பாகம் 25
அர்ஜுன், விஷ்வா இருவரின் வீட்டின் பின்கட்டில் இருந்த சிறிதளவு இடத்தில் பூச்செடிகள், துளசி என தோட்டம் அமைத்திருந்தார் யமுனா. அடர்ந்து வளர்ந்த மல்லிகை பூ செடியிலிருந்து புறப்பட்ட வாசமும், மங்கிய விளக்கொளியும் ஒருவித ஏகாந்தத்தை ஏற்படுத்த, காதல் மனதை வெளிப்படுத்த எண்ணி விஷ்வா பூரணி இருவரும் சந்தித்து கொண்டாலும் தயக்கமும் நாணமும் தடுத்தது.
அலைபாயும் மனதும், உள்ளத்தின் உவகையும், சிறு பதட்டமும் போட்டி போட்டு ஆட்டுவித்து கொண்டிருந்தது அவர்களை. ஆனால் பெரியவர்களுக்கு போக்கு காட்டிவிட்டு வந்திருந்த காரணம் மறக்கவில்லை, அதிக நேரம் எடுத்து கொள்ளமுடியாது என்பது நிதர்சனம்.
"பூரணி.."
"விஷ்வா"
இருவரும் ஒரே நேரத்தில் பேசதொடங்கி, நிறுத்தினர். அவன் அவளை மேலே தொடருமாறு சைகை காட்டினான்.
"நான்... எனக்கு..." எச்சில் கூட்டி விழுங்கினாள்.
"என்னோட பிரச்சினை தெரிஞ்சும் என்னை ஏன் விரும்புற விஷ்வா? இதனால நானும் என்னோட பேரண்ட்ஸும் படுற அவஸ்தை நிறைய... உனக்கு எதுக்கு அந்த தலையெழுத்து?"
அவனிடம் இறைஞ்சுதலாக கேள்வி கேட்டுவிட்டு அவன் முகம் நோக்கி காத்திருந்தாள் பதிலுக்காக.
சுவற்றில் சாய்ந்து, மார்பின் குறுக்கே கைகட்டி நின்றிருந்தான். எதிர் பக்க சுவற்றில் சாய்ந்தபடி அவள், துப்பட்டாவின் ஓரத்தை கையில் திருகியபடி படபடப்பாக. சற்று நேரம் அமைதி நிலவியது.
"தலையெழுத்துக்கு இங்க்லீஷ்ல fate தான?"
ஆமோதிப்பாய் தலையை ஆட்டினாள்.
"Fate இதுக்கு வேற வார்த்தை இருக்கா இங்க்லீஷ்ல?"
அவள் கேள்வியோடு அவனை நோக்க,
"சும்மா சொல்லு"
சற்று யோசித்து,
"ம்ம்ம்.. destiny, providence.."
இந்த பேச்சுவார்த்தை செல்லும் திசை எது என விளங்கவில்லை பூரணிக்கு.
"Fate னு சொல்லும்போது தலையெழுத்துன்னு நெகட்டிவா தோணும். அதே நேரம் Destiny, providence அப்படீன்னு சொல்லும் போது இயற்கையால் அல்லது இறைவனால் நிர்ணயிக்கப்பட்டது அப்படீங்கற அர்த்தம் ஆகுது இல்லையா?" அவள் குழப்பத்தோடு தலையசைக்க,
"நீ உன் பேரண்ட்ஸை ஏன் மதிக்கிற நேசிக்கிறன்னு சொல்ல முடியுமா?"
"அது எப்படி ஒரு குறிப்பிட்ட காரணத்தை சொல்ல முடியும்? பல காரணங்கள் இருக்கு. அது இயற்கையா பெத்தவங்க மேல வர்ற அன்பு, பாசம்..."
"எனக்கும் உன் மேல அதே மாதிரி தான் டா... ஏன் எதுக்குன்னு சொல்ல முடியாது. சின்ன வயசுலேந்து உன்னை ரொமப் பிடிக்கும். மத்தவங்களை மாதிரி உன்னை ட்ரீட் பண்ண கூடாதுன்னும் நீ ஸ்பெஷல்ன்னும் உள் மனசு சொல்லும் ஆனா ஏன் என்னன்னு புரியலை. நீ அர்ஜுன் கூட பேசினா கூட கோவமா வரும் பொறாமையா இருக்கும். உன்னை யாருக்கும் விட்டு குடுக்க கூடாதுன்னு ஒரு பிடிவாதம் மனசுல. அந்த வயசுல ஏற்பட்டதை, புற அழகை பார்த்து ஏற்பட்டதுன்னோ, இனக்கவர்ச்சினோ கூட சொல்லமுடியாது. அதெல்லாம் புரியாத வயசுல ஏற்பட்டது இந்த அன்பு. குறிப்பிட்ட காரணம் காட்டினா என்னோட காதல் அந்த காரணத்தோட முடிஞ்சிடும்."
பழைய நினைவுகள் மனதில் அலைமோத லேசாக சிரித்து கொண்டான். பூரணி ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தாள் அவனை.
"நீ வெளிய தைரியமா சண்டை போடுவ, ஆனா சுகந்திகூட இல்ல அர்ஜுன்கூட சண்டை வந்தா என்கிட்ட ஓடிவந்து அழுவ அப்ப உன்னை சமாதானம் பண்ணிட்டு நான் வீட்டுக்கு போய் அழுவேன். உன்னை அழவிடாம பாத்துக்கணும்னு அப்பவே தோணும், அர்ஜுனை மிரட்டியிருக்கேன் நிறைய நேரம் உன்னை அழவைச்சதுக்கு. அப்ப இது எதுவும் புரியலை, டீன் ஏஜ்ல புரிஞ்சது. ஆனா நீ என்னை விட சின்ன பொண்ணு என் எண்ணம் தப்புன்னு விலகினேன். ஆனா உன் மேல இருந்த அன்பு மாறலை, மாத்திக்க முடியலை. அப்படி மனசுல வேரூன்றி இருந்தது அன்பு. நீ வேருன்றி இருந்த, இருக்க, எப்பவும் இருப்ப.
ஒரு கட்டத்துல எனக்கு தெளிவாக புரிஞ்சுது நீ தான் என்னோட destiny, என்னோட வாழ்க்கை துணை, my providence... இது கடவுள் நிர்ணயிச்சது. ஏன்னா நீ இருக்குற இடத்துல வேற ஒருத்திய என்னால யோசிச்சுகூட பாக்க முடியலை. உன்னை நேசிச்ச மனசு வேற யாரையும் நினைக்க கூட மறுக்குது."
தான் அவனிடம் சொல்ல வேண்டிய உண்மையை இதற்கு மேலும் தள்ளிபோட முடியாது என தீர்மானித்தாள் பூரணி. அவனின் அந்த தூய அன்பிற்கு தான் தகுதியானவளா என்ற கேள்வி அவளை ஆட்டுவித்தது. உண்மையை சொன்னால் என்ன செய்வான் என்ற பயமும், தன்னை வெறுத்துவிடுவானோ என்ற எண்ணமும் அவளை வதைத்தது.
"ஒரு முக்கியமான விஷயம் உனக்கு தெரியணும். என் மெமரி லாஸ் ஏற்பட்டது... ஆக்ஸிடெண்டால இல்லை" தயக்கத்தில் அவள் பார்வையை தவிர்க்க, உண்மை அவளுக்கு எப்படி தெரியும் என அதிர்ந்து நின்றான் விஷ்வா.
"அப்பாவுக்கு பிஸினஸ்ல பிரச்சினை பண்ணின ஆளு... என்.. என்கிட்ட... பலவந்தமா... அப்பா அவனை அடிச்சு துரத்திட்டாங்க ஆனா திரும்ப வந்து என் தலையில் அடிச்சு காயப்படுத்திட்டான். அதுல தான்... அந்த சம்பவத்துக்கு பிறகு ஆண்கள்னா ஒரு பயம், பதட்டம் இதெல்லாம் இருந்தது. மெமரி லாஸுக்கு தெரப்பி எடுக்கும்போது இதையும் சேர்த்து டிரீட் பண்ணாங்க. ஒரு பெண்ணுக்கு... "
"அதனால நீ உன்னை களங்கபட்டவளா கன்ஸிடர் பண்றியா?" அவன் குரலில் சற்று கடுமை. "பதில் சொல்லு மா."
அவள் முகமே அப்படி தான் உணர்கிறாள் என்பதை தெளிவாக்கியது.
"அவன் உன்னை தொட்டதனால நீ களங்கபட்டதா ஆயிடுமா? ஒரு பொண்ணை கெட்ட எண்ணத்தோடு நெருங்குற அவன் களங்கபட்டவனா இல்லை மானத்தை காப்பாத்த போராடுற ஒரு பொண்ணு களங்கபட்டவளா? இதை உனக்காக சொல்றேன்னு நினைக்காத, இது என்னோட பொதுவான கருத்து. பாரதியாரை பிடிக்கும்னு ஸ்டேடஸ் மட்டும் போடுற கட்சியா எப்ப மாறின பூரணி?"
சாட்டையடி விழுந்தாற்போல துடித்தாள்.
"கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,
இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்,
இதை மறந்துபோய்ட்டியா? இல்லை இதெல்லாம் உன்னை பொறுத்தவரை வெறும் பிரசங்கம் தானா?"
அவளை ஆழ்ந்து நோக்கினான், அவர்கள் பார்வை கலந்தது, பேச இயலாமல் இருவரும் உறைந்து நின்றனர். பூரணியின் மனதை முழுதும் அவன் ஆக்கிரமித்து விட்டிருந்தான், அவன் சொற்கள், அவன் அன்பு ஏற்படுத்திய தாக்கம் அவள் கன்னங்களில் கண்ணீராய் வெளிப்பட்டது. ஆழ்ந்து மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திகொண்டான் விஷ்வா.
"உன்னோட மெமரி லாஸ், ட்ரீட்மெண்ட் இதெல்லாம் ஒரு பிரச்சினையா, பாரமா நினைச்சிருந்தா நான் உனக்காக இத்தனை வருஷம் காத்துகிட்டு இருந்திருக்க மாட்டேன் பூரணி. யார் வாழ்க்கையில தான் ப்ராப்ளம் இல்லை? நீ என்னை விரும்பணும்னு கட்டாயம் இல்லை. நான் உன்னை வற்புறுத்த மாட்டேன். உன்னை மறுபடியும் தொந்தரவும் பண்ண மாட்டேன். ஆனா என் அன்பை நிராகரிக்க இல்லாத ஒரு காரணத்தை தேடாத."
தான் இருந்த நிலையிலிருந்து விலகி, "யோசிச்சு பதில் சொல்லு அவசரம் இல்லை." மீண்டும் அர்ஜுன் வீட்டினுள் நுழைய அவன் திரும்பி நடக்கத் தொடங்கினான்.
அவளுக்கு அடிக்கடி வரும் அந்த கனவு கண்முன் விரிந்தது, மாயத்திரை விலகி மெல்ல அவன் முகம் தெளிவாக புலப்பட்டது. தான் தேடியது இத்தனை காலமும் இவனை தான் என்பதை உணர்ந்தாள். கனவில் அவன் உதிர்க்கும் வார்த்தைகள் காதில் எதிரொலித்தது.
'உன் மனசுக்கு உண்மை தெரியும், அதை ஏத்துக்குற பக்குவம் உனக்கு வந்தா தன்னால தெளிவாகும்'
விட்டு போகணும்னு இருந்தா இத்தனை வருஷம் காத்துட்டு இருந்திருக்க மாட்டேன்'.
"சிவா..." லேசான விசும்பலுடன் மிக சன்னமான குரலில் பூரணி அழைத்ததும், அதிர்ந்து திரும்பி அவள் அருகில் வந்தான்.
அவன் முகத்தில் ஆச்சரியம், சந்தோஷம் என கலவையான உணர்ச்சிகள், "என்ன? இப்ப என்ன சொன்ன?" அவன் விழிகள் பரதவித்து அவள் முகத்தில் ஞாபகங்கள் மீண்டதற்கான அடையாளத்தை தேடி தவித்தது, கண்களில் கண்ணீர் பெருகியது.
"சொல்லு" கெஞ்சலாய் வெளிப்பட்டது அவன் குரல். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, இத்தனை தவிப்பிற்கு பிறகு அவள் தன்னை ஆசையாய் முன்பு போல அழைத்ததும் அவன் முற்றிலும் உடைந்து போனான்.
"சிவா..." உணர்ச்சி பிழம்பாய் தத்தளித்தாள் பூரணி. தன் வாழ்க்கையின் புதிருக்கு விடை இதோ அவள் எதிரில். இத்தனை காலமும் பிரிந்து, தவித்து, தேடியது இவனை தான்.
"ப்ளீஸ்... இன்னொரு தரம் சொல்லு டா" ஆனந்தம் கரைபுரள, அவனுள் நிம்மதியும், பரவசமும், காதலும் போட்டி போட கால்கள் தள்ளாடின.
"சிவா.."
தரையில் முழங்காலிட்டு சரிந்து அமர்ந்தான், முகத்தை கைகளால் மூடி குழந்தை போல விம்மினான். எத்தனை வருட காத்திருப்பு? எத்தனை நாட்களின் பிரிவு, ஏக்கம், தனிமை, வலி, பயம்? அவளின் அந்த ஒற்றை சொல் கொடுத்த நம்பிக்கையில் மனதின் பாரம் நீங்க, ஓசைபடாமல் அழுது கரைந்தான்.
அவளும் அவன் எதிரே அமர்ந்து கொண்டாள்.
அவன் தோளில் அவளது தொடுகையை உணர்ந்து மெல்ல நிமிர்ந்தான். அவளை அணைத்துக்கொள்ள கரங்கள் துடிக்க, தன்னை கட்டுபடுத்தி கொண்டான். மெல்ல கைநீட்டி அவன் கன்னம் வருடினாள் பூரணி, நீண்ட பெருமூச்செறிந்து அவளது கரத்தை தன் கன்னத்தோடு அழுத்தி கொண்டான் கனவோ என்ற பயத்தில்.
"இப்ப கேளு நீ காலைல கேட்டதை.." கண்ணில் கண்ணீர் பளபளக்க, புன்சிரிப்போடு அவனை நோக்கினாள் பூரணி.
அழுகையை கட்டுபடுத்தி கொண்டு, குரல் தாழ்த்தி,
"நான் காலைல பாக்கற முதல் முகம் உன்னோடதாவும், தூங்கறதுக்கு முன்ன நான் பாக்கற கடைசி முகம் உன்னோடதாவும் இருக்கணும், என்னைக்கும், எப்பவும், ஆயுள் முழுசும், நடக்குமா செல்லம்மா? எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா?"
"அது உன்னோட உரிமை... உனக்கு மட்டுமான உரிமை".
இருவரின் முகங்களும் புன்னகையில் விரிந்தது.
அவன் கைகைளைப் பற்றி அவனிடம் சற்று நெருங்கினாள் "சின்ன வயசுலேந்து ஆறு வருஷம் முன்ன வரை, உன்னோட நான் கடந்து வந்த தருணம் எல்லாம் மறந்துபோச்சு. அப்ப உன்னை நேசிச்சேனான்னு தெரியலை ஆனா, இப்ப உன்னை நேசிக்கிறேன். மனப்பூர்வமா நேசிக்கிறேன். இதுவரைக்கும் கல்யாணம்னு எல்லாரும் சொல்லும்போது நீ சொல்ற மாதிரி தான் எனக்கும் கணவன்கிற இடத்துல யாரையும் நினைக்க பிடிக்கலை அதனால வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தேன். இதை வெளிப்படையா சொல்ல முடியாம பல காரணம் சொல்லிட்டு இருந்தேன். ஆனா..." நாணத்தில் தலை கவிழ..
அவன் தலை சரித்து அவள் முகம் பார்க்க முனைந்தான்.
"ஆனா என்ன? சொல்லு டா"
நிமிர்ந்து அவன் முகம் நோக்கினாள்.
"உன்னோட சேர்ந்து வாழணும் சிவா, வாழ்க்கையோட எல்லா அனுபவங்களையும் உன்னோட சேர்ந்து சந்திக்கணும், நிறைய நினைவுகளை சேகரிச்சுக்கணும். உன் காதல் மொத்தம் எனக்கே எனக்கா, என்னோட காதல் உனக்கு மட்டும்னு வாழணும். நடக்குமா?"
அவன் எதிர்பாராதவிதம் அவளின் பதில் கிடைத்துவிட, சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தான் விஷ்வா.
அவள் கைவிரல்களில் முத்தமிட்டு, அவள் நெற்றியோடு நெற்றி ஒட்டி,
"என் செல்லம்மா, என் ஜானு, என் உசிரு டி நீ... என் தேவதை..."
இருவருக்குள்ளும் ஒரு சிலிர்ப்பு ஓடி பரவியது. இருவருக்கும் மனதில் ஒரு நிறைவு, வாழ்க்கை முழுமை பெற்றாற் போல ஒரு பேரின்பம்.
அவள் முகத்தை தன் இரு கைகளில் ஏந்தினான், மெல்லிய குரலில் பாடத்தொடங்கினான்.
"பாயு மொளி நீ யெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு,
வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!"
இருவரின் கன்னங்களிலும் கண்ணீர் தடம் பதித்திருக்க, வார்த்தையால் விவரிக்க முடியாத அளவு ஆனந்தத்தை உணர்ந்தனர்.
அந்த மோனத்தை கலைக்கும் விதமாக விஷ்வாவின் கைபேசி சத்தமில்லாமல் அதிர்ந்து அடங்கியது. இயல்புக்கு மீண்டனர் இருவரும்.
"ஷர்மிளா தான். வா போகலாம்."
கைபேசியை பேண்ட் பாக்கெட்டில் வைத்தான், இருவரும் அர்ஜுன் வீட்டினுள் காத்திருக்கும் பட்டாளத்தை சந்திக்க சென்றனர். ஷர்மிளா மிக பாடுபட்டு தன் தம்பி, தங்கை, கார்த்தி மூவரையும் வீட்டில் விட்டுவிட்டு பெற்றோரிடம் அனுமதி வாங்கி அர்ஜுன் வீட்டில் படம் பார்க்க போவதாக சொல்லிவிட்டு இருவருக்கும் பேச தனிமை ஏற்படுத்தி கொடுத்திருந்தாள்.
பின்கட்டு கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தனர் விஷ்வாவும் பூரணியும், இருவரின் முகத்தில் படர்ந்த வெட்கம் கலந்த புன்னகையும், அவர்கள் மெலிதாய் விரல் கோர்த்து நடந்துவந்த விதமும் நண்பர்கள் பட்டாளாத்திற்கு அனைத்தையும் உரைத்துவிட ஷம்மு அந்த தருணத்தை கைபேசியில் பதிந்து கொண்டாள். அவர்கள் இருவரையும் அணைத்து வாழ்த்து சொல்லி குதூகலித்தனர்.
"அர்ஜுன்" வாயில் கதவு தட்டபடும் ஓசை.
"வந்துருவாரு எம்டன். கழுகுக்கு மூக்குல வேர்த்த மாதிரி எப்படி தான் கண்டுபிடிப்பாரோ?" புலம்பியபடி கதவை திறந்தான். ஏற்கனவே பேசி வைத்தாற் போல அனைவரும் முன்பே பார்த்த ஒரு ஆங்கில படத்தை அர்ஜுன் அறையில் இருந்த டிவியில் மிக தீவிரமாக பார்ப்பது போல நடித்தனர்.
"அடடா எப்ப பாரு அடிக்கிறதும் உதைக்கிறதும்... என்னடா அந்த படத்துல அப்படி இருக்குன்னு பாக்குறீங்க?"
புலம்பியபடி உள்ளே வந்தார் யமுனா. பூரணி சுகந்தி ஷர்மிளா மூவரும் படுக்கையில் அமர்ந்திருக்க, விஷ்வாவும் அர்ஜுனும் நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள்.
"ஆன்டி இது சூப்பர் ஹீரோ படம், அவரு தான் சூப்பர் ஹீரோ" ஷம்மு விளக்கினாள்.
"எங்க காலத்துல கறுப்பு டிரெஸ் போட்டவனை தான் வில்லன்னு அடையாளம் சொல்லுவோம்."
"ஐயோ மா, இது ப்ளாக் பான்தர், மா அவன் தான் ஹீரோ. படுத்தாத!" அவரது வெகுளிதனத்தில் அனைவரும் சிரித்தனர்.
"பாப்கார்ன் வேற? எப்படி சாப்பாடு சாப்பிட்டபிறகும் இதெல்லாம் இறங்குது உங்களுக்கு?"
பீரோவில் எதையோ எடுத்தவாறு அவர் சலித்து கொள்ள,
"பெரிய அம்மு உங்களுக்கு வயசாச்சு கொலஸ்டாரல் இருக்கு சாப்பிட முடியலைன்னு எங்களை கண்ணு வைக்காதீங்க. நாங்க வளருர பசங்க, அப்படி தான்.." பூரணி வழக்கம் போல் நக்கலடித்ததும் அவரும் விடாப்பிடியாக வாயை வளர்த்தார்.
"எங்கடா இந்த மங்கம்மா வாயை தொறக்கலையேன்னு பாத்தேன். எனக்கு கொழுப்புனு சொல்லாம சொல்றியா டி கழுதை. வா இங்க" கட்டில் ஓரமாக உட்காரந்திருந்த அவள் காதை பிடித்து திருக
"ஆ ஆ... அம்மு வலிக்குது விடுங்க. சரி ஸாரி உங்களுக்கு கொலஸ்ட்ரால் இல்லை போதுமா?" அவர் அப்பொழுதும் விடுவதாய் இல்லை.
"அன்னம்..." கோகிலா உள்ளே வந்தார் "என்ன அண்ணிகிட்ட வாயை குடுத்து மாட்டிகிட்டியா?" மகளின் நிலையை பார்த்து அவர் சிரித்தார். மற்ற அனைவருக்கும் இந்த நாடகங்கள் பழக்கமாதலால் சிரித்தபடி வேடிக்கை பார்த்திருந்தனர்.
"பெரிய அம்மு ப்ளீஸ் விடுங்க நெஜமா வலிக்கிது..."
"ம்ம்... பொழைச்சு போ கழுதை!"
பரந்தாமன் உள்ளே வந்து அழைத்தார், அவர்கள் வீட்டிற்கு புறப்பபட்டனர்.
"பரமு காலைல ஆளுங்க வந்திருவாங்க, ஒண்ணும் கவலை படாத. அமர்நாத் கம்பெனி ஆளுதான். அவங்களே நல்லவிதமா சாமானெல்லாம் ஏத்தி இங்க இறக்கி வச்சிருவாங்க. நல்லபடியா நாளைக்கு காலைல வந்துருங்க."
மூர்த்தி பேசி வழியனுப்பிவைத்தார்.
அனைவரிடமும் விடைபெற்று கொண்டாள் பூரணி, தன்னவனிடம் பேச முடியாமல் தவிப்பிற்கு ஆளாக, மீண்டும் ஒரு முறை டாட்டா காட்டுவது போல் திரும்ப, எல்லோரிடமிருந்தும் விலகி பின்னால் நின்றவன் 'லவ் யூ' என வாயசைத்து பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்து அவளை வழியனுப்பினான்.
Published: 4 Feb 2022
Word count: 1473
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro