Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 47







Date Published: May 01 2024
Word count: 3093

⚜️⚜️⚜️⚜️⚜️

மன உளைச்சலில் உறக்கம் தொலைத்திருந்தார் பரந்தாமன்.
பூங்கா காலனியின் உள்ளேயே நடைபயிற்சி மேற்கொள்ள நினைத்து கீழே இறங்கினார் அந்த வைகறைப் பொழுதில். முதல் நாள் நடுநிசி வரை கொட்டித் தீர்த்திருந்தது மழை என்பதை மறந்துபோயிருந்தார்.

அதே நேரம் மூர்த்தியின் வீட்டு கதவு திறந்தது.

"பரமு என்ன பா இது இந்த நேரத்துக்கு எங்கேர்ந்து வர? என்னடா முகமே சரியில்லை?" மூர்த்தி பதட்டமானார்.

"நீ நினைக்கிற மாதிரி ஒண்ணும் இல்லை. வாக்கிங்க் போலாம்னு இறங்கினேன் மழை பெஞ்சது நினைவில்லாம" என்றார் வறண்ட சிரிப்போடு.

"மழை பெஞ்சது மறந்திருச்சா" திடுக்கிட்டார் மூர்த்தி.

மூர்த்தியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் நடந்த அனைத்தையும் எடுத்துக் கூறியபின்.

பூரணியின் அறை கதவு திறந்திருந்தது. அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, தரையில் அமர்ந்த நிலையில் சுவற்றில் தலை சாய்த்து உறங்கி விட்டிருந்தான் விஷ்வா. பூரணி அவன் கையை இறுக பற்றியிருந்தாள்.

"மூணு மணிலேருந்து விஷ்வா இப்படியே தான் உட்காந்தபடியே தூங்கறான். மெல்ல எழுப்பி படுத்துக்கப்பானு சொன்னேன் வேணாம் மாமா அவ மறுபடியும் கலவரப்படுவா அது நல்லதில்லைன்னு சொல்றான்."

நீண்ட பெருமூச்செறிந்தார் பரந்தாமன். மூர்த்தி பேச்சற்று நின்றிருந்தார்.

"வாங்கண்ணே.." பக்கத்து அறையிலிருந்து வெளிப்பாட்டார் கோகிலா. அனைவரது கவனமும் அறையை நோக்கி சென்றது. "உட்காருங்க காபி எடுத்துட்டு வரேன்."

ஆண்கள் இருவரும் என்ன பேசுவது எங்கே தொடங்குவது என தெரியாமல் அமைதி காத்தனர்.

காப்பியை அவர்களிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார் கோகிலா.

"அண்ணே இப்படி ஒரு குறையோட ஒரு பொண்ணை எப்படி உங்க பையனுக்கு கட்டிவைக்கிறதுன்னு யோசிக்கறீங்கன்னு புரியுது.."

"மா என்ன நீ.. நம்ம பாப்பாவை பத்தி எனக்கு தெரியாதா. என்ன நீ பிரிச்சு பேசற?"

"கலா.. என்ன நீ? நான் அவ்ளோ சொல்லியும்?"

"இல்ல என்ன பேச விடுங்க.." கண்கள் கலங்கியது. "இது தான் நிதர்சனம். நம்ம புள்ளைன்னு நினைக்கும் போது அவங்க குறை நமக்கு பெருசா தெரியாது. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தான். பெத்தவங்க நாம அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறது வேற"

"கலா அவனை கொஞ்ச நாள் பிரிஞ்சதுக்கே அவ இவ்வளவு affect ஆனா"

"என் பொண்ணு நல்லாயிருக்கணும்னு நான் அந்த பையனை காவு குடுக்க முடியுமாங்க? என்ன பேசறீங்க? அது சுயநலம் இல்ல?

நேத்து நடந்தது எனக்கே ஒருவித பயத்தை ஏற்படுத்திடுச்சு. தம்பி எப்படி? அவனும் சின்ன பையன் தானே? அதுவும் கல்யாணத்துக்கு பிறகு வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் தான?" மூக்கை உறிஞ்சி புடவை தலைப்பால் கண்களை துடைத்து கொண்டார் கோகிலா.

"நீங்க ரெண்டுபேருமே பேசிக்கறதா இருந்தா நான் கிளம்பறேன்" மூர்த்தி அவர்களது பேச்சுவார்த்தைக்கு முற்று புள்ளி வைத்தார்.

"ஸாரி டா" பரந்தாமனும் கோகிலாவும் சங்கடமாக உணர்ந்தனர்.

"இது பத்தி பேச இது இடமில்லை நேரமுமில்லை. ஈவ்னிங்க் பொறுமையா நாம மட்டும் பேசிக்கலாம். இப்ப நீ புரணியை கவனிச்சுக்க. ரெண்டு பேரும் ஓய்வெடுங்க"

இருக்கையை விட்டு எழுந்தார் "தங்கச்சி மனசை போட்டு வீணா குழப்பிக்காத. அவ எனக்கும் மக தா ங்கிறதை மறக்காத."

⚜️⚜️⚜️⚜️

இடது கையில் மறத்து போன உணர்வு வர, கண்விழித்த விஷ்வா முதலில் கண்டது தன் செல்லம்மாவின் முகத்தை தான். உறக்கம் முழுதும் கலையாத நிலையில் முதலில் குழம்பினாலும் பின்னர் அனைத்தும் நினைவு வந்தது.
அவன் கையை இரவு முழுதும் விடாமல் பற்றிக் கொண்டு தான் இருந்தாள் பூரணி.

பின் இரவில் நடந்த மனப்போராட்டத்தின் எந்த சுவடும் இல்லாமல் அவள் சலனமற்று உறங்குவது பெரும் நிம்மதியை தந்தது அவனுக்கு. அவள் முகத்தை பார்த்து ரசித்த வண்ணம் அமர்ந்திருந்தான்.

'காலைல நான் பாக்குற முதல் முகம் உன்னோடதாகவும் ராத்திரி தூங்கும் முன்னாடி நான் பாக்குற கடைசி முகம் உன்னோடதாகவும் இருக்கணும். என்னைக்கும் எப்போதும் ஆயுள் முழுதும்'

என்னோட இத்தனை வருஷ ஆசை, கனவு, எதிர்ப்பார்ப்பு. இது இப்படி நிறைவேறியிருக்க வேணாம்.'
மெல்ல கண்மூடி சுவற்றில் தலைசாய்த்து அமர்ந்தான். கழுத்தும் கையும் வலித்தது.

தூக்கத்தில் அவள் கைப்பிடியை சற்று தளர்த்தவும், மெல்ல போர்வையை போர்த்தி விட்டு எழுந்தான். எதோ தோன்ற அந்த அறை முழுதும் தேடி அவளது நோட்டு புத்தகம் ஒன்றிலிருந்து ஒரு தாளை கிழித்து கடிதம் எழுதி தலையணையின் கீழ் வைத்தான்.

"அத்தை இதுக்கு மேல நான் இங்க இருக்கிறது நல்லாயிருக்காது. நான் வீட்டுக்கு போறேன். மாமா எங்க?"

"உங்க சித்தப்பா கிட்ட பேச போயிருக்காங்க. காபி சாப்பிட்டு போ தம்பி."

"இல்லை அத்தை பரவாயில்லை. நான் வரேன்".

"போய் கொஞ்சம் ஓய்வெடு பா... ரொம்ப தாங்கஸ் விஷ்வா" குரல் கம்ம, கண்கள் பனித்தது.

"நீங்களும் மாமாவும் என் மேல வச்சிருக்கற நம்பிக்கைக்கு நான் தான் நன்றி சொல்லணும். அவ இனி என் பொறுப்பு அத்தை. அவளோட மன நலம் பாதிக்காம இருக்கணும். பெரியவங்க என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு ஓகே ."

வீட்டிற்கு சென்று தான் கவனித்தான் காலையில் அலுவலகத்திலிருந்து மெயில் மற்றும் வாட்ஸ்அப் தகவல் Full working day என்பதை உறுதி செய்து.

புது சைட்டில் foundation போடுவதற்க்காக தோண்டபட்ட இடத்தில் முழுவதுமாக தண்ணீர் தேங்கியிருக்கும் அதை ராட்சத மோட்டர் மூலம் இறைத்து எடுக்கவேண்டும். மழை பெய்ய தொடங்கியதுமே இது பற்றி விவாதம் அலுவலகத்தில் எழுந்தது.

"மா ஆபிஸ் இருக்கு இன்னிக்கு."
அதன் பிறகு பூரணிக்கு நடந்தவற்றை விவரித்தான்.
"மா, அவ இருந்த நிலையை பார்த்து ரொம்ப கஷ்டமாயிடுச்சு. பிரிஞ்சுடுவோமோங்கிற பயம் அவளை இவ்வளவு தூரம் பாதிச்சிருக்கு. கல்யாணத்துக்கு தேதி பாருங்கனு மாமா கிட்ட உணர்ச்சிவசப்பட்டு சொல்லிட்டேன். ஆனா அது அவளுக்கு நல்லதானு உண்மையா தெரியலை மா. நான் செஞ்சது சரியா? ஒருவேளை நல்லது செய்றதா நினைச்சு மறுபடியும் தப்பு பண்றேனோ?"
வருத்தமாக நின்ற மகனின் தோள் தட்டி தைரியமூட்டினார் காவேரி.

"அந்த நேரத்துக்கு நீ செஞ்சது சரி. பெத்தவங்களுக்கு அது ஒரு வித பாதுகாப்பு உணர்வை கொடுத்திருக்கும். இப்ப ஆபீசுக்கு கிளம்பு. நான் அவங்க அம்மா கூட இருந்து அவளை பார்த்துக்கிறேன். அவ என்ன விரும்பறான்னு பேசி தெரிஞ்சுக்கறேன். அது படி நடந்துப்போம். சரியா? குளிச்சுட்டு டிபன் சாப்பிட வா".

சற்று நேரத்தில் அர்ஜுன் பதட்டமாக ஓடி வந்தான்.

"விச்சு என்னடா? இவ்வளவு காலைல பூரணி அப்பா வந்து பேசிட்டிருக்காரு. என்னடா ஆச்சு?"

"ஒண்ணுமில்லை அவளோட anxiety attack தான்".

"இப்ப அடுத்து என்ன ப்ளான்? இரு நான் போய் அவளை பாத்துட்டு வரேன்"

அவன் கைப்பற்றி தடுத்தான்.
"நாம ஆபீஸ் கிளம்பறோம் அதான் ப்ளான்" என தனது அலுவலக பையை எடுத்துக் கொண்டான்.

"ரொம்ப முக்கியம்".

தம்பியை தோளோடு அணைத்துக் கொண்டு ஹாலை நோக்கி நடந்தான் விஷ்வா.
"கண்டிப்பா முக்கியம் சார். ஏன்னா இப்ப லீவு எடுத்தா அந்த காளியாத்தா கல்லயாணத்துக்கு லீவு எடுக்க முடியாது அப்புறம் நரபலி தான் மகனே"
அர்ஜுனை பயம் பிடித்துக் கொண்டது.

"ஏன் பா ஷர்மிளாவை அப்படி கேலி பண்ணுற? பாவம் தங்கமான பொண்ணு டா. நீயும் உக்காரு கண்ணு" காவேரி இருவருக்கும் சிற்றுண்டியை பரிமாறினார்.

"வெங்காய ஊத்தப்பமா பெரிம்மா? தொட்டுக்க? வாவ் மிளகா தொக்கா? சூப்பர்" அர்ஜுன் சப்புக்கொட்டி சாப்பிட, காவேரி ஆசையாக பரிமாறினார்.
"ஆமா லஞ்ச் என்ன?'

"பழைய சோறு, சின்ன வெங்காயம். அதோ அந்த தூக்கு வாளியில இருக்கு பாரு"

மேஜை ஓரமாக கோதுமை மாவு அரைப்பதற்காக வைத்திருந்த தூக்கு பாத்திரத்தை விஷ்வா சுட்டி காண்பிக்க அர்ஜுன் முறைத்தான்.

"எலுமிச்ச சாதம் கருணைகிழங்கு வறுவல் பா. உனக்கும் சேத்து சாப்பாடு கட்டிட்டேன். யமுனா மூட்டு வலி அதிகமா இருக்குன்னு சொன்னா" அர்ஜுன் புன்னகைக்க "போதுமா தயிர் சாதம் தரவா?"

கைகழுவி விட்டு வந்த விஷ்வா
"ஆங்... அப்படியே தலகாணி பாய் எல்லாம் பேக் பண்ணிடுங்க. எல்லாத்தையும் சாப்பிட்டு நல்லா தூங்கட்டும் சைட்டுல. எந்திரிச்சுவாடா டேய்!
தட்டை நக்கறான் பாரு! கஷ்டம்! தட்டு ஓட்டையா போயிட போகுது வாடா".

"ஏன்பா? பொறுமையா தான் சாப்பிடட்டுமே"

"நீங்க வேற மா ஆபிஸ் பஸ் மிஸ் ஆயிடும். வாடா அர்ஜுன்" தனது ஷு லேசை கட்டியபடி அழைத்தான் விஷ்வா.

"பொறாமை புடிச்சவனே... வளர்ர புள்ளை சாப்பிடுறதை பாத்து கண்ணு வைக்காத டா"

"புரட்சி தலைவர் சொன்னதை ஃபாலோ பண்ணு தம்பி"

கை கழுவிவிட்டு தனது காலணியை வீட்டு வாசல்படியில் அமர்ந்து போட்டுக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

"என்னடா விச்சு சம்பந்தம் இல்லாம பேசற?"

"ஆளும் வளறணும் அறிவும் வளறணும் அதுதான்டா வளர்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சினு புரட்சி தலைவர் சொல்லியிருக்காரா இல்லையா?"

சடக்கென நிமிர்ந்தான் அர்ஜுன் "ரொம்ப தரை லெவல் மொக்கை டா அண்ணா தாங்க முடியலை."

"இப்ப புரியுதா நீ பிளேடு போடும்போது இப்படி தான் இருக்கு எங்களுக்கும்" இருவரும் ஒருவரை ஒருவர் வம்பிழுத்தபடி இறங்கி நடந்தனர்.

அலுவலக பேருந்தில் அமர்ந்ததும் "சரி இப்ப சொல்லு." விஷ்வா கேள்வியாக நோக்க "அந்த நேரத்துல நீ பூரணி பத்தி சொன்னா நான் பயங்கரமா டென்ஷன் ஆயிருப்பேன். அவளோட ஹாஸ்பிடல் போறேன்னு பிடிவாதம் பிடிச்சிருப்பேன் அதையெல்லாம் அவாய்ட் பண்ணதான இந்த டைவர்ஷன் டெக்னிக்?"

"தோ பார் ரா வெங்காய ஊத்தப்பம் சாப்பிட்டு அறிவு வளந்துருச்சி தங்கத்துக்கு" என அர்ஜுனின் முகவாயையை பிடித்து கொஞ்சுவது போல பாவனை செய்தான் விஷ்வா.

பிறகு அலுவலகம் செல்லும் வரை பேசியபடி பிரயாணித்தனர்.
இடையில் பரந்தாமனை அழைத்து பூரிணயை பற்றி கேட்டறிந்தான். மதிய உணவு இடைவேளையின் போது அவளிடமிருந்து வாட்ஸ்அப் தகவல் வந்தது.

பூரணி:
'ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா'
🥺 sorry siva!

விஷ்வா: அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வலர் புண்கண்ணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
புலம்பல் எனச் சென்றேன்
புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

பூரணி: டேய் என்னடா திருக்குறள் சொல்ற?😠

விஷ்வா: நீ quote பண்ண பாட்டுல தான ஜானு இதுவும் வருது? 🤔 அப்ப இது ரொமான்டிக் லிரிக்ஸ் இல்லையா?

பூ: ஐயோ இம்சை! 🙆‍♀️

வி: ம்ம்ம்... அது. சென்டி சீன் போடாம பேசாம ரெஸ்ட் எடு.🛌

பூ: ஏன்டா காலைல சொல்லாம கிளம்பின? என் டார்ச்சர் தாங்காம தான ஓடி போன? உண்மையை
சொல்லு.

வி: ஆமா உன் டார்ச்சர் தாங்காம தான் ஓடிவந்துட்டேன்.

பூ: 😱😭போடா நான் உன் கூட டூ🤧

வி: சரி சரி நம்ம சண்டையை ஈவ்னிங்க் பொறுமையா போடலாம். இப்ப நான் பத்து நிமிஷத்துல சாப்பிட்டு சீட்டுக்கு போகலை, என் ஜோலி காலி. அப்புறம் வேலை இல்லாத வெட்டி பயலுக்கு எதுக்கு கல்யாணம்னு கேட்டு மூர்த்தி சித்தப்பாவே எனக்கு வில்லானாயிடுவாரு. Bye baby! Love you evening meet pannuvom❤️

பூ:💋👩‍❤️‍👨

வி: அடியே பொண்டாட்டி ஏன்டீ உசுப்பேத்துற?🥵😈

பூ: Bye டா புருஷா! இப்ப போய் நல்லா வேலை பாரு..😉

⚜️⚜️⚜️⚜️

மறுநாள் காலை கோவிலுக்கு சென்று திரும்பினர் பரந்தாமன் குடும்பத்தினர். மகளுக்கான பிரார்த்தனை நிறைவேற்றிவிட்டு.

"அம்மா டயர்ட்..." என சோபாவில் அவள் சரிந்து படுத்துக் கொள்ள

"ஏன் சாமிக்கு நீ குளத்துலேந்து 108 குடம் தண்ணி சேந்து ஊத்தி அபிஷேகம் பண்ணியாக்கும்?" உள்ளே வந்த சுகந்தி இடுப்பில்
கை வைத்து அவளை முறைக்க.

"டாடி அது என்னை திட்டுது" என தந்தையிடம் பொய் புகார் கொடுத்தாள் பூரணி.

"அச்சோ என் மூத்த பொண்ணுக்கு அதெல்லாம் தெரியாதுமா அது வாயில்லா பூச்சி. சின்னவளை வேணும்னா சொல்லு ஒத்துக்கறேன். அது ரௌடி.."

மகளின் காலை நீவி விட்டபடி சுகந்திக்கு ஆதரவாக பேசினார் பர்நதாமன். சுகந்தி அவளுக்கு பழிப்பு காட்டினாள்.

"செமினார் இருக்கு மூணு நாளுல என்னை கோத்துவிட்டு டைம்பாஸ் பண்றா மாமா" சுகந்தி முறையிட்டாள்.

"மம்மி..." பூரணி சிணுங்க

"அன்னம் என்ன இது? போ" சுகந்தியின் நெற்றியில் திருநீறு குங்கும பிரசாதத்தை வைத்து விட்டார் கோகிலா. "இதை அம்மாகிட்ட குடு மா. நீ போ அவளை நான் அனுப்பி வைக்கிறேன்".

"அன்னம்" லேசான கண்டிப்புடன் அவர் அழைக்க "உனக்கு டயர்டா இருக்குனு புரியுது மா. ஆனா அவ பாவம். நீ என்கரேஜ் பண்ணதால தான அந்த Inter College Seminar ல பேரு குடுத்தா? நீ தான அவளுக்கு சப்போர்ட் பண்ணணும்?" மகள் அரைகுறை மனதாக எழுந்து தனது அறையை நோக்கி நடந்தாள்.

"நான் லஞ்ச் ரெடி பண்ணிட்டு சொல்றேன் அப்ப வந்தா போதும்"

"உனக்கு நான் ஹெல்ப் பண்றேன் கலா மா. அப்படியே என் பொண்டாட்டி கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்..." என பரந்தாமன் சிரித்து கண்ணடிக்க, கோகிலா தலையில் அடித்துக் கொண்டார்.

"ம்ம்ம்..டாடி week day ரெமான்ஸா? நடத்து நடத்து" என அவர் மீசையை வழக்கம் போல முறுக்கி விட்டாள் பூரணி.

"My Dashing old man உம்ம்மா..." அவருக்கு பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு வெளியேறினாள்.

மீண்டும் கிச்சனுக்குள் சென்று தண்ணீர் பாட்டில் எடுத்து கொண்டவள்
"கலா டார்லிங்க், உங்க காதலுக்கு நான் குறுக்க நிக்கலை.. ஓஹோ! இதுக்கு தான் என்னை விரட்டுனியா?"

"அடி கழுதை!" என்றுவிட்டு கணவரிடம் "ஏங்க இப்படி மானத்தை வாங்கறீங்க? பெண்ணுக்கு கல்யாணம் பண்ற வயசுல.." என்று சலித்து கொள்ள, பரந்தாமன் சிரித்து விட்டு அமைதியாக இருந்தார்.

இருவரையும் அணைத்து கொண்டு முத்தமிட்டு, "செம ஹாப்பியா இருக்கு, உங்களை இப்படி பாக்க. என் செல்லம்" என்று கூறி விலகினாள். "எதுக்கும் வீட்டுக்கு வரதுக்கு முன்ன ஒரு போன் பண்ணி கேட்டுறு டீ பூரி. எதுனா அடல்ஸ் ஒன்லி ஓட போகுது" என தனக்கு தானே பேசி கொண்டு அன்னையின் அடியிலிருந்து தப்பி சுகந்தி வீட்டுக்கு ஓடினாள். அன்னை தந்தையின் வாழ்வில் மீண்டும் சந்தோஷம் துளிர்ப்பது பெரும் நிம்மதியையும், பரவசத்தையும அளித்தது.

'கவி மா கிட்ட சொல்லி சுத்தி போட சொல்லணும்' என தீர்மானித்தாள்.

கருத்தரங்கத்திற்கான ஆய்வு தகவல்களை சேகரிக்க, கணினியில் மூழ்கினர் இருவரும்.
இருவருக்குமான மதிய உணவை தட்டில் போட்டு கொண்டு வந்தார் பத்மா.

"ஏய் கை கழுவிட்டு வாங்க ரெண்டு பேரும்".

"அம்மா சமையல் பண்ணியிருப்பாங்க நான் வீட்டுல போய் சாப்பிட்டுக்கறேன் அம்மு"

"ஏன் நான் குடுத்தா சோறு எறங்காதா? கேஸ் சிலிண்டர் காலி ஆயிடுச்சாம் உன் அம்மா தான்டி உனக்கு சாப்பாடு குடுக்க சொன்னா. விளக்கம் போதுமா?"

இருவருக்கும் சாப்பாட்டை உருட்டி கவளங்களாக்கி உள்ளங்கையில் அவர் வைக்க பூரணி சுகந்தி இருவரும் கருத்தரங்கத்தை பற்றி விவாதித்தபடியே சாப்பிட்டு முடித்தனர். பரிட்சைக்கு சேர்ந்து படிக்கும் சமயத்தில் இப்படித்தான் இருவருக்கும் சாப்பாடு கொடுப்பார் பத்மா.

"பூரணி இந்தா உன்னுடைய மாத்திரை, கோகி குடுக்க சொன்னா"

"தாங்க்ஸ் அம்மு".

மீண்டும் இருவரும் தங்களது வேலையை தொடர்ந்தனர். சற்று நேரத்தில் உண்ட களைப்பில் உறக்கம் வர இருவரும் பாட்டு கேட்டபடி ஒருவருக்கொருவர் நகப்பூச்சு போடுவதும் அழித்து வேறு கலர் போடுவதுமாக நேரம் கடத்தினர்.

"Shaitaan.." குரல் கேட்டு இருவரும் நிமிர ஷர்மிளா அறை வாசலில் நின்றிருந்தாள். கோபமாக.










"அக்..."பூரணி ஆரம்பிக்க

"Suna tha tabiyath kharab hai, baag baag ke aya tho manicure session chalraha hai. Naa layak"

(உடம்பு சரியில்லைனு கேள்விபட்டு பாக்க ஓடி வந்தா உருப்படாதது மேனிக்கயூர் பண்ணிட்டு இருக்கு)

"கா..." சுகந்தி மென்று விழுங்கினாள்.

"அது..."
சுகந்தி பேசி முடிப்பதற்க்குள் அவளை முறைத்து வாயை திறக்காதே என ஜாடையில் மிரட்டினாள் ஷர்மிளா.

"ஏண்டி உடம்பு சரியில்லை னா. சொல்ல மாட்டியா?"

"இல்லைகா உங்க கல்யாண நேரத்துல.."

"கல்யணத்துக்கு நாலு நாள் இருக்கு பிசாசு." அவளை கன்னத்தில் இடித்துவிட்டு சட்டென அணைத்துக் கொண்டாள். "இப்ப எப்படி இருக்க?"

"ஓகே கா.."

"ஏன் flower baby health spoil பண்ணிக்கற? அந்த டெரர் பீஸ் உன்னை விட்டு எங்கயும் போகாது டி. இனி எதையாவது மறைச்சீங்க கொன்னுடுவேன் பாத்துக்க."

உண்மையான அக்கறையில் கண்கள் பனித்தது. சுகந்தியின் கன்னத்தை பற்றி அவளுக்கு நன்றி தெரிவித்து அவளையும் அணைத்துக் கொண்டாள் ஷம்மு. ஷர்மிளாவுக்கு விபரத்தை தெரிவித்தது அவள் தான்.

சுகந்தியை பத்மா அழைக்க அறையை விட்டு வெளியேறினாள்.

"ஹை ஆன்டி கையால டீ வருது போல!" கண்சிமிட்டினாள் ஷம்மு "ஆமா இது என்னடி நெயில் பாலிஷ் கலர் சாய்ஸ்?"

"படிக்கும் போது தூக்கமா வந்துச்சா டைம் பாஸ் பண்ண தான்" பூரணி அசடு வழிந்தாள்.
"இது அந்த மால் ல free offer குடுத்தான் கா"

"ச்சை இதுக்கு நான் மேனிக்யூரைலாம் அசிங்கபடுத்திட்டேன்".

"பூரணி பூரணி பூரணி" அறை வாசலிலிருந்து சுகந்தி அழைக்க

"என்ன கா கோர்ட் டவாலி மாதிரி கூவறா?"

அவளது வீடு நோக்கி அழைத்துச் சென்றனர். அவள் வீட்டு வாயிலை அடைந்ததும், மூச்சு, பேச்சு எல்லாம் நின்று சிலையாகி போனாள். அங்கே ஹாலில் கீழே பாய் போடப்பட்டு இருக்க மூர்த்தி, யமுனா, அர்ஜுன், காவேரி, விஷ்வா அனைவரும் ஒரு பக்கம் அமர்ந்திருந்தனர்.

சுரேஷ், பத்மா, பரந்தாமன் கோகிலா மறு புறம் அமர்ந்திருந்தனர். நடுவில் தாம்பாளங்களில் பூ, பழம், வெற்றிலை பாக்கு, இனிப்பு என அடுக்கபட்டிருந்தது. எதற்காக என்று புரிந்தாலும் இதை அவள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.

அவளை உள் அறைக்கு அழைத்து சென்றனர் இருவரும். படபடப்பு, பயம், சந்தோஷம், வெட்கம், பதைபதைப்பு என உள்ளுக்குள் அத்தனை உணர்ச்சிகளும் துள்ளி பாய்ந்தன மின்சாரம் போல.

"அன்னம்" கதவை திறந்து உள்ளே வந்தார் கோகிலா. வாஞ்சையாக மகளின் தலை கோதி, உச்சிமுகர்ந்து, "உன்னை முறையா பொண்ணு கேட்டு வந்திருக்காங்க." அனைவர் கண்ணும் கலங்கியது.

"இந்தா இந்த புடவையை கட்டிக்க. பிரகாஷையும் வர சொல்லியிருக்காங்க அப்பா, உனக்கு அண்ணன் முறையாச்சே."

ஆமோதிப்பாய் தலையசைக்க மட்டுமே முடிந்தது அவளால் உணர்ச்சி பெருக்கில் வார்த்தை வரவில்லை. சந்தோஷம் ஒரு சிறு கோடாக பூரணியின் கன்னத்தில் வழிந்து ஓடியது. தலை கவிழ்ந்து புன்முறுவல் பூத்தாள். உள்ளுக்குள் அளவிட முடியாத ஆனந்தம் பொங்கி எழுந்தது.

"ஜோசியர் வருவாரு கொஞ்ச நேரத்துல நிச்சயதார்த்த தேதியும் கல்யாண தேதியும் முடிவு பண்றோம் இன்னிக்கு".

ஆச்சரியத்தில் விழி விரிய, தன்னை சுற்றியிருந்த மூவரையும் ஒரு முறை 'நிஜமா' என்பது போல பார்த்தாள்.

"நேத்தே முடிவாயிடுச்சு, மூர்த்தி அண்ணன் தான், இதுங்க யார்கிட்டேயும் சொல்லாதீங்க. நாளைக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு சொல்லிக்கலாம்னு சொன்னாங்க. சரி வா" மீண்டும் மகளை அணைத்து கொண்டு விடுத்தவர், ஷம்முவையும் சுகந்தியையும் அணைத்து உச்சிமுகர்ந்து ஆசிர்வதித்தார்.
"என் தங்கம், ராஜாத்தி எல்லாரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்".

அவளது பிறந்த நாளைக்கு சுரேஷ் பத்மா பரிசளித்த Ink Blue Mysore silk புடவை அதில் வெளிர் நீல பார்டர்.


️❤️❤️❤️❤️❤️

சிறு வயது முதலே இங்கு இருப்பவர்கள் மத்தியில் தான் வளர்ந்திருக்கிறாள். உரிமையாய் சண்டையிடுவதும், பாசம் காட்டுவதும், சேட்டைகள் செய்து செல்லம் கொஞ்சுவதும், அக்கறையாய் கவனித்து கொள்வதும் என அன்பிலிருந்து அராஜகம் வரை அவளின் அனைத்து முகங்களையும் கண்டிருந்தவர்களுக்கு முதல் முறையாக வெட்கத்தில் தலை கவிழ்ந்து பேசாமடந்தையான பூரணியின் இந்த முகம் முற்றிலும் புதிதாக இருந்தது.

"ஷம்மு, இந்த பொண்ணு யாரு உங்க ரிலேட்டிவா? நம்ம குடும்பத்துல ஒரு ஆராத்து ஒண்ணு இருக்குமே அது எங்க? இந்த ஓட்டை ஒடசல் சாமான் குடுத்து புது குக்கர் வாங்குற மாதிரி எகஸ்சேஞ்ச் ஆஃபர்ல எதும் மாத்திட்டியோ" அர்ஜுன் சீண்ட அனைவரும் சிரித்தனர்.

"ஷர்மிளா உக்காரு மா எவ்வளவு நேரம் நிப்பீங்க? மருமகளே உக்காரு" என்றார் மூர்த்தி. சற்று பொறுத்து, "மூத்த மருமவளே - உன்னையும் தான் மா" என்றதும் சுகந்தியும் ஷம்முவும் 'உன்னை தான்டீ' என்பது போல கையில் சுரண்டினர். தயக்கத்தோடு நிமிர்ந்து அவரை பார்த்தாள்.

"என்ன பூரணி? விஷ்வா தான் எங்க குடும்பத்துக்கு மூத்த வாரிசு, அவனை கட்டிக்கிட்டா நீ தான என் மூத்த மருமக?" என புன்னகைத்து கொண்டே கூற, மீண்டும் தலை கவிழ்ந்தாள் புன்னகையோடு கண்களில் கண்ணீர் பளபளத்தது.

ஜோதிடர் உள்ளே வர அவரை தொடர்ந்து பிரகாஷும் அவனது அன்னை சுந்தரவள்ளியும் வந்தனர்.

"அண்ணி? வாங்க வாங்க" விருட்டென்று எழுந்தனர் பரந்தாமனும் கோகிலாவும்.

"இருக்கட்டும் தம்பி உக்காருங்க. உக்காருமா கோகிலா."

பூரணியும் பெரியவர்களின் குறிப்பறிந்து எழுந்து தனது பெரியம்மாவை வரவேற்றாள். "வாங்க பெரிம்மா வாங்க பிரகாஷ் அண்ணா".

"ஹாய் பூரணி!" என்றான் பிரகாஷ் எவ்வித தயக்கமும் இன்றி.

தான் செய்த தவறு மனதில் மின்னலாய் தோன்றி அவளை சங்கடத்திற்கு ஆளாக்கியது.
" அண்ணா ஸாரி" கையெடுத்து கும்பிட்டாள்.

"ஏய் நல்ல நாள் அதுவுமா இந்த பேச்சு எதுக்கு? உன்னுடைய இடத்தல நியாயமா நான் இருந்தா கூட அப்படி தான் ரியாக்ட் பண்ணிருப்பேன். விட்டு தள்ளு."
புன்னகை மாறாமல் பேசினான். அனைவரும் சற்றே இடம் மாறி அமர்ந்தனர்.

பரந்தாமன் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்பொழுது தான் தன்னவனை கவனித்தாள், கறுப்பு ஃபார்மல் பேண்ட்டும், ஆலிவ் க்ரீன் ஃபார்மல் ஷர்ட்டும் அணிந்திருந்தான். அவள் பரிசளித்த செயின் பெண்டண்ட் இப்போது சட்டைக்கு வெளியே தைரியமாக உட்கார்ந்திருந்தது.
கண்களை அகற்ற முடியவில்லை அவனிடமிருந்து.

"பூரி பெட்ஷீட் வேணுமா?" என சுகந்தி காது கடிக்க நினைவு மீண்டாள்.

"வாட்டர் ஃபால்ஸ் ரொம்ப ஓவர் ஃப்ளோ ஆகுதா கர்சீப் பத்தாது. அதான்.." ஷர்மிளாவும் அவளும் பொசுக்கென சிரித்துவிட பூரணி வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

ஜோசியர் பேச்சை தொடங்கினார்,
"ரெண்டு பேரோட ஜாதகமும் நல்லா பொருந்தியிருக்கு. நிச்சயத்துக்கு நாள்... தை மாசத்துல வர முதல் முகூர்த்தம், அதாவது தை மாசம் அஞ்சாம் தேதி நல்லாயிருக்கு நிச்சயத்தை அன்னைக்கே வச்சுக்கலாம்.

முக்கியமான விஷயம்! பையனுக்கு குரு பலன் இந்த வருஷம் முடிஞ்சுடுது... அதுக்கு மேல அவர் ஜாதகப்படி குரு பலன் அமையல, குரு பலன் இல்லாம கல்யாணம் பண்ணுறது அவ்வளவு சிறப்பா வராது. என்னை தவறா நினைக்க வேண்டாம்". கை எடுத்து கும்பிட்டார் "ஜாதகத்துல உள்ளதை தான் சொன்னேன்." அனைவரும் சற்று நேரம் விவாதித்தனர்.

"அண்ணன் தம்பி கல்யாணத்தை ஒண்ணா நடத்தகூடாதுனு சித்தர் ஐயா சொல்லியிருக்காருன்னு சொல்றீங்க. ரொம்ப நாள் தள்ளினா, விஸ்வநாதன் ஜாதகத்துல குரு பலன் போயிடுது. இதெல்லாம் வச்சு பாக்கும் போது பங்குனி மாசம் முடியறதுக்குள்ள கல்யாணம் வைக்கணும். அதாவது ஏப்ரல் பதிமூணு தேதிக்குள்ள டைம். ஏன்னா சித்திரை மாதம் முதல் முகூர்த்ததுல அர்ஜுன் சுகந்திக்கு தேதி குறிச்சிருக்கு".

அனைவருக்கும் குழப்பம் மேலிட்டது. அடுத்தடுத்து கல்யாணம் வைத்தால் உறவினர்கள் 'வேணும்னே செலவு வைக்கிறீங்க' என்று குற்றம் சொல்லுவார்கள். இருவருக்குமே குறிப்பிட்ட காலகட்டத்தில் திருமணத்தை நடத்தியாக வேண்டிய கட்டாயம்.

"சம்மந்தி.." காவேரியின் குரல் கேட்டு அனைவரும் அவர் புறம் திரும்பினர்.
"நிச்சயதார்த்தம் ஜோசியர் சொல்ற தேதியில நடத்துவோம். தள்ளி போடுற கேள்விக்கே இடமில்லை. நாம எல்லாரும் சித்தர் ஐயாவை ஒரு முறை பாத்துட்டு அவருகிட்ட தீர்வு கேட்டு கல்யாண தேதியை முடிவு பண்ணிக்கலாம். இப்ப நல்ல நேரம் முடியறதுக்கு முன்ன நிச்சயதார்த்ததிற்கு தேதி முடிவு பண்ணிட்டு தட்டை மாத்திக்கலாம். உங்களுக்கு இதுல சம்மதமா?"

"அருமையான யோசனை" ஜோசியர் ஆமோதித்தார்.

"எங்களுக்கு சம்மதம் மா" என்றார் பரந்தாமன். அனைவரும் ஒரு நிம்மதி பெருமூச்சை வெளியிட்டனர். மேற்கொண்டு சில சந்தேகங்களை பெரியவர்கள் ஜோசியரிடம் கேட்டு தெளிவு படுத்திக்கொண்டார்கள்.

யமுனாவை பூரணிக்கு பூமுடிக்க கூறினார் காவேரி.

"அதெல்லாம் கிடையாது. நீ தான் பூ முடிக்கிற உன் மருமகளுக்கு" யமுனா கூறவும் காவேரி அதிர்ந்தார்.

காவேரி மறுத்தும் பிடிவாதமாய் அவர் தான் பூ சூட்டவேண்டும் என நிர்பந்தித்தாள் பூரணி.

"இல்லை மா.. நான்..."

"மா நீங்களே பூ வைங்க" விஷ்வாவும் கெஞ்சினான்.

"காவேரி அம்மா பெத்த தாயை விட தன் மகன் நல்லாயிருக்கணும்னு நினைக்க கூடிய ஜீவன் யாரு இருக்க முடியும்? நல்லா சந்தோஷமா செய்யுங்க. உங்க மருமகளே ஆசைபடுது.."

ஜோசியர் கூறியதும் அனைவரும் காவேரியை ஊக்குவித்தனர்.

கண்கள் ஆனந்த குளமாக காவேரி தன் மருமகளாய் அன்னப்பூரணியை ஏற்றுக்கொள்வதை உறுதி செய்யும் விதமாக அவளது பின்னல் சடையில் பூ சூட்டினார்.

அந்த நெகிழ்சியான தருணம் கடக்க சிறிது நேரமானது. பெரியவர்கள் தாம்பூல தட்டை மாற்றிக் கொண்டனர்.

பரந்தாமன் ஜோசியருக்கான மரியாதையை செய்ததும் அவர் புறப்பட்டார். பிரகாஷ் டிரைவரிடம் அவரை வீட்டில் விட்டு வரும்படி பணித்தான்.

"டேய் கோட்டான்! கங்கிராட்ஸ் டா!" என ஷம்மு விஷ்வா கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தாள்.
"ஃப்ளவர் பேபி! கங்கிராட்ஸ்! " என அவளை கட்டி கொண்டு கொஞ்சி "ஏய் சேந்து நில்லுங்க ரெண்டு பேரும்" என தன் கைபேசியில் படமெடுத்து கொண்டாள்.

பின்னர் புகைப்படம் எடுக்கும் படலம் அடுத்த அரைமணி நேரம் ஓடியது.

"சரி உங்க நிச்சயதார்த்தம் fifteen daysல என் கல்யாணம் நாலு நாளுல இப்ப நான் வீட்டுக்கு போகலை மொத்த குடும்பமும் விளக்குமாறு தூக்கிட்டு வரும். அங்கிள்ஸ் ஆன்டீஸ், எல்லாரும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துருங்க. ஏய்! நீங்க எல்லாரும் நாளைக்கு மூணு மணிக்கு கரெக்டா வீட்டுல இருக்கீங்க..." அவளது மிரட்டல் தொனியை திடீரென்று சற்று அடக்கி "பிரகாஷ் ப்ரோ நீங்களும் வாங்க ஆன்டியை கூட்டிட்டு" என்றவள் சுந்தரவள்ளியின் காலை தொட்டு வணங்கினாள்.

"அதெப்படி ஷம்ஸு மறப்போம் இந்த பொன்னான நாளை தானடீ ரொம்ப ஆவலோட எதிர்பார்த்து காத்துட்டு இருக்கோம்" அர்ஜுன் அவளது தோளில் கை போட்டு உற்சாகமாய் பதிலளித்தான்.

ஷர்மிளா ஆனந்தமாக புன்னகைக்க, "எனக்கும் விச்சுவுக்கும் இது சுதந்திர தினம் இல்லையா? எப்படி மறப்போம்?"
போலி கண்ணீர் உகுத்த அர்ஜுனை வகுந்துவிடும் நோக்கில் ஷர்மிளா முறைக்க மற்ற அனைவரும் சிரித்தனர்.

"But you see Mr சின்ன கோட்டான்...எனக்கு ஒரு டௌட் டா"

"ஆரம்பிக்கிறதை பாரு.. முதல் மரியாதை படத்துல சாமீ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்னு ஒரு ஆளு சொல்லிக்கிட்டே இருப்பாரே அவரை மாதிரி.."

"என் மேரேஜ்க்கு அப்புறம் உங்களுக்கு freedomனு யாரு டா தப்பான ஐடியா குடுத்தா?"

"Waare waah! போட்டா பாரு கண்ணிவெடியை! கை குடுமா" பிரகாஷ் குதூகலிக்க, பெரியவர்கள் அனைவரும் சிரித்தனர்.

"தீபு டிரான்ஸ்பர் ஆர்டர் கேன்சல் ஆயிடுச்சு. Also நான் பிரகாஷ் சாரோட job offer accept பண்ணிட்டேன். நீ என்னை பகைச்சுக்காம இருக்கறது தான் புத்திசாலித்தனம் Mr Arjun." வில்லத்தனமாக பேசிவிட்டு கடகடவென ஷர்மிளா சிரிக்க

"திரு பிரகாஷ் தங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என உறுக்கமாக அவனது கைகளை பற்றி குலுக்கிய அர்ஜுன் "இதை ஆர்க்கிடெக்ட்னு நம்பி வேலைக்கு எடுத்துருக்கீங்க. இது சிந்தனை சிற்பி இல்லை சயனைட் குப்பி. Please be careful"

மீண்டும் ஒரு சிரிப்பொலி எழுந்தது.

"ஓகே ஓகே கூல்! நீ இப்ப கிளம்பு நாம உன் கல்யணத்துக்கு பிறகு பொறுமையா கணக்கு பைசல் பண்ணிக்கலாம். நாம இங்க தான குப்பை கொட்டப் போறோம்.."

யாருக்கும் தெரியாமல், யாரையும் பொருட்படுத்தாமல் கண்களால் கவ்விக்கொண்டு காதலை பரிமாறி கொண்டிருந்தனர் விஷ்வாவும் பூரணியும் இத்தனை களேபரத்திலும்.

மூர்த்தி பூரணி அருகே வந்து தலையில் கைவைத்து ஆசிர்வதித்து, "எனக்கு ரொம்ப சந்தோஷம் டா, நீ வேற வீட்டுக்கு கல்யாணம் ஆகி போனா எங்க யாராலையும் உன்னை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு தெரிஞ்சு தான் கடவுள் உங்க ரெண்டு பேரையும் சேத்து முடிச்சு போட்டுட்டாரு போல இருக்கு. ரெண்டு மகளை மருமக ரூபத்துல குடுத்துட்டான் கடவுள்"

சுகந்தியையும் தலையில் கைவைத்து ஆசி வழங்கினார், கண்கள் கலங்கியிருந்தது.

காவேரி விஷ்வாவை ஆசி பெறுமாறு சைகை செய்ய, பூரணியும் விஷ்வாவும் பெரியவர்கள் அனைவரின் காலிலும் விழுந்து ஆசி பெற்றனர். அனைவரும் நெகிழ்ந்து போயினர்.

உணர்ச்சிவசப்பட்ட யமுனா இரண்டு பெண்களையும் தன்னருகே அழைக்க இருவரும் அவரை அணைத்துக் கொண்டனர்.

"போதும் போதும்" என அவரை தள்ளிக் கொண்டு பூரணியை அர்ஜுன் ஒரு பக்கமும் சுகந்தி ஒரு பக்கமும் அணைத்து கொண்டனர்.

'கேடி சொக்குபொடி போட்டு எல்லாரையும் மயக்கி வச்சிருக்கா' என உடையவனின் பார்வை காதலோடும் ஏக்கத்தோடும் அவளை வருடியது.

"அண்ணாத்தை என்ன ஒரே புகையிற வாசனை வருது. வேணா நீயும் ஜாயின் பண்ணிக்க இது உன் ப்ராபர்ட்டி தான். Feel free"

பல்வேறு அதட்டல் குரல்கள் கிளம்பியது.

"சரி சரி கிளம்பலாம்" மூர்த்தியின் குரல் கேட்டதும்,

"அதான.. கிளம்புங்க எல்லாரும், நச நசன்னு! நீ வா சுகந்தி உன கையால ஒரு டீ போட்டு குடு மா"
அவளை கைபற்றி அழைத்துக் கொண்டு அவன் முன்னே நடக்க

"டேய் என்ன டா பண்ற?" யமுனா அவனை பதட்டமாக தடுத்து நிறுத்தினார்.

சுரேஷும் பத்மாவும் சிரித்தனர். "விடுங்க சம்மந்தி அர்ஜுன் தாமஷை பத்தி நமக்கு தெரியாதா?"

"என்ன மா? பிரகாஷ் ப்ரோ நம்ம சுகந்தி கையால டீ குடிச்சதில்லையே அவருக்காக சொன்னேன்" அர்ஜுன் அசால்டாக பதிலளித்தான்.

"நீ பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கிற நல்லவன்னு எனக்கு தெரியும். நான் இன்னொரு நாள் டீ குடிச்சுக்கறேன். நீங்க போங்க சுகந்தி"
அவள் பொசுக்கென சிரித்துவிட்டு தன் வீட்டுக்குள் புகுந்து கொண்டாள்.

அவனை முறைத்த அர்ஜுன்
"நீ உண்மையாவே பரந்தாமன் அங்கிள் சொந்தமா இல்ல எங்க அப்பா சொந்தமா? இதே மாதிரி பண்ணிட்டு இரு மவனே நீ கட்ட பிரம்மசாரி தான்."

வாசல் கதவின் அருகே தேங்கி நின்ற விஷ்வா யாரும் அறியாமல் அவளை பார்வையால் வருடினான். விழிகளில் தன் காதல் மொத்ததையும் தேக்கி அவனை நோக்கினாள். இதழில் பூத்த மென்னகையும், முகத்தில் நிறைந்திருந்த பரவசமும் அதோடு சற்றே கலந்திருந்த வெட்கச்சிவப்பும் தன்னவளை பேரழிகியாக அவனுக்கு காட்டியது. பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் தூய்மையான அன்பால் கட்டி வைத்திருக்கும் இந்த பேரழகி என் சொந்தம், என் காதலி, என் மனைவி என்பதை நினைத்து நெஞ்சம் பூரித்து நின்றான்.

ஆணுக்கு அவனின் கண்ணியமும், ஒழுக்கமுமே கம்பீரம், அழகு என்பது அவளின் நம்பிக்கையாக இருந்தது. இதில் நூறு சதவிகிதம் தன்னவன் முழுமை பெற்றவன் என்பதை ஒவ்வொரு முறையும் அவள் உணர்ந்த தருணங்களில், அவனுக்காக மேலும் மேலும் வார்த்தையில் விவரிக்க முடியாத அளவு காதல் பொங்கியது உள்ளத்தில்.

அர்ஜுனும் பிரகாஷும் உள்ளே எட்டி பார்த்துவிட்டு இந்த அழகிய தருணத்தை கைபேசியில் சப்தமில்லாமல் பதிவு செய்து கொண்டனர்.








Next episode 💃🕺தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா ஷம்ஸ் கல்யாணம் ❤️😍😍🥰🥰

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro