Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 18

வெள்ளை கம்பளி போர்வை போர்த்தி, நீலவானப் படுக்கையிலிருந்து துயில் கலைந்தான் ஆதவன். அமைதியாய் கிடக்கும் வீட்டில் சுட்டி பிள்ளை விழித்ததும் வீடே கலகலத்து உயிர்ப்பிப்பது போல சூரியகிரணங்களின் முதல் வீச்சில் உயிர்த்து எழுந்தது பூமி.

கீழ்வானில் அடர்த்தியாக படர்ந்த செம்மை, கதிரவன் வானில் மெல்ல மேலே உயர உயர, மஞ்சளாக மாறும் அதிசயமும் அழகும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

'மஞ்சள் பூசிய வான் மகளின் நெற்றியில் இட்ட குங்குமப் பொட்டாக கதிரவன் ஒளிர்ந்தான்' - எங்கோ படித்த ஞாபகம்! காலை நேர கடற் காற்று மிதமான குளிருடன் வீச, ரம்மியமான அந்த காட்சியை பாணடிச்சேரியின் ப்ரோமனேட் பீச்சின் (Promenade Beach) கருங்கல் பாறைகள் மீது அமர்ந்து ரசித்து கொண்டிருந்தது நண்பர்கள் குழாம்.

"சார்" அமன்தீப்பின் ஓட்டுனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் சூடான தேநீர் கோப்பைகளோடு. தேநீர் குடித்துவிட்டு பேசியபடி காலார நடந்து கொண்டிருந்தனர் கடற்கரையோரம். ஆதர்ஷும் அனிதாவும் தனியே பேசியபடி நடந்து கொண்டிருந்தனர்.

அவ்வப்பொழுது விஷ்வாவின் பார்வை தன்னவளை தழுவி மீள, அவனிடம் கட்டுண்டவளாய் அவளின் கவனமும், பார்வையும் அவனைத்தேடியே வந்து போனது இதழ்கடையோரத்தில் ஒரு சிறிய நாணப் புன்னகையோடு. அந்த மோகனப் புன்னகை அவன் கண்களுக்கு தப்பவில்லை. ஒரு மாத விலகலும் அதற்கான காரணம் இரண்டுமே அவனை அளவுக்கதிமாக வதைத்திருந்தது.

இனி அவளை விட்டு பிரிவதென்பது இயலாத காரியம் என்பது உறுதி. டெல்லியில் இருந்தபோது ஏற்பட்டிருந்த பிரிவை காலத்தின் கட்டாயம் என ஏற்றுக் கொண்டான் மிகுந்த வலியோடு. ஆனால் பூரணியை சந்தித்த பிறகு இந்த சிறிய இடைவெளி கூட உயிர் பறிப்பதாய் இருந்தது அவனுக்கு. 'எப்ப ஜானு? எப்ப நாம சேரப்போறோம்?' உள்ளம் தவிக்க,

"என்ன பார்வை உன்தன் பார்வை? என்னை மறந்தேன் இந்த வேளை!"

அர்ஜுன் இவர்களை மையமாக வைத்து கிண்டலாக பாட தொடங்கினான். சிலருக்கு புரிந்துவிட, மற்றவர்கள் அவன் சுகந்திக்காக பாடுவதாக நினைத்திருந்தனர்.

"வண்ண வண்ண சேலை தொட்டு கண்ட சுகம்"
விஷ்வா அவனை மொத்த ஆரம்பிக்க

"அம்மா" (அடி) "அம்மா"(அடி) அம்மாஆஆஆ"
என வலி தாங்காமல் கத்திக்கொண்டே அர்ஜுன் ஓட, விஷ்வா அவனை துரத்தினான்.

சிரித்துகொண்டே அர்ஜுனை முதுகில் அடிக்க கை ஓங்கியதும் தப்பிக்க வேண்டி அர்ஜுன் தண்ணீரை அவன் மீது வாரி அடிக்க, விடாமல் விஷ்வா அவனை விரட்டியதில் இருவரும் அலையில் விழுந்தனர். விளையாட்டாய் அவனை அலைகளில் புரட்டி எடுத்தான். சுற்றி நின்று அனைவரும் சிரித்து கொண்டிருந்தனர்.

"போதும் டா நீங்க ரெண்டு பேரும் ஜலக்கிரீடை பண்ணது. சீ எந்திரிச்சு வெளிய வாங்க. கர்மம்! கர்மம்!" ஷம்மு தலையிலடித்து கொண்டாள்.

சந்தீப், அமன், வீணா மூவரும் அர்த்தம் தெரியாமல் விழிக்க, சுகந்தி, பூரணி, ஆதர்ஷ் அனிதா அனைவரும் கொல்லென சிரிக்க தொடங்கினர்.

மூச்சிறைக்க எழுந்து உட்கார்ந்த அர்ஜுன், "ஜலக்கிரீடையா? ராட்சசி! இது கூடயா?" முகத்தில் வடிந்த தண்ணீரை துடைத்துவிட்டு விஷ்வாவை கைகாட்டினான்.
பிறகு "விச்சு! அவனா டா நீ?" என திகைத்து விழிக்க

விஷ்வா சிரித்துக் கொண்டே, "ச்சீ பரதேசி" அவனை விளையாட்டாய் எட்டி உதைத்து மீண்டும் தண்ணீரில் தள்ளியதும் அவன் கையை ஊன்றி சுதாரித்தான்.

"பின்ன என்ன நான் என் டார்லிங்க் கூட இப்படி விழுந்து..." அதற்கு மேல் அவன் பேசவிடாமல் விஷ்வா அவன் வாயை கைகொண்டு பொத்தினான்.

சுகந்தி 'ஐயோ சரியான மென்டல்' என முகம் சிவந்து தலையில் அடித்து கொள்ள, மற்றவர்கள் சிரித்தனர்.

ஷம்மு இருவர் மீதும் சிறிய கல்லை எறிந்து, "டேய் எந்திரிச்சு வாங்கடா. ப்ரேக்ஃப்ஸ்ட் சாப்பிடபோலாம்".

அசராத அர்ஜுன் "என்னடி ஷம்ஸு திடீர்னு கல்லை கொண்டு எரியிற? படாத எடத்துல பட்டு எதாச்சும் சேதாரம் ஆகிட போகுது டி... இன்னும் வாழ்க்கையில எதையுமே பாக்காத கன்னி பசங்க டி நாங்க. டேய் தீபு சொல்லுடா, நீயாச்சும் சில பல..." காலி தண்ணீர் பாட்டில் அவன் தலை மீது விழுந்தது. ஷர்மிளா மெல்ல காளி அவதாரம் எடுக்க தொடங்கியிருந்தாள்.

"ஐயோ! அர்ஜுன் மானத்தை வாங்கற டா. வாயை மூடிட்டு எந்திரிச்சு வா. இல்லை நானே அடிப்பேன் உன்னை" சுகந்தி அவனை மிரட்டிவிட்டு,
"அண்ணா அவனை ரெண்டு போட்டு இழுத்துட்டு வாங்க ப்ளீஸ்" முகம் சுருக்கி விண்ணப்பித்தாள் விஷ்வாவிடம்.

பூரணியும் அவளும் மீண்டும் நடக்க தொடங்கினர் அர்ஜுன் செய்த சேட்டையை பற்றி கிண்டலடித்தபடி.

பூரணியின் கைபேசி ஒலிக்க, "ஹேய் அம்மா கால்! மா சொல்லுங்க."
உற்சாகமாக அழைப்பை ஏற்றாள். இருவரும் கோகிலாவிடம் பேசிக் கொண்டே நடந்ததில் அனைவரையும் விட்டு சற்று தள்ளி வந்திருந்தனர்.

"பூரி ரொம்ப தள்ளி தனியா வந்துட்டோம் டி. வா போகலாம்". சுகந்தி அவள் கையைபற்றி இழுத்துக்கொண்டு திரும்ப, அர்ஜுனும் விஷ்வாவும் நின்றிருந்தனர். அர்ஜுன் சுகந்தியை சமாதானம் செய்ய முற்படுகையில் அவள் செல்ல கோபத்தோடு முறுக்கி கொண்டு தோழியோடு கைகோர்த்துக் கொண்டாள். அர்ஜுன் இருவரையும் பரிதாபமாக மாறி மாறி பார்த்தான்.

"அய்ய உங்க ஆட்டத்துக்கு என்னை இழுக்காதீங்க டா, நான் வரலை!"
என பூரணி கையை உருவிக்கொண்டு நகர்ந்து சென்றாள், அவர்களுக்கு தனிமை அளித்து.

"பூ குட்டி..." சுகந்தியின் கெஞ்சல் அவள் நாயகனை கரைத்தது. சடக்கென பாய்ந்து அர்ஜுன் அவளை கைகளில் ஏந்தி கொள்ள வெட்கத்தில் தவித்து போனாள் சுகந்தி.

"அஜ்ஜு என்ன பண்ற? விடு, பப்ளிக்ல.. ஐயோ வெட்கமா இருக்கு டா, அஜ்ஜு ப்ளீஸ்!"

"அடியே சம்சாரம்! நம்மை பார்த்தாவது உன் அண்ணனுக்கும், என் தங்கச்சிக்கும் ஒரு மூடு செட்டாகட்டும்" என்றான் ரகசிய குரலில்.

"எது மூடா? டேய் என்னடா?" அவள் பீதி அடைய

" நான் காதலிக்குற மூட் சொன்னேன். நீ?" யோசனையாக நின்றுவிட்டு நல்லவன் போல, "ஐய்ய்யோ நீ அதை? ஓஹோ! நாட் பேட் பேபி! (Not bad baby)"
என அவள் நெற்றி முட்டியவன், "என் பொண்டாட்டி தேறிட்டா. அர்ஜுனா உன் உழைப்பு வீண் போகலைடா." பெருமையாக அவளை பார்த்து கண்சிமிட்டி உதட்டை குவித்தான்.

அவர்களை பார்த்த நண்பர்கள் கூட்டம் விசிலடித்து குதூகலப்படுத்த, ஆரவாரத்திற்கான காரணம் அறியாத பூரணி திரும்பியதும் புன்னகையில் அவள் முகம் மலர்ந்தது. அதே நேரம் சுகந்தி வெட்கம் தாங்காமல் அர்ஜுன் மார்பில் சாய்ந்து முகத்தை மறைத்து கொண்டாள். அவர்கள் இருவரையும் மனநிறைவுடன் பார்த்து சந்தோஷமடைந்தாள் பூரணி.

"என் தம்பி லக்கி" தனக்கு மிக அருகில் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள் பூரணி. அவளை கீழ் பார்வை பார்த்தவன், "கரெக்ட் தான?"

ஆமோதிப்பாய் தலையசைத்தாள். மீண்டும் நடக்கத் தொடங்கினர்.

"ரெண்டுபேரும். They deserve each other and they compliment each other." சில வினாடி அமைதிக்கு பின் பூரணி தொடர்ந்தாள்.

"சுகந்தியோட innocent and soft nature யாரு வேணாலும் exploit பண்ணமுடியும் ஆனா அர்ஜுன் .வெளியே பார்க்கிற மாதிரி இல்லை. எல்லாரையும் ரொம்ப சைலண்டா வாட்ச் பண்ணி எடை போடுவான், பெரிய மாமா மாதிரி. ஸோ அவளுக்கு பாதுகாப்பு அரண் அவன்.

அவனோட விளையாட்டு சுபாவத்தை வச்சு அவனை நிறைய பேர் தப்பா எடைபோடுவாங்க. சில சமயம் இந்த விளையாட்டுதனமே எல்லை மீறிடும், இப்ப பார்த்த மாதிரி. அந்த இடத்துல அவளோட calm and collective thinking கை கொடுக்கும். அவ பயந்த சுபாவம் தான் ஆனா நிதானமா யோசிக்ககூடியவ, எந்த சூழலையும் ரொம்ப பொறுமையா கையாளுவா."

சில வினாடிகள் அமைதியாக கடந்தது.

"அப்ப நான்?" அவன் கேள்வியின் அர்த்தம் புரியாமல் பார்வையை அவன் பக்கம் திருப்பினாள்.
"என்னைப் பத்தி அனலைஸ் பண்ணி சொல்லுவியா?" லேசான ஏக்கம் இழையோடியது அவன் குரலில்.

'இல்ல கொஞ்ச நாளா தான பழக்கம்' என சொல்லி தவிர்த்துவிட மூளை யோசித்தது.
இதயமோ 'ஆழ்ந்து யோசிச்சா பதில் கிடைக்கும் அதே போல உன் மனசில இருக்குற கேள்விக்கு விடையும்' என நம்பிக்கை கொடுத்து உந்தி தள்ளியது.

அவனிடமிருந்து பார்வையை விலக்காமல்,
"உன் அமைதியும், இறுக்கமான குணமும் வெளியேயிருந்து பாக்க நீ egoistic அப்படீன்னு தோணும். ஆனா அது நீ உன் உணர்ச்சிகளை திரை போட்டு மூடும் நடிப்புன்னு நெருக்கமானவங்களுக்கு தான் புரியும். நீ கோவக்காரன் தான், ஆனா நியாயமான விஷயங்களுக்கு மட்டுமே உன் கோபம் - பாரதியின் ரௌத்திரம் பழகு கோட்பாடு உன்னோடது."

அவன் உள்ளத்தின் உவகை முகத்தில் மெல்ல பிரதிபலிக்க, அவளை ஆழ்ந்து நோக்கினான், 'மேலும் சொல்' என்பதாய் இருந்தது அதன் அர்த்தம்.

"இந்த ஹல்க் (Hulk) பின்னாடி இருக்கிற ப்ரூஸ் பேனரை (Bruce Banner) அடையாளம் காணுறது ரொம்ப கஷ்டம்." அவனிடமிருந்து எதையோ எதிர்பார்ப்பது போல அவள் விழிகள் அவனை துளைத்தன.

அந்த விழி வீச்சில் கட்டுபட்டவனாய்,
"நான் ஹல்க் னா, என்னோட பெட்டி (Betty Ross) யாரு?"

கேட்கபடாத கேள்விகளும், உறைக்கபடாத விடைகளும், அறிய விழைந்த உண்மைகளும் உள்ளக்கதவை தட்ட; எதையும் செயல்படுத்த முடியாத ஒரு மோன நிலையில் கட்டுண்டு இருந்தன இரு மனங்களும்.

வாய் வார்த்தைகளாக உறைக்கவில்லை எனினும் உள்ளுணர்வு அறிவுறுத்தியது ஒருவருக்கொருவர் கொண்டிருந்த காதலை. மெல்ல அவள் கரம் பற்றியது அவனது விரல்கள் தன்னிச்சையாக.

"இந்த ஹல்க்கை அன்பால கட்டுபடுத்துற என் பெட்டி (Betty) யாருன்னு தெரியுமா?" ஆழ்ந்து ஒலித்தது அவன் குரல்.

உள்ளங்கள் கடத்திக்கொண்ட சங்கேத மொழியில், பூரணிக்குள் ஒரு அதிர்வலை.

'அதை தெரிஞ்சுக்க தான தவிக்கிறேன்....' உதடு வரை வந்த வார்த்தைகள் ஏனோ உள்ளேயே உரைந்துவிட்டன. பூரணியின் கைபேசி ஒலியில் இயல்பிற்கு மீண்டனர் இருவரும். புதிய எண்ணிலிருந்து வந்த அழைப்பை ஏற்கவில்லை அவள். நண்பர்கள் கூட்டம் தொலைவில் ஒரு பாறை மீது அமர்ந்திருப்பதை கண்டனர். "வா போலாம்."

அதன்பிறகு பாண்டிச்சேரியின் மற்ற சுற்றுலா தலங்களுக்கு பயணமாகினர் அனைவரும்.

மாலை நேரம் சென்னை நகரின் மிக பிரசித்தி பெற்ற ஒரு சங்கீத சபா.

பரதநாட்டிய நிகழ்ச்சி முடிந்த பிறகு கலைஞர்கள் தயாராகும் ஒப்பனை அறையில்,

"ஸ்ரீரஞ்சனி மேடம்"
சபா செகரெட்டரி அழைத்ததும் பட்டுப் புடவை அணிந்திருந்த அந்த இளம் பெண் திரும்பினாள்.

"இவங்க உங்களை சந்திக்கணும்னு.." அவர் கை காட்டிய இடத்தில் ரஞ்சனியின் தாயார் வயதை ஒத்த ஒரு பெண்மணி நின்றிருந்தார்.

அவள் வணக்கம் தெரிவித்து குழப்பமாய் நோக்க, "இவங்க வள்ளியம்மா" என அறிமுகம் செய்துவைத்தார்.

"வணக்கம் மா, உட்காருங்க" அந்த பெண்மணியை வணங்கி அங்கிருந்த நாற்காலியை காட்டினாள் ரஞ்சனி.

"நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருந்தது மா. எனக்கு சங்கீதம் நாட்டியம்ல்லாம் ரொம்ப பிடிக்கும், ஆனால் முறையா கத்துக்கலை, ஞானமும் இல்லை ஆனா, ஈடுபாடு ரொம்ப அதிகம். நீ ஆடி பார்த்து இல்லை. ஆனா உன் அம்மாவோட நிகழ்ச்சிகளை பார்த்திருக்கேன். ரொம்ப சந்தோஷம்! அவங்களை விட பேரும் புகழும் பெற்று மேன்மேலும் வளரணும்" தலைகோதி ஆசிர்வதித்து விட்டு புறப்பட்டார்.

அவரின் அன்பும், அமைதியான பாங்கும், மனமுவந்து ஆசிர்வதித்த விதமும் ரஞ்சனியின் உள்ளத்தை நிறைத்தது. அடுத்த அரைமணி நேரத்தில் அன்று நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியரை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்து சபாவை காலி செய்து வெளியேற, ஐப்பசி மாத தொடக்கத்தை அறிவிக்க வந்தது மழை.

கார் ஓட்டுனரை அழைத்து விட்டு காத்திருக்க, நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலர் திடீர் மழையிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வாயில் அருகே கூடியிருந்தனர்.

ரஞ்சனியின் கைபேசி அதிர்ந்து அழைப்பை அறிவித்தது.

"என்னங்க? எங்க நினைவெல்லாம் இருக்கா?"

"--"

"ரொம்ப மிஸ் பண்றதால தான் வெகேஷன்ல போனீங்களோ?"

"---"

"ஆஹான்? சரி.. இந்த சென்ட்டி டயலாக் துர்காம்மா கிட்ட செல்லுதான்னு பாக்கலாம். அடுத்த ப்ரோக்ராமுக்கு நீங்க இல்லை, அதோட தொலைச்சு தலை முழுகிடுவேன் ராஸ்கல். சரி வந்துட்டு ஃபோன் பண்ணு". பேசிமுடித்து திரும்ப வள்ளியம்மாள் அருகில் இருந்தார்.

"மேம் நீங்க? நான் வேணா டிராப் பண்ணவா?"

"இல்லைமா, என் பையன் வந்திருக்கான். யாரு ஃபோன்ல உன் கணவரா?"

"அச்சோ எனக்கு கல்யாணம் ஆகலை மா. அம்மாவோட சீனியர் ஸ்டூடண்ட்ஸ். இன்னிக்கு ப்ரோகிராமுக்கு வரலைன்னு..." கார் ஹாரன் சப்தமும் வள்ளியம்மாளின் கைபேசி சப்தமும் ஒன்றாக ஒலிக்க

"என் மகன் வந்திட்டான். நான் வரேன் தாயி" என்றவாறு குடையை பிரித்து படிகளில் இறங்கினார்.

ரஞ்சனியின் கார் அவர் காருக்கு பின்னால் நிற்க அவளும் வேகமாக இறங்கினாள், வள்ளியம்மாள் காரில் அமர்ந்து கதவை சாற்றியதும் ஏதோ கீழே விழுந்தாற் போல தோன்றியது ரஞ்சனிக்கு.

வேகமாக குனிந்து பார்க்க, "அச்சோ நெக்லஸ்"
கார் மெல்ல நகர தொடங்கியது.

பதட்டமாக கார் கண்ணாடியை தட்டி, "வள்ளிம்மா, வள்ளிம்மா" என சத்தமாக அழைத்தாள்.

கார் சடக்கென நின்று கதவு திறந்ததும், "என்னம்மா?" என்றார் அவர் குழப்பமாக.

"மா இது உங்க கழுத்துலேருந்து நழுவி விழுந்தது, வண்டியில ஏறும் போது".
வைர அட்டிகை அவர் கைக்கு இடம் மாறியதும் நிம்மதி பெருமூச்சு வெளியேறியது ரஞ்சனியிடமிருந்து.

தன் கழுத்தை தொட்டு பார்த்தவர் முகத்தில் முதலில் பயமும் பிறகு நிம்மதியும் குடிகொண்டது. "ரொம்ப நன்றி மா இந்த இருட்டுலையும் கவனிச்சிருக்கியே. ரொம்ப நன்றி" அவர் உணர்ச்சிவசப்பட, வரிசை கட்டி நின்ற வாகனங்களின் ஹாரன் சத்தம் காதை துளைத்தது.

"பரவாயில்லை மா. கவனமா இருங்க. நாம அடுத்த முறை சந்திப்போம். நீங்க நல்லபடியா போய்ட்டு வாங்க" என்று கார் கதவை அடைத்து அவரை வழியனுப்பினாள்.

கார் நகர்ந்ததும், திகைப்பிலிருந்தவரை "அம்மா, அம்மா" என்ற மகனின் குரல் திசை திருப்பியது.

"என்னய்யா?" நிமிர்ந்து முன்னிருக்கையிலிருந்த மகனை பார்த்து. "கொக்கி தேஞ்சு போயிருக்காட்ருக்கு தம்பி. இந்தா நம்ம செட்டியாருட்ட குடுத்து என்னன்னு பாக்க சொல்லுய்யா" அட்டிகை மகனின் கைக்கு மாறியது.

அட்டிகையை இடது பக்க கோட் பாக்கெட்டில் பத்திரப் படுத்தியதும், வெளியே கொட்டிய மழையிலும் தார் சாலையிலும் நிலைத்தன அவன் கண்கள். இடியும் மின்னலுமாய் வெளியே நகரம் களைகட்ட தொடங்கியிருந்தது. சற்றுமுன் மின்னல் வெளிச்சத்தில் கண்ட முகம், இதமான மழை சாரலாய் மனதை நனைக்க தொடங்கியிருந்ததை மறுக்க முடியவில்லை.

"அம்மா" ஓட்டுனர் இருக்கையிலிருந்தவர் அழைத்ததும்,

"என்ன மணி?"

"அந்த மேடம்... அவங்க வீடு எங்கன்னு தெரியுமா? இல்ல அடுத்த ப்ரோக்ராம் எப்பன்னு.."
மணி மேசுவதை இடையிட்ட வள்ளியம்மாள்.

"ஏன் மணி எதுக்கு பா?"

"இல்லைங்கமா வைர அட்டிகை தவறைவிட்டதை பாத்து எடுத்து குடுத்துருக்காங்க. நன்றி சொல்லவேணாமா?"

"அது தெரியலையே. அவ பிரபல பரதநாட்டிய கலைஞர் துர்கா சத்யசீலன் அவுக மக, ஸ்ரீரஞ்சனின்னு தெரியும். வீடு?"

"அது போதுமே அந்த சபாவுல விசிரிச்சா சொல்லுவாங்க. இல்லைனா நம்ம சார் பர்மிஷன் குடுத்தா நானே விசாரிக்கிறேன்" என்றான்.

கண்ணை மூடி இருக்கையில் அமர்ந்திருந்தவனோ, "மணி.." எச்சரிக்கையாக ஒலித்தது குரல் "நான் ஒரு வேலை சொல்லி ஒரு மாசம் ஆகுது. ஞாபகம் இருக்கா?" ஒன்றும் தேவையில்லை என எச்சரித்தது அவன் குரல்.

"ஏ அய்யா, நானே நினைச்சேன் மணி சொல்லிட்டான். அவுக விலாசம் விசாரி கண்ணு." அவன் மறுப்பாக பேச வரவும் "இது உங்க ஆயி (பாட்டி) கழுத்தோட கெடந்த நகை, படுக்கையில விழுந்தவக என்கிட்ட கொடுத்தது. பரம்பரை நகை".
அத்தோடு பேச்சை முடித்து கொண்டவர், வீடு வந்ததும் தன்போக்கில் இறங்கி சென்றுவிட்டார்.

காரை விட்டு இறங்கியதும், "அம்மாவுக்கு நீ தான வாக்கு குடுத்த, நீயே கண்டுபிடி அவங்களை". மடிக்கணினியை எடுத்துக் கொண்டு அவன் உள்ளே செல்ல படிகளில் ஏறினான்.

"அம்மா கிட்ட சொன்னது சாக்கு. வாக்கு உங்களுக்கு தான் பிரகாஷ் சார்" என்றான் மணி நமட்டு சிரிப்பை அடக்கியபடி.

இரண்டு படி ஏறியவனின் கால்கள் உறைந்தன.
"பர்ஸனல் அஸிஸ்டெண்ட் வேலையை ராஜினாமா பண்ணிட்டு கல்யாண தரகர் வேலை பாக்கபோறியா மணி?"
முகத்தில் இறுக்கம்.

"உங்களுக்காக அம்மாவுக்காக அதையும் பண்ணிடலாம் சார்"

திரும்பியவன் "யோவ் போயா" என்று சலித்துகொண்டு "நாளைக்கு மார்னிங்க் ஒன்பது மணிக்கு மீட்டிங்க் இருக்கு மணி" என்றபடி உள்ளே சென்று தன் அறையில் அடைந்து கொண்டான் பிரகாஷ் நந்தகோபால். கோட்டை கழற்றி படுக்கையில் வீசியதும் காத்திருந்தாற் போல, பாக்கெட்டிலிருந்து நழுவி வெளியே வந்தவிழுந்தது வைர அட்டிகை. மின் விளக்கொளியில் ஒளிர்ந்த வைரக்கற்கள் அவளின் கண்களை நினைவூட்டியது.

ஸ்ரீரஞ்சனி

Author's note
Prakash  Nandagopal's character intro happened in chapter 17.

Who is SriRanjani? Any guess?


Date published: Nov 13, 2021

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro