Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 9

Published: July 13, 2021
NOTE: picture above Arjun and Suganthi.



     
நம்ம வாழக்கையிலேயே சிறந்த நாள்... சந்தோஷமான நாள்.. நமக்கான ஸ்பெஷல் நாள்... அன்னிக்கு யாராச்சும் அந்த சந்தோஷம் எல்லாத்தையும் பிடுங்கிகிட்டு, தன்னோட  ஆளுமைனால அந்த நாளையே குட்டிச்சுவரு பண்ணுனா எப்படி இருக்கும்? அப்படி தான் இருந்தது பூங்கா காலனியில இருந்த மூணு வீட்டு ஆட்களோட மனநிலை.

~~~~~~

தங்கள் இணையுடனான வாழ்க்கை பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் நிகழ்வை உறுதி படுத்தும் நாள்!

அர்ஜுன்- சுகந்தி நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்தேதி குறிக்கும் நாள்!

வயிற்றில் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க, பல வண்ண கனவுகளோடு வெட்கி கிடந்த தோழி சுகந்தியை, மேலும் சிவக்கச்செய்து ஏறக்குறைய மணப்பெண்ணைப் போல அலங்கரித்து அழைத்து வந்தாள் பூரணி. மகள் புகுந்த வீடு செல்லும் நாட்கள் வெகு அருகில் எனும் நிதர்சனம்; சந்தோஷத்தையும், சிறிதே சிறிது வலியையும் பெற்றவர்கள் நெஞ்சில் ஏற்றிவைத்து, கண்ணையும் நிறைத்தது. அது வரை சிண்டு பிடித்து சண்டையிட்ட இளையவனும் அவள் கைகளை இறுக பற்றிக் கொண்டான், சொல்ல வார்த்தைகள் தேடி.

மகளின் புகுந்தவீடு என்று அவள் வேறு ஊருக்கோ, நாட்டுக்கோ செல்லவில்லை, இதோ பத்து படிகள் கீழே இறங்கினால் அவளை பார்க்கலாம் தான், ஆனாலும் இந்த பெற்றவர்கள் உள்ளம் படும் பாடு!  உணர்ச்சி பரவசத்தில் லயித்தவர்களை கைபேசியின் ஒலி நிகழ்விற்கு மீட்டுவந்தது. ஜோசியரின் வரவை தெரியப்படுத்த மாமனாரை அழைத்தான் அர்ஜுன். அனைவரும் கீழே இறங்கினர், கார்த்திக் தேர்விற்கு படிக்க வேண்டி வீட்டிலேயே இருந்துவிட்டான்.

உள்ளே சென்றதும் அன்னையின் சொல் கேட்டு, வருங்கால மாமனார், மாமியாரையும், கோகிலாவையும் வணங்கி எழுந்தாள் சுகந்தி. விஷ்வாவுடன் காவேரி வரவும், அன்னையின் குறிப்பறிந்து அவர்களை வணங்க முற்பட, விஷ்வா கூச்சப்பட்டு விலகி கொண்டான்.

"சுரேஷ்," அர்ஜுன் தந்தை மூர்த்தி பேச்சை தொடங்க "உங்க அண்ணன் வீட்டுல எப்ப வராங்க?"

"அரைமணி நேரம்னு சொன்னாரு பா, அண்ணன்".

ஏறக்குறைய இருபது வருட நட்புறவு இரு குடும்பங்களுக்கும், சம்மந்தார் என்ற உணர்வு இல்லாமல் இயல்பாய் இருக்கவே தூண்டியது.

பத்மா, யமுனா, கோகிலா மூவரும் மதிய உணவுக்கான ஏற்பாட்டை கவனிக்க செல்ல, இளையவர்கள் உள் அறையில் அமர்ந்தனர்.

Note: 2nd photo, Vishwa and Annapoorani.

⚜⚜⚜

எட்டியே இருந்தாலும், அர்ஜுனும் சுகந்தியும் தங்கள் காதலில் திளைத்து, சூழல் மறந்திருக்க இவர்களின் செய்கையின் எதிர்வினை அடுத்த ஜோடியையும் ஆட்டுவிக்கத்தான் செய்து.

துணையை நாடி, கனவுகள் கண்டு, கனவில் கண்ட முகம் தேடி, ஆசைகளை வித்திடும் தோரண வாயில் இந்த வாலிப பருவத்தின் அடையாளம், இரு பாலினருக்கும்.

எத்தனை விதமான ஆடை அணிவகைகள் இருந்தபோதும், அவரவர் பாரம்பரிய உடையில் அனைவருமே தனி அழகு தான். கன்னிப்பருவம் எனும் அழகை மேலும் அழகாக்கி காட்டுவது பாவாடை தாவணி. வயது வந்த பெண் ஆனால் திருமணமாகதவள் என்பதை அடையாளம் காட்டுவது.

தத்தி தத்தி நடந்து வரும் மழலையை போல கொள்ளை அழகு. பிடிமானம் தேவையில்லை, அதே சமயம் கால் ஊன்றி திடமாய் நடக்கவோ ஓடவோ முதிரச்சி இல்லாத குழந்தை போல, அந்த குமரி பருவம்.

~~~~~

கண்ணாடி வளையல்களும், குடை ஜிமிக்கியும், இடையை தொட்டு விளையாடிய ஒற்றை ஜடையும், அதில் சிரித்து மலர்ந்த பிச்சி பூச்சரமும், அழகையெல்லாம் கண்படாமல் பத்திரபடுத்த படாதபாடு பட்ட, ரோஜா நிற மேலாக்கும்.. அப்பப்பா அவனை ஆட்டுவிக்க இன்னும் எத்தனை தான் மெனக்கெடுவாள்? கழுத்தை மட்டும் காலியாக விட்டது ஏனோ? அவன் கரங்களை மாலையாக்கி கொள்ளவா? அல்லது அவன் கரங்களால் மாலை சூடி கொள்ளவா?

கண்ணையும் கருத்தையும் தான் என்றோ அவளிடம் ஒப்பு கொடுத்துவிட்டானே? இனி மீதம் அவன் வசமிருப்பது ஊனும், உயிரும் தான், அதையும் அன்றைய தினத்துக்குள் திடமாய் எழுதி பெற்றிடுவாள் போலும் அவனின் செல்லம்மா.

~~~~~

நங்கூரமாய் இதயத்துள் விழுந்து விட்டானே சில தினங்களிலேயே..
ஏன் எப்படி என காரணம் தேடுகிறாள், தன் மன ஆழத்தில் கிடக்கும் அவளின் பொக்கிஷம் அவன் என உணராமல்!

வாய் மொழியவில்லை எனினும்,  அவன் விழி கூறிய சங்கேத மொழியில் தடுமாறுகிறாள். யோசனையில் சுருங்கும்    நெற்றி நீவ விரல்கள் தவித்தன, அவன் அன்பு மழையில் தான் மட்டுமே நனைய வேண்டுமென மழலையாய் முரண்டு பிடித்தது இதயம்.

மகுடிக்கு கட்டுபட்ட நாகமாய் அவனிடம் மண்டியிடுகிறது மனம். இத்தனை அருகே இருந்தும் ஏனோ காத தூரம் தள்ளி நிற்பதாய் பிரம்மை! இடைவெளி நீக்கி, அவன் கையணைப்பில் பத்திரமாய் புகுந்து கொள்ள...

'ஐயோ! இதென்ன எண்ணம்?'

கன்னம் போக்குவரத்து விளக்காய் சிவந்து, சிந்தனையின் ஓட்டத்தை நிறுத்தியது. கன்னச்சிவப்பை கண்டு கொண்ட காவலன் முகத்தில் குறும்பு. உதடு கடித்து, தலை கவிழ்ந்தாள் செந்தாமரையாய். தன்னவளின் முதல் வெட்கத்தை படம் பிடித்து, சட்டம் அடித்து இதயத்தில் மாட்டிவைத்தான், பொல்லாத கள்வனவன்.

வாயிலில் அரவம் கேட்டதும், (காதல்) மந்திர கட்டிலிருந்து விடுபட்டனர் இருவரும்.

"ஏன் பூ குட்டி!" தோழியின் புரம் திரும்பியது விழிகள். "டைம் என்ன?"

"மணி பத்து. ஏன் டீ கடிகாரம் கண்ணு முன்னால தான இருக்கு?" தோழியின் அலங்காரத்தை சரிபார்த்தவாறே கேள்வியெழுப்பினாள்.

"எனக்கு தெரியுது, உனக்கு தெரியுதான்னு பார்த்தேன்." அவள் கையில் குளிர்ந்து போயிருந்த காபி தம்ளரை காட்டி "அத்தை காபி குடுத்துட்டு போய் அரைமணி நேரமாச்சு. என்ன மாயத்துல கட்டுபட்டவ மாதிரி உக்காந்திருக்க?"

சடக்கென காபியை வாயில் ஊற்றி விழுங்கிவிட்டு சமையலறைக்கு நழுவினாள், மற்ற மூவரும் இங்கே ஜாடை காட்டி சிரித்துகொண்டனர்.

சுரேஷின் அண்ணனும் அண்ணியும் உள்ளே நுழைந்தனர். "பெரியப்பா, பெரியம்மா" காலில் விழப்போன சுகந்தியை தடுத்து தலைகோதி ஆசிர்வதித்தனர்.

"சும்மா காலுல விழ வேணாம் அது கிடக்கு கல்யாணத்தப்ப, நிறைய விழுந்து கும்பிடணும். குறுக்கு நோவும். நமக்குள்ள என்ன? விடு." வாஞ்சையாய் தலை கோதினார் அவள் பெரியம்மா.

"என்ன மா நல்லாயிருக்கியா?" பூரணியை நலம் விசாரித்தார். "என்னடீ முகமெல்லாம் பூரிச்சு கிடக்குறா உன் தோஸ்து? இவளுக்கும் கல்யாணம் நிச்சயமாயிடுச்சா?" சுகந்தியின் பக்கம் திரும்பி.


"ஐயோ பெரியம்மா! அதெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மா வரும்போதெல்லாம் கலாட்டா பண்றீங்க." பூரணி போலியாக கோவித்து கொண்டாள், சிரித்து கொண்டே அவர் உள்ளே சென்றுவிட்டார்.

~~~~~

அர்ஜுனுக்கு ஜாதகத்தில் கண்டம் இருப்பதாகவும் இருபத்தியாறு வயதிற்க்குள் திருமணம் செய்ய வேண்டுமெனவும் அவர்கள் குல தெய்வ கோவிலில் இருந்த சித்தர் ஒருவர் கூறியிருந்தார். அந்த காரணத்தினாலேயே அவன் திருமண ஏற்பாடு துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.

"தம்பி யாருன்னு?" சுக்தியின் பெரியப்பா ஆனந்தன் விஷ்வாவை பார்த்து கேள்வியெழுப்பினார்.

"என் அண்ணன் பையன், பேரு விஸ்வநாதன்"

"ஓ! சின்ன புள்ளையில பாத்தது"

மூர்த்தியின் கைபேசி ஒலித்தது. வெளியே சென்று அழைப்பை ஏற்று பேசிவிட்டு வந்தவர் முகம் கலவரமாக இருந்தது.

"அம்மாடி!" யமுனாவை அழைத்தார்.

டைனிங்க் டேபிள் அருகே வந்தார் யமுனா, "அது... அத்தையும் அவங்க மகனும், மருமகளும் வராங்களாம்." அதிர்ச்சியை காட்டியது யமுனாவின் முகம்.

"இப்ப ஏன்.. சொல்லாம கொள்ளாம?" இருவரின் பார்வையும் விஷ்வாவின் புறம் திரும்பியது.

பூரணியும் குழப்பத்தோடு திரும்பினாள். சற்றுமுன் இருந்த மனநிலைக்கு நேர்மாறாய் இருந்தான் தற்போது. உறவினர்கள் மத்தியில் கோபத்தை கட்டுபடுத்த தவிப்பது தெரிந்தது. மூர்த்தியும் யமுனாவும் அவனிடம் பார்வையிலேயே இறைஞ்சினர். இந்த பார்வை பரிமாற்றத்தின் அர்த்தம் விளங்கவில்லை எனினும், ஏதோ அனர்த்தம் என எச்சரிக்கை மணி அடித்தது பூரணிக்குள்.

அர்ஜுன் சகோதரனின் கைப்பற்றி கொண்டு அமர்ந்திருந்தான். சற்று நேரத்தில், மூர்த்தியின் அத்தை (அவர் தந்தையின் சகோதரி) கல்யாணி அம்மாள் அவர் மகன் குமார் மற்றும் மருமகள் உஷாவோடு உள்ளே நுழைந்தார். அவர்கள் வருவதற்குள்ளாக அன்னையை அழைத்துப்போய் வீட்டில் விட்டான் விஷ்வா. யமுனாவின் முகம் கசப்பையும் வலியையும் பிரதிபலித்தது. அருகிலிருந்த பூஜை அறையில் நுழைந்து முகத்தை துடைத்து கொண்டார்.

அவரை வரவேற்றதும் உபசரித்ததும் பெயரளவில் இருந்தது என்பது தெளிவானது. சுகந்தியை மூர்த்தி அறிமுகம் செய்ததும், அவர்களை விழுந்து வணங்கினாள்.

"நீ அருணாச்சலம் பையன் தான?" கல்யாணி அத்தை விஷ்வாவை நோக்கி பார்வையை வீசினார். அவன் இன்னும் இறுகினான்.  அவர் கேள்விக்கு மூர்த்தி பதில் உறைத்தார்.

"ஐயா நேரமாகுது! அம்மா ஜாதகத்தை சாமி முன்னாடி வச்சு கும்பிட்டு எடுத்து வாங்க, உள்ளாற விளக்கு ஏத்தி வச்சிருக்கீங்கள்ள? எல்லாரும் கீழ உக்காருங்க, முக்கியமா பொண்ணு, மாப்பிள்ளை, அவங்க பெத்தவங்க." ஜோசியர் வந்த வேலையை பாருங்க என்பது போல குரல் கொடுத்தார்.

பூரணி உள் அறைக்கு சென்று  இரண்டு பாய்களை எடுத்து வந்து விரிக்க, கல்யாணி அத்தையின் கண்கள் அவளை அளந்தன. முக்கியஸ்தர்கள் அனைவரும் இடம் தேடி அமர்ந்தனர்.

"இப்ப ஆவணி மாசம், வர ஐப்பசியில இரண்டு முகூர்த்தம் தோதா இருக்கு நிச்சயத்துக்கு." தேதிகளை அவர் கூறியதும், கலந்தாலோசித்து ஞாயிற்றுகிழமையில் வரும் முகூர்த்ததில் நிச்சயதார்த்தம் வைத்துகொள்வது என தீர்மானித்தனர்.
"கல்யாணத்துக்கு சித்திரை மாசம் கடைசி இல்லைனா வைகாசினு சொன்னீங்க,"

"ஏன் அவ்ளோ தள்ளி?" அத்தை குறுக்கே பாய்ந்தார்.

"அதில்லைங்க பொண்ணு பைனல் இயர், எக்ஸாம் முடிஞ்சு வச்சிக்கலாம்னு முன்னமே பேசி முடிவானது தான்" சுரேஷ் பதிலுறைத்ததும் அமைதியானார் அத்தை.

"சித்திரை கடைசியில இவங்களுக்கு ஒத்து வரா மாதிரி  முகூர்த்தம் இல்லை மாச ஆரம்பத்துல இருக்கு, இல்லைனா வைகாசி தான்" திருமணம் வைகாசியில் என உறுதியானது. அதன்பின் அவர் விடைபெற்று புறப்பட்டார். வீட்டில் முதலில் இருந்த கலகலப்பு நீங்கி ஒருவித இறுக்கம் நிறைந்திருந்தது.

"ஆமா இது யாரு பெண்ணுக்கு தங்கச்சியா?" பூரணியை துளைத்தன கல்யாணி அத்தையின் கண்கள்.

'"ஷிட்!" ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான் விஷ்வா. அர்ஜுனும் அதிர்ந்தான்.

"இல்லை அத்தை, என் சிநேகிதன் பொண்ணு, மருமகளும் இவளும் ஒண்ணா  தான் படிக்கிறாங்க. சின்ன வயசுலேருந்து எல்லாம் ஒண்ணா  தான் வளருதுங்க, ஏறக்குறைய தங்கச்சி மாதிரி தான். அது அவங்க அம்மா" கோகிலாவை அறிமுகம் செய்தார் மூரத்தி.

"உன் பேரு என்னம்மா?"

"அன்னப்பூரணி" கிட்டதட்ட சுகந்தியின் பின் மறைந்தாற் போல் நின்றிருந்தாள்.
சுரேஷ் குடும்பத்தினர் விடைப்பெற்று அவர் வீட்டிற்கு சென்றனர். சுகந்தியையும் பூரணியையும் இருக்கும்படி சொன்னார் மூர்த்தி.

~~~~~

முர்த்தியின் வீட்டில் பெரியவர்கள் சாப்பிட ஆயத்தமானார்கள்.
"ஏன் மூர்த்தி? அருணாச்சலம் சம்சாரம் எங்கே? யமுனா உங்க அக்காவை கூப்பிடு".

"அவங்களுக்கு உடம்புக்கு முடியலை அத்தை படுத்துருக்காங்க.." தவிர்க்க வேண்டிய திசையில் பேச்சு திரும்புவதில் யமுனா சங்கடமானார்.

"என்ன? வயசானா எல்லாத்துக்கும் வர மூட்டு வலி தான..."

வெகுண்டெழுந்தான் விஷ்வா. "அம்மாவுக்கு டிப்ரெஷன். மருந்து சாப்பிட்டு படுத்துருக்காங்க. அதாவது நீங்க வலுக்கட்டாயமா பண்ணி வச்ச கல்யாணத்தால இப்ப வாழ்க்கையை இழந்து மூணு வருஷமா பித்து பிடிச்சா மாதிரி இருக்காங்க. நானும் உங்க புண்ணியத்துல அப்பா இருந்தும் இல்லாத புள்ளையா தவிச்சேன், தவிச்சுட்டு இருக்கேன். போதுமா? இல்லை இன்னும் யாரு வாழ்க்கையை காவு குடுக்கணும்? உங்க புருஷன் உங்க கௌரவம்னு மத்தவங்க வாழ்க்கையை சீரழிக்க உங்களுக்கு என்ன உரிமை?"

"டேய் என்ன சின்ன பையன் எங்க அம்மாவை மரியாதை இல்லாம பேசுற?"கல்யாணி அத்தையின் மகன் குமார் எழுந்து நின்றார்.

"நீங்க இதுல தலையிடாதீங்க" விஷ்வா மீண்டும் கொந்தளிக்க, அர்ஜுன் அவனை வழியை மறித்து நின்றான்.

"அவங்க... அவங்களை யாரு வர சொன்னா?"

"நான் என் அண்ணன் மகன் வீட்டுக்கு வந்தேன்..நீ.."

வார்த்தைகள் வலுக்க தொடங்கியது. மூர்த்தி அத்தையை ஒரு புறம் சமாதானம் செய்ய, மறுபுறம் விஷ்வாவை அடக்க முற்பட; யமுனா விசும்பி அழத் தொடங்க, கோகிலா அவரை தோள் சாய்த்து தேற்றினார்.

தன் கை விரல்களை யாரோ பற்றி இழுப்பது உணர்ந்து விஷ்வா தன்னிலை மீண்டான், பூரணி அவன் விரலோடு தன் விரல் கோர்த்து, அவன் கவனத்தை திருப்பினாள்.

"விஷ்வா உன் நியாயம் புரியுது, ஆனா அங்க பாரு பெரிய அம்முவை.... அண்ணாவை பாரு... இன்னிக்கு இது தேவையா? ப்ளீஸ் விட்டுடு. அவங்களுக்காக". கண்களை இறுக மூடி தன்னை தானே கடிந்து கொண்டு, தன் தவறை உணர்ந்தான்.

சித்தியையும் தம்பியையும் பார்த்து பேச நா எழவில்லை, பேச்சு சலசலப்பு அடங்கியது. "சித்தி சித்தப்பா அர்ஜுன் என்னை மன்னிச்சுருங்க" வாசற்படி கடந்து வெளியேறினான். அர்ஜுன் கல்யாணி அத்தை குடும்பத்தினரை நோக்கி ஒரு வெற்று பார்வை பார்த்தான்.

"அர்ஜுன்" மூர்த்தி அவனை தடுக்க

"அப்பா தயவு செய்து இப்ப எதுவும் பேசாதீங்க. இவங்களால நான் உங்களை மரியாதை குறைவா பேசற மாதிரி ஆகிட போகுது. நான் அண்ணனை பார்த்துட்டு வரேன்."

இப்படி தான் சிலர், குடும்பத்திற்கு நான் மூத்தவர் என்ற கௌரவ பட்டத்தை வைத்துக்கொண்டு அனைவரது வாழ்க்கையிலும் புகுந்து தன் ஆளுமையால் வேதனையை மட்டும் பரிசளித்து கொண்டிருக்கின்றனர். கல்யாணி அத்தையின் திருவிளையாடல் இன்னும் முடிந்தபாடு இல்லை!

🌺🌺🌺




Bạn đang đọc truyện trên: Truyen247.Pro