Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 34

Date published: 7 Nov 22

"அத்தை பூரணி விஷயத்துல அவ பெத்தவங்களும், அவளும் தான் முடிவு எடுக்கணும். ஆனா எனக்கு என்னமோ பூரணி குணத்துக்கு ஷ்ரவன் சரியா வருவான்னு தோணலை" என்றார் மூர்த்தி.

"ஏன் மூர்த்தி? என் பேரனுக்கு என்ன குறைச்சல்? படிப்பு, அழகு, சொத்து, அமெரிக்கன் சிட்டிசன் அவன். இன்னும் சொல்லப்போனா அவ தான் அதிர்ஷ்டம் பண்ணிருக்கணும் என் பேரனை கட்டிக்க. நீ அவளை பெத்த பொண்ணாட்டமா நினைக்கிறியேன்னு தான் உன்கிட்ட பேச்சை எடுத்தேன். ஹுஹும்ம்... என்னமோ போ.. ஷ்ரவன் எதாவது அரைகுறை டிரஸ்ஸை போட்ட வெளிநாட்டுகாரியை இழுத்துகிட்டு வந்திருவானோன்னு பயம் எனக்கு. அதான் சட்டுனு கண்ணுல பட்ட ஒரு நல்ல தங்கமான பொண்ணை தவறவிட வேண்டாமேன்னு யோசிச்சேன்"
ஓரக்கண்ணால் மூர்த்தியை கண்காணித்தபடி அங்கலாய்த்தார்.

"அவனுக்கு குறைன்னு நான் சொல்லலை அத்தை. ரெண்டு பேர் குணாதிசயமும், family background வேற வேற அதை தான் சொல்ல வரேன். எப்படியும் நாம சொல்றதுக்கும், முடிவு பண்றதுக்கும் ஒண்ணும் இல்லை அவங்க தான் முடிவு எடுக்கணும். அவ அப்பாவுக்கு கொஞ்சம் உடம்புக்கு சௌகரியமில்லை அவன் வந்திரட்டும் அப்பறம் பாக்கலாம்".

நாற்காலியிலிருந்து எழுந்து திரும்பிய மூர்த்தி எதிர்கொண்டது விக்கித்து போய் நின்ற யமுனாவை. அத்தை தள்ளாடி எழுந்து அறையை நோக்கி நடக்க, யமுனா தேங்கி நின்றதில் மூர்த்தி புரிந்து கொண்டு மனைவியின் அருகே வந்தார்.

"அம்மாடி.." தோளைத் தொட, விருட்டென தட்டிவிட்டார் யமுனா.

"முடியாதுன்னு தெளிவா சொல்லுங்க" என்றார் உறுதியாக கணவரை பார்த்து.

"நான் சொல்லிட்டேன் மா, ஆனா..."
கல்யாணி அத்தையின் மன வன்மம் செயலில் வெளிபட துவங்கியது அறியாமல் குழப்பத்தில் தத்தளித்தார் மூர்த்தி. "பாப்பா வசதியா வாழட்டுமேன்னு ஒரு நப்பாசை. ஷ்ரவன் IBM கம்பெனில செலக்ட் ஆகியிருக்கானாம். நான் கட்டாயபடுத்தலை மா..."
பதட்டமாக முடித்தார்.

"அவங்க கிட்ட பூரணி கஷ்ட படணும்னு நினைக்கிறீங்களா?"
யமுனா குரல் தழுதழுத்தது, "அவங்க குணம் தெரியும் தானே? ரெண்டு நாள் இவங்க பேசுற பேச்சை என்னாலையே கேட்க முடியலை. அந்த வீட்டுல அவ எப்படிங்க? குழந்தைங்க அவ..."
பேச இயலாமல் நெஞ்சம் அடைத்தது.
"நீங்க அவங்களுக்கு பதில் சொல்லலைனா நான் சொல்ல வேண்டியிருக்கும். இருபத்தி எட்டு வருஷ தாம்பத்தியத்துல முதல் முறையா உங்களை எதிரத்து நான் செயல்படற மாதிரி செஞ்சிடாதீங்க".
கலங்கிய கண்களை துடைத்தபடி தீர்மானமாக தன் கருத்தை தெரிவித்து விட்டு போய்விட்டார் யமுனா.

~~~~

மண்டப மேலாளர் முன் அமர்ந்திருந்த விஷ்வாவின் கைபேசி அதிர்ந்தது. பூரணியின் எண்ணிலிருந்து ஐந்தாவது முறையாக அவனுக்கு அழைப்பு. அழைப்பை ஏற்று அறையை விட்டு வெளியேறினான்.

"சி...சி.. வா..
சிவா எங்க இருக்க?"
ரகசிய குரலில் அவள் இறைஞ்ச, அவன் அதிர்ந்து நின்றான்.
"எனக்கு பயமா இருக்கு" குரல் கரகரத்தது மூக்கை உறிஞ்சினாள்.

"செல்லம்மா எங்க இருக்க? என்ன ஆச்சு சொல்லுடா? அழறியா?" இதயத்துடிப்பு அதிகரித்தது.
"முதல்ல ரிலாக்ஸ் ஆகு ஏன் அழற? சொல்லு ஜானு."

அவள் அழுகை கேவலாக வெடிக்க, விஷ்வாவின் உடல் வியர்த்து நடுங்கியது.

"நீ அழுதுட்டே பேசுறது புரியலை மா. எங்க ஜானு இருக்க?" வேகமாய் மாடியேறி அவளை எல்லா இடத்திலும் தேடினான்.

"ஸ்... ஸ்டோ... ஸ்டோர்....ரூம்.. டைனி... டைனிங் ஹா...ஹால் பின்னாடி" விக்கலை சமாளித்து பேசி முடித்தாள்.

வழியில் அவள் துப்பட்டா கண்ணில் பட அதை எடுத்தவனுக்கு உள்ளுணர்வு எச்சரித்தது. போன் இணைப்பில் இருந்தபடியே அவன் அந்த ஸ்டோர் ரூமை அடைந்ததும், அவன் தான் என உறுதி செய்தபின் கதவை திறந்தாள். அவனை பாயந்து கட்டிக் கொண்டவளின் உடம்பு நடுங்குவதை உணரமுடிந்தது அவனால்.

"செல்லம்மா நீ இங்க எப்படி? எதுக்கு வந்த? என்ன ஆச்சு?"
அறையை சுற்றி நோட்டம் விட்டான், அதிக வெளிச்சமில்லை அந்த அறையில்.

சட்டென சுய உணர்வு பெற்றுவளாய் அவனிடமிருந்து விலகி, திரும்பி கொண்டாள். "என்ன ஜானு"? அவள் செய்கை அவனை குழப்ப.

"அது...டி...டிரஸ் கிழிஞ்சிருக்கு சிவா" என்றாள் சங்கடமாக.
கைகளை முன்பக்கமாக இறுக்கி கட்டிகொண்டாள்.

ஏதோ தவறு நடந்திருக்கறது என்று புரிந்தது விஷ்வாவிற்கு.

"இங்க பாரு, என்னை எந்த நம்பிக்கைல, உரிமைல கூப்பிட்டியோ அந்த உரிமைல தான் இதை பண்றேன்."

தன் சட்டையை கழற்றி அவளிடம் நீட்டினான். அவளது குர்த்தி இடது பக்கம் இடைபகுதியில் குறுக்கே கிழிந்திருந்தது. அவள் சட்டையை அணிந்து கொள்ள, தேடிபிடித்து ஸ்டோர் ரூம் மின்விளக்கையும் மின்விசிறியையும் இயக்கினான் விஷ்வா. அவளை அங்கே ஒரு நாற்காலியில் அமர வைக்கையில் அவள் கையில் இருந்த காயம் கண்ணில் பட பதைபதைத்தான்.

"என்ன இது செல்லம்மா? எப்படி இது? சொல்லு" இடது கையில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

"உள்ள ஓடி வந்தப்ப எதுலையோ இடிச்சுது. ஷார்ப்பா எதோ கீறுன மாதிரி இருந்தது கையில அப்ப தான் டிரஸும் கிழிஞ்சது."

சுற்றி நோட்டம் விட அறை கதவுக்கு பின் பக்கம் ஒரு சாப்பாடு மேஜை சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அதன் கால் பகுதி துருப்பிடித்து உடைந்திருந்தது. அதை மடக்கி ஸ்டோர் ரூமில் போட்டிருந்தனர். 

"ஷிட் நான் தான் அதை dispose பண்ண சொன்னேன்." விருந்தினர்களுக்கு ஊறு விளைவிக்குமோ என்று அஞ்சி அதை அப்புறபடுத்தியவன் எதிர்பார்க்கவில்லை அது அவளை காயப்படுத்துமென.
"சரி வா போகலாம்.."

"கால் வலிக்குது சிவா".
அவள் முடிக்கும் முன்பே

"எந்த கால்? எங்க? எப்படி?" முகத்தில் கலவரம் படர்ந்திருக்க கீழே குனிந்து ஆராய்ந்தான். வலது கால் பாதத்தில் வீக்கம், எலும்பு முறிவாக இருக்கலாம் என தோன்றியது.

"என்ன நடந்தது பூரணி?" அவன் முகம் இறுகி, தொனி மாறவும் குற்ற உணர்ச்சியிலும்
வேதனையிலும் அழத்தொடங்கினாள்.

சுருக்கென்று முள் தைத்தது அவனுள்,
"ஜானு... ஷ்ஷ்ஷ்.. ஸாரி" மண்டியிட்டு அவளை மெல்ல தன்னோடு அணைத்து தலையை வருடி அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு, "ஸாரி மா... பயத்துல தெரியாம... சொல்லு மா என்ன ஆச்சு?" வேதனையிலும் பயத்திலும் இருப்பவளை கண்ட பின்பும் தான் கோபம் கொண்டதை நினைத்து தன்னை தானே கடிந்து கொண்டான்.

"ம்ம்ம்..." விசும்பல்

கைகுட்டையால் அவள் முகத்தை துடைத்து, கூந்தலை கோதி விட்டான். அழுது சிவந்து களைத்திருந்தன கண்களும் முகமும், 
"என் மக்கு பொண்டாட்டி ஹாஸ்பிடல் போலாம். என்ன?"

வழியில் கண்டெடுத்த அவளது துப்பட்டாவை இரண்டாக கிழித்து கையில் கட்டும் போதே புரிந்தது காயம் ஆழமாக இருப்பது. அவன் கட்டு கட்டும் போது காயத்தை உன்னிப்பாக பார்த்தவள் முகம் வெளிறியது.

கண்ணை இருட்டி வயிற்றை குமட்டி கொண்டு வர
"சிவா... நீ..."என அவள் வார்த்தைகள் குழறுவதை கேட்டதும் நிமிர்ந்தவன் கண்டது மயங்கும் நிலையில் இருந்தவளை தான்.

அவள் கன்னத்தை தட்டி எழுப்பினான், "ஜானு ப்ளீஸ் இங்க பாரு" என் அவள் முகத்தை நிமிர்த்தினான், அவள் கண்கள் மயங்கி சொருக, அவனுக்கு தன்னை யாரோ தாக்கியது போல் வேதனை. மீண்டும் அவளை விழிக்க வைக்க முற்பட்டான். அவள் உடல் துவண்டு மெல்ல சரிய தொடங்கியது அவளை தன் மீது சாய்த்து கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்.

"ஜானு... ஜானுமா.. ப்ளீஸ் கண்ணை திற.."

முனகலோடு விழி திறக்க முயன்று "சிவா..."ஏதோ சொல்ல முற்ப்பட்டாள்.

" சொல்லுமா என்ன பண்ணுது? எப்படி டா அடி  பட்டுச்சு? கண்ணை திறந்து பாரு டா" என அவன் கண்கலங்கி துடிக்க.

"இரு... போகாத... " மிகுந்த சிரமத்துடன் வார்த்தைகளை கோர்த்து சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டாள். "அர்ஜீன்.. சுகந்தி... சொல்லாத... ஃபங்க்ஷன்..."

"சரி டி சொல்லலை. ஆனா என்ன நடந்தது சொல்லு பேபி... உனக்கு எதா ஆச்சுனா நான்..."

மார்பு கூட்டை உடைத்து அவன் இதயத்தை ரத்தமும் சதையுமாக யாரோ பறித்து கொள்வது போன்ற வேதனையை அனுபவித்தான்.

"என்னை தனியா தவிக்கவிட்டுறாத பேபி.. நான் தாங்க மாட்டேன் டி..." கதறினான்.

அவள் மெலிதாய் புன்னகைத்தபடி மயங்க, கண்ணோரம் கண்ணீர் துளி உருண்டோடியது.
தன் கரங்களில் மயங்கி கிடந்தவளை பார்க்கையில், சில வருடங்கள் பின்னோக்கி போவது போல் இருந்தது.

சற்று நேரத்திற்கு முன் தன் கைகளில் ஏந்திய தன் காதல் காரிகை, கண் முன்னே ஓடி ஆடி, சிரித்து மகிழ்ந்த தன் தேவதை... இதோ மீண்டும் மயங்கி கிடக்கிறாள் தன் மடியில் ரத்த காயங்களுடன். அவளை அந்த நிலையில் பார்க்கையில் எத்தனை வேதனை ஏற்பட்டதோ அதை விட பன் மடங்கு ஆத்திரம் தன் மீதே ஏற்பட்டது, அவள் விஷயத்தில் கவனக்குறைவாய் இருந்துவிட்டதை எண்ணி. மீண்டும் ஒரு முறை தன்னவளின் நலனில் அசட்டையாக இருந்ததை அவனால் ஏற்க முடியவில்லை.

தன் உண்ர்ச்சிகளை கட்டுபடுத்தி ஆதர்ஷை அழைத்து விவரம் கூறி உதவுமாறு கேட்டான்.

~~~~

நேசன் ஹாஸ்பிடல் உள்ளே அவசர சிகிச்சை பிரிவில் பூரணிக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்க, வெளியே நாற்காலியில் நடுக்கத்துடன் அமர்ந்திருந்தான் விஷ்வா. கோகிலாவின் மகள் என்பதாலும் பூரணியை அனைவருக்கும் அறிமுகம் என்பதாலும் பணியிலிருந்த அனைத்து ஊழியர்களும் கவலையாக இருந்தனர்.

ஆதர்ஷ், ஷம்மு உதவியோடு யாரும் அறியாமல் பூரணியை மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டான் விஷ்வா.

"பரந்தாமன் சாரை மதியம் தான் deaddiction centre க்கு மாத்தினாங்க சார். மேடம் அங்க தான் போயிருக்காங்க அவரோட. நாங்க அன்னபூரணிக்கு துணையா இருக்கோம் சார் நீங்க கவலைபடாதீங்க." பணியிலிருந்த ஊழியர்கள் விதவிதமாய் ஆறுதல் கூறினர்.

அவன் தோளில் கைவைத்து அழைத்தாள் ஷம்மு, எந்த எதிர்வினையும் இல்லாமல் கல்லென சமைந்திருந்தான் விஷ்வா. அவனது நிலை புரியாமல் இல்லை அவளுக்கு.
ஆதர்ஷ் உள்ளே மருத்துவர்களோடு சிகிச்சை அறையில் இருந்தான்.

ஷர்மிளா மனதில் அவர்கள் வணங்கும் குருநானக்கிடம் பிரார்த்தித்த வண்ணம் தான் இருந்தாள்.

'என்ன தான் சோதனை காலகட்டம்னு தேற்றிக்கிட்டாலும் அதுக்கு முடிவு இல்லையா? பாவம் இவங்க எல்லாரும். அத்தனை இரக்கமற்றவரா நீங்க? கருணை காட்டுங்க Waheguru ப்ளீஸ் என் நண்பர்களுக்கு நல்ல வாழ்க்கையை குடுங்க ' மெல்லிய விசும்பல் அவளையும் மீறி வெளிப்பட விஷ்வா அவள் புறம் திரும்பினான்.

"உன்னையும் அழ வைச்சிட்டேன் இல்லடீ?" ஒரு வருத்தம் நிறைந்த பாவத்துடன் அவளது தலையை வாஞ்சயாய் வருடினான்.

"போடா.." அழுகையினூடே அவனை கடிந்துகொண்டு அவன் புஜத்தில் தலை சாய்த்து "பேபி நல்லாயிடுவா இல்ல டா வி? நான் தப்பு பண்ணிட்டேன் டா அவளை தனியா விட்டுருக்க கூடாது. என்ன டா நடந்துச்சு?"

சோர்வாக முகத்தை கைகள் கொண்டு தேய்த்தான். "தெரியலை ஷம்ஸ். அதை சொல்றதுக்குள்ள மயங்கிட்டா."

அவசர சிகிச்சை அறையிலிருந்து ஒரு டாக்டர் வெளியே வந்தார்.

"நீங்க எல்லாரும் பேஷன்ட்டுக்கு என்ன வேணும்? நார்மலா சொந்தங்கள் இல்லாம ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க மாட்டோம், ஆனா கோகிலா மேடம் பொண்ணு, அதுவும் சீஃப் டாக்டர் சிவநேசன் சார் சொன்னதால தான்.." என்றதும் ஷிர்மிளா

"தாங்கஸ் டாக்டர், நாங்க எல்லாரும் ஃபிரண்ட்ஸ், அக்கம் பக்கத்து வீடு தான். எங்க க்ளோஸ் ஃபிரண்டு எங்கேஜ்மென்ட் இன்னைக்கு, அங்க ஹால்ல தான் ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட - இவ குட்டி பசங்களோட விளையாடிட்டு இருந்தா அப்ப அங்க ஒரு உடைஞ்ச மெட்டல் டேபிள் இருந்ததை கவனிக்காம அடிபட்டுகிட்டா. ப்ளட் பாத்தா பயம் வேற அவளுக்கு மயங்கிட்டா. இப்ப எப்படி இருக்கா டாக்டர்?" என ஒரளவு உண்மையும் கலந்து சொல்ல.

"கையில காயம் கொஞ்சம் ஆழம் தான் ஸ்டிச்சஸ் போட்ருக்கோம். கால் இடிச்சுகிட்டாங்களா இல்லை விழுந்தாங்களா தெரியலை, ஃபிராக்ச்சர் இருக்கலாம் அல்லது Ligament tear இருக்கலாம். எக்ஸ்ரே எடுத்து பாக்கணும். விரல், பாதம் எல்லாம் நல்லா வீங்கி இருக்கு. ரொம்ப வீக்கா இருக்காங்க, சரியா சாப்பிட மாட்டாங்களோ? ப்ளட் லாஸ் அதிகம்னா ப்ளட் ஏத்த வேண்டியிருக்கும், AB பாஸிடிவ் க்ரூப். எங்க டோனர் லிஸ்டுல இருக்கவங்களை காண்டாக்ட் பண்றோம் நீங்களும் டிரை பண்ணுங்க.."

~~~~

"விஸ்வநாதன்?"
பரிச்சயமான குரல் கேட்டு திரும்பினான் விஷ்வா.

"பிரகாஷ் சார்..."
கைபேசியை அணைத்துவிட்டு சற்றே குழப்பத்துடன் பிரகாஷ் கையை பிடித்து குலுக்கினான்.

"ஜஸ்ட் பிரகாஷ். அம்மாவோட கஸின் அட்மிட் ஆகியிருக்காங்க இங்க. ஆமா என்ன தம்பி எங்கேஜ்மெண்டை வச்சிட்டு இங்க ஹாஸ்பிடல்ல? யாருக்கு என்ன ஆச்சு? Is everything alright?" உண்மையான அக்கறையோடு அவன் விசாரித்தான்.

"No, Yeah..." விஷ்வா தடுமாற பிரகாஷ் யோசனையாய் புருவம் உயர்த்தினான். "ஸாரி. எங்க ஃபிரண்டு ஒருத்தங்க, அடிபட்டுருச்சு அட்மிட் பண்ணிருக்கோம். ப்ளட் லாஸ்.. அதான் டோனர் தேடுறோம்.

"ஓ! நான் ரோட்டரி க்ளப்ல விசாரிக்கறேன். டீடெய்ல் சொல்லுங்க. கைபேசியை எடுத்தான்.

"AB positive..."

"ஹேய் நானும் அதே க்ரூப் தான். வாங்க டாக்டரை பாக்கலாம், நான் டொனேட் பண்றேன்."

விஷ்வா ஒரு நிமிடம் திகைத்தான்.

"என்ன விஷ்வா... நான் ஆல்கஹால் தொட மாட்டேன் மேன். Teetotaler. ஸோ தைரியமா என்னை நீங்க அலவ் பண்ணலாம். Infact இந்த ஹாஸ்பிடல்ல எல்லாருக்கும் என்னை தெரியும். நேசன் அங்கிள்  எங்க ஃபேமிலி டாக்டர். Come on Vishwa don't delay. உங்க நண்பர் உயிர் முக்கியம்." துரிதப்படுத்தினான்.

அடுத்த அரைமணி நேரத்தில் ஸ்ட்ரெச்சரில் பிரகாஷை அழைத்து கொண்டு வந்தார் ஒரு செவிலி.

"பேஷண்டை ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிடுவோம்".
ஷம்முவை பார்த்து, "மேடம் நீங்க அவங்க கூட இருங்க அவங்களுக்கு டிரஸ் மாத்திவிடணும்" என்றார்.

"சார் நீங்க பிரகாஷ் ஸார் கூட இருங்க ப்ளட் குடுத்ததால அவரு கொஞ்சம் நேரம் ரெஸ்ட்ல இருக்கணும். டிரீட்மென்ட் ரூம்ல தான் இருக்கணும் வாங்க ஸார்" என்றவர் பின்னால் போனான் விஷ்வா.

"Mr. Prakash, thank you so much you saved my sister's life." உணர்ச்சிவசப்பட்டு நன்றி உரைத்தாள் ஷர்மிளா.

"இதுக்கு என்ன தாங்கஸ்லாம்.."

வேறு ஒரு ஸ்டிரெச்சரில் பூரணியை அழைத்துவந்தனர் அறைக்கு மாற்றுவதற்காக, ஆதர்ஷ் உடன் இருந்தான். இன்னும் கண்விழிக்கவில்லை பூரணி ஆனால் ஆபத்து இல்லை என கூறப்பட்டது.

"வாட்? இவங்க எப்படி இங்க?"
பிரகாஷ் திடுக்கிட்டு எழ தடுமாறி சற்றே சரிந்தான். சுதாரித்து அவனை பிடித்துகொண்டான் ஆதர்ஷ்

"சார் என்ன இது? இப்ப தான் ப்ளட் டொனேட் பண்ணியிருக்கீங்க. படுங்க ப்ளீஸ்..." நர்ஸ் கண்டித்தார்.

நண்பர்கள் மூவரும் பார்வையை பரிமாறி கொண்டனர் குழப்பமாய். அறைக்கு மாற்றப்பட்ட பிரகாஷ் அருகே உடலால் மட்டுமே இருந்தான் விஷ்வா, உயிரும், உணர்வும், சிந்தனையும் அவன் செல்லம்மாவையே சுற்றி வந்தது.

"விஷ்வா அவங்க உங்க ஃபிரண்டா?"

"யாரை கேக்குறீங்க பிரகாஷ்? பூரணியைவா?" அவன் ஆமோதிக்க, "ஆமா நாங்க எல்லாரும் சைல்ட்ஹுட் ஃபிரண்ட்ஸ். இன்னும் சொல்லப்போனா வெளிய பாத்தீங்களே ஷர்மிளா, டாக்டர் ஆதர்ஷ், அர்ஜுன், அவன் fiance சுகந்தி, ஷர்மிளா fiance சந்தீப் நாங்க எல்லாம் சின்ன வயசு நண்பர்கள். ஆமா நீங்க ஏன் அவளை பாத்து அதிர்ச்சியானீங்க? உங்களுக்கு அவளை எப்படி தெரியும்?"

"அன்னபூரணி **** காலேஜ்ல தானே படிக்கிறாங்க? நான் அந்த காலேஜ் சேர்மன் விஷ்வா. இப்ப ரீசண்டா நிர்வாகம் மாறின நியூஸ் கேள்விபட்டிருப்பீங்க இல்லை?"

"சுந்தரவள்ளி எஜுகேஷனல் டிரஸ்ட்?"

"யெஸ். என் அம்மா பேருல நான் நடத்தற டிரஸ்ட். காலேஜ்ல நடந்த ஒரு டான்ஸ் போட்டியில நான் நடுவர்கள்ள ஒருத்தன். அப்ப பாத்தேன். பூரணி தான் வின் பண்ணாங்க. ஆப்போஸிட் டீம் செஞ்ச ஒரு பெரிய தவறை கூட அவங்க ரொம்ப அழகா ஹாண்டில் பண்ணினதை பிரின்ஸிபல் பாராட்டி பேசினாங்க."

ஒரு அசௌகரியமான அமைதி.
காத்திருந்த நிமிடங்கள் ஒவ்வொன்றும் யுகங்களாய் தோன்ற, உள்ளூர பயம் ஆட்டுவித்தது விஷ்வாவை. நேரம் நீள நீள அவனது நம்பிக்கையும் அமைதியும் நைந்து போகத் தொடங்கியது. ஆறு ஆண்டுகளுக்கு முன் இதேபோல, உயிருக்கு போராடி மீண்ட பூரணி தன் நினைவுகளை இழந்துவிட அவள் வாழ்வை விட்டு அவன் விலகும்படி ஆனது. என்றோ ஒரு நாள் சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இதுவரை வாழ்ந்து வந்தான். இன்று என்ன நடக்கும்? மீண்டும் ஒரு முறை அவளை பிரிய இயலுமா அவனால்? தன்னிச்சையாக கண்கள் கண்ணீர் உகுக்க அவசரமாய் துடைத்தான்.

"Vishwa are you in love with Annapoorani?"
பிரகாஷ் படுக்கையில் எழுந்து அமர்ந்த நிலையில் இவனை தீவிரமாக பார்வையிட்டான்.

"இவன் ஏன் நம்ம பர்சனல்ல தலையிடுறான். இவனுக்கு எதுக்கு நான் பதில் சொல்லணும். இவனை நம்பலாமா வேணாமா? அப்படீன்னு யோசிக்கறீங்களா விஷ்வா?"

தான் மனதில் நினைத்ததை சரியாக பிரகாஷ் கூறிவிட அதிசயித்தான் விஷ்வா.

"உன்னையும் அர்ஜுனையும் சந்திச்சது, நம்ம பாதைகள் க்ராஸானது, இப்ப நான் இங்க இருக்குறது எல்லாம் தற்செயல். ஒண்ணே ஒண்ணு தான் நான் போராடி சாதிச்சது. அன்னபூரணி படிக்கிறாங்கற ஒரே காரணத்துக்காக அந்த காலேஜை அந்த அரசியல்வாதிக்கு பெரிய அமௌண்டு குடுத்து நான் வாங்கினேன்."

விஷ்வா சடாரென எழுந்து அவன் சட்டையை பற்றினான். "என்ன சொன்ன?" கண்களில் கோபம் கொப்பளிக்க "நீ யாரு? எதுக்கு அவ படிக்கிற காலேஜை வாங்கணும்? பண்க்காரன்னா என்ன வேணா செய்வியா? அவளை நெருங்கின உன் உசிருக்கு உத்தரவாதம் இல்லை"

விஷ்வாவின் கையைத் தட்டிவிட்டான். "வேண்டாம் விஷ்வா. தவறா எதுவும் சொல்லிடாத. அவ என் சிஸ்டர்."

"பைத்தியமா நீ? அவ அவங்களுக்கு ஒரே பொண்ணு. கதை நல்லாயிருக்கு..." சீறினான் விஷ்வா.

"அவசரபடாத என்னை பேசவிடு. பரந்தாமன் என் சொந்த சித்தப்பா. JNP Group அதாவது - ஜம்புலிங்கம், நாகராஜன், பரந்தாமன் முறையே தாத்தா, என் அப்பா, சித்தப்பா பேருல தான் எங்க கம்பெனி இருந்தது. அவரு கோகிலா சித்தியை லவ் மேரேஜ் பண்ணிட்டதால அவரை ஒதுக்கிட்டாங்க. அவர் பேரை கூட கம்பெனிலேருந்து நீக்கிட்டாரு என் அப்பா."

ஸ்தம்பித்தான் விஷ்வா.

" சித்தப்பா குடும்பத்தை தேடுறதா நாடகம் ஆடுனாரு எங்க அப்பா. எங்க கம்பெனி டிரஸ்ட் மூலமா நிறைய ஏழை மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் குடுக்கறோம். அதாவது நான், எங்கப்பா, தாத்தா செஞ்ச பாவத்தை துடைக்க வழி தேடிட்டு இருக்கேன்" என்றான் விரக்தியாய்.

"அந்த விதத்துல எங்க டிரஸ்ட் மூலமா ஹெல்ப் பண்ற ஸ்கூல், காலேஜ் பங்க்ஷன்ஸுக்கு கூப்பிடுவாங்க. நான் ஆர்வமா போவேன் ஏன்னா எங்கேயாவது நான் தேடுற என் தங்கச்சி கண்ணுல பட மாட்டாளானு."

"ஆமா பூரணி தான்னு ?"

"என் தங்கச்சினு எப்படி உறுதியா நம்புறேன்னு கேக்கறியா? அவ என் கண்ணு முன்னாடி நான் அடென்டு பண்ண காலேஜ் காம்படிஷன்ல ஆடினா. முதல் நாள் டீம் அறிவிச்சப்போவே எனக்கு டௌட்டு - உலகத்துல எத்தனை அன்னப்பூரணி பரந்தாமன் இருக்க முடியும்? அவ நான் ரொம்ப வருஷமா தேடுற என் சித்தப்பா பொண்ணுனு ரெண்டு விதத்துல கன்பர்ம் ஆச்சு. ஒண்ணு என் பாட்டி அதாவது அப்பாவோட அம்மா பேரு அன்னபூரணி- சித்தப்பா பாட்டி செல்லம் அவங்க குணமும். அவங்க பேரையே அவளுக்கு வச்சது எங்களுக்கு தெரியும். அவரோட லவ்வுக்கு ஸப்போர்ட் பண்ணது பாட்டியும் என் அம்மாவும் மட்டும் தான். அவரு காணாம போயி திரும்ப வந்தப்ப தான் எங்க பாட்டி அதிர்ச்சியில் பேச்சை இழந்தாங்க, ஏன்னா தாத்தா செஞ்ச வேலை அப்படி. கிட்டதட்ட ஆறு மாசம் சித்தப்பா சித்திக்காக தலைமறைவா இருந்து, தன் சொத்தெல்லாம் தியாகம் பண்ணி அப்புறம் அவங்களை கல்யாணம் பண்ணாரு. அதுக்கு என் தாத்தா குடுத்த ஆசி - அவரு பிள்ளை இல்லைனு சொல்லி ஈமகாரியம் செஞ்சது தான். அந்த அதிர்ச்சியில தான் பாட்டிக்கு அப்படி ஆச்சு".

"ரெண்டாவது காரணம்" தன் போனில் ஒரு புகைப்படத்தை காட்டினான், அச்சு அசலாக பூரணியின் ஜாடையில் ஒரு முப்பது வயது பெண்ணின் புகைப்படம் ஆனால் கறுப்பு வெள்ளையில், கிராமத்து பாணியில் சீலை அணிந்திருந்தார்.

"இது என் பாட்டியோட சின்ன வயசு போட்டோ. வரிசையா பாரு என் குடும்ப போட்டோ இருக்கும் பரந்தாமன் சித்தப்பா போட்டோவும் இருக்கும் பாரு. நீ அவரை பாத்திருக்க இல்லை?"

இப்படி ஒரு திருப்புமுனையை எதிர்பாரக்கவில்லை விஷ்வா. இதோ பரந்தாமன் மாமா,  புகைப்படத்தில் குடும்பத்தோடு இருக்கிறார். ஓரளவு அவர் ஜாடையாக ஆனால் சற்றே குள்ளமாகவும் நிறம் குறைவாகவும் அவரது அண்ணன், அருகில் ஒரு பெண்மணி அவர் கையில் மூன்று வயது மதிக்கதக்க ஆண் குழந்தை
"நான் தான் அது".

கதவை தட்டிவிட்டு ஒரு செவிலி உள்ளே வந்தார். பிரகாஷை பரிசோதித்துவிட்டு "ஓகே சார். நீங்க போகலாம்".

"வா விஷ்வா கேன்டீன் போகலாம். பேசுவோம்".

~~~

காபி கோப்பையை கையால் அளந்தபடி, தொடர்ந்தான் பிரகாஷ்.

"சித்தப்பாவை ஒரு விதத்துல ஏமாத்தினது என் அப்பா, காலம் கடந்து விஷயம் தெரிஞ்ச தாத்தா இப்ப தன் கடைசி காலத்துல மகனை பார்க்கணும் மன்னிப்பு கேக்ணுமனு துடிக்கிறாரு. அப்பா தான் செஞ்ச பாவத்தை ஸ்ட்ரோக் வந்தப்புறம் உணர்ந்திருக்காரு. நான் இதை அவங்க ரெண்டு பேருக்காக செய்யலை என் மனசாட்சிக்காக, என் பாட்டியோட கடைசி விருப்பத்துக்காக பண்றேன்."

"சித்தப்பா குடும்பம் எங்களோட சேர்ந்து இருக்க பிரியபடுறது சந்தேகம் தான் முயற்சி பண்றேன்னு தான் பாட்டிக்கு வாக்கு குடுத்திருக்கேன்" அவன் கண்களில் கண்ணீர் கசிந்து ஓடியது. "சித்தப்பாவை பிஸினஸ்ல அந்த ஆளு ஏமாத்தினப்போ கடன் பிரச்சினைல அவரு அரெஸ்ட் ஆகிட்டாரு, சித்தி பூரணியை கூட்டிட்டு வீட்டுக்கு வந்தாங்க சித்தப்பாவை காப்பாத்த சொல்லி கெஞ்சினாங்க.
அப்ப தாத்தா, பாட்டி ஊருக்கு போயிருந்தாங்க. பூரணிக்கு அஞ்சு ஆறு வயசு இருக்கும். அப்பா பேசினது எனக்கு இப்பவும் நினைவு இருக்கு விஷ்வா, கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம, நீ என் தம்பியை விட்டுட்டு குழந்தையும் கூட்டிட்டு போக தயாரா இருந்தா நான் அவன் கடனையெல்லாம் அடைச்சு, அவனை வெளியே கொண்டு வரேன்னு சொன்னாரு.

சித்தி மறுத்துட்டாங்க. எனக்கும் அம்மாவுக்குமே சங்கடமா இருந்தது அவர் சொன்னது. அவங்க அப்ப கூட தம்பிக்கு செய்யிறதா நினைக்காதீங்க கடனா குடுங்க அவரு வெளிய வந்தப்புறம் எப்படியாவது திருப்பி குடுத்துடுவேன்னு கெஞ்சினாங்க. ஆனா அந்த மிருகம்.." ஆத்திரமும் அழுகையும் ஒரு சேர, முஷ்டியை மடக்கி மேஜையை குத்த ஆயத்தமானான்.

"பிரகாஷ் என்ன பண்ற" விஷ்வா சுற்றுமுற்றும் பார்த்து பதட்டமடைய.

"நான் கையாலாகாத சின்ன பையனா இருந்தேன் டா, அன்னைக்கு அந்த ஆளு சொன்னது எனக்கு சாகுற வரை மறக்காது.. கடனை எப்படி அடைப்ப? எத்தனை பேர் கூட..."
முடிக்க முடியாமல் அவன் தலையில் அடித்துகொண்டு அழுதான்.
"அந்த ஆளை கொலை பண்ணலாம்னு கூட தோணிருக்கு சில நேரங்கள்ல ஆனா என் அம்மாவுக்காக விட்டு வச்சேன்".


விஷ்வாவின் ரத்தம் கொதித்தது. பெண்களை எப்படி இவ்வளவு கீழ்தரமாக நினைக்க தோன்றுகிறது மனிதர்களுக்கு? போக பொருளாய், வேலைகாரி போல், ஆண்களின் உடல் இச்சையை தீர்கக மட்டுமே படைக்கபட்ட கருவியா பெண்கள்? சொல்லப்போனால் ஆண்கள் தான் பலவீனமானவர்கள் என்று தோன்றியது விஷ்வாவிற்கு. சமூகத்தின் அத்தனை தடைகளை, இன்னல்களை, பழிகளை இது போன்ற சில பல அரக்கர்களை தாண்டி  தினம் தினம் செத்து பிழைத்து ஆனாலும் முக மலர்ச்சியோடு, சாதித்து காட்டி, அன்பின் வடிவமாக பெண்கள் இன்னும்  இருப்பதால் தான்  இந்த பூமி. இன்னும் வாழ தகுந்த இடமாக இருக்கிறது. ஏதோ இந்த ஆண்வர்க்கம் மட்டுமே உயர்வானதும் பெண்கள் அவர்களின் சேவைக்காக படைக்கபட்ட அடிமைகள் போலவும் நடந்து கொள்வதும், இப்படி பட்டவர்களையெல்லாம் கொன்றால் கூட பாவமில்லை என தோன்றியது அவனுக்கு. பிரகாஷின் குரலில் இயல்புக்கு மீண்டான் விஷ்வா.

"சித்திகிட்ட அன்னிக்கு அந்த ஆளு பேசின பேச்சு புரிஞ்சப்ப எனக்கு வயசு பதிமுணு. அன்னிக்கு முடிவு பண்ணினேன் அந்த ஆளு பேரை என் கூட சேத்துக்குறது இல்லைனு. நந்தகோபால் என் அம்மாவோட அப்பா பேரு. அஃபீஷியலா பேரை மாத்திக்கிட்டேன் ஒன்பதாவது படிக்கும்போது. அப்பாவுக்கு படிப்பு பெருசா ஏறலை ஆனா சில வியாபார நுணுக்கங்கள் புரிஞ்சுது அதுல சமாளிச்சார். சித்தப்பா அப்படி இல்லை பயங்கர புத்திசாலினு அம்மாவும் பாட்டியும் சொன்னாங்க. அதுவே இவருக்கு தம்பி மேல பொறாமை ஏற்பட காரணம். அதுக்கும் மேல தாத்தா படிப்பு அதிகம் இல்லாத என் அப்பாவுக்கு பத்தாவது படிச்ச கிராமத்து பொண்ணை பாத்து கட்டி வைச்சார். ஆனா கோகிலா சித்தி நல்ல படிச்சவங்கனு தெரிஞ்சதும் இன்னும் தாழ்வு மனப்பான்மை அதிகமாச்சு. எல்லாத்தையும் தம்பியோட கம்பேர் பண்ணி வெந்து புழுங்கினாரு. அதனால தாத்தாகிட்ட சித்தியை பத்தி தப்பும் தவறுமா வத்தி வச்சிருக்காரு.

அப்படி ஏற்பட்ட வெறுப்பு தான் அன்னிக்கு தம்பியை காப்பாத்த கூட விடாம மூளையை மழுங்கடிச்சிருக்கு. அம்மாவையும் கொஞ்சமாவா டார்ச்சர் பண்ணியிருக்காரு? பாவத்தின் சம்பளம்- இன்னிக்கு ஸ்டிரோக் வந்து படுக்க வச்சிடுச்சு, ஒரு கையும் காலும் வேலை செய்யலை."

சில நிமிடங்கள் மௌனம் சாதித்தான் பிரகாஷ். இத்தனை விபரங்களையும் அசைபோட்டு பார்ப்பதோடு மட்டுமில்லை இவை உண்மையா என்பதையும் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என தீர்மானித்தான் விஷ்வா.

"நான் இப்போதைக்கு உண்மையை சொல்ல போறது இல்லை விஷ்வா. விஷயம் தெரிஞ்சு அவ என்னை வெறுத்துட்டா? இப்போதைக்கு உங்க நண்பனாவே நான் இருக்கேன். தூரத்துலேருந்தாவது அவளை பாத்துக்கறேன். ப்ளீஸ் ஒத்துக்கோயேன்"
யாசகம்  கேட்பது போல் கையை பிடித்து கொண்டான்.
"சொத்து கண்டிப்பா அவங்களுக்கு தான். அவங்க ஆசைபடலைனு தெரியும். ஆனா நான் அவ பேர்ல எழுதி வச்சிருவேன்."

" கல்யாணம்?" என்றான் விஷ்வா சந்தேகமாய்

வரண்ட புன்னகை ஒன்றை சிந்தினான் பிரகாஷ்.
"இந்த குடும்பத்துல பிறந்த என்னாலையே இவங்களை சகிச்சுக்க முடியலை. அதுவும் இல்லாம என்னை பெத்தவரு சித்தியை கேட்டா மாதிரி என் பொண்டாட்டி கிட்ட எதாவது கேட்டா? என்னால எதுக்கு ஒரு பொண்ணு கஷ்டபடணும்? அதனால கல்யாணமே பண்ணிக்கிற ஐடியா இல்லை. அதுவும் இல்லாம நான் என் வாழ்க்கையில பார்த்த தம்பதிகள் யாருமே சந்தோஷமா, ஒரு நல்ல உதாரணமா இல்லை. திருமண பந்தத்துல ஆசையே வரலை."

விஷ்வா அவனை ஆச்சரியமாக பார்த்திருந்தான். பேசியபடி அவர்கள் பூரணி இருந்த அறையை எட்டி இருந்தனர்.

பூரணி விழித்திருக்க அவளை மருத்துவர் சிவநேசன் பரிசோதித்து கொண்டிருந்தார், அருகே இரண்டு செவிலியர். சற்று தள்ளி நின்றிருந்த ஆதர்ஷ், கோகிலா ஷம்மு இவர்களை பார்த்ததும் கதவருகிலேயே நிற்கும் படி கை காட்டிவிட்டு அருகில் வந்தனர்.

பூரணி ஒரு வெற்று பார்வை பார்த்திருந்தாள், அவனை அடையாளம் கண்டு கொண்டதாய் முகத்தில் எந்த சுவடும் இல்லை, கண்ணில் மலர்ச்சியோ, புன்னகையோ எதுவும் இல்லை.

'கடவுளே! அவளை மறுபடியும் எந்த விதத்துலேயும் கஷ்ட படுத்தாத'
கண்களை கரித்து, தொண்டையை அடைத்து கொண்டு வந்தது விஷ்வாவிற்கு, இதயம் புயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது.

Word count 2619

⚜️⚜️⚜️

Author's note: ஹலோ! மக்களே என்னை மன்னிச்சிடுங்க
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஏகப்பட்ட டென்ஷன் வீட்டுல. யாருக்கு தான் இல்லைனு திட்டுறீங்க புரியுது. 🙈

இது எல்லாத்துக்கும் இடையிலே டைம் கிடைச்சா மூளை வேலை செய்யலை.

🤏 தம்மாதூண்டு மூளையை எவ்வளவு தான் நானும் கசக்கி பிழியிறது?🥺

மீண்டும் சாரி கேட்டுக்கறேன். தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி🙏🙏🙏

❤❤❤❤❤❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro