பாகம் 38
Date published: 23rd June 2023
Word count: 2797
⚜️⚜️⚜️⚜️⚜️
தினசரி இயல்பு வாழ்க்கை அனைவரையும் தனக்குள் இழுத்து கொண்டது. பூரணியின் கால் குணமாகும் வரை அவளும சுகந்தியும் ஆட்டோவில் கல்லூரி சென்று வர ஏற்பாடானது.
"பா, என்னப்பா அவளை ஆட்டோலையா அனுப்புறது?"
என்ற மகனை வினோதமாக பார்த்தார் மூர்த்தி.
"ஏன்டா ஸ்கூலுக்கு நீங்கல்லாம் ஆட்டோல தான..."
இடைமறித்தான் அர்ஜுன், "பா மாமா ஆஸ்பத்திரில இருக்கற நேரம் நாம அவளை சரியா கவனிச்சுக்கலைங்கற மாதிரி தோணிட கூடாது..."
'இவன் பக்கத்து இலைக்கு பாயசம் கேக்கறானா இல்ல அண்ணனோட காதலுக்கு ஒத்து ஊதுறானா?'
யமுனா சந்தேகமாய் மகனை பார்த்துவிட்டு தன் செல்ல மகனை நோக்கினார், அவனோ அதிதீவிரமாக எதையோ வாசித்தபடி, அவர் கொடுத்த காபி தம்ளரை கையில் எடுத்தான்.
"சித்தப்பா நேத்து நீங்க இந்த மியூச்சுவல் ஃப்ண்டுல இன்வெஸ்ட் பண்ண சொல்லி சஜெஸ்ட் பண்ணீங்க... அதுல ஒரு டௌட்டு..." மூர்த்தியின் அருகே அமர்ந்து பேச தொடங்கினான்.
அவர்கள் பேச்சை இடைமறித்த அர்ஜுன், "Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully...." விளம்பர பாணியில் பரபரத்தான்.
மூர்த்தி கோபமாக, "அர்ஜுன்! உனக்கு என்னவோ சீரியஸ்னெஸ் இல்லை அவனையாவது உருப்பட விடு. இடியட்! உனக்கு இப்ப பூரணி மேல இருக்குற அக்கறைனால கார்ல கொண்டுவிடணும்னு சொல்றியா இல்ல சுகந்தி கூட ஊர் சுத்தணுமா?"
அர்ஜுனுக்கு லேசாக வலித்தது.
விஷ்வா துணுக்குற்றான் "சித்தப்பா..."
"நீ பேசாத விஷ்வா"
"இல்ல பா..."அர்ஜுன் மென்று விழுங்கினான்.
நெடு நாட்களுக்கு பிறகான மூர்த்தியின் இந்த கோபத்திற்கான காரணம் புரியாது தவித்தார் யமுனா.
"ஏங்க.. என்ன நீங்க அக்கம் பக்கத்துல கேட்கற மாதிரி இவனை கோவிக்கறீங்க? அவன் இன்னும் ஸ்கூல்படிக்கிற புள்ள இல்லை.."
பார்வையில் அனல் பறக்க மனைவியை நோக்கினார் சாம்பமூர்த்தி.
"அதான் மா நானும் சொல்றேன். இன்னம் சின்ன புள்ளையாட்டமா தமாஷ் பண்ணிக்கிட்டு சுத்தி திரியறான். அவனை நம்பி ஒரு பொண்ணு வாழவருது இந்த வீட்டுக்கு ஒரு பொறுப்பு வேணாம்?"
"இப்ப நான் என்ன தப்பு செஞ்சிட்டேன்னு இவ்ளோ கோவம்? ஏன் நானும் உங்க புத்திமதி படி தான இன்வெஸ்ட் பண்ணி வெச்சிருக்கேன். வேற என்ன இல்லாத தப்பை கண்டுபிடிச்சீங்க? உங்களுக்கு என்னை மாதிரி சிரிச்சு பேசிபழக தெரியலன்னு பொறாமை..." அசட்டையாக தோசை குலுக்கிவிட்டு, காபி தம்ளரில் மூழ்கினான்.
"பாத்தியா? இருபத்தி அஞ்சு வயசாகுது, வேலைல ப்ரமோஷன் வாங்க, அதுக்கான திறமைகளை வளர்த்துக்க என்ன செய்லாம்னு யோசிக்க தோணுதா? உன்னைவிட பத்து வயசு சின்னவன் கார்த்தி அவனோட விளையாட்டுல அடுத்த கட்டம் பத்தி யோசிச்சுட்டே மூவ் பண்ணிட்டே இருக்கான் பார்"
ஆக்ரோஷமாக கையில் இருந்த செய்தித்தாளை விசிறி எறிந்தார்.
"என்னையும் பாஸ்கெட் பால் விளையாட விட்டிருந்தா நானும் நேஷனல் ப்ளேயர் ஆகி பெருசா சாதிச்சிருப்பேன். எங்க விட்டீங்க?"
அவன் வாய்க்குள்ளேயே முணுமுணுக்க
"என்னது" தந்தையின் அதட்டலுக்கு
"ஆங்ங்... ஒண்ணுமில்லை உங்களுக்கு ஒரு கண்ணுல வெண்ணை ஒரு கண்ணுல சுண்ணாம்புன்னு சொன்னேன். அவன் விளையாடுறதை பாராட்டறீங்களே நானும் இவனும் நேஷனல் லெவல்ல செலக்ட் ஆனப்ப படிப்புதான் சோறு போடும் விளையாட்டு இல்லைன்னு எங்களை நீங்க தான முடக்கி போட்டீங்க? இப்ப அவரோட கம்பேர் பண்ணா?"
பேச்சில் இருந்த நியாயம் உரைத்ததோ என்னவோ மூர்த்தி அமைதிகாத்தார்.
இருவரும் ஒரு சில வினாடிகள் பரஸ்பரம் முறைத்துக்கொள்ள
யமுனாவும் விஷ்வாவும் அலை ஓய்ந்துவிட்டதா வென மாறி மாறி வெறித்தனர்.
"நான் அவளை கார்ல கூட்டிட்டு போய் காலேஜ்ல விடறேன்னு தான் சொல்றேன், கட் அடிச்சிட்டு ஊர் சுத்த கூட்டி போகலை".
"டேய் ஏன்டா நீ நேரம் காலம் தெரியாம? கொஞ்சம் பேசாம இரு அர்ஜுன்..."
சமாதானம் செய்யும் பொருட்டு எழுந்து அர்ஜுன் அருகே சென்றான் விஷ்வா.
அவனை நோக்கி திரும்பியவன்
"பின்ன என்னடா சும்மா காரணமே இல்லாம கத்துறாரு. எனக்கு என் தங்கச்சிதான் முக்கியம்."
தந்தையை ஒரு முறை ஆழ்ந்து நோக்கியவன், அண்ணனிடம் திரும்பி,
"அவரை பத்தி எனக்கு தெரியாது டா, ஆனா என்னோட எங்கேஜ்மெண்ட் ஃபங்கஷன்ல அவளுக்கு இந்த ஆபத்து ஏற்பட்டது எனக்கும் சுகந்திக்கும் கில்டியா இருக்கு. ஏன் உனக்கு வருத்தமா இல்லை?" விஷ்வா திடுக்கிட்டான்.
"அவ நம்ம கூட வளர்ந்தவ, நம்ம ஃபிரெண்ட் அவளுக்கு ஒண்ணுன்னா நமக்கு கோவம் வர்ரது நியாயம் தான?"
அனைவருக்கும் குற்ற உணர்ச்சி மேலோங்கியது. விஷ்வா மனதில் இருந்த வேதனையை வெளிகாட்ட முடியாமல் தவித்தான். கொதித்து கொண்டிருந்தான். வாய்ப்பு கிடைத்தால் ஷ்ரவனை தீர்த்துகட்டும் முடிவில் இருந்தது அவர்களின் நண்பர்கள் குழாம். அவனுக்காகவும் சேர்த்து தான் இன்று அர்ஜுன் இந்த பேச்சை எடுத்தது.
"நீங்க தான வெத்தலைபாக்கு வச்சு வில்லங்கத்தை அழைச்சிட்டு வந்தீங்க?"
கையை ஆட்டி ஆட்டி கிண்டலாக
"அவங்களால தான பூரணிக்கு இந்த நிலைமை? அப்ப அவளோட இந்த நிலைக்கு நீங்களும் ஒரு காரணம் தானே? பரமு மாமா கோகிமா நம்ம எல்லாரையும் நம்பி தான அவளை இங்க விட்டுட்டு போனாங்க?"
குரலை தழைத்து கொண்டு தொடர்ந்தான்.
"இப்ப கூட பாவம் பா கோகிமா ஒரு வார்த்தை யாரையும் கேள்வி கேக்கலை. இந்த பெண்ணும், அடுத்தவங்களுக்குன்னா வரிஞ்சு கட்டி சண்டைக்கு நிப்பா தனக்குன்னு வந்தா யாரையும் குத்தம் செல்லத் தெரியாது. மாமாவை நேர்ல பாத்தா என்ன பதில் சொல்லபோறீங்க? அவளை வாய்க்கு வாய் பொண்ணு பொண்ணுன்னு சொல்றது பொய்யா பா?"
"அர்ஜுன் வாயை மூடு ப்ளீஸ்..." விஷ்வாவிற்கு இந்த விவாதம் போகும் திசை அசௌகரியத்தை தந்தது.
யமுனா நாற்காலியில் அமர்ந்தபடி கண்கள் பனிக்க மகனை ஒரு வித மன நிறைவோடு பார்த்திருந்தார். கணவர் மிக நல்ல மனிதர் தான் ஆனால் சில நேரங்களில் குடும்ப கௌரவம், அல்லது சமூக கட்டுபாடுகள் என்ற சிலந்தி வலைகளுக்குள் சிக்கிக்கொண்டு இதுபோன்ற இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. அவள் இதுநாள் வரை தவிர்த்த இக்கட்டான கேள்விகளை மகன் கேட்கிறான். ரொம்பவே நியாயமான கேள்விகள்!
"நீ பேசாத டா விச்சு. அவரு செஞ்சது தப்பு இல்லைன்னு நீ சொல்லு டா பாப்போம். அந்த பாட்டியால உனக்கும், பெரிம்மாவுக்கும் எத்தனை பாதிப்பு? அது தெரிஞ்சும் அவங்களை வீட்டுக்கும் ஃபங்கஷனுக்கும் இன்வைட் பண்றாரு. ஒரு பக்கம் உன்னை புள்ளைன்னு சீராட்டுறாரு அந்தப்பக்கம் அவங்களையும் நடுவீட்டுல வச்சு மரியாதை பண்றாரு. இது எதுல சேத்தி? ஏன் பெரியவங்கன்னா தப்பு பண்ணமாட்டாங்களா? இல்லை தப்பே பண்ணாலும் நாம கேட்ககூடாதா?"
அவனது மனதில் புயலாய் மையம் கொண்டிருந்த கேள்வியை அர்ஜுன் கேட்க விஷ்வா சங்கடமாக தலை கவிழ்ந்தான். அவரிடம் இருக்கும் அதீத மரியாதை, பாசம் காரணமாக கேள்வி எழுப்புவது அவரை புண்படுத்தும் என அமைதிகாத்தான்.
"இதான் சாக்குன்னு ரெண்டு நாள் முன்னாடி வந்து பேரன் பேத்தின்னு குடும்பத்தோட டேரா போடுது அந்த கிழவி."
"டேய், வார்த்தை! அவங்க வயசுல..." மூர்த்தி அதட்டவும்
அர்ஜுன் குரலும் உடலும் லேசாக தளர்ந்தது,
"ப்பா மரியாதை வயசை மட்டும் பாத்து வரது இல்லை. நடத்தை முக்கியம்னு எனக்கு சொல்லி வளர்த்தவர் நீங்க.
இந்த பாட்டியால... பச்ச்"
அவரை உறவு சொல்லி அழைக்க கூட கசந்தது அவனுக்கு.
"உங்க அம்மாவை, உங்களை, பெரியப்பாவை எல்லாம் தாத்தா மூலமா எவ்வளவு ஆட்டி படைச்சாங்க? சொந்த மருமகளையும் பேத்தியையும் கொடுமை படுத்தறாங்க இதெல்லாம் தெரிஞ்சும் எப்படிப்பா அவங்களை மதிக்க தோணும்?
அம்மா சொன்ன மாதிரி நம்ம கார்த்தி சங்கீதாகிட்ட டீசெண்டா நடந்துக்கலை? அவனோட கால் தூசுக்கு சமமாவான அந்த பொறுக்கி? இப்படியுமா ஒருத்தங்க பிள்ளையை வளப்பாங்க? என் தங்கச்சி மேல கையை வச்சிருக்கான் பா அவன்..."
அர்ஜுனுக்கு ஆவேசம் பொங்க கண்களில் நீர் திரண்டது.
"அவளை... அவளை ஹர்ட் பண்ணியிருக்கான்பா அவன். அதுக்கு அவங்களும் ஒரு காரணம். நியாயப்படி பாத்தா நான் அவனை வெட்டி போட்ருக்கணும் இந்த லூஸூ பொண்ணு தான் தடுத்திருச்சு..."
அவன் பேசியது அனைத்தும் உண்மை, நியாயம் என புரிந்த மூர்த்தி பேரமைதியுடன் தளர்வோடு அமர்ந்தார் சாய்வு இருக்கையில். இவை அனைத்துமே அவரை உள்ளூர செல்லரித்து கொண்டிருந்த எண்ணங்கள் தாம். வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை. தனது கணிப்பு தவறாகிவிட்டதே தன்னால் அந்த குழந்தை வாழ்வு பாதிக்கப்பட்டுவிட்டதே என்ற அதீத குற்றவுணர்ச்சியும் இயலாமையும் கோபமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
அவர் முன் மேசைமீது சில காகிதங்கள் காற்றில் சடசடத்தன. அனைவரின் பார்வையும் அதில் நிலைக்க, அர்ஜுன் ஒரு வருத்த முறுவலை உதிர்த்தான்.
"இப்ப கூட பாருங்க ஏதோ கோர்ஸ்ல சேரணுமாம் உங்க ஒப்பீனியன் கேக்கணும்னு இந்த ஃபார்ம் எல்லாம் இங்க வச்சிட்டு போயிருக்கா பைத்தியக்காரி! ஏன்னா அவ அப்பாவை விட அதிக மரியாதை உங்க மேல வச்சிருக்கா"
அசாதாரண மௌனம் நிலவியது சில நிமிடங்களுக்கு.
அர்ஜுன் மூக்கை உறிஞ்சியபடி, "இங்க பாருங்க, உங்களை பத்தி தெரியாது ஆனா இன்னொரு பொண்ணை இழக்கக் கூடிய
தைரியம், தெம்பு அம்மாவுக்கு கண்டிப்பா இல்லை."
திடுக்கிட்டு நிமிர்ந்தனர் மற்ற மூவரும். யமுனாவின் கன்னங்களில் வழிந்தோடியது கண்ணீர். மனதில் வைத்து குமைந்து கொண்டிருந்த பயத்தையும் வருத்தத்தையும் மகன் எப்படி கண்டுக்கொண்டானோ? இரண்டே எட்டில் அன்னயை எட்டியவன் அவரை அரவணைத்து ஆறுதல் படுத்தினான். தனது விசும்பலை மகனின் மார்பில் சாய்ந்து மறைத்துக் கொண்டார் யமுனா.
அவர் கன்னங்களில் இருந்த ஈரத்தை துடைத்தபடி,
"என் தங்கச்சியோட நன்மைக்கு என்ன செய்யணுமோ அதை நான் செய்வேன். அவ கால் குணமாகற வரை நானே கார்ல கூட்டிட்டு போறேன் காலேஜுக்கு".
அவர் பதிலுக்கு காத்திராமல் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.
அடுத்த நாள் முதல் சுகந்தி, பூரணி இருவரையும் கல்லூரியின் வாயிலில் இறக்கி விட்டு அலுவலகம் சென்றனர் அர்ஜுனும் விஷ்வாவும்.
கல்லூரி இறுதியாண்டு என்பதாலும், பல வகுப்புகளை தவற விட்டிருந்ததாலும் படிப்பில் முழூ கவனத்தை செலுத்தினார்கள் பூரணியும் சுகந்தியும். அர்ஜுனுக்கும் விஷ்வாவிற்கும் புதிய ப்ராஜெக்ட்டின் களப்பணி என பரபரப்பாக நகரந்தது நாட்கள். மாலை கல்லூரி முடியும் நேரம் சுரேஷ் அழைத்துச் செனறார்.
அதிகம் பேசிக்கொள்ளவோ சந்தித்துக் கொள்ளவோ இயலாமல் கைபேசியில் காதல் வளர்த்தனர் இரண்டு ஜோடிகளும்.
⚜️⚜️⚜️⚜️⚜️
கல்லூரி ஆண்டு மலருக்காக 'தமிழ் இலக்கியமும் ஆன்மீகமும்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதவிருந்த பூரணி, யமுனாவின் உதவியை நாட அவரோ காவேரியை கை காட்டினார். சுகந்தி அவளது தந்தையின் உதவியோடு "டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடங்கள்" (Digital media vs Print media) எனும் தலைப்பில் சில வல்லுனர்களின் நேர்காணல்களை மேற் கொண்டாள். சுகந்தியை அழைத்த கல்லூரி முதல்வர் அவள் திறமையை பாராட்டி அவர்களது கல்லூரியின் ஐம்பதாவது ஆண்டு மலர் ஒருங்கிணைப்பு குழுவில் நேர்காணல்களை மேற்கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்தார்.
காவேரியிடம் பேசிய பொழுது இலக்கியம் மற்றும் நல்ல இசை ஞானம் கொண்டவராகவும் அடையாளம் கண்டாள் பூரணி. அவரிடம் பேசியதில் பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு கட்டத்தில் தமிழ் இலக்கியம் ஆன்மீகம் இரண்டையும் வேறுபடுத்தி பார்க்கமுடியாது என்பது தெளிவானது. அனைத்திலும் இறைத்தன்மையை கண்டு களிப்புற்றவர்களே மொழியையும் வளர்த்தவர்கள் என்பது அசைக்கமுடியாத உண்மை. இறைத்தன்மை என்பது சாதி, மத பிரவினை அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு உயர்நிலை என்பது தெளிவானது.
⚜️⚜️⚜️⚜️
"கவி மா, நீங்க ஏன் உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை மத்தவங்களுக்கு சொல்லி குடுக்க கூடாது? நம்ம காலனி பெண்கள், சின்ன பிள்ளைங்க இவங்களுக்கு ஓய்வு நேரத்துல க்ளாஸ் எடுக்கலாமே? பகல் நேரத்துல பெண்களுக்கும், ஈவினிங்க் இல்லைனா சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் பசங்களுக்கு. சன்டே ரெஸ்ட்".
அவளது கையில் மருதாணி வைத்துக் கொண்டிருந்தார் காவேரி.
"அச்சோ! நானா? நாலு பேர் மத்தியில எனக்கு கூச்சமா இருக்கும் கண்ணு. எனக்கு யமுனா மாதிரி இங்கிலீஷ்ல பேச வேற தெரியாது..."
"கவி மா இதுக்கு இங்கிலீஷ் எதுக்கு? இங்க இருக்கவங்க தமிழ்காரங்க தான?"
முதலில் தயங்கியவரை கெஞ்சி கொஞ்சி ஒத்துக் கொள்ளச் செய்தாள்.
விஷ்வாவிடம் பேசினாள், "சிவா, அத்தைக்கு ஸ்டிரைன் ஆகாம நான் பாத்துக்கறேன். அவங்களுக்கு பிடிச்ச விஷயத்துல ஈடுபடும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கும். இது இயல்பு தானே? யோசிச்சு பாரு சிவா".
கண்கள் மின்ன, ஆர்வம் பொங்க
"எனக்கு டான்ஸ், உனக்கு பாஸ்கெட்பால் அது மாதிரி அத்தைக்கு இசை. ஒரு வாரம் பார்க்கலாம் ஒரு வேளை அவங்களுக்கு முடியலைன்னா நிறுத்திடுவோம்".
மொட்டை மாடியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர், சுவற்றில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்தபடி. காயம் பட்ட அவளது காலை தன் மடியில் வைத்து நீவி கொடுத்தான்.
மூர்த்தி வீட்டில் அவர் நண்பரின் வீட்டு விழாவிற்கும், சுரேஷ் குடும்பம் கார்த்தியின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடலுக்கும் சென்றிருந்தனர்.
"நிஜமா அம்மா பாடுவாங்க அப்படீங்கறதே எனக்கு மறந்து போச்சு. பாவம் அவங்க. அப்பாவோட சேர்ந்து ஆன்மீகம் சம்பந்தமா எல்லாம் கத்துகிட்டாங்கனு தெரியும். இசைல தான் அவங்களுக்கு ஈடுபாடு இருக்கு, அதுவே அவங்களுக்கு மருந்தும்னு தோணவே இல்லை. தாங்கஸ் செல்லம்மா" இத்தனை நாள் காலம் கடத்திவிட்ட குற்ற உணர்வு உறுத்தியது.
"அப்பனே! அன்னபூரணி இருக்க பயமேன்! உனது தாயார் இனி எனது பொறுப்பு" கை தூக்கி அவள் ஆசிர்வதிப்பது போல் பாவனை செய்தாள். அவளது குறும்பில் தலையை சிலுப்பி சிரித்துக்கொண்டான்.
நேரம் அவர்களுக்கு சாதகமாய் மெதுவாக நகர, வீசிய தென்றலும் எங்கோ ஒலிப்பெருக்கியில் ஒலித்த இசையும், ஏகாந்தமும், நிறைவான மன உணர்வை தர, அமைதியாக சில நிமிடங்கள் கரைந்தது. தினம் காவேரியோடு கட்டுரைக்காக அவள் செலவழித்த தருணம் அவரிடம் பல நல்ல மாற்றங்களை ஏறபடுத்தியிருந்தது.
"ஹுஹும்ம்.... அம்மா நல்லாயிருக்காங்க. ஆனா.. நான் நல்லாயில்லையே" அவனின் இழுவை எதற்காக என புரியாதவளா அந்த சண்டிராணி?
"ஏன் சிவா? உனக்கும் கௌன்சலிங்க் போகணுமா? நான் வேணா என்னோட தெரபிஸ்ட் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவா?"
தளர்வான ஒற்றை சடை, காது கம்மலில் மயில் நாட்டியமாட, ஒற்றைக்கல் மூக்குத்தி மின்ன, காட்டன் சுடிதாரில் மிக இயல்பான தோற்றத்தில், உற்சாகமும் குறும்பும் தொனிக்கும் அவளது குரலும் அவனுக்கு அத்தனை பரவசத்தை அளித்தது.
'எப்படிடா விச்சு இவ்வளவு லக் உனக்கு?' தன்னை தானே கேட்டுக்கொண்டான்.
இயல்பான முகபாவத்தோடு அவன் தொடர்ந்தான்,
"வேணாம், எனக்கும் ஒரு தெரபிஸ்ட் தெரியும் அவங்க பெஸ்ட். ஆனா என்ன மீட் பண்ணுறது ரொம்ப கஷ்டம். ஒரு சிட்டிங்கலேயே அப்படி ஒரு இம்ப்ரூவ்மெண்டு இருக்கும். ஆனா ஃபீஸ் ரொம்ப" அவன் சிலாகிக்க.
"அப்ப அத்தையை அவங்ககிட்டயே கூட்டிட்டு போகலாமே" என்றாள் உற்சாகமாய் கண்கள் மின்ன, அவன் புறம் திரும்பி.
உண்மை என நம்பி...
"ம்ஹூம்.." இடம் வலமாக தலையை அசைத்து "அவங்க எனக்கு மட்டும் தான் தெரபிஸ்ட். ஸ்பெஷல் அண்டு பர்ஸனல் தெரபிஸ்ட்" நெருங்கி காதோரம் அவன் ரகசியமாய் கூறிய விதத்தில் அவளது உடல் சிலிர்த்தது.
இரவின் அரைகுறை வெளிச்சமும், இளம் தென்றலும், அவன் அருகாமையும், காதோரம் உரசிய அவனின் மீசையும் அவளை மையல் கொள்ள செய்தது. அவள் இதழை தன் இதழால் மெல்ல பட்டும் படாமலும் தீண்டி விலக, கன்னத்தில் அவன் கைகள் கனலாக கொதித்தது. அவன் கண்களில் சிறைபட்டு சிலையாக அமர்ந்திருந்தாள். இதயத்தின் காதல் விண்ணப்பத்தை விடுத்த அவன் விழிகளின் தாக்கம் தாளாமல் இமையை மூடி விண்ணப்பத்தை ஏற்க. உயிர் துணையின் இதழ் முத்தம் தரும் போதையை காட்டிலும் அதிக போதை வேறு எதிலும் உண்டோ? மீள முடியாமல் மீண்டும் மீண்டும் அதையே நாடி அலைபாய்ந்தது இருவரின் மனமும். சுவாசிக்க இடைவெளி வேண்டி அவள் விலக, முழுவதும் விலக்க மனமில்லாமல் அவள் முகம் முழுதும் முத்தங்களால் நிறைத்த பின்னரே ஓய்ந்தான்.
⚜️⚜️
நீ என்ன பருவ கால மழை மேகமா?
முத்த மழையில் மொத்தமாய்
நனைத்துவிடுகிறாய்!
அண்டத்தை ஒளிர்விக்கும் பகலவனா?
காதல் ஒளி வழங்கி வான் நிலவாய் குளிர்விக்கிறாய்!
எனக்காக படைக்கபட்ட பிராணவாயுவா?
என் ஜீவனில் கலந்து உயிர் வாழவைக்கிறாய்!
⚜️⚜️⚜️⚜️⚜️
நெற்றியோடு நெற்றி ஒட்டி இமை மூடி இருவரும் ஒருவரை ஒருவர் உணர்வுகளுக்குள் நிறைத்து கொண்டனர்.
"உன்னை விட்டு ஆபிஸ் கூட போக முடியலை ஜானு வர வர, எப்பவும் உன் ஞாபகம் தான்.
ஆறு வருஷம் உன்னை பிரிஞ்சிருந்தாலும், என் கடமைகள்ள என்னோட கவனம் இருந்தது. ஆனா இப்ப நீ பக்கத்துல இருந்தும் ஒரு நாள் உன்னை பாக்கலைனா அவ்வளவு கஷ்டமா இருக்குடீ. நானும் ரொம்ப முயற்சி பண்றேன் ஜானு, முடியலை.
உனக்கு தைரியம் சொன்னாலும், சில சமயம் நாம சேர்ந்திருக்கிறது ஏதோ கனவோ நான் கண் விழிச்சபிறகு நீ என் வாழ்க்கையில இருக்க மாட்டியோன்னு ஒரு பயம் அப்பப்ப வருது. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் கல்யாணத்துக்குனு ஒரு நேரம் மனசு சொன்னாலும், இன்னொரு நேரம் அதுவே குரங்கா இல்லை உன்னை விட்டு இருக்கவே முடியாதுனு பைத்தியமா பினாத்துது."
கண்ணோரம் விழிநீர் பளபளக்க அவனை புரிதலோடு பார்த்திருந்தாள்.
"இது உடல் ரீதியான ஒரு ஈர்ப்புனால... செக்ஸ்ஸுக்கானு என்னை தயவு செஞ்சு தப்பா நினைக்காத டா ஜானு. எனக்கு சொல்ல தெரியலை..." குரல் கரகரத்தது.
அவள் மடியில் தலை வைத்து படுத்தான். அவள் இடது கையை பற்றி தன் கைகளுக்குள் பொதிந்து மார்பின் மீது வைத்துக் கொண்டான்.
"நீ எல்லார் கிட்டேயும் எப்படி உரிமை எடுத்து பழகுற, அக்கறையா பாத்துக்கற அதே மாதிரி எனக்கு நீ செய்யணும்னு ஆசையா சில சமயம் பொறாமையா கூட இருக்கும். அதே போல நான் உனக்கு உரிமையா எல்லாம் செய்யணும். இப்ப பாரு, உனக்கு உடம்புக்கு முடியலை ஆனா என்னால உன்னை கவனிச்சுக்க முடியலை. ஏன்.. உன்னை இவ்வளவு தூரம் கஷ்டபடுத்தின அந்த ராஸ்கலை ஒரு அறை விட கூட முடியலை. எல்லாம உன்னால தான்"
அவள் புரியாமல் விழிக்க,
"ஆமா போனவாட்டி தலைல அடிபட்டப்போ என்கிட்ட சத்தியம் வாங்கிட்ட, அவனை மட்டுமில்லை யார் கூடவும் சண்டைக்கு போக கூடாதுன்னு, நீயா பர்மிஷன் குடுக்கற வரை."
தனக்கு நினைவில்லை என்றபோதும் கொடுத்த வாக்கை காப்பாற்றும் அவனது கண்ணியம் நெஞ்சை நிறைத்தது.
"ஒரு நல்ல நண்பனா என்ன செய்ய முடியுமோ அதை தான் உனக்கு செய்யறேன். ஏன்னா நாம காதலிக்கற விஷயம் மத்தவங்களுக்கு தெரியாது, உன்னை தப்பா யாரும் பேசிட கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்கேன்."
அவன் மனம்விட்டு பேசுவதே அபூர்வம் என்பதால் பதில் கூற நா எழுந்தபோதும் இடைபடாமல் அமைதி காத்தாள். அவள் வலது கை அனிச்சையாக அவனது கேசத்தை வருட தொடங்கியது.
"அப்பாவோட பிரிவுல மனசு பாதிக்கப்பட்டு அம்மா கிட்ட தட்ட ஒரு குழந்தை மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களை குளிப்பாட்டி, துணி மாத்திவிட, பாத்ரும் கூட்டி போக கூட ஆள் வேண்டி வந்துச்சு ஒரு கட்டத்துல. ஒரு ரெண்டு நாள் ஆள் கிடைக்காம நானே செஞ்சேன்டா" குரல் கம்மியது.
திடுக்கிட்டாள் பூரணி.
"பெத்த அம்மா தானே செய்தா என்னனு சில பேர் நினைக்கலாம், ஆனா ஒரு ஆம்பிளையா அந்த இடத்துல இருந்தா தான் அந்த சங்கடம் தெரியும் செல்லம்மா.
நானும் அப்ப சின்னவன் தானே, எதுவும் தெரியாது, யாரும் உதவிக்கு இல்லை. சித்தியையும் கூப்பிட முடியலை அவங்களுக்கு அப்போ தான் கர்ப்ப பை எடுத்திருந்தாங்க" அந்த பழைய நினைவுகள் வலியை கொடுக்க அவன் விழியோரம் கண்ணீர் வழிந்தோடியது.
"வேற வழி இல்லாம ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணேன். ஒரு ஆள் ஏற்பாடு பண்ணி குடுத்தாங்க ஆபிஸ் ஃபிரண்டு ஒருத்தர். அந்த அக்கா பத்தி தான் சொன்னேனே. சில நேரம் நான் சாப்பாடு ஊட்டினா தான் சாப்பிடுவேன்னு அம்மா அடம் பிடிப்பாங்க, என்னால ஆபிஸ்லேருந்து வர முடியாம போய் சாயந்திரம் வரை பட்டினி இருந்தாங்க. அதனால காலைலேயே சமையல் செஞ்சுட்டு, அவங்களுக்கு ஊட்டிவிட்டுட்டு போக ஆரம்பிச்சேன்.
சில நாள் அந்த அக்காவை எதுக்கும் கிட்ட விட மாட்டாங்க, ஒரே பிரச்சினை ஆகும். அப்பாவை கேட்டு விடாம அழுவாங்க இல்லைனா எதுவுமே ரியாக்ட் பண்ணாம வெறிச்சு பார்த்துட்டு அமைதியா இருப்பாங்க. ஆனா, அந்த வீட்டை விட்டு வர மாட்டேன்னுட்டாங்க. அப்பா வருவாங்க விசு நம்மளை தேடுவாரு கண்ணு அப்படீன்னு பிடிவாதமா வர மறுத்துட்டாங்க. இத்தனைக்கு மத்தியில அவங்க பாடுறதை நிறுத்தினதை கூட நான் கவனிக்கலை ஜானு."
"மாமாவுக்கு அவங்க பாடுறது பிடிக்குமாம். அடிக்கடி இவங்களை தேவாரம் திருவாசகம் பாட சொல்லி கேட்பாராம் அதனால தான் பாடுறதை விட்டுட்டதா சொன்னாங்க."
"கணவனை தாண்டி தனக்குன்னு எதுவும் இல்லைன்னு வாழறாங்க பெண்கள். எப்படி முடியுது?"
சற்றுநேரம் யோசனையில் ஆழ்ந்தபின் மீண்டும் தொடர்ந்தான்.
"நான் என் கவலையை மறக்க ஜிம்முக்கு போனேன். ஒரு குழந்தைகள் ஆசரமத்துக்கு போய் சேவை செய்யுற வாய்ப்பு வந்தது. அந்த பிள்ளைகளுக்கு முறைபடி பாஸ்கெட் பால் விளையாட சொல்லி குடுத்தேன். அம்மா கொஞ்சம் நல்லா ஆனபிறகு அவங்களையும் சில நேரம் அங்க கூட்டிட்டு போவேன், இல்லைன்னா கோவிலுக்கு. அந்த பிள்ளைகளை பாக்கும்போது நாம நல்ல நிலைல இருக்கோம்னு தோணும். மனசை தேத்திக்குவேன். உன் நினைவு வரும் போது அத்தைக்கும், ஷம்முவுக்கும் கால் பண்ணி பேசுவேன்."
பூரணிக்கு அழுகை வெடித்து கொண்டு வந்தது, கட்டுபடுத்தி கொண்டாள். தன் மடி சாய்ந்து மன வேதனைகளை இறக்கி வைத்து கொண்டிருந்த தன்னவனை தடை செய்ய விரும்பவில்லை. அமைதியாக சில நிமிடங்கள் கடக்க, சொல்லாலமல் மருகுகிறானோ என தோன்றியது.
அவள் முகத்தை பார்த்தவாறு புரண்டு படுத்தான்.
"ஜானு எதாச்சும் பாடேன்"
"ஐயோ நான் மாட்டேன்! நான் பாடி பல்லி, பூச்சி ஏதும் செத்துபோயிடுமோன்னு பாத்ரூம்ல கூட பாடுறதில்லை நான்."
"பேபி ப்ளீஸ் பேபி... எனக்காக"
மென்மையான குரலில் அவன் கெஞ்ச,
"ஃப்ராடு (fraud) டா நீ! ம்ம்ம்... சரி.. கிண்டல் பண்ணக்கூடாது..." அரை மனதாக ஒப்புக் கொண்டாள். அவனது அழகான அடர்ந்த கேசத்தை மென்மையாக கோதி விட்டபடி பாட்டு தேர்வு மனதுக்குள் நடந்தது.
🎶🎶🎶
நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன்
அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன்
தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்!
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
நீயும் நானும்
சேரும் முன்னே நிழல்
ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில்
மிதக்கிறதே
உன்னால்
இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின்
அர்த்தங்கள் அறிந்து
கொண்டேன்
உன் தீண்டலில்
என் தேகத்தில் புது ஜன்னல்கள்
திறப்பதை தெரிந்துகொண்டேன்
வேறென்ன வேண்டும்
உலகத்திலே இந்த இன்பம்
போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்
🎶🎶🎶🎶
பாடி முடித்ததும் மௌனமாய் கரைந்தது நேரம். சிறிது நேரத்தில் இயல்புக்கு மீண்டவள் குனிந்து அவன் முகத்தை பார்க்க சலனமில்லாமல் உறங்கி விட்டிருந்தான் அவள் கையை பற்றியபடி. கவலைகளை மறந்து அவள் மடி மீது அவன் உறங்குவதை கண்டதும் அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வு பொங்கி எழுந்தது, சொல்ல தெரியவில்லை. உள்ளம் உருகியது.
'எத்தனை கஷ்டம், பாவம் சிவா நீ. சின்ன வயசுலேந்து அன்புக்காகவும், அரவணைப்புக்காகவும் ஏங்கி போயிருப்ப தான?'
குழந்தை போல உறங்குபவனை எழுப்ப மனமில்லாமல் அவன் தலைகோதியபடி அவனை ரசித்து கொண்டிருந்தாள்.
சற்றைக்கெல்லாம் அவனே விழித்துகொள்ள, சுவற்றில் சாய்ந்து தன்னையே கண்ணெடுக்காமல் அவள் பார்த்து கொண்டிருக்க பதறி எழுந்தான்.
"ஐயோ ஸாரி டா உனக்கு கால் வலிக்குமே ஏன் எழுப்பலை?" அவன் பேச பேச அவள் அமைதியாக இருந்தாள்.
"கோவமா என் மேல? பாட சொல்லிட்டு தூங்கிட்டேன்னு.. கால் வலிக்குதா?"
நெருங்கி அமர்ந்து கேட்டதும் அவன் முகத்தை தன் அருகே இழுத்து நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள். வார்த்தைகளின்றி ஒரு உறுதிமொழி பகிரப்பட்டது இருவரிடையேயும்.
"தாங்.."
கைகளால் அவன் வாய் பொத்தி மறுப்பாக தலையசைத்தாள். கலைந்த அவன் கேசத்தை சரி செய்து, அவன் கன்னத்திலிருந்த கண்ணீர் தடயங்களை துப்பட்டாவால் துடைத்தாள். அவளை வாரி அணைத்து கொண்டான். அவள் தோளில் முகம் புதைத்து, நீண்ட பெருமூச்சை வெளியிட்டவனுக்கு மன பாரம் வெகுவாய் இறங்கியது போல் உணர்வு. இப்படிப்பட்ட புரிந்துணர்வுக்கும் அரவணைப்புக்கும் எத்தனை நாள் ஏங்கியிருந்தான்!
"சிவா, அப்ப உன்னை எதனால பிடிச்சுதுனு தெரியலை, அந்த வயசுல வந்தது லவ்வானு கூட எனக்கு தெரியலை"
கண்களில் மொத்த காதலையும் தேக்கி அண்ணாந்து அவன் முகம் பார்த்து
"I love you shiva! இதை திரும்ப திரும்ப ஆயுசு முழுக்க சொல்லிகிட்டே இருப்பேன். நான் உன்னை நேசிக்கிறேன். தீவிரமா, ஆழமா, உண்மையா, ஆத்மார்த்தமா என் பெத்தவங்க மேல இருக்கற அன்புக்கு ஈடானது உன் மேல வச்சிருக்கற அன்பு.
முன் ஜென்ம தொடர்பா, இல்லை கடவுள் போட்ட முடிச்சானு தெரியலை... எதையும் எதிர்பாராத உன்னோட இந்த அன்புக்கும், காதலுக்கும் நான் தகுதியானவளா? தெரியலை! உன்னோட உசந்த குணத்துக்கு என்ன குடுத்தாலும் ஈடாகாது.
என் கிட்ட என்னோட மனசும், இந்த மனசு பூரா உனக்கான காதலும், மட்டும் தான் இருக்கு. பணமோ, சொத்தோ இல்லை, கல்யாணம் கூட சிம்பிளா தான் பண்ணி குடுக்க முடியும் எங்க வீட்டுல.
உன் வலியை போக்க, பழசை மறக்க வைக்கிற சக்தி எனக்கு இருக்கானு தெரியலை. ஆனா உண்மையான அன்பு இருந்தா எல்லாமே சாத்தியம்ன்னு, என் சிவாவை பாத்து தெரிஞ்சுகிட்டேன். கண்டிப்பா எனக்கு நீ வேணும் சிவா.
என் உயிரா, என் நிஜமா, பலமா, காதலா, என் வாழ்க்கையா, வழிகாட்டியா, நண்பனா எல்லாமாவும், எனக்கே எனக்கா நீ வேணும் சிவா. அதே போல நான் உனக்கு எல்லாமாவும் இருக்கணும் ஆயுசு பூரா. நீ சொன்ன மாதிரி வாழ்க்கை சுகமும் துக்கமும் எல்லாவிதமான அனுபவங்களும் நிறைஞ்சது தான். அந்த அனுபவங்கள் எல்லாமே உன்னோட சேர்ந்து வாழ்ந்து அனுபவிக்கணும். கிழடு தட்டி, நரை விழுந்து, கண்ணு பஞ்சடைச்சு ஓய்ஞ்சு போய் உக்காரும் போது கொள்ளை கொள்ளையா நினைவுகள் வேணும் அசைபோட்டு பாக்க. எப்படிபட்ட சூழல்லையும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்காம சேர்ந்து வாழணும். இந்த உறுதியை இப்ப எடுத்துக்குவோம். உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம். காவேரி அத்தையை என்னோட இன்னொரு அம்மாவா ஏத்துக்க சம்மதம்."
அவளை இறுக அணைத்து உச்சியில் முத்தமிட, அவன் கைகளுக்குள் பாதுகாப்பாய் புதைந்து கொண்டாள், ஒருவித மோன நிலையில் சஞ்சரித்தனர் இருவரும்.
"சிவா"
"ம்ம்ம்.."
"இப்படியே இருந்தா ரொம்ப நிம்மதியா இருக்கு டா. நீ இப்படி கட்டிட்டு இருக்கிறப்ப, ரொம்ப பாதுகாப்பா இருக்கிற ஃபீல்"
"அப்படியா?"
ம்ம் என தலையசைத்து மேலும் அவனை இறுக்கி கொண்டு "அதுவும் உன் ஹார்ட்பீட் கேட்டுகிட்டு இங்கேயே சாய்ஞ்சு இருக்கணும்..." அவளின் பேச்சில், லேசான புன்முறுவல் பூத்தது அவன் இதழில்.
தலையை அண்ணாந்து அவன் முகம் பார்த்தாள், அவனது இடது மார்பில் இதயத்தின் மேல் கை வைத்து
"ஞாபகம் வெச்சிக்க, இது என்னோட இடம். வேற யாருக்கும் கிடையாது" என தீர்மானமாக கூற.
சிரமப்பட்டு சிரிப்பை அடக்கி "ஏன் பேபி, நம்ம பேபி வந்தா அதுக்கு கூடவா?" என்றான் புருவம் உயர்த்தி.
"ம்ம்ஹும் கிடையாது. எனக்கு தான்"
தலையை இடவலமாக ஆட்டி, உதடு சுழித்தாள்.
"என் சிவாவோட இதயத்துல நான் மட்டும் தான். பாப்பா வந்தா அந்த பக்கம் வெச்சுக்கோ" என கர்ம சிரத்தையாக பதில் கூறினாள்.
"ஐயோ என் அழகு ராட்சசி, மக்கு பொண்டாட்டி!" என உள்ளம் பூரிக்க அவளை
அணைத்து கொண்டான்.
⚜️⚜️⚜️⚜️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro