10 தன்மயாவின் பாசாங்கு
10 தன்மயாவின் பாசாங்கு
வீட்டினுள் வந்த தன்மயா, பொன்னி இன்னும் உறங்காமல் இருப்பதைக் கண்டாள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, தாம்பத்தியத்தை பற்றி அவளுக்கு புரிய வைப்பது என்ற முடிவுக்கு வந்தாள். அது கொஞ்சம் சங்கடம் அளிக்கக் கூடியது தான் என்றாலும், அவள் அதை செய்யவில்லை என்றால், வேறு யாரும் அதை நிச்சயம் செய்ய மாட்டார்கள். கொஞ்சம் நாசுக்காக... இல்லை, இல்லை, வெளிப்படையாகவே அவளுக்கு உடைத்து கூற வேண்டும். வேறு வழியில்லை. அவள் அவர்களது வீட்டில் தங்கி இருக்கப் போவது வெகு சொற்ப நேரம் தான். அதில், சுற்றி சுற்றி வளைத்தெல்லாம் பேசிக் கொண்டிருக்க முடியாது. அப்படி கூறினால், அந்த பெண்ணுக்கு புரியுமோ இல்லையோ...!
பொன்னி அவளைப் பார்த்து சிரிக்க, அவளைப் பார்த்து வேதனை சிரிப்பு சிரித்தாள் தன்மயா.
"என்ன ஆயிற்று அக்கா? தாங்கள் ஏன் சோகமாய் இருக்கிறீர்கள்?"
"இங்கு வரும் வழியில், வழக்கு ஒன்றை விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழக்கு என்னை வெகுவாய் பாதித்துவிட்டது" என்றாள் தன் தலையை அழுத்தியபடி.
"அது என்ன வழக்கு அக்கா?"
"அது ஒரு பலாத்கார வழக்கு. ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறான்" என்றாள் சோகமாய்.
அதைக் கேட்ட பொன்னி முகத்தை சுருக்கினாள். பலாத்காரம் என்றால் என்ன என்று அவளுக்கு தெரியவில்லை. அதைப்பற்றி அவளுக்கு தெரிந்திருந்தால் தான் அவள் எப்பொழுதோ கருவுற்று இருப்பாளே...!
"சற்று யோசித்துப் பார் பொன்னி...! முன்பின் தெரியாத ஆடவன் ஒருவன், ஒரு பெண்ணின் உடைகளை களைய முற்பட்டால் அந்த பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும்? தன் கணவன் அல்லாத ஆடவன் ஒருவன் அவளை தொட முனைந்த போது, அவளுக்கு எப்படி இருந்திருக்கும்? அவளை அப்படி உடையின்றி காண்பது அவள் கணவனுக்கு மட்டுமே இருக்கக் கூடிய உரிமை அல்லவா? எல்லாவற்றிற்கும் மேலாக, திருமணத்திற்கு முன்பே அந்த பெண் கருத்தரித்து விட்டால் என்னவாகி இருக்கும்?" தன் நகத்தை கடித்த படி, தான் மிகப்பெரிய வேதனையில் இருப்பது போல் காட்டிக் கொண்டாள் தன்மயா.
பொன்னியின் முகத்தை ஓரக்கண்ணால் அவள் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். சந்தேகம் இல்லாமல் பொன்னியின் முகத்தில் குழப்பமும், பதற்றமும், பயமும் தெரிந்தது.
"கருவுறுதலா? தாங்கள் கூறுவது எனக்கு புரியவில்லை. ஒரு ஆடவன் ஒரு பெண்ணின் உடையை களைய முற்பட்டதாய் கூறினீர். அதற்கும் அந்தப் பெண் கருவுறுதலுக்கும் என்னக்கா சம்பந்தம்?" என்றாள் அவள் பயத்துடன்.
"அப்படித்தானே ஒரு பெண் கருவுற முடியும்? ஒரு ஆணும், பெண்ணும் உடலால் இணையும் போது தான் அவள் கருவுறுவாள். அந்தப் பெண்ணின் இணக்கமின்றி அவன் அதை செய்யும் போது, அது பலாத்காரம் எனப்படுகிறது"
"உடலால் இணைவதா...?" முணுமுணுத்தாள் அவள்.
"ஆம். வழக்கமாய் ஒரு பெண்ணை அவளது கணவன் தான் தொடுவான். ஏனென்றால் அது அவனது உரிமை. அதை மனைவியும் முழுமனதாய் ஏற்பாள். ஏனென்றால், அது அவளது கடமை. திருமணம் என்பது அது தானே? தன் குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்பதற்காக, ஒரு ஆண் ஒரு பெண்ணை மணக்கிறான். அந்த குடும்பத்திற்கு வாரிசை அளிக்க வேண்டும் என்பது அந்த பெண்ணின் பொறுப்பல்லவா? அது தானே தாம்பத்தியம்?"
"என்ன அக்கா கூறுகிறீர்கள்? தாம்பத்தியம் என்பது, திருமணம் செய்துகொள்வது இல்லையா?" என்றாள் பரிதவிப்புடன்.
"இல்லை. தம்பத்தியம் என்பது, திருமணத்திற்கு பிறகு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்படும் நெருக்கம்"
"நெருக்கமா? ஆனால், ஆணும் பெண்ணும் எப்படி அக்கா தொடுவது? அது ஒழுக்கக் கேடு அல்லவா?"
அதைக் கேட்டு புன்னகைத்த தன்மயா,
"அது ஒழுக்கக் கேடு என்றால், இந்த உலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது? அப்படி பார்க்க போனால், இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் ஒழுக்கமற்றவர் தான். ஏனென்றால், அனைவரும் அவரது குடும்பத்திற்கு வாரிசை பெற்று தந்தவர்கள் தானே? நமது பெற்றோர் ஒழுக்கத்தோடு தான் இருப்போம் என்று நினைத்திருந்தால், நீயும் நானும் பிறந்திருக்க முடியாதே...!"
"அப்படி என்றால் எனது அம்மா கூட அப்படித்தான் என்கிறீர்களா?" என்றாள் நம்ப முடியாமல்.
"உனது அம்மா மட்டுமல்ல, உனது அம்மாவின் அம்மாவும் அப்படித்தான். உனது மாமியாரும் அப்படித்தான். தாம்பத்தியம் நிகழாமல் எந்த பெண்ணும் குழந்தை பெற முடியாது. தம்பதியருக்கிடையில் எதுவும் தவறில்லை. கணவன் மனைவிக்கு இடையில் ஒழுக்கம் என்ற வரையறை கிடையாது. திருமணம் என்னும் பந்தம் அவர்களுக்கு அந்த உரிமையை வழங்குகிறது. திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண்ணை தொடுவது தவறு. அதனால் தான், தங்கள் படைதலைவர், அதை செய்ய துணிந்த ஆணை சவுக்கால் அடித்து விலாசிவிட்டார்"
வெளிறிய முகத்தோடு தன்மயாவை பார்த்துக் கொண்டிருந்தாள் பொன்னி. அவளது கைகள் நடுங்கின. உடை களைதல் என்பதை நினைக்கும்போதே அவளுக்கு உயிர் போவது போல் இருந்தது.
"ஆனால், எப்படி ஒரு ஆணை ஒரு பெண் தொட அனுமதிக்க முடியும்?"
"குடும்பத்திற்கு வாரிசு வேண்டுமென்றால் அனுமதிக்கத்தான் வேண்டும்"
"ஆனால், இதைப் பற்றி எல்லாம் என் கணவர் என்னிடம் கூறியதும் இல்லை, அவர் என்னை தொட முயன்றதும் இல்லையே..."
"தங்களை சங்கடப்படுத்த வேண்டாம் என்று அவர் நினைத்திருக்கலாம்..."
அவருக்கும் அதெல்லாம் தெரியாது என்று தன்மயா கூறவில்லை.
"அவருக்கும் கூட இதைப் பற்றி தெரியாது என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால், அவரது அம்மா என்னை திட்டும் போது அவர் அமைதியாக இருந்திருக்க மாட்டார் அல்லவா?"
"அதைப்பற்றி கேட்டு தெளிய வேண்டியது தாங்கள் தான்"
"ஆனால் ஒரு ஆடவனிடம் நான் எப்படி இதை பற்றி பேசுவது?"
"அந்த ஆடவன் உமது கணவர். வேற்று மனிதர் அல்ல. அவரிடம் தாங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். தன் கணவனிடம் மனைவி எதைப் பற்றி வேண்டுமானாலும் பேச இந்த உலகம் அனுமதிக்கிறது. நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள், தங்களுக்கு குழந்தை இல்லை என்பதற்காக இந்த உலகம் உங்களை தூற்றவில்லையா?"
ஆம் என்று கவலையோடு தலையசைத்தாள்.
"அதற்கு என்ன பொருள்? இந்த உலகம் தாம் என்ன செய்கிறீர்கள் என்பதை பற்றி அக்கறை கொள்ளவில்லை. என்ன கொடுக்கிறீர்கள் என்பதைத்தான் பார்க்கிறது"
"ஆனால் நான் கருவுற்று விட்டால், நான் என்ன செய்து அதைப் பெற்றேன் என்று அனைவருக்கும் தெரிந்து விடுமே..."
"நிச்சயம் தெரியத்தான் செய்யும். தங்கள் பெற்றோரின் செயலின் முடிவு நீங்கள்... உங்கள் செயலின் முடிவு உங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை..."
"என் மாமியார் என்னை பற்றி என்ன நினைப்பார்?"
"அவர் எதுவும் தவறாக நினைக்க மாட்டார். ஏனென்றால், அவருக்கும் ஒரு மகன் இருக்கிறார் அல்லவா?"
"மேலும் ஆறு மகள்களும் இருக்கிறார்க"
அதைக் கேட்டு வாயைப் பிளந்தாள் தன்மயா.
"ஏழு பிள்ளைகளைப் பெற்ற ஒரு பெண், உங்களுக்குள் நடப்பது என்ன என்பதை கவனிக்க எப்படி தவறினார்?"
அமைதியாய் இருந்தாள் பொன்னி.
"சரி, போகட்டும். நான் கூறியதை ஆலோசித்துப் பாருங்கள்"
"இல்லை அக்கா. இதையெல்லாம் என்னால் செய்ய முடியும் என்று எனக்கு தோன்றவில்லை"
அட போங்கடா! என்று ஆனது அவளுக்கு.
இதெல்லாம் வேலைக்கு ஆவதாய் அவளுக்கு தெரியவில்லை. அமுதனிடம் செல்வதை தவிர அவளுக்கு வேறு வழி இல்லை. நாளெல்லாம் தேர் பயணம் செய்து களைத்திருந்த அவள், சற்று உறங்கி ஓய்வு எடுக்கலாம் என்று கண்களை மூடினாள். ஆனால் பொன்னி உறங்கவில்லை. அவளால் உறங்க முடியவில்லை. அவளுக்கு பயத்தில் உடல் சூடேறி காய்ச்சல் வருவது போல் இருந்தது.
மறுநாள் காலை
தூக்கத்திலிருந்து கண்விழித்த தன்மயா, தான் ஒரு புதிய இடத்தில் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டாள். அப்பொழுது தான், முன்தினம் நடந்தவை அவளுக்கு நினைவுக்கு வந்தது. தரையில் படுத்திருந்த பொன்னி, அங்கு இருக்கவில்லை. தன் பையில் இருந்த லெக்கிங்சை எடுத்து மாட்டிக் கொண்டாள். முழங்கால் நீல உடையணிந்து, இந்த மக்களை சங்கடப்படுத்த அவள் விரும்பவில்லை. அறையை விட்டு வெளியே வந்த அவள், அகவழகனுடன் ஒரு மனிதன் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை கண்டாள். அவன் தான் பொன்னியின் கணவனாக இருக்க வேண்டும்.
"வணங்குகிறேன்" என்றாள் அவள்.
"வாருங்கள்... இரவு நல்ல உறக்கம் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்றார் அகவழகன்.
"ஆம், நிம்மதியாய் உறங்கினேன்"
வித்தியாசமான தோற்றத்துடன் இருந்த அவளை, வைத்த கண் வாங்காமல், வாயை பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் பொன்னியின் கணவன்.
"இவன் எனது மகன் செம்பன்"
"வணக்கம்" என்றான் செம்பன்.
"படைத்தலைவர் எங்கு சென்றார்?" என்றாள் அவள்.
"அவர் இங்கு இல்லை. எங்கு சென்றார் என்றும் தெரியவில்லை. கவலைப்படாதீர்கள் வந்துவிடுவார்"
அமுதன் எங்கு சென்றான் என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள் தன்மயா. ஒருவேளை அவள் தாம்பத்தியத்தை பற்றி பேசிய பேச்சைக் கேட்டு தலைதெறிக்க ஓடி விட்டானோ? அப்படி என்றால், பொன்னியின் கதி என்னாவது? சற்று நேரம் யோசித்த அவள், அந்த பிரச்சனையை தன் கையில் எடுப்பது என்று முடிவு செய்தாள். அதை அப்படியே விட்டுவிட அவள் தயாராக இல்லை.
"ஆம், அவர் ஊர் தலைவருக்கு சில கட்டளைகளை பிறப்பிக்க சென்றிருப்பார் என்று நினைக்கிறேன்" என்றாள்.
"என்ன கட்டளை?"
"நாங்கள் வரும் வழியில், ஒரு பலாத்கார வழக்கு நடந்து கொண்டிருந்தது. அந்த ஊரில் சில கட்டளைகளை அவர் பிறபித்தார். அதை இங்கும் நடைமுறைப்படுத்த சென்றிருப்பார் என்று நினைக்கிறேன்"
"பலாத்காரம் என்றால் என்ன?" என்றான் செம்பன், பொன்னி கேட்டது போலவே.
அவனை அதிர்ச்சியுடன் ஏறிட்ட அகவழகன், தன்மயாவையும் அதிர்ச்சியுடன் பார்த்தார்.
"அதைப்பற்றி தங்களுக்கும் தெரியாதா? எனக்கும் அதைப் பற்றி தெரியாது" என்றாள் தன்மயா முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு.
"அவர் எதைப் பற்றி பேசுகிறார் தந்தையே?" என்றான் செம்பன்.
அவனை அருகில் இருந்த அறைக்கு இழுத்துச் சென்றார் அகவழகன். அதைப் பார்த்து சிரித்த தன்மயா, தலைவாசல் பக்கம் திரும்ப, அங்கு அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான் அமுதன்.
தும்பை பூ நிறத்தில் வெள்ளை வெளேர் என்ற இரவு உடையுடன், லெக்கின்ஸ் அணிந்து நின்றிருந்த அவளை, பார்த்து மலைத்தான் அவன். எந்த அணிகலனும், அலங்காரமும் இல்லாத அவளது முகம், மாசற்று காணப்பட்டது. அவன் நாட்டுப் பெண்கள், நிறைய அணிகலன்கள் அணிந்து, முகத்திற்கு மஞ்சள் பூசி, கண்களுக்கு மையும், நெற்றியில் குங்குமமும், தலையில் பூக்களும், சூடிக்கொண்டு அழகாக காட்சி அளிப்பார்கள். ஆனால் அவள் முகத்தில் ஒன்றுமே இல்லை. ஆனாலும் பார்க்க அழகாக இருந்தாள்.
அமுதனை பார்த்த தன்மயா, நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அவன் கேட்டிருக்க வேண்டும். அவன் முகபாவத்தை வைத்து அதை அவள் ஊகித்துக் கொண்டாள். அவனை நோக்கி ஓடிய அவள், தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டி சிரித்தாள்.
"எடுத்துக்கொண்ட காரியத்தை, செவ்வனே நிறைவேற்றி விட்டீர் போலிருக்கிறது?" என்றான் அவன் புன்னகையுடன்.
அவன் அருகில் வந்து, அவனிடம் ரகசியமாய்,
"ஆம், எடுத்துக்கொண்ட காரியத்தை முடித்து விட்டேன். நான் வேறு என்ன செய்வது? தாங்கள் அஞ்சி ஓடி விட்டீர் என்று நினைத்தேன்" என்றாள் எள்ளலாய்.
அதைக் கேட்டு அமுதன் கொதித்துப் போனான்.
"என்ன்னன? நான் அஞ்சு ஓடுவதா?" என்றான் அவன் கோபமாய்.
"ஆம், நேற்று இரவு நான் தாம்பத்தியத்தை பற்றி பேசும் போது உங்கள் முகம் போன போக்கை கவனித்தேனே...!" என்று சிரித்தாள் அவள்.
பெருமூச்சு விட்ட அமுதன்,
"தாங்கள் எப்படி இந்த விடயங்களை எல்லாம் இவ்வளவு சாதாரணமாய் பேசுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை" என்றான்.
"தங்கள் நாட்டைச் சேர்ந்த பெண்கள் இதைப் பற்றி எல்லாம் பேசுவதில்லை. பாவம் அவர்களுக்கு அடிப்படை விடயங்கள் கூட தெரியவில்லை. அதற்கு ஒழுக்கம் என்று பெயரிடுகிறீர்கள். இப்படி பேசாமல் போனதால் எத்தனை குடும்பங்கள் வாரிசு இல்லாமல் அல்லல் படுகிறதோ தெரியவில்லை" என்று சோகமாய் கூறிய அவள்,
"சரி, நீங்கள் எங்கு சென்றீர்கள் என்று கூறுங்கள்" என்றாள்.
அவன் அவளுக்கு பதில் அளிக்கும் முன், அகவழகனும், செம்பனும் அறையை விட்டு வெளியே வருவதை கண்டார்கள். அவர்களது முகங்கள் வெளிறிப் போயிருந்தது. தன் சிரிப்பை அடக்கிக் கொண்டாள் தன்மயா. என்ன நிகழ்ந்திருக்க கூடும் என்பதை அவள் ஊகம் செய்து கொண்டாள். அவளுக்கும் பொன்னிக்கும் முதல் நாள் இரவு நிகழ்ந்த அதே உரையாடல், அவர்களுக்கு இடையிலும் நிகழ்ந்திருக்க வேண்டும். அவள் அகவழகனை பார்த்து புன்னகை புரிந்தாள். ஆனால் செம்பன் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
"பலாத்கார வழக்கு தொடர்பாக கட்டளைகளை பிறப்பிக்கத் தான் நமது படைத்தலைவர் சென்றிருப்பார் என்று நான் தங்களிடம் கூறவில்லையா?" என்று அவள் கூற, அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான் அமுதன்.
"நான் கூட அதைப்பற்றி தங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், எனக்கும் தங்கள் மகனைப் போலவே அதை பற்றி ஒன்றும் தெரியாது" என்றாள் அவள்.
அவள் முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு பேசியதை பார்த்த அமுதன் திகைத்தான்.
"எனக்கும் அதைப் பற்றி கூறுகிறீர்களா, ஐயா?"
"இதைப் பற்றி, தாங்கள் என் மனைவியிடம் கேட்டு தெரிந்து கொள்வது நலமாய் இருக்கும்" என்றார் அகவழகன் தயக்கத்துடன்.
"ஏன் ஐயா? தாம் தங்கள் மகனுக்கு மட்டும் தான் அதை விளக்கி கூறுவீரா?"
சங்கடத்தில் நெளிந்தார் அகவழகன்.
"சரி, நான் அம்மையாரிடமே கேட்டு தெரிந்து கொள்கிறேன். அவர் எங்கே இருக்கிறார்?"
"கொல்லைப்புறத்தில் இருக்கும் மாட்டு தொழுவத்தில் இருக்கிறார்"
"அப்படியா? சரி..." என்று பின்கட்டுக்கு சென்றாள் தன்மயா.
நிலவரத்தை நித்தியகல்யாணிக்கு தெரிவிக்க, தன்மயா முடிவெடுத்து விட்டாள் என்று புரிந்து விட்டது அமுதனுக்கு.
பொன்னியும், நித்தியகல்யாணியும் புழக்கடையில் மாடுகளுக்கு புல்லும் வைக்கோலும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவளையும் அவள் அணிந்திருந்த உடையையும் பார்த்த நித்தியகல்யாணி சங்கடப்பட்டார்.
"அம்மா, ஐயா தங்களிடம் ஒன்று கேட்கச் சொன்னார்"
"என்ன?"
"பலாத்காரம் என்றால் என்ன?"
அவர் அதிர்ச்சியில் விழி விரித்தார்... பொன்னியும் தான்.
"உங்களுக்கு தெரியுமா, தங்கள் மகனுக்கும் கூட அப்படி என்றால் என்னவென்றே தெரியவில்லை. தங்கள் கணவர் அவரை தனியே அழைத்துச் சென்று, அவருக்கு மட்டும் அதைப்பற்றி விளக்கி கூறினார். ஆனால் நான் கேட்ட போது, எனக்கு விளக்கிக் கூற மறுத்துவிட்டார். ஏன் என்றே புரியவில்லை" என்றாள் அவருக்கு அதிர்ச்சி அளித்து.
பதற்றத்துடன் அவளை ஏறிட்டார் நித்திய கல்யாணி. பொன்னியை பார்த்து சமிங்கை செய்தாள் தன்மயா. அதை புரிந்து கொண்ட பொன்னி,
"பலாத்காரமா? அப்படி என்றால் என்ன அக்கா?" என்றாள், மேலும் நித்தியகல்யாணிக்கு அதிர்ச்சி அளித்து.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro