Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 26



"ஹாய் பூரி!"
அர்ஜுன் பூரணியின் பின்னலை பிடித்து இழுத்ததும் நறுக்கென அவன் புஜத்தில் கிள்ளிவிட்டாள்.

"டேய் தடிமாடு அப்படி கூப்பிட்ட பூரிகட்டையாலயே மண்டையை பொளந்திருவேன்". 

பூரணியிடம் இருந்து காபி டம்ளரை வாங்க அவன் கைநீட்ட

"ப்பே! உனக்கு காபி கிடையாது. சுடு தண்ணி தான்" உதட்டை சுழித்து பழிப்பு காட்டி, தம்ளரை எடுத்து போய்விட்டாள்.

அவன் பின்னாலேயே சென்றான்.
"ஷம்ஸோட சேந்து ரொம்ப வயலெண்டா ஆகிட்டுவர நீ"

"ஏய் குரங்கு!" தம்ளரை அவளிடமிருந்து  பிடுங்கி கொண்டு, "உன் ஆளு உன்கிட்ட பேசணுமாம் மாடிக்கு வர சொன்னான்."
குறும்பு பார்வை பார்த்தபடி அர்ஜுன் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக கிசுகிசுத்தான்.

'உன் ஆளு' என்ற வார்த்தையில் 'என்னவன்' என்ற உரிமையும் பெருமையும் பொங்க, உடல் முழுதும் ஒரு வித சிலிர்ப்பு ஓடியது, நெஞ்சில் படபடப்பு குடியேற கூடவே வெட்கமும் ஒட்டிகொண்டது. பதில் சொல்ல இயலாமல் மருள மருள விழித்தாள்.

பொழுது இன்னும் புலராத அதிகாலை முகூர்த்த வேளையில் பால் காய்ச்சி முக்கியமான பொருட்களை மட்டும் எடுத்துவந்து குடியேறி விட்டனர் பூரணி குடும்பத்தினர். பரந்தாமன் மற்ற பொருட்களை வண்டியேற்றி அனுப்ப ஏதுவாக
மீண்டும் பழைய வீட்டிற்கு சென்றுவிட்டார்.


"ஏய் என்னடி யோசனை?" அவளை உசுப்பினான்.


"இல்லை அம்மா..."


சுகந்திக்கு மாதவிலக்கு நேரமாதலால் அவளை சாமி கும்பிடும் நேரத்திற்கு போகவேண்டாமென அவள் அன்னை கூறியிருந்தார்.

"நான் பாத்துக்கறேன் நீ காபி எடுத்துட்டு போ" அவளிடம் கூறிவிட்டு, பின் உரக்க பேசினான்.

"பூரி கட்டை இந்தா போய் என் டார்லிங்குக்கு இந்த காபியை குடுத்துட்டு வா. வர கூடாதுன்னு சொன்னதால சோகமா மாடியில போய் உக்காந்திருக்கா."

ஜாடையாக புரிஞ்சுதா என்க, பின்னோடு கோகிலா கிச்சனில் நுழைந்தார்.


"போய்ட்டு வா அன்னம் பாவம் அவ. டெம்போ வர நேரமாகும் அதுவரை பேசிட்டு இருங்க நான் கூப்பிடுறேன்."

அர்ஜுன் அவரது கவனத்தை திருப்பினான்.

"கோகி மா, இந்தாங்க முக்கியமான போன் நம்பர் எல்லாம் இதுல எழுதி வச்சிருக்கேன்" ஒரு சிறிய டைரியை நீட்டினான்.
"மளிகை கடை, பால்காரன், பேப்பர், மெடிக்கல் ஷாப், தண்ணி கேன் சப்ளை, இங்க மெயிடெனென்ஸ் வேலை பாக்கற அல்போன்ஸ், ஜோசப்..." அவரை அமர வைத்து பேச்சை வளர்த்தான்.

~~~~

நான்கைந்து படிகள் ஏறி இடது பக்கம் திரும்பியதும் மொட்டை மாடிக்கு போகும் வழியில் அமர்ந்திருந்தான் விஷ்வா. அவளை கண்டதும் அவன் முகத்தில் அத்தனை பிரகாசம். அவள் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன. அதிகாலை குளிர்ந்த காற்றில் அவளது உடல் லேசாக சிலிர்த்தது. படிகள் ஏறி அவன் அருகில் நின்று காபியை அவனிடம் நீட்டினாள்.


காபியை வாங்கிகொண்டு,
"குட்மார்னிங்க் செல்லம்மா" அவளை கைபிடித்து இழுத்து தன்னருகே உட்கார வைத்தான். காபியை ஒரு மிடறு விழுங்கி,
"ம்மம்... பொண்டாட்டி கையால காபி குடிக்கிறது தனி சுகம் தான்."

அவன் வார்த்தைகளும் அவன் அருகாமையும் அவளது வெட்கத்தின் அளவை கூட்டிக்கொண்டே போனது.
அவளது கையோடு தன் கையை பிணைத்துக்கொண்டு வெகு நிதானமாக காபியை ரசித்து குடிக்க தொடங்கினான். அவள் கைப்பிடியை மேலும் இருக்கி கொண்டாள்.


கீழ்வானம் மிக லேசாக வெளுக்க தொடங்கியது, பறவைகளின் கீதம், காலனியில் யார் வீட்டிலோ சுப்ரபாதம், வாசல் பெருக்கி தண்ணீர் தெளிக்கும் ஓசை, பால்காரர்கள், பேப்பர்காரர்களின் வரவை அறிவிக்கும் சைக்கிள் பெல் என மெல்ல விடியலின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தன, நகரம் விழிக்க தொடங்கியது.


இருவரிடையே மட்டும் ஒரு மோனம், அதீத மனநிறைவு. பேச எத்தனையோ இருந்தும், தான் தவித்து தேடிய துணையின் அருகாமையே போதுமானதாக இருந்தது இருவருக்கும். அன்பை கடத்திக்கொள்ள எப்போதுமே வார்த்தைகள் தேவையாய் இருப்பதில்லை! சில விஷயங்களை உணர்வுபூர்வமாய் மட்டுமே உள்வாங்கி கொள்ள முடியும்.

அவனுக்கே உரித்தான ஒரு வாசனை, லேசான சோப்பின் மணம், அவன் உடலின் கதகதப்பு, இயல்பாய் தோன்றிய ஒரு நம்பிக்கை உணர்வு, அவனின் அபரிமிதமான காதல் எல்லாம் அவளை கட்டியிழுக்க மெல்ல அவன் தோளில் தலைசாய்த்தாள். அவள் தலைமீது அவன் தலையை சாய்த்துக் கொண்டு கண்மூடி முழுமையாக அந்த நிமிடத்தின் பேரானந்தத்தை உள்வாங்கி கொண்டான் விஷ்வா.

தாயை போல தன் வாழ்வும் தனிமையில் கழியுமோ, என ஒரு கட்டத்தில் அவனுக்கு பயம் தோன்றியது உண்மை. தன் சுயநலத்திற்காக பூரணியை அணுக முடியாத இக்கட்டான சூழல். அவளை மறக்கவும் முடியாமல், சேர்ந்து வாழவும் முடியாமல், சென்ற சில ஆண்டுகளாய் அவன் அடைந்த வேதனை கொஞ்சமில்லை.
ஆனால் அந்த வேதனை எல்லாம் இதோ ஆதவனை கண்ட பனி போல இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது.

அவள் உச்சந்தலையில் மென்முத்தம் பதித்து,
"தாங்க்ஸ் செல்லம்மா" அவன் குரல் கரகரக்க, சட்டென்று நிமிர்ந்தாள் பூரணி. அவன் கண்கள் கலங்கியிருந்தது.

"என்ன சிவா?"

நீண்ட பெருமூச்செறிந்து, "இப்படி ஒரு தருணம் எனக்கு வெறும் பகல் கனவாவே இருந்துடும்னு நினைச்சேன்." அவன் கண்கள் வேதனையில் அலைபாய்ந்தது, முகமோ கடந்து வந்த வலியை பிரதிபலித்தது.
"தாங்க்ஸ், என் வாழ்க்கையில மறுபடி வந்ததுக்கு".

அவளறியாமல் அவள் விழிகளும் கண்ணீர் உகுத்தது, "இத்தனை வருஷமும் உன்னை தான் தேடிட்டு இருக்கேன்னு தெரியாமலேயே தேடிட்டு இருந்தேன். நீயா வந்து பேசலைன்னா எனக்கு பேச தைரியம் வந்திருக்காது சிவா."

"என்ன சொல்ற? புரியலை".

குழப்ப முடிச்சுக்கள் அவன் நெற்றியில். தன்னிச்சையாக அவள் விரல்கள் அவன் நெற்றி வருடி சுருக்கம் நீவியது, அந்த கரத்தைப் பற்றி உள்ளங்கையில் முத்தம் பதித்தான். அவள் விழியும் முகமும் அல்லிபூவாய் மலர்ந்து, நாணத்தில் இயல்பாய் கவிழ்ந்தன, விழிகள்.

கண்கொட்டாமல் அவளை ரசித்து, இதயத்தில் ஒவ்வொரு வினாடியும் பதியவைத்து நினைவு பெட்டகத்தில் சேகரித்து கொண்டான்.

"என்னை தேடினியா செல்லம்மா?" அவள் கவனத்தை மீண்டும் தன்னிடம் திருப்பினான்.

"ஆக்ஸி..." தன்னை திருத்திகொண்டு "ஆப்ரேஷன் முடிஞ்சு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்னு கன்ப்ர்ம் ஆச்சு. அதுக்கு பிறகு ட்ரீட்மென்ட். கொஞ்ச நாளைக்கு பிறகு ஓரளவு எல்லாம் நார்மல் ஆனபிறகு ஒரு கனவு repeat ஆகிட்டு இருந்துச்சு. மொதல்ல தெளிவா இல்லை. நாளாக நாளாக இன்னும் clarity better ஆச்சு. அப்பவும் சில விஷயங்கள் புரியலை. ஆனா ஒரு வருஷமா கொஞ்சம் டௌட் வர ஆரம்பிச்சது. நான் யாரையோ காதலிச்சி அவங்களை பிரிஞ்சிருக்கேன்னோ இல்லை யாரையோ ஒன் சைடா லவ் பண்ணி இருப்பேனோன்னு சந்தேகம்."

இருவரும் பார்வை விலக்காமல் பார்த்து கொண்டனர் சில வினாடிகள். மேலே சொல் என்பதாய் அவன் ஜாடை காட்ட அந்த கனவை விவரித்தாள்.

அந்த கனவைப் பற்றி கேட்டு அதிசயித்தான். இப்படி கூட சாத்தியமா? அவள் மறந்து போனது மறந்ததாகவே இருக்கட்டும் தானாக நினைவு வந்தால் சரி இல்லையெனில் இதுவே போதும் என தீர்மானித்தான் விஷ்வா.

"எது எப்படியோ அந்த past பத்தின ஆராய்ச்சி இப்ப எதுக்கு? உனக்கு என்னை பிடிச்சிருக்கு தான?"
அழகாய் இதழ் வளைத்து வெட்கம் இழையோடிய புன்சிரிப்பால் பதில் அளித்தாள்.

"அப்ப தைரியமா உன் வீட்டுல பொண்ணு கேட்டுடவா?"

"ம்ஹூம்" என சிணுங்கி அவள் தலையசைக்க

"என்ன ஜானு? ஏன்?" ஏமாற்றமடைந்தான்.

"கொஞ்ச நாள் லவ் பண்ணலாம் சிவா" அவள் முகம் சுருக்கி கெஞ்ச, அவன் பனிக்கட்டியாய் உருகினான்.

"ஏன் ஜானு கல்யாணம் பண்ணிகிட்டா லவ் வராதா?"

"இல்லைடா, அந்த லவ் வேற. இது திருட்டுதனமா பண்ற லவ்... எனக்கு அந்த த்ரில் கொஞ்ச நாள் என்ஜாய் பண்ணணும். எப்ப மாட்டிக்குவோம்? யாரு திட்டுவாங்கன்னு படபடப்பா? அதுவும் பெரிய மாமா கண்ணுல படாம திருட்டுதனமா மீட் பண்ற த்ரில்... அச்சோ!" விழிகள் மின்ன குழந்தை போல குதூகலித்தாள், அவனுள் ஏதோ தடம்புரண்டது.

"ப்ளீஸ் ப்ளீஸ்! சிவா கொஞ்ச நாள் டா!" அவள் கெஞ்ச, மிக சுவாரஸ்யமாக அவளை பார்த்து கொண்டிருந்தான். "ப்ச்ச்.. பதில் சொல்லு".


மந்தகாச புன்னகை ஒன்றை வீசினான், "கரும்பு தின்ன கூலியா? எனக்கு டபுள் ஓகே! ஆனா ஒரு கண்டிஷன்! proper காதல் ஜோடியா ஒரு ஆஸ்பெக்ட் கூட மிஸ் பண்ணாம லவ் பண்ணணும், ஓகே?" அவன் புருவம் உயர்த்த,

"காதல்ல என்ன ஆஸ்பெக்ட்?" அவள் சந்தேகமாய் வினவ

"எல்லாத்துக்கும் ஒரு வழிமுறை, மெதட் இருக்குல்ல அதே போல தான்".

புரிந்தும் புரியாததுமாய் இருக்க, குத்து மதிப்பாய் தலையசைத்தாள். அவள் தலை அசைவிற்கேற்ப முத்து ஜிமிக்கி ஆடி, கழுத்தின் அருகே உரச, அவனுள்ளே ஏக்கபெருமூச்சு ஏறி இறங்கியது.


"ஒழுங்கா வாயை திறந்து பதில் சொல்லு".

"சரி..."

"அன்னம் எங்க இருக்க?" அவள் பதில் கூறுமுன் கோகிலாவின் குரல் இடையிட்டது.

"அச்சோ அம்மா" பதறி அவள் எழ, பயத்தில் உடல் உதறியது.

"ஏய் இப்ப தான திருட்டு லவ் பண்ணணும்னு சொன்ன?" அவள் கையை பிடித்துகொண்டான்.

"ஐயோ சிவா! அம்மா... விடு"
உண்மையில் இத்தனை பதட்டமாக இருக்கும் என அவள் நினைத்திருக்கவில்லை.

"ம்ம்ம்... ஒன் கண்டிஷன்" விடாகண்டனாக பிடித்து கொண்டான். "நான் இப்ப ரெண்டு தரம் கிஸ் பண்ணேன்ல நீ ரிடர்ன் ஒண்ணாவது குடு. போகலாம்".

திகைப்பில் ஆவென வாய் பிளந்தாள்.

"அன்னம்"

"ம்மா... வரேன்"

குரல் கொடுத்து விட்டு கையை அவனிடமிருந்து மீட்க போராடினாள். அவன் முகத்தில் குறம்பு கொப்பளித்தது.

"சிவா விடு ப்ளீஸ்"

"நீ கிஸ் குடுத்துட்டு போ ஜானு. நானா வேண்டாம்கிறேன்"

"அச்சோ... அது முடியாது.." வாய் திக்கி திணறியது, முகம் சூடேறியது.

"லவ் ப்ரபோஸல் ரென்யு பண்ணியாச்சு. மத்ததெல்லாம்?"

"மத்ததா?" பேய் முழி முழித்தாள், இதயம் திக் திக் என அடித்துகொண்டது.

நமுட்டு சிரிப்பு சிரித்து,
"அதான் ஜானு மணிக்கணக்கா பேசறது, வருங்காலத்தை பத்தி டிஸ்கஸ் பண்றது, நம்ம கேரியர் பத்தி, எப்ப கல்யாணம் இதெல்லாம்."

"ஓஓஓ..." என ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

"ஆமா நீ என்ன நினைச்ச?" அப்போது தான் அவள் எண்ணவோட்டம் புரிந்தாற்
போல முகமாற்றம் காட்டி
"ஐயோ ஜானு! ரொம்ப கெட்ட பொண்ணு டா நீ" போலியாக திகைப்பை காட்ட, அவள் கூச்சத்தில் சிவந்து போனாள்.


" நான் ஒண்ணு பண்றேன் நேர அத்தைகிட்ட வந்து உங்க பொண்ணை எனக்கு கட்டிவைங்கன்னு கேக்கறேன். அப்புறம் எப்ப வேணா..."

"ஏன்டா கல்யாணம் கல்யாணம்னு படுத்துற?"


"அன்னம்! வரியா நான் மேல வரட்டா?" கோகிலா மீண்டும் அழைத்தார்.

"சீக்கிரம் சொல்லு. அத்தை வந்திருவாங்க" அவளை மேலும் உசுப்பேற்றினான்.

"அச்சோ படுத்தறான்" அந்த பதட்டமும், பரிதவிப்பும் ஒருபக்கம் சுகமாக தான் இருந்தது, திருட்டுதனமாய் உள்ளுக்குள் சிரித்து கொண்டாள். "ஓகே".

"இந்த ஏமாத்து வேலையெல்லாம் வேணாம். ஒழுங்கா நான் சொன்னமாதிரி சொல்லு." அவள் யோசிக்க, "நான் சொல்ற மாதிரி லவ் ஆஸ்பெக்ட்ஸ் எல்லாம் தவறாம follow பண்ணுவேன்னு சொல்லிட்டு கிளம்பு".

"சரி, நீ சொல்ற எல்லாத்தையும் பண்றேன். ஓகே? இப்ப விடு சிவா ப்ளீஸ்!" பரிதாபமாக கெஞ்சினாள்.

"சரி போ! மக்கு பொண்டாட்டி" சிரித்தபடி அவள் கையை விடுத்தான். அவள் சில வினாடிகள் திகைத்து அவனை பார்த்திருந்துவிட்டு படியிறங்கி ஓடினாள்.

✴✴✴

காலையில் இருந்த மனநிலைக்கு நேர்மாராக இருந்தது அலுவலகத்திற்கு கிளம்பவேண்டிய நேரமானதும்
விஷ்வா அர்ஜுன் இருவருக்கும்.

சைட்டை வந்தடைந்ததும் தன்னை அழைக்க சொல்லி கூறியிருந்தார் மூர்த்தி.

"சித்தப்பா சொல்லுங்க எதுக்கு போன் பண்ண சொன்னீங்க?"

"அங்க சைட்ல நான் சொல்ற அடையாளங்களோட ஆளுங்க இருக்காங்கறான்னு பாரு". அவன் கண்களை சுழலவிட்டான். அவர் கூறிய ஆட்களை அடையாளம் கண்டுகொண்டான். "மப்டியில் இருக்குற ஆபிஸர்ஸ். இன்னைக்கு எப்படியும் கேஸ் க்ளோஸாயிடும். அவனை நெருங்கிட்டோம், ஆளு யாருன்னு இன்னும் அடையாளம் தெரியலை. அவன் உங்க கம்பெனியில தான் இருக்கணும்னு யூகம் இல்லைனா ஈஸியா எல்லா டாக்குமெண்ட்ஸ், மெட்டீரியல்ஸ் இதெல்லாம் ஆக்ஸெஸ் பண்ணமுடியாது. கவனமா இரு."
மூரத்தி இணைப்பை துண்டிக்க, யோசனையில் ஆழ்ந்தான்.

"விஷ்வநாத்" பிரகாஷ் அழைத்ததும் யோசனையிலிருந்து மீண்டான்.

"எனி இன்ஃபோ?"
அவனிடம் விவரத்தை பகிர்ந்தான் விஷ்வா. அவன் யாரையோ அழைத்து, இந்த மால் கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் தங்கள் அலுவலகத்து ஆட்கள் பற்றி விசாரிக்கும்படி உத்தரவிட்டான்.

"எல்லாரோட background enquiry முடிஞ்சபிறகு தான் வேலைக்கு சேர்ப்போம். பை சான்ஸ் எதுவும் மிஸ் ஆகியிருந்தா, அதான்.." தன்னிலை விளக்கம் அளித்தான்.


நேரம் நகர்ந்தது. விசாரணை, கோப்புகள் ஆய்வு என தொடர, அவர்கள் அலுவலகத்திலும் ஆய்வு நடந்து கொண்டிருந்த தகவல் வந்தது. ஸ்டீபன் சோர்ந்துபோன முகத்துடன் தாமதமாக வந்து சேர்ந்தான்.
அவனை கண்டதும் அர்ஜுன் அவனை ஆர தழுவி கொண்டான். கல்லூரி காலத்து நண்பர்கள் இருவரும் தற்செயலாக ஒரே இடத்தில் வேலை கிடைத்தது.

"எல்லாம் ஓகே தானடா மச்சான்?"

"ஓகே டா!"

விஷ்வா தண்ணீர் பாட்டிலை நீட்டினான். தண்ணீர் குடித்துவிட்டு ஆயாசமாக கண்மூடி சுவற்றில் தலையை சாய்த்து நின்றான் ஸ்டீபன்.

"க்ரிஸ்டல் வீட்டுல ஆல்மோஸ்ட் கல்யாணத்தை நிறுத்துற முடிவுக்கு வந்துட்டாங்க".

அதிர்ந்தனர் விஷ்வாவும் அர்ஜுனும். அந்த மாதம் இறுதியில் திருமணம் ஸ்டீபனுக்கும் கிரிஸ்டலுக்கும். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்த திருமணம் தான். க்ரிஸ்டலின் தந்தை ஒரு முன்னாள் மத்திய அமைச்சரின் செயலாளர். அவர்கள் சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு உள்ளவர். ஸ்டீபன் தந்தை தீயணைப்பு துறையில் மீட்பு பணியில் இருந்தபோது இறந்துவிட்டார். அவருக்கு வரவேண்டிய நஷ்ட ஈடு மற்றும் பென்ஷன் கிடைக்க தாமதமாக கிரிஸ்டலின் தந்தை உதவினார். அப்போது அவனை மிகவும் பிடித்து போய் அவரே வீடேறி வந்து தம் மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார்.

"என்னடா சொல்ற?" அர்ஜுன் தவித்தான் நண்பனுக்காக.

ஏனெனில் நிச்சயமாகி ஒரு வருடம் அவளது எம்.பி.ஏ படிப்பு முடிய காத்திருந்த நேரத்தில் இருவரும் காதலிக்க தொடங்கியிருந்தனர்.

கண்ணை திறந்தான் ஸ்டீபன், கண்ணீர் பளபளத்தது, "க்ரிஸி என்னை தவிர வேற யாரையும் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிடுச்சு. நான் மேஜர் நானா வீட்டை விட்டு போய் மேரேஜ் பண்ணாலும் உங்களால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்லி நேத்து நைட்டு எங்க வீட்டுக்கு வந்துடுச்சு." அசட்டு சிரிப்பு சிரித்தான்.

"படுபாவி அதை சந்தோஷமா சொல்றதை விட்டுட்டு..." அர்ஜுன் அவன் வயிற்றில் விளையாட்டாய் குத்தினான்.

"கங்கிராட்ஸ் ஸ்டீபன்! அவங்க உன் மேல வச்சிருக்கிற அந்த நம்பிக்கையை காப்பாத்து" விஷ்வா அவனை அணைத்து வாழ்த்து தெராவித்தான்.

✴✴✴

இன்னும் சில தொழிலாளர்களை விசாரித்து கொண்டிருந்தனர். சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யபட்டன. மும்பையிலிருந்து கம்பெனி டைரக்டர் தாமோதர் வந்துவிட பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.

எல்லோரும் ஒரு இடத்தில் குழுமியிருக்க, விஷ்வாவின் கைபேசியில் அமன்தீப் அழைத்தான். சற்றே விலகி சென்று அழைப்பை ஏற்றான். முகத்தில் அப்பட்டமான பயமும் பதற்றமும் தெரிந்தது. சற்று தன்னை நிலைப் படுத்தி கொண்டு திரும்பினான்.

சற்று தள்ளி நின்ற பிரகாஷ் இவனை சைகை காட்டி அழைக்க, அவனை கூர்ந்து கவனித்தான். கைபேசியை காட்டிவிட்டு அவசரமாக மெசேஜ் ஒன்றை அவனுக்கு அனுப்பினான்.

'Arjun in danger. Culprit here in site.' அர்ஜுனுக்கு ஆபத்து, எதிரி இங்கே சைட்டில் இருப்பதாக பிரகாஷ் தகவல் அளித்தான். இதே தகவலை தான் அமன்தீப்பும் கூறியிருந்தான். காவல் துறையினர் அங்கே வருவதாகவும் கூறினான்.

மெல்ல விஷ்வா நகர்ந்து அர்ஜுனின் இடது பக்கம் நின்றுகொண்டான். அர்ஜுன் அருகே இடமில்லாது போக சற்று தள்ளி நின்று கொண்டான் பிரகாஷ். ஸ்டீபன் அர்ஜுனுக்கு வலது பக்கத்தில் முன் வரிசையில் இருந்தான்.

"மிஸ்டர் பிரகாஷ்" அரசு அதிகாரி ஒருவர் அவனை அழைக்க அவர் அருகே சென்றான். ஏதோ கோப்புகளை காட்டி அவர் விளக்கம் கேட்டு கொண்டிருந்தார். விஷ்வா கண்களை சுழலவிட்டபடி இருந்தான், பிரகாஷின் இடத்தில் அவனது உதவியாளர், மெய்காப்பாளன் என எல்லாமாகவும் செயல்படும் மணி நகர்ந்து நின்றான். விஷ்வாவிற்கு பார்வையாலேயே உறுதி அளித்துவிட்டு அர்ஜுன் மீது கவனமாய் இருந்தான்.

பிரகாஷிடம் பேசிகொண்டிருந்த அதிகாரி திடீரென்று உரக்க கத்தினார் அதில் அனைவரது கவனமும் கலைந்தது. பிரகாஷ் அளித்த விளக்கத்தை ஏற்காமல் அவர் கூச்சலிட்டார்.

சட்டென யாரோ மெல்ல நகருவது போல விஷ்வாவிற்கு தோன்ற. அர்ஜுன் நின்றிருந்த இடத்திலிருந்து சமீபத்தில் ஒருவன் மெல்ல அசைவது தெரிந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது - கூச்சல், குழப்பம், அடி, அலறல் என சில நிமிடங்கள் கரைய. விஷ்வா சுதாரித்து தன்னிலை பெற்றதும் அர்ஜுனை தேடியது அவன் கண்கள், அவன் பாதுகாப்பாய் இருப்பதை உணர்ந்தான்.

அர்ஜுனுக்கு சமீபத்தில் நின்றிருந்த ஒரு ஆள் கத்தி எடுத்து ஓங்குவதை பார்த்த ஸ்டீபன் அவன் பின்னங்காலில் உதை விட, அவன் தடுமாறி விழுந்தான். அதேநேரம் விஷ்வாவும் கவனித்துவிட அர்ஜுனை இழுத்து தனக்கு மறுபக்கம் தள்ளி தாக்குதலை தடுக்க வலது கையை உயர்த்தினான்.
பின் பாய்ந்து அவனை அடித்து, உதைத்து ஸ்டீபனும் விஷ்வாவும் அவனை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். அர்ஜுனை அவன் இழுத்து தள்ளிய வேகத்தில் அவன் கீழே விழ தலை தரையில் மோதியது. காயம் இல்லை எனினும் விண்ணென்று வலி தெரித்தது. நடப்பது எதுவும் புரியாமல் அஙகிருந்தோர் திகைத்து நின்றனர்.

சட்டென்று இன்னும் ஒன்று இரண்டு பேர் தைரியமாக முன் வந்து கத்தியை அவன் கையிலிருந்து பிடுங்கி, அவன் கையை மடக்கி பிடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

"விச்சு" அலறியடித்து ஓடிவந்தான் அர்ஜுன். "என்னடா பண்ணிவச்சிருக்க?"

அர்ஜுன் அழதொடங்கியதும் புரியாமல் விழித்தான் விஷ்வா. அனைவரும் வினோதமாக பார்க்க, அப்போது தான் கையில் வலியை உணர்ந்தான் விஷ்வா. வலது கரத்தில் தோள்பட்டைக்கு கீழே புஜத்தில் சட்டை கிழிந்திருக்க, கத்தியால் குத்துபட்டிருந்தான் விஷ்வா. ரத்தம் வேகமாக கசிந்து ஆகாய நீல சட்டை நிறம் மாற நொடங்கியது. ஸ்டிபன் பின்னிருந்து அவனை உதைத்த தருணம் அவன்
தடுமாறினாலும் முனைந்து கத்தியை ஆவேசமாக பிரயோகித்ததில் விஷ்வாவின் கையை கத்தி பதம் பாரத்திருந்தது.

"ஷிட்"
ஒண்ணுமில்லை என்று அர்ஜுனுக்கு ஆறுதல் கூறுவதற்குள் மெல்ல கண்கள் இருட்ட தொடங்கியது விஷ்வாவிற்கு.

அவனை தாக்கியவன் பித்து பிடித்தவன் போல சிரித்தான்.
"அர்ஜுன் உன்னை கொன்னுட்டு உங்கப்பனை அழ வைக்கணும்னு நினைச்சேன். பரவாயில்லை அண்ணன் புள்ள செத்தாலும் அவன் அழுவான் இல்லை? சாம்பமூர்த்தி நேர்மைக்கு விலையா உன் அண்ணன் மகன் உசிரு" மீண்டும் பலமாக சிரித்தான். அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்தனர்.


"மணி, ஆம்புலனஸ்" பிரகாஷ் கத்த, அதற்குள் யாரோ ஒருவர் முதலுதவி பெட்டியோடு வந்து அவசரமாக விஷ்வாவின் சட்டை கை பகுதியை கிழித்து எறிந்து முதலுதவி செய்தார்.

"சார் ஹெவி ப்ளட் லாஸ். ஹ்ஸ்பிடல் போகணும் உடனே" அரசு அதிகாரிகளை நோக்கி உரைத்தான் அவன்.


"கால் பண்ணிட்டேன் பிரகாஷ் சார். ஆனா வெய்ட் பண்ண வேண்டாம்னு தோணுது..." மணி துரிதபடுத்தினான்.

அவர்கள் பேசும்போதே மீண்டும் அர்ஜுன் அலறினான். "விச்சு" மயக்கத்தில் கண்கள் சொருக தள்ளாடினான் விஷ்வா. அவசரமாக அவனை தாங்கிபிடித்தபடி தரையில் உட்கார்ந்தான்.

"ஜானு..." உதடுகள் முணுமுணுக்க கண்ணோரம் கண்ணீர் கசிந்தோட
மெல்ல கண்மூடி மயங்கி அர்ஜுன் மடியில் சரிந்தான் விஷ்வா. சிலையாய் சமைந்தான் அர்ஜுன்.  

"அர்ஜுன் கமான் எழுந்திரு. டோண்ட் வேஸ்ட் டைம்". பிரகாஷ் துரிதப்படுத்த, மணி இன்னும் சிலர் விஷ்வாவை தூக்கினர்.


தாமோதர் தாம் பின்னால் வேறு வண்டியில் வருவதாக கூறினார். பிரகாஷ் கார் அருகே சென்றதும்,

"மணி" சாவியை அவனிடம் கொடுத்து,  "பிரேக் ஆல் தி சிக்னல்ஸ். எதை பத்தியும் கவலை படாத நான் பாத்துக்கறேன். அர்ஜுன் அவன் கையை ஹார்ட் லெவலுக்கு மேல தூக்கிபிடி."

அவனை பின்னிருக்கையில் கிடத்தி அவனருகே அர்ஜுன் அமர்ந்துகொண்டான். கார் உண்மையிலேயே சீறி பாய்ந்தது.

விஷ்வாவின் புஜத்தில் ரத்தம் நிற்காமல், தற்காலிகமாக போடப்பட்ட பேண்டேஜை மீறி கசிந்து கொண்டிருந்தது. அர்ஜுனுக்குள் ஒரு பிரளயமே வெடித்து எல்லாம் இருண்டது போல தோன்றியது.  







Bạn đang đọc truyện trên: Truyen247.Pro