Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 24

Date: 24 Jan, 2022

தனது கணவரையும், மகனையும் சுற்றி வளைத்திருக்கும் ஆபத்தை அறியாத யமுனா மனநிறைவோடு அமர்ந்து அக்கா காவேரியிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் அருகே படுக்கையில் தனது மருமகள் சுகந்திக்கு தேர்வு செய்த நிச்சயதார்த்த புடவை, நகை அனைத்தும் இருந்தது.

"சுகந்திக்கு இந்த கலர் நல்ல எடுப்பா இருக்கும் இல்ல கா? எனக்கு இந்த கலர்ல அவளுக்கு செட்டு வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசை. சீட்டு கட்டியிருந்தேன் அது ரெண்டு மாசம் முன்னமே முடிஞ்சிடுச்சு, இதை ஆர்டர் குடுத்து செஞ்சேன்." முகம் கொள்ளா பூரிப்புடன் அவளுக்கென வாங்கிய அட்டிகையும் கம்மலையும் காட்டி பேசிக் கொண்டிருந்தார். "ஹும்.. என் பெரியவனுக்கும் இப்படி செய்யணும். எப்ப அந்த சாமியார் கல்யாணம் கட்டிக்க போறானோ?" கவலையில் அவர் முகம் வாடியது, தமக்கையை கலங்கிய விழிகளுடன் நோக்கியவர், "உனக்கு கஷ்டமா இல்லையா கா? நாங்க அர்ஜுனுக்கு முதல்ல..."

"ஏன் யமுனா நீ நம்ம புள்ளைங்களுக்கு நடுவுல பேதம் பாக்கறியா?" யமுனா மறுப்பாய் தலையசைக்க "இல்லையே? அப்ப நான் மட்டும் எப்படி பாப்பேன்? நேரம் கூடி வரும் கவலையை விடு" தங்கையை சமாதானப் படுத்தினாலும் தாயுள்ளம் அவ்வப்போது சற்று கலக்கம் கொள்ள தான் செய்தது.

"ஹாய் சித்து, ஹாய் மா" என உள்ளே நுழைந்தான் விஷ்வா அவனோடு அர்ஜுனும்.

"ஹாய் பெரிம்மா" அலுவலக பையை தோளிலிருந்து 'பொத்தென' கீழே சரியவிட்டு சோர்வாக அவர் மடியில் தலைவைத்து கட்டிலில் கால் நீட்டி படுத்தான் அர்ஜுன்.

"ஏன்யா ராஜா இன்னைக்கு இவ்ளோ சோர்வா இருக்கான்?" செல்லமாய் அவனை வெகுநாட்களுக்கு பிறகு அவர் அவ்வாறு அழைக்கவும் அர்ஜுன் அவர் கரம் பற்றி முத்தமிட, அவரும் அவன் தலைகோதியபடி மகனிடம் கேள்வியை தொடுத்தார். அவன் வேலை பளு என காரணம் சொல்லிவைத்தான். வீட்டிற்கு வரும் முன்னரே அலுவலக பிரிச்சினையை ஒதுக்கிவைப்பது என தீர்மானித்தனர்.

அவரோ புடவை தலைப்பால் அவன் முகம் துடைத்துவிட்டு, "ஏன் கண்ணு ஒரு நாலு நாளு முன்னமே லீவு எடுக்குறது? நிச்சயம் வச்சிருக்குனு சொல்லி கேட்டா ஆபிஸ்ல லீவு குடுக்கமாட்டாங்காளா?" என்றார் அப்பாவியாய்.

"அட சும்மா இரு கா நீ வேற, இவனை லீவு போட சொன்னா அவங்க கம்பெனில கூட ஒத்துக்குவாங்க, அவங்க அப்பாகிட்ட யாரு பேச்சு வாங்குறது?"

சடக்கென எழுந்து அமர்ந்தான் அர்ஜுன், அனைவரும் விழிக்க, "எம்டனை ஞாபகப்படுத்தி ஏன்மா குறைஞ்சிருந்த டென்ஷனை ஏத்திவிடுறீங்க?"
விஷ்வாவுக்கு அன்றைய நிகழ்வுகளும் அதே வார்த்தையை குறிப்பிட்டு சித்தப்பா மூர்த்தி பேசியதும் நினைவு வர வேதனையை வெளிக்காட்டாமல் சிரித்தான்.

அர்ஜுனின் பார்வை படுக்கையில் இருந்த புடவை, நகை மீது பதிய,
"என்னம்மா இது? எங்கேஜ்மெண்டுக்கா?" அதை தொட்டு பார்த்தவிட்டு, "ஆமா பூரணிக்கு வாங்கலை?"

தன்னவளின் பேரை கேட்டதும் மூத்தவனின் கவனம் கூர்மையானது.

"டேய் படவா! நீ தான உன் தொங்கச்சிக்கு பிறந்த நாளும் வருது ரெண்டுத்துக்கும் சேர்த்து சர்ப்ரைஸ் கிஃப்ட் வாங்குறதா சொன்ன? மறந்திட்டியா?" அவன் திகைத்து விழிக்க,
அவன் கன்னத்தில் இடித்து, "நினைச்சேன்! எருமை எருமை... இதுக்கு தான் சுகந்திட்ட சொல்லியிருக்கணும்.." அவர் அங்கலாய்த்தபடி கைபேசியை எடுக்க, குத்து வாங்கிய கன்னத்தை தேய்த்தபடி மறு கையால் அவர் போனை பிடுங்கினான்.

"சீரியல் அம்மா மாதிரி ஓவர் ஆக்டிங்க் குடுக்காத தாய்குலமே, உன் பொண்ணை யாரும் மறக்கலை எல்லாம் வாங்கி ஷம்ஸ் கிட்ட குடுத்தாச்சு." அவர் திட்ட வாய் திறக்கவும், கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்துவிட்டு, "பேச்சை குறை யமுனா, என்னை திட்டுறதை விட்டுட்டு, முதல்ல காபி போடு" என்று குளியலறையில் புகுந்துகொண்டான்.

"சொல்ல மறந்துட்டேன் விச்சு, ஷர்மிளா வீட்டுல எல்லாரையும் சாப்பிட கூப்பிட்டிருக்காங்க டா இன்னைக்கு நைட்டு"

"எதுக்கு? அவ எதுவும் சொல்லலியே?" குழப்பத்தோடு
வீட்டிற்கு சென்றதும் ஷர்மிளாவை அழைத்தான் விஷ்வா.
'மீசை கார நண்பா உனக்கு ரோஷம் அதிகம்டா' என அவனுக்காக அவள் செட் செய்த caller tune ஒலித்து அடங்கியது, அவள் அழைப்பை ஏற்கவில்லை. "சரியான மென்டல்" என தனக்குள்ளே சிரித்து கொண்டு தன் அறைக்கு சென்றான்.

மகனின் அறைக்கு காபி தம்ளருடன் வந்தார் காவேரி
"என்னப்பா எப்பவும் போல இல்லாம சோர்வா இருக்குற?" அவன் மறுத்து பேசவில்லை அமைதி காத்தான்.

"ஆனா அது வேலைனாலையா இல்லை வேற..."
இருக்கையில் அமர்ந்தபடி அயர்ச்சியாக கண் மூடி அவன் அமைதி காக்க, மெல்ல அவன் தலைகோதினார். "நல்லதே நடக்கும்னு நம்பு கண்ணு, எந்த குறையும் வராது".
தாயின் அரவணைப்பு சற்றே மன அமைதியை தந்தது அவனுக்கு. நிமிர்ந்து அமர்ந்த மகனின் முகத்தை வாஞ்சையாக வருடி, "என் பிள்ளைக்கும் சந்தோஷமான வாழ்க்கை அமையும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு".

தம்பியை சூழ்ந்திருக்கும் ஆபத்து கொடுத்த பயமும், பூரணியுடனான தன் வாழ்க்கை குறித்த கவலைகளும் மனதில் அலைமோதின. வழக்கம் போல எதையும் வெளிகாட்டாமல் உள்ளுக்குள் புழுங்கி கொண்டிருந்தான். அவன் குரல் அடைத்து கண்களில் கண்ணீர் துளிர்க்க, சொல்ல முடியாமல் தவித்ததை அந்த தாயுள்ளம் உணர்ந்ததோ என்னவோ?

"எல்லாருக்காவும் கவலை பட நீ இருக்க, உனக்காக கவலைபட நான் இருக்கேன். ஏன்யா எல்லாத்தையும் மனசுல போட்டு மருகுற?"

அவர் கைகளைப் பற்றி முத்தமிட்டு, அவர் உள்ளங்கையில் தன் முகத்தை புதைத்து கொண்டான். சில வினாடிகளில் தன்னை ஆசுவாசபடுத்தி கொண்டு நிமிர்ந்து அன்னை முகத்தை ஏறிட்டான்.

பாதி நெற்றியை மறைத்த பெரிய குங்கும பொட்டு, திருநீறு கீற்று, வெள்ளந்தியான முகம், அதிர்ந்து பேசாத குணம் என அமைதியின் உருவாக இருந்தார் காவேரி. மாயவரம் டௌனில் வளர்ந்தவர், படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு வீட்டு பொறுப்பு திணிக்கபட்டது அவரது அன்னை இறப்பிற்கு பின், திருமணம் செய்துகொள்ளும் கட்டாயத்திற்கு ஆளானார். மூத்த மருமகளானதால் கூட்டு குடும்ப பொறுப்புகளை சுமக்க தொடங்கினார் இருபத்தியிரண்டு வயதில். கோகிலாவும் காவேரியை போலத்தான், ஒரு விதத்தில் கோகிலாவிடம் அவனுக்கு வெகு சீக்கிரம் பிடிப்பு ஏற்பட்டதும் இதனால் தான். இருவருடைய குணாதிசயத்திலும் பல ஒற்றுமைகள். அந்த மென்மையான வெளித்தோற்றத்திற்கு பின்னால் பிரம்மிக்க வைக்கும் மனஉறுதி இருவருக்குமே.

"எப்படி மா எப்பவும் இதே மாதிரி புன்சிரிப்போட இருக்க முடியுது உங்களால?" இடையில் சில ஆண்டுகள் காணாமல் போயிருந்த அந்த அழகான புன்னகை, சில நாட்களாய் மீண்டும் அவர் முகத்தில் காணமுடிவதில் நிம்மதி. அவர் கைகளை தன் கைகளுள் பொதிந்து கொண்டான்.

"அப்பா மேல கூட கோபம் வந்ததில்லையா? அட்லீஸ்ட், உங்களுக்கு கட்டாய கல்யாணம் பண்ணிவச்சவங்க மேல கூட?"
அதற்கும் முதலில் ஒரு புன்னகை சிந்தியவர் பின் பேச தொடங்கினார்.

"மனசு பக்குவப்படுற வரை தான் கண்ணு அதெல்லாம். வயசு ஏற, ஏற வாழ்க்கை அனுபவம் சொல்லி தர பாடம் நம்மை பக்குவபடுத்திடும். படுத்தணும். இள ரத்தம் அதனால சட்டுனு கோபம், சந்தோஷம், வெறுப்பு, காதல், பாசம்னு எல்லாத்தையும் வெளிச்சம் போட்டு காட்ட தவிக்கும் மனசு. தப்பு இல்லை. அது தான் இயற்கை நியதி. ஆனா வெளிச்சம் போட்டு காட்டின பிறகு? எதிராளியும் நாம நினைக்கிற மாதிரி இருக்கணும்னு எதிர்பார்க்கும், அது இல்லைனா வலிக்கும், கோவம் வரும், பிணக்கம் வரும்." ஒரு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார். "எனக்கு உங்க அப்பாவோட ஏற்பட்டாப் போல.. பக்குவம் வந்து பாடம் விளங்கினா, எல்லாத்தையும் ஒரே நிலைப்பாடுல பார்க்குற தன்மை வரும் அப்ப மனசு தளும்பாத நிறைகுடமா ஆயிடும். அந்த பக்குவம் வர்ற வரையிலும் பாடம் தொடரும். எனக்கும் அந்த மனபாதிப்பு, மன உளைச்சல் ஏற்பட்டதும் பக்குவம் இல்லாததால தான?".

"அப்ப, அப்பாவை மன்னிச்சுட்டீங்களா?"

எத்தனை நாட்களுக்கு பிறகு அவருடனான சகஜமான உரையாடல். அவரின் ஆங்கிலம் அதிகம் கலக்காத கிராமிய மணம் வீசும் வெள்ளந்தி பேச்சை கேட்க அவனுக்கு அதிக பிரியம்.

"அவங்க எனக்கு துரோகம் செய்யலைய்யா நான் மன்னிக்கிறதுக்கு. அவங்களோட உயர்வான எண்ணங்களையும் சிந்தனைகளையும் புரிஞ்சுக்குற புத்தி எனக்கு அந்த வயசுல இல்லை. ஏன்னா புருஷன் பொஞ்சாதினா இப்படி, குடும்ப வாழ்க்கைனா இப்படின்னு நாம ஒரு கற்பனை பண்ணி, விதிகள் விதிச்சு வச்சிருக்கோம். அது மாறுபட்டப்போ கிராமத்து பொண்ணான எனக்கு விளங்கலை. என்னை வெறுக்கறாங்கன்னு நினைச்சேன். குடும்பம் சரியில்லைனா தான் சந்நியாசி ஆவாங்கன்னு பெரியவங்க சொல்லி பயமுறுத்தி வச்சிருந்தாங்க."

லேசான வருத்த முறுவல் படர்ந்தது அவர் முகத்தில்.

"உங்க அப்பா ஒரு விஷயம் சொன்னாரு அந்த நேரத்துல நான் அதையும் தப்பா தான் புரிஞ்சுகிட்டேன்."

அவன் ஆவலோடு அவர் முகத்தை எதிர்நோக்கினான். ஆனால் அதை அவர் பகிர போவதில்லை என புரிந்தது. அதேநேரம் அர்ஜுன் உள்ளே வரவும், அவனையும் தன் அருகே இருத்திக்கொண்டார் காவேரி.

"ஒரு வரையறை வச்சு அதுக்குள்ளாற நீ அடங்கி இருந்தா, அது படி நடந்தா தான் உன்னை நேசிப்பேன்னு சொல்லுறது முட்டாள்தனம் தம்பி. நான் மனநலம் பாதிக்கப்டடப்போ நீ என்னை வெறுத்தியா?"

"என்ன மா எப்படி மா?" பதறினான் அவன்.

"ம்ம்ம்... வாழ்க்கை துணைன்னு வர்றவங்க கிட்ட அதிகமா உரிமை எடுக்க தோணும், எதிர்பார்ப்பும் நிறைய இருக்கும். நான் நினைச்ச மாதிரி நீ இல்லைன்னா உன்னை என் விருப்பத்துக்கு வளைக்கணுமுன்னு நிக்கிறதை விட முட்டாள்தனம் எதுவும் இல்லை. அன்பு, புரிதல், நம்பிக்கை இது தான் இந்த உறவோட அடித்தளம். அது பலமா இருந்தா எந்த சூழலையும் ஒத்துமையா தாண்டி கடந்து வர முடியும்.

இரு மகன்களையும் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தார் காவேரி.

" ஒத்துமையா இருக்கணும்னு சொல்லி வாழ்த்துறவங்க அது எப்படின்னு சொல்லி தர்றதில்லை. தம்பதிக்குள்ள கருத்து ஒருமித்தல் எல்லா நேரத்திலேயும் இருக்காது ஆனா அப்படி மாறுபடும் கருத்தை அவங்க மேல திணிக்ககூடாது.

உங்க அன்பு ஜெயிக்கணும், குடும்பங்கற கட்டமைப்பு ஜெயிக்கணும் அது தான் குறிக்கோள். நீயா நானான்னு ஈகோ பார்த்தா குடும்பம் தழைக்காது, அன்பு ஜெயிக்காது. இந்த உறவுல உயர்வு, வளர்ச்சிங்கிறது ரெண்டு பேருக்கும் இருக்கணும், சரிசமமா இருக்கணும். நான் சொல்றது பணம், பதவி, சமூக அந்தஸ்துல வர்ற உயர்வை சொல்லலை. உங்க ரெண்டுபேருக்கும் சிறந்த தம்பதிக்கான உதாரணம் சொல்லணும்னா யமுனாவையும் அவ வீட்டுகாரரையும் தான் சொல்லுவேன்."

"ஹுக்கும்ம்" என அர்ஜுன் நொடித்து கொண்டான்.

"ஏய் போக்கிரி! உண்மையா தான். கல்யாணம் ஆனப்ப அவ டிகிரி முதல் வருஷம். படிக்கவேணாம்னு எங்க மாமானார் சொல்லிட்டாரு ஆனா அவளுக்கு படிப்பை விட மனசு இல்லை. மாப்பிள்ளை அழைப்பு முடிஞ்சு நைட்டு உங்க அப்பாவை தேடி போய், நான் படிக்கணும் நீங்க வேற பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணிக்கங்க நான் ஓடிப்போகப் போறேன்னு சொல்லிட்டா."
இது கேட்டு இருவரும் திடுக்கிட, "உங்க அப்பா நீ ஓடி போக வேண்டாம் நானே கல்யாணத்துக்கு பிறகு உன்னை படிக்க வைக்கிறேன்னு சத்தியம் செஞ்சு குடுத்தாரு. அதே போல வேற ஊருக்கு டிரான்ஸ்பர் கேட்டுவாங்கிட்டு அங்க இவளை கூட்டிட்டு போய் காலேஜ்ல சேத்துவிட்டாங்க."

அப்பாவால் தான் அவர் டிகிரி முடித்தார் என்ற விவரம் தான் தெரியும் ஆனால் அன்னை செய்த அலப்பறை தெரியவந்ததும் தந்தையின் மேல் கூடுதல் மதிப்பு ஏற்பட்டது அர்ஜுனுக்கு.

விஷ்வாவிடம் திரும்பி, "உன்னோட பெரிய குறை என்ன தெரியுமா?"

"கோபம்" என்று அர்ஜுன் சுட்டிகாட்டினான்.

அவன் கன்னத்தில் மென்மையாக தட்டியவர், "அதை விட இது பெரிசு ராஜா" மீண்டும் மகனை நோக்கி திரும்பியவர், "எதையும் மனசு விட்டு பேசாத குணம். கணவன் மனைவிக்கு இடையில தெளிவான பேச்சுவார்த்தை இருக்கணும். ஒருத்தர் மனசு காயப்படும்னு சொல்ல தயங்குறது சரி ஆனா, மறைக்ககூடாது. அதோட மனக்குறைகளை பகிர்ந்துக்கிறதும் அவசியம். நீ உன் கவலையை பிரச்சினையை மறைக்கும் போது அவ மனசுல நீ அவளை மதிக்கலைன்னோ இல்லை உண்மையா நேசிக்கலைன்னோ எண்ணம் ஏற்படும்."

மகன்கள் இருவரின் முகபாவம் அவர்கள் யோசிப்பதை உணர்த்தியது.

"ஆம்பிளை அழக்கூடாது, தைரியமா இருக்கணும், உடைஞ்சு போக கூடாது - இந்த முட்டாள்தனமான எண்ணங்கள் எங்கிருந்து யாரால திணிக்கப்பட்டதுன்னு தெரியலை ஆனா கண்டிப்பா தவறானது. நீ இந்த ரெண்டு தவறையும் ரொம்ப செய்யற. இது உறவு முறைக்குள்ளேயும் நல்லதில்லை ஆரோக்கியத்துக்கும் நல்லதில்லை."

"சிம்பிளா சொன்னா என்னை மாதிரி இருக்கணும் அண்ணாத்தை!" தற்பெருமையாக டிஷர்ட் காலரை தூக்கி விட்டுகொண்டான் அர்ஜுன் "கரெக்டு தான பெரிம்ஸ்?" அவரை பக்கவாட்டில் அணைத்தகொண்டவுடன்,

"ஆமா கண்ணு நீ அப்படியே என் யமுனா மாதிரி, படபடன்னு பேச்சு ஆனா மனசுல எதையும் வச்சிக்க தெரியாத பச்சை புள்ளையாட்டம்"

அவரிடம் செல்லம் கொஞ்சியபடி அண்ணனுக்கு பழிப்பு காட்டினான். அவனும் தம்பியின் அழிச்சாட்டியத்தில் கவலை மறந்து சிரித்து இருவரையும் சேர்த்து அணைத்துகொண்டான்.

"அடே ஹல்க்! மூச்சு முட்டுது டா, விடு டா" என அர்ஜுன் திணறியதும் அவனை விடுவித்தான்.

காவேரி மகன்கள் இருவரின் கன்னம் வழித்து திருஷ்டி சொடுக்கிவிட்டு யமுனா வீட்டிற்கு சென்றார். மின்விளக்கை அணைத்து விட்டு கதவை தாழிட்டு கொண்டிருந்த அண்ணனிடம், "பெரிய தமிழ்நாட்டு பாகுபலின்னு நினைப்பு, நீ ஜிம் போறதை நிறுத்து மொதல்ல" கண்டிப்புடன் அர்ஜுன் கூற குழம்பினான் விஷ்வா.

"என் தங்கச்சி ஏற்கனவே நோஞ்சான் மாதிரி இருக்கா நீ இந்த மாதிரி கட்டிபிடிச்சா அவ தாங்கமாட்டா டா தடியா. உன் ஜிம் பாடியை..." அவன் பேசி முடிக்கும் முன் விஷ்வா அவனை அடிக்க வர, அடுத்த வினாடி மாயமாக மறைந்திருந்தான் அர்ஜுன். அர்ஜுன் சொன்னதை நினைத்து லேசான சந்தோஷத்துடன் வெட்கபுன்னகை அவன் முகத்தில் மலர, தலைமுடியை கலைத்து மீண்டும் படியவைத்து கொண்டான்,
எல்லை மீறும் சிந்தனைகளை கட்டி அடக்கியபடி.

"டேய்... அண்ணா வெட்கமா டா?" அர்ஜுன் கார்பார்க்கிங்க் தூண் அருகே ஒளிந்து இவனை கவனித்திருந்தான்.

"அடப்பாவி! மச்சான் யாருடா அது உன்னை வெட்க பட வச்சது?" அதர்ஷ் குரல் கேட்டு இருவரும் அதிர்ந்தனர். விஷ்வா அவனை நோக்கி நடந்து வந்தான், ஆதர்ஷ் உண்மையிலேயே திகைப்பின் உச்சத்தில் இருந்தான்.

"இந்த விஸ்வாமித்ரரின் தவம் கலைந்தது யாரால்? சொல் அர்ஜுனா சொல்!" என அவனை பிடித்து இரண்டு நிமிடம் உலுக்கினான் ஆதர்ஷ்.

"பக்கி விடு டா" அவனிடமிருந்து தன்னை விடுவித்து கொண்டு, "ச்ச்சை.. தலையெல்லாம் கிர்ருங்குது" தலையை உலுக்கி சுதாரித்து கொண்டு, "பன்னாடை வைப்ரேட் மோட்ல போட்ட பழைய நோக்கியா ஃபோன் மாதிரி ஆக்கிட்டான் ஒரு நிமிஷம்".

கசங்கிய தன் டீஷர்ட்டை சரி செய்ய, அவர்கள் இருவரும் hi five கொடுத்து கொண்டு வெடி சிரிப்பு சிரித்தனர்.

"என்ன டா டாக்டர்? எப்படி இருக்க?" விஷ்வாவின் கேள்விக்கு அவன் பதில் சொல்லும் முன்,

"ஐயோ! என்னடா இரண்டு அடி நடந்தா ஏதோ பாடி உள்ள கலகலன்னு சத்தம் வருது?" கவுண்டமணி வாய்ஸ் மாடுலேஷனில் அர்ஜுன் புலம்பினான்.

உடம்பை தொட்டு பார்த்து கொண்டு, "ஏன்டா ஆதர்ஷ் நீ Trauma treat பண்ற ஸ்பெஷலிஸ்டா இல்லை Trauma உண்டு பண்ற ஸ்பெஷலிஸ்டா? ஐய்யயோ! என்னத்தை இடம் மாத்தினானோ தெரியலை. இன்னும் ஆறு மாசத்துல கல்யாணம் டா முக்கியமானதெல்லாம் இடம் மாத்தி தொலைச்சிறாத" பொய் கோபத்தில் சிடுசிடுத்து அவன் முதுகில் ஓங்கி அடித்தான்.

"இவன் திருந்தவே மாட்டானா டா?" அடக்கமாட்டாது சிரித்தனர் ஆதர்ஷும் விஷ்வாவும்.

"அவனை என்ன கேட்கிறது? என்கிட்ட கேளு, நானே சொல்றேன்... நோ சான்ஸ், நஹி, இல்லை" தற்பெருமையாக மார்தட்டி.

அவன் இலகுவான உடையில் இல்லாமல் ஃபார்மல்ஸில் இருப்பதை கவனித்த விஷ்வா "ட்யூட்டியா?"

சலிப்பாக, "Night shift டா. ஹாஸ்பிடல் பஸ் வரும் பிக் பண்ண. Accident and trauma care டியூட்டி, அடுத்த ஆறு மாசம் அங்க தான். உன் ஜாப் எப்படி போகுது, புது ப்ராஜக்ட் ஸ்டார்ட் ஆச்சா?"

"இல்லை கொஞ்சம் government permit pending."

அதேநேரம் ஷர்மிளா அங்கே வந்தாள் தனது தம்பி, தங்கை, சுகந்தி அவள் தம்பி கார்த்திக்கோடு.

"ஏ குள்ஸ்! கால் பண்ணேன் ஏன் எடுக்கலை?" விஷ்வா

"ஹாய் டா தர்ஷா!" அவன் கையை பற்றி கொண்டு பேச தொடங்கினாள்.
"அவங்க கிட்ட Sorry I was busy னு சொல்லிடு!" சிலுப்பிகொண்டு அவள் பதில் சொன்னதும் வில்லங்கம் என தெளிவானது.

லேசான கடுப்புடன், விஷ்வா அவளை நோக்க "ஓ அப்படி என்ன cutting breaking job மேடத்துக்கு?"
(வெட்டி முறிக்கிற வேலை)

அர்ஜுனும் ஆதர்ஷும் கலவரமாக ஒருவரையொருவர் பார்த்துகொள்ள, அர்ஜுன் தெரியாது என்பது போல உதடுபிதுக்கினான்.

"No telling. யாரும் open talk பண்றதில்லை! நானும் no talk. Buffalo! பேசறான் bigஆ"

"ஷம்மு அப்ப நான் டியூட்டிக்கு கிளம்பறேன். உங்க தங்கலீஷ் சண்டையை மனுஷனால சகிக்க முடியாது. நைட் டியூட்டி பாக்கணும் டி ப்ளீஸ் நான் பாவம் இல்லை கையை விடுடி. சர்ஜனுக்கு பிழைப்பே கையை நம்பி தான் டி நல்ல பொண்ணுல விடு மா"

ஆதர்ஷ் அழாத குறையாக கொஞ்ச, அவன் கையை விட்டதும் சுற்றி நோக்கினான். அர்ஜுன், ஷர்மிளாவின் தம்பி, தங்கை, சுகந்தி, கார்த்திக் அனைவரும் கர்மமே கண்ணாயிரம் என எதையோ தின்று கொண்டிருந்தனர் ஓரமாக நின்று.

'சதிகார கும்பல். ஆண்டவா நான் இன்னிக்கு எங்க ஆஸ்பத்திரி பேஷன்ட் ஆகாம காப்பாத்து' என வேண்டுதல் வைத்தபடி நடந்தான்.

"அர்ஜுன் என்னடா" என அவன் அருகே சென்றவன் பல்லைகடித்தான்.

அவனும் ரகசிய குரலில்,
"டேய் நான் மிக்சர் சாப்பிட தான் லாயக்குனு மீம் போட்டாலும் பரவாயில்லை, ஆனா ரெண்டு ரத்தக் காட்டேரிக்கு நடுவுல கோர்த்துவிடாத. மனிதன் பாதி மிருகம் பாதி கலந்த ஜந்து அது. என்ன பிர்ச்சினையோ அதுங்களே பேசி, கடிச்சி, குதறி தீர்த்துக்கட்டும். பாரு சண்டை போடுறதை"

அவர்கள் புறம் ஜாடை காட்டினான், இருவரும் காரசாரமாக விவாதித்து கொண்டிருந்தனர்.

"ஃப்ரீ அட்வைஸ்! நீ இப்படீக்கா ஓடிரு எங்களுக்கு வைத்தியம் பண்ண டாக்டர் நீ இருக்க வேணாம்? இந்தா மிக்ஸர், ஸாரி, aunty செஞ்ச பக்கோடா. நீ போ, அப்புறமா casualty எத்தனைனு தகவல் வரும்".

"தர்ஷ் ணா ஓ பாஸிட்வ் ப்ளட் ரெடி பண்ணிவைங்க" கார்த்தி சொன்னது விளங்காமல் அனைவரும் விழிக்க, "மாம்ஸ் ப்ளட் குருப் அது தான? தேவைப்படும்" அர்ஜுனை அவன் ஜாடை காட்டியதும் மற்றவர்கள் சிரிப்பை அடக்கினர்.

"அதுங்களுக்கு தோணலைன்னாலும் சொல்லி குடுத்துட்டு வருவ போல?"

"மாம்ஸ் என்னை ரெக்கார்ட் நோட்டு விஷயத்துல போட்டு குடுத்தீங்கல்ல அப்பாட்ட?" நம்பியார் போல சிரித்தான்.

"அட போங்கடா உங்க குடும்ப பஞ்சாத்துக்கு நான் வரலை. பஸ் வந்திருச்சு" ஆதர்ஷ் தலை தெறிக்க ஓடினான்.

'என்ன நடக்குது? எதுக்கு இவங்க ரெண்டு பேரும் சண்டை போடுறாங்க? அவ்ளோ ஈஸியா சண்டை வராதே ஷம்ஸ் விஷ்வா நடுவுல.' குழம்பியபடி ஹாஸ்பிடல் பஸ் நிற்கும் இடத்தை நோக்கி ஓடினான்.

பிரச்சினை இது தான். மதியம் பெண்கள் மூவரையும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற சொன்ன விஷ்வா, ஷர்மிளா எத்தனை முறை கேட்டும் காரணத்தை கூற மறுத்துவிட்டான். அதேநேரம் ஷர்மிளாவின் தந்தை அமர்நாத் யாரிடமோ பேசுவதை கேட்டு நண்பர்கள் இருவருக்கும் ஆபத்து என்பதை கிரகித்து கொண்டாள் அவள். மொபைலில் அழைத்து அவனிடம் உண்மையை கேட்டு தெரிந்து கொள்ள ஷர்மிளா பிடிவாதம் பிடிக்க, விஷ்வா அவளை கடுமையாக பேசியிருந்தான். அனைவரது மொபைல் ஃபோன்களும் ஒட்டு கேட்கபடும் வாய்ப்பு இருந்தது அதானலேயே அவன் அதைப்பற்றி பேசுவதை தவிர்த்தான். மாலை வீடு திரும்பிய பிறகு பூரணியைகூட அவன் தொடர்பு கொள்ளாததும் அந்த பயத்தில் தான்.

"எல்லா நேரமும் உன் பிடிவாதம் செல்லாது ஷம்ஸ். பொறுப்பா நடந்துக்க.."

"ஷர்மிளா" அவள் தந்தையின் குரல் அதட்டலாக ஒலித்தது.

அவள் அமைதி காக்க, இருவரையும் அர்ஜுன் வீட்டினுள் அழைத்து சென்று பேசி புத்திமதி கூறினார் அமர்நாத்.

அறையை விட்டு அவர்கள் வெளியே வர, அர்ஜுன் வீட்டு ஹாலில் குழுமி இருந்தவர்களை பார்த்து அதிசயித்தனர்.

கோகிலா பரந்தாமன், இருவரும் மூர்த்தி அருகே அமர்ந்திருந்தனர். சுகந்தியின் பெற்றோர், ஷர்மிளாவின் அன்னை சுனிதா, யமுனா, காவேரி என பெரியவர்கள் அனைவரும் ஒரு பக்கம் குழுமி இருந்தனர்.

இளையவர்கள் மறு பக்கம். அர்ஜுன், சுகந்தி, கார்த்திக், பூரணி, ரேஷ்மா, ரோஷன், இவர்களுடன் விஷ்வாவும் ஷம்முவும் இணைந்து கொண்டனர்.

ஆவலும் குழப்பமுமாய் அவர்கள் பக்கம் பார்வையை செலுத்தினான் விஷ்வா. இளையவர்கள் அனைவரும் பார்வையால் பேசிக்கொள்ள எதற்கு இந்த திடீர் சந்திப்பு என யாருக்குமே விளங்கவில்லை.

"பூரிக்கா நாளைக்கு நீங்க வீடு ஷிப்ட் பண்றதா அக்கா சொன்னா...இங்க இருந்தாவே உங்களை பாக்க முடியறது இல்லை.." கார்த்திக்கு அழுது விடுவது போல குரல் உடைந்தது. அனைவரது முகமும் சுணங்கியது. தன்னைமீறி விஷ்வாவை தேடிய தன் விழிகளை சூழல் உணர்ந்து கட்டாயமாக விலக்கினாள். கார்த்தி அவளை இறுக அணைத்து கொண்டான். ஒவ்வொருவராக அதில் இணைய group hug! அதிலிருந்து மெல்ல விசும்பல் ஒலி வெளிப்பட்டது.

பெரியவர்களுக்கு மனம் கனத்து போனது அந்த பிணைப்பை கண்டு.

மூர்த்தி இளையவர்களை நோக்கி
"என்ன உங்க ஃபிரண்டுக்கு டாட்டா சொல்ல ரெடியா" அணைப்பை விலக்கினாலும் கைகளை இறுக பற்றி நெருக்கமாக நின்றிருந்தனர். தங்கள் தோழியை சுற்றி பாதுகாப்பு அரண் போல. அவரிடம் எதிர்த்து பேசவும் முடியாமல், வெளிப்படையாக அழவும் முடியாமல் நின்றனர்.

"வானர சேனை ஒன் அண்ட் டூ, என்ன பேந்த பேந்த முழிக்கிறீங்க? ரெடி தான?"

அவர்கள் அனைவரின் தலையும் லேசான தயக்கத்துடன் இல்லை என அசைய, கண்களில் கண்ணீர் மல்க குழந்தை போல அவர்கள் நின்றது பெற்றவர்கள் மனதை பிசைந்தது.

"சரி,ரெடியாகலைன்னா அப்ப டாட்டா சொல்ல வேணாம்." அவர் சொன்னதன் அர்த்தம் விளங்காமல் அவர்கள் முழித்தனர்.

"கொஞ்ச நாள் முன்ன நம்ம பூரிணியை பத்தி விசாரிச்சு யாரோ ஒரு ஆளு நம்ம காலனி பக்கம் சுத்தினதா தகவல். மூணு நாலு நாள் வந்து கேட்ருக்காங்க".

அனைவரும் திடுகிட்டனர். "அப்பதான் பரந்தாமன் அடையாறுக்கு வீடு மாறப்போறதா சொன்னான். அவங்க வேலைக்கு போயிட்டா இவ தனியா இருக்கணுமேன்னு யோசிச்சேன். நம்ம அமர் வீடு ஒண்ணு காலியாக தான இருக்கு அதான் பேச சொன்னேன், ஒத்து வந்தது. இப்ப உங்க ஃபிரண்டு இங்க தான் வீடு குடித்தனம் வரா, அடையாறுக்கு போகலை". பிள்ளைகள் அனைவரின் முகமும் விஷயத்தை கிரகித்து கொண்டு ஆச்சரியத்தில் விரிந்தது, பூரணி உட்பட.

"Papaji, really?" ஷர்மிளா தந்தையிடம் கேட்க.

"யெஸ், பூரணி ஃபேமிலி மாடியில இருக்க நம்ம பழைய வீட்டுக்கு தான் ஷிப்ட் பண்றாங்க."

"உங்க பழைய வீடு அதாவது, மாடியில இருக்குற எங்க வீட்டுக்கு எதிர் வீடு?" அதிர்ச்சி குறையாமல் சுகந்தி கேட்டதும்,

"ஆமா மருமவளே! உங்க வீட்டுக்கு எதிர் வீடே தான். இனி நீயும் உன் சிநேகிதியும் இருவத்தி நாலு மணி நேரமும் ஒண்ணா இருக்கலாம்." என்று மூர்ததி கூறியதும், இளையவர்கள் அனைவரும் ஹோவென்று பெரிய இறைச்சலோடு கத்தி குதூகலிக்க பெற்றோர் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

"ஆமா அப்ப ஏன் எல்லாரும் விஷயத்தை மறைச்சீங்க?" விஷ்வா அடக்கமாட்டாமல் கேட்டுவிட

"எத்தனை தரம் இந்த வானர சேனையோட சேட்டை எங்களை அழவச்சிருக்கு சின்ன வயசுல? அதுக்கு தான், நாங்க சேட்டை செஞ்சா எப்படி இருக்கும்னு சாம்பிள்" என்றார் சுரேஷ். "எப்படி எங்களோட prank?"

"பா ரொம்ப மோசம் நீங்க" சுகந்தி சிடுசிடுக்க

"ஐடியா என்னுது மருமவளே"
மூர்த்தியின் குரலை கேட்டு அவள் அமைதியாகிவிட, ஷம்மு பழிவாங்கும் திட்டம் தீட்டி தொடங்கியிருந்தாள்.

"Papa ji மாடி வீட்டு சாவி?" ஷர்மிளா அமர்நாத்திடம் கேட்க, அவர் பரந்தாமனை கைகாட்டினார்.

"இந்தா மா" சாவி கைமாற அடுத்த வினாடி இளையவர்கள் அனைவரும் சிட்டாக பறந்தனர்.

"எல்லாத்துக்கும் கல்யாண வயசாகுது இன்னும் சின்ன பசங்களாவே இருக்கு" மூர்த்தி சிரித்து கொண்டார். "ஆமா இன்னிக்கு என்ன உன் வீட்டுல டின்னர்?"

~~~~

"இந்த வீடு தான் Papa, முதல்ல வாங்கின ப்ராப்ர்ட்டி மெட்ராஸ்ல. ரொம்ப ராசியான வீடுன்னு சொல்லுவாங்க. இந்த வீட்டுல தான் நான் பிறந்தேன், அவங்க பிஸினஸ் டிவெலப் ஆனது, சந்தீப்போட அப்பா இவங்க ஃபிரண்டானது, இன்னும் நிறைய. லேட்டர் இந்த ரெண்டு மங்கிஸும்" இரட்டையர்களான தம்பி தங்கையை தோளோடு அணைத்து கொண்டு "பிறக்க முன்னாடி, இடம் பத்தாதுனு தான் அந்த G block ல ரெண்டு ஃப்ளாட்டை வாங்கி ஒரே வீடா பண்ணிட்டாங்க." அவள் விளக்கும் குடுத்து முடித்ததும் அனைவரும் வட்டமாக அமர்ந்து அரட்டை அடிக்க தொடங்கினர். கார்த்தியின் ஒருபுறம் பூரணியும் மறுபுறம் விஷ்வாவும் அமர்ந்திருந்தனர். கார்த்தி விடாமல் அவளிடம் பேசிகொண்டிருக்க, அவனை நோக்கி திரும்பும் போதெல்லாம் விஷ்வாவின் முகம் அவளின் பார்வை வட்டத்தில் வர, அவனின் பார்வை அவளை அலைக்கழித்தது. அவளின் பரிதவிப்பை கண்டவனுக்கு மிக குதூகலமாக இருந்தது.

அவளின் குழம்பிய நிலையை கண்ட கார்த்தி 'ஏன் அக்கா ஒரு டைப்பா முழிக்குது?' என யோசித்து திரும்பி பார்க்கும் பொழுது மிக நல்ல பிள்ளையாக விஷ்வா அருகில் இருந்த அர்ஜுனிடம் பேசிகொண்டிருப்பான்.

இரண்டு பக்கமும் பார்த்து விட்டு மீண்டும் அவளை நோக்கி திரும்பி "என்ன பிரச்சினை உனக்கு?"

"நான் என்ன வெல்லக்கட்டி செஞ்சேன்? கேட்டுட்டு தான இருக்கேன். நீ சொல்லு..."

"இல்லை..." அவன் தலையை சொறிந்து மீண்டும் தனது மேட்ச் பற்றி பேச தொடங்கினான். இவர்கள் விளையாட்டை கவனித்த ஷம்மு தன் தம்பி தங்கையின் கவனம் அங்கு செல்லாத வண்ணம் பெரியவர்களை பழிவாங்கும் திட்டம் தீட்டுவதில் தீவிரப் படுத்தினாள்.

"அந்த எதிர் டீம் விக்கெட் கீப்பர் சரியா டென்ஷன் பண்ணுவான் பேட் பண்ணும்போது..." கார்த்தி சொல்லுவது பாவம் அவள் செவியில் ஏறத்தான் இல்லை தம்பியை நினைத்து பாவமாக இருந்தாலும் அவனுக்கு பின்னால் அமர்ந்து காதல் கணைகளை விழியால் தொடுத்து கொண்டிருந்த விஷ்வாவிடமிருந்து கண்ணையும் கருத்தையும் விலக்கமுடியவில்லை அவளால். மிகுந்த சிரமத்துடன் பாதி கவனத்தை கார்த்தியின் பேச்சில் வைக்க முயல, சட்டென்று கண்ணடித்தான் விஷ்வா.

"ஹுக்" என விக்கித்து போனாள். அந்த திருடனோ செய்வதை செய்துவிட்டு வேறுபுறம் திரும்பி கொண்டான்.

இதை அறியாத கார்த்தி, "நீ இப்படி பயப்படுற அளவு அடிபடலை கா. தோ பாரு சின்னதா சிராய்ப்பு" என தன் முழங்கையை காட்ட அவள் நிலை உணர்ந்து அவனை கவனித்தாள். ஆனால் கன்னத்தில் பூத்த சிவப்பை மறைக்க முடியவில்லை.

"என்ன கார்த்தி கையை காட்டு" என சுகந்தி உதவிக்கு வர, அர்ஜுனும் சேர்ந்து கொண்டான்.

"பூ குட்டி" சுகந்தி காதில் கிசுகிசுக்க "நல்லா ஜொள்ளு விடுற டி. ஆனா டைமிங்க் தான் தப்பு" என வாரினாள். அவள் திகைத்து நிமிர, அர்ஜுன் விஷ்வா இருவரும் விஷமமாக சிரித்தபடி வாயிலை நோக்கி சென்றனர்.

Word count: 2637

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro