Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 46

Date published: 23 February 2024
Word count: 2055

ஷர்மிளா தன் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாக நண்பர்கள் பட்டாளத்தை அழைத்து போக அவரவர் வீட்டில் அனுமதி பெற்றிருந்தாள். அர்ஜுன், சுகந்தி, விஷ்வா பூரணி நால்வரும் முன்னதாக புறப்பட பெரியவர்கள் மாலை சங்கீத் நிகழ்ச்சியில் வந்து கலந்து கொள்வதாக கூறியிருந்தனர்.

அர்ஜுன் காரை ஓட்டி கொண்டிருந்தான், பூரணியும் விஷ்வாவும் பின் இருக்கையில். விஷ்வா பேசாமல் அமைதியாய் வர, பூரணியும் கல்யாண மண்டபத்திற்கு போன பிறகு அவனிடம் பேசலாமென முடிவெடுத்து அமைதியாக இருந்தாள். வீட்டில் இருக்கையில் எத்தனை முயன்றும் அவன் பிடிகொடுத்து பேசவில்லை.

அடுத்து நடந்தது பேரிடியாய் இறங்கியது பூரணியின் தலையில். விமான நிலையத்தை கார் நெருங்குவதை பார்த்து திகைத்த பூரணி,
"அர்ஜுன் அண்ணா இங்க எதுக்கு? சொல்லு ணா.. சுகு நீயாவது சொல்லுடி. என்ன நடக்குது? சிவா என்ன டா?"
மயான அமைதி மட்டுமே பதிலாக கிடைத்தது.

டெர்மினல் வாயிலை அடைந்ததும் விஷ்வா காரிலிருந்து இறங்கி அவனுடைய பெட்டிகளை இறக்கினான். கார் கதவருகே வந்து நின்றவனை நம்பமுடியாமல் குழப்பத்தோடு பார்த்தாள். அவன் பார்வையை தவிர்த்து முகத்தை திருப்பிக் கொண்டான்.

"பாம்பேக்கு டிரான்ஸ்பர் ஆயிடுச்சு. இம்மீடியட்டா ஜாயின் பண்ண சொல்லி ஆர்டர். கல்யாணத்துக்கு நான் வரலைன்னு ஷம்மு கிட்ட சொல்லிட்டேன். அங்க செட்டில் ஆனப்புறம் அம்மாவை கூட்டிட்டு போவேன்".

பூரணி செய்வதறியாது இடிந்து போய் உட்கார்ந்திருந்தாள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தோட. அவன் அதை காண மாட்டாது நகர முற்பட, சட்டென காருக்குள்ளிருந்து எட்டி அவன் சட்டையை பற்றிக் கொண்டாள்.

"சிவா இல்லை.. நீ.. போகலை.. நீ பாம்பே போகலை.. சும்மா விளையாடுற.. என்கிட்ட சொல்லாம" ஹுக் ஹுக் இடை இடையே விக்கல் எடுத்தது
"நீ... அக்கா கல்யாணம்.. சந்தீப்..."
ஹுக் ஹுக் "கவி மா.. அத்தை.. நீ.. என்னை தனியா.. விட்டு"

பின்னால் வரிசை கட்டி நின்றிருந்த வாகனங்கள் ஹாரன் அடித்து கொண்டிருக்க, போலிஸ் அதிகாரி வண்டியை எடுக்கும்படி சத்தம் போடவும் அவளது பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பெட்டியை எடுத்து கொண்டு நடந்தான்.

சடாரென பூரணி கதவை திறந்து வெளியே பாய்ந்தாள்.

"பூரி"

"பூகுட்டி"

அர்ஜுனும் சுகந்தியும் இறங்கவும் முடியாமல் காரை எடுக்கவும் முடியாமல் சிக்கலில் தவித்தனர்.

"சிவா.." பல தலைகள் திரும்பின. கூட்டத்தை விலக்கி தள்ளிக் கொண்டு ஓடினாள்.
"சிவா"
அவன் கண்ணில் தென்படவில்லை. அவள் கண்கள் அலைபாய்ந்தன.

"சிவா ப்ளீஸ் வெயிட்.." இயன்ற வரை சத்தமாக கூப்பிட்டு பார்த்தாள். பலர் அவளை வினோதமாக பார்த்தனர்.

ஊருக்கு புறப்படும் பயணியர் அவர்களை வழியனுப்ப வந்த உறவுகள், விமான நிலைய ஊழியர்கள் என அத்தனை கூட்டத்தில் அவளது கண்கள் அவனது கரும்பச்சை சட்டையை தேடியது. கண்களில் கண்ணீர் மறைக்க, இதயம் வேகமாக துடிக்க, வாழ்க்கை நூலிழையில் ஊசலாட இங்கும் அங்கும் ஓடினாள். யாரோ தொலைவில் அவளை அழைப்பது போல இருந்தது.

'அதோ, அங்கே' பார்த்துவிட்டாள். வேகமெடுத்தன கால்கள். வெறி கொண்டவளாய் அவனை அழைத்தபடி ஓட அனைவரும் திடுக்கிட்டு அவளையே பார்த்தனர்.
டெர்மினல் உள்ளே நுழையும் வரிசையில் நின்றிருந்தான்.

ஆயுதம் ஏந்திய போலீஸ் அதிகாரி ஒருவர் அவளை வழி மறித்து தடுத்து நிறுத்தினார். அவர் ஹிந்தியில் கண்டிப்பான குரலில் ஏதோ பேச

"Siva.. Siva.. he is leaving.. please"
என அவள் சொன்னதும்.

"இப்படி ஏர்போர்ட்ல பிஹேவ் பண்ணகூடாது. உங்களை அரெஸ்ட் பண்ண வேண்டியிருக்கும். Who is Siva?" என அதிகாரமாய் அவர் குரல் கொடுத்ததும். வரிசையில் நின்றிருந்த விஷ்வா திரும்பினான்.

"There green shirt.." அவசரமாய் அவனை அடையாளம் காட்டினாள். அவர்களை நோக்கி நடந்துவந்தான் விஷ்வா. அவனிடம் அவர் கண்டன குரலில் ஏதோ கூற அவன் மன்னிப்பு வேண்டினான். சுற்றி இருந்தவர்கள் ஏளனமாக தன்னை பார்ப்பதை உணர்ந்தாலும அதை பொருட்படுத்தும் மனநிலையில் பூரணி இல்லை.

"சிவா, போகாத ப்ளீஸ். ஸாரி நான் உன்னை.." அவன் கையை கெட்டியாக பிடித்து கொண்டாள்.

அவனது உணர்ச்சி துடைத்த முகமும் குரலும் முற்றிலும் அந்நியமாய் தோன்றியது

"பூரணி.."

அதிர்ந்து விழித்தாள், "ஏன் என்னை அப்படி கூப்பிடுற? நீ என்னை பேர் சொல்லி கூப்படாத..வேணாம் எனக்கு பயமா இருக்கு. நீ போகாத. என்னை மன்னிச்சிடு சிவா. நான் உணர்ச்சிவசப்பட்டு கோவிச்சுகிட்டேன். உன்னை பாக்காம இருந்ததுக்கு என்ன பனிஷ்மெண்டு வேணாலும் குடு அனகோன்டா.. எதுவாக இருந்தாலும் ஓகே... நீ வா வீட்டுக்கு போலாம்..." அவன் கையை பற்றி இழுக்க, அவன் நகரவில்லை. பூரணி விழித்தாள். "ஏன் வரமாட்டேங்கர? வீட்டுக்கு போய் பேசலாம் வா.. இல்லை கார்ல பேசலாம். வா டா.. பேசு சிவா.. எனக்கு நீ இல்லாம இருக்க முடியாது" அருகில் வந்து "ஏன் என் முகத்தை பார்க்க மாட்டேங்கற? பேசு சிவா"

தலை விண்ணென்று தெறிக்க தொடங்கியது.

"பூரணி" பின்னால் அர்ஜுன் குரல் கேட்டது.

"வீட்டுக்கு போ பூரணி எனக்கு பேச எதுவும் இல்லை. இனி நான் இங்க வர போறதும் இல்லை. எப்ப உனக்கு என் மேல நம்பிக்கை இல்லாம போச்சோ அப்பவே நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு" அவள் கையை விடுத்து அர்ஜுனிடம் ஒப்படைத்துவிட்டு நகர்ந்தான்.

உள்ளுக்குள் ஏதோ முறிந்து விழ நிலை குலைந்து கீழே அமர்ந்தாள்

சுவாசம் செல்ல மறுத்து நெஞ்சை அடைத்தது

பார்வை வட்டத்தில் அனைத்தும் மங்கி போய், பிரிந்து செல்லும் அவன் உருவம் மட்டுமே கண்ணில் நிறைந்து நின்றது.

கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது அன்று பெய்த மழையை போல

அனைத்தும் ஊமையாகி விட, விலகி செல்லும் அவனின் காலடி சப்தம் மட்டும் தீர்கமாக கேட்டது

உலகம் அதன் போக்கில் இயங்க, அவளது இதயத்தின் இயக்கம் தோய்ந்து ஒலித்தது

கண்ணாடி கதவுகள் திறக்க அவன் உள்ளே நுழைந்ததும் கதவுகள் மூடின.
ஒர் முறையேனும் திரும்பி பார்க்கவில்லை.

கண் பார்வையிலிருந்து அவன் உருவம் மறைய, அலாதியான நிசப்தம் நிலவியது. எதையும் உணராமல் ஸ்தம்பித்து அதே நிலையில் உட்கார்ந்திருந்தாள்.

அர்ஜுனும் சுகந்தியும் எத்தனை முறை அழைத்தும் அவளிடம் அசைவு இல்லை. ஒரு பெண் போலீஸ் உதவ, மூவரும் அவளை ஒருவாராக தூக்கி நிறுத்தி, நடத்தி கொண்டு சென்று, காரின் உள்ளே உட்கார வைத்தனர்.

"பாப்பா இங்க பாரு"

"பூ குட்டி இங்க பாரு டா" அவள் கன்னத்தை தட்டி இயல்புக்கு கொண்டு வர முயன்றனர் சுகந்தியும் அர்ஜுனும்.

"ஏதாவது பேசு டீ. அர்ஜுன் எனக்கு பயமா இருக்கு டா". அர்ஜுன் முகத்தில் தண்ணீர் அடித்து தெளியவைத்தான், வெறித்த பார்வை பார்த்திருந்தாள். எதுவும் பேசவில்லை.
கைக்குட்டையை கொண்டு அவள் முகத்தை துடைத்து விட்டாள் சுகந்தி.

"பூரி எதாச்சும் பேசு டி.."

போலீஸ் அதிகாரி ஒருவர் கார் கதவை தட்டி வண்டியை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அர்ஜுன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வண்டியை செலுத்தினான்.

"எங்க போற அச்சுணா?"

"வீட்டுக்கு"

"ஊஹூம்... அங்க சிவா இருக்கமாட்டானே."

"எங்க போகணும்?"

"ஷம்முக்கா கல்யாணம்" என்ன மனநிலையில் இருக்கிறாள் என்றே யூகிக்க முடியவில்லை அவர்களால்.

"சரி அங்கயே போகலாம் டா."

"அங்க சிவா வருவானா? அவன் வரலைன்னு சொன்னானே.

அக்கா அழுவாங்க அவன் இல்லைனா, சுகு அழுவா அண்ணா இல்லைனா.. அர்ச்சுணாவும் அழுவாரு விச்சு இல்லாம, பெரிய அம்மு, மாமா எல்லாரும் அழுவாங்க...
கொஞ்ச நாளுல சரியாகிடுவாங்க."

"ஆனா நான்" விசும்பல் வெடித்தது "நான் சரியாக முடியாது. என் உசிருல பாதி அவன். என் சிவா என்னை வெறுத்துட்டான். என்னை வேணாம்னு சொல்லிட்டான்.

நான் சிவாவோட செல்லம்மா.. சிவாவோட ஜானு.. தோ பாரு.." தோளில் பச்சை குத்தியதை காட்ட, அர்ஜுன் அதிர்ந்தான்.

அவளது பார்வை எதன் மீதும் நிலைக்கவில்லை, எங்கோ வெறித்தபடி இருந்தாள்.

"நான் அவன்கிட்ட இன்னிக்கு மன்னிப்பு கேக்கணும்னு இருந்தேன். ப்ராமிஸா. ஆனா ஒரு வார்த்தை கூட பேசாம போய்ட்டான். என்னை பேசவிடலை.. என்னை வெறுத்துட்டான் என் சிவா."

"கவிம்மாவை மாமா கல்யாணம் ஆனப்பிறகு விட்டுட்டு போனாரு, இவன் என்னை இப்பவே விட்டு போய்ட்டான். ஏன் அர்ச்சுணா? நீ ஏன் அவனை தடுக்கலை?"

நெஞ்சை பிழிந்தது இருவருக்கும்.

தீடீரென சிரித்தாள். "நான் ஒரு லூஸு. என்னை போய் யாராவது கல்யாணம் பண்ணிக்குவாங்களா? எனக்கு தான் மென்டலாச்சே.. அதான் அவன் பயந்துட்டான்".

உதடு வரண்ட சிறப்பு ஒன்று உதிர்க்க கண்கள் கண்ணீரை சிந்தியது.

மெல்லிய குரலில் ஏதேதோ பிதற்றியபடி அழுது அழுது சோர்ந்து போனாள். அவள் கண்மூடி சீட்டில் சுருண்டு படுத்துவிட அவள் நிலையை கண்டு துடித்து போயினர் இருவரும்.

"பூ குட்டி" "பாப்பா" இருவரும் ஒரு சேர பதட்டமாக அழைத்தனர்.

"தலைவலிக்குது, மயக்கம் வருது...

சிவா ஏன் போன? ஸாரி சிவா" முனகி கொண்டே இருந்தாள்.

எதோ பேச்சு குரல்கள் கேட்பது போல இருந்தது, "அவளை தூங்க விடாத ஹாஸ்பிடல் போலாம்."

'ஹாஸ்பிடல் வேண்டாம் ஏர்போர்ட் போ.. சிவா வேணும்' சொல்ல நினைத்தாள் ஆனால் குரல் வெளிப்படவில்லை.
சிவா..ஸாரி ஸாரி சிவா ஆழ் மனதில் அதையே உச்சரித்தபடி மயங்கினாள்.

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

யாரோ கன்னத்தில் தட்டி எழுப்ப முயன்றனர், மிக சிரமப்பட்டு கவனத்தை அந்த குரல் மீது திருப்பினாள்.
"அன்னம், அன்னம் மா".
அம்மா தான்.

'அம்மா சிவா..' சொல்ல வாய் வரவில்லை.. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வலித்தது. அவன் இல்லை எனும் நினைப்பே வலியை தந்தது.

குளிர்ந்த நீர் முகத்தில் பட்டதும் அலறி எழுந்தாள், "சிவா"

எதிரே அம்மா அப்பா.

"அன்னம் என்ன டா ஆச்சு? ஏன் கத்தின?"

"மா சிவா.." மிரட்சியோடு அங்கும் இங்கும் பார்த்தாள்.

"அம்முலு என்னனு சொல்லு தங்கம். என்ன ஆச்சு மா? டாக்டர் கூப்பிடவா?"

"சிவா..என்னை விட்டு போறான் மா.." தலை வலி மேலும் அதிகரித்தது.

ஏர்போர்டிலிருந்து எப்போது வீட்டிற்கு வந்தோம் என்ற குழப்பம் அதை விட அதிகமாக இருந்தது. இருவரையும் தள்ளிவிட்டு எழுந்து ஓடினாள். எல்லா அறையிலும் எதையோ தேடிவிட்டு

"சிவா, போகாத, சிவா.." தாழிட்ட வாயிற் கதவை திறக்க போராடினாள். தந்தையும் தாயும் அவளை சமாதானம் செய்ய முயன்றனர். அதற்கு மேல் யோசிக்க முடியவில்லை. கண்களை இருட்ட கதவின் மீது மயங்கி சாய்ந்தாள். அவளை கைதாங்கலாக உள்ளே அழைத்து போய் படுக்கையில் விட்டனர்.

கோகிலா மீண்டும் அழைத்தார், "அன்னம் கண்ணை திற மா, அன்னம். தூக்கத்துல ஏதோ கனவு கண்டுட்டு பயந்திருக்கா. இவ்வளவு தீவிரமா இந்த பிரச்சனை வந்து பல வருஷம் ஆகுது. பயமா இருக்குங்க." கோகிலா அழ ஆரம்பித்தார்.

ஆறுதலாய் மனைவியையும் மகளையும் ஒரு சேர அணைத்து கொண்டார் பரந்தாமன், "ஒண்ணும் இருக்காது கலா, நீ பயப்படாத. நான் விஷ்வாவை கூப்பிடுறேன்".

"இந்நேரத்துக்கா? மணி ரெண்டுங்க".

"பரவாயில்லை மா, இப்ப இவளை சமாதானம் பண்ண வேற வழியும் இல்லை. ஹாஸ்பிடல் போகணும்னா கூட ஒத்துழைக்க மாட்டா. அவன் வந்து பேசட்டும் சரியாகுறாளா பார்ப்போம்".

கைபேசியை எடுக்க அடுத்த அறைக்கு போனார். மகளை மார்பில் சாற்றி கொண்டு தெய்வங்களை எல்லாம் துணைக்கு அழைத்து மனமுருகி வேண்டிகொண்டிருந்தார் கோகிலா. வியர்வையில் மகளின் உடை முழுதும் நனைந்திருந்தது. அவளின் உடைகளை மாற்றிவிட்டு, அவளை சாய்த்து உட்கார வைத்தார், மெல்ல கண் திறந்த மகளிடம்,
"உனக்கு என்ன ஆச்சு அன்னம்?"

"சிவா என்னை விட்டுட்டு போய்ட்டான் மா, பாம்பே போய்ட்டான். பேசலை மா" விசும்பல் தொடர்ந்தது.

"இல்லை டா அவன் எங்கேயும் போகலை"

வெளியே பேச்சு குரல்கள், தொடர்ந்து காலடி ஓசை.

"இங்க பாரு இதோ இருக்கான்" அவள் முகத்தை அறையின் வாயில் பக்கம் திருப்பினார்.

"இல்லை மா, அவன் போனதை நான் பார்த்தேன். இது கற்பனை! கனவு" கண் மூடியது.

உடல் துவண்டு, முகம் வெளிறி, அழுது சிவந்து, வீங்கிய கண்களோடு வேதனையை தாங்கி கிடந்த தன்னவளை பார்க்கும் போது துடித்தான் விஷ்வா. கட்டிலின் அருகே மண்டியிட்டு அமர்ந்தான்

"செல்லம்மா"

மெய் உருக்கும் அந்த குரல் கற்பனையா?

"செல்லம்மா இங்க பாரு நான் எங்கேயும் போகலை.. கண்ணை திற" அவள் கைகளை பற்றினான்.

அதே கதகதப்பு.. அதே அவனின் வாசம்..எப்படி சாத்தியம்? கண் திறந்தாள்.

இருவரின் கண்களிலும் கண்ணீர் உருண்டோட, கோகிலாவும் பரந்தாமனும் அறையை விட்டு வெளியேறினர் அவர்களுக்கு தனிமை அளித்து.

'கண் முன்னே இருக்கிறான், தொடும் தூரத்தில், கனவா? கற்பனையா? மாயையா? தொட்டால் மறைந்து விடுவானோ?'

இதயம் அதி வேகமாக துடித்தது பூரணிக்கு, கண்கள் இருள அந்த அறை சுழன்றது.

"சிவா".
சட்டென வாரி அணைத்து கொண்டான், துவண்ட கொடியாய் படர்ந்தாள் அவன் மார்பின் மீது. அவள் தோளை நனைத்தது அவன் கண்ணீர். சில நிமிடங்கள் அமைதியாக கடந்தது. அவளை தன்னிடமிருந்து விலக்கி, முகத்தை கையில் ஏந்தினான்.

"நான் எங்கேயும் போகலை மா. அது கனவு தான், நான் எப்படி டீ உன்னை விட்டு போவேன் மக்கு பொண்டாட்டி. என் உசிருல நீ?" கண் கலங்கினான்.

மீண்டும் அழுகை வெடிக்க, "சும்மா அழக்கூடாது. நான் தான் இங்க இருக்கேன்னு சொல்றேனே" சோர்ந்து போய் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள், அவனின் இதய துடிப்பு அவனின் பதட்டத்தை உணர்த்தியது, "ஸாரி சிவா, என்னை மன்னிச்சிரு.. நான்..நான்.." அழுகை பெரிதாக.

"உஷ்..ஷ்ஷ்.." தலையை ஆதூரமாக வருடி, உச்சந்தலையில் முத்தம் வைத்தான். இன்னும் தனக்குள் அவளை இறுக்கி கொண்டவன் ஒரு முறை கதவு மூடியிருப்பதை உறுதி படுத்தி கொண்டான். அவன் கண்களிலும் கண்ணீர் நிற்கவில்லை.

'எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணிட்டேன். இவ ஹெல்த் பத்தி தெரிஞ்சும்.' குழந்தையை போல முன்னும் பின்னும் தாலாட்டினான் அவளை தன் மீது சாய்த்து.

மெல்ல அவள் மூச்சு சீராக, அவள் முகம் நிமிர்த்தினான், முகம் துடைத்து, கலைந்திருந்த கூந்தலை கோதி விட்டு, "சரி படுத்து ரெஸ்ட் எடு".

"ம்ஹூம் நீ போய்டுவ, நான் தூங்க மாட்டேன்.." உதடு பிதுக்கினாள் பிடிவாதகாரி.

"இல்லை டா நான் போகலை இங்கே தான் இருக்கேன்" ஒரு சிறு விவாதம் தொடர்ந்தது, அவன் சட்டையை இறுக பற்றி கொண்டாள், மெல்ல பதட்டம் அதிகமாவதை உணர்ந்தான் அவளிடம்.

"சரி ஜானு ஒரு டீல், நான் அத்தைகிட்ட சூடா பால் எடுத்துட்டு வர சொல்லுவேன் நீ குடிச்சீன்னா நான் போகமாட்டேன். சரியா?"
முகம் சுழித்து, ஒப்புகொண்டாள். "சரி சட்டையை விடு ஜானு, எப்படி போய் பேசுறது அத்தைகிட்ட?"

"மாமா, ரொம்ப பயந்திருக்கா. என்னை போக விட மாட்டேங்கறா.." ஸோபாவில் அமர்ந்திருந்தனர் இருவரும்.

"நீ அவ கூட இரு விஷ்வா ப்ளீஸ்." அவன் கையை பற்றி கொண்டார் பரந்தாமன். "இப்ப வேற எதும் பிரச்சினை ஆகாம இருக்கணும்".

"அத்தை அவளுக்கு கொஞ்சம் சூடா பால் குடுங்க. இந்த மாதிரி நேரத்துல என்ன செய்யிறதுன்னு டாக்டர் அட்வைஸ் பண்ணியிருப்பாங்களே?"

"மெடிசன் இருக்கு பா.."

"ரொம்ப களைப்பா இருக்கா. அவ தூங்கி எழுந்திரிக்கட்டும் அவ எப்படி இருக்கானு பார்த்திட்டு டாக்டர் கிட்ட காலைல போய்க்கலாம்".

கோகிலா உடைந்து அழ, "ஐயோ அத்தை என்ன இது?" விஷ்வா பதட்டமடைந்தான்.
பரந்தாமன் மனைவியை தாங்கி கொண்டார்.

"இப்ப தான் என் பொண்ணு வாழ்க்கைல சந்தோஷம் வருதுனு நிம்மதி ஆனேன்..".
கோகிலா இப்போது துவண்டு போனது கண்டு கலங்கி போனான் விஷ்வா.

"ஸாரி நானும் கொஞ்சம் பொறுப்பா நடந்திருக்கணும்.."மன்னிப்பு வேண்டினான் அவர்களிடம். அவர் கை பற்றி கெஞ்சினான். "இதுவே முதலும் கடைசியும் நான் இனி இது மாதிரி அவகிட்ட ரியாக்ட் பண்ண மாட்டேன். அவ ஹெல்த் பத்தி தெரிஞ்சும் நான் இப்படி செஞ்சிருக்க கூடாது.
மாமா, இனி என்ன ஆனாலும் சரி அவ என் பொறுப்பு.

தைரியமா இருங்க, அவளுக்கு எதுவும் ஆகாது. அத்தை நீங்க ப்ளீஸ் பாலை எடுத்துட்டு வாங்க. அவ தூங்கின பிறகு மத்ததை பேசலாம்." உள்ளிருந்து பூரணி அழைப்பது கேட்டு ஓடினான்.

சோர்வாக சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள், அவள் அருகில் உட்கார்ந்ததும், அவன் மீது சாய,

"செல்லம்மா.. அத்தை மாமா முன்னாடி ஒரு மாதிரி இருக்குடீ" எதையும் புரிந்து கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை. கோகிலாவும் பரந்தாமனும் வர, பால் குவளையை அவளிடம் நீட்டினான். மறுத்த போது, கட்டாயபடுத்தி குடிக்க வைத்து மாத்திரையையும் கொடுத்தான்.
அவள் கட்டிலை விட்டு எழ, மூவரும் பதறினர்.

"அம்மா" என ஓய்வறையை நோக்கி ஜாடை காட்டினாள். ஆண்கள் அறையை விட்டு வெளியேறினர். வந்ததும் மீண்டும் அவனை தேடினாள். பதட்டமாக அறையை விட்டு வெளியேறி, "நீ போக மாட்டேன்னு சொன்னியே.." அவன் கையை பற்றி கொள்ள.

"நான் மாமா கூட பேசிட்டு தான் இருக்கேன் செல்லம்மா, நீ போய் தூங்கு உனக்கு ரெஸ்ட் தேவை. கண்டிப்பா கிளம்பமாட்டேன்"

"இங்க பாரு அம்முலு நான் கதவை பூட்டி சாவி கூட எடுத்து வச்சிக்கிட்டேன். அவனால வெளியில போக முடியாது." மகளுக்கு ஆறுதல் சொன்னார் பரந்தாமன்.

"நானும் உங்களோட இங்கேயே இருக்கேன்.." அவன் அருகே உட்கார்ந்து கொண்டாள். "நீ ஏமாத்திட்டு ஊருக்கு போயிடுவ. முதல்ல டெல்லி போன, இப்ப வேற ஊருக்கு போய்டுவ... அப்புறம் நானும் காவிரி மா மாதிரி அழுதுட்டு இருப்பேன்".

அழுகையும் பயமும் கலந்த குரலில். அதிர்ந்தனர் அனைவரும். சித்தர் சொன்ன விவரத்தை முதல் நாள் மூர்த்தி கூறியது நினைவிலாட பெற்றோர் இருவரும் கலவரமானார்கள். மூவரும் வெவ்வேறு விதமான மனநிலையில் ஆழ்ந்திருக்க. சற்று நேரத்தில் அமர்ந்த நிலையிலேயே அவள் உறங்க தொடங்கினாள்.

"செல்லம்மா, உள்ள போய் பெட்டுல படு" என அவளை கை தாங்கலாக உள்ளே அழைத்து சென்றான்.

படுக்க வைத்ததும், "ஏன் சிவா நான் பழைய படி ஆயிட்டு வரேனா? அதான் அம்மா மருந்து குடுத்தாங்களா?" மிரண்ட விழிகளுடன், இதுவரை அனைவரையும் அலைகழித்த பயத்திற்கு தன் வார்த்தையால் உரு கொடுத்தாள்.

வெளியே கோகிலா விசும்பும் ஒலி கேட்க விஷ்வாவிற்கு இதயத்தை வாளால் அறுப்பது போல இருந்தது. தன்னிச்சையாக கை கழுத்திலிருந்த டாலரை பற்றியது, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான். ஆழ்ந்து மூச்செடுத்து, யோசித்தான்.

"இது ஜஸ்ட் ஒரு கெட்ட கனவு, அதுனால ஏற்பட்ட பயம் அவ்வளவு தான். நீ சரியா தூங்கலை கொஞ்ச நாளானு அத்தை சொன்னாங்க, சரியா சாப்பிடுறதும் இல்லைனு சுகந்தி சொன்னா. ஸோ, எல்லாம் சேர்ந்து கொஞ்சம் வீக்கா இருக்க அவ்வளவு தான். தூங்குறதுக்கு தான் மெடிசன் குடுத்தாங்க உனக்கு, தூங்கு."

"இங்க உட்காரு" படுக்கையில் அவனை அமரச்சொல்ல, சற்றே தயங்கினான் விஷ்வா.

"சரி ஒன் மோர் டீல். இப்ப நீ ரெண்டு விஷயம் டிமாண்ட் பண்ற, நான் ஒண்ணே ஒண்ணு தான் கேக்கறேன். பெரியவங்க ஹர்ட் ஆககூடாதுன்னு நான் நினைக்கிறேன்.

நீ சொல்றபடி நான் கிளம்ப மாட்டேன், இதுல நீ வின். நீ சொல்ற மாதிரி நான் இங்க உன் பக்கத்துலேயே இருப்பேன் இதுலேயும் நீ தான் வின். ஆனா, நான் இப்படி கீழே உக்காந்துப்பேனாம், நீ படுத்துக்கிட்டு, என் கையை பிடிச்சுக்குவியாம். அப்ப என்னால போக முடியாது, நீயும் பயமில்லாம தூங்கலாம். இப்ப யாரும் ஹர்ட்டும் ஆக மாட்டாங்க. சரியா?"

மெலிதாக புன்னகைத்து அவள் ஒப்பு கொள்ள, "ஆனா நீ ரெஸ்ட் எடுக்கணும். படு" அவளை படுக்க வைத்து போர்வை போர்த்தி, கீழே தரையில் அமர்ந்தான். ஒரு கையால் அவள் கையை பற்றி கொண்டு, மறு கையால் அவள் தலை கோத, அவனையே பார்த்தபடி இருந்தாள்.

"சிவா"

"ம்ம்"

"ஸாரி"

"என்னையும் மன்னிச்சிரு ஜானு" அவள் விரல்களில் மென் முத்தம் பதித்தான். இடது கையால் அவனது கேசத்தை கோதினாள்.

"சிவா.."

"என்ன செல்லம்மா?"

"கவிதை சொல்லேன் ரொம்ப நாளாச்சு ப்ளீஸ்".

அவளது நெற்றியை மெலிதாக வருடியபடி யோசித்தான்.
வழக்கம் போல பாரதி தான் துணைக்கு!

"நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்;
நீல விசும்பினிடை
நின்முகங்கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்;
பிரித்துப் பிரித்து
நிதம் மேகம் அளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை;
சிரித்த ஒலியினிலுன் கைவிலக்கியே,
திருமித் தழுவியதில்
நின்முகங் கண்டேன்."

அவள் முகத்தில் ஒரு நிம்மதி படர்ந்தது.

"ஜானு னா என்ன?"

"ஜான் அப்படீன்னா ஹிந்தியில உயிர்னு அர்த்தம், ஜானு னு நாம நேசிக்கிறவங்களை செல்லமா கூப்பிடுறது என் உயிரேனு சொல்ற மாதிரி" அழகான வெட்க புன்னகை அவள் இதழ்களில் விரிய

"விளக்கம் போதுமா?"

சற்று நேரத்தில் மருந்தின் விளைவால் உறங்கியும் போனாள் அவன் கரத்தை இறுக பற்றியபடி. வெகு நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தான் விஷ்வா, மெல்ல சோர்வு தாக்க அவனும் உறங்கிபோனான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro