Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 13

Published: August 15, 2021

வெளிநாட்டு கார் நிறுவனம் ஒன்று இந்தியாவில் கிளை தொடங்குவதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கியிருந்தது. அவர்களின் தொழிற்சாலையின் கட்டுமானம், தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு, வேலைகள் நடந்துகொண்டிருந்தது. அவர்களின் அலுவலகம் மற்றும் நிறுவனத்தின் மேல் மட்ட ஊழியர்களுக்கான வீடுகள் சென்னையில் கட்ட, டெண்டர் அறிவிக்க, அதை கைபற்றியது மும்பையை சேர்ந்த,'Raaje & Mukhadam Associates' என்கிற R & M Associates.

அர்ஜுன் இந்த நிறுவனத்தின் சென்னை கிளையில், சைட் என்ஜினியராக வேலையில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. தற்போது சென்னையின் மைய பகுதியில் ஒரு ஷாப்பிங்க் மால் கட்டும் ப்ராஜக்டில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றுகிறான். மால், கட்டிமுடித்து ஒப்படைக்கும் தருவாயில் இருந்ததால் பணி சுமை கூடியது.

விஷ்வா அந்த புதிய ப்ராஜக்டில் ஆர்கிடெக்டாக பணி அமர்த்தல் பெற்றிருந்தான். புதிய வேலை, டிரெய்னிங்க், மீட்டிங்க் என பணிச்சுமை அவன் வரவுக்காக காத்திருந்தது போல தோள்களில் ஏறி கொண்டது. இருவரும் வீடு திரும்ப மணி எட்டை தாண்டியது.

மாலை நேர டியூஷன் வகுப்புகளை முன்பு போல் சுகந்தியும், பூரணியும் தங்கள் சுழற்சி வரும் நாளன்று தொடர்ந்தனர் செமஸ்டருக்கு நடுவே. யாமினியும் இணைந்து கொண்டாள், ஆனால் முன்பு தான் நடந்து கொண்டவிதத்திற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு.

"அம்மா கொஞ்சம் ஆடம்பரமா பகட்டா இருக்கிற டைப். அப்படி இருந்தா தான் மதிப்புன்னு சொல்லி வளத்துட்டாங்க. அது தவறுன்னு நான் இப்ப வேலைக்கு போக ஆரம்பிச்ச பிறகு உணருறேன். நான் முன்ன உங்கள்ட்ட நடந்துகிட்ட முறை தப்பு தான். ஸாரி!"

சுகந்தியும் பூரணியும் முதலில் முழு மனதாய் ஏற்கவில்லை ஆனால் நாள்பட அவள் உண்மையை தான் பேசினாள் என்பது அவள் நடவடிக்கையில் உறுதியானது.

"நீ எங்க வர்க் பண்ற யாமினி?"

"இன்டர்ன்ஷிப் பண்றேன் ஒரு ஆட்டோமொபைல் கம்பெனியில. அதோட எம்.பி.ஏ க்கு அப்ளை பண்ணியிருக்கேன். ஸோ கொஞ்சம் ப்ரீ டைம் இருக்கு ஈவ்னிங்க்ல. அப்பா கெமிக்கல் என்ஜினியர், துபாய்ல வேலை. அண்ணாவை தான் உங்களுக்கு தெரியுமே ஆதர்ஷ், அவன் டாக்டர். அப்பா எங்க கூட அதிகம் இருந்தது இல்லை. அந்த ஒரு இன்செக்யூரிட்டி அம்மாவுக்கு அதனால அப்படி நடந்துக்குவாங்க. சின்ன பிள்ளையில எல்லாரும் விளையாடும் போது எனக்கும் வரணும்னு ஆசையா இருக்கும் ஆனா அம்மா விட மாட்டாங்க. அவங்க சொல்றதை மீறி என்னால எதுவும் செய்ய முடியாது."

"படிப்பு, மார்க், ஆறு இலக்க சம்பளம், நகை, சொத்து, ஆடம்பரம் அவங்க தாட்ஸ் இப்படி தான். நாங்க என்ன படிக்கணும்னு டிசைட் பண்ணது கூட அம்மா தான். நான் டாக்டர் ஆக ஆசைப்பட்டேன். ஆனா எம்.டி முடிச்சு, டூ இயர்ஸ் கவெர்ன்மெண்ட் சர்வீஸ்
முடிஞ்சு கல்யாணம் பண்ணும்போது இருபத்தி ஏழு வயசாகிடும். அப்ப அதிகமா நகை, பணம் செலவாகும், நீ என்ஜினியருக்கு படி. அவன் டாக்டருக்கு படிக்கட்டும்னு கட்டாயபடுத்தினாங்க. இது கூட, சோஷியல் செர்வீஸ் பண்றோம்னு தெரிஞ்சா ஆபிஸ்ல அப்ரெய்ஸல், இன்க்ரீமெண்ட்க்கு யூஸ் ஆகும்னு பொய் சொல்லி தான் வர ஆர்மபிச்சேன் சுகந்தி. அன்னிக்கு நீங்க வீட்டுல வந்து கேட்டப்ப அம்மா உங்களை எதாச்சும் சொல்லிடுவாங்கனு தான் நான் அப்படி பேசிட்டேன்." மாணவர்களின் டெஸ்ட் பேப்பரை திருத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

"ஆமா அன்னிக்கு உன் கூட வந்தது உங்க அண்ணனா? நீ கூட புடவை கட்டியிருந்தியே..ரொம்ப நாளாச்சு அண்ணாவை பாத்து அடையாளம் தெரியலை"

சில நாட்களுக்கு முன் சந்தித்ததை நினைவு படுத்தினாள் பூரணி.

"ஆமா. கோவிலுக்கு போனாம் எல்லாரும். இங்க எங்க ரிலேட்டிவ் மூலமா ***** ஹாஸ்பிடல்ல வேலை கிடைச்சிருக்கு ஆதர்ஷுக்கு. அம்மா எதிர்பார்த்ததை விட அதிக சம்பளம். ஸோ அவங்க செம ஹாப்பி. அச்சோ! அம்மா கூப்பிடுறாங்க." ஜீன்ஸ் பாக்கெட்டில் அதிர்ந்த கைபேசியை இயக்கி காதில் வைத்தாள், "அம்மா இதோ டியூஷன் முடிஞ்சிருச்சு. இல்லை பேப்பர் கரெக்ட் பண்ணிட்டு இருந்தேன். டூ மினிட்ஸ்". பேப்பரை அவர்களிடம் கொடுத்துவிட்டு ஓடினாள்.

"எனக்கு என்னமோ அவ பேர்ல முழுசா நம்பிக்கை வரலை பூரி" சுகந்தி தீர்மானமாய் கூறினாள்.

"பாவம் டீ அவ, அவங்க வீட்டுல அந்த மாதிரி அவளை கன்ட்ரோல் பண்ணுனா அவ இப்படிதான் பிஹேவ் பண்ணுவா. சரி விட்டு தள்ளு, அவளை பத்தி கவலைப்பட்டு என்ன செய்யிறது? நாம என்ன அவளோட குடித்தனமா பண்ண போறோம்?"

சுகந்தியின் அம்மா பத்மா பாத்ரூமில் சறுக்கி விழுந்து, காலில் ligament tear, ஏற்பட்டு முழூ ஓய்வெடுக்கும் படி  ஆனது. வீட்டு பொறுப்பு சுகந்தியிடம் வந்து சேர மாலை நேர வகுப்பிற்கு அவள் வர இயலாமல் போனது. பூரணி மட்டும் சென்றாள் யாமினியோடு. மெல்ல நெருக்கம் அதிகமாக தன் மனக்குமுறல்களை பூரணியிடம் கொட்ட ஆரம்பித்தாள் யாமினி. ஒரு நாள் மாலை அழுது வீங்கிய முகத்தோடு அவள் உட்கார்ந்திருக்க, பூரணிக்கு சங்கடமானது.

"என்னை கேட்காம அம்மா ஏதோ கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றாங்க பூரணி. மாப்பிள்ளை ப்ளஸ்டூ தான் படிச்சிருக்கான், எங்க தூரத்து சொந்தமாம். பயங்கர பணக்காரங்க. போன வாரம் என் கஸின் கல்யாணத்துக்கு கோயம்புத்தூர் போனப்ப அவங்க என்னை பாத்துட்டு அம்மாகிட்ட கேட்ருகாங்க." நிறுத்திவிட்டு தேம்பி அழுதாள்.

"அவங்களுக்கு நிறைய பிஸினஸ் மில், துணி கடை எல்லாம் இருக்கு. படிப்பு என்னத்துக்குனு கேட்குறாங்க அம்மா. என்னோட ஆசையை புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. அந்த ஆளோட சித்தப்பா பொண்ணு டாக்டராம், அவளை அண்ணனுக்கும் இவனை எனக்கும்னு பேசுறாங்க. எனக்கு பிடிக்கலை. மனசுல ஒருத்தரை வச்சிட்டு எப்படி?" திடுக்கிட்டாள் பூரணி.

"யாமினி நீ லவ் பண்றியா? யாரை? அவங்களும் உன்னை லவ் பண்றாங்களா? சொல்லு. உங்க அண்ணன் கிட்ட சொல்லி பாரு யாமினி. அழுறதை நிறுத்து." போராடி அவள் அழுகையை கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

"அவங்களுக்கு என்னை பிடிக்கும்னு தான் நினைக்கறேன்."

"ஒரு தலை காதலா? எத்தனை வருஷமா? ஆபிஸ் கொலீக்கா? காலேஜா?" ஆர்வம் மின்னியது அவள் கண்களில்.

"ரெண்டும் இல்லை. ரொம்ப வருஷமா.. ஆல்மோஸ்ட் சின்ன வயசுலேருந்துனு வச்சிக்கோயேன். நம்ம சுகந்தி அர்ஜுன் மாதிரி.."

"வாவ்... ஆமா ஏன் ப்ரபோஸ் பண்ணலை?"

"அது கொஞ்சம் பயம்... அண்ணனோட ஃபிரண்டு அதான்.."

"அடிப்பாவி.. அண்ணனை பாக்க வீட்டுக்கு வந்தவரை சைட் அடிச்சிருக்க. ஆளு எப்படி?"

"அதெல்லாம் நல்லா தான் இருப்பான் பாக்க, ஆனா கொஞ்சம் ரிசர்வட் டைப். நான் அவனை லவ் பண்றேன்னு ரியலைஸ் பண்ணதே அவன் ஊருல இல்லாத நேரம் தான்."

"ஓ! ஃபாரின் மாப்பிள்ளையா? நடத்து நடத்து, அமெரிக்காவா?"

"போடி அவசரக்குடுக்கை. ஃபாரின்னு நான் சொன்னேனா? கொஞ்ச நாள் வெளியூர்ல வேலை பாத்துட்டு திரும்ப சென்னைக்கு வந்திட்டான். எனக்கு ஹெல்ப் பண்ணுடீ பூரணி".

"ஊர்ல இருக்கறவங்க லவ்வுக்கு தூது போக தான் எங்கம்மா என்னை பெத்து வச்சிருக்காங்ளா? போங்கடி! அதுவும் இல்லாம தெரியாத ஆள்கிட்ட நான் எப்படி போய் உனக்காக பேசுறது"?

"தெரியாத ஆள் இல்லை டீ, உனக்கு தெரிஞ்சவங்க தான். அது.. அது... விஷ்வா தான்."

அதற்குமேல் அவள் பேசியது எதுவும் பூரணியின் செவியை எட்டவில்லை. திடீரென்று அவளை பிடித்து உலுக்கினாள் யாமினி.

"என்ன பூரணி? ஹெல்ப் பண்றியா ப்ளீஸ்?"

உள்ளுக்குள் எழுந்த வலியை பொறுத்துகொண்டு, "நீ பேசி பார்த்தியா அவன்ட்ட?"

"இல்லை. தயக்கமா இருக்கு டீ".

"தோ பாரு! சுகந்தி அர்ஜுன் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறது தெரிஞ்சப்ப கூட நீங்க ரெண்டுபேரும் மனசு விட்டு பேசுங்கனு நான் விலகிட்டேன். இந்த விஷயத்துல மூணாவது மனுஷங்க தலையிட்டா சரி வராது."

"அவன் உன்னோட ஃபிரண்டு தான, அவனை பத்தி சொல்லேன்.."

"அவனுக்கு பொய் பேசினா பிடிக்காது, போலியா இருக்குறதும் பிடிக்காது. அது மட்டும் தான் என்னால சொல்ல முடியும்."

"ஓ கரெக்ட் நீ வேற ஆக்ஸிடெண்ட் ஆனதுல எல்லாத்தையும் மறந்திட்டேன்னு சொன்னே இல்லை, அவன் வேற இத்தனை வருஷம் ஊர்ல இல்லை உங்க ஃபிர்ண்ட்ஷிப்ல கேப் விழுந்திருக்கும். நான் ஒரு முட்டாள் உன்னை போய் தொந்தரவு பண்ணிட்டு. ஸாரி டீ!"

சாட்டையை சொடுக்கியது போல ஒரு வலி... யாமினி உண்மை உரைத்தபோது.

~~~~~~~

மறு நாள் கிருஷ்ண ஜெயந்தி, பூங்கா காலனியில் வழக்கம் போல் விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. விழாவில் பங்கேற்கும் மனநிலை இல்லை எனினும் யமுனா, பத்மா இருவரின் மனம் நோக செய்ய அவளுக்கு விருப்பம் இல்லை. கோகிலா, பர்ந்தாமன் பூரணி மூவரும் பூங்கா காலனி வந்து சேர்ந்தனர். காலனி விழா ஏற்பாடுகளை மூர்த்தியும் சுரேஷும் முன் நின்று கவனிக்க வேண்டியிருந்ததால் பரந்தாமன் அவர்களோடு இணைந்து கொண்டார். பத்மாவின் உடல்நலம் கருதி அவர்கள் வீட்டு பூஜை ஏற்பாடுகளை சுகந்தியோடு இணைந்து கோகிலா செய்தார். பூரணி இயந்திரத்தனமாக வளைய வந்து கொண்டிருந்தாள்.

மாடிபடியில் எதிரும்புதிருமாக விஷ்வாவை சந்திக்க நேர.

"ஹாய்! பூரணி"
அவனை கண்டதும் இதயம் படபடக்க, குரல் கேட்டதும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன.. சட்டென நினைவு வந்தவளாய் மனதிற்கு கடிவாளம் இட்டாள்.

ஒரு வினாடி தயங்கியவள் அவனை தவிர்த்து வேகமாக அர்ஜுன் வீட்டினுள் நுழைந்துவிட்டாள். அவளின் இந்த செயலுக்கு காரணம் புரியாமல் தவித்தான் விஷ்வா, பல முறை அவளிடம் பேச முற்பட்டும் பிடிகொடுக்கவில்லை அவள். விழா தொடங்கும் நேரம் எல்லோரும் மேடை அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டனர்.

கூட்டத்தில் அவளையறியாமல் அவனை தேடியது விழியும் மனமும். மேடையில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டிருந்தன.
சற்று தொலைவில் கைபேசியில் எதையோ தட்டச்சு செய்து கொண்டிருந்தான். அவனிடம் பேச யாமினி அணுகுவது தெரிந்தது, முதலில் சிரித்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர் இருவரும். பின்னர் பேசியபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டனர். தனிமையில் பேச வேண்டிய விஷயமாயிற்றே! சுள்ளென வலித்தது. கவனம் அவர்கள் சென்ற திசையிலேயே இருந்தது.

மேடையில் யாரோ பேசத்தொடங்க, சுகந்தி அவள் கவனத்தை திருப்பினாள். "பாரதியார் பத்தி நம்ம தமிழ் சார் பேசறாங்க."

மேடையில் பாரதி எழுதிய கண்ணன் பாட்டு பற்றி உற்சாகமாக, பேசிக்கொண்டிருந்தார் அவர்களின் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். அடிக்கடி கரவொலி எழுந்தது, அவரின் பேச்சு திறன் அப்படி. அவர் அன்பாய் கற்பிக்கும் விதம் இதெல்லாம் பிடித்துபோய் தான் இலக்கியத்தின் மீது அவளுக்கு பற்று ஏற்பட்டது. பாரதியின் மீது காதல் கொண்டதும் அவரால் தான். அப்படிபட்டவரின் பேச்சே இன்று சுவாரஸ்யமில்லாமல் போனது.

மீண்டும் பார்வையை சுழலவிட இன்னும் வந்தபாடில்லை இருவரும். யாரோ ஒரு வயது முதிர்ந்த தம்பதியர் வர அவர்களுக்கு இடம் கொடுத்து பூரணியும் சுகந்தியும் எழுந்து ஓரமாக நின்றனர்.

'ஒரு வேளை விஷ்வாவுக்கும் அவளை பிடிச்சிருக்குமோ? யாருக்கு தான் பிடிக்காது? அழகா இருக்கா, என்ஜினியரிங்க் படிச்சிருக்கா, நல்லா சம்பாதிக்கிறா.. முக்கியமா எந்த குறையும் இல்லை.'

வலி நிறைந்த புன்னகை ஒன்று பூத்தது, 'மென்டல் ஹெல்த் ப்ராப்ளம் இருந்தா யாரு குடும்பம் நடத்த விரும்புவாங்க? நடத்த தான் முடியுமா? அதுவும் உனக்கு நடந்தது தெரிஞ்சு எந்த ஆம்பிளை தான் கட்டிக்க முன்வருவான்? நீ கல்யாணம் வேண்டாம்னு எடுத்த டிஸிஷன் சரி, உனக்கு எதுக்கு வீண் ஆசை? யூ ஆர் நாட் பிட் பார் மேரீட் லைப் பூரணி.'

உண்மை கசக்கும் - விஷத்திற்கு ஒப்பாய் உயிர் அறுத்தது அவளின் உண்மை.

யாரோ சில பெண்கள் மேடையில் பாடிகொண்டிருக்க, எதிர்புறம் அர்ஜுன், விஷ்வா, ஆதர்ஷ், யாமினி அனைவரும் பேசி கொண்டிருந்தனர்.

"ஏய் என் சிஸ்டர் அடுத்து பாடுறா டீ" ஷர்மிளாவின் குரலில் திடுக்கிட்டவள், மேடையை நோக்கி திரும்ப அங்கே ரேஷ்மா பாட ஆயத்தமானாள். மீரா பஜன் ஒன்று பாடினாள்.

"எங்கடா போனீங்க?" ஷர்மிளா பல்லை கடித்தாள் நண்பர்களை பார்த்து. அவள் அருகே வந்து நின்றனர் விஷ்வாவும் அர்ஜுனும். பூரணி பார்த்ததும் பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டான் விஷ்வா. யாரோ கன்னத்தில் அறைந்தது போல இருந்தது, விசைதட்டியது போல கண்களில் கண்ணீர்.

'அவ கிட்ட மட்டும் சிரிச்சு பேசு, என்னை கண்டா மூஞ்சியை திருப்பிக்க' கோபமும், அழுகையும் முட்டிமோதின உள்ளுக்குள்.

அடுத்து 'ஜோதா அக்பர்' படத்தில் வரும் 'மன்மோஹனா' என்ற பாடலை பாடத் தொடங்கினாள் ரேஷ்மா. பாடல் வெளி வந்த புதிதில் பஞ்சாபியான ஷர்மிளாவிடம் அர்த்தம் கேட்டு தெரிந்து கொண்டாள் பூரணி, மனதை உருக்கும் பாடல் அது.

🎶Raas rachiyan brindavan ke
gokul ke baasi
Radha tumhri daasi
Darshan ko hai pyaasi
Shaam shalone nand lala krishna banwari
Tumri chab hai nyari
Mein to hoon tan man haari
Mein to hoon tan man haari🎶

🎶Mein hoon tumhari
hai tumhara yeh mere jeevan
Tumko hi dekhon mein
Dekhun koi darpan
Bansi ban jaungi
in hooton ki ho jaungi
In sapno se jalthal
Hai mera maan angan
Hain mera....🎶

அவள் மனநிலைக்கு மிக பொருத்தமான வரிகள், விம்மி வெடித்தது இதயம் பூரணிக்கு. தன்னை சமன் செய்து கொள்ள அங்கிருந்து நகர்ந்தாள், சுகந்தியின் வீடு நோக்கி.

பார்க்கை கடந்து செல்கையில் பேச்சு குரல் கேட்டது, "மா எனக்கு ஓகே, பொண்ணு பாக்க போகலாம் ஆனா எனக்கு பிடிச்சிருந்தா தான், பேசலாம். அதேபோல யாமினி விஷயம்.." ஆதர்ஷ் அவன் அன்னையுடன் பேசிக்கொண்டிருந்தான்.

"ஆதர்ஷ், அவனை பத்தி பேச என்ன இருக்கு சின்ன வயசுலேருந்தே நான் பாத்து வளந்த பையன் தான. அதெல்லாம் எனக்கு சம்மதம் தான். அப்பாவை சீக்கிரம் வர சொல்லி கால் பண்ணு. அவரு இல்லமையா கல்யாணம் பேச ஆரம்பிக்க முடியும்? ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா வைக்ணும்னு எனக்கு ஆசை."

'அதற்குள் கல்யாணம் வரை போய்விட்டதா பேச்சு?'

திடுக்கிட்டாள் பூரணி. வேகமாக சுகந்தியின் வீட்டை அடைந்தவள் பாத்ரூமிற்கு சென்று கதவை தாழிட்டாள். மடை திறந்த ஆற்று வெள்ளமாய் ஓடி, இதயத்தின் வலியை குறைக்க நினைத்தது கண்ணீர். அத்தனை எளிதாக இருந்தால் மனிதன் மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்பே இல்லையே!

'நான் ஏன் அழறேன்? அவங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பினா எனக்கு என்ன? ஏன் அவளோட அவனை சேர்த்து பாக்கும் போது எனக்கு கோவம் வருது? அவங்களுக்கு கல்யாணம்னா ஏன் எனக்கு வலிக்குது? அவ்வளவு மோசமானவளா நான்? விஷ்வா லைப்ல எந்த சந்தோஷமும் அனுபவிக்கலை அவன் ஆசைப்பட்ட பொண்ணை கட்டிகிட்டு சந்தோஷமா இருக்கட்டும்.'

முகம் கழுவி வெளியேறினாள். அவள் முகத்தை பார்த்து பத்மா கேள்வியெழுப்ப, "ஒண்ணும் இல்லை அம்மு, வாமிட் வந்துச்சு. பெரிய அம்மு செஞ்ச பலகாரம், அம்மா செஞ்சதுனு நிறையா சாப்பிட்டதும் ஒத்துக்கலை".

அன்னையை அழைத்து வீட்டிற்கு போகவேண்டும் என நிர்பந்தித்தாள். கோகிலாவும் பரந்தாமனும் வந்ததும் அவசரமாக புறப்பட்டு போய்விட்டாள் வீட்டிற்கு, யாரிடமும் சொல்லாமல்.
இவளை காணாமல் தேடி வீட்டிற்கு வந்த சுகந்திக்கு அவள் புறப்பட்டு போனது அதிர்ச்சியாக இருந்தது.

"வயிறு சரியில்லைடீ அவளுக்கு ரெண்டு நாள் போனா சரியாகிடும். அவளே வருவா வீட்டுக்கு." பத்மா சமாதானம் செய்தார்.

~~~~~~~

விடுமுறை விட்டாலே நாளெல்லாம் பூங்கா காலனியே கதியென்று கிடக்கும் மகள் படுக்கையே கதியென்று கிடக்க கவலை கொண்டார் கோகிலா. தான் நினைப்பது என்ன, ஏன் அவ்வாறு உணர்கிறோம் என ஆராயகூட தைரியம் அற்று, நூலகத்திலிருந்து எடுத்த வந்த புத்தகங்களில் தன்னை தொலைத்தாள். இந்த நிகழ்வை ஏற்கவே அவள் மனம் திணறி கொண்டிருக்க, அடுத்த கவலை அன்று மாலை வீட்டு ஓனர் உருவில் வந்தது.

"சார் அப்பா அம்மாவை நான் அமெரிக்கா கூட்டிட்டு போறதா இருக்கேன்." ஓனர் மகன் வந்து பேசி கொண்டிருந்தார். அங்க இருந்துட்டு இந்த வீட்டை மெயின்டெய்ன் பண்றது கஷ்டமா இருக்கும் இந்த இடத்தை விக்க ஏற்பாடு பண்ணிட்டேன். அவங்க வீட்டை இடிக்கலை ஆனா... காலி பண்ண சொல்றாங்க. ஐ ஆம் ஸாரி.. நீங்க தப்பா நினைக்காதீங்க".

"என்ன சார் நீங்க உங்க வீட்டை விக்க என் பர்மிஷனா கேக்கணும்? எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க நல்ல வீடா பாக்கணும்." அவர் விடைபெற்று புறப்பட்டதும் வீடு பார்க்கும் கவலை வந்து ஒட்டிகொண்டது. டிரீட்மெண்டிற்காக சில நாள் ஓய்வில் இருந்தார் பரந்தாமன்.

அந்த பகுதியில் இருக்கும் ப்ரோக்கர் ஒருவரை அழைத்து பேச, அவர்கள் பட்ஜெட்டில் அதே பகுதியில் வாடகைக்கு வீடு கிடைப்பது கஷ்டம் இருப்பினும் முயற்சி செய்வதாக கூறினார். அடுத்து வந்த நாட்களில் அப்பாவும் மகளும் பகலில் ஒரு சில இடங்களை பார்த்துவிட்டு வந்தனர். வாடகை ஒத்து வந்தால் இடப்பற்றாக்குறை. கொஞ்சம் பெரிய இடமாக இருந்தால் வாடகை அதிகம். சில வீடுகளை இருப்பிடம் கருதி வேண்டாம் ஓன ஒதுக்கினார் பரமு.

"என்னங்க இது வீட்டுல வயசு வந்த பொம்பளை புள்ள இருக்கு மோசமான இடமெல்லாம் சொல்றீங்களே?" கடிந்து கொண்டார் ப்ரோக்கரை.

அவரும் கடமை போல மன்னிப்பு கேட்டு வைத்தார். "சார் நீங்க எதுனா ஒண்ணு விட்டு குடுக்கணும். வாடகை கம்மி, இடம் பெருசு, இந்த ஏரியா தான்னு கராரா இருந்தா நடக்காது. யோசிங்க" என்றவர். "ஒரு இடம் இருக்கு அடையார்ல. வூடு பிரமாதமா இருக்கு, அவங்க மொத கடை வச்சிருந்தாங்க அந்த போர்ஷன்ல இப்ப வியாபாரம் பெருசாயிடுச்சு, வேற இடம் போய்ட்டாங்க. அவரு அப்பாரு வாங்குன இடம், சென்டிமென்டா அந்த இடத்தை விக்க மனசில்ல. நல்ல குடும்பமா சொல்லுன்னாங்க. வாடகையும் அதிகம் எதிர்பாக்கலை. நாளை காலைல வாங்க பாத்துட்டு வருவோம்" முகவரியை கொடுத்து விட்டு புறப்பட்டார்.

மயிலாப்பூர், மந்தைவெளி பகுதியில் பிறந்தது முதல் வாழ்ந்துவிட்டு அடையார் போகவேண்டும் என்றால்? நண்பர்களை பிரிய வேண்டும், தினம் பூங்கா காலனிக்கு போக முடியாது. மனம் சுணங்கியது பூரணிக்கு.

'எப்படியும் ஆயிசு முழுக்க அவங்ககூட இருக்கமுடியுமா? நாளைக்கு சுகந்தி அர்ஜுனுக்கு கல்யாணம் ஆச்சுனா இப்படி டைம் பாஸ் பண்ணிட்டா இருப்பாங்க? குடும்பம் வேலைன்னு பொறுப்புகள் இருக்கும். அவனுக்கும் அப்படி தான். அதோட அவனுக்கு வர மனைவி இன்னொரு பொண்ணு ஃபிரண்டுன்னு சொல்லி, இவ்வளவு க்ளோஸா பழகுறதை விரும்புவாளா? அதை புரிஞ்சு நான் இப்பவே விலகி இருந்து பழகிக்க வேண்டியது தான். எத்தனை நாளைக்கு விளையாட்டா சுத்த முடியும் நானும் வேலைக்கு போக தொடங்கினா பிஸியாகிடும், லைப் மாறிடும். அதுக்கு என்னை பழக்கப்படுத்திக்க வேண்டியது தான்.' தனக்கு தானே கட்டுபாடு விதித்து அதற்கு விளக்கமும் கொடுத்து கொண்டு - மனிதன் மிக விந்தையான ஒரு பிறவி.

கல்லூரி நிர்வாகம் கைமாறுவது தொடர்பாக ஏதோ குளறுபடிகள் நடக்க, விடுமுறை நீட்டப்பட்டதாக தகவல் வந்தது அன்றிரவு.

அடையார் வீடு மிகவும் அனைவருக்கும் பிடித்துவிட, வீட்டை ரிப்பேர் செய்து, பெயின்ட் அடித்துவிட்டு அட்வான்ஸ் பெற்று கொள்வதாய் கூறிவிட்டார் ஓனர். மனதளவில் பூரணி தன்னை தயார் படுத்திகொள்ள துவங்கினாள். அதன் முதற்கட்டமாக அனைவரையும் சில நாட்கள் சந்திக்காமல் இருப்பது என முடிவு செய்தாள். வீட்டிலும் பேசுவது குறைந்து, தனக்குள்ளே மருக தொடங்கினாள், வெளிக்காட்டிக் கொள்ளாமல்.

பெற்றோர் இதை கவனித்து கேள்வியெழுப்ப, "லைப் லாங்க் அவங்களை டிபெண்ட் பண்ணி இருக்கமுடியுமா மா? மகளா நினைக்கிறாங்க இல்லைனு சொல்லலை, ஆனா அவங்களுக்கும் ஒரு பர்சனல் ஸ்பேஸ் வேணும் இல்லை. நான் மெல்ல பழக்க படுத்திகிறேன். எப்படியும் அடையார் போனா டெய்லி பாக்கமுடியாது".

விஷ்வாவின் அழைப்புகளை ஏற்க மறுத்தாள், "பேச ஒண்ணும் இல்லை விஷ்வா. என்ன பேசுறது?" என்ற அவளின் குறுந்தகவல் பதிலில் அவன் நிலைகுலைந்து போனான்.

தன்னுடைய நிலை எல்லோரையும் சூழ்நிலை கைதியாக மாற்றியிருக்கிறது, அவர்களால் தன்னை சாதாரணமாக நடத்த முடியவில்லை. நோயாளியாக பார்த்து, எப்போது என்ன கோளாறு ஏற்படுமோ என பயந்து செயல்பட வேண்டியிருக்கிறதே என்ற ஆதங்கம் தலை தூக்கியது. அதிலிருந்து அவர்களை விடுவித்து, நிம்மதியாக அவர்கள் வாழ்க்கையை வாழட்டும் என்று தீர்மானித்தாள்.

காரணமில்லாமல் தண்டனை அனுபவித்து கொண்டிருந்தனர் பூரணியும் விஷ்வாவும், யாரோ செய்த பிழைக்காக மீண்டும் ஒரு முறை.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro