Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 20


Date published: 19 Nov, 2021

பாண்டிச்சேரியில் The White Town அல்லது French Town என்று அழைக்கப்படும் பகுதி பாரிஸ் நகரத்தின் அழகிய பழைமை வாய்ந்த வீடுகளையும் அதை உள்ளடக்கிய வீதிகளையும் ஒத்து இருக்கும். மத்திய தரைக்கடல் நாடுகள் (Mediterranean countires) எங்கிலும் இது போன்றதொரு கட்டுமானத்தை காணமுடியும்.

விஷ்வா அவளுக்கு விளக்கினான்.
"இது French style architecture, இன்னும் சொல்லப்போனா பல ஐரோப்பிய நாடுகள்ள இந்த ஸ்டைல் கட்டிடங்களை பாக்கலாம். இப்ப பெரிய சிட்டில இருக்கான்னு தெரியலை, ஆனா நகரத்துக்கு வெளியே, அவங்க பாணியில கண்ட்ரிசைட் னு (country side) சொல்லற பகுதிகள்ள இந்த முறை கன்ஸ்டிரக்ஷன் தான்".

அமைதியான, சிறிய, துப்புரவான தெருக்களையும் அந்த பழம் பெருமையை பரைசாற்றும் கட்டிடங்களும் புத்துணர்வு தருவதாகவும் அதே நேரம் ஒருவித மனநிறைவை தருவதாகவும் இருந்தன.

வீதிகளின் இருமருங்கிலும் நிழலை தரும் மரங்கள், கண்ணை கவரும் வகையில் வர்ணம் பூசப்பட்ட வீடுகள், வித்தியாசமான கட்டுமானம், சுத்தமாக வைக்கப்பட்ட சுற்றம், அதிகாலையில் கேட்கும் பறவைகளின் கீதம், இதமான தென்றல், மலர்களின் மணம், எல்லாவற்றையும் ஆட்சி செய்யும் அந்த பேரின்ப அமைதி.

"எவ்வளவு அமைதி இங்கே? இந்த இடத்தை விட்டு போகவே விருப்பம் இல்ல விஷ்வா".

அவர்களின் கரங்கள் தங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொண்டன போலும், ஒன்றை மற்றது தேடி இரண்டு கைகளும் கோர்த்து கொண்டன. விளக்க இயலாத ஒரு பாதுகாப்பு உணர்வு அவன் கைபற்றி நடக்கையில் அவளுக்கு. கடலில் தத்தளித்தவனுக்கு கட்டுமரம் கிடைத்தது போன்ற ஒரு ஆசுவாசம் அவனுள்.

"வாவ்"
ஒரு வீட்டின் முகப்பில் வெளிவாயிற் கதவை ஒட்டி உள்பக்கமாக போகன்வில்லா மரம் நட்டுவைத்திருக்க, பேபி பிங்க் நிற பூக்கள் பூத்து குலுங்கி, பாதையோரத்தில் தரையில் பாய் விரித்தது போல கொட்டிகிடந்தது.

"ம்ம் சேம் ஃபீல்!" அவள் இதயத்தை சுண்டி இழுக்கும் ஒரு புன்னகை சிந்தி,
"சீக்ரெட் டிப் என்ன தெரியுமா? Early morning தான் பெஸ்ட் டைம் இந்த இடம் விசிட் பண்ண, இந்த அமைதியை ரசிக்கணும்னா. நேரம் ஆக ஆக, கொஞ்சம் டூரிஸ்ட் க்ரௌட்  (crowd) வரும். ஆனாலும், அரவிந்தர் ஆசிரமம் இங்கேயே இருக்கிறதால இங்கிதம் கருதி டூரிஸ்டும் அதிகமா யாரும் மற்று இடங்களை போல கூச்சல் போடுறது இல்லை."

"இப்படியும் டிஸிப்ளினோட நம்மால இருக்க முடியுங்கிறதுக்கு உதாரணம் இந்த இடம். இல்லை?"

"எனக்கு இந்த ஆர்கிடெக்ச்ர் ரொம்ப பிடிக்கும். நிறைய தமிழ் படத்துல இந்த இடத்துல ஷுட்டிங்க் எடுப்பாங்க, கேமரா ஃப்ரேம்ல ஃபாரின் கண்ட்ரி ஃபீல் இருக்கும்."

இந்த பிரெஞ்சு டௌன் (french town) எனும் பகுதியை அதிகாலையில் பார்த்து ரசிப்பதென்பது அவனுடைய நெடு நாள் ஆசைகளில் ஒன்று. பூரணி தன்னோடு வர உடனே சம்மதிப்பாள் என எதிர் பார்க்கவில்லை அவன். அவள் சம்மதித்ததும் முந்தைய நாள் இரவை எதிர்பார்ப்போடும், ஒருவித படபடப்போடும் கழித்திருந்தான்.

அவளோடு மனம்விட்டு பேச வேண்டும் என்று தான் அழைத்து வந்தான். ஆனால் உன்னிகிருஷ்ணன் பாடியது போல, 'வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருளுகிறது'.

சிறிது நேரம் அந்த தெருக்களை சுற்றி நடந்து கொண்டே பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். இருவரின் சின்ன சின்ன விருப்பங்கள் தொடங்கி அரசியல் வரை, கருத்து பகிர்தல்கள் வரையறையின்றி நீண்டது. மெல்ல லேசானது மனம் இருவருக்கும்.

~~~

அருகில் ஒரு உணவகத்தை கண்டதும், "Coffee?" அவன் சற்றே தலைசாய்த்து, புருவம் உயர்த்தி வினவிய விதத்தில் அவள் உறைந்து விட, அவளின் மாயவன் புன்னகைத்தான்.

என்றோ கனவில் கண்டது போல இருந்தது இந்த தருணம்  பூரணிக்கு. முன்னமே இருவரும் மணிக்கணக்கில் அளவளாவியபடி கால் போன போக்கில் நடந்தது போன்ற உணர்வு.

ஆனால் அது எதுவுமே கனவு இல்லை அவர்களின் கடந்த காலம் என்று எப்போது உணருவாள்?

அவள் கைதொடும் தூரத்தில் தான் அவர்கள் வாழ்வின் திறவுக்கோல் என்பதை எப்போது கண்டறிவாள்?

அவள் முகத்தின் குழப்ப ரேகைகள் அவனுக்கு என்ன உணர்த்தியதோ...

"ஹலோ இது என்ன லுக்கு?" அவள் முகத்தருகே கை அசைத்து "காபி சாப்பிடலாமான்னு தான கேட்டேன். டேட்டிங் போலாமான்னா கேட்டேன்?" ஆச்சரியத்தில் அவள் விழி விரிந்தது.

உணவகத்தை நோக்கி இரண்டு எட்டு நடந்தவன், யோசனையாக திரும்பி,
"ஆனா இதுவும் டேட் தான் இல்லை?"  
தங்கள் இருவரிடையே கைகாட்டி குறும்பாக கண்சிமிட்ட, அவள் முகத்தில் வந்துபோன அத்தனை உணர்வுகளையும் மிக துல்லியமாக படித்தவன்

"சர்தான் வா டி ரௌடி" என அவள் கைகோர்த்து இழுத்துகொண்டு நடந்தான்.
பூரணி திகைப்பிலிருந்து மீளுவதற்குள் மேஜையை தேடி உட்கார்ந்து, பின்னோடு சிப்பந்தியையும் அழைத்தான்.

அவனை ஒரு புது பரிமாணத்தில் பார்த்தவள் அவனின் மாயையில் கட்டுண்டு, பேச்சற்று போக, சிற்றுண்டி வந்தது.

"மொதல்ல சாப்பிடு அப்புறம் பேசலாம்."

அவன் கருத்துக்கு உடன்பட்டவளின் மனம் சிந்தனை குதிரையை செலுத்திக் கொண்டு தான் இருந்தது. விஷ்வாவிடமும் தன்னிடமும் பல மாற்றங்களை உணர்ந்தாள் பூரணி.

□□□

இருவரும் நெருங்கி வருவது புரியாத அளவிற்கு அவள் குழந்தை அல்லவே. ஆனால் இவை நல்லதா என்பது தான் அவளை பொறுத்த வரை பதில் காண முடியாத ஒரு கேள்வி. அவனுடன் நேரம் செலவிடுவது மிக இயல்பாகவும் பிடித்தமானதாகவும் இருந்தது. அவனின் கண்ணியம், அக்கறை, வயதை மீறிய முதிர்ச்சி, ஆளுமை திறன், கோபம், இவையெல்லாமே அவளுக்கு பிடித்து தான் இருந்தது.

தன்னிடம் அவன் காட்டுவது தனி அக்கறையா? அன்பா? நட்பா? இவை அனைத்திற்கும் மேலா?

வாதம், எதிர்வாதம் எல்லாவற்றையும் முன்வைத்து குழப்பத்தின் கூடாரமாக இருந்து இம்சித்தது மூளை. பதில் கூறவேண்டியவனோ யாரிடமோ கதைத்து கொண்டிருந்தான் கைபேசியில், உணவகத்தின் வாயிலில் நின்று. முகம் இறுகிப்போய் பேசிக் கொண்டிருந்தவன் பார்வை அவள் பக்கம் திரும்பியதும் லேசாக இளகி, சாப்பிடுமாறு சைகை செய்தான்.

'ஆளும் கொஞ்சம் ஸ்மார்ட்டா தான் இருக்கான்ல'
கொஞ்சமே கொஞ்சம் இயல்பான பருவ மங்கைக்கான உணர்வுகள் தலைதூக்கியது.
'எது கொஞ்சமா? ஹாட் பீஸ்னு சொல்ற அளவு ஸ்மார்ட்' உள்ளம் ஜொள்ளியது. தன் எண்ணங்கள் போகும் திசையை கண்டு ஒரு திகைப்பு.

'என்ன? நீ அவனை சைட் அடிக்கலைன்னு சத்தியம் பண்ணு.'
அவள் மனசாட்சியே அவளை காட்டிகொடுக்க ஏற்பாடு செய்தது. உண்மையை உள்ளத்திடம் மறைக்க முடியுமா? 'ஆனா நான் அவனை விரும்புறது எப்படி நியாயம்? என் கடந்த காலம்...'

மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறத் தொடங்கியது. தன்னைப் பற்றிய சுய ஆராய்ச்சியை அவள் தொடரவிடாமல் சிப்பந்தி சாப்பிட்டதற்கான பில்லை கொண்டு வரவும், பணம் செலுத்திவிட்டு புறப்பட்டனர்.

□□□

ப்ராமெனேட் கடற்கரை

"ஹலோ ஆங்க்ரி பேர்ட்!" அவன் புஜத்தில் தட்டி கூப்பிட்டதும் அவன் கவலை படிந்த முகத்தோடு திரும்பினான்.

"என்ன விஷ்வா? எதாச்சும் பிரச்சினையா? சொல்லு." அவன் கோபத்தை கூட சமாளிக்கலாம் இந்த இறுக்கம் ஆபத்தானது எனத் தோன்றியது. அவளை அழைத்து வந்த காரணம் வேறு ஆனால் இப்போது முளைத்திருக்கும் புது பிரச்சினை அவனை முழுவதுமாக திசை திருப்பிவிட்டிருந்தது.

"டெல்லியில அம்மாவை கவனிச்சுக்க ஒரு அக்கா வீட்டுக்கு வருவாங்க, நம்ம ஊரு தான் அந்த அக்கா. அவங்க வீட்டுக்காரர் ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனில ஸாரி டிரைவர். நேஷன்ல் பர்மிட் வண்டி ஓட்டுவாரு."

ஒரு வருத்த முறுவல் உதிர்ந்தது அவன் இதழ்களிலிருந்து.
"நேஷனல் பர்மிட் லாரிக்கு மட்டுமில்லை தனக்கும்ன்னு போன ஊருலலாம் தகாத முறைகள்ல உறவு. அதுல வந்த வினை, ஏய்ட்ஸ். அந்த அக்கா அம்மாவை பாத்துக்க வந்தப்ப அவங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தான், ப்ரெக்னென்டா இருந்தாங்க. பொண்ணும் பிறந்தது. அப்புறம் பாப்பாவையும் தூக்கிட்டு வேலைக்கு வர ஆரம்பிச்சாங்க.

அம்மாவோட மனநிலைல ஒரு மாற்றம் தெரிய ஆரம்பிச்சது அந்த பாப்பாவால. அந்த குழந்தை பிறந்த மூணு வருஷம் ஆனபிறகு அவங்க அடிக்கடி சிக் ஆக ஆரம்பிச்சாங்க. அந்த சமயத்துல, அந்த ஆளு வேற ஒரு பொண்ணோட தொடர்பு ஏற்பட்டு அவளை கல்யாணம் பண்ணிட்டு ஓடி போய்ட்டான்.

ஒரு முறை இவங்களுக்கு ரொம்ப சிவியரா உடம்பு முடியாம போகவே AIIMS ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணினாங்க. ஏய்ட்ஸ்ன்னு கன்ஃபார்ம் ஆச்சு. அவன் வியாதியை அவளுக்கு தானம் பண்ணிட்டு ஓடிபோய்ட்டான.

இவங்க ரொம்ப பலவீனமா ஆயிட்டாங்க. இந்த வியாதி வந்துட்டதால ரிலேடிவ்ஸ் கூட கிட்ட வரலை. அவங்க அம்மா குழந்தையையும் அந்த அக்காவையும் ஒரு காப்பகத்துல சேத்துட்டு, வீட்டு வேலைக்கு போய்ட்டு இவங்களை கவனிச்சுக்குறாங்க."

நிறுத்தி நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றியவன் தலை கவிழ்ந்தான்.

"நான் அங்க இருந்தவரை அந்த குழந்தையோட செலவை பாத்துக்கிட்டேன். இங்க வந்தும் பணம் அனுப்புறேன். அந்த அக்கா எனி டைம்..."
மென்று விழுங்கினான்.

"அந்த குழந்தைக்கு?" இதயம் புயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது பூரணிக்கு.

அவளை நிமிர்ந்து பார்த்தவன் கேள்வியின் அர்த்தம் புரிந்து,
"இல்லை இவ பிறந்தப்புறம் தான் இன்பெக்ட் ஆகியிருக்கு." ஆழ்ந்து நிம்மதி பெருமூச்செறிந்தாள்.

"பேரு பவித்ரா, அம்மாதான் வச்சாங்க" அவன் கண் கலங்கியிருந்தது.
"அவளுக்கு நாலு வயசு தான் ஆகுது. பொறுப்பில்லாத ஒரு ஆளால பெத்த அம்மாவை இழக்கப்போறா அவ. என்ன தப்பு பண்ணிச்சு அந்த குழந்தை?"

பூரணி தான் அழுவதை கூட உணராமல் ஸ்தம்பித்து இருந்தாள்.

"நான்... இதை நீ எப்படி எடுத்துக்குவன்னு தெரியலை. அந்த குழந்தையை தத்து எடுக்க நான் முடிவு பண்ணினேன்."

உணர்ச்சிகளின் பிடியில் சிக்கியிருந்தவள் பேச்சற்று
அவனை அதிசயித்து பார்த்திருந்தாள்.

"ஆனா சட்டப்படி ஒரு ஆண் சிங்கிளாக இருக்கும் பட்சத்தில் தத்து எடுக்க முடியாது. அதுவும் பெண் குழந்தையை நிச்சயம் குடுக்க மாட்டாங்க. வக்கீல் வச்சு பேசி ஜட்ஜ் முன்னிலையில் அந்த அக்கா எனக்கு குழந்தையை முழூ மனசோட தத்து குடுக்குறதா ஸ்டேட்மெண்டு குடுத்துட்டாங்க. ஆனா அம்மாவோட மென்டல் ஹெல்த் அண்ட் அப்பா எங்க கூட இல்லாதது ரெண்டுமே எனக்கு பாதகமான இருக்கு."
உதடு பிதுக்கி இடம் வலமாக தலையசைத்தான் சோகமாக.

"இப்ப?" தொண்டை வரண்டு வார்த்தை வெளிவர மறுத்தது அந்த பச்சிளங் குழந்தையின் எதிர்காலம் நினைத்து.

"அந்த ஸ்டேட்மென்ட் வேலைக்கு ஆகலை. ஒண்ணு குழந்தை டெல்லியில அனாதை ஆசிரமத்துல வளறட்டும்ன்னு விடணும். இல்லை எனக்கு தெரிஞ்ச தம்பதியர் யாராவது தத்து எடுத்துட்டு அவங்க மூலமா நான் குழந்தைக்கான பராமரிப்பை பாத்துக்கலாம்ன்னு வக்கீல் சொல்றாரு."

கால் முட்டியில் கைகளை ஊன்றி தலைக்கு முட்டுகொடுத்து அமர்ந்திருந்தான், சோர்வாக.

"ஏன் யாரோ பண்ற தவறுக்கு ஒரு பாவமும் அறியாதவங்க எப்பவுமே தண்டனை அனுபவிக்க வேண்டிவருது? அதுவும் இது குழந்தை.." அவன் குரல் கரகரத்தது. ஆதரவாக அவன் கரங்களைப் பற்றி அழுத்தம் கொடுத்தாள். அவனும் இறுகப்பற்றி கொண்டான் அவளை.

எத்தனை நேரம் சிந்தனையில் உழன்றார்கள் என தெரியவில்லை. விவரம் புரியும் முன்னரே பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் பல பூமியில் ஆனால் கண்ணெதிரில் இந்த பிஞ்சு பிறந்தது முதல் பார்த்தவன் அது அனாதை ஆகும் தருவாயில் அதை தடுக்க முடியாமல் தவிக்கிறான். அவனை அணைத்து ஆறுதல் சொல்ல துடித்தாள், ஆனால் பெண் மனம் தயங்கியது.

"விஷ்வா நான்... ஒண்ணு சொல்லவா?"

"தாராளமா.."

"பெரிய மாமா அத்தை?"

"கேட்டேன். சித்தி அடிக்க வந்துட்டாங்க என்னை. கல்யாணம் ஆகாம குழந்தையை தத்து எடுத்தா யாரும் பொண்ணு குடுக்க மாட்டாங்களாம். நானும் பரவாயில்லைன்னு சொல்லிட்டேன். ஒரே ஒரு கண்டிஷன்ல ஒத்துக்கிறதா சொன்னாங்க. அவங்க பாக்கற பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கணுமாம் அப்ப ஹெல்ப் பண்றாங்களாம்."

ஏனோ அவள் நெஞ்சில் சுள்ளென்று வலித்தது.

"நீ என்ன சொன்ன?"

"யாரும் எந்த ஆணியும் புடுங்கவேணாம்னு சொல்லிட்டு வந்துட்டேன்." கோவமும் வருத்தமும் கலந்த குரல் தோய்ந்து வெளிப்பட்டது.

"ஏன் ஒரு வேளை அவங்க சொல்ற பொண்ணு இதுக்கு ஒத்துகிட்டா? நல்லது தான?"

"இல்லை மா சரியா வராது விடு" பதில் சொல்லாமல் தவிர்த்தான்.

"விஷ்வா....அமன் அண்ணா இல்லை ஷம்மு கா இவங்ககிட்ட கேட்டா என்ன?"

திடுக்கிட்டு திரும்பினான். அவள் மீண்டும் வலியுறுத்தினாள்.

"அமன்தீப் அண்ணா போலீஸ் ஆபிஸர், கல்யாணம் ஆனவங்க. ஆனா அண்ணி ஒத்துக்குவாங்களான்னு தெரியலை."

"ஷம்மு கா, மேரேஜ் ஆனபிறகு தான் எதுவும் செய்ய முடியும்".

அவன் யோசிக்கலானான். சட்டென்று கைபேசியை எடுத்து அமன்தீப்பை அழைத்து விபரத்தைக் கூறியதும்,

"கொஞ்சம் டைம் குடு விஷ்வா. நான் மட்டும் எடுக்குற முடிவு இல்லை. ஆனா இன் த மீன் டைம் நாம வேற ஒரு ஆப்ஷன் டிரை பண்ணலாம். அந்த லேடியை சென்னைக்கு வர வைக்கலாம். இங்க நல்ல ஹோம் பாத்து சொல்றேன், நீ அவங்க ரெண்டு பேரையும் அங்க தங்கவைக்கலாம். அந்த குழந்தைக்கு உன்னை லீகல் கார்டியனா அவங்க நாமினேட் பண்ணினா கூட இப்போதைக்கு போதும்".

விபரத்தை பூரணியிடம் சொன்னதும், "அதுவும் நல்ல ஐடியா தான். இன்னொரு ஆப்ஷன் இருக்கு, நான் அம்மா அப்பா கிட்ட கேக்கறேன். அவங்க அடாப்ட் பண்ணலாம் தான? நிச்சயம் ஒத்துக்குவாங்க."

அவன் சற்று தயங்கியதும், அவனுக்கு தைரியமூட்டினாள். "ஆமா பாப்பா போட்டோ வச்சிருக்கியா?"

கைபேசியை இயக்கி அதில் பதிவாகியிருந்த குழந்தையின் பல புகைப்படங்களை காண்பித்தான்.

ஆர்வமாக அதை பார்த்துவிட்டு, "டோண்ட் வொரி, எல்லாம் நன்மைக்கே. பவித்ராவுக்கு இப்படி ஒரு அப்பா கிடைக்கணும்னு இருக்கு," அவனை கண்களால் சுட்டிகாட்டி, "அதனால தான் அந்த லூஸு ஓடிட்டான். அதே மாதிரி அவளுக்கு ஒரு அழகான குடும்பமும் கிடைக்கும். சியர் அப்".

அவளின் வார்த்தைகளில் திக்குமுக்காடி போனான் விஷ்வா.

"தாங்க்ஸ்" சந்தோஷத்தில் மனமும் முகமும் மலர்ந்தது. அவளை அணைத்துக்கொள்ள துடித்த மனதை வெகுவாய் கட்டுப்படுத்தினான். அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் சென்னை நோக்கி பயணமாகினர்.

□□□□

வீட்டினுள் நுழைந்ததும் ஆச்சரியம் காத்திருந்தது.
"அம்மா என்ன இது?" குழப்பமும் கவலையுமாக அன்னையை நோக்கினாள் பூரணி. வீட்டை ஒழித்து சுத்தபடுத்தி கொண்டிருந்தார் கோகிலா.

"ஓனர் அக்ரீமென்ட் சைன் பண்ணிட்டாங்களாம். ரெண்டு நாளுல நாம வீட்டை காலி பண்ணனும். அதான்... காலைல தான் அந்த வீட்டுல பால் காய்ச்சுனோம்.
நீ பெட்ரூம்ல எல்லாத்தையும் பேக் பண்ணு அன்னம். எனக்கு வேற லீவு கிடைக்கலை இன்னிக்கு ஒரு நாள் தான். ஷிப்ட் பண்ணும் போது கூட பர்மிஷன் தான்".

"ஏன் மா என்கிட்ட சொல்லகூட இல்லை?" அதிர்ந்தாள் பூரணி.

வாஞ்சையாய் அவள் கன்னம் வருடினார்.
"இல்லடா நீயே இத்தனை வருஷத்துக்கு பிறகு உன் ஃபிரண்டுஸோட கொஞ்சம் ரிலாக்ஸா போயிருக்க இதை சொல்லி உன்னை கஷ்ட்ப்படுத்த வேணாம்னு, புதன்கிழமை காலைல அங்க போகணும்."

□□□

தன் கைபேசியை இயக்கி, அவள் புகைப்படத்தை பார்த்தான். பாண்டிச்சேரியில் எடுத்த புகைப்படங்களை நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டிருந்தனர் அனைவரும்.

இதயத்திலும் நினைவிலும் மட்டுமே பொக்கிஷமாய் இருந்தவள் இப்பொழுது கண் முன்னே, உயிர்ப்புடன் நடமாடிக் கொண்டிருக்கிறாள்.

சொல்ல முடியாமல், உணர்த்த இயலாமல் தேக்கி வைத்திருக்கும் இந்த காதல் வேதனை  தன்னை கொன்று விடுமோ என பயம் ஏற்பட்டது அவனுக்கு. மிக வினோதமான உணர்வு இந்த காதல். ஒரு சமயம் நேசிப்பவருக்காக எதையும் செய்யும் பலத்தை கொடுக்கிறது, பலவீனமாயும்  ஆக்குகிறது. சில நேரங்களில் இறக்கை கட்டாமல் வானில் பறக்கவைக்கிறது, சிறகொடிந்து வீழவும் செய்கிறது. அழவைக்கிறது, அளவில்லா ஆனந்தமும் கொள்ள வைக்கிறது. ஏதேதோ எண்ணங்கள் ஆக்கிரமிக்க, மனதளவில் சோர்ந்து, கண்களில் நீர் திரையிடுவது கூட அறியாமல் படுத்திருந்தான் விஷ்வா.

"விச்சு" தம்பியின் குரல் கேட்டு
இயல்பிற்கு மீண்டவன்  கண்களை துடைத்து கொண்டான். "வாடா"

ஒரே பார்வையில் தமையனின் நிலையை புரிந்து கொண்ட அர்ஜுன் அவனை ஆரத்தழுவினான்.

"எவ்வளவு வருஷம் ஆச்சு விச்சு உன்னை சந்தோஷமா  பாத்து. இந்த ரெண்டு நாள் நிஜமாவே ரொம்ப நிம்மதியா இருந்தது டா. ஏண்டா உன்னை நீயே இப்படி கஷ்டப்படுத்திக்கறே? நீ இப்படி இருக்கும் போது கல்யாணம் பண்ணிக்க எனக்கு இஷ்டமேயில்லடா, ரெண்டு மூணு நாளா எதை காரணம் காட்டி கல்யாணத்தை தள்ளி போடுறதுனு யோசிச்சுட்டு இருக்கோம் நானும் அவளும்" என்று கிட்டதட்ட அழுதேவிட்டான்.

அர்ஜுனின் பேச்சில் அதிர்ந்து விழித்தான் விஷ்வா. உச்சபட்ச கோபத்தில்,

"பைத்தியமாடா நீ? அறைஞ்சு பல்லை கழட்டிடுவேன் ராஸ்கல். உன் இஷ்டத்துக்கு கல்யாணத்தை தள்ளி போடுறேன்னு சொல்ற, ஆனா அவ நிலைமையை யோசிச்சியா? முதல்ல உனக்கு அந்த ஆப்ஷனே இல்லை. மறந்திட்டியா? ஜாதகப்படி இருபத்தி ஆறு வயசுக்குள்ள உனக்கு கல்யாணம் நடந்தாகணும் அதாவது அடுத்த ஜூலைக்குள்ள, இல்லைனா உன் உயிருக்கு ஆபத்து இருக்குனு சித்தர் சொன்னதை மறந்துட்டியா? இதை நினைச்சு அவ மனசு எவ்வளவு பாடுபடும்னு யோசிச்சியா?"

"கத்துடா நல்லா இன்னும் பெருசா கத்து. வீட்டுல யாரும் இல்லை தைரியமா கத்து. நான் கலாட்டா பண்ணிட்டு சுத்துறதால நான் பைத்தியக்காரன்னு தான நினைச்சிட்டு இருக்க? ஆனா என் மனசு படுற பாடு உனக்கு எங்கே தெரியும்? ஒரு பக்கம் நீ சின்ன வயசுலேந்து எதேதோ சங்கடத்தில இருக்க. இன்னொரு பக்கம் பூரணி ஆக்சிடெண்டாகி அவளை தேத்துறதுக்குள்ள நானும் சுகுவும் பட்டபாடு. நீ என்னடான்னா திடீர்னு வந்து உங்க லவ்வை பத்தி சொன்ன. உங்க ரெண்டு பேரையும் எப்படி சேத்து வைக்கணும்னு நானும் அவளும் மண்டையை பிச்சிட்டு இருக்கோம். நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிருக்கும் போது நாங்க எப்படிடா சந்தோஷமா இருக்க முடியும்? மடையா! முடியலை விச்சு, சுயநலமா யோசிக்கிற மாதிரி இருக்கு டா."
கோபமாக தொடங்கி ஆற்றாமையில்  புலம்பி தீர்த்தான் அர்ஜுன்.

அவன் கூற்றில் நியாயம் இருந்தததால் விஷ்வாவால் எதுவும் பேசமுடியவில்லை. உடன்பிறந்தவனாக இருந்தால் கூட இப்படி பாசம் காட்ட முடியுமா என்பது தெரியாது. அர்ஜுனை அணைத்துக்கொண்டு மன்னிப்பு கேட்டான்.

"ஸாரி டா. உன்னை பத்தி தெரிஞ்சும் நான் பேசினது தப்பு." அவனை தன்னிடமிருந்து விடுவித்து "நான் என்ன பண்ணட்டும் சொல்லு? அவசரப்பட்டு அவகிட்ட ப்ரபோஸ் பண்ண பயமா இருக்கு டா" பேசிக் கொண்டிருக்கையிலே அவன் கைபேசி அலறியது. சுகந்தி தான் அழைத்தாள், ஸ்பீக்கரில் போட்டான்.

"அண்ணா, பூரி இப்ப தான் கால் பண்ணினா. அவங்க நாளன்னைக்கு வீடு மாத்துறாங்க. அடையார் போக போறாங்க. எனக்கு எதோ தப்பா படுது. காலைலேருந்தே மனசு சரியில்லை யாருக்கும் சொல்லலை நான். ப்ளீஸ் அவகிட்ட பேசுங்க, விஷயத்தை சொல்லிட்டு ரொம்ப அழறாண்ணா. ரெண்டு நாள் சந்தோஷமா இருந்தேன் உடனே இப்படி ஆயிடுச்சு பாரு என் ராசி அப்படின்னு ஃபீல் பண்றா"

"சுகி நீ அமைதியாகு நான் அவனை பேச சொல்றேன்" அர்ஜுன் அவளை சமாதானம் செய்தான். விஷ்வா அமைதியாக உட்கார்ந்திருக்க, அவன் மனதில் என்ன ஓடுகிறது என்பதை கணிக்க முடியாமல் தவித்தான் அர்ஜுன்.

"விச்சு" அவனை உலுக்கினான்.

கடிகாரத்தை பார்த்த விஷ்வா, "எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் குடு." பேசிக் கொண்டிருக்கையில் பெரியவர்கள் வந்துவிட அமைதியாகினர்.

இரவு அலுவலகத்திலிருந்து அர்ஜுனுக்கு அழைப்பு வந்தது. முகம் இருண்டு போய் அமர்ந்திருந்தான். அதே நேரம் விஷ்வா அவசரமாக கதவை தட்டி உள்ளே வந்ததும் மூர்த்தியும் கவலை கொண்டார். 

"அர்ஜுன் எங்க?" அவர் கண் ஜாடை காட்டியதும் அவன் அறைக்கு விரைந்தான் அவரும் பின் தொடர்ந்தார்.
மூர்த்தி அறை கதவை தாழிட்டு அவனிடம் விவரம் கேட்டார்.

இரவு பத்து மணிக்கு மேல் மும்பை அலுவலகத்திலிருந்து ஒரு மெயில். கட்டிடம் தரமற்ற கட்டுமான பொருட்களால் கட்டப்பட்டிருப்பதாகவும், ஏமாற்றி சான்றிதழ்கள் பெற்றதாகவும் யாரோ பொய் தகவலை பரப்பி அரசாங்கத்திற்கு புகார் கொடுத்திருந்தனர்.

இதை குறித்து அந்த வணிக வளாகத்திற்கு சொந்தகாரர்களான  பிரபல ஜே.என். க்ரூப்பின் தற்போதைய டைரக்டர் இவர்களின் மும்பை அலுவலகத்திற்கு மெயில் அனுப்பியிருந்தார்.

'முன் விரோதம் காரணமாக சிலர் செய்யும் சதி, உங்கள் கட்டுமான தரத்தில் எந்த தவறும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம். நாளை அரசாங்க துறையினர் ஆய்வுக்கு வருகிறார்கள் ஆதலால் உங்கள் பணியாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். உங்கள் கம்பெனிக்கும் எந்த சட்ட பிரச்சினையும் வராது எங்கள் சட்ட வல்லுனர்கள் உடன் இருப்பார்கள் உங்கள் பாதுகாப்பிற்காக'  என உறுதி அளித்திருந்தார்.
நாளை யாரும் விடுப்பு எடுக்காமல் சைட்டில் இருக்கவேண்டும் என உத்தரவிட்டு மெயில் அனுப்பியிருந்தார் டைரக்டர்.

"அர்ஜுன், ஸ்டீபன் அப்புறம் இன்னும் ரெண்டு ப்ராஜெக்ட் மானேஜர்ஸ் பேர்ல தான் இன்டைரக்டா கம்ப்ளெயின்ட் சித்தப்பா." விஷ்வா விளக்கினான்.

"டேய்.. அர்ஜுன். இங்க பாரு. நீ தப்பு பண்ணலை அதுக்கு மேல கலங்க என்ன இருக்கு.  இதெல்லாம் வேலை செய்யிற இடத்துல சகஜம். அம்மாவுக்கு தெரியாம பாத்துக்க. என்ன வந்தாலும் அப்பா இருக்கேன் உன் கூட. அமைதியா தூங்கு".

இருவரும் அறையை விட்டு வெளியேறியதும்,
"சித்தப்பா பயப்படாதீங்க நான் அங்க தான இருக்கேன், நான் அவனை பாத்துக்கறேன்." அவருக்கு சமாதானம் சொன்னாலும் விஷ்வாவும் கொஞ்சம் கலங்கித்தான் போயிருந்தான். அர்ஜுனுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும் கண்டம், சுகந்தியின் உள்ளுணர்வு, இப்போது கிளம்பியிருக்கும் சிக்கல், எதையோ கோடிட்டு பயமுறுத்துவது போல இருக்க, அவன் விரல்கள் தானாக கழுத்தில் கிடந்த டாலரை பற்றியது கண்மூடி பிரார்த்தித்தான். இன்னும் ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தம்.

Word count: 2070

Author's note:
ஹலோ மக்களே!

By far the longest chapter!

விஷ்வா, பவித்ராவை தத்து எடுக்கற இந்த முடிவு பத்தி என்ன நினைக்கிறீங்க?

விஷ்வா ப்ளான் பண்ணினது காலைல பூரணிகிட்ட ப்ரபோஸ் பண்ணதான், ஆனா பவி பாப்பா பத்தின நியூஸ்ல மூட் ஆப் ஆகிட்டான். ☹

பூரணி & பேமிலி வீடு ஷிஃப்ட் ஆகபோறாங்க 🥺🥺

அர்ஜுன் ஆபிஸ் பிரச்சினை ஈஸியா ஸால்வ் ஆகுமா? இல்லை சுகந்தி பயப்படுறா மாதிரி எதும் ப்ராப்ளம் ஆகுமா?

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro