பாகம் 41
Word count: 1816
Date published: 5th December 2023
"என்ன டா நினைச்சிருக்க உன் மனசுல? பாப்பாவை போய்... அவளை என் மகளா..."
உணர்ச்சி பெருக்கிலும் ஆத்திரத்திலும் வார்த்தைகளையும் நிதானத்தையும் தேடி தவித்தது புத்தி.
"அப்பா please calm down..." அர்ஜுன் அவரது கையை பிடித்துக் கொண்டு கெஞ்ச துவங்கினான், துக்கம் தொண்டையை அடைக்க "ப்ளீஸ் பா.."
அவனது கையை உதறி, "ஏன்டா புத்தி இப்படி போகுது உங்களுக்கு? நல்ல பண்பாடோட தான வளத்தோம்?"
"ப்ளீஸ் தவறா எதுவும் அர்த்தம் கற்பிக்காதீங்க பா.. அந்த மாதிரி இல்லை பா.."
அர்ஜுன் பதட்டமாக விளக்கமளித்தான்.
அவர் சொல்லமுற்படுவதன் அர்த்தம் பளீரென விளங்க காயப்பட்டு போனான் விஷ்வா.
"அவ்வளவு கேவலமானவன் இல்லை சித்தப்பா நான். உண்மை என்னன்னு தெரியாம..."
"என்னடா புடலங்கா உண்மை?"
கோபத்தில் அவர் முஷ்டியை மடக்க யமுனா பதட்டமானார்.
"தம்பி நீ போய்டு டா கண்ணு.. வீட்டுக்கு போடா ராஜா" யமுனா அழுத்தொடங்கினார். மனதளவில் ரணத்தை சுமந்து நிற்கும் விஷ்வாவை பார்க்க பார்க்க அந்த தாயுள்ளம் துடித்தது.
"அச்சோ அபிராமி யார் கண்ணு பட்டுச்சோ என் வீட்டுல.. இப்படி ஒரு சோதனை வந்து விடிஞ்சிருக்கே.."
"யார் கண்ணும் படலை டீ உன் அருமை மவன்.. வடக்க போய் கண்ட கண்ட கண்றாவியும் பழகிட்டு வந்துருக்கான்" ரௌத்திரம் குறையாமல் குமுறிக்கொண்டிருந்தார் மூர்த்தி.
"Mr Sambamoorthi! "
அர்ஜுன் அதிகாரமாய் அழைத்து அவரது கவனத்தை தனது பக்கம் திருப்பினான்.
"என்ன தெரியும் உங்களுக்கு அவனை பத்தி? அவன் மேல பழி சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?"
தந்தையின் கண்ணோடு கண் பார்த்து நெஞ்சை நிமிர்த்தி சகோதரனுக்காக குரல் கொடுத்து நின்ற அர்ஜுனை கண்டு நிம்மதி பிறந்தது யமுனாவின் மனதில்.
"டேய்..."
"ப்ச்ச்ச்... உங்க மிரட்டல் உருட்டல்லாம் உங்க விஜிலென்ஸ் டிபார்ட்மெண்டோட வச்சுக்கோங்க. அங்க கூட ஒருத்தரை விசாரணை பண்ணும்போது அவங்க பக்கத்து நியாயத்தை அவங்க தரப்பு வாதத்தை சொல்ல அவங்களுக்கு சட்டபடி உரிமை இருக்கு. அப்போ இவனை பேச அனுமதிக்காம நீங்களா பேசிட்டு போனா என்ன அர்த்தம்? வாய்க்கு வாய் புள்ளை புள்ளைன்னு சொல்றீங்க. அந்த புள்ளை மனசை புரிஞ்சுகிட்டது இவ்வளவு தானா? நீங்களும் ஒரு சராசரி அப்பா தானோ? பசங்க நல்ல காரியம் பண்ணி பெருமை படுத்தினா உங்க புள்ள. தப்பு செஞ்சுட்டா உடனே உதாசீனப்படுத்துவீங்க அதானே?"
சற்று அமைதி நிலவ, "உட்காருங்க. உட்காருங்க பா.." அவரை வலுக்கட்டாயமாக அமரவைத்தான். மேஜையிலிருந்த தண்ணீர் பாட்டிலை அவரிடம் கொடுத்துவிட்டு விஷ்வாவை நோக்கி திரும்பியது அவனது கவனம். கண்களில் கண்ணீரும் வேதனையும் ததும்ப தனித்து நின்றான் அறையின் மூலையில்.
"விச்சு..." அவனை அரவணைத்துக் கொண்டு முதுகில் தட்டி சமாதானம் செய்தான். "இன்னிக்கு அவருக்காச்சு எனக்காச்சு.. விடப்போறதில்லை டா"
"இப்போ நான் பேசறதை நீங்க கேட்க போறீங்க இடையில குறுக்கிடாம.."
தன் கோபத்தை கட்டுக்குள் வைத்து, ஆமோதிப்பாய் தலையசைத்தார் மூர்த்தி.
"முதல் கேள்வி. பூரணி நீங்களும் அம்மாவும் பெத்து வளர்த்த மகளோ, இல்லை சட்டப்படி தத்து எடுத்த மகளோ இல்லையே? எனக்கு தெரியாம adoption papers எதும் வச்சிருக்கீங்களா?"
அவனை மேலும் கீழுமாக பார்த்து முறைத்தார் மூர்த்தி.
"நான் கேக்கற கேள்வி கேனத்தனமா இருக்குன்னு நினைச்சாலும் சரி. பதில் வேணும். என்ன யமுனா? எதாவது லீகல் பேப்பர் இருக்கா?"
"அதெல்லாம் இல்லைடா. குழந்தைக்கு, அதான் உன் தங்கச்சிக்கு brain fever வந்துச்சு. ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியும் காப்பாத்த முடியலை. அவளை இழந்த துக்கத்துலேருந்து என்னால வெளிய வரவே முடியலை. அப்ப தான் சுகந்தியையும் பூரணியையும் சந்திச்சோம். என்னவோ காரணம் சொல்லத் தெரியலை, அவளை என் மகளா பாக்க தோணுச்சு. என்னோட மன ஆறுதலுக்காக ஆரம்பிச்சது, இன்னிக்கு அவ இல்லாம இந்த வீடை நினைச்சு கூட பாக்க முடியலை என்னால. அவ்வளவு தான்டா.."
"அப்ப.... அப்பா நீங்க இதை வேண்டாம்னு சொல்ல எந்த லீகல் காரணமும் இல்லை. எந்த கோர்டுக்கு போனாலும் கேஸ் நிக்காது."
மகனின் பேச்சுக்கு மறுப்பேச்சு பேசாமல் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார் மூர்த்தி.
விஷ்வாவை பேசி சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவைத்தான் அர்ஜுன்.
⭐️⭐️⭐️⭐️
"எனக்கு ஒரு சந்தேகம் ப்பா, படுக்கையில் படுத்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார் மூர்த்தி, "நான் சுகந்தியை லவ் பண்றேன்னு சொன்னப்போ இவ்வளவு ரியாக்ஷன் இல்லையே. இந்த வயசுல என்ன காதல்னு தானே குதிச்சீங்க. அவன் பூரணியை காதலிச்சா தப்பா? என்னோட சிச்சுவேஷன் இவங்க சிச்சுவேஷன் ரெண்டும் ஒண்ணு தான். ஏன் இதை எதிர்க்கறீங்க? பூரணியை விட வேற ஒரு நல்ல பொண்ணு அவனுக்கு கிடைக்கலாம் ஆனா அவன் கட்ட மாட்டான். அதே போல தான் அவளும்." நிறுத்தி நீண்ட பெருமூச்செறிந்து,
"நீங்க சொன்னா அவனும் தட்ட மாட்டான் அவளும் தட்ட மாட்டா, ஆனா ரெண்டு பேரோட சந்தோஷத்தை பரிச்சுகிட்ட guilt நீங்க வாழ்க்கை பூரா சுமக்கணும். Can you live with that guilt?"
⭐️⭐️⭐️⭐️
அடுத்த நாள் விடியலில் திடீரென்று புறப்பட்டு மூர்த்தியும் யமுனாவும் காவேரியை அழைத்து கொண்டு அவர்கள் குல தெய்வத்தை தரிசிக்க முடிவு செய்து சொந்த ஊரான திருக்கடையூர் புறப்பட்டு விட்டிருந்தனர்.
"எங்க நிச்சயதார்த்தம் முடிஞ்ச உடனே போறதா இருந்தாராம். நம்ம சித்தர் சாமிய பாக்கணும்னு கொஞ்ச நாளாவே சொல்லிட்டு இருந்தாரு. ரெண்டு நாள் இருந்து அவரை பாத்து பேசிட்டு வருவேன்னு சொன்னாரு. என்னவோ சாமி கூப்பிட்ட மாதிரி இருந்துச்சாம்"
எல்லார் கேள்விக்கும் பொதுவாய் பதில் கூறினான் அர்ஜுன்.
****
ஆறு மணிநேரத்தில் திருக்கடையூரை அடைந்திருந்தனர் மூர்த்தி, யமுனா மற்றும் காவேரி. மூர்த்தியின் மூதாதையர் வீடு உறவினன் முத்துராயனால் பராமரிக்கப்பட்டு வந்தது.
அவரது வீட்டு பணியாள் மூர்த்தியை சந்தித்து, வரவேற்றார்.
"வாங்கய்யா.... நான் சாமிக்கண்ணு. அண்ணன் போன் போட்டு சொன்னாரு நீங்க வரீங்கன்னு. பிராயாணம் சௌகரியமா இருந்துச்சா? அண்ணி அவங்க பிறந்த வீட்டுல ஏதோ விசேசத்துக்கு போயிருக்காங்க."
யமுனாவிடமும் காவேரியிடமும்
"அம்மா, நீங்க எந்த வேலையும் செய்ய வேண்டாம். என் சம்சாரம் இப்ப வரும் சமையல் செஞ்சு, கூட்டி மொழுகுறது, துணி துவைக்கிறது எல்லாம் அவ பாத்துக்குவா. கடைக்கு எதும் போகணும்னா எனக்கு போன் போடுங்க."
தனது நம்பரை மூர்த்தியிடம் கொடுத்துவிட்டு டிரைவரை அழைத்துச் சென்றார்.
சற்று நேரத்தில் மீண்டும் சாமிக்கண்ணு வந்து நின்றார்
அவருடன் ஒரு இளைஞன்.
"வணக்கம் அங்கிள் நான் முத்துராயன் பையன் ஆனந்த்."
"தம்பி ஏதோ பேசணும்னுச்சு.. நான் வரேங்க"
அவன் தந்தை ஏற்கனவே சொத்தில் பங்கு கேட்டு வாதம் செய்து கொண்டிருக்கிறான், இவன் இப்போது எதற்காக வந்தான் என்ற குழப்பம் அனைவரது மனதிலும்.
மூர்த்தி அவனை அமரச் சொன்னார்.
" Let me speak directly. உங்க யாரு கூடவும் எனக்கு பழக்கம் இல்லை அதானல போலியா என்னால நடிக்க முடியாது.
நானும் அண்ணனும் கோயம்புத்தூர்ல பிசினஸ் பண்றோம். அங்கேயே செட்டில்
ஆகிட்டோம். இந்த சொத்து பிரச்சனை பத்தி பேசி அப்பாவை கன்வின்ஸ் பண்ண தான் நான் வந்தேன். இந்த பரம்பரை சொத்து எங்களுக்கு வேண்டாம். கொள்ளு தாத்தா என்ன காரணத்துக்காவோ ஒரு சில சொத்துக்களை மட்டும் என் தாத்தாவுக்கும் அவரு வாரிசுக்கும் எழுதி கொடுத்துருக்காரு அதை நானும் அண்ணனும் மதிக்கிறோம். இந்த பெரிய வீடு நிலம் இதெல்லாம் எங்களுக்கு வேண்டாம். என்ன டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணணுமோ அதை
பண்ணிட்டா அப்பா கையெழுத்து போட்டு குடுத்துருவாங்க. நாங்களும் போடறோம்."
"என்ன திடீர்னு இப்படி ஒரு முடிவு? முத்து ஒத்துகிட்டானா?"
"அப்பாவுக்கு ஜஸ்ட் தாழ்வு மனப்பான்மை அங்கிள். இரண்டாம் தாரத்தோட வாரிசு, படிப்பு இல்லை.. அதை சொத்து பணம் சரி செஞ்சிடும்னு நினைச்சிருந்தாரு. அதோட இந்த மிராசுதார் பரம்பரை பந்தா இதெல்லாம் இனி செல்லுபடி ஆகாதுன்னு புரிஞ்சிடுச்சு.
அம்மாவுக்கு ரீசெண்டா அவங்க பிறந்து வீட்டு சொத்துல பங்கு வந்தது. அதோட நாங்களும் கோயம்புத்தூர்ல வீடு வாங்கி அவர் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிட்டோம். ஊர் பூரா மார்த்தட்டி பெருமை பட்டுகிட்டு சுத்தராரு. ஆக்சுவலா நானே உங்களை இந்த வாரம் மெட்ராஸ்ல வந்து பாக்கலாம்னு இருந்தேன். நீங்க திடீர்னு வர்றதா அப்பா சொன்னாங்க.."
நேற்று மாலையிலிருந்து கலவரமும் கோபமும் குடிகொண்டு இறுகி போயிருந்த கணவன் முகம் லேசாவது கண்டு சற்று நிம்மதி பிறந்தது யமுனாவிற்கு.
"நன்றி தம்பி" அவன் கைகளை பற்றி தட்டி கொடுத்தார். "உன்னை பாக்கவே ரொம்ப பெருமையா இருக்கு பா. அப்பனோட மனசு புரிஞ்சு கடுமையா உழைச்சு அவனுக்கு கௌரவத்தை தேடி கொடுக்கறீங்க பாரு. நல்லாயிருங்க பா." அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
அடுத்து ரெஜிஸ்டிரேஷன் குறித்து பேச வேண்டிய விஷயங்களை பேசி தீர்மானித்தனர். பரம்பரை சொத்தில் தனக்கும் தன் வாரிசுகளுக்கும் பங்கு வேண்டாமென முத்துராயனும் அவர் மகன்களும் எழுதி கொடுத்து நீதிமன்றத்தில் பதிவு செய்து விட்டால் அவர் முன்பு கொடுத்த கேஸ் வாபஸ் பெறப்படும் என வக்கீல் போனில் தெரிவித்தார்.
⭐️⭐️⭐️⭐️⭐️
அன்னை அபிராமவல்லி சமேத அமிர்தகடேஸ்வர சுவாமி திருக்கோவில். தெய்வம் உண்டு என பிரத்யக்ஷமாக தோன்றி தங்கள் பக்தர்கள் உயிரை காத்து அருட்பாலித்த தலம். சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக தோன்றி பாலகன் மார்கண்டேயனை காத்து காலதேவனை (யமனை) தண்டித்த திருத்தலம்.
அபிராமி பட்டர் அன்னையை துதித்து அபிராமி அந்தாதி பாடிய தலம். அரசனின் தண்டனையிலிருந்து தன் பக்தனை காக்க அன்னை தன் வைர காதணியை வானில் வீசியெறிந்து பூரண அமாவாசை இரவை பௌர்ணமி இரவாய் ஒளிர்வித்த திருத்தலம்.
மாலை குளித்து தயாராகி மூவரும் கோவிலுக்கு சென்றனர். வேட்டி, மேல் துண்டு, நெற்றியில் திருநீறு சகிதம், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் மூர்த்தி. கண்கள் பனிக்க, வெளி தோற்றத்து மிடுக்கையெல்லாம் களைந்தெறிந்து தூய்மையான மனதோடு அமைதியாக கைகூப்பி நின்றார். இறைவனிடமும் இறைவியிடமும் பிள்ளைகளின் நலன் வேண்டி பிரார்த்தித்தது அந்த தந்தையின் நெஞ்சம்.
அன்று கோவிலில் சித்தர் இல்லை
⭐️⭐️⭐️⭐️
மறுநாள் காலை மூர்த்தியின் குடும்பத்தினரின் நலன் வேண்டி அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பிரசாதத்தை பெற்றுக்கொண்டு கோவிலை சுற்றி வந்தனர்.
தரிசனம் முடிந்து அவர்கள் தேடி வந்த சித்தர் சாமியை காண சிவாச்சாரியார் அழைத்து சென்றார். அந்த சித்தரை பற்றி யாருக்கும் ஒரு விவரமும் தெரியாது.
முப்பது வருடங்களுக்கு முன் அந்த ஊருக்கு வந்தார். கோவில் பிரகாரத்திலோ, மண்டபத்திலோ, குளக்கரையிலோ தியானத்தில் அமர்ந்திருப்பார். யார் என்ன காணிக்கை கொடுத்தாலும் வாங்க மாட்டார். கோவில் பிரசாதம் கூட சாப்பிட மாட்டார், சிவாச்சாரியார் வீட்டில் அவர் அன்னை அல்லது அவர் மனைவி சமைத்த உணவை ஒரே ஒரு கொட்டாங்குச்சி நிறைய பிட்சையாக பெற்று ஒரு வேளை மட்டுமே உண்பார்.
கோவிலில் அமர்ந்திருக்கும் சமயம் அவரே குறிப்பாக யாரையேனும் அழைத்து அவர்களுக்கு ஏதேனும் அறிவுரையோ, எச்சரிக்கையோ செய்வார், பரிகாரமும் அவரே கூறுவார்.
கேட்பவர் எல்லாருக்கும் 'குறி' கூறுவது அவர் வழக்கம் அல்ல. பரிகாரங்களும் எளிமையாகவே இருக்கும். ஆடம்பரமாய் காசு பணம் செலவழிக்கும் பரிகாரங்களாய் இராது.
⭐️⭐️⭐️
Flashback
பல வருடங்கள் முன்பு விஷ்வாவின் தந்தை அருணாச்சலமும் மூர்த்தியும் கோவிலுக்கு வந்தபொழுது அவர் சந்நியாச ஆசையை கைவிடாதது இந்த சித்தர் மூலமாகவே வெளிப்பட்டது.
"அண்ணனை தடுக்க வழி சொல்லுங்க சாமி."
அவர் மறுப்பாக தலையசைக்க,
"அப்ப அண்ணியோட, புள்ளோயோட கதி?"
அழுது துடித்த மூர்த்திக்கு பதிலாக கிடைத்தது அவர்களது மூதாதையர் கதை.
"உன் குடும்பத்துல பொண்ணு பிறக்காததுக்கு காரணம் தெரியுமா?"
"பெரியவங்க தெளிவா பதில் சொன்னது கிடையாது. ஆனா வம்சம் தழைக்க ஆண் வாரிசு. நம்ம குடும்பத்தோட பெருமை அதான்னு பெருமையா சொல்லி கேட்ருக்கேன்."
"பைத்தியக்காரா! ஆம்பிளை புள்ளைனால தான் வம்ச வளரும்ன்னு எவன் சொன்னான்? ஒரு பொண்ணை நீ கல்யாணம் கட்டுனா தான பிள்ளை பிறக்கும்? வம்சம் வளரும்? தனி மரமா ஒருத்தன் நின்னா அவனுக்கு என்ன பேரு?" என தன்னை சுட்டி காட்டினார்.
"சாமியார்.."
"சிவன் கூட தனியா இருந்தப்போ யோகியாக தியானத்துல இருந்ததாகவும். சிருஷ்டி எதுவும் ஏற்படலைன்னும் சொல்லப்படுது. சக்தியோட இணைஞ்சபிறகு தான் இந்த சிருஷ்டி எல்லாம். அப்ப பிறப்புக்கு யார் காரணம்?
"பெண்.."
"ம்ம்ம்ம்... ஆணவம் பிடிச்சு ஆடுன உன் முப்பாட்டன் ஒருத்தன், வீட்டுக்கு வந்த மருமகளை கொடுமை படுத்தி, அவ பெத்தது ரெண்டும் பொண்ணுங்கற காரணத்தால அந்த சிசுவையும் அவளையும் கொன்னு புதைச்சான். சாகற முன்னாடி அந்த புண்ணியவதி கொடுத்த சாபம் தான் உன் பரம்பரைல பொண்ணு பிறக்கறதில்லை.
அதோட பிறக்கற ஆண் பிள்ளையில ஒண்ணு சாமியாரா போயிடுது."
இவை அனைத்தையும் சிறு பிள்ளைக்கு கதை சொல்வது போல முகத்தில் குறுநகை மாறாமல் அமைதியாக சொல்லிமுடித்தார்.
இடிந்து போய் அமர்ந்தார் மூர்த்தி.
"அதுபடியே தான் நடந்துட்டு வந்திருக்கு. தலைமுறைக்கு ஒரு புள்ளை சாமியார்.
இவனுக்கு சாமியாரா போக விதிச்சிருக்கு. உன் அப்பனுக்கு விஷயம் தெரியும். கல்யாணம் பண்ணா இவன் மனசு மாறிடும்னு நினைச்சு தப்பு கணக்கு போட்டான். இதுல உன் அண்ணி பாதிக்கப்பட்டது விதி வசம்..."
தேம்பி குழந்தை போல அழுதார் மூர்த்தி. "சாமி இதுக்கு முடிவே கிடையாதா? அப்ப என் புள்ளை? அண்ணனோட பையன்? இவங்க எதிர்காலம்? இவங்க ரெண்டு பேரும்? ஐயோ அவங்களையும் பாதிக்குமா? சொல்லுங்க சாமி..."
அவர் காலை பிடித்து கொண்டு கதறினார் மூர்த்தி.
"எழுந்திருப்பா. இங்க பாரு அதை பத்தி இப்ப எதுவும் சொல்ல இயலாது. ஊருக்கு புறப்படு. பசங்களை படிக்க வை. நல்ல மனுஷங்களா வள. அவன் போட்ட கணக்கு நமக்கு புரியாது. அதை மாத்தவும் முடியாது. அவங்க அவங்களோட வினைப்பயன் என்னவோ அது படி தான் வாழ்க்கை அமையும்."
சில புத்திமதிகள் கூறி வழியனுப்பினார்.
அண்ணன் துறவறம் மேற்கொள்ள போகும் விஷயம் முன்கூட்டியே அறிந்திருந்தும் எதுவும் பேச முடியாத நிர்பந்தத்தில் தள்ளப்பட்டார் மூர்த்தி.
⭐️⭐️⭐️⭐️
அவர்கள் கிராமத்திலிருந்து வெளியே போகும் வழி, பாதையோரத்தில் பெரிய வில்வமரம் அதனடியில் அமர்ந்திருந்தார் சித்தர். ஒல்லியான உடல் வாகு, தேகம் முழவதும் திருநீற்று பட்டை, கழுத்தில் இரண்டடுக்கு ருத்திராட்சம், அடர்ந்த தாடி, சடை விழுந்த முடி, கண்களிலும் முகத்திலும் ஒரு அபரிமிதமான அமைதியும் ஒளியும். அவரை நெருங்கியதும் தடாலென விழுந்து நமஸ்கரித்தார் மூர்த்தி. அவரையடுத்து யமுனாவும் காவேரியும் நமஸ்கரித்தனர்.
"வா வா... நான் கூப்பிட்ட உடனே வந்திட்டியே...." என பேசு என்பது போல் சைகை செய்தார்.
அர்ஜுன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதையும் அண்ணன் மகனால் தப்பியதையும் உறைத்தார். அவரை போதும் என்பது போல் சைகை செய்தவர் யமுனாவை பார்த்து "உள்ளுக்குள்ளே ஒண்ணு போட்டு வதைக்குது, கேட்கணும்னு தானே வந்தே சொல்லு தாயே!"
நிச்சயத்தன்று பூரணிக்கு தங்கள் உறவினர் மகனால் நேர்ந்ததை தெரிவித்து அதனால் ஏதேனும் குடும்பத்திற்கு பாதிப்பு வருமோ என பயம் இருப்பதாகவும், அதோடு பூரணியின் வாழ்க்கை பற்றி சிறிது கலவரமும் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்க கடகடவென்று சிரித்தார்.
"பாவம் பண்ணவன் உன் குடும்ப ரத்தம் இல்லை தாயி. அவன் கணக்கை சிவன் பாத்துப்பான். ஒரு கணக்கை சரி கட்ட வேற கணக்கு போடுறவன் அவன். நடந்து முடிஞ்ச இந்த விளையாட்டுல பல கணக்கு நேராக போகுது" அவர் கூற்று புரியும் முன் மீண்டும் மூர்த்தியிடம் திரும்பினார்.
"என் அண்ணன் பையனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு யோசனை... நான் சொல்ற பொண்ணை கட்ட மாட்டேங்கறான். அந்த பெண்ணுக்கும் இவனுக்கும் கல்யாணம் பண்ண உங்க உத்தரவு வேணும் சாமி...'
இவர் இதற்குதான் வந்தாரா என திகைத்தனர் யமுனாவும் காவேரியும். உண்மை தெரிந்தும் அவனது விருப்பத்தை உதாசீனப்படுத்துவதை கண்டு வேதனைப் பட்டார் யமுனா.
மூர்த்தியை பார்த்து "விவரம் சொல்லாம தான் கூட்டிட்டு வந்தியோ? பெத்தவளை கேட்காம நீயா முடிவு பண்ணா"
குரலில் சிறு கண்டிப்பு தொனிக்க.
காவேரி பேசத்தொடங்கினார்
"சாமி என் மகனும் இபாப தங்கச்சி சொன்ன பொண்ணும் ஒருத்தரை ஒருத்தர் சின்ன வயசுலேருந்து விரும்பறாங்க. ஏற்கனவே பிள்ளைங்க என்னால பிரிஞ்சிருச்சு. அதுக்கு பிறகு பூரணிக்கு ஏற்பட்ட மறதியினால. ஆனா இப்ப அவனை அடையாளம் கண்டுகிட்டா. ரெண்டு பேரும் ஒண்ணு சேந்துட்டாங்க. மறுபடியும் பிரிஞ்சா அதுங்க மனசு தாங்காது சாமி" கண்ணீர் மல்க அவரை கையெடுத்து கும்பிட்டார்.
"பெரியவங்க சம்மதம் இல்லாம கல்யாணம் கட்டமாட்டோம்னு வாக்கு குடுத்துருக்குங்க. எனக்கும், பொண்ணை பெத்தவங்களுக்கும் சம்மதம்.
ஆனா, இதுல சம்மந்தப்பட்ட எல்லாரும் சம்மதிக்கணும்னு ரெண்டு பேரும் உறுதியா இருக்காங்க. ரெண்டு பேரும் வேற யாரையும் கல்யாணம் பண்றதாவும் இல்லை."
மூர்த்தி சற்றே அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ள அவகாசம் கொடுத்த சித்தர் பேசத் தொடங்கினார்.
"எல்லாமே அவன் போட்ட முடிச்சுனு நம்பிக்கை இருக்கா?" சித்தரின் குரலில் இயல்புக்கு திரும்பியவர்கள் ஆம் என தலையசைத்தனர்.
"பல வருஷம் முன்னாடி உன் அண்ணனோட வாழ்க்கையை உங்கப்பன் மாத்தணும்னு பிடிவாதமா எடுத்த முடிவோட விளைவு பல குழப்பங்கள், மனக்கசப்புகள், உன் அம்மோட இறப்பு எல்லாம். இப்ப நீ உன் அப்பன் பண்ண தப்பையே திருப்பி செய்ய முற்படுறியே..."
"இவங்களை பிரிச்சு உன் அதிகாரக்கொடியை நிலைநாட்டி அந்த பொண்ணோட சாபத்தையும் வாங்கிக்கபோறியா?"
துணுக்குற்றார் மூர்த்தி.
"தலைமுறைக்கு ஒரு ஆண் சந்நியாசியா போகணுங்கிறது இந்த பரம்பரைக்கு விதிச்சிருக்கு. இந்த தலைமுறையில இந்த ரெண்டு கல்யாணமும் நடந்தா சாபம் முடிய வாய்ப்பிருக்கு, வம்சம் வளரும்"
காவேரியை பார்த்து "உன் குலம் தழைக்கணும்னு இருக்கு உன் பிள்ளை மூலமா, விஸ்வநாதனுக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது இந்த அன்னபூரணியோட தான் இல்லைனா அவன் அப்பன் போன வழிதான்."
மூங்கில் தடியை பிடித்துக்கொண்டு எழுந்தார்.
"ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா நடத்தாத. நான் சொல்றப்ப பிள்ளைங்களை இங்க கூட்டிட்டு வா."
மூர்த்தியை பார்த்து சிரித்தபடி,
"சித்தப்பா, பெரியப்பா, மாமன், மாமனார் எல்லாமே தகப்பன் ஸ்தானம் தானே? பேரு வேற ஆனா உறவு அதே தான?"
சூசகமாய் மூர்த்தியின் மனதில் இருந்த சந்தேகத்திற்கு அவர் விடையளிக்க,
"ஐயா.. மன்னிச்சிருங்க சாமி"
மீண்டும் அவரது காலில் விழுந்து வணங்கினார் மூர்த்தி.
"நாளைக்கு வா... உனக்கு வேலையிருக்கு" தடியை ஊன்றி நடந்தார் கோவிலை நோக்கி.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro