Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 11

Published: August 1, 2021




மயிலாப்பூரின் குறுகலான சந்துகளிலும், மாட வீதிகளிலும், காய்கறி மார்க்கெட்டிலும் நடந்து பழக்கப்பட்டவர்களுக்கு, அறுபத்து மூவர் கூட்ட நெரிசல் கூட வீட்டின் உள்ளே நடப்பது போன்ற உணர்வையே தரும்.


ஜன நெரிசலில் வளைந்து நெளிந்து, மாடு முட்டாமல் தப்பித்து, காய்கறி குப்பையில் சறுக்காமல் நிதானித்து, இடையே புகுந்துவிடும் வாகனங்களில் அடிபடாமல் நழுவி, நம் இலக்கை ஒழுங்காக அடைந்துவிடுவது அங்கு வசிப்பவர்களுக்கு கையில் இருக்கும் உணவை வாய்க்குள்  தள்ளுவது போல.
வெளியாட்களுக்கோ, கரணம் தப்பினால் மரணம் என பயம் காட்டும். இதே போல பல இடங்கள் சென்னையில் உண்டு, ஏன் எல்லா நகரத்திலும் உண்டு. (இதுக்கு தனியா ஒரு சகாப்தமே எழுதலாம். அது பிறகு பார்த்துகொள்வோம்)


இப்படி இடி வாங்கி சலித்து புலம்பினாலும் மார்க்கெட்டில் கடை கடையாய் ஏறி இறங்கி பசுமையான காய்கறி பழங்கள் வாங்கும் மனதிருப்தி இந்த சூப்பர் மார்க்கெட் பர்சேஸில் கிடைப்பதே இல்லை. எதோ வாங்கி சமைச்சு வயித்தை ரொப்புறோம்!

எஸ்.ஜே. சூர்யா சொல்ற மாதிரி (மனநிறைவு) இருக்கு ஆனா இல்லை!

வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கி கையில் வைத்திருந்த பையில் நிறைத்து கொண்டாள், வாடிக்கை கடைக்காரர்களிடம் குசலம் விசாரித்து பேசிகொண்டே,


"நீ வீட்டுக்கு எதாச்சும் வாங்கணுமா, நானே சேர்த்து வாங்கிடவா?"

என பதிலுக்கு காத்திராமல் காய்கறி பழங்களை வாங்கி பையில் போட்டு கொடுத்தாள் பூரணி. அவனோ கண்கொட்டாமல் ரசித்து கொண்டிருந்தான். கல்யாணம் கட்டி குடித்தனம் நடத்துவதாய் கற்பனை வேறு!

அவன் ஐநூறு ரூபாய் தாளை நீட்ட, "விஷ்வா அவங்கள்ட்ட சில்லறை இருக்காது நீ போய் அந்த கடையில சேஞ் வாங்கிட்டு வா. நான் வெய்ட் பண்றேன்".
தன் தவறை உணர்ந்தவன் எதிர் பக்கம் கடையை நோக்கி நடந்தான்.  யதார்த்தமாய் வீட்டிற்கு தேவையானவற்றை வாங்கி கொண்டு அவளுடன் மார்க்கெட்டில் வலம் வருவது மிக பிடித்துபோயிருந்தது. கோடை மழை போல உள்ளத்தில் சில்லென்றது. புன்னகையோடு கடையினுள் நுழைந்தான்.

"பாட்டி அவங்களுக்கு கொத்தமல்லி கறிவேப்பிலை போடவேயில்லை பாருங்க" பையை திறந்து சோதனையிட்டாள்.

"ம்ம்ம்.. இந்தா இஞ்சி பச்சைமிளகாவும் சேத்து போடுறேன். ஆமா... எத்தினி வருஷமா பழக்கம்? நீ இம்மதூண்டு இருக்க சொல்ல உங்க அம்மாவோட வருவ. என்னான்ட சொல்லாத மறைக்கிற பத்தியா? என்ன இருந்தாலும் காய் விக்கிற ஆயா தான, உன் சொந்த ஆயாவா இருந்தா கம்முனு இருப்பியா?"

வெற்றிலை பாக்கு போட்டு சிவந்த வாயை சுழித்து, தோள்பட்டையில் நொடித்து கொண்டார்.

"என்ன சொல்றீங்க ஆயா புரியலை"?
முதுகில் புத்தக பையும், கையில் காய்கறி பையும் கனத்தது.



"அக்காங்ங்.. நல்லா சீரியல் ஹீரோயினி கணக்கா ஆக்டிங் குடுக்குது பாரு. உசாரு தான் நீ. எப்ப நிச்சியம் ஆச்சு சொல்லவே இல்லை?"


அவள் திருதிருவென விழிக்க, குரலை தாழ்த்தி, காய்ப்பு காய்த்த கைகைள் தாடைக்கு முட்டு கொடுத்தார் அந்த பெண்மணி.

"அப்புடி போடு அருவாள! லவ்வா? வூட்டுக்கு சொல்லாதையா? அப்ப மார்கெட்டுல சுத்துர?" காவி படிந்த பற்கள் தெரிய சிரித்தார்.  "மவராசி!" திருஷ்டி சொடுக்கி மாப்பிளை நல்லா சோக்கா தான் கீராரு"

வெட்கத்தில் முகம் சூடேற, பதறினாள், "ஐயோ ஆயா.. அவங்க அதெல்லாம் இல்லை. அது அர்ஜுன் அண்ணா வருவாங்க இல்ல அவரோட பெரியப்பா பையன், விஷ்வா. அண்ணா இன்னைக்கு வரலை இவங்க துணைக்கு வந்தாங்க. நீங்க என்னென்னமோ பேசறீங்க" சிணுங்கினாள்.


"ஆங்ங்ங்.. ஒண்ணுமில்லனா அண்ணன்னு சொல்லாத ஏன் அவுங்க இவுங்கனு மழுப்புற?" கைகள் வெற்றிலையில் காம்பு கிள்ளி சுண்ணாம்பு தடவி கொண்டிருக்க, கண்கள் அவளை அளவெடுத்தன.

"அது.." திக்கினாள்.

"நான் தான் பேரு சொல்லி கூப்பிடுனு சொன்னேன் பாட்டி. இந்தாங்க."
அவன் குரல் பின்னாலிருந்து கேட்க, வெட்கத்தில் கூசிப்போனாள்.

'அடப்பாவி இவன் எப்ப வந்தான்? ஐயோ பாட்டி நல்லா மானத்தை வாங்குது'.

அவனை தாண்டி வேகமாக நடந்துவிட்டாள், அவன் முகத்தை எதிர் நோக்கும் தைரியம் இல்லாமல்.

அவரிடம் சிரித்தபடி பணத்தை கொடுத்துவிட்டு அவளை தேடி எட்டிபிடித்தான் கூட்டநெரிசலில்.

அவரோ, 'எங்க போவ பாட்டி கடைக்கு தான வருவே நாலு நாள்ல' என அடுத்த வியாபாரத்தை பார்க்க ஆயத்தமானார்.


"பூரணி, குடு எல்லா பையும் நீயே தூக்கவேணாம்".

இரண்டு பைகளும் கைமாறின. அவளை மேலும் சங்கடபடுத்தாமல் அந்த பேச்சை தவிர்த்தான்.

அவள் வீடு நோக்கி போக வேண்டிய முக்கியமான சாலையில் நடந்து கொண்டிருந்தனர் பொது படையாய் எதையோ பேசியபடி.

"பூரணி"

"ம்ம்ம்.."

"இத்தனை வருஷம் கழிச்சு, மறுபடியும் என்னை ஏத்துகிட்டதுக்கு தாங்க்ஸ்" சொல்ல வேண்டியதில் பாதியை கத்தரித்து அவள் வாழ்வில் மீண்டும் இடம் கொடுத்தமைக்கு மட்டும் நன்றி உரைத்தான்.

"சொந்த ஊர், மனசுக்கு நெருக்கமான மனுஷங்க, இதெல்லாம் தனி தெம்பு தான்."

நடையின் வேகம் குறைந்தது, பக்கவாட்டில் முகம் திருப்பி அவனை நோக்கினாள்.

"மெட்ராஸ் விட்டு போனப்புறம், பாஷை தெரியாத ஊருல, வேலையும் தேடணும், அம்மாவையும் பாத்துக்கணும். அம்மாவுக்கு செய்ய வேண்டியதை பாரமா நினைக்கலை ஆனா, நானும் மனுஷன் தானே. தனிமையும் அம்மாவோட டிரீட்மெண்டும் என்னை பயமுறுத்திச்சு. வீட்டு வேலை, அம்மா, ஆபிஸ் பொறுப்பு அதுவும் அது என்னோட முதல் வேலை; மூச்சு விட நேரமில்லாம ஓடினேன். ஒரு வருஷத்துல எனக்கே மன அழுத்தம் ஏற்பட ஆரம்பிச்சுது. அப்புறமா தான் என் தவறை உணர்ந்து லைப் ஸ்டைல் மாத்தினேன்."

"ஃபிரண்ட்ஸ்?"

ஒரு வருத்தமுறுவல் படர்ந்தது, "எனக்கு எப்பவுமே நண்பர்கள் ரொம்ப குறைவு தான். ரொம்ப பெரிய குரூப்பா சுத்துறதுல ஆர்வம் கிடையாது. அங்க உள்ள லைப்ஸ்டைலே வேற. எனக்கு அதுல ஆர்வமும் இல்லை. ஆசைப்பட்டா போகவும் முடியாது. சின்ன வயசுலேருந்தே என் வயசுக்கான வாழ்க்கையை நான் உணர்ந்து வாழ்ந்தது இல்லை. நீ ஈவ்னிங்க் சொன்னியே.."

"ஸாரி விஷ்வா" தன் மடத்தனத்தை எண்ணி வருந்தினாள்.

"ஏய் நீ ஏன் அழறே? ஸாரி நான் இது எதையும் சொல்லியிருக்க கூடாது." தன்னை தானே கடிந்து கொண்டான்.

"இல்லை விஷ்வா, உன்னோட வாழ்க்கை, நீ அனுபவிச்ச கஷ்டங்கள் தெரியாம நான் உன்கிட்ட அப்படி பேசியிருக்க கூடாது. சைக்கலாஜிக்கல் ப்ராப்ளம் பத்தி தெரிஞ்சும், அதை அனுபவிச்சும், அதனால அடுத்தவங்க படுற கஷ்டம் என்னனு தெரிஞ்சும் நான் இப்படி பேசுனது தவறு."

சிறுவயதில் அவனை ஈர்த்த அந்த குணாதிசயம் அவளை விட்டு அகலவேயில்லை. எதிலுமே தன்னலமில்லாத உள்ளம் அவளுடையது.

*flashback*

'அவனை எதுவும் பண்ணமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு சிவா. அவனை தேடி போகமாட்டேன்னு சொல்லுடா, கோவப்பட மாட்டேன்னு சொல்லு ப்ளீஸ்'. ரத்தக்கரை படிந்த கைகளைப்பற்றி, கருவண்டாய் அவனை துளைத்த கண்கள் மெல்ல ஒளியிழக்கும் தருவாயில் அவன் உத்திரவாதம் கொடுத்தும், போதாது என்பது போல் அவனை பற்றிய கரத்தின்பிடி இறுகிதான் இருந்தது அவளை அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வரை.

தன் பெண்மைக்கு தீங்கிழைக்க நினைத்தவனை மன்னிக்க வேண்டி செய்தாளோ, விஷ்வாவின் மீது கொண்ட அக்கறையில் செய்தாளோ, பலன் இன்றளவும் அந்த அயோக்கியன் சுதந்திரமாக சுற்றி திரிகிறான். பழைய நினைவுகள், பழுக்க காய்ச்சிய ஈட்டியாய் உள்ளே இறங்கியது. எல்லாவற்றையும் விட, பாதி நேரம் அவனை உறங்க விடாமல் பித்தாய் அலைய வைத்தது அந்த நாளின் சம்பவம்.

"விஷ்வா" அவள் அழைப்பில் நினைவு மீண்டான். உள்ளத்தில் வீசிக்கொண்டிருந்த சூறாவளியின் தாக்கம் அவன் முகத்திலும் கண்ணிலும் பிரதிபலித்தது.

"ஸாரி! விடு ஃபீல் பண்ணாத. இந்த மாதிரி ஸப்போர்ட் பண்ண, கண்டிக்க, ஆறுதலா பேச, ரிலாக்ஸ் பண்ண யாரும் இல்லாம ரொம்ப தவிச்சேன். சித்தி சித்தப்பா எப்பவாச்சும் வருவாங்க, ஆனா அவங்களால அங்க பர்மனென்டா இருக்க முடியாது." நீண்ட பெருமூச்சொன்று வெளியேறியது.

"அம்மாவுக்கு இந்த ப்ராப்ளம் இருக்குனு தெரிஞ்சா எதோ வரக்கூடாத வியாதி வந்துட்ட மாதிரி ரியாக்ட் பண்ணிட்டு அவாய்ட் பண்ணுவாங்க வெளிய பல பேர்".


"உண்மை தான். நான் நிறைய அன்பவிச்சிருக்கேனே. ஓப்பனாவே, பைத்தியம் பிடிச்ச பொண்ணை யாரு கல்யாணம் பண்ணிக்குவாங்கனு கூட பேசியிருக்காங்க."

"அந்த காரணத்தால தான் வேண்டாம்னு சொல்றியா?" அவள் வலியை உள்வாங்கியதில் தொண்டைக் குழியில் முள்ளாய் இறங்கியது உண்மை. பதில் அறிந்துவிட தவித்தது அவன் மனம்.

"அதுவும் ஒரு காரணம்..." பார்வையை தவிர்த்தாள். அடிக்கடி வரும் கனவைப்பற்றிய இந்த யூகம் சமீபகாலமாக தான் உதித்திருக்கிறது அவள் மனதில். உறுதியாக தெரியாத ஒன்றை எப்படி இறுதி பதிலாய் ஏற்பது?
"ஆமா எனக்கு எதுக்கு தாங்க்ஸ்?"

"நம்ம பழைய உறவை தொடர அனுமதிச்சதுக்கு." ஓரப்பார்வை பார்த்தான் அவளின் எதிர்வினையை அறிந்துகொள்ள.

ஏனோ அந்த ஒற்றை வரியில் ஆயிரம் அர்த்தம் இருப்பதாய் அவளுக்கு தோன்ற, பூடகமாய் தான் கூற விரும்புவதன் அர்த்தம் அவளுக்கு விளங்கிவிட வேண்டுமென அவன் ஆவல் கொண்டான்.

கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தும் ஏனோ அந்த நொடி மௌனம் சிறந்ததென மனம் உரைக்க, விழிகள் அந்த கேள்விகள் அனைத்தையும் தாங்கி நின்றன. 'eyes are the windows of the soul' என்று ஆங்கிலத்தில் சொலவடை உண்டு. ஆன்மாவின் ஜன்னல்கள், கண்கள்! ஒரு சில வினாடிகளே இருப்பினும் அவன் முகத்தில், கண்களில் தோன்றி மறைந்த உணர்ச்சி பிரதிபலிப்பு அவளுள் ஆழமாக சென்று இறங்கியது.

உண்மையான அன்பு உரையுமிடத்தில் வார்த்தைகளுக்கு அவசியமில்லை என்பது சத்தியம்தானோ? இது எத்தனை ஜென்மத்து பந்தம் என்பது யார் அறிவார்? வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க பல காலம் அவரோடு பழகி அறிந்து கொண்டாலும் சரி, பெண் பார்க்கும் வைபவத்தில்  சந்தித்து பின்னர் வாழ்நாள் முழூதும் அவரை அவருக்காக நேசித்து காதல் வயப்பட்டாலும் சரி. இணைய வேண்டிய இரு உயிர்கள் இவை தான் என விதிக்கப்பட்டிருப்பின் யார் தடுத்தும் அது நில்லாது.

அடுத்து திரும்பிய சாலை வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தது, ஒலி பெருக்கியில் பாடல், வாழைமரம், தோரணம், வண்ண பட்டாடைகளில் விருந்தினர் , பூ மணம் என அடையாளம் மாறியிருந்தது.

"கல்யாண மண்டம் இருக்கு இங்க. ரிசெப்ஷன் போல இன்னைக்கு" அவள் தெளிவுபடுத்தினாள். மீண்டும் அமைதி. திடீரென்று பட்டாசு சத்தம் கேட்டதும் பதறி, அம்மா என அலறி பின்வாங்கினாள்.


மரத்தில் மோதிக் கொள்ள இருந்தவளை "ஏய் பாத்து" என கைபிடித்து தன்னருகே இழுத்து கொண்டான்.

பத்து நிமிடம் தேவைப்பட்டது கல்யாணவீட்டினர் கொளுத்தி போட்ட சரவெடி வெடித்து முடிய. இளைஞர்கள் சிலர் குதூகலமாய் ஆட்டம் போட்டபடி வெடி வெடிப்பதை பார்த்துகொண்டிருக்க, சாலையில் போவோர் ஒதுங்கி நின்றனர்

மெல்ல சப்தம் அடங்கியது, "இரு ஒண்ணு ரெண்டு வெடிக்காம இருந்து திடீர்னு வெடிக்கும், நீ வேற சின்தடிக் டிரஸ் போட்டிருக்க". அவள் கைபற்றி தடுத்தான், அங்கொன்றும் இங்கொன்றுமாக மீதமிருந்த வெடி வெடித்து முடிந்தது.

தன் மணிக்கட்டில் பதிந்திருந்த அவன் கையை பார்த்தாள். அழுத்தமாகவும் இல்லாமல் தளர்ந்தும் இல்லாமல், கண்ணாடி வளையல்கள் குத்தாமல் கவனமாக பற்றியிருந்தான். அன்று வாக்குவாதத்தின் மத்தியில் அவன் கைவிரல் கோர்த்து கொண்டது நினைவு வந்தது. அவன் கைகளின் கதகதப்பு மனதிற்கு பெரும் இதத்தை கொடுத்தது. நான் இருக்கேன் என உறுதியளிப்பது போல ஒரு அழுத்தம். எதோ விசையை இயக்கியது போல கைகள் இடம் மாறி ஒன்றோடொன்று இயல்பாய் பின்னி கொள்ள, மிக அழகாய் பொருந்திபோயிருந்தன இருவரது விரல்களும். ஒலிபெருக்கியின் சப்ததில், கைகளிலிருந்து கவனம் கைக்கு சொந்தகாரனிடம் நகர்ந்தது. அவன் முகத்தில் தவழ்ந்த புன்னகையும் கண்கள் காட்டிய ஜாடையும் அவள் செய்த செயலை வெட்ட வெளிச்சமாக்கி வெட்கப் புன்னகயை அள்ளிதெளித்தது. இருவரும் நடக்க தொடங்கினர், கையை விலக்க மனமில்லாமல்!


உண்மையிலேயே இளையராஜாவின் குரல் காற்றில் தவழ்ந்து வந்தது திருமண மண்டபத்திலிருந்து.

🎶❤❤

எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்
என் உயிரில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உனையே ..ஓ…ஓ
ஏங்கிடுதே மனமே

வசந்தமும் இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள் சொன்னாலும்
தென்றலும் இங்கே வந்து நின்று
இன்பத்தின் கீதம் தந்தாலும்
நீ இன்றி ஏது வசந்தம் இங்கே
நீ இன்றி ஏது ஜீவன் இங்கே
சேர்ந்திடவே உனையே ..ஓ …

(எங்கிருந்தோ)

காதலில் உருகும் பாடல் ஒன்று
கேட்கிறதா உன் காதினிலே
காதலில் உயிரை தேடி வந்து
கலந்திட வா ஏன் ஜீவனிலே
உயிரினைத் தேடும் உயிர் இங்கே
ஜீவனைத் தேடும் ஜீவன் இங்கே
சேர்ந்திடவே உனையே ..ஓ …🎶❤❤


                  




Author's note:

வணக்கம் மக்களே! நீநீண்ண்ட இடைவெளிக்கு மன்னிக்கணும்🙏பர்ஸனல் காரணங்கள். ப்ளீஸ் படிச்சிட்டு வோட் பண்ணுங்க, கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க.

-அனு

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro