19 சூளுரை
19 சூளுரை
"நான் வரலாமா?" என்று கேட்டு, மிடுக்கோடு நின்றிருந்த காஞ்சனமாலையை, அனைவரும் பார்த்தபடி நின்றார்கள்.
தன்மயாவை பார்த்த எழிலரசி,
"இது என்ன புதுப்பழக்கம் காஞ்சனமாலை? நீ எப்பொழுதும் எங்களுடன் இணைந்து விளையாடியதில்லையே?" என்றாள்.
அது தன்மயாவின் விழிகளை விரிய செய்தது, அப்படியா? என்பது போல.
"இன்று நானும் தங்களுடன் விளையாட விரும்புகிறேன்" என்றாள் தன்மயாவை ஓர கண்ணால் பார்த்தபடி, காஞ்சனமாலை.
அவள் மனதில் இருக்கும் திட்டம் என்னவென்று புரிந்தது தன்மயாவுக்கு. மெத்தென்ற பூப்பந்தை பார்த்து நமுட்டு புன்னகை பூத்தாள் அவள்.
"சரி வாருங்கள் விளையாடலாம்."
ஏழு கற்களையும் அடுக்கினாள் ஒருத்தி. இரண்டு குழுக்கள் தயார். அந்தப் பந்தை காஞ்சனமாலையிடம் கொடுத்த எழிலரசி,
"நீயே துவங்கு" என்றாள்.
அதை மகிழ்வோடு பெற்றுக் கொண்டாள் அவள். அனைவரும் தங்கள் இடங்களில் நின்று கொண்டார்கள். அந்தப் பந்தை கற்களின் மீது எறிந்தாள் காஞ்சனமாலை. அந்த கற்கள் நாளா புறமும் சிதறியது. அனைத்து பெண்களும் அவற்றை மீண்டும் அடுக்க முனைந்தார்கள்... அப்படி அடுக்கும் பெண்களை, பந்தால் அடித்தார்கள் எதிர் குழுவை சேர்ந்தவர்கள். அந்த அடியை பற்றி தன்மயா கவலைப்படவே இல்லை. ஏனென்றால், அந்த பந்து பூவை போல தானே இருந்தது...! எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கற்களை அடுக்கினாள் தன்மயா. அவளை அடித்து விட வேண்டும் என்பதில் குறியாய் இருந்தாள் காஞ்சனமாலை. அடிபடுவதைப் பற்றி கவலைப்படா விட்டாலும், காஞ்சனமாலையின் அடி தன் மீது படாமல் பார்த்துக் கொண்டாள் தன்மயா. அவளை அடிக்க வேண்டும் என்ற காஞ்சனமாலையின் எண்ணத்தை ஈடேற விட, ஏனோ அவள் மனம் ஒப்பவில்லை. சில கணங்களில் அனைத்து கற்களையும் அடுக்கி விட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள் தன்மயா. அந்த இளவரசிகள் அணிந்திருந்தது போன்ற கலாச்சார உடையை அவள் அணிந்திருக்கவில்லை என்பது அவளுக்கு மிகப்பெரிய சாதகம்.
பேரலள் பேன்ட்டும், சிறிய கை வைத்த டாப்ஸும் அவளுக்கு வசதியாய் இருந்தது. அவளது குழுவினர், அவளை மகிழ்ச்சியுடன் சூழ்ந்து கொண்டு வெற்றியை கொண்டாடினர்... எழிலரசியையும் சேர்த்து.
"தாம் யார் உதவியையும் எதிர்பாராமல் தானாகவே இந்த ஆட்டத்தை முடித்து விட்டீர்கள். வெகு பிரமாதம்" என்றாள் எழிலரசி.
"நீங்கள் மிகவும் நன்றாக விளையாடுகிறீர்கள் அக்கா" என்றாள் ஒரு சின்ன பெண்.
"ஆமாம் அக்கா, பாகவத புராணத்தில், கிருட்டிணர் கூட இவ்வளவு விரைவாய் கற்களை அடுக்கி இருக்க மாட்டார்" என்றாள் மற்றொருத்தி.
"நன்றி..." என்று கூறி, வெதும்பிக் கொண்டிருந்த காஞ்சனமாலையை பார்த்த தன்மயா, உள்ளுக்குள் நகைத்துக் கொண்டாள். இந்த பெண் தான் எவ்வளவு குழந்தை புத்தி உடையவள்! இதுவா அவளது எதிரியை பழி தீர்க்கும் வழி?
"வாருங்கள், மீண்டும் ஒருமுறை விளையாடலாம். இந்த முறை யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்த்து விடுவோம்" என்றாள் காஞ்சனமாலை.
எழிலரசி தன்மயாவை பார்க்க, அவள் சலனமின்றி தன் தோள்களை குலுக்கினாள்.
அவர்கள் மீண்டும் விளையாடினார்கள். மீண்டும் தன்மயா வெற்றி பெற்றாள், காஞ்சனமாலையிடம் அடிபடாமல் தான்...! மீண்டும் அவர்கள் வெற்றியை கொண்டாடினார்கள்.
விளையாட்டு ஆர்வத்தில், தன்னை சில கண்கள் நோட்டமிட்டு கொண்டிருந்ததை கவனிக்கவில்லை தன்மயா.
முதல் இணை அமுதனுடையது. மதங்கன் தன்மயாவின் மீது விதிக்கப்பட்ட குற்றச்சாற்றை எண்ணி மிகுந்த மன உளைச்சலில் இருந்தவன், அதை மறந்து அவள் விளையாடுவதை பார்த்து புன்னகை புரிந்தான். அந்த புன்னகை அவன் கண்களையும் சென்றடைந்தது. தன்னை விழுங்க காத்திருக்கும் பிரச்சனையை கூட அவன் மறந்தான்! அதை எண்ணி அவன் வியந்தான்! இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அவனால் எப்படி புன்னகைக்க முடிகிறது? தனது அனைத்து பிரச்சனைகளையும் மறக்கச் செய்யும் திறன் தன்மயாவுக்கு இருக்கிறதா? என்ற கேள்வியும் அவன் மனதில் எழுந்தது. அதை எண்ணியும் அவன் வியந்தான்.
அடுத்த இணை கண்களுக்கு சொந்தக்காரர், அரசர் ஒப்பிலாசேயோன். தனது மகனால் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண்ணை அவர் கவனித்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண்ணை ஊன்றி கவனித்த பிறகு, தன் மகன் கூறுவதில் தவறு இருக்கும் என்ற எண்ணம் அவர் மனதில் எழவில்லை. அந்த பெண்ணை பார்த்தால், உளவு பார்க்க வந்தவள் போல் தெரியவில்லை. மதங்கன் குறிப்பிட்டது போல், தன்னை உளவுக்காரியாக காட்டிக் கொள்ளாமல் இருக்க அவள் பயிற்றுவிக்கப்பட்டு இருந்தாலும் கூட, அவளது நடவடிக்கை சிறிதும் ஐயத்திற்கு இடமாக இல்லை. தன் சுற்றுப்புறத்தில் இருந்த யாரைப் பற்றியும் அவள் கவலை கொள்ளவே இல்லை. அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அது எந்த ஒற்றனும் செய்யாதது. தான் விளையாடிய விளையாட்டில், அவள் அந்த அளவிற்கு ஒன்றிப் போயிருந்தாள். தான் கவனிக்கப்படுகிறோம் என்பதை கூட அவள் கவனிக்கவில்லை. அவளது கவனம் முழுவதும், அந்த கற்களை அடுக்குவதிலேயே இருந்தது. அவள் வேவுக்காரியாய் இருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவு. வாகைவேந்தன் எப்படி அவள் வேவுக்காரி அல்ல மெய்பித்து காட்டப் போகிறான்? தன் மகனின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தாலும், அவன் செய்த சூளுரை அவர் மனதை கவலையில் ஆழ்த்தியது. ஏனென்றால், உதிர்த்த வார்த்தைகளை உயிர் போல் நினைப்பவன் வாகைவேந்தன். அவன் கூறியதை செய்து முடித்தே தீருவான்.
இறுதியாய், அவளை கவனித்துக் கொண்டிருந்த மூன்றாவது இணை கண்களுக்கு சொந்தக்காரன், மதங்கன். அவனது கண்களில் கலப்படம் இல்லாத காமம் நிறைந்து வழிந்தது. தன்மயாவை போன்ற பெண்கள் கூட இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. இப்படிப்பட்ட பெண்ணை அவன் வாழ்நாளில் கண்டதேயில்லை. அவன் நாட்டைச் சேர்ந்த பெண்கள், பூசினார் போன்ற உடல்வாகுடன் இருப்பார்கள், இல்லாவிட்டால் மெலிந்து காணப்படுவார்கள். ஆனால் தன்மயாவோ, பார்க்க மெலிந்து காணப்பட்டாளே ஒழிய, இளமை பூரிப்புடன் கவர்ச்சியான தோற்றத்துடன் இருந்தாள். இப்படி கூட ஒரு பெண் இருக்க முடியுமா? அவன் பார்வையில் காமத்தீ கொளுந்து விட்டு எறிந்தது...! தன்மயாவை போன்ற பெண் அவன் நாட்டிலேயே இல்லையே...! அவன் கண்களில் அவள், மயக்கும் அழகு சுந்தரியாய் தெரிந்தாள்.
ஒவ்வொருவரது கோணமும், அவர்களது மனதிற்கு ஏற்ப மாறுபடும் என்பது எவ்வளவு உண்மை! அமுதனின் பார்வை அவளை ஆராதித்தது...! அரசரின் பார்வை அவளை ஆராய்ந்தது...! மதங்களின் பார்வை ஆசையுடன் அவளது உடலை தீண்டியது!
விளையாடி முடித்து, அரண்மனை வளாகத்திற்குள் ஓடிய கால்வாயை நோக்கி சென்றாள் தன்மயா. அதன் அருகில் இருந்த ஊஞ்சலை அவள் கவனித்திருந்தாள். மற்ற பெண்களும் அவளை பின்தொடர்ந்தார்கள். அவர்களுக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது. அவளுடன் ஊஞ்சலாடிய போது, அவர்கள் மேலும் அவளுடன் நெருக்கமானார்கள். ஊஞ்சலில் விளையாடிய போது அவள் மீது கொட்டிய மலர்கள் தன்மயாவுக்கு மகிழ்ச்சியை அளித்தது. விளையாடிய பின் அந்த பெண்களுடன் அமர்ந்து கொண்டாள் அவள்.
"தங்கள் மிகவும் நன்றாக விளையாடுகிறீர்கள் அக்கா" என்றாள் ஒரு பெண்.
"நன்றி... உன் பெயர் என்ன?"
"தேவநங்கை"
"என் பெயர் இன்பவள்ளி. தங்கள் நாட்டில் வேறு என்ன விளையாட்டு விளையாடுவார்கள்?" என்றாள் அவள்.
"எங்கள் நாட்டில் நாங்கள் கொக்கோ, கபடி, வாலிபால், பாஸ்கெட் பால் என்று பல விளையாட்டுகளை விளையாடுவோம்"
"அப்படி என்றால் என்ன? அதை எல்லாம் எப்படி விளையாடுவது?"
"அதற்கு நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. நான் அவற்றையெல்லாம் உங்களுக்கு ஒவ்வொன்றாக கற்பிக்கிறேன்"
அவர்கள் மகிழ்ச்சியோடு சரி என்றார்கள்.
"நாளை நாங்கள் அனைவரும் ஆலயத்திற்கு செல்ல இருக்கிறோம். தாங்களும் எங்களுடன் வருகிறீர்களா?" என்றாள் தாமரை.
"நான் வருவதாக இருந்தால், கூறுகிறேன்"
அவள் கூறியது அவர்களுக்கு வருத்தத்தை தந்தது.
"இளவரசரின் இசைவு கிடைத்தால் அவர் வருவார். அப்படித்தானே?" என்றாள் எழிலரசி காஞ்சனமாலையை பார்த்தபடி.
"ஆம்" என்றாள் தன்மயா.
"அப்படி என்றால், அவரின் இசைவை பெருங்களேன்" என்றாள் இன்பவல்லி.
"பெற முயல்கிறேன்"
"இளவரசர் எங்கள் யாரிடமும் உரையாட மாட்டார்" என்றாள் தேவநங்கை.
அவளை வியப்புடன் பார்த்தாள் தன்மயா.
"ஆம், அவர் சிறுவனாய் இருந்த போது தான் பெண்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவர் பெண்களிடம் பேசுவதை அடியோடு நிறுத்திவிட்டார்"
"ஏனென்றால், அது அவருக்கு தேவையில்லாத பிரச்சனையை இழுத்து வந்து விட்டது" என்றாள் இன்பவள்ளி, வேண்டுமென்றே, காஞ்சனமாலையை பார்த்தபடி.
அவளைப் பார்த்து முறைத்த காஞ்சனா, அங்கிருந்து சென்றாள்.
"அவர் கோபித்துக் கொண்டு செல்கிறார் என்று நினைக்கிறேன்" என்றாள் தன்மயா.
"அவள் அப்படித்தான்" என்றாள் எழிலரசி.
"அப்படி என்றால்?"
"அவள் இளவரசரை மணந்து கொள்ள விரும்பினாள். ஆனால் அவருக்கு அவள் மீது எந்த நாட்டமும் இல்லை"
"ஓ..."
"ஆம், பிள்ளை பிராயத்தில் அனைவரும் இணைந்து விளையாடினார்கள். என் அண்ணன் அவளையும் தன் தங்கை போல் தான் பாவித்தார். அப்படி இருக்கும் பொழுது, அவரால் எப்படி அவளை மணந்து கொள்ள முடியும்? இந்த மதிகெட்ட பெண்ணும் அதை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாள்"
அவர்கள் பேசுவதை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள் தன்மயா. இந்த சங்கதி எல்லாம் அவள் ஏற்கனவே அறிந்தது தானே! அவளுக்கு அந்த பெண்களை மிகவும் பிடித்திருந்தது. அவர்களுடன் இணைந்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. அவர்களுடன் மட்டுமல்ல, அந்த அரண்மனை முழுவதிலும் பல இடங்களில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. அந்த அரண்மனையை விட்டு செல்வதற்கு முன் அதை செய்ய வேண்டும் என்று நினைத்தாள் அவள்.
அப்போது, எழிலரசி பற்றி அமுதன் கூறியது அவள் நினைவுக்கு வந்தது.
"உங்களிடம் நான் ஒன்று கேட்கலாமா, இளவரசி?" என்றாள் தன்மயா.
"தாம் என்னை எழிலரசி என்றே அழைக்கலாம்..." என்றாள் எழிலரசி.
"தமது அழகின் ரகசியம் என்ன? உங்கள் முகம் பளப்பளப்பாய் மின்னுகிறதே... அதற்கு என்ன செய்கிறீர்கள்?"
எழிலரசி சங்கடத்தில் நெளிந்தாள். *நான் அழகா?* என்பது போல.
"தினமும் பாலில் தான் குளிப்பீரா?"
அதைக் கேட்டு மற்ற பெண்கள் சிரித்தார்கள். எழிலரசியின் கன்னம் பரபரவென சிவந்தது.
"பாலில் குளிப்பதா?"
"ஆம், எகிப்து நாட்டை சேர்ந்த பேரழகியான ஒரு மகாராணி தினமும் பாலில் தான் குளிப்பாராம்"
"அது உண்மையா அக்கா?" என்றாள் தாமரை.
"சொல்லக் கேள்வி...!"
"நமது இளவரசி அப்படியெல்லாம் செய்வதாய் எங்களுக்கு தோன்றவில்லை" என்றாள் தேவநங்கை.
"அப்படியெல்லாம் எதுவும் செய்யாமலேயே இவ்வளவு அழகாய் இருக்கிறார் என்றால், அவருக்கு கடவுள் அருள் நிரம்ப இருக்கிறது" என்றாள் தன்மயா, எழிலரசி ஓரக்கண்ணால் பார்த்தபடி.
"எங்கள் அனைவரையும் விட தாங்கள் தான் மிகவும் அழகாய் இருக்கிறீர்கள். ஒப்பனைகள் எதுவுமே இல்லாமலேயே நீங்கள் வசீகரமாய் இருக்கிறீர்கள்" என்றாள் எழிலரசி வெட்க புன்னகையுடன்.
"தங்களை விட ஒன்றும் இல்லை... நான் கூறுவது உண்மைதானே?" என்றாள் மற்ற பெண்களிடம். அவர்கள் அனைவரும்,
"ஆமாம்" என்றார்கள்.
"பார்த்தீர்களா, அனைவரும் ஆமோதிக்கிறார்கள்...! தாம் அழகி என்று ஒப்புக்கொள்ளுங்கள்"
எழிலரசி மீண்டும் வெட்கப்பட்டாள்.
"அதை கூறுவது தாம் என்பதால் அவர் ஒப்புக்கொள்வார்" என்றாள் தாமரை.
"அப்படியா?"
தன் முகத்தை மூடி வெட்கப்பட்டாள் எழிலரசி. அதில் வெட்கப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று தான் புரியவில்லை தன்மயாவுக்கு.
அந்தப் பெண்களுடன் போதுமான நேரத்தை செலவிட்ட பின் தன் அறைக்குச் சென்றாள் அவள். அப்பொழுது தன் அறையின் வாசலில் அமுதன் நின்று கொண்டிருப்பதை கண்டு அவனிடம் சென்றாள்.
"உனக்கு இங்கு நிறைய தோழிகள் கிடைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது" என்றான் அமுதன்.
"அவர்கள் மிகவும் இனிமையானவர்கள்"
"நீ மிகவும் நன்றாய் விளையாடினாய். எப்படி?"
"எப்படி என்றால்?"
"நீ இப்பொழுது தானே இப்படிப்பட்ட விளையாட்டை விளையாடுகிறாய்? அப்படி இருக்கும் பொழுது, எப்படி உன்னால் இவ்வளவு சிறப்பாய் விளையாட முடிந்தது, என்றேன்"
"இந்த விளையாட்டு ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லையே..."
"அப்படியா கூறுகிறாய்? அது கடினமாக இல்லையா?"
"இல்லை"
"ஆனால் என் நாட்டுப் பெண்கள் அதை கடினமாய் உணர்ந்தது போல் தெரிந்தது"
"நானும் அதை கவனித்தேன்"
"ம்ம்ம்"
"எனக்கு தங்களது இசைவு வேண்டும்"
"எதற்கு?"
"கோவிலுக்கு செல்வதற்கு"
"யாருடன்?"
"அந்த பெண்களுடன் தான்"
ஒரு கணம் திகைத்தான் அமுதன். அவர்கள் எந்த கோவிலுக்கு செல்வார்கள் என்று அவனுக்கு தெரியும். அந்த கோவில் கோட்டைக்கு உள்ளே தான் இருந்தது என்ற போதிலும், அரண்மனையை விட்டு சற்று தொலைவில் இருந்தது. அவள் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருப்பதால், அவளை தனியாக அவர்களுடன் அனுப்பலாமா வேண்டாமா என்று அவனுக்கு புரியவில்லை.
"உனக்கு கோவிலுக்கு செல்ல வேண்டுமா? அல்லது இந்த பெண்களுடன் சேர்ந்து செல்ல வேண்டுமா?" என்றான்.
இது என்ன மாதிரியான கேள்வி என்று புரியாத அவள், முகத்தை சுருக்கினாள்.
"அந்தப் பெண்களுடன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால், என் இசைவு உனக்கு கிட்டாது. கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று விருப்பப்பட்டால், நான் உன்னை அழைத்து செல்கிறேன்"
"நான் அந்த பெண்களுடன் கோவிலுக்கு செல்ல ஏன் தங்களின் இசைவு எனக்கு கிட்டாது?"
இந்த கேள்வியை அவன் அவளிடமிருந்து எதிர்பார்த்து இருக்கலாம். அதனால் காலம் தாழ்த்தாமல் பதிலளித்தான்.
"என்னால் யாரையும் நம்ப முடியாது. நீ எங்கள் விருந்தாளி. உன்னை பாதுகாக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. அதற்காகத்தான் கூறுகிறேன். உனக்கு அந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்றால், நான் உன்னை அழைத்து செல்கிறேன்"
சரி என்று தலைசைத்த அவள்,
"அவர்களிடம் நான் என்ன கூறுவது?" என்றாள்.
"அவர்களுடன் செல்ல உனக்கு நான் இசைவளிக்கவில்லை என்று கூறு"
"அவர்கள் வருத்தப்பட மாட்டார்களா?"
"வருத்தப்படுவதற்கு பதிலாக, நான் அதை ஏன் கூறினேன் என்று அவர்கள் புரிந்து கொள்வது நலம்"
"சரி" என்று பெருமூச்சு விட்டாள் அவள். அதேநேரம் அவன் அவளை எப்பொழுது கோவிலுக்கு அழைத்துச் செல்வான் என்று கேட்டு அவனை தொந்தரவு செய்யவும் இல்லை. அவளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவன் எண்ணினால், அவன் அழைத்து செல்வான். அது அவளுக்கு தெரியும்.
"தங்களின் கண்களில் காணப்படும் துறுதுறுப்பு எங்கே போயிற்று?" என்றாள் அவள்.
தன் பார்வையை வேறு பக்கம் திருப்பினான் அமுதன்.
"நான் ஏதாவது தவறிழைத்து விட்டேனா?"
திடுக்கிட்டு அவளை நோக்கி திரும்பினான் அமுதன்.
"இல்லை இல்லை... நீ எந்த தவறும் செய்யவில்லை"
"பிறகு ஏன் தாம் கலவரமாய் காணப்படுகிறீர்கள்? என்னிடம் கூற மாட்டீர்களா?"
அவளிடம் என்ன கூறுவது என்று புரியவில்லை அமுதனுக்கு.
"தாம் என்னிடம் கூறினால், என்னால் இயன்ற வழியை கூறுவேன்"
"அதில் உன்னால் செய்ய இயன்றது ஒன்றும் இல்லை"
தன்மயா துணுக்குற்றாள். அப்படி என்றால், ஏதோ விபரீதம் இருக்கிறது.
"என்ன நிகழ்ந்தது என்று கூறினால் தானே, என்னால் எதுவும் செய்ய இயலுமா இயலாதா என்ற முடிவுக்கு வர முடியும்?"
"என்ன செய்வது என்று உண்மையிலேயே எனக்கு புரியவில்லை தன்மயா. எனக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது"
"என்ன விடயம் அமுதே?"
"மதங்கனின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. அவர் தன்னை மெய்பித்துக் காட்ட சந்தர்ப்பமும் வழங்கப்பட்டிருக்கிறது. அது ஏன் என்று உனக்கு தெரியுமா?"
"ஏன்?"
"அவர் விடயத்தை தலைகீழாக்கி, நம்மை குற்றவாளியாக்கிவிட்டார்"
"நம்மை என்றால்?"
"உன் மீது குற்றம் சாட்டி இருக்கிறார்"
"என் மீதா? என்ன குற்றம்?"
"நீ வேளீர்களின் உளவுப்படையைச் சேர்ந்த பெண்ணாம். எங்கள் நாட்டில் உள்நாட்டு குழப்பத்தை விளைவிக்க வந்திருக்கிறாயாம்"
அதைக் கேட்டு அதிர்ந்தாள் தன்மயா.
"நீ குற்றமற்றவள் என்பதை மெய்பிக்க, எனக்கு பத்து தினங்கள் அவகாசம் அளித்திருக்கிறார் அரசர். அதை செய்ய நான் தவறினால், அதற்கான விளைவுகளை நான் சந்திக்க நேரிடும்"
"இதை அரசரே கூறினாரா?"
"ஆம். ஒருவேளை உன் மீது சுமத்தப்பட்ட குற்றம் மெய்பிக்கப்பட்டால், எனது இளவரசு பட்டத்தை துறப்பதாக நான் சபதம் பூண்டுள்ளேன்"
அதைக் கேட்டு திகில் அடைந்தாள் தன்மயா. அப்படிப்பட்ட ஒரு சபதமா கொண்டிருக்கிறான் அமுதன்? அந்த அளவிற்காக அவன் அவள் மீது நம்பிக்கை வைத்துள்ளான்? அவளுக்கு தொண்டையை அடைத்தது. பேச்சிழந்து அவனைப் பார்த்தபடி நின்றாள் அவள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro