15 இளவரசனின் ஆணை
15 இளவரசனின் ஆணை
"இளவரசர் வாகைவேந்தரின் வரவு, நல்வரவாகுக" என்றார் அந்தப் பெண்.
தன் வாழ்நாள் அதிர்ச்சியை அடைந்தாள் தன்மயா. அமுதனா இளவரசன் வாகைவேந்தன்? அவள் அப்படியே உறைந்து நின்றாள். அவள் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது இளவரசன் வாகைவேந்தனுடனா? அந்த உண்மை தெரியாமல், வேடிக்கை பேச்சு பேசி, அவனை எள்ளி நகையாடி கொண்டிருந்தாளே...! அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் தன்மயா. அங்கிருந்த அனைவரும், அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூட அவள் உணரவில்லை.
"தன்மயா..." என்று முதல் முறையாக அவள் பெயர் சொல்லி அழைத்தான் அமுதன் என்னும் வாகைவேந்தன்.
திடுக்கிட்ட அவள், எச்சில் விழுங்கினாள். *இங்கே வா* என்பது போல் அவன் தலையசைத்தான். சிறுநடை நடந்து அவனை நோக்கி சென்று அமைதியாய் நின்றாள். மருட்சியுடன் காணப்பட்ட அவள் முகத்தை பார்த்து தன் சிரிப்பை அடக்கிக் கொண்டான் அமுதன்.
"தாங்கள் தான் இளவரசர் வாகைவேந்தரா?" என்றாள் அவனுக்கு மட்டுமே கேட்கும் மெல்லிய குரலில்.
பதில் கூறாமல் புன்னகை புரிந்தான் அமுதன். அந்த கேள்விக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. தன்னை ஆசீர்வதித்த அந்த பெண்மணியை ஏறிட்டான் அமுதன். அந்த பெண், தன்மயாவுக்கு ஆலத்தி எடுத்து, அவளது நெற்றியில் குங்குமம் இட்டார்.
"எங்கள் நாட்டிற்கு தங்களை வரவேற்கிறேன்" என்றார் அவர்.
"இவர் எனது தாய், அரசி, அன்பிற்கினியாள்" என்று அவரை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான் அமுதன்.
தனது சுயநினைவை அடைந்த தன்மயா, அன்பிற்கினியாளின் பாதம் தொட்டு வணங்கினாள்.
"எப்பொழுதும் மகிழ்வோடு வாழ வேண்டும்" என்று அவளை வாழ்த்தினார் அன்பிற்கினியாள்.
"அவருடன் இருந்தால் யாராக இருந்தாலும் மகிழ்ச்சியோடு தான் இருப்பார்கள். இவரைப் போன்ற ஒரு பெண்ணை தாங்கள் காணவே முடியாது" என்றான் அமுதன், அங்கிருந்த அனைத்து பெண்களையும் வியப்புக்கு உள்ளாக்கி. ஏனென்றால், அமுதன் இளவரசனாய் முடி சூட்டிக்கொண்ட பிறகு, பெண்களுடன் பழகுவதை குறைத்துக் கொண்டான். அதுவும் இளவரசி காஞ்சனமாலையுடன் அவனுக்கு திருமண பேச்சு ஆரம்பமான பின், பெண்களுடன் பேசுவதையே அடியோடு நிறுத்தி விட்டான்.
சங்கடத்துடன் சிரித்தாள் தன்மயா.
"தன்மயா தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து விட்டீர்களா, தாயே?" என்றான் அமுதன்.
அன்பிற்கினியாள் பதில் அளிக்கும் முன், பெண்களின் கூட்டத்தில் இருந்த ஒரு பெண் முன்வந்து பதில் கூறினாள்.
"எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது. இளவரசரின் ஆணையை புறக்கணிக்க முடியுமா?"
அமுதன் புன்னகை புரிந்து,
"இவள் தான் என் சகோதரி, இளவரசி எழிலரசி" என்றான்.
அவளைப் பார்த்து புன்னகைத்தாள் தன்மயா. உண்மையிலேயே அவள் எழிலுக்கு அரசியாகத் தான் இருந்தாள்.
"தங்களிடமிருந்து தகவல் பெறப்பட்ட உடனேயே, அனைத்து ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது, அண்ணா" என்றாள் எழிலரசி.
தகவலா? இவர் எப்போது தகவல் அனுப்பினார்? படைதளத்தில் இருந்த போதா? அல்லது பொன்னியின் வீட்டில் தங்கியிருந்த போதா? புரியவில்லை தன்மயாவுக்கு.
"நினைவிருக்கட்டும், அவர் நமது அரசு விருந்தாளி மட்டுமல்ல, என் தோழியும் கூட. அவர் சிறப்பான முறையில் கவனிக்கப்பட வேண்டும். புரிந்ததா?" என்றான் அமுதன் கண்டிப்பான குரலில். அது அங்கிருந்தவர்களை திகைக்க செய்தது.
"புரிந்தது அண்ணா" என்றாள் எழிலரசி, ஒரு குறிப்பிட்ட பெண்ணை, தன் ஓரக்கண்ணால் பார்த்தபடி.
அதை கவனித்த தன்மயா, அந்த திசையில் பார்த்தாள். அங்கு சோகமும், கோபமும் வடிவாய் நின்றிருந்தாள் ஒரு பெண். அவள் தான் இளவரசி காஞ்சனமாலையாக இருக்க வேண்டும் என்று எண்ணினாள். அவள் நினைத்தது சரிதான். அவள் தான் காஞ்சனமாலை.
"அவருக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு அவரை அழைத்துச் செல்லுங்கள்" ஆணையிட்டான் அமுதன்.
"அப்படியே ஆகட்டும் அண்ணா"
"தன்மயா, நீ எழிலரசியுடன் செல். நான் சென்று என் தந்தையை சந்தித்து விட்டு வருகிறேன்" என்றான் அமுதன்.
சங்கடத்துடன் தலையசைத்தாள் தன்மயா. எல்லோரும் உள்ளே சென்றார்கள். தனக்கும் தன்மயாவுக்கும் அருகில் நின்றிருந்த எழிலரசியை பொருளோடு பார்த்தான் அமுதன். அவனது பார்வையின் பொருளை புரிந்து கொண்ட அவள், பின்னோக்கி நகர்ந்தாள்.
"உனக்கு என்ன ஆனது தன்மயா? நீ தான் வாய் ஓயாமல் பேசிக்கொண்டும், பரிகாசம் செய்து கொண்டும் இருப்பாயே...!" என்றான் தனக்கும் பரிகாசமாய் பேச தெரியும் என்று காட்டி.
"தாங்கள் தான் இளவரசர் வாகைவேந்தரா?"
தன் கைகளைக் கட்டிக் கொண்ட அவன்,
"நீ என்ன நினைக்கிறாய்?" என்றான்.
அவள் தயக்கத்தோடு நின்றாள்.
"நாம் பிறகு பேசிக் கொள்ளலாம். உன் அறைக்குச் சென்று இளைப்பாறு"
அவளை அழைத்துச் செல் என்பது போல் எழிலரசிக்கு சைகை காட்டினான்.
"வாருங்கள் செல்லலாம்" என்றாள் எழிலரசி.
அவளுடன் சென்றாள் தன்மயா. அனைவருக்கும் முன்பாய், அவள் வெளிப்படையாய் அமுதனிடம் பேச முடியாது. அவனது தந்தையை சந்தித்துவிட்டு வரட்டும், பிறகு பேசிக் கொள்ளலாம் என்று எண்ணினாள் அவள்.
ஒரு பணிப்பெண், தன்மயாவின் பையை வாங்கிக் கொண்டு முன்னாள் நடக்க, எழிலரசியுடன் அவளுக்கு பின்னால் நடந்தாள் தன்மயா. அமுதன் தான் வாகைவேந்தன் என்ற அதிர்ச்சியில் இருந்து அவள் இன்னும் வெளிவரவில்லை. அவள் அந்த அரண்மனையில் அரசு விருந்தினராக மட்டுமல்ல, இளவரசன் வாகைவேந்தனின் தோழியாகவும் வருகை புரிந்திருக்கிறாள்.
அந்த மிகப்பெரிய அரண்மனை வளாகத்துக்குள் நுழைந்து, விசாலமான திடலை கடந்து, அருகில் இருந்த மாளிகையின், முதல் மாடியில் இருந்த ஒரு அறைக்கு அவளை அழைத்துச் சென்றாள் எழிலரசி. அந்த அறையை கண்ட தன்மயா மலைத்து நின்றாள்.
*இது ரூமா இல்ல ஃபுட்பால் கிரவுண்டா? நூறு பேர் உருண்டு உருண்டு தூங்கலாம் போல இருக்கே...! இந்த ரூம்ல நான் தனியாவா தங்க போறேன்?* என்று நினைத்தாள்.
அவளது பையை கொண்டு வந்த பணிப்பெண், அதை அங்கிருந்த வேலைப்பாடுடன் கூடிய அலமாரியில் வைத்து பூட்டினாள்.
"நீங்கள் இருவரும், இவருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து அவரை கவனித்துக் கொள்ளுங்கள்" என்றாள் எழிலரசி.
"அப்படியே ஆகட்டும் இளவரசி" என்றார்கள் அந்த பணிப்பெண்கள்.
"தங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால், என்னை அழைக்கலாம். தவ்வையும், ஔவையும் தங்களுடன் இருப்பார்கள். நீங்கள் கூறும் அனைத்தையும் கேட்டு நடப்பார்கள்" என்றாள் எழிலரசி.
இதெல்லாம் உண்மையிலேயே நடக்கிறது என்பதை நம்பவே முடியவில்லை தன்மயாவால்.
"தங்கள் நாட்டின் பெயர் என்ன?" என்றாள் எழிலரசி.
"டோலக்பூர்" என்று அமுதனிடம் கூறிய பொய்யை காப்பாற்றினாள் தன்மயா.
"ஓ... தாங்கள் அணிந்திருக்கும் உடை நன்றாக இருக்கிறது"
"நன்றி..." என்ற தன்மயா,
"நான் அமுதரை சந்திக்கலாமா?" என்று கேட்க, நம்ப முடியாமல் புருவம் உயர்த்தினாள் எழிலரசி. அவள் இளவரசனை அமுதன் என்று அழைத்தது கேட்டு. அந்தப் பெயர் சொல்லி அழைக்கும் உரிமையை, அவன் வெகு சிலருக்கு தான் கொடுத்திருந்தான் என்று அவளுக்கு தெரியும்.
அவளது முக மாற்றத்தை கவனித்த தன்மையா, சுதாகரித்துக் கொண்டாள்.
"மன்னிக்கவும். நான் இளவரசரை சந்திக்க வேண்டும். அவரிடம் முக்கியமான ஒன்றைப் பற்றி கேட்க வேண்டும்" என்றாள் தயக்கத்துடன்.
"அண்ணன் அரசரை சந்திக்க சென்றிருக்கிறார்...! அவர் திரும்பி வர நேரம் ஆகலாம். அவர் வெகு நாட்களுக்கு பிறகு அரண்மனைக்கு திரும்பி இருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தவற்றை எல்லாம் எங்கள் தந்தையிடம் ஒப்புவித்துவிட்டு தான் அவர் வருவார் என்று நினைக்கிறேன்" என்று சிரித்தாள் அவள்.
"அவரது அறை எங்கு உள்ளது?"
"தங்கள் அறைக்கு அடுத்த அறை அண்ணனுடையது. வழக்கமாய் எங்கள் தந்தையின் நண்பர்களான சிற்றரசர்கள் வந்தால், இந்த அறையில் தங்குவது வழக்கம். ஒரு அயல் நாட்டவர் இங்கு தங்குவது இது தான் முதல் முறை. ஏனென்றால் அது இளவரசரின் ஆணை" என்றாள் பொருள் பொதிந்த பார்வையோடு.
அமுதன் அவளுக்கு அளித்த அளப்பரிய மரியாதை அவளுக்கு திகைப்பை அளித்தது.
"அப்படி என்றால் இது அந்தப்புரம் இல்லையா? வழக்கமாய், பெண்கள் அந்தப்புரத்தில் தங்க வைக்கப்படுவது தான் வழக்கம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..."
"தாம் கூறுவது உண்மை தான். தங்களை வரவேற்றபோது எங்களுடன் இருந்த சிறிய பெண்கள் படையை தாம் கவனித்தீர்கள் அல்லவா? அவர்கள் அனைவரும் எங்கள் விருந்தினர் தான். அனைவருக்கும் அந்தப்புரத்தில் இடம் ஒதுக்கி தரப்பட்டிருக்கிறது. இன்னும் பலருக்கும் இடம் அளிக்கும் வகையில் அந்தப்புரத்தில் வேண்டிய வசதி இருக்கிறது. ஆனால் இளவரசர் தங்களை இங்கு தங்க வைக்க தான் ஆணையிட்டு இருக்கிறார். அது ஏன் என்று தான் எங்களுக்கும் புரியவில்லை"
தன்மயாவுக்கு அடிவயிற்றில் புளியை கரைத்தது. இது அவளை எங்கு கொண்டு சென்று நிறுத்தப் போகிறதோ தெரியவில்லை.
"எங்கள் கோட்டைக்குள், தாங்கள் காண்பதற்கு நிறைய இடங்கள் இருக்கிறது. எனது சகோதரரின் இசைவை பெற்று நான் தங்களை அழைத்துச் செல்கிறேன்"
சரி என்று தலையசைத்தாள் தன்மயா.
"நாளை நாம் கோவிலுக்கு செல்லலாம்"
அதற்கும் சரி என்று தலை அசைத்தாள் அவள்.
அப்பொழுது சில பெண்கள் கையில் பெரிய தட்டுகளுடன் அவளது அறைக்கு அணிவகுத்து வருவதை பார்த்தாள் தன்மயா. அந்தக் தட்டுகளில் விதவிதமான பழங்களும், பாகினால் செய்யப்பட்ட அடை, பருப்பை உள்ளீடாக கொண்ட மோதகம் (மதுரைக்காஞ்சி 624-627), வெல்லப் பாகையும் பாலையும் கலந்து செய்த பண்ணியம் ( புறநானூறு 381), பயற்றுடன் சர்க்கரை சேர்த்து செய்யப்பட்ட கும்மாயம்
( பெரும்பாணாற்றுப்படை 194-95), போன்ற பலவித தின்பண்டங்களையும் கொண்டு வந்தனர்.
"தாம் வெகு தொலைவு பயணம் செய்து வந்திருக்கிறீர். தாம் பசியோடு இருக்க வேண்டும். வேண்டியவற்றை உண்ணுங்கள். இன்னும் ஏதாவது தேவை என்றால் கேளுங்கள்"
தன்மயாவுக்கு முழி பிதுங்கியது. இதற்கு மேல் இன்னுமா? இவற்றையெல்லாம் பார்த்த உடனேயே அவளுக்கு வயிறு நிரம்பியது போல் இருந்தது. இவற்றையெல்லாம் சாப்பிட்டால் என்னவாவது? ஆனால் ஒன்று பற்றி கூறியே ஆக வேண்டும்... அந்த தின்பண்டங்களில் இருந்தும், பழங்களிலிருந்தும் வந்த வாசனை... அடடா! என்ன ஒரு ரம்யம். அவை மூக்கை துளைத்தன...!
அந்த அறை, சட்டென்று அமைதியானது, அமுதன் உள்ளே நுழைந்தபோது. அங்கிருந்த அனைவரும் அமைதியாய் அறையை விட்டு வெளியேறினார்கள், எழிலரசியை தவிர.
"தாங்கள் தந்தையை சந்திக்கவில்லையா அண்ணா? இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டீர்களே...?"
"அவர் குருநாதருடன் பேசிக் கொண்டிருப்பதாய் கேள்வியுற்றேன். அதனால் பாதி வழியிலேயே திரும்பி வந்து விட்டேன்"
பெருமூச்சு விட்டாள் எழிலரசி. குருநாதருடன் உரையாட அமுதன் ஆர்வம் காட்டுவதே இல்லை.
"சரி, தாங்கள் பேசிக் கொண்டிருங்கள்" என்று அவள் அங்கிருந்து சென்றாள்.
தன்மயாவை புன்னகையுடன் ஏறிட்டான் அமுதன். தன் கரங்களைக் குவித்த அவள்,
"என்னை மன்னித்து விடுங்கள்" என்றாள்.
அது அவனுக்கு பதற்றத்தை தந்தது.
"எதற்காக மன்னிப்பு கோருகிறாய்?"
"தாங்கள் தான் இளவரசர் என்ற உண்மை அறியாமல் தங்களிடம் வெகுவாய் விளையாடி பரிகாசம் செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள், இளவரசே!"
"என்னை அமுதன் என்று அழை"
"ஆனால் அது தங்கள் பெயர் இல்லையே..."
அதைக் கேட்டு சிரித்த அவன்,
"நான் உன்னிடம் பொய் கூறினேன் என்று நினைக்கிறாயா?"
"இல்லையா?"
"இல்லை. அது என் தாயும் தந்தையும் என்னை அன்போடு அழைக்கும் பெயர். எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே அந்த பெயர் சொல்லி அழைக்கும் உரிமை பெற்றவர்கள். அப்படிப்பட்டவர்கள் என்னை இளவரசன் என்று அழைப்பதை நான் விரும்புவதில்லை"
"ஆனால், நான் தங்களுக்கு அறிமுகமான போது, நான் தங்களை அந்த பெயர் சொல்லி அழைப்பேன் என்று தாம் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் அல்லவா?"
"ஆமாம், எதிர்பார்க்கவில்லை. நீயும் மற்றவரைப் போல் என்னை படைத்தலைவர் என்று அழைப்பாய் என்று தான் எதிர்பார்த்தேன்"
"பிறகு இப்பொழுது எதற்காக நான் தங்களை அமுதன் என்று அழைக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்? தாங்கள் இளவரசர் அல்லவா?"
"இருக்கலாம். ஆனால் நீ அதை பற்றி கவலை கொள்ள வேண்டாம்... நீ என்னுடன் எப்படி பழகினாயோ அப்படியே பழகலாம்"
"ஆனால்..."
"முன்பின் தெரியாத இளவரசனுடன் சுதந்திரமாய் பழகுவது தானே உனக்கு சிரமமாக இருக்கும்? அமுதன் உனக்கு அறிமுகமானவன் தானே? உனக்கு அவனுடன் பழகவோ, பரிகாசம் செய்யவோ எந்த தயக்கமும் இருந்ததில்லையே...!"
"தாம் தான் இளவரசர் என்று அறியாமல் நடந்தது அது"
"அப்படி நடந்ததும் நல்லது தான். இளவரசனுக்கு உரிய மரியாதைகளை பெற்று நான் அலுத்து விட்டேன். என்னை நானாக உணர வைக்க ஓரிருவராவது இருக்கட்டும்"
அவனை உலக அதிசயம் போல் பார்த்தாள் தன்மயா.
"தாம் உண்மையிலேயே என் மீது வருத்தம் கொள்ளவில்லையா?"
"நிச்சயமாக இல்லை, என்னை தோழன் போல் பாவித்து பரிகாசம் செய்யும் பெண்ணை சந்தித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி"
"ஆனால், இது உங்கள் மரியாதை குறித்த விடயம் அல்லவா? நான் தங்களை பெயர் சொல்லி அழைத்தால், மக்கள் உங்களை பரிகாசம் செய்ய மாட்டார்களா?"
"மாட்டார்கள். ஏனென்றால் நீ அயல் நாட்டை சேர்ந்த பெண். வேறொரு மரபில் இருந்து வந்தவள். அதனால் நீ அப்படி அழைப்பதை யாரும் பெரிதாய் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் நீ எப்பொழுதும் போலவே இருக்கலாம்"
"இங்கிருக்கும் பணிப்பெண்கள் அனைவரும் எனக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறார்கள்" என்றாள் சங்கடத்துடன்.
"ஏன் அளிக்க மாட்டார்கள்? நீ இளவரசன் வாகைவேந்தனின் தோழி அல்லவா?" என்று சிரித்தான் அவன்.
"வரும் வழியில் தானே தாம் என்னை தமது தோழியாய் ஏற்றுக் கொண்டீர்? அப்படி இருக்கும் போது, இங்கு இருப்பவர்களுக்கு, நீங்கள் என்னை தோழியாக பாவிப்பது எப்படி தெரிந்தது?"
"வரும் வழியில் தான் தகவல் அனுப்பினேன்"
"வரும் வழியில்லா? ஆனால், வழியில் தாம் யாரையும் சந்திக்கவில்லையே...!"
"சந்தித்தேன்... நாம் உணவு உண்பதற்காக ஓரிடத்தில் தாமதிக்கவில்லையா...?" என்று நமுட்டு புன்னகை வீசினான் அமுதன்.
"அங்கு தாம் யாருடனும் பேசியதை நான் கவனிக்கவில்லையே..."
அதற்கும் புன்னகைத்தான் அமுதன்.
"நீர் இவ்வளவு தந்திரசாலியாய் இருப்பீர் என்று எனக்கு தெரியாது"
வாய்விட்டு சிரித்தான் அமுதன்.
"அரண்மனையில் ஆண்கள் அணுகா அந்தப்புரம் இருக்கும் என்று கேள்விப்பட்டேன். என்னையும் தாம் அங்கு தான் தங்க வைப்பீர் என்று எண்ணினேன்...!"
"பெண்களை அந்தப்புரத்தில் தங்க வைப்பது தான் வழக்கம். ஆனால் உனக்கு தான் உன் சுதந்திரத்தை பறிக்கும் எதையும் செய்ய பிடிக்காதே...! நீ அந்தப்புரத்தில் தங்கினால், உனக்கு அங்கு சுதந்திரம் இருக்காது. அங்கு கட்டுப்பாடுகள் அதிகம். இங்கு விருந்தினர்களாக வருகை புரிந்திருக்கும் பெண்கள் உனது நடை, உடை, பாவனை குறித்து பல கேள்விகளை எழுப்பி உன்னை வெறுப்படையச் செய்யலாம். முக்கியமாய், நீ என்னை காண வேண்டும் என்று நினைத்தால் கூட, அது அவ்வளவு எளிதாய் நடக்காது. அதனால் தான் உன்னை என் மாளிகையில் தங்க வைத்துக் கொண்டேன்"
"இது தங்கள் மாளிகையா?"
"ஆம். இங்கு நீ சுதந்திரமாய் இருக்கலாம். யாரும் உன்னை கேள்வி கேட்க மாட்டார்கள்"
"இது உங்கள் மாளிகை என்கிறீர்கள்... ஆனால் இங்கு காவல் குறைவாய் இருப்பதை கவனித்தேன்"
"ஆம். அதீத கட்டுப்பாடுகள் எனக்கு பிடிப்பதில்லை. இங்கு வெளி சுற்றில் மட்டும் தான் காவல் இருக்கும். அவர்களை மீறி என் மாளிகைக்குள் யாரும் நுழைய முடியாது"
"என்னை தங்கள் மளிகையில் தங்க வைத்தது குறித்து யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்களா?"
"மாட்டார்கள். ஏனென்றால் நீ வாகைவேந்தனின் தோழி..."
"ஆனால், தங்கள் இளவரசருக்கு தோழிகளே இல்லை என்று தாங்கள் கூறவில்லையா, அமுதே?" என்று மீண்டும் பழைய பரிகாச நிலைக்கு திரும்பினாள் தன்மயா.
அதை கேட்டு சிரித்த அவன்,
"ஆம், அவர் தோழிகள் இல்லாமல் தான் இருந்தார். இப்பொழுது புதிதாய் ஒருத்தி கிடைத்திருக்கிறாள்" என்றான்.
"இளவரசி காஞ்சனமாலையிடமிருந்து தப்பிப்பதற்காக ஒன்றும் தாங்கள் என்னை தோழியாய் ஏற்கவில்லையே?"
சில நொடி திகைத்த அமுதன், வாய்விட்டு சிரித்தான்.
"இந்த சாத்தியக் கூரை பற்றி நான் எப்படி யோசிக்காமல் போனேன்?"
"ஏற்கனவே காஞ்சனமாலை என்னை பார்த்து முறைக்க துவங்கி விட்டார்" என்று சிரித்தாள் தன்மயா.
"அப்படியா? கேட்கவே மகிழ்ச்சியாய் இருக்கிறது"
"நான் சாப்பிடும் உணவில் அவர் நஞ்சை கலந்து விடாமல் இறைவன் தான் என்னை காக்க வேண்டும்" என்று மேலே பார்த்தபடி கூறினாள் தன்மயா.
அதைக் கேட்டு மேலும் சிரித்தான் அமுதன்.
"நல்லவேளை நான் அந்தப்புரத்தில் தங்கியிருக்கவில்லை. நான் அங்கு தங்கி இருந்திருந்தால், நிச்சயம் அவர் என்னை கொன்றிருப்பார்"
"உனக்கு ஒன்று தெரியுமா தன்மயா, நீ மிகுந்த அகண்ட அறிவைக் கொண்டிருக்கிறாய். அனைத்து காரண காரியங்களையும், அனைத்து திசைகளில் இருந்தும் ஆராய்கிறாய். அது தான் உனது சிறப்பு"
*நீங்களும் ஒரு படம் விடாம பார்க்க ஆரம்பிச்சீங்கன்னா, உங்களுக்கும் இப்படி எல்லாம் தோணும்* என்று மனதில் நினைத்துக் கொண்ட அவள்,
"அது சரி, நான் தங்களை பெயர் சொல்லி அழைப்பதை கேட்டால், தங்களது தந்தை என் தலையை கொய்துவிடமாட்டாரே?" என்றாள்.
"இளவரசன் வாகைவேந்தனின் தோழியை தொடும் துணிவு இங்கு யாருக்கும் இருக்காது... அரசருக்கும் தான்...!"
"அரண்மனைக்கு சென்ற பின், எனது பொறுப்பை இளவரசர் ஏற்பார் என்று தாம் கூறியதன் பொருள் இது தானா?"
"ஆம், அந்தப் பொருள்பட தான் கூறினேன்"
"அதோடு இன்னொன்றும் கூறினீர்..."
"என்ன?"
"அரண்மனையில் படைத்தலைவனுக்கு வேலை இல்லை என்றீர்...! அரண்மனையை அடைந்த பின், தாம் இளவரசராக உருவெடுத்து விடுவீர் என்றே அவ்வாறு கூறினீரோ?"
"நீ அனைத்தையும் சுலபமாய் பற்றிக் கொள்கிறாய்"
"தாம் தங்கள் தந்தையை சந்திக்க செல்லவில்லையா?"
"அவரை நான் உன்னுடன் சேர்ந்து சந்திப்பது உத்தமம் என்று நினைக்கிறேன்"
"தாங்கள் தான் இளவரசர் என்றால், மதங்கன் தங்களுடைய மாமா தானே?"
"ஆம். அவர் என் தாயின் சகோதரர்"
"அவரைப் பற்றி தங்கள் தந்தையிடம் கூற போகிறீர்களா?"
"நிச்சயம் கூறுவேன். அவர் யாராக இருந்தாலும் செய்த தவறுக்கு தண்டனை அடைந்தே தீர வேண்டும்"
"தங்களுடைய தாயார் தங்கள் மீது வருத்தம் கொள்ள மாட்டாரா?"
"வருத்தம் கொள்ளக்கூடாது... அவர் இந்நாட்டின் அரசி. இந்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் தன் மகளாய் கருத வேண்டியவர். என் மீது அவர் வருத்தம் கொள்வதாய் இருந்தால், வருத்தம் கொள்ளட்டும். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. அப்படி நடந்தால், அதன் பிறகு நான் அவரிடம் பேசவே போவதில்லை. ஏனென்றால், அப்படி நடந்து கொள்பவர் அரிசியாய் இருக்க தகுதியற்றவர்" என்றான் கோபமாய்.
அவனிடம் திடீர் மாற்றத்தை கண்டாள் தன்மயா. சற்று நேரத்திற்கு முன்புவரை அவளிடம் பேசிக் கொண்டிருந்த அமுதன் அல்ல அவன்... இளவரசன் வாகைவேந்தன்! நியாயத்திற்கு எதிராய் நிற்பவர் தனது தாயாகவே இருந்தாலும் அதைப்பற்றி கவலை கொள்ளாமல் நியாயத்தின் பக்கம் நிற்பவன்...! எப்படிப்பட்ட சிறந்த பண்பு நலம்...! அந்த குணம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது... அவனையும் தான்...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro