டோ நின்றவுடன், வெளியே ஏறிட்டாள். பி டபிள்யு டி காரர்கள் சாலையை தோண்டிக் கொண்டிருந்தார்கள்.
"இதுக்கு மேல ஆட்டோ போகாது, மா" என்றார் ஆட்டோ ஓட்டுநர்.
"பரவாயில்ல, நான் இங்கேயே இறங்கிக்குறேன்" என்று பணத்தைக் கொடுத்துவிட்டு தம்பிரான் இல்லம் நோக்கி நடந்தாள்.
தம்பிரானின் வீட்டுக்கு முப்பது அடிகள் இருந்தபோது, நேற்று அவளை துரத்திய அதே சிவப்பு சட்டை மனிதன் அங்கே நின்று அவரது வீட்டை நோட்டமிட்டு கொண்டிருப்பதை கண்டாள். அங்கிருந்த ஒரு காரின் பின்னால் ஒளிந்து கொண்டாள். அவன் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த மற்றொருவனுக்கு ஏதோ சமிங்கை செய்தான்.
பக்கத்தில் இருந்த சிறு தெருவுக்குள் நுழைந்து, பிரதான சாலையை நோக்கி நடந்தாள் தன்மயா. இப்பொழுது தம்பிரான் வீட்டுக்கு செல்வது புத்திசாலித்தனமான முடிவாகாது. அங்கு இருப்பவர்கள் நான்கு அல்லது ஐந்து பேர்களாக இருந்தால், அவர்களிடம் அவளால் சண்டையிட முடியும். ஆனால், நிறைய பேர் இருந்தால் என்ன செய்வது? நேற்றைப் போலவே அவர்கள் குளோரோஃபார்ம் வைத்து அவளை மயக்க நினைத்தால் என்ன செய்வது? அவர்களை எதிர்த்து நிற்பது புத்திசாலித்தனம் அல்ல. ஆனால் கும்பகோணம் செல்லும் முன், இந்த மணல் கடிகாரத்தை யாரிடமாவது ஒப்படைத்தே தீர வேண்டும். அதை கையில் வைத்துக்கொண்டு சுற்றித் திரிவது நல்லதல்ல. அப்போது அவளது மனதில் ஒருயோசனை தோன்றியது. அவளது தாத்தா வேலை செய்து கொண்டிருந்த தொல்லியல் துறையிடம் அதை ஒப்படைத்து விட்டால் என்ன? அது அவளுக்கு சிறந்ததாய் தோன்றியது.
மீண்டும் ஒரு ஆட்டோவில் ஏறி, தொல்லியல் துறை செயலகம் நோக்கி விரைந்தாள். செல்லும் வழியில், கல்லணை கட்டிய கரிகாலர் பற்றி கூகுளில் தேடினாள். கரிகாலரின் இயற்பெயர், திருமாவளவன். அவரது தந்தையின் பெயர், இளஞ்சேட்சென்னி. தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என புகழ் பெற்றவர் கரிகாலர். வாழ்ந்தது, இரண்டாம் நூற்றாண்டிற்கு பிறகு என்று ஊகிக்கப்படுகிறது. அவரது தலைநகரம், காவிரிப்பூம்பட்டினம் மற்றும் உறையூர். முற்கால சோழர்களில் மிக முக்கியமானவர். குறுநிலமாக இருந்த சோழ அரசை, பேரரசாக மாற்றியவர். அவரது தந்தை இளஞ்சேட்சென்னி, போருக்கான மிக அழகான தேர்களை பெற்றிருந்தார்.
இளஞ்சேட்சென்னியும் அவரது மனைவியும் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட பிறகு, பகைவர்களால் சிறைபிடிக்கப்பட்டார் திருமாவளவன். அவரை கொல்லும் நோக்கத்துடன் அவர் இருந்த சிறைக்கு அவர்கள் தீ வைத்த போது, காலில் பட்ட தீப்புண்ணுடன் அங்கிருந்து தப்பினார் திருமாவளவன். கருகிய காலுடன் உயிர் தப்பிய அவர், கரிகாலன் என்று அழைக்கப்பட்டார். இவ்வளவு தகவல்கள் தான் கூகுளில் கிடைத்தது.
கரிகாலரை பற்றிய தகவல்கள் முழுமையாய் இல்லாததை கண்டு வேதனை அடைந்தாள் தன்மயா. உலகத்திலேயே முதல் அணையை கட்டிய பெருவளத்தானின் தாய், மற்றும் மனைவியின் பெயர்கள் தெரியவில்லை. கரிகாலரின் பிறப்பும், இறப்பும், அறியப்படவில்லை என்பது அவளுக்கு ஏமாற்றம் அளித்தது. சாண்டில்யன் எழுதிய சரித்திர நாவலான *யவன ராணியை* அவள் படித்திருந்தாள். அந்த நாவலில் கரிகாலரும் இடம் பெற்றிருப்பார். ஆனால், அதிலும் இவ்வளவு விவரங்கள் தான் இருந்தன.
அதற்குள் அவள் தொல்லியல் துறை அலுவலகம் வந்து சேர்ந்தாள். விபரம் கேட்டறியும் பிரிவிற்கு வந்த அவள், அந்த ஊழியர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததால், காத்திருந்தாள்.
"எனக்கு புரியுது சார். நீங்க ருத்ரமூர்த்தி சாரோட பேரன்னு எனக்கு தெரியும்..."
அதைக் கேட்ட தன்மயா திடுக்கிட்டாள். ருத்ரமூர்த்தியா? அவரைப் பற்றி தம்பிரான் கூறி இருந்தாரே...! அவளது பெற்றோரின் மரணத்தில் ருத்ரமூர்த்திக்கு சம்பந்தம் இருக்கக்கூடும் என்று தனக்கு சந்தேகம் இருப்பதாய் அவர் கூறினாரே...! அவருடைய பேரன் தான் இப்பொழுது இந்த மனிதனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறானோ? அவர் பேசிய அடுத்த வார்த்தைகள், அவளுக்கு தூக்கி வாரி போட செய்தது.
"குலோத்துங்கனோட பேத்தியை எங்களால கண்டுபிடிக்க முடியல. அவங்க, அவங்களோட பழைய வீட்டுக்கு வர்றதில்ல. ஏதோ உமன்ஸ் ஹாஸ்டல்ல தான் தங்கி இருக்காங்களாம். அதோட மட்டும் இல்லாம, அவங்க ஆய்வு பயணம் செஞ்சுகிட்டு இருக்காங்க. அவங்க சென்னைக்கு வர்றது ரொம்ப அபூர்வமா இருக்கு. ஒருவேளை அவங்களை பத்தி எங்களுக்கு ஏதாவது விவரம் தெரிஞ்சா, நிச்சயம் உங்களுக்கு சொல்றேன்" என்று அழைப்பை துண்டித்த அவர், தன்மயாவை பார்த்து,
"சொல்லுங்க மேடம்" என்றார்.
ஒன்றும் இல்லை என்றபடி சங்கடத்துடன் தலையசைத்த அவள், அந்த இடம் விட்டு அகன்றாள், அந்த மனிதனை குழப்பத்தில் ஆழ்த்தி.
தொல்லியல் துறையை விட்டு அவள் வெளியே வந்த போது, அந்த சிவப்பு சட்டை மனிதன், அவள் முன்னாள் நின்றிருப்பதை பார்த்து திடுக்கிட்டாள். அவன் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலை எடுத்தான். அவன் தன்னை மயங்க செய்யப் போகிறான் என்பதை புரிந்து கொண்டாள் தன்மயா. அவளது மூளை பரபரவென வேலை செய்தது. தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த மணல் கடிகாரத்தை எடுத்த அவள்,
"கல்லணை கட்டுவதற்கு முன் இருந்த காவிரி கரைக்கு என்னை அழைத்துச் செல்" என்று அதை திருப்பினாள்.
அடுத்த நொடி, சலசலப்புடன் பாய்ந்து கொண்டிருந்த காவிரியின் கரையில் அவள் நின்றிருந்தாள்.
தொடரும்...
குறிப்பு : ஒரு மணல் கடிகாரத்தை திருப்பினால் கடந்த காலத்திற்கு சென்று விட முடியுமா என்ற கேள்வி ஏற்படுவது தவிர்க்க முடியாதது தான். கடந்த காலத்திற்கு செல்ல முடியும் என்பதே நடக்க முடியாத ஒன்று தானே...! சுவாரசியத்திற்காக அதையே நாம் நம்ப தயாராக இருக்கும்பொழுது, மணல் கடிகாரத்தையும் கொஞ்சம் முயற்சி செய்தால் நம்பலாம் தானே...! *அப்படி நடந்தால் என்னவாகும்?* என்ற கற்பனை தான் இந்த கதை...! நன்றி!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro