12 யார் யாரை மிரட்டுவது?
12 யார் யாரை மிரட்டுவது?
அந்த வில்லாளனை பார்த்த தன்மயா, கத்தியபடி அமுதனை நோக்கி ஓட துவங்கினாள்.
"அமுதரே... நகருங்கள்"
அவளை குழப்பத்துடன் ஏறிட்டான் அமுதன்.
"நகருங்கள்" என்று மீண்டும் கத்தினாள்.
"என்ன கூறுகிறீர்கள்?"
அவனைப் பிடித்து அவள் தள்ளிய அடுத்த கணம், அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு அம்பு பாய்ந்து சென்று தரையில் விழுந்தது. கீழே விழுந்த அம்பையும், பிறகு தன்மயாவையும் ஏறிட்டான் அமுதன்.
"அங்கே பாருங்கள்" என்று எதிர்ப்புறம் இருந்த கரையை நோக்கி தன் கையை நீட்டினாள் தன்மயா.
வில்லேந்திய ஒருவன், காட்டிற்குள் ஓடி மறைந்தான். அதிர்ச்சியே வடிவாய் நின்றிருந்த தன்மயாவை, அதிர்ச்சியோடு பார்த்தான் அமுதன். அவனை ஒருவன் கொல்ல முயன்றான் என்பதற்கான அதிர்ச்சி அல்ல அது. தன்னை சாவில் இருந்து காப்பாற்றியது தன்மயா என்பது தான் அவனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. அவள் தன் எதிரியால் அனுப்பப்பட்ட வேவுக்காரியாய் இருந்திருந்தால், நிச்சயம் அவள் அவனை காப்பாற்றி இருக்க மாட்டாள். அவளைப் பற்றிய தனது கணிப்பு தவறாக இருக்குமோ, அவள் ஒற்றுகாரியாய் இருக்க மாட்டாளோ, உண்மையிலேயே அவள் தன் நாட்டிற்கு வந்த பயணி தானா? என்ற எண்ணம் அவனுக்கு தோன்றியது. அவள் வேவுக்காரி இல்லை என்றாள், அவளை போன்ற நல்ல பெண் இருக்க முடியாது. அவளை மேலும் உற்று நோக்க முனைந்தான்.
"என்னை நீராட்ட அறையில் நீராடச் சொல்லி வலியுறுத்தினீர்கள். ஆனால் நீராட்ட அறையில் நீராட்ட வேண்டியவர் தாங்கள் தான். தங்களை சுற்றித் தான் ஆபத்து காத்திருக்கிறது" என்றாள் தன்மயா பயத்துடன்.
"அதற்காக என்னை கோழை போல் வீட்டிற்குள் ஒளிந்திருக்க சொல்கிறீர்களா?" என்றான் கீழே விழுந்த அந்த அம்பை எடுத்தவாறு.
"தங்களின் எதிரி துணிச்சல் மிக்கவனாக இருந்தால், தாம் அவனுடன் போரிடலாம். ஆனால் அவர்கள் கோழைகள். அதனால் தான் மறைந்திருந்து உங்களை கொல்ல முயல்கிறார்கள்" என்றாள் கோபமாக.
"எல்லா எதிரிகளும் ஒரே வகையில் சேர மாட்டார்கள். அனைவரும் நம்மை நேருக்கு நேர் நின்று சந்திக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது"
"ஆனால் தாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமல்லவா?"
"ஆம். நான் சற்று எச்சரிக்கையாக தான் இருந்திருக்க வேண்டும்" என்றான் அந்த அம்பின் நுனியை நுகர்ந்தவாறு.
"என்ன செய்கிறீர்கள்?" என்றாள் அவள் முகத்தை சுருக்கி.
"இது நஞ்சு துவைக்கப்பட்ட அம்பு"
"என்ன்னன? நஞ்சா?" என்றாள் அதிர்ச்சியுடன்.
"ஆம். செங்காந்தள் கிழங்கை அரைத்து இதில் தடவி இருக்கிறார்கள்"
"அப்படி என்றால், அதன் முனை உரசினால் கூட இறந்து விடுவோமா?"
"ம்ம்ம்"
"அவர்கள் யாராக இருக்கக்கூடும்?"
"தெரியவில்லை... ஒரு படைத்தலைவனுக்கு எதிரிகள் இருப்பது ஒன்றும் புதிதல்ல"
"என்னை மன்னித்து விடுங்கள்" என்று அவள் கூறவும்,
அவன் குழம்பினான்.
"தாம் எதற்காக மன்னிப்பு கோருகிறீர்?"
"என்னால் தானே தாங்கள் இந்த கிராமத்தில் தாமதிக்க நேர்ந்தது? நீங்கள் தனியாக இருந்திருந்தால், இங்கு தங்க நேர்ந்திருக்காது" என்றாள் அவள் வருத்தத்தோடு.
"ஆபத்து எல்லா இடங்களிலும் உண்டு. அது நான் இங்கு தாமதித்ததால் மட்டுமல்ல, தேரில் பயணம் செய்தாலும் ஆபத்து பின்தொடரத்தான் செய்யும். தாம் செய்யாத தவறுக்காக தங்கள் மீது குற்றம் சுமத்திக் கொள்ளாதீர்கள். உண்மையை கூறப்போனால், நான் உங்களுக்கு நன்றி கூற வேண்டும். ஏனென்றால், என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தாம் எனக்கு உதவியிருக்கிறீர்"
"ஒருவேளை உங்கள் உடலை அந்த அம்பின் முனை உரசி இருந்தால்...? அந்த நஞ்சு உங்கள் ரத்தத்தில் உடனே கலந்திருக்கும் அல்லவா?" என்றாள் பதற்றமாக.
"அது தான் எதிரிகளின் திட்டமாய் இருக்க வேண்டும்"
"நினைக்கவே அச்சமாக இருக்கிறது. தங்களுக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் நான் என்னை மன்னித்திருக்கவே மாட்டேன். குற்ற உணர்ச்சியில் வெந்து செத்திருப்பேன்"
பொருளோடு புன்னகைத்த அமுதன்,
"நான் மரணத்தை கண்டு அஞ்சவில்லை" என்றான்.
"அதற்காக சுலபமாய் இறந்து விடலாகாது... தாம் ஒரு வீரர். தங்கள் மரணம் வரலாறாய் இருக்க வேண்டும்"
மென்மையாய் புன்னகைத்த அவன்,
"ஆம், எனக்கும் அது தான் வேண்டும். சோழ இளவரசர் திருமாவளவருக்காக போர் புரியும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அவர், வஞ்சித்து உயிரோடு எரிக்கப்பட்டார்"
அமைதியாய் இருந்தாள் தன்மயா.
"அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், போர்முனையில் நான் யார் என்பதை நிரூபித்து இருப்பேன். வேளிர்களை ஒரு கை பார்த்திருப்பேன். அப்படி செய்யும் கொடுப்பினை எனக்கு இல்லாமல் போனது..."
"ஏன் போரில் தங்களுக்கு இவ்வளவு ஈடுபாடு? மக்களை கொன்று குவிப்பது பாவம் இல்லையா? போருக்கு பின்னால் ஏற்படும் விளைவுகளை பற்றி தாம் எப்போதாவது சிந்தித்ததுண்டா? பெண்கள் தங்கள் கணவர்களையும், மகன்களையும், இழக்கிறார்கள். குழந்தைகள் தங்கள் தந்தை மற்றும் சகோதரர்களையும் இழக்க நேரிடுகிறது. போருக்கு பின்னால் மிஞ்சுவது என்ன? இறந்த உடல்களும், வெட்டுண்ட உடல் பாகங்களும் தானே? அவற்றையெல்லாம் பார்க்கும் போது தங்களுக்கு வருத்தமாக இருந்ததில்லையா?"
"போர் புரிதல் என்பது ஒரு வீரனின் கடமை. நாங்கள் வீரர்கள். நாங்கள் பிறப்பெடுத்தது போரிடுவதற்காக தான். போர் புரிய வேண்டும் என்ற தாக்கம் எங்கள் உதிரத்தில் கலந்தது. நான் போரில் இறந்தால் என் தாயும் நிச்சயம் கண்ணீர் வடிப்பார். அதற்காக, நான் போருக்கு செல்லாமல் என் தாயுடன் வீட்டில் அமர்ந்திருக்க முடியாது. நாங்கள் தலைமுறை தலைமுறையாய் போரிட்டுக் கொண்டிருப்பவர்கள். அதற்காகவே பயிற்சி பெறுபவர்கள். ஒவ்வொரு நொடியும் நாங்கள் மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அப்படித்தான் எங்கள் வாழ்க்கை நகர்கிறது. வீரர்கள் பிறந்ததே போரிடத்தான். அதற்கு மீறிய எண்ணம் எங்கள் மனதில் இருப்பதில்லை. அப்படிப்பட்ட என் வீரம், சோழ குல தோன்றலான திருமாவளவருக்கு பயன்படவில்லையே என்பது தான் எனது வருத்தம்..."
"ஒருவேளை திருமாவளவர் உயிரோடு இருந்தால் தாம் என்ன செய்வீர்?"
ஒரு கணம் திகைத்த அமுதன்,
"கடவுளுக்கு நன்றி கூறுவேன். ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்கு நிச்சயம் வாய்க்கப் போவதில்லை. ஏனென்றால் திருமாவளவர் இறந்துவிட்டார்"
"ஒருவேளை அவர் தப்பித்து விட்டிருந்தால்?"
"அதற்கு வாய்ப்பே இல்லை. பகைவனிடம் சிறை பட்டிருந்த அவரை, அவர் இருந்த சிறைச்சாலைக்கு தீ வைத்து தீக்கிரையாக்கி விட்டார்கள்"
"ஒருவேளை அவர் உயிரோடு வருவதாக வைத்துக் கொள்ளுங்களேன்...!"
"ஒருவேளை அப்படி நடந்தால், நீர் கேட்டுக் கொண்டது போல், நான் போர் புரிவதையே விட்டு விடுகிறேன்" என்று சிரித்தான் அமுதன், அவள் கூறிய வார்த்தையில் நம்பிக்கை இல்லாமல்.
"அவசரப்பட்டு வார்த்தையை விட வேண்டாம். பிறகு தாங்கள் வருத்தப்பட நேரிடும்"
"தாங்கள் கூறுவது போல் திருமாவளவர் உயிரோடு இருந்தால் தானே நான் வருத்தப்பட நேரிடும்?"
"வேண்டாம்... தாம் கூறிய வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள். பிறகு திருமாவளவருக்காக போரிட முடியவில்லையே என்ற ஏக்கம் உங்களை வாட்டும்"
"திருமாவளவர் உயிரோடு வரட்டும். அதன் பிறகு அதைப்பற்றி நான் யோசிக்கிறேன்"
தன் கைகளை கட்டிக்கொண்டு பொருளோடு சிரித்தாள் தன்மயா. அவளை கண்களை சுருக்கி பார்த்தான் அமுதன். அவளது இந்த சிரிப்புக்கு என்ன பொருள்?
தனது ஈர துணியை கொண்டு அந்த அம்பின் முனையை சுத்தி கட்டினான் அமுதன். அப்பொழுது அவன் மேற்கையில் எதையோ பார்த்த தன்மயா,
"தங்கள் கையில் ஒரு வண்டு அமர்ந்திருக்கிறது" என்றாள்.
"மச்சம்" என்றான் அமுதன் சாதாரணமாய்.
தன் விழிகளை விரித்து அந்த மச்சத்தை பார்த்த அவள்,
"பார்க்க வண்டு போலவே இருக்கிறது" என்றாள்.
"வாருங்கள் போகலாம்" என்று சிரித்தான் அவன், ஒரு துண்டால் தன் உடலை போர்த்திக் கொண்டு.
அவர்கள் பொன்னியின் இல்லம் நோக்கி நடந்தார்கள்.
அவர்கள் பொன்னியின் வீட்டிற்கு வந்த போது, கையில் ஒரு சிறிய மரப்பெட்டியுடன் இருந்த ஒருவர், செம்பனை எங்கோ அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அமுதனை பார்த்து நின்ற அவர், அவனை நோக்கி தலை தாழ்த்தி,
"வணங்குகிறேன்" என்றார்.
தன் தலையசைத்தான் அமுதன்
"கொஞ்சம் பொறுங்கள்" என்று செம்பனிடம் கூறிவிட்டு அமுதனை நோக்கி வந்தார் அவர்.
அமுதனுடன் இருந்த தன்மயாவை பார்த்து, மேற்கொண்டு பேச தயங்கினார்.
"இவர் இந்த ஊர் வைத்தியசாலையின் தலைமை வைத்தியர்" என்று அவரை தன்மயாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
"வணக்கம் ஐயா" என்றாள் தன்மயா கரங்களைக் குவித்து.
"இவர் நம் விருந்தினர். அயல்நாட்டிலிருந்து நம் நாட்டைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறார். அவர் முன் பேசுவது எந்த விதத்திலும் பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்றான் அமுதன்.
"அரசரின் கட்டளை, ஊர் மக்களிடம் சென்று சேர வகை செய்துள்ளேன். பிள்ளை பேரு இல்லாத தம்பதியர் விரைவில் வந்து என்னை சந்திப்பர். அவர்களிடம் பேசி, அவர்களுக்கு இருக்கும் உண்மை பிரச்சனை என்ன என்பதை நான் கண்டறிந்து விடுவேன்"
அதைக் கேட்டு வியப்படைந்த தன்மயா, தன் புருவம் உயர்த்தினாள். அவள் பொன்னியின் சிக்கலை பற்றி மட்டும் தான் ஆலோசித்தாள். ஆனால் அமுதனோ, அவனது நாட்டில் உள்ள அனைவரது சிக்கலையும் தீர்க்கும் ஒரு தீர்வை கண்டுபிடித்து விட்டான். என்ன ஒரு தொலைநோக்கு பார்வை!
"தங்களுடைய மாணவர்களையும், உதவியாளர்களையும் தங்கள் குழுவில் இணைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு அரசாங்கமே படியாளக்கும் படி ஏற்பாடு செய்கிறேன். நான் இந்த விவகாரத்தை இளவரசரின் கவனத்திற்கு கொண்டு சென்று, சீக்கிரமே நமது நாடு முழுவதும் இதை செயல்படுத்த வழி செய்கிறேன்" என்று அமுதன் கூறியதை கேட்டு, மேலும் வியப்புக்கு உள்ளானாள் தன்மயா.
அப்படியானால், இந்த குழு, குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதியரை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு தாம்பத்தியம் பற்றி தெரியாமல் இருந்தால், அதைப் பற்றியும் போதிக்க போகிறார்கள். என்ன ஒரு அதிகாரப்பூர்வமான செயல்!
"தங்கள் ஆணைப்படி செய்கிறேன், படைத்தலைவரே" என்று அங்கிருந்து செம்பனுடன் சென்றார் அந்த வைத்தியர்.
"தாம் அரசாவதற்குரிய எல்லா தகுதியும் வாய்ந்தவர்" என்று அவனை புகழ்ந்தாள் தன்மயா.
புன்னகைத்தபடி நடந்தான் அமுதன்.
"தாம் எனக்கு ஏமாற்றம் அளித்து விட்டீர்" என்றாள் அவனை பின்தொடர்ந்த தன்மயா.
நடப்பதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்து முகம் சுருக்கிய அமுதன்,
"ஏன்? நான் என்ன செய்தேன்?" என்றான்.
"நான் அரசனாக விரும்பவில்லை, அதைப் பற்றிய எண்ணமே எனக்கு இல்லை, நான் உண்மை ஊழியனாக இந்த நாட்டிற்கு சேவை செய்யவே விரும்புகிறேன் என்று கூறுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், தாங்கள் அப்படி கூறாமல், என் புகழுரையை கேட்டு புன்னகைத்தீர்கள்"
"தாம் எனக்களித்த புகழுரையை நான் ஏற்றுக் கொண்டேன். அவ்வளவே. ஏனென்றால், நீங்கள் என்னை புகழ்வதற்காக தான் அதை கூறினீர்கள் என்று எனக்கு தெரியும்"
"ஒருவேளை, நான் உங்களை புகழ்ந்ததைக் கேட்டு நீங்கள் சிரித்தீர்கள் என்று உங்கள் இளவரசர் வாகைவேந்தருக்கு தெரிந்தால், அவர் தங்களை தவறாக எண்ண மாட்டாரா?"
"அவர் தான் இங்கு இல்லையே..."
"ஒருவேளை, அவருடைய ஒற்றர்கள் உங்களை பின்தொடர்ந்து வந்தால், அவர்களுக்கு தெரிந்து விடும் அல்லவா? அவர்கள் அவரிடம் சென்று கூறினால், அவர் உங்களை தவறாக தானே நினைப்பார்?"
"எதற்காக எல்லாவற்றையும் இவ்வளவு ஆழமாய் சிந்திக்கிறீர்கள்?"
"தங்களை விட ஆழமாய் ஒன்றும் நான் சிந்திக்கவில்லை. நான் பொன்னியின் சிக்கலை மட்டும் தான் தீர்க்க நினைத்தேன். ஆனால் தாங்கள், அதற்கான தீர்வை கண்டுபிடித்ததோடு மட்டுமல்லாமல், அதை இந்த நாடு முழுவதும் பரப்பி அனைவரும் பயனடைய செய்து விட்டீர்கள். தாங்கள் உண்மையிலேயே சிறந்த திறமைசாலி!"
தன் கைகளை கட்டிக்கொண்டு அவளை பார்த்து புன்னகைத்த அமுதன்,
"இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? தங்கள் புகழுரையை ஏற்க வேண்டுமா? அல்லது என் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டுமா?" குறுநகை புரிந்தான்.
பெருமூச்சு விட்ட தன்மையா,
"அமுதரே, தாங்கள் மிகவும் நல்லவர். தாம் எந்த சிக்கலிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறேன். அதற்காகத் தான் கூறினேன்"
"வாகைவேந்தர் என்னை நன்கு அறிவார். என்னை மட்டுமல்ல, அவரை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரை பற்றியும் அவர் நன்கு அறிவார். யாரிடம் எந்த காரியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதைப்பற்றி நன்கு அலசி ஆராய்ந்த பின்னரே அவர் அதை செய்வார்"
"அவரை கலந்தாலோசிக்காமல் தாங்களாகவே முடிவெடுத்து விட்டீர்கள் என்று தெரிந்தால், அவர் தங்கள் மீது சினம் கொள்ள மாட்டாரா?"
தன் இடைக்கச்சையில் வைத்திருந்த முத்திரை மோதிரத்தை எடுத்த அமுதன், அதை அவளிடம் காட்டினான். அந்த நாட்டின் கொடியில் இருந்த வேலும் வாளும் அந்த மோதிரத்தில் இருந்தது.
"இது இந்த நாட்டின் முத்திரை மோதிரம். இந்த மோதிரம் வெகு சிலரிடமே இருக்கும் என்று நான் ஏற்கனவே தங்களிடம் கூறினேன். இந்த மோதிரம் என்னிடம் இருப்பதற்கான பொருள், நான் யாரிடமும் எதைப்பற்றியும் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்கலாம் என்பதாகும். அதற்கான அதிகாரத்தை இந்த மோதிரம் எனக்கு வழங்குகிறது" என்று அந்த மோதிரத்தை மீண்டும் தன் இடை கச்சையில் வைத்துக் கொண்டான்.
"நான் உங்களை மிகச் சிறந்த அறிவாளி என்று எண்ணியிருந்தேன். ஆனால் தாம் அப்படி இல்லையோ என்று என்னை ஐயுற வைத்து விட்டீர்கள்"
"ஏன்?" என்றான் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல்.
"பிறகு என்ன? முத்திரை மோதிரம் என்பது யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. அதை என்னிடம் காட்டி, அந்த ரகசியத்தை உடைத்து விட்டீர்கள். ஒருவேளை, அதை நான் தங்களிடமிருந்து களவாடி சென்று விட்டால் என்ன செய்வீர்கள்? அதை களவாடுவதற்காகவே வந்த கள்ளியாக நான் இருந்தால் என்ன செய்வீர்கள்?" என்றாள், கண்களை சுருக்கி மிரட்டும் தொணியில்.
அமுதனின் முகபாவம் மாறியது. ஆபத்தான கூரிய பார்வையுடன் அவளை நோக்கி முன்னேறினான். திடீரென்று மாறிவிட்ட அவனது முகபாவத்தை பார்த்து, பயந்து மென்று விழுங்கினாள் தன்மயா. அமைதியே வடிவாய் இருந்த அமுதனின் முகம், இப்படி அனலை கக்க கூடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. பின்னோக்கி நகர்ந்த அவள், அங்கிருந்த பெரிய வேப்ப மரத்தில் மோதி நின்றாள். அவள் அருகில் வந்து நின்ற அமுதன்,
"உன்னால் அதை களவாட முடியாது பெண்ணே...! நீ என் இடைக்கச்சையில் கை வைக்கும் முன், நான் உன்னை பிடித்து விடுவேன். அப்படியே அதை நீ கவர்ந்து சென்றாலும், அதனால் உனக்கு எந்த பயனும் இருக்காது. ஏனென்றால், எங்களது அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு தெரியும், இந்த மோதிரம் உன் போன்ற அயல்நாட்டு காரியிடம் இருக்காது என்று. அதே நேரம், இந்த நாட்டில் ஏலியன் போல் திரியும் பெண்ணை கைது செய்யச் சொல்லி நானும் கட்டளை பிறப்பிப்பேன். அந்த ஏலியன் யார் என்பதை கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. ஏனென்றால், அப்படி இருப்பது நீ ஒருத்தி மட்டும் தான்" என்று கூறி நிறுத்திய அவன், திகிலடைந்திருந்த அவள் முகத்தை பார்த்து வாய்விட்டு சிரித்தான், அவளுக்கு குழப்பம் அளித்து.
"அச்சமடைந்துவிட்டீர்களா?"
அவள் ஆம் என்று தலையசைத்தாள்.
"தாம் அச்சமடைய தேவையில்லை. நான் விளையாடினேன்" பின்னால் நகர்ந்தான் அவன்.
"மெய்யாகவா?"
"ஆமாம். தாம் நல்ல பெண். நீங்கள் என் முத்திரை மோதிரத்தை களவாடுவதற்காக வந்தவராக இருந்தால், என்னை கொல்ல வந்த அம்பிலிருந்து என்னை காப்பாற்றி இருக்க மாட்டீர்கள். நான் காயம்பட்ட பின், மோதிரத்தை என்னிடமிருந்து சுலபமாக பறித்துக் கொண்டு சென்றிருப்பீர்கள்...! அதனால் என்னை அச்சுறுத்தி பார்க்கும் நாடகத்தை நிறுத்துங்கள்" என்று கூறிவிட்டு புன்னகையுடன் நடந்தான்.
நிம்மதி பெருமூச்சு விட்டாள் தன்மயா.
அது தானே...! யார், யாரை அச்சுறுத்துவது? ஒரு நாட்டின் படைத்தலைவனை, ஒரு சிறு பெண் அச்சுறுத்தி பார்ப்பதா?
அவன் தன்னை நம்புகிறான் என்ற எண்ணம், தன்மயாவின் முகத்தில் புன்னகையை மலர செய்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro