Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 44

Date published: 4 Feb 2024
Word count: 2334

💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

'கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லைனு சொல்றது பழமொழியா இல்லை பாடல் வரியா?'

சந்தேகம் பூரணிக்குள் எழ காரணம் மார்கழியில் வெளுத்து வாங்கி கொண்டிருந்தது மழை.




மொட்டைமாடிக்கு செல்லும் படிகட்டில் அமர்ந்திருந்தாள். தன்னை போல வானமும் அழுவது போல தோன்றியது பூரணிக்கு.
சொல்லொணா துயரத்தை கருமேகங்களின் ரூபத்தில் நெஞ்சில் சுமந்து, துக்கம் தாளாமல் தன்னை போல் பிழிய பிழிய அழுகிறதோ என எண்ணினாள்.
நினைக்க நினைக்க நெஞ்சம் விம்மியது!

சுயபச்சாதாபம் போல ஒரு படுகுழி எதுவுமே இருக்க முடியாது!

"ஏன் அவருக்கு உணர்ச்சியே கிடையாதா? பாக்க போனா அண்ணா தான் இன்னும் ஜாஸ்தி பாவம்.

ஒரு வார்த்தை அவரை பேச விடாம எவ்வளவு ஹர்ட் பண்ண நீ? அதுவும் எல்லார் எதிர்லயும்? அவருக்கு பணம் பெரிசுன்னு நினைச்சிருந்தா பிரகாஷ் அண்ணா குடுக்கற பணத்தை வாங்கியிருப்பாரு இல்லாட்டி அந்த பிஸினஸ் ஆஃப்ர் ஒத்துகிட்டிருப்பாரு. ஒரே செகண்டுல அண்ணனை தூக்கி எறிஞ்சு பேசிட்டியே?


என்ன கோவம் வந்தாலும் நிதானம் இழக்காம முடிவு எடுன்னு அவருக்கு உபதேசம் பண்ணிட்டு நீ என்ன செஞ்சு வச்சிருக்க இப்ப?

உனக்கு பேரு பூகுட்டியாம்
நீ பூகம்பம் டி, புல்டோசர்..."
தோழியை அடிப்பது போல கையை ஓங்கிவிட்டு, தன் நெற்றியில் அறைந்து கொண்டு
அவள் செய்த தவறை சுட்டிக்காட்டி அவளை கண்டித்து
கொண்டிருந்தாள் சுகந்தி.

"நீ திருப்பி கிடைக்கற வரைக்கும் சாமியார் மாதிரி தவம் கிடந்தவரை போயி... போடி!" சலித்துக்கொண்டாள். "உன்னையெல்லாம் கோகிமா ரெண்டு அடி போட்டு வளர்த்திருக்கணும். இப்ப பெரியவங்களே கல்யாண பேச்சை எடுக்கணும்னு நினைச்சாலும் என்ன பிரயோஜனம்? சண்டை போட்டு ஆளுக்கு ஒரு மூலையா பிரிஞ்சுகிடக்கறீங்க"
சுகந்தி கொந்தளித்தாள். கேவி கேவி அழுபவைளை அணைத்து ஆறுதல் படுத்த மனம் விழைந்தாலும்
"இரு நான் கீழ போய் என்ன நடக்குதுன்னு பாக்கறேன்".


உயிர் தோழியே கூட தன்னை வெறுக்கும் அளவிற்கு தான் நடந்து கொண்டது எத்தனை கேவலம்! நொந்துகொண்டாள் தன்னையே பூரணி.


காலை முதல் இடைவிடாமல் ஹோவென பேரிரைச்சலோடு கொட்டும் மழை மதியமே ஊரை நிசப்தமாக்கி உள்ளே முடக்கி விட்டிருந்தது. இன்று முதல் நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது முன்னெச்சரிக்கையாக!


பதினைந்து நாட்களாகி விட்டது அவனுடன் பேசி, அவனை நேருக்கு நேர் பார்த்து. காவிரிக்கு வழக்கம் போல மாலை நேர வகுப்பிற்கான உதவியை மட்டும் தொடர்ந்தாள்.

அன்று ஒரு நாள், "கண்ணு இந்த இஸ்திரி போட்டு வந்த துணியெல்லாம் உள்ள அவன் பீரோவில வச்சிடு டா" அவர் கனிவாக பேசும் போது தட்டமுடியவில்லை.
அவன் அறையில் நிறைந்திருந்த அவனின் வாசம், பிறந்த நாள் அன்று அங்கு நடந்தவை, அன்று அவன் கண்காட்சி போல அடுக்கி வைத்திருந்த அத்தனை ஓவியங்கள், எல்லாம் நினைவுக்கு வர, உடைந்து அழுதாள்.

ஹாங்கரில் கிடந்த அவன் சட்டையை கன்னத்தில் ஒட்டிக்கொண்டு, 'ஸாரி சிவா, ஸாரி' என மெல்ல விசும்பியவள் சுதாரித்து எழுந்து வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

யாரிடம் மன்னிப்பு வேண்டினாளோ அவன் அதை மறைந்திருந்து கேட்டு கொண்டிருந்தான் கலங்கிய கண்ணோடும் கனத்த இதயத்தோடும்.

அவன் இல்லாத நேரம் மனம் அவன் நினைப்பிலே, அவனையே பேயாக சுற்றியது. நினைவுகள் அதிகமாக, பிரிவின் வலி அதிகரித்து, வலிக்கு மருந்தாக மீண்டும் அவனையே நாடியது.

இதோ இப்போதும் அவன் தோள் சாய ஏங்குகிறது இந்த மானங்கெட்ட மனசு!
அது மட்டுமா? மழைச்சாரல் குளிர் காற்றில் லேசாக நடுங்க, அவன் அணைப்புக்கும், அதில் கிடைக்கும் கதகதப்புக்கும் ஏங்கியது! அவனது அக்கறைக்கும் அரவணைப்புக்கும் தவித்து தவம் கிடந்தது!
உடலும் மனமும் தனக்கெதிராய் சதி செய்ய, தன்னை தானே நொந்து கொண்டாள்!

அவனை சந்தித்து மன்னிப்பு கேட்கலாம் என தைரியத்தை ஒன்று திரட்டிகொண்டு அவனை தேடினாள்.
அண்ணனும் தம்பியும் இரண்டு நாட்கள் முன்பு கொடைக்கானல் சென்றுவிட்டதாக தகவல்.

சந்தீப்பின் தன் திருமணத்திற்கு முன் ஆண் நண்பர்களுக்காக கொடைகானல் சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தான். விருப்பமில்லாவிட்டாலும் ஒரு மன மாறுதலுக்காக விஷ்வா சென்றிருந்தான்.

⚜️⚜️⚜️⚜️⚜️

சண்டைக்கான காரணம் என்ன?

Flashback

பரந்தாமன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியதும் அவரிடம் பிரகாஷ் பற்றியும், பரந்தாமனின் குடும்பத்தினர் பற்றியும் எடுத்துரைத்தான் விஷ்வா.

அவரும் கோகிலாவும் கலந்தாலோசித்து சற்றே சமாதானம் அடைந்து அவர்களை சந்திக்க ஒப்புக்கொண்டனர். பூரணிக்கு பக்குவமாய் எடுத்து சொல்லும் சந்தர்ப்பம் அமையவில்லை.

கல்லூரியை தனது பொறுப்பில் எடுத்துக்கொண்ட போது உறுதியளித்தது போல மாணவியரின் வேலை வாய்ப்புக்கான பயிற்சிகளை துவக்கி வைத்தது பிரகாஷின் சுந்தரவள்ளி எஜுகேஷனல் டிரஸ்ட்.

பல்வேறு துறைகளை சார்ந்த வல்லுநர்கள் பங்கு பெறும் கருத்தரங்கங்கள் மற்றும் பயிற்சி முகாம்கள் திருவிழா போல கோலாகலமாக நடந்தது.

அப்படிபட்ட கருத்தரங்கம் ஒன்றில் பங்குபெற்றுவிட்டு சுகந்தியும் பூரணியும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

பூரணியின் கைபேசியில் அலாரம் அடித்தது. "அச்சோ அப்பாவோட மருந்து வாங்கணும்னு ரிமைண்டர் வச்சதே மறந்து போச்சு!"

சோர்வாக முகத்தை சுழித்தாள் எனினும் அப்பாவின் உடல்நலம் முக்கியம் என்பதை உணர்ந்தவள் "நீ வீட்டுக்கு போடி சுகு. நம்ம தாஸ் அண்ணா மெடிக்கல் ரெண்டு தெரு தாண்டி தானே இருக்கு நான் வாங்கிட்டு வரேன். எனக்கும் சேத்து ரெண்டு தோசை சுட்டு வைப்பியாம் தங்கம் இல்ல!" என அவளது தாடை பிடித்து ஆட்டி கொஞ்சிவிட்டு ஜனக்கூட்டத்தை கடந்தாள்.

மருந்து மாத்திரைகளை வாங்கி கொண்டு திரும்பி வருகையில் அருகே இருந்த ராமகிருஷ்ணா மடத்தின் வாயிலில் பரிச்சயமான முகத்தையும் காரையும் கண்டாள்.

"பிரகாஷ் சார்.."

கைபேசியை காதில் வைத்திருந்தவன் அதை அணைத்து பாக்கெட்டில் வைத்துவிட்டு புன்னகைத்தான்.

"என்ன சார் சந்நியாசம் வாங்குறதுன்னு தீர்மானமே பண்ணிட்டீங்களா?"

சப்தமாக சிரித்து"அம்மா இங்க அடிக்கடி வருவாங்க. அவங்களை தான் இறக்கி விட வந்தேன். நீ?"

"அப்பாவோட மெடிசன்..."

அதே நேரம் அவனது தாயார் காரின் மறுபுறத்திலிருந்து இறங்கினார்.

"ஒரு நிமிஷம் இரு.."

அவளிடம் சைகை காட்டிவிட்டு அன்னையை ராமகிருஷ்ண மடத்தினுள் கொண்டுவிட சென்றான். அவர் பூரணியை பார்க்கும் முன் அவசரமாக அவரை திசை திருப்பி உள்ளே அழைத்துச் சென்றான்.

'எவ்வளவு அக்கறையா அம்மாவை கவனிக்கிறாரு பிரகாஷ் சார்'

"ஹாய் ஹீரோயின்"
அவளது ரஅந்த குரலால்.
சாலையின் மறுபுறம் ஷ்ரவன். முழு போதையில்.

அவன் தள்ளாடி சாலையை கடந்து வந்தான்.
"அன்னபூரணி... are you alone? Or..." காரை பார்த்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்து உறுதி செய்து கொண்டான்.

"ச்சீ.. வாயை மூடு" கோவமாக இரண்டடி பின்னே நகர்ந்தாள் பூரணி.

"நைஸ்! அடிக்கடி ஹீரோ சேஞ்ச் பண்ற? ஃபர்ஸ்ட் அர்ஜுன், தென் விஷ்வா, இப்ப பிரகாஷ்... நான் மட்டும் ஏன்டி வேணாம்?"

"பிரகாஷா..." அதிர்ந்தாள் பூரணி.

"ஓ இவன் ஏதோ பிஸினஸ் மேன் இல்ல? rich guy அன்னிக்கு பென்ஸ்ல (Benz) வந்தான்... இன்னிக்கு ஆடி (Audi) கார், டிசைன்ர் டிரெஸ், ஸோ ஓட்டாண்டி விஷ்வாவை கழட்டி விட்டுடியா?"
நாரசமாக கேள்விகள்.

"அடச்சீ... நீ கேடு கெட்டவன்னு தெரியும், அதை திரும்ப திரும்ப ப்ரூவ் பண்ணாத."

நகர எத்தனித்தவளின் கையை முறுக்கி மிரட்டினான். மதுவின் வாடையா அல்லது அவனின் நெருக்கமா தெரியவில்லை வயிற்றை புரட்ட பயம் பிடித்து கொண்டது.

"விடு டா" கத்தினாலும் போவோரும் வருவோரும் வேடிக்கை தான் பார்த்தனர், உதவ முன்வரவில்லை.

"இங்க பாரு மரியாதையா ஒண்ணு வந்து என் அம்மா கிட்ட நான் தப்பு பண்ணலைனு சொல்லிட்டு என்னை ஏத்துக்க சொல்லு இல்லை.." இளக்காரமாக பார்த்து விட்டு "என் கூட ஒரு நைட் இருந்துட்டு போ.

என்னை என் ஃபேமிலிலேருந்து பிரிச்சதுக்கு காம்பன்ஸேஷன்.. உனக்கும் டெய்லி ஒருத்தன் வேணும்ல...".

அவனது கன்னத்தில் ஒரு குத்து விழ அவன் பேச்சு தடைபட்டது. நிலைதடுமாறினான்.

பிரகாஷ் அவனை மீண்டும் தாக்கி, கைகளை பின்புறம் மடக்கி பிடித்தான். "மா நீ போலிஸ்க்கு கால் பண்ணு. என் போன் அதோ கார் சீட்ல இருக்கு"

"இந்த ராஸ்கலை இன்னிக்கு விடக்கூடாது" தனது பாதுகாவலன் மணியை அழைத்து வந்திருக்க வேண்டும் என தோன்றியது பிரகாஷுக்கு.

கண்ணீரோடு அவள் கைபேசியை இயக்கினாள். அதற்குள் மெல்ல கூட்டம் கூடியது. "வேடிக்கை பாருங்க எல்லாரும் வெக்கமில்லாம, இப்படி எல்லாரும் இருக்கற வரை எவன் வீட்டு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை. உங்க வீட்டு வாசல்ல பிரச்சினை வர்ர வரை அமைதியா தான இருப்பீங்க?"

காவல் நிலையத்தின் தொடர்ப்பு கிடைத்ததும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தன்னை ஒரு குடிகாரன் தாக்குவதாக புகார் அளித்தான்.

அப்பொழுதும் 'ஏதோ பெரிய இடத்து சமாசாரம் போல' என கூடி நின்று கதை தான் பேசினார்கள் பொதுமக்கள் துளியும் லஜ்ஜை இல்லாமல்.

"நீ என் மேல பொய் கேஸ் போட்டா நான் உன் கார்ல drugs வச்சிட்டு I can turn the table on you பிரகாஷ்."

பூரணி பயந்தாள்,"அண்ணா வேண்டாம் உங்க மேல எதாச்சும் கேஸாயிடும். இநாத பைத்தியக்காரன் பண்ணாலும் பண்ணுவான் வாங்க போகலாண்ணா வாங்க."

கடகடவென அரக்கனை போல ஒரு எக்காள சிரிப்பு சிரித்தான் ஷ்ரவன்.
"Bullshit! பப்ளிக்கா மாட்டிகிட்டா ஸ்டாண்டர்ட் டையலாக் ஸிஸ்டர், பிரதர்.." கைதட்டியபடி நையாண்டி செய்தான். "ஹேய் பூரணி இந்த மாதிரி ப்ரதர்ஸ் எத்தனை பேரு டி உனக்கு? Add me to the brothers list, too."

போதை ஷ்ரவனை செலுத்தியது. ஆத்திரம் பிரகாஷை செலுத்தியது.
இரண்டு ஆண்களும் நிதானம் இழந்தனர்.

பிரகாஷ் பளீரென அறைந்தான் ஷ்ரவனை.

"Come on பிரகாஷ் you are a man, that too a rich man.. நீ ஏன் பயப்படுற? காசு தூக்கி எறிஞ்சா இவ என்ன இவ அம்மாவே உன்கூட வருவா" உறைந்தது போனாள் பூரணி.
வார்த்தைகள் குத்தீட்டிகளாய் பூரணியின் உடலை கிழித்து ரணமாக்கியது. தன்னை பொதுவீதியில் வைத்து மானபங்கடுத்தவது போல தோன்றியது.

பிரகாஷ் தன்னிலை இழந்து அவன் கழுத்தை நெறித்தான்.
"யாரை பத்தி பேசற நாயே... அவங்க என் சித்தி டா. இவ என் தங்கச்சி. பொறுக்கி. இனி ஒரு வார்த்தை அவங்களை பத்தி தப்பா வந்தது, உடம்புல உசிரு இருக்காது." சாராமாரியாக அவனை அடித்து வெளுத்தான் பிரகாஷ்.

தாக்கபட்டது ஷ்ரவன்.
நிலை குலைந்தது பூரணி.

உண்மையை பிரகாஷ் வாயால் கேட்டதும் ஸ்தம்பித்து போனாள். போலீஸ் வந்ததையோ, கூட்டத்தை விரட்டி கலைத்ததையோ, விசாரணை கைதியாக ஷ்ரவனை கைது செய்ததையோ உணரவில்லை.

ஜே. என் க்ரூப் டைர்க்டர் பிரகாஷின் மீது போதையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக ஷ்ரவன் மீது குற்றம் பதிவானது. தங்கையின் பெயர் எக்காரணம் கொண்டும் வெளி வராது என்பதை பிரகாஷின் செல்வாக்கு உறுதி செய்தது.
இவை எதையும் உணராமல் கல்லாய் சமைந்து சாலையோரம் அமர்ந்திருந்தாள்.

அவளை சமாதானம் செய்ய முயன்றான் பிரகாஷ். தனக்கு துரோகம் இழைக்கபட்டதாகவே கருதினாள் பூரணி. காரில் ஏற மறுத்தாள்.

அவள் பார்வையிலும் முகத்திலும் அவமான பட்டதின் தாக்கத்தை விட ஏமாற்றப்பட்டதன் கோபமும் வேதனையும் தான் அதிகம் இருந்தது.

"இங்க பாரு பூரணி, உன்னை அப்படியே நடு ரோட்டுல விட முடியாது. ஏதோ வழியில் போற ஒரு ஆளு உனக்கு ஹெல்ப் பண்றதா நினைச்சுக்க. தயவு செஞ்சு கார்ல உக்காரு. நேரமாகுது வீட்டுல கவலை படுவாங்க, ப்ளீஸ் உக்காரு மா" கை எடுத்து கும்பிட்டான்.

போலீஸ் அதிகாரி முன்வந்தார், "சார் அவங்களை வேணும்னா எங்க ஜீப்ல லேடி கான்ஸ்டபிள் துணையோட டிராப் பண்ணலாமா? பயந்திருக்காங்க போல"

போலீஸ் ஜீப்பில் காலனியில் போய் இறங்கினால் ஊருக்கே வம்பு தீனி கிடைத்துவிடும் என்பதை சட்டென உணர்ந்த பூரணி காரின் பின் இருக்கையில் அமர்ந்தாள். வீட்டை அடைந்ததும் பிரகாஷின் முகம் நோக்கமல், "காப்பாத்தினதுக்கு நன்றி" என்று மட்டும் கூறிவிட்டு வீட்டை நோக்கி நடந்து சென்றாள்.

வீட்டிற்கு வந்ததும் பெற்றோரிடம் பிரகாஷ் பற்றிய உண்மையை கூற, பரந்தாமனோ விஷ்வாவிடமிருந்து உண்மையை தான் தெரிந்து கொண்டதாக கூறவும், கோபம் அவன் மேல் திரும்பியது. அவள் போட்ட கூச்சலில் நான்கு வீட்டு உறவுகளும் கூடி விட்டனர்.

உண்மையை மறைத்ததற்காக அவனிடம் சண்டை போட்டாள். பேச மறுத்தாள், அவனிடம் மட்டுமல்ல அனைவரிடமும்.

"அப்பாவோட அண்ணன் அவரை கொல்ல முயற்சி செஞ்சவங்க சிவா.. எப்படி அவங்களை நம்ப முடியும்? பிரகாஷ் மட்டும்..."

"ப்ளீஸ் செல்லம்மா வார்த்தையை விடாத. அவன் உங்க எல்லாரையும் தேடிட்டு தான் இருந்திருக்கான் இத்தனை வருஷமா. அவங்க அம்மா பேருல டிரஸ்ட் வச்சு படிக்கிற பசங்களுக்கு அவன் உதவி செய்யற காரணமே உன்னை கண்டுபிடிக்கணும்னு தான். உன் மூலமா உன் பெத்தவங்களையும். அவனோட அப்பா செஞ்ச அநியாயத்துக்கு பரிகாரமா..."

"என்ன பரிகாரம்? எங்களை ஊரை விட்டே ஓட சொல்ல்வாங்க அதான?" அவளது பேச்சில் மனதில் இருந்த ரணம் ரௌத்திரமாக வெளிப்பட்டது.

" ஒவ்வொரு தரமும் அம்மா அப்பாவை காயப்படுத்தினாங்க.. அப்பாவை கொல்ல சதி பண்ணி. அம்மா குடும்பத்தை சித்தரவதை பண்ணி இவங்கல்லாம் பேரையும் சேர விடாம பிரிச்சாங்க

அப்பா ஜெயில்ல இருந்தப்ப அம்மாவுக்கு உதவாம கஷ்டப்படுத்தினாங்க. ஒவ்வொரு கட்டத்துலேயும் அவங்க துரோகம் தான்டா செஞ்சிருக்காங்க.. எப்படி டா நம்ப சொல்ற?

அவங்களோட எப்படி சேர்ந்து இருக்க முடியும்? உண்மை தெரிஞ்சும் என்கிட்ட மறைச்சிட்ட இல்ல நீ?

"ஜானு..."

பிரகாஷ் நடிக்கலைனு என்னடா உத்திரவாதம்? அவன் கிட்ட நானோ அப்பாவோ கைகட்டி சம்பளம் வாங்கணும்னு உனக்கு ஆசையா? அதுக்கு தான் அவன் ஆபிஸுக்கு கூட்டிட்டு போனியா?" பேச முடியாமல் தேம்பினாள், கன்னங்களில் வெள்ளமாய் கரைபுரண்ட கண்ணீரை துடைத்துக்கொண்டு..

"உன்னை நம்பினேன் விஷ்வா..
என் குடும்பத்தோட கௌரவம் உனக்கும் பெருசுன்னு நினைச்சேன்." பெற்றோரை கைகாட்டி

"இவங்க இடத்துல உன் பேரண்ட்ஸ் இருந்திருந்தா? சமாதானம் பேசுங்கனு சேத்து வைப்பியா? ஆத்திரத்துல அவன அடிச்சு துவைச்சிருக்க மாட்ட?"

உணர்ச்சி பெருக்கில் பேசி நிறுத்தினாள் மூச்சிறைக்க.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு! வேதனையில் உழன்று வலியில் துடிக்கும் தன்னவனின் முகம் கண்ணுக்கு தெரிந்தாலும் அவளது புத்திக்கு எட்டவில்லை.


ஆனால் அவர்களை சுற்றியிருந்த அவர்களது குடும்பம் இருவரது மனக்கொதிப்பையும் வேதனையையும், கையாலாகாத நிலையில் வேடிக்கை மட்டுமே பார்க்கும் கொடுமைக்கு ஆளானது.

அவளை நோக்கி இரண்டடி வைத்தான் விஷ்வா,
"பழி சுமத்துறதுன்னு தீர்மானம் பண்ணிட்டு இன்னொண்ணை மறந்திட்டியே பூரணி.
நான் இந்த சொத்துக்கு ஆசைபட்டுதான் இதெல்லாம் செஞ்சேன்னும் சொல்லேன். The last nail on my coffin."

காயம்பட்ட அவனது இதயத்தின் அடையாளமாய் கன்னங்களில் உருண்டோடியது இரு துளி கண்ணீர்.

அவன் உள்ளமும் உடலும் சலிப்படைந்து விரக்தியை தழுவியது. தவறை அவளே உணர்ந்து பேசும் வரை விலகியிருக்க முடிவு செய்தான்.

'இத்தனை வருஷமா அவளுக்காவே என் வாழ்க்கையை செதுக்கி கிட்டேன். இன்னமும் அவ என்னை நம்பலைன்னா.. நான் உயிரையா விட முடியும்'.

குடும்பத்தினரிடம் கூட பேசுவதை அறவே தவிர்த்தான். தம்பியையும் சேர்த்து. தனிமையும் நிழலும் மட்டுமே அவனது துணை. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அவளது முத்திரை. அந்த நினைவுகள் அவனை வதைக்க, அலுவலகத்தில் அதிக நேரம் கழிக்க தொடங்கினான். வாழ்க்கையில் இரண்டாம் முறையாக அதீத பலவீனமாக, முற்றும் தோற்றுவிட்டதாகவே உணர்ந்தான் விஷ்வா.






யார் கேள்விகேட்டாலும் பதில் இல்லை அவனிடமிருந்து. அவளையும் யாரும் தொந்தரவு செய்யவேண்டாம் என கேட்டுக்கொண்டான்.

"தெளிவு வந்து அவளா என்ன முடிவு எடுக்கறாளோ அதுபடியே நடக்கட்டும். தயவு செஞ்சு யாரும் அவளுக்கு பிரஷர் போடாதீங்க. அது அவ ஹெல்த்துக்கு நல்லதில்லை."

கடந்த சில நாட்களாக சுகந்தி ஷம்மு இருவரும் அவளுக்கு புரிய வைக்க முயற்சி மேற் கொண்டு வந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களும் சோர்ந்தனர்.

எல்லோருமே இருவருக்கும் நெருக்கமானவர்கள் என்பதால் யாருக்கு ஆதரவாய் பேசினாலும் குழப்பம் பெரிதாகும் என அனைவரும் வேறு வழியின்று அமைதி காத்து விலகி நின்றனர்.

கல் பட்ட கண்ணாடியாய் அனைவரது நிம்மதியும் சந்தோஷமும் நொறுங்கி கிடந்தது!

⚜️⚜️⚜️⚜️

இரண்டு நாட்கள் முன்பு கோகிலாவும் பரந்தாமனும் ஒரு முடிவுக்கு வந்தவர்களாய் அவளை அழைத்தனர்.

"அன்னபூரணி உட்காரு இப்படி. பேசணும்"
அம்மா தன் முழூ பெயர் சொல்லி அழைத்ததேயில்லை இதுவரை. திடுக்கிட்டாள்.

"தம்பி முகத்தை என்னால பாக்க முடியலை. உறுத்துது. இத்தனை வருஷத்துல எவ்வளவு உதவி பண்ணயிருக்கான் எதையும் எதிர்பார்க்காம. அப்பாவை deaddiction ட்ரீட்மென்ட் கன்வின்ஸ் பண்ணது மட்டும் இல்லை, இப்ப ஆஸ்பத்திரி பில்லும் மாப்பிள்ளை தான் கட்டுச்சு.

முறைக்காத!
அவன் தான் எங்க மாப்பிள்ளை. நான் நகையெல்லாம் அடமானம் வைச்ச இடத்துலேர்ந்து மீட்டு குடுத்துட்டான். உனக்கு தம்பி மேல கோவமோ வருத்தமோ இருந்தா பேசி தீர்வு கண்டுபிடி. ஈகோ தான் உறவுகளுக்குள்ள பிரச்சினைக்கு அடிதளம். ஈகோனால ரெண்டு பேர் வாழ்க்கையும் சேர்த்து அழிக்காத..."

"கலா மா calm down.." பரந்தாமன் அறை வாயிலில் நின்றிருந்தார்.

சோர்வாக ஆழ்ந்து மூச்செடுத்தார் கோகிலா.
"நேத்து அப்பாவோட வீட்டுக்கு போனோமே உன் தாத்தாவும் பெரியப்பாவும் எப்படி இருக்காங்க பார்த்த இல்லை? பெரியப்பாவுக்கு ஸ்ட்ரோக் உடம்பு ஒரு பக்கம் முழூசும் செயலிழந்து போச்சு. தாத்தா ஹார்ட் பேஷண்ட் அதோட டயாபடீஸ் னால ரெண்டு கிட்னியும் failure வேற, டயாலிசஸ் நடக்குது.

அவங்க ரெண்டு பேருக்கும் அதிக நேரம் இல்லை அன்னம், எப்ப வேணா எது வேணா நடக்கலாம். இறக்குறதுக்கு முன்னாடி அப்பாவை என்னை எப்படியாச்சும் சந்திச்சு மன்னிப்பு கேட்கணும்னு ஆசைபட்டிருக்காங்க"

"அம்முலு! உங்க அம்மா அவங்களை மன்னிச்சிட்டா. அவ சொல்லி நானும் அவங்களை மன்னிச்சிட்டேன். அவங்க செஞ்ச துரோகத்தை மன்னிக்காம அந்த நினைப்பை நாம தூக்கி சுமந்துகிட்டு நம்மளை நாமே காயப்படுத்திகிறோம்.

இந்த நிதர்சனத்தை புரிய வச்சது என் கலா தான்.

மகள் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.

"ஒரு வேளை விஷயம் தெரிஞ்சும் விஷ்வா அவங்களை பத்தி சொல்லாம மறைச்சிட்டான்னு வை.
என் குடும்பத்தை பத்தின உண்மை பிற்காலத்துல தெரியவந்து அப்ப விஷ்வா மறைச்ச உண்மையும் தெரியவந்தா..

இறந்து போறதுக்கு முன்ன என் தகப்பன் சகோதரன் முகத்தை பாக்க முடியாம போன கோவம் தான் எனக்கு அவன் மேல அதிகமா இருக்கும். நீயுமே கூட அந்த நேரத்துல எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு சொல்ல முடியாது.

அவன் செஞ்ச நல்லது, அவனோட பண்பு எல்லாம் ஒரு வினாடியில மறந்து போயிடும்" அதிர்ந்தாள் பூரணி.


"ஆமா டா மனுஷ மனசு அப்படி தான். செஞ்ச நல்லதெல்லாம் மறந்து ஒரே ஒரு உப்பு பெறாத தவறை மட்டும் ஹைலைட் பண்ணி குமுறிட்டே இருக்கும். இப்ப நீ செய்யுற மாதிரி. அந்த தவறை கடந்து வர ஒரு பக்குவம் வேணும். உன் நன்மைக்காக அதை நீ வளர்த்துக்கணும். இந்த பேப்ர்ஸை கொஞ்சம் படிச்சு பாரு".

அவள் மடியில் ஒரு கத்தை காகிதங்களை வைத்தார்.
உயில், மற்றும் சில சொத்து பத்திரங்களின் நகல் என்பது பார்த்ததும் புரிந்தது. வாசித்தாள். சில பக்கங்கள் வாசித்ததுமே "இது.." குழப்பமும் அதிர்ச்சியும் மேலோங்க பெற்றோரை ஏறிட்டாள்.

"பிரகாஷ் என் குடும்ப சொத்து எல்லாத்தையும் உன் பேருக்கு மாத்தி உயில் எழுதியிருக்கான். தேதியை பாரு.. அர்ஜுன் நிச்சயத்துக்கு அப்பறமா எழுதினது. பெரியவங்க ரெண்டு பேரும் எனக்கு செஞ்ச துரோகத்துக்கு பிராயச்சித்தமா. தனக்குனு ஒண்ணுமே எடுத்துக்கலை அவன். அண்ணி வழியில ஏதோ கொஞ்சம் சொத்து இருக்குறதாவும் அதுவே போதும்னும் declaration கொடுத்திட்டான்.

பிற்காலத்துல சொத்து தகராறு வரும்னு இதுவரை அந்த பையன் கல்யாணமும் கட்டலை. கட்டறதும் சந்தேகம் தான்னு சொல்றான்."

அவரது குரல் லேசாக கரகரத்தது.
"துரோகம் செஞ்சது என் அண்ணன். ஆனா இந்த புள்ளை அந்த பாவத்தை சுமக்குது. நான் தூக்கி வளத்த புள்ளை மா அது. எனக்கு மூத்த புள்ளை மாதிரி.. நான் வீட்டை விட்டு வெளிய வர்றபோது அவனுக்கு ஒரு ஏழு எட்டு வயசு இருக்கும்.

அவன் வாழ்க்கையை தியாகம் பண்ணி அந்த பணம் மொத்தமும் உன் கிட்ட வந்து சேர்ந்தா, அது ஆயுசு பூரா பாரமா தான்டா இருக்கும் அம்முலு.

அந்த பாவம் உனக்கு வேண்டாங்கற எண்ணத்துல தான் விஷ்வா எங்க எல்லாரையும் சேத்து வைக்க முயற்சி எடுத்தது.

மாமா நீங்க உங்க குடும்பத்தை ஏத்துகறதும் சொத்தை வாங்குறதும் உங்க சொந்த விருப்பம். ஆனா ஒரு சல்லி காசு அதுலேருந்து என் மனைவிக்கு வேணாம். இன்னி தேதிக்கு அவளை எப்படி கல்யாணம் கட்டி குடுப்பீங்களோ அதே மாதிரி தான் கல்யாணம் பண்ணிக்குவேன்.

சொத்து உங்க பேர்லயோ பிரகாஷ் பேர்லயோ மாத்தணும். அவன் மனசு மாறி கல்யாணத்துக்கு ஒத்துக்கணும் அதை உங்களால் தான் செய்ய முடியும். இது அவன் விரக்தியில எடுத்த முடிவு. இவ்வளவு இருந்தும் தனிமைல இருக்கான். நீங்க ஒரு தகப்பன் ஸ்தானத்துல இருந்து அவனை பார்த்துக்கோங்க. என்னை நீங்க மகனா நினைச்சா இதுக்கு ஒத்துக்கணும். காசு, பணம், சொத்துக்கு ஆசைபட்டிருந்தா நான் வேற ஒருத்தியை எப்பவோ கல்யாணம் பண்ணியிருப்பேன். எனக்கு பூரணி மேல மட்டும் தான் காதல்.

நான் ஆடம்பரமா வாழணும்னு ஆசைபட்டா நான் சம்பாதிச்சு அந்த வாழ்க்கையை எங்களுக்காக அமைச்சுக்கணும். அதே நேரத்துல நீயா விருப்பபட்டு கம்பெனி நிர்வாகத்தை ஏத்துக்கவோ, சொத்து எதும் உன் பேருக்கு மாத்தவோ ஒப்புகிட்டா அதையும் அவன் தடுக்க போறது இல்லைன்னு சொன்னான்.

இதே வார்த்தைகள் தான் அவன் சொன்னான் இங்க இந்த வீட்டு ஹால்ல உட்காந்து. எங்களுக்குள்ள பேசி முடிவெடுத்து உனக்கு பக்குவமா எப்படி சொல்லறதுன்னு தீர்மானிக்கிறதுக்குள்ள..."

பேயறைந்தாற் போல் உட்கார்ந்திருந்த மகளை பார்த்தனர் பெற்றவர்கள்.

"அன்னம் ஒரு பொண்ணு பிறந்த வீட்டை மறக்கிற அளவு அவளை நேசிக்கிற புருஷனும் புகுந்த வீடும் கிடைச்சா அது வரம். விஷ்வாவுக்கு உன் மேல இருக்குற அன்பு, அக்கறையோட ஆழம் உனக்கு புரியுதா?"

அன்னையின் கேள்வி அவளுக்குள் குற்ற உணர்சசியை தூண்டியது.

நீ இப்ப எதுக்கு அவன் மேல கோவமா இருக்க? ஒரு வேளை அவன் பணத்துக்காக செய்திருப்பான்னு தோணுச்சா " இல்லை என மறுத்தாள்.


"எங்களை அவமான படுத்தினவங்களோட சேர்த்து வைச்சு சுயமரியாதையை காயப்படுத்தறான்னு நினைச்சியா?"

அவள் கண்களில் கண்ணீர் ததும்ப ஆமோதித்தாள். தலையை ஆதூரமாக வருடி "உணர்ச்சி வசப்படும் போது எந்த முடிவும் எடுக்காத. கொஞ்சம் மனசை நிதானத்துக்கு கொண்டு வா, அதுக்கு பிறகு ஒரு நடுநிலையா இருந்து இந்த விவகாரத்தை யோசி. அவனோட மனசு விட்டு பேசு.

காதல்ங்கிறது என்ன தெரியுமா? பகிர்தல் தான். அன்பு, பாசம், குடும்பம், உறவுகள், கனவுகள், லட்சியம், கஷ்டம், நஷ்டம், சந்தோஷம், துக்கம் எல்லாத்தையும் பகிர்தல்."

சில மணித்துளிகள் கடந்தது
"ஒரு பெண்ணா நான் இதை சொல்றது தப்போ என்னவோ.. ஆனா இது ஒரு அம்மாவோட நியாயமான பயம்.

உனக்கு மெமரி லாஸ் ஆனப்பிறகு உன் வாழ்க்கையை நினைச்சு அவ்வளவு கவலை பட்டிருக்கேன். என்ன தான் விஷ்வா உன்னை தான் கல்யாணம் பண்ணுவேன்னு உறுதியா சொன்னாலும் அவங்க வீட்டுல எல்லாரும் ஒத்துக்கணும், உனக்கும் அவனை பிடிக்கணும், கல்யாணம் ஆனாலும் அதுக்கு பிறகு உங்க வாழ்க்கை, உங்க உறவு..."

அன்னை குறிப்பிட்டது எதை என புரிந்தது. "இந்த சொத்து சமாசாரம் இப்ப தான டா, அவன் உன்னை சின்ன வயசுலேருந்து நேசிக்கிறானே மா. உன்னை ப்ராப்ளத்தோட ஏத்துக்கறேன்னு சொன்னவன் எப்படி மா உன்னை காயப்படுத்துவான்? "

மகளுக்கு யோசிக்க அவகாசம் கொடுத்து அறையை விட்டு வெளியேறப் போன கோகிலா
"நானே காவேரி அண்ணி நிலையில இருந்தா இப்படி ஒரு பொண்ணை என் மகனுக்கு கட்டுவேனானு சந்தேகம்! உன்னால அவனை விட்டு வேற யாரையாச்சும்.."

"அம்மா.." அழுகை வெடித்தது.

"அன்பு பெருசா வீம்பு பெருசா? முடிவு பண்ணு."





Bạn đang đọc truyện trên: Truyen247.Pro