Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 5

Originally Published June 16, 2021


அதிகாலை நான்கு மணிக்கு எழுந்த பூரணி, தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, நேராக சமையலறைக்கு சென்று, பாலை அடுப்பில் வைத்து விட்டு, வாசல் பெருக்கி கோலமிட்டாள். அசந்து போகும் அளவிற்கெல்லாம் கோலம் போட தெரியாது ஆனால் வீட்டு வாசலையும் பூஜை செய்யும் இடத்தையும் மூளியாக வைக்க கூடாது என்ற அளவிற்கு தெரியும். ஒரு பெட்ரும், ஹால், கிச்சன், ஒரு பாத்ரும் என தரை தளத்தில் சிறிய போர்ஷன் வாடகை வீடு அவர்களுடையது.

செய்தித்தாளை ஹாலில் மேஜை மீது வைக்கையில் ஹாலில் முதல் போதை மயக்கத்தில் தூங்கி கொண்டிருந்த அப்பாவை பார்த்து ஒரு வருத்தமுறுவல் படர்ந்தது முகத்தில். அவர் போர்வையை சரி செய்துவிட்டு நேராக உள்ளே சென்றாள். அம்மா எழுந்து வரும் முன் தன்னால் இயன்றவரை வேலைகளை முடித்துவிட எண்ணி நாளை துவங்கினாள்.

'நீங்க நிறைய ரெஸ்ட் எடுக்கணும் மா. உங்களை சின்ன பிள்ளை மாதிரி நான் கவனிச்சுக்கணும். நான் எல்லாமே செய்வேன் உங்களுக்காக' என்று தினம் போல் மீண்டும் உறுதி பூண்டாள்.

கிச்சனில் பூஜைக்காக ஒதுக்கபட்டுள்ள அலமாரியை திறந்து விளக்கேற்றி நாளை துவங்கினாள்.

சிறிது நேரத்தில்,"என்னை எழுப்பலாம்ல அன்னம்" என்ற அம்மாவின் குரல் கேட்டு திரும்பியவள்.

"ஏற்கனவே உங்களுக்குத் தூக்கம் கம்மி இதுல நான் வேற ராத்திரி கலாட்டா பண்ணிவிட்டுடேன். அதனால தான் மா எழுப்பல".

"மேடம் சமையிலே முடிச்சுட்டீங்க போல. சூப்பர் ஸ்பீட் தான்!" 

"அது உங்க டிரெய்னிங்க் அப்படி" என்று வணங்குவது போல் பாவனை செய்து பின் இருவரும் ஒன்றாக கிச்சன் தரையில் அமர்ந்து தினம் போல் காபி பருகியபடி பேச்சை தொடர்ந்தனர்.

"ஆனா கார சட்னி மட்டும் நீங்க தான் செய்யணும் என்ன பண்ணாலும் உங்க டேஸ்ட் வர மாட்டேங்குது" என்று உதடு சுழித்தாள்.

"இந்த முட்டை கண்ணையும்  பர்ஸ் வாயையும் வச்சிகிட்டு குரங்கு சேஷ்டையெல்லாம் செய்யுற, வாயாடி தனத்துல ஊர வித்துருவ போல ஆனா மனசுல என்ன குழப்பம்னு அம்மாகிட்ட சொல்ல மாட்டே இல்ல?" என்று சரியான கேள்வியோடு மகளை மடக்கினார்.

"ஒண்ணுமில்ல மா..." சற்று தயங்கி, "கூட இருக்கிற ஃபிரண்ட்ஸ் சில பேருக்கு கல்யாண பேச்சு எடுக்கிறாங்க. அதனால ஏதோ பயம் மனசுல. நீங்க எல்லாரும் சேர்ந்து எனக்கு கல்யாண பேச்சு எடுக்கற மாதிரி கனவு" அம்மாவின் பார்வையை தவிர்த்தாள். அவருக்கும் ஓரளவு யூகம் இருந்தது, இருப்பினும் மகளின் மனநலனை கருத்தில் கொண்டு மருத்துவர் அறிவுரை படி நிலையை கையாள கற்றுக்கொண்டார்.

"கனவுல சின்ன மாமா ரொம்ப சீரியஸா சுகு கல்யாணத்தோட சேர்த்து என் கல்யாணத்தையும் வெச்சிரலாம்னு சொல்றாரு, பெரிய  மாமா கோவமா படிப்பா வேலையா னு டெட்லைன் வெச்சுட்டு ஒரு லெக்ச்சர் அவர் ஸ்டைல்ல. ஜோசியர் வராங்க சுகு நிச்சயித்துக்கு நாள் குறிக்க னு மாமா சொன்னவுடனே நீங்க என் ஜாதக நோட்டை எடுத்து நீட்டுறீங்க. எனக்கு சப்போர்ட்டா யாரும் பேசலை. அண்ணன் கூட பயந்துட்டு வாயை தொறக்கலை, இரு பாத்துக்கறேன்னு ஜாடை மட்டும் காட்டுராரு. அதான் ரொம்ப பயந்துட்டேன்" என்று சொல்லும்போது கூட உணர்ச்சிவசப்பட்டாள்.

"இப்ப உடனே யாரும் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறது இல்லை ஆனா, எப்பவுமே இப்படி இருக்க முடியுமா? கல்யாணத்தை பத்தி ஏன் இந்த ஒப்பீனியன் வந்துச்சுனு எனக்கு தெரியும். அப்பாவோட குடி பழக்கத்தால தான? நான் ரொம்ப நாளா உன் கிட்ட பேச நினைச்சதை இப்ப பேசறேன்"

"ம்ம்"

"நீ ஜர்னலிஸ்ட் ஆகுறனு வை, ஒரு விஷயத்தை பத்தி பேசும் போதோ எழுதும் போதோ, உன்னுடைய கருத்தை முன் வைத்து ஒரு ஆர்டிகல் எழுதுவியா இல்லை உன் கருத்து மட்டுமே சரிங்கற கோணத்துல எழுதுவியா?" கேள்வியோடு மகளை நோக்க.

"அந்த விஷயம் உண்மை அண்டு அதற்கான அத்தாட்சி, எவிடன்ஸ் இருந்தா தான் அதை ஆணித்தரமாக எழுத முடியும். பொதுப்படையான விஷயம் பேசும் போது என் கருத்தை பகிர்நதுக்க தான் முடியும், மக்கள் மேல திணிக்க முடியாது. எல்லாருக்கும் வெவ்வேறு கோணம், பார்வை இருக்குமே"

"ரொம்ப சரி. இப்ப நம்ம பக்கத்து வீட்டு பாட்டி இருக்காங்கல, அவங்களை உனக்கு பிடிக்குமா?"

குழப்பமாய் பார்த்தவள், "பிடிக்கும். ஆனா அவங்க பொண்ணுங்க அதிகம் படிக்க வேண்டாம் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லும் போது  வருத்தமா இருக்கும். மீதி நேரம் அவங்க ரொம்ப ஆசையா பேசுவாங்க, சின்ன பிள்ளைலேந்து கதையெல்லாம் சொல்லுவாங்க, என்னை அவங்க பேத்தி மாதிரி பாத்துப்பாங்க. இப்ப தனியா வேற இருக்காங்க பாவமா இருக்கும்" என்று அவரை நினைவு கூர்ந்தாள்.

 
"இப்படி சொல்லுறவங்க தான் எனக்கு வேலை வாங்கி குடுத்தாங்கனு சொன்னா நீ நம்புவியா?" ஆச்சரியத்தில் விழி விரிந்தது பூரணிக்கு. "அமாம், அப்பாவோட பிசினஸ் லாஸ் ஆகி, நான் ஒரு நேரத்துல எல்லாத்தையும் வித்துட்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்யுறது னு தெரியாம, நம்ம வாழக்கை என்னாகும்னு ஒடிஞ்சு போன நேரத்துல நம்ம ஹவுஸ் ஓனர் மாமியும் பக்கத்து வீட்டு பாட்டியும் தான் எனக்கு தோள் கொடுத்தது. பாட்டியோட ரிலேட்டிவ் தான் நான் வேலை செய்யுற ஹாஸ்பிடல் ஓனர், டாக்டர் சிவநேசன்.
பாட்டியோட பொண்ணு ஒரு கரியர் ஓரியன்டட் லேடி. ஒரு பெரிய காரப்பரேட்ல ரொம்ப உயர் பதவியில இருந்தாங்க, ஒரு முறை கம்பெனி விஷயமா அவங்க டிராவல் பண்ணிகிட்டிருந்தப்போ, கார் ஆக்ஸிடெண்டல ஸ்பாட்ல இறந்துட்டாங்க."

அதிர்ந்த மகள் அடுத்து என்ன கேட்பாள் என்று ஊகித்தவர், "அவங்க கல்யாணம் செய்துக்கலை. பாட்டிக்கு அவங்க ஒரே பொண்ணு. இப்ப வயதான காலத்துல பாட்டி கஷ்டபடுறாங்க. வேலைக்கு ஆள் இருக்காங்க, சொத்து இருக்கு, நாம உதவி செய்யுறோம், தூரத்து சொந்தங்கள் இருக்காங்க. ஆனா, பொண்ணு, புள்ளை பேரன் பேத்தினு அந்த சொந்தங்கள் மாதிரி வருமா சொல்லு. வேலை வேலை னு அவங்க மக அப்படி இருந்து, இறந்தும் போய்ட்டதாலதான் அவங்க இப்படி  பேசுறாங்க. அதே சமயம் என்னோட தேவைக்கு வேலை வாங்கியும் குடுத்தாங்க. இப்ப சொல்லு பாட்டி பத்தி உன்னோட ஒப்பீனியன்."

மகள் யோசனையில் ஆழ்ந்திருக்க, "உன்னை பாதிச்ச ஒரு விஷயத்தை நீ ஒரு கோணத்துல இருந்து பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வந்துட்ட சரி, உனக்கு அதுக்கு உரிமை இருக்கு. ஆனா, இப்ப அந்த விஷயத்தை வேற கோணத்துல இருந்து பார்க்கும்போது உன்னோட முடிவோ கருத்தோ மாறுது இல்லையா? இதே போல எல்லாத்தையும் ஓப்பன் மைண்டோட அணுக பாரு. நேத்து காலேஜ் ல அந்த பொண்ணு இவ்வளவு பெரிய தப்பு செஞ்சதுக்கு கூட நீ ரெஸ்டிகேட் பண்ண கூடாதுன்னு அவளுக்கு சிபாரிசு பண்ணி பிரின்ஸி கிட்ட பேசியிருக்க. ஒரு வேளை காம்படிஷன் வைக்கிறதுனால தான் ஸ்டூடண்ட்ஸ் இதுமாதிரி செய்யிறாங்க ஸோ, காம்படிஷனே வேண்டாம் படிப்பு மட்டும் போதும்னு எல்லா கல்லூரி நிர்வாகமும்  முடிவு செஞ்சா? ஒருத்தரோட தப்பான நடவடிக்கைகாக நேர்மையான மாணவர்களையும் தண்டிக்கிறதா ஆயிடும் இல்லையா?" என்று கேள்வி எழுப்பினார். புரிந்து கொண்டதன் அடையாளமாய் தலையசத்தாள்.

மகளின் தலையை வாஞ்சையாய் வருடி, "அதே மாதிரி தான் ராஜாத்தி நீ சொல்லுறதும் இருக்கு. அப்பா தப்பு செய்யுறதுனால கல்யாணமே தப்பு னு சொல்லுறது எப்படி நியாயம்? அர்ஜுன்,  சுகந்தி ரெண்டு பேரோட அம்மா அப்பா எப்படி அன்பா அன்யோன்யமா இருக்காங்க? உங்க அப்பாவும் கெட்டவரு இல்லை டா. ஒரு கஷ்டமான காலகட்டத்தை கடந்துட்டு இருக்காங்க." அன்னை பகிர்ந்து விஷயங்களை உள் வாங்கி கொண்டிருந்தாள் பூரணி.


"Lastly! Don't throw the baby out with the bathwater!" **
அவளுக்கு ஒரு உதாரணம் கொடுத்துவிட்டு எழுந்தார்.

"அம்மா வாவ்! என்ன இப்படியெல்லாம் உதாரணம் குடுத்து பின்றீங்க?" என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தனாள்.

"ஓய் வாயாடி நானும் இங்கிலீஷ் மீடியம்ல படிச்சவ தான், அண்ட் பிகாம் கோல்ட் மெடல் தெரியும் ல?" என்றார் படு அசால்ட்டாக.

பூரணி இறுக அணைத்துக் கொண்டாள் அம்மாவை "தாங்கஸ் மா, ஸ்பெஷல் ப்ளெசிங்க் நீங்க எனக்கு. என் எல்லா அட்ராசிட்டிக்கும் பொறுத்து போற என் செல்ல அம்மா. உங்களை விட்டு எப்படி நான் கல்யாணம் பண்ணி போறதாம்?"

உச்சிமுகர்ந்தார் மகளை, "ஆமா அது என்ன சிவா சிவா னு சொல்லிட்டிருந்த கனவுகண்டு அழும்போது?" என்றார்.


திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருந்தது, பூரணிக்கு.
"அது என்னமோ பயத்துல சிவன் சாமிய விட்டா நம்மள காப்பாத்த ஆளில்லைன்னு கனவுல தோணுச்சு" என்று மழுப்பிவிட்டு,

'சாமி இப்படி கோகிமா கிட்ட பொய் சொல்ல வச்சிட்டீங்களே. ஸாரி மா!' மனதிற்குள் புலம்பல்.

"சரி லேட்டாயிட போகுது. கிளம்பு.  நிஜமாவே நாளைக்கு ஜோசியர் வராங்க சுகு நிச்சயித்துக்கும் கல்யாணத்துக்கும்  நாள்  குறிக்க. அங்க போகணும். உங்க  அப்பா ஏதோ வேலை விஷயமா ரெண்டு மூணு நாள் ஊருக்கு போறாங்களாம். அதனால உன் காலேஜ் வர்க் எல்லாம் இன்னைக்கே முடிச்சிடு நாம நாளைக்கும், மண்டேவும் நல்லா டைம் ஸ்பெண்ட் பண்ணலாம். முடிஞ்சா போய் சுகந்தி அர்ஜுனுக்கு நிச்சயத்துக்கு கிப்ட் வாங்கிட்டு வந்திரலாம்" பிள்ளையின் முகத்தை கையில் ஏந்திகொண்டு, பேச பேச அவள் முகத்தின் பரவசம் அவருக்கு தனி தெம்பளித்தது.

"அச்சோ மா பிளாக்பஸ்டர் ஸர்ப்ரைஸ் இது" என்று துள்ளினாள்.

அதன்பின் பேச நேரமில்லாமல் அவரவர் வேலையை முடித்துக்கொண்டு புறப்பட. அன்னையின் வார்த்தைகள், அவரின் அன்பின் வெளிப்பாடு இவையெல்லாம் அவளுக்கு புது தெம்பை கொடுத்திருந்தது.

**dont throw the baby out with the bath water -இது ஆங்கிலத்தில் idiom என்று சொல்லப்படும். ஒரு கெட்ட (அ) வேண்டாத விஷயத்தை களையும் போது அதனோடு சேர்த்து சில நல்லவைகளையும் எறிந்து விடுகிறோம் அல்லது உதாசீனப்படுத்தி விடுகிறோம். இதற்கு உதாரணமாய் சொல்லப் படுவது தான் மேலே குறிப்பிட பட்ட வாக்கியம்.

   


Author's note: hello friends! இந்த chapter filler மாதிரி தோணலாம். ஆனா, இது பூரணி அவ அம்மா இருவருக்குமான பிணைப்பை புரிய வைக்கும். சின்ன குழந்தைக்கு புரிய வைக்கிற மாதிரி பேசறாங்களேனும் தோணலாம். பூரணி விபத்துக்கு பிறகு short term memory loss and psychological problemsக்கு ஆளாக நேர்ந்தது. அதோட விளைவுகள் தொடர்ந்து இருக்கு என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும். இவை சட்டென்று தீரக்கூடிய பிரச்சினைகள் இல்லை.
சில வீடுகளில் பெற்றோர் இது போல மனம் விட்டு பேசாததே பிரச்சினைக்கு காரணம்.

Thanks to all the readers! Please do comment, vote and also share this story❤❤❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro