பாகம் 3
Originally Published June 11, 2021
"என்னடி நின்னுட்டே தூங்கற?" என்று சுகந்தியின் குரல் அவள் நினைவை கலைத்தது.
"ஆங்ங்... வேண்டுதல்! எங்கடி கடலை வறுக்க போய்ட்டீங்களா புருஷனும் பொண்டாட்டியும்?" கடுப்புடன் அர்ஜுனையும் சுகந்தியையும் முறைத்தாள். "டேய் அண்ணா! என்னை வீட்டுல விட்டுட்டு உன் ரொமான்ஸ் படத்தை ஓட்டுறது!"
"பூரணி மா! என்னடா பப்ளிக்ல இப்படி போட்டு குடுக்கற?" என்று அர்ஜுன் அசடு வழிந்தான்.
"என்ன அவங்க சொல்லலைன்னா நீ என்ன வெண்ணைக்கு போயிருக்கனு எனக்கு தெரியாதா டா நல்லவனே? நான் என்ன வேற்று கிரகவாசியா?" தம்பியை செல்லமாக பின்தலையில் தட்டினான் விஷ்வா.
சுகு வெட்கத்தில் தலை கவிழ, அர்ஜுன் அண்டா கணக்கில் அசடு வழிந்தான். அர்ஜுன் கையிலிருந்து சாவியை பிடுங்கிகொண்டான் விஷ்வா.
"இன்னிக்கு அம்மா திட்டுனாங்க, நாளைக்கு நீ பிரியாணி தான், உங்க அப்பா கையில. காலைல வந்து சிறப்பா போட்டு குடுத்துட்டுதான் மறுவேலை!" பூரணி விரலை நீட்டி அர்ஜுனை எச்சரித்தாள்.
"அடிப்பாவி பூரி! இரு டீ அண்ணா நொண்ணானு வருவ இல்ல அப்ப இருக்கு உனக்கு." அர்ஜுன் சளைக்காமல் வாதத்தில் இறங்கினான்.
சுகுவோ தோழிக்கும் காதலனுக்கும் இடையில் குழம்பி நின்றாள்.
விஷ்வா காரை திறக்கவும், காதல் ஜோடி சடக்கென பின் சீட்டில் கை கோர்த்து அமர்ந்து கொண்டதை கண்ட பூரணியும் விஷ்வாவும் விழித்தனர்.
" டேய்! என்னடா பச்சை புள்ளை மாதிரி பிஹேவ் பண்றே?" என்று அர்ஜுனிடம் கேட்டு தலையில் அடித்துக் கொண்டபடி, டிரைவர் சீட்டில் உட்கார்ந்தான்.
வாகன நெரிசலில் ஊர்ந்த காருக்குள் அசாத்திய அமைதி நிலவியது. ஒவ்வொருவரும் வெவ்வேறு மனநிலையில் தத்தளித்தனர். விஷ்வாவிடம் மனம் தடுமாறுவதில் குழம்பினாள் பூரணி, ஏதோ ஒரு பயமும் தயக்கமும் ஆட்கொள்ள யோசனையில் ஆழ்ந்தாள். விளையாட்டாய் அவள் பேசமறுக்கிறாள் என எண்ணிக்கொண்டான் அர்ஜுன்.
தோழியின் செயல்பாட்டில் மாற்றத்தை உணர்ந்த சுகந்தி கவலையில் ஆழ்ந்தாள், அதோடு அவளை வேறு ஒரு கேள்வியும் அரித்து கொண்டிருந்தது. விஷ்வா முயன்று, இடப்பக்கம் அலைபாயும் கண்ணையும் கருத்தையும், சாலையில் திருப்பினான். மௌனத்தை கலைக்க வானொலியை இயக்கினான் விஷ்வா.
🎶சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்
விழிகள் முழுதும். நிழலா இருளா
வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா
சருகென உதிர்கிறேன் தனிமையிலே
மௌனமாய் எரிகிறேன் காதலிலே
மேகம் போலே என் வானில் வந்தவளே
யாரோ அவளுக்கு நீதான் என்னவளே
மேகமேக மேகக்கூட்டம் நெஞ்சில் கூடுதே
உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி மின்னல் ஓடுதே...🎶
கார் அவள் வீட்டை நெருங்கிய போது, "ப்ளீஸ் இங்கேயே நிறுத்திடுங்க" என்றாள் பதட்டதோடு. "அம்மா கேட் கிட்ட நிக்கிறாங்க, அப்பா வந்தாச்சுன்னு அர்த்தம். ப்ளீஸ் ஸ்டாப் பண்ணிடுங்க!" கெஞ்சினாள் மீண்டும் விஷ்வாவிடம். அவனும் குழப்பதோடு காரை நிறுத்தினான்.
இரண்டு வீடு தள்ளி ஒரு கேட்டின் முன் ஒரு பெண் உருவம் இருட்டில் வரிவடிவமாக தெரிய, பூரணி கதவை திறந்து பதட்டமாய் இறங்கி சென்றுவிட்டாள்.
"டேய் அர்ஜுன், அவ அப்பாகிட்ட போய் பேசி ஸாரி சொல்லிட்டு வாடா. மணி எட்டாகுது. லேட்டானா பெத்தவங்க கோப படுறது நியாயம் தான், பாவம் டா அவ.."
ஒரு பெருமூச்செறிந்த அர்ஜுன், "விச்சு, நீ வண்டி எடு, அவங்க அப்பாகிட்ட யாரும் பேச முடியாது" என்றான். சுகந்தி, அர்ஜுன் இருவரும் சங்கடத்தில் நெளிந்தனர். அதற்குள் பூரணியும் அவள் அன்னையும் வீட்டினுள் சென்றுவிட்டிருந்தனர்.
விஷ்வா தன் இயலாமையை மறைத்தான். "ப்ரின்ட் அவுட் எங்க எடுக்கணும்?" கோபம் இருந்தாலும், உணர்ச்சி துடைத்த குரலில் பேசினான்.
வண்டி நகர்ந்தது, அர்ஜுன் வழி சொல்ல காரை செலுத்தினான். காரை நிறுத்திவிட்டு,
"நீ இங்க இரு நானே ப்ரின்ட் எடுத்துட்டு வரேன்" என்று கூறிவிட்டு கடைக்குள் நுழைந்தான், அவனுக்கு சற்று தனிமை தேவைப்பட்டது. 'இன்னும் எவ்வளவு தனிமை விஷ்வா? அதான் அதுவே வாழ்க்கை முறையாகிடுச்சே (lifestyle)'.
மனம் சலிப்பையும் வலியையும் வெளிப்படுத்தியது.
இரண்டு மூன்று கம்பெனிகளில் வேலைக்கு மனு போட்டிருந்தான், சென்னை வரும் முன்பே. இன்று காலை அர்ஜுன் பணிபுரியும் கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியின் சென்னை கிளை ஜெனரல் மேனேஜரையும் நேரில் சந்தித்து பேசியிருந்தான்.
"அர்ஜுன், அண்ணன் எப்போ டெல்லி போனாங்க?"என்று அர்ஜுன் தோளில் சாய்நதவாறு கேட்டாள் சுகந்தி.
"என்ன புதுசா கேக்குற? அவன் டுவெல்த் முடிக்கும் போது தான் டெல்லியில பெரியப்பா பிரச்சினை தெரிய வந்தது. ஆனா இவன் இங்க ஆர்கிடெக்ட் கோர்ஸ் ஜாயின் பண்ணிட்டதால அங்க போக முடியலை, பெரியம்மா மட்டும் போனாங்க. அப்புறம், இவன் பைனல் இயர் படிக்கும்போது பெரியப்பா காணாமல் போனப்ப தான் இவன் கிளம்பி போனான்....ம்ம்ம் அங்க போய் நாலு அஞ்சு வருஷம் இருக்கும். ஏன்?"
"பூரணிக்கு விஷ்வா அண்ணனை ஞாபகமேயில்லை அர்ஜுன்."
"என்ன டா சொல்ற?" அதிர்ந்தான் அர்ஜுன், "அவ எதோ விளையாட்டா அவன்கூட பேசலைனு நினைச்சேன்".
"நீங்க ரெண்டு பேரும் வந்தப்ப, அவரு யாருன்னு கேட்டா என்கிட்ட. நாம எல்லாம் சின்ன வயசுலேருந்து ஒண்ணா தான இருந்திருக்கோம். எப்படி அவளுக்கு அவரை மட்டும் மறந்து போகும்? ஆக்ஸிடெண்டுக்கு பிறகு, நம்ம கேங்குல (gang) எல்லாரையும் நினைவு வந்திச்சு. அவ படிப்பு பாதிச்சுது அதனால தான் ஒரு வருஷம் லேட் நாங்க. பிஹேவியர் ப்ராப்ளம் வந்துச்சு, துணிச்சலுக்கு பேர் எடுத்த பொண்ணு, எல்லாத்துக்கும் பயப்பட ஆரம்பிச்சதால தான் நாம யாராச்சும் அவகூடவே இருக்கோம். ஆனா Buddy bearனு கூப்பிட்டு ஆறு வயசுலேந்து அண்ணாவோட வம்பு பண்ணிட்டு சுத்தின பொண்ணு. உங்களோட ஈக்வலா பாய்ஸ் டீம்ல பேஸ்கெட் பால் விளையாடுனவ, எப்படி அவரை மறந்தா? மறுபடியும் எதும் பிரச்சனையோன்னு பயமா இருக்கு அர்ஜுன். பாவம் அவ.. பதினேழு வயசுல நடந்த விபத்து, அவ வாழ்க்கையையே பொறட்டி போட்டிடுச்சு. போதா குறைக்கு கல்யாணம் வேணாம்னு வேற சொல்லிட்டு இருக்கா.." குரல் உடைந்து அழத் தொடங்கினாள். அர்ஜுனும் கண் கலங்க தொடங்கியிருந்தான்.
==========
இவர்களின் பின்னணியை சற்று தெரிந்து கொள்வோம்..
விஷ்வா (எ) விஸ்வநாதன் வயது 26, ஆர்கிடெக்ட்.
தந்தை அருணாச்சலம் - தற்போது சந்நியாசி, தாய் காவேரி இல்லத்தரசி.
அர்ஜுன் வயது 25, சிவில் என்ஜினியர்.
தந்தை சாம்பமூர்த்திக்கு அரசு உத்தியோகம், தாய் யமுனா இல்லத்தரசி.
விஷ்வாவின் அம்மா காவேரியும் அர்ஜுனின் அம்மா யமுனாவும் சகோதரிகள். அதேபோல அருணாச்சலமும் மூர்த்தியும் சகோதரர்கள்.
விஷ்வா, அர்ஜுன் இருவரும் படிப்பில், குணத்தில், பழக்கவழக்கங்களில் என பெற்றோர் பூரித்து போகும் அளவு நல்ல பிள்ளைகளே.
விஷ்வாவிற்க்கு பிறகு பிள்ளை வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டவில்லை அருணாச்சலம். ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டிருந்தவர், அப்போதே ஏதோ கடமை என்ற அளவிலேயே மனைவியையும் மகனையும் பாவித்து வந்தார். இரண்டு குடும்பங்களும், இப்பொழுது வசிக்கும் இந்த பூங்கா காலனி பிளாட்டில் ஒரே பிளாக்கில் எதிரெதிரே வீட்டை வாங்கி குடியேறி, பிள்ளைகளை அருகில் இருந்த பள்ளியில் சேர்த்தனர்.
வங்கியில் வேலையில் இருந்த அருணாச்சலத்திற்கு, பதவி உயர்வும் டெல்லிக்கு மாற்றலும் வந்தது. விஷ்வாவிற்க்கு அப்போது ஓன்பது வயது, மனைவியையும் மகனையும் சென்னையில் விட்டுவிட்டு, டெல்லி சென்றார்.
அர்ஜுனுக்கு எட்டு வயதாகும் போது, யமுனா இரண்டாவதாக ஒரு பெண் பிள்ளையை பிரசவித்தார். இரண்டு வீட்டிலும் பெரியவர்கள் காலமாகிவிட்டிருக்க, காவேரியே உடன் இருந்து தங்கையை கவனித்து கொண்டார்.
அருணாச்சலமும் அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை, தமிழ்நாட்டிற்கே மாற்றல் கேட்டு எழுதியிருப்பதாகவும் கிடைத்தவுடன் தான் வந்துவிடுவதாகவும் தெரிவித்தார். யமுனாவின் பெண் குழந்தைக்கு ஒரு வயது இருக்கையில் திடீரென மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனதில் இரண்டு குடும்பங்களும் நிலை குலைந்தது.
சுகந்தி வயது 21
இச்சம்பவத்திற்கு பிறகு சில மாதங்களில், சுகந்தியின் குடும்பம் அதே பிளாக்கில் மாடி வீட்டில் குடியேறினர். அவள் அம்மா - பத்மா இல்லத்தரசி, தந்தை சுரேஷிற்கு பிரபல ஆங்கில பத்திரிக்கையில் பணி. சுகந்தியை விஷ்வா அர்ஜுன் படிக்கும் பள்ளியில் சேர்த்தனர். சுகந்தி அர்ஜுனைவிட நான்கு வயது இளையவள். நண்பர்களாக இருந்தவர்கள் பருவமடையும் சமயத்தில் பரஸ்பரம் காதலில் விழுந்தனர். சுகந்தியின் தம்பி கார்த்திக் அவளைவிட நான்கு வயது இளையவன், வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரன்.
சுகந்தியின் வகுப்பு தோழியாக முதலில் வந்து அறிமுகமாகி, பின்னர் இந்த குடும்பங்களின் பிரிக்க முடியாத அங்கமாக போனாள் நம் நாயகி அன்னப்பூரணி.
Author's note:
அனைவருக்கும் வணக்கம்! கதையை வாசித்து, கருத்து தெரிவிச்சவங்களுக்கும், வோட் பண்ணவங்களுக்கும் நன்றி
❤❤❤❤🙏
அமைதியாக வாசித்து செல்லும் வாசகர்களுக்கும் நன்றி❤❤❤❤🙏
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro