18 சாட்டுரை
18 சாட்டுரை
தான் அரசரிடம் கொண்டு வந்த பிரச்சனை, அரசரை மட்டும் அல்லாது, தன்னையும் கூட எதிர்பாராத விதத்தில் அசைத்துப் பார்க்கப் போவதை அறியவில்லை வாகைவேந்தன்.
"என்னிடம் நீ கூற விழைவது என்ன அமுதா?" என்றார் அரசர் ஒப்பிலாசேயோன்.
"நமது நாட்டில் பல அட்டூழியங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது... மக்கள் அநீதியை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்"
"நீ கூறுவது என்ன, அமுதா?"
"ஆம், தந்தையே... ஒரு காமக் கொடூரன் நம் நாட்டின் பெண்களின் வாழ்வை சிதைத்துக் கொண்டிருக்கிறான்"
நடந்தவற்றை அவரிடம் விவரமாய் கூறினான் அமுதன், அது யார் என்பதை தவிர்த்து.
"இப்படிப்பட்ட காரியத்தை செய்பவன் யார்? தனது பதவியை தவறான வழியில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அவனை நாம் தண்டித்தே தீர வேண்டும், அது யாராக இருந்தாலும் சரி..."
"அவர் வேறு யாருமல்ல... மதங்கன் தான்...! எனது மாமா! தமது மைத்துனர்...!"
"என்ன கூறுகிறாய், அமுதா?"
"ஆம், தந்தையே...! என்னுடன் நமது அரண்மனைக்கு வருகை புரிந்திருக்கும் அந்த பெண், அதை நேரில் கண்டவள். ஒரு பெண்ணை, ஒருவன் தன் குதிரையில் அபகரித்து செல்ல முயன்றதை பார்த்த அவள், அவனுடன் போர் புரிந்து அந்த பெண்ணை காத்தாள்"
"என்ன்னன? அயல்நாட்டில் இருந்து வந்த அந்த பெண்ணுக்கு இங்கு நடக்கும் இந்த இழி செயல் தெரிந்து விட்டதா?" என்று அதை அவமானமாய் உணர்ந்தார் அரசர்.
"ஆம், தந்தையே. நம் நாட்டைச் சேர்ந்த யாரும் மதங்கனுக்கு எதிராக குரல் கொடுக்க தயாராக இல்லை. அவரைக் கண்டு அனைவரும் மிரளுகிறார்கள்"
"நான் ஆணையிடுகிறேன். அவனை கைது செய்து, பாதாள சிறைக்கு அனுப்பு" என்றார் அரசர் கோபம் கொப்பளிக்க.
அப்பொழுது அந்த அறைக்குள் ஒரு மனிதன் கூக்குரலிட்டபடி ஓடி வந்தான்.
"ஆபத்து! அரசே, ஆபத்து! நாம் அனைவரும் ஆபத்தில் இருக்கிறோம்..."
அமுதனும், அரசரும் முகத்தை சுருக்கி அவனை பார்த்தார்கள். ஏனென்றால் அவன் தான் மதங்கன்.
"நீ எந்த ஆபத்தை பற்றி கூறுகிறாய்?" என்றார் அரசர்.
"மதிப்பிற்குரிய நம் இளவரசர் அரண்மனைக்கு அழைத்து வந்தாரே, அந்த ஆபத்தை பற்றி தான் கூறுகிறேன்"
"தாங்கள் கூறுவது என்ன?" என்றான் அமுதன் கோபமாய்.
"இளவரசர் அழைத்து வந்த அந்தப் பெண், நம் எதிரிகளின் வேவுக்காரி. நம்மை உளவு பார்க்கத்தான் அவள் இங்கு வந்திருக்கிறாள். அவள் வேளிர்களின் கைக்கூலி..."
அதைக் கேட்ட அமுதன் வெகுண்டான்.
"இது சுத்த பொய். அவள் டோலக்பூரில் இருந்து வருகிறாள்" என்று அரற்றினான் அமுதன்.
"அதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளதா? தான் டோலக்பூரை சேர்ந்தவள் என்று அவள் கூறினாள் என்பதற்காக, அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே, இளவரசே...!"
"அவள் உளவுக்காரி என்பதற்கு தங்களிடம் ஆதாரம் இருக்கிறதா?"
"என்னுடைய ஒற்றர்கள், நம் நாடு முழுவதும் பரவி கிடக்கிறார்கள். அவர்களில் ஒருவன் இந்த தகவலை எனனிடம் கொண்டு வந்து சேர்ப்பித்தான்"
"நஞ்சு தோய்க்கப்பட்ட அம்பிலிருந்து அவள் என் உயிரை காத்திருக்கிறாள். அவளால் தான் இன்று நான் உயிருடன் இருக்கிறேன். அவள் உளவுக்காரியாக இருந்திருந்தால், அவள் என்னை சாகத்தான் விட்டிருப்பாள், நிச்சயம் காத்திருக்க மாட்டாள்"
"அது தான் அவளது புத்தி கூர்மை... பாருங்கள், இப்பொழுது தாங்களே அவளை விட்டுக் கொடுக்காமல் அவள் பக்கம் நிற்கிறீர்கள்...! அவளை நமது அரண்மனைக்கு அழைத்து வந்து இளவரசி போல் உபசரிக்கிறீர்கள்...! அவள் இங்கு ஏதோ திட்டத்தோடு வந்திருக்கிறாள். இப்படிப்பட்ட ஒருத்தியை, கொஞ்சம் கூட ஆராயாமல் தாங்கள் எப்படி அரண்மனையில் சேர்த்து கொண்டீர்கள், இளவரசே?"
"தாங்கள் கூறுவது போல் அவளிடம் எந்த திட்டமும் இல்லை. நான் அவளை நன்கு அறிவேன். அவள் நிச்சயம் உளவுக்காரியாக இருக்க முடியாது. ஏனென்றால், ஒரு உளவுக்காரிக்கு இருக்க வேண்டிய எந்த பண்பும் அவளிடம் இல்லை. நன்கு ஆழ்ந்து, ஆராய்ந்த பின்னரே நான் அவளை இங்கு அழைத்து வந்தேன்"
"இப்பொழுது இருக்கும் ஒற்றர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். ஒற்றர்கள் என்பதை காட்டிக் கொள்ளாமல் நடந்து கொள்வதற்கு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கேள்வியுற்றேன். ஒரு இளவரசராய் இருந்து கொண்டு தாங்கள் எப்படி அவளது வலையில் விழுந்தீர்கள்?"
"நான் உங்களை எச்சரிக்கிறேன். இன்னும் ஒரு வார்த்தை தாம் அவளைப் பற்றி பேசினால், நான் பொறுக்க மாட்டேன்"
"கடவுளே...! அவள் இளவரசர் மீது என்ன மந்திர பிரயோகம் செய்தாளோ தெரியவில்லையே...! ஏவலுக்கு கட்டுண்டவர் போல் எமது இளவரசர் நடந்து கொள்கிறாரே...!"
அரசரை நோக்கி திரும்பிய அவன்,
"மன்னவா, தாம் துரிதமாய் நடவடிக்கை எடுக்கும்படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நமது இளவரசரை அந்த மாயக்காரியின் பிடியில் இருந்து காப்பாற்றுங்கள். இல்லாவிட்டால் நாம் அவரை இழந்து விடுவோம். தாம் உத்தரவிட்டால் அந்த சூனியக்காரியை நானே கைது செய்து, பாதாள சிறையில் அடைகிறேன்" என்றான் கெஞ்சலாக.
"எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு அரசு விருந்தாளியை சூனியக்காரி என்று அழைப்பீர்?" என்று அந்த அறை அதிரும் வண்ணம் உறுமினான் அமுதன்.
அரசரைப் பார்த்த அவன்,
"இங்கு என்ன நிகழ்கிறது தந்தையே...? இவர் தன் குற்றத்தை தன்மயாவின் பக்கம் திருப்பி, தன் மீது விதிக்கப்பட்ட குற்றத்திலிருந்து தப்பிக்க நினைக்கிறார்"
"என் மீது விதிக்கப்பட்ட குற்றமா? தாம் எதைப் பற்றி பேசுகிறீர்கள் இளவரசே? இந்த நாட்டுக்காக அரும்பாடு பட்டதை விட வேறு என்ன நான் செய்து விட்டேன்?"
"தாம் எவ்வளவு அரும்பாடு பட்டீர் என்பதும் எனக்கு தெரியும், அதை எவ்வழியில் செய்திர் என்பதும் எனக்கு தெரியும்"
"அரசே, இளவரசர் எதைப் பற்றி பேசுகிறார் என்று எனக்கு புரியவில்லை"
"இளவரசர் தங்கள் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார்"
"என் மீது குற்றமா? என்ன குற்றம்?"
"நீ பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததாகவும், அவர்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாகவும் உன் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது"
"அட ஆண்டவா...! இப்படிப்பட்ட குற்றச்சாட்டை கேட்பதற்காகவா என்னை நீ இன்னும் உயிரோடு வைத்திருக்கிறாய்...?"
கூரிய பார்வையுடன் அவனை முறைத்தான் அமுதன். அவனது அப்பட்டமான நடிப்பை அமுதனால் பொறுக்க முடியவில்லை.
"அரசே, அந்த பெண்ணின் திட்டம் தங்களுக்கு புரியவில்லையா? நமக்குள் பிரிவினையை ஏற்படுத்தவே அவள் இங்கு வந்திருக்கிறாள்...! இங்கு உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்துவது அவளது எண்ணம். நமக்குள் குழப்பத்தை விளைவித்து, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள, அவள் வேளீர்கள் அனுப்பிய பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்"
அரசரின் முகத்தில் எழுந்த குழப்பத்தை கவனித்தான் அமுதன்.
"தந்தையே, தாம் எனது திறமையின் மீது நம்பிக்கை வைக்கவில்லையா?" என்று கர்ஜித்தான்.
"அமுதா, நீ இந்நாட்டு இளவரசன், மதங்கனோ நம் நாட்டின் படை தளபதி. தாம் இருவரும் இந்நாட்டில் சம சக்தி படைத்தவர்கள். இது நம் நாட்டின் நலனை உள்ளடக்கிய விடயம். இதில் நான் எப்படி உடனடியாக முடிவெடுக்க முடியும்?"
"படைத்தலைவர் குற்றம் சுமத்துவது என் மீதல்ல, என்னுடைய தோழியின் மீது..."
"நான் எப்படி தங்கள் மீது குற்றம் சுமத்த முடியும் இளவரசே...? தங்களை நான் அறிய மாட்டேனா?" என்றான் மதங்கன்.
"ஆம்... நீர் எம்மை நன்கு அறிவீர். எங்களுக்கு தான் உங்களை பற்றி இவ்வளவு நாள் தெரியாமல் இருந்தது" அனல் தெறிக்கும் பார்வையுடன் அரசரை ஏறிட்டான், அவருக்கு எதையோ குறிப்பால் உணர்த்தி.
ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு அரசர் பேசினார்,
"இது நம் நாட்டின் மதிப்பு குறித்த விடயம். தான் குற்றமற்றவன் என்பதை படைத்தலைவன் மெய்பிக்கும் வரை, அவனை இந்த பதவியில் இருந்து நீக்குகிறேன்"
மதங்கனின் முகத்தில் அதிர்ச்சி மேலோங்கியது.
"அரசே... இதைத்தானா நான் தங்களிடமிருந்து கேட்க வேண்டும்? இந்த நாட்டிற்காக சுயநலமின்றி அரும்பாடுபட்டதற்கு எனக்கு கிடைக்கும் வெகுமானம் இதுவா?"
"ஆம், மதங்கா, எனக்கு வேறு வழி இல்லை. ஏனென்றால், உன் மீது குற்றம் சுமத்தியது இந்நாட்டின் இளவரசன். அவனை நான் முழுமையாய் நம்புகிறேன். கண்மூடித்தனமாக அவன் எந்த காரியத்திலும் இயங்குவதில்லை. இருந்தபோதிலும், அந்த பெண் ஒரு உளவாளி இல்லை என்பதை அவன் மெய்பித்தாக வேண்டும். அவனுக்கு நான் பத்து தினங்கள் அவகாசம் அளிக்கிறேன். அதற்குள் அவன் அதை செய்து முடித்தாக வேண்டும். ஒருவேளை ஏதாவது தவறாக போகுமானால், அந்த பெண்ணால் இங்கு ஏதாவது குழப்பம் ஏற்படுமானால், அதனால் ஏற்படும் விளைவுகள் அனைத்திற்கும் இளவரசன் வாகைவேந்தன் பொறுப்பேற்க வேண்டும். ஏற்படும் விளைவுகளுக்கான தண்டனையையும் அவன் ஏற்க வேண்டும்" என்றார் உறுதியான குரலில்.
"இறைவா! குன்றத்து சேயோனே...! ஏன் எங்கள் நாட்டை இப்படியெல்லாம் சோதிக்கிறாய்?" என்றான் மதங்கன் சோகமாய்.
"அமுதா, நீ என்னை புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்" என்றார் அரசர்.
"ஒருவேளை, ஏதாவது தவறு நிகழுமேயானால், அவள் ஒரு உளவுக்காரி என்பது மெய்பிக்கப்பட்டால், அதன் விளைவுகள் அனைத்திற்கும் நான் பொறுப்பேற்கிறேன்...! அதற்கு தண்டனையாக என் இளவரசு பட்டத்தையும் துறப்பேன்" சீறினான் அமுதன்.
"வாகைவேந்தா..." என்று அதிர்ந்தார் அரசர்.
"என் கூற்றே இறுதியானது...!" என்று அங்கிருந்து கோபமாய் வெளியேறினான் அமுதன்.
"அந்தப் பெண்ணின் வருகையால் ஏற்பட்ட விளைவை பார்த்தீர்களா, அரசே!"
"நீ குற்றமற்றவன் என்பது நிரூபிக்கப்படும் வரை, உனக்கு இது பற்றி பேச எந்த உரிமையும் இல்லை" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் அரசர்.
கள்ள புன்னகையுடன் நின்றான் மதங்கன்.
தன்மயாவை குற்றமற்றவள் என்று எப்படி மெய்பிப்பது என்று யோசித்தபடி தன் அறைக்கு சென்றான் அமுதன். அவன் அதை எப்படியும் செய்தே தீர வேண்டும். மக்களின் கண்களில் அவளை தவறானவளாக இருக்க விட முடியாது. ஆனால் அதை எப்படி செய்வது என்று தான் அவனுக்கு புரியவில்லை. அவன் நாட்டு மக்கள், மதங்கனை பற்றி பேச தயாராக இல்லை. அப்படி இருக்கும் பொழுது, அவன் அதை எப்படி செய்வான்? மதங்கன் தவறானவன் என்று எப்படி மெய்பிப்பான்?
தன் அறைக்கு வந்த அமுதன், ஒரு மெல்லிய பட்டு துணியை எடுத்து, பூக்களின் சாரில் இருந்து எடுக்கப்பட்ட மையைக் கொண்டு, அவனது நண்பனும், உண்மையான தென்படையின் தலைவனுமான அருகனுக்கு தகவல் எழுதினான். அதை மெல்லிதாய் உருட்டி, கையடக்க குழலில் இட்டு, ஒரு பெரிய புறாவின் காலில் கட்டி, சாளரத்தின் வழியாக அதை பறக்க விட்டான்.
அப்பொழுது அவனது அறைக்கு வந்த தன்மயா, அந்த காட்சியை கண்டு, அந்த சாளரத்தை நோக்கி ஆர்வத்துடன் ஓடினாள்.
"எவ்வளவு அழகான பெரிய புறா...! அது தாங்கள் வளர்ப்பு பிராணியா?" என்றாள்.
அவளிடம் சாதாரணமாக இருக்க முயன்றான் அமுதன். மதங்கனால் அவள் மீது சுமத்தப்பட்ட குற்றம் அவளுக்கு தெரிய வேண்டாம் என்று எண்ணினான் அவன்.
"இல்லை, அது ஒரு தூது புறா" அவள் கண்களை ஆழ்ந்து நோக்கியபடி கூறினான் அவன்.
"என்ன, தூது புறாவா? அப்படி என்றால் அது தங்களின் தகவலை சுமந்து செல்கிறதா?"
ஆமாம் என்று தலையசைத்தான்.
"நீர் அதை எங்கு அனுப்புகிறீர் என்று அதற்கு எப்படி தெரியும்?"
"அது பழக்கப்பட்ட புறா. சரியான திசையில் சென்று தகவலை சேர்க்கும் வல்லமை படைத்தது"
"அருமை அருமை..."
அமுதன் புன்னகைத்த போதும் கூட அவன் முகத்தில் மெல்லிய கலவரம் இழையோடியதை கவனித்தாள் அவள்.
"ஏதும் பிரச்சனையா, அமுதே?" என்றாள் அவள்.
ஒரு கணம் திகைத்த அவன், இல்லை என்று தலையசைத்தான்.
"தங்களைப் பார்த்தால் அப்படி தோன்றவில்லையே... தங்கள் முகத்தில் சதா குடி கொண்டிருக்கும் புத்துணர்ச்சியை காணவில்லையே"
வியந்தான் அமுதன். இதுவரை அவன் முகத்தை இவ்வளவு ஆழமாய் யாரும் ஆராய்ந்து கூறியது இல்லை.
"ஒன்றுமில்லை, நான் நன்றாக தான் இருக்கிறேன்"
"தங்கள் தந்தையை சந்தித்தீரா?"
"சந்தித்தேன்"
"அவர் என்ன கூறினார்?"
"மதங்கனின் பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது"
"ஓ..."
"அவர் குற்றமற்றவர் என்பதை மெய்பிக்க, அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால், அவருக்கு எதிரான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதால்" என்றான் அவளை பார்க்காமல்.
அது தன்மயாவுக்கு விசித்திரமாய் தெரிந்தது. ஏனென்றால், அதை கண்ணால் கண்ட சாட்சியே அவள் தானே! இருந்தாலும் அவள் மேலும் அதைப் பற்றி அவனிடம் எதுவும் கேட்கவில்லை. ஏனென்றால் அது அரச கட்டளை.
"நான் தங்களின் இசைவை பெற வந்தேன்"
"எதற்கு இசைவு?"
"நான் தங்கள் அரண்மனையின் தோட்டத்தில் உலவ எனக்கு தங்களின் இசைவு கிடைக்குமா?"
சரி என்று தலையசைத்தான் அமுதன்.
"மிக்க நன்றி, தங்கள் அரண்மனை மிகவும் அருமையாய் இருக்கிறது. எனக்கு இந்த இடம் மிகவும் பிடித்திருக்கிறது"
புன்னகை புரிந்த அமுதன்,
"உனக்கு இங்கு வசதிகள் போதுமானதாக இருக்கிறதா?" என்றான்.
"வசதிகளா? இந்த இடம் எனக்கு எவ்வளவு களிப்பை தருகிறது என்பதை விவரித்து கூற நான் வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்..."
மீண்டும் புன்னகைத்தான் அமுதன். தன் மனதில் ஒரு நெருடலை உணர்ந்தாள் தன்மயா. அவனது புன்னகையை அவனது கண்கள் ஏற்கவில்லை.
"நான் வருகிறேன்" என்று யோசனையுடன் அங்கிருந்து நடந்தாள்.
அரசரின் இருப்பிடத்தில் ஏதோ தவறாய் நடந்திருக்க வேண்டும்...! அது இளவரசனுக்கு எதிராகவும் இருக்கலாம். அதனால் தான் அவனது முகத்தில் கலவரம் காணப்படுகிறது. அப்படி என்ன நிகழ்ந்திருக்கும்? அதைப்பற்றி யாரிடம் கேட்பதுஎன்று அவளுக்கு புரியவில்லை.
அப்பொழுது, எழிலரசி, சில பெண்களுடன் செல்வதை கவனித்தாள் தன்மயா. அவள் அவர்களை நோக்கி செல்ல, தன்மயாவை பார்த்து அவள் புன்னகைத்தாள்.
"அனைவரும் எங்கே செல்கிறீர்கள்?" என்றாள் தன்மயா.
"நாங்கள் வரிப்பந்து(1) விளையாட செல்கிறோம்"என்று தன் கையில் இருந்த ஒரு பந்தை அவளிடம் காட்டினாள்.
அந்த பந்தை தன் கையில் பெற்ற தன்மயா புன்னகை புரிந்தாள். மெத்தென்று பூ போல் இருந்தது அந்த பந்து. அதில் அடிபட்டாலும் கூட யாருக்கும் வலிக்காது. இவர்களெல்லாம் இளவரசிகளாயிற்றே...! அவர்களது விளையாட்டு அப்படித்தான் இருக்கும் என்று எண்ணினாள் அவள்.
"நான் தங்களுக்கு ஒரு விளையாட்டு கற்றுக் கொடுக்கவா?" என்றாள்.
"புதுவிளையாட்டா? கற்றுக் கொடுங்கள், என்றாள் ஆர்வமுடன்.
அவர்களுக்கு ஏழு கல் விளையாட்டு கற்றுக் கொடுத்தாள் தன்மயா.
"இந்த விளையாட்டு எனக்கு தெரியும்" என்றாள் ஒருத்தி.
"அப்படியா?"
"ஆம், பாகவத புராணத்தில் கிருட்டிண பகவான் தன் நண்பர்களுடன், யமுனை நதிக்கரையில் விளையாடிய விளையாட்டு இது"
"சரியாய் சொன்னீர்கள்"
"அப்படி என்றால் இதை விளையாடலாமா?"
அங்கிருந்த பெண்களை இரண்டு குழுக்களாய் பிரித்தாள் எழிலரசி. ஆனால் அந்த குழுக்கள் சமமாக இல்லை. ஒரு பெண் தனியாக நின்றாள். சமமாக பிரிக்கப்படுவதற்கு இன்னும் ஒருத்தி தேவை. இது தன்னால் நிகழ்ந்தது என்பதை உணர்ந்த தன்மயா,
"நீங்கள் விளையாடுங்கள். நான் நீங்கள் விளையாடுவதை பார்க்கிறேன்" என்றாள்
"பரவாயில்லை அக்கா, நீங்கள் விளையாடுங்கள். நான் காத்திருக்கிறேன்" என்றாள் ஒரு சின்ன பெண்.
அப்பொழுது அவர்கள்,
"நான் வரலாமா?" என்ற குரல் கேட்டு திரும்பினார்கள்.
அங்கு மிடுக்காய் நின்றிருந்தாள் காஞ்சனமாலை.
தொடரும்...
(1) சங்க கால பெண்கள், வரிப்பந்து விளையாடினார்கள் என்பதற்கு சங்க இலக்கியத்தில் ஆதாரங்கள் உள்ளது.
பீலி மஞ்ஞையின் இயலிக் கால
தமனியப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை
வான் தோய் மாடத்து வரிப்பந்து அசைஇக்“ (பெரும்பாணா., 331-333)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro