7
சட்டென வாசலில் பர்வதத்தின் குரல் கேட்கவும் ஆதித் திகைத்துத் திரும்ப, கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு அவர் நின்றார், கண்களில் உறுதியோடு. பின்னால் உஷாவும் மாதவனும்.
ஆதித் பெருமூச்செரிய, நண்பர்கள் இருவரையும் மாறிமாறிப் பார்த்தனர்.
"நான் வரும்போது ஏதோ சொல்லிட்டு இருந்தியே கண்ணா.. அதை சொன்னா நானும் கேப்பேன்ல? என்ன காரணம், சொல்லு கேட்போம்."
ஆதித் தயங்க, பாட்டி நிதானமாக வந்து சோபாவில் சாய்ந்து அமர்ந்தார்.
"என்னையும் ஃப்ரெண்டா நினைச்சுக்க கண்ணா.. ஃப்ரீயா பேசு"
அவன் மவுனம் காக்க, உஷாவும் ஊக்குவித்தார்.
"பேசினா தானே தெரியும், உனக்கு என்ன வேணும்னு? தாராளமா பேசு ஆதித்."
"Fine!!
மொதல்ல, என் கம்பெனி. பிஸினஸ்ல இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. என்னோட கவனம் முழுக்க முழுக்க கம்பெனிமேல இருந்தா மட்டும்தான் அது நடக்கும்.
அடுத்து, எனக்கு என்னோட சுதந்திரம் ரொம்ப முக்கியம். யாரோ மூணாவது மனுஷங்களுக்காக என்னோட பழக்கங்களை மாத்திக்க என்னால முடியாது.
என்னை யாரும் 'அதை செய், இதை செய்'னு ஆர்டர் போடறதுல எனக்கு இஷ்டமில்ல.
மூணாவது, ஏதோ பேபிசிட்டர் மாதிரி, எப்பப் பார்த்தாலும் எங்க போற, எப்ப வருவ, எப்ப சாப்பிடுவ, எப்ப தூங்குவனு கேள்வியா கேட்டுக்கிட்டே இருக்கறது. நினைச்சாலே எரிச்சல்..!
நான் இப்ப இருக்கறபடியே இனியும் சந்தோஷமா, சுதந்திரமா இருக்கணும்னு நினைக்கறேன் நான். ஸோ, எனக்கு இந்த கல்யாணம், கமிட்மெண்ட் எதுவும் வேணாம்."
படபடவென அவன் பொரிய, பர்வதத்தின் முகம் களையிழக்க, நகுலும் நரேனும் அசவுகரியமாக நின்றனர்.
"We didn't expect this from you. கல்யாணம்ங்கறது உன்னோட சுதந்திர வாழ்க்கையை பறிக்க நாங்க பண்ற சதி கிடையாது ஆதித். இப்பப் புரியாது.. ஆனா காலம்போன கடைசியில, பேச்சுத் துணைக்காகவாச்சும் யாராவது இருக்கமாட்டாங்களான்னு மனசு ஏங்கும்.. அப்போ புரியும்..."
பாட்டியின் கண்களில் கண்ணீர் பளபளக்க, பெற்றோர் அதிருப்தியாக அவனைப் பார்க்க, ஆதித் சற்றே தலைதாழ்த்தினான்.
யாருமே எதுவுமே பேசிடாமல் அமைதிகாக்க, அந்த அசவுகரியமான அமைதி ஆதித்தின் மனசாட்சியை அரித்தது அதிபயங்கரமாக. அதிலும் பெற்றோரின் குற்றப்பார்வைகள் அவனைத் துளைக்க, அங்கிருக்கப் பிடிக்காமல் வெளியே விரைந்தான் அவன்.
இரவுவரை வெளியே சுற்றிவிட்டு அவன் மீண்டும் வந்தபோது, வீடு அமைதியாகவே இருந்தது. அனைவரும் உறங்கிவிட்டனர்போலும் என நினைத்தவாறு உள்ளே நுழைய, கூடத்து சோபாவில் பர்வதம் அமர்ந்திருந்தார், உம்மென்ற முகத்தோடு.
அவன் வந்ததையறிந்து நிமிர்ந்தவர், "இந்த வீட்டுலதான் ஒரு நல்ல காரியமும் நடக்கப்போறதில்லையே!? அப்பறம் என்னத்துக்கு தீபாவளியெல்லாம் கொண்டாடிக்கிட்டு! மாதவனை நான் கிளம்ப சொல்லிட்டேன். நீயும் போ கண்ணா.. நான்மட்டும் தனியா இங்கேயே கிடக்கறேன்" என்றார் விட்டேத்தியாக.
ஆதித் திகைத்துப்போனான். பெட்டிகளோடு உஷாவும் மாதவனும் வர, அவர்களிடம், "டாட்! மாம்! என்ன இதெல்லாம்!? நாளன்னைக்கு தீபாவளி, அதுக்குள்ள கிளம்பினா எப்படி? மேரேஜ் வேணாம்னு சொன்னதுக்கு ஏன் இவ்ளோ பெரிய சண்டை!? I thought you would understand..." என வாதிட்டான் அவன்.
"இது எங்களோட முடிவு இல்ல ஆதித். உன்னோடதுதான்."
உஷா தீர்க்கமாகச் சொல்ல, ஆதித் மூவரையும் பார்த்தான் சோர்வாக.
"Ok fine!! நான் முடிவ மாத்திக்க... கன்சிடர் பண்றேன். ஆனா, எதுவா இருந்தாலும், தீபாவளிக்கு அப்பறம் பார்க்கலாம்."
***
ஆதித்தின் சம்மதம் வீட்டின் தீபாவளியை இன்னும் வெளிச்சமாக்கியிருந்தது.
பெற்றவர், பெரியவர் அனைவரும் சிறுபிள்ளைகளாய் மாறிக் குதூகலிக்க, மத்தாப்புக்களும் வாணவெடிகளும் அவர்களின் புன்னகையில் தோற்றன.
பர்வதத்தின் உற்சாகத்தைக் கண்டவனுக்கு, மகிழ்ச்சியும் சோகமும் ஒருசேர வந்தது.
தீபாவளியன்று எண்ணெய்க் குளியல், சீயக்காய் தேய்த்தல் என்று சம்பிரதாய சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு, காலைச் சிற்றுண்டியும் அருந்திவிட்டு, நண்பர்களுடன் ஊர்சுற்றலாமென காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான் ஆதித்.
நரேனும் நகுலும் உற்சாகமாக காரின் ஸ்டீரியோவோடு போட்டி போட்டுக்கொண்டு பாடியவாறு வர, ஆதித் யோசனையுடனே காரை செலுத்தினான். அவன் நினைத்ததுபோல இனிமையாக இல்லை பயணம். சாலையில் போக்குவரத்து நெரிசல். காந்திநகர் சிக்னலில் நூறடிக்கு வரிசைகட்டி நின்றன வாகனங்கள்.
"தீபாவளி நாள்ல கூட இவ்ளோ ட்ராஃபிக்கா?"
ஆதித் சலித்துக்கொள்ள, நரேன் அவன் தோளில் தட்டி, ஒரு திருப்பத்தை சுட்டிக்காட்டினான்.
"அந்த ரைட்ல திரும்பு. சிக்னல்ல நிக்காம பைபாஸ் ரோடுக்கே போயிடலாம்"
சரியென அதில் காரைத் திருப்பியபோது, அது சற்றே குறுகலான வீதியெனத் தெரிந்தது. பத்தடி கூட சென்றிருக்க மாட்டார்கள்; அப்போது சற்றே பூசலான உடம்போடிருந்த சிறுவன் சாலையில் நின்று அவர்கள் வண்டியை நிறுத்துமாறு கையை உயர்த்திக்காட்ட, ஆதித் காரை நிறுத்தினான்.
"என்ன நடக்குது?"
நரேன் சிரித்தான். "பயலுங்க ரோட்ல வெடி வைக்கறாங்க. பரவால்ல, காரை நிறுத்திட்டு வைக்கணும்னாச்சும் தோணுதே.."
அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, அச்சிறுவனும் இன்னும் சில குழந்தைகளும் யாரையோ சுற்றி நின்று அடம்பிடித்து இழுத்தனர். கூட்டத்தின் நடுவே நீலவண்ணச் சுடிதார் அணிந்திருந்த நங்கை வேகவேகமாகத் தலையை மறுப்பாக ஆட்டி, அங்கிருந்து நழுவ முயல, சிறுவனோ அவள் கையைப் பிடித்து இழுக்க, ஆதித் கரிசனமாகப் பார்த்தான். நகுல் சலிப்பாக, "ஒரு ஊசிவெடி வைக்கறதுக்கு இத்தனை நேரமா!?" எனக் கார் கண்ணாடிக்கு வெளியே கத்த, வாண்டுகளில் ஒருவனோ அவனை ஏளனமாகப் பார்த்து, "எது!? ஊசிவெடியா? இது 2000 வாலா! காரை ஆஃப் பண்ணிட்டு கம்முனு நில்லுங்க" என்க, ஆதித் சிரிப்பை அடக்க முயன்று தோற்றான்.
இப்போது அப்பெண்ணை சாலையின் நடுவே கொண்டுவந்துவிட்டனர் சிறுவர்கள். ஆதித் அவள் முகத்தைப் பார்த்தான். அனிச்சையாகவே "ஹேப்பி அண்ட் சேஃப் தீபாவளி!!" என்ற உற்சாகக்குரல் காதில் கேட்க, அவள்தானா இவள் என்று ஆர்வமாகப் பார்க்கலானான் அவன். ஒருவழியாக அப்பெண்ணின் கையில் ஊதுபத்தி வந்துவிட, அவள் கையைப் பிடித்து அச்சிறுவனே வெடியிடம் கொண்டுசெல்ல, "தன்னு!! பயமா இருக்கு!! தன்னு ப்ளீஸ்!!" என அப்பெண் அலற, ஆதித் காரணமின்றிக் கார் கதவைத் திறக்க முயன்றான் பதற்றமாக.
"டேய், வெயிட் பண்ணு, சண்டையெல்லாம் போடாத" என நரேன் தடுக்க, அவன் தன்னிலை திரும்பித் திகைக்க, அதற்குள் வெடியைப் பற்றவைத்துவிட்டு அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடியிருந்தனர். நீலச்சுடிதார் ஒரு மரத்தோரம் ஒதுங்கியிருந்தது.
வெடி படபடவென வெடித்து நாலாபுறமும் சிதறும்போது, காதுகளை விரல்களால் அடைத்துக்கொண்டு, இறுக்க மூடிய விழிகளில் ஒன்றை மட்டும் லேசாகத் திறந்து வெடி வெடிப்பதைப் பார்த்தாள் அவள். பயமும் ஆர்வமும் சேர்ந்ததொரு அழகிய பாவனையில் இதழ்கள் வளைந்திருந்தன. கடைசி உதிரி வெடிகள் வெடித்து முடிக்கும்வரை அதே நிலையில் நின்றவள், சத்தம் நின்றதும் காதுகளிலிருந்து கையெடுத்து, பலமாகக் கைதட்டிக் கூச்சலிட்டாள் அவள். ஏனோ ஆதித்தின் முகத்திலும் புன்னகை. காரை எடுத்துக் கடந்து செல்கையில் அப்பெண் இன்னும் குதித்துக்கொண்டிருந்ததைக் கண்டான் அவனும்.
"ஒத்தை வெடிய பத்த வெக்கிறதுக்கு இத்தனை சீனா?" என நகுல் சலித்துக்கொள்ள, நரேனும் சிரிக்க, ஆதித் பார்வையை மாற்றி சாலையில் பதித்து விரைந்தான்.
மதியம்வரை கோவையின் சுற்றுப்புற ஊர்களை காரில் சுற்றிவந்துவிட்டு, சாப்பாட்டு நேரத்திற்கு சரியாக வீட்டினுள் நுழைந்தனர் ஆதித்தும் நண்பர்களும். அவனுக்காகவே காத்திருந்ததுபோல பெரியோர் மூவரும் கூடத்து சோபாவில் அமர்ந்திருந்தனர்.
எதிரே இருந்த காபி மேசை காகிதங்களால் நிறைந்திருக்க, இடையிடையே புகைப்படங்கள் சிலவும்கூட எட்டிப்பார்த்தன. நகுல் அவன் காதருகே நெருங்கி, "என்னா ஃபாஸ்டுடா சாமி!! விட்டா அடுத்த தீபாவளிய குடும்பஸ்தனா தான் கொண்டாடுவ போல!?" என நக்கலடித்தான்.
"வா கண்ணா! இதெல்லாம் கோயமுத்தூருக்குள்ள உள்ள கிட்டத்தட்ட அம்பத்தி நாலு குடும்பத்துல இருக்கற வரன். ஜாதகம், ஜாதின்னு எதுவும் பாக்கப்போறதில்ல. உனக்குப் பிடிச்சிருந்தா மட்டும் போதும்.. வந்து பாரு கண்ணா!"
நண்பர்கள் உள்ளே நுழைந்து, "ஆமாமா.. அவிநாசியின் ஐஸ்வர்யா ராயா, சரவணம்பட்டி சோனம் கபூரா, இல்ல மருதமலை மனிஷா கொய்ராலாவா.. யாரு வேணும்னு கரெக்டா சொல்லு மச்சான்.." என்று நகைக்கத்தொடங்க, அவன் கையோங்க, மாதவன் அதட்டினார் அவர்களை.
ஆதித் மறுப்பாகத் தலையசைத்து, "இந்த வேலையே வேணாம். பாட்டி, எனக்கு எப்போ கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுதோ, அப்ப நானே உங்கள்ட்ட வந்து கேக்குறேன். அதுவரை இதெல்லாம் வேணாம்." என்றான் தீர்மானமாக.
மாதவன் கோபமாக எழுந்தார்.
"உன் சம்மதத்தைக் கேட்டுத்தானே இதையெல்லாம் செஞ்சோம்? உன் இஷ்டத்துக்கு மாத்தி மாத்திப் பேசினா என்ன அர்த்தம் ஆதித்? நீ ஒண்ணும் சின்னக் குழந்தை கிடையாது. பிஸினஸ்மேன். தொழில்ல வார்த்தை ரொம்ப முக்கியம். பேச்சு மாறக்கூடாது."
உஷாவும் ஆமோதித்தார்.
"உன்னைக் கேட்டுத்தானே ஆரம்பிச்சோம்? இப்ப வேணாம்னு சொன்னா எப்படி?"
"மாம்! டாட்!!"
"ஒரு முடிவை சொல்லு ஆதித்! Don't evade!"
சோர்வாகத் தலையில் கைவைத்துத் தேய்த்தான் அவன்.
"சரி, மூணு பொண்ணு. மூணே மூணு பொண்ணுதான். மூணுல எதுவும் புடிக்கலைன்னா அதுக்கப்புறம் என்னை வற்புறுத்தக் கூடாது, ஓகே?"
உஷாவும் மாதவனும் பர்வதத்தைப் பார்க்க, ஒரு தீர்க்கமான மூச்சிற்குப் பின் அவர், "சரிடா, மூணு பொண்ணைப் பாரு, போதும். அவன் இதுக்கு ஒத்துக்கிட்டதே பெருசு. போங்க, போய் மூணு பேரை மட்டும் பார்த்துட்டு வந்துடுங்க.." என்றார்.
ஆதித் உடனே, "ம்ஹூம். என்கூட யாரும் வரக்கூடாது. நான் மட்டும் தனியா போய்த் தான் பார்த்துட்டு வருவேன்." என்றிட, மீண்டும் மாதவனும் உஷாவும் ஒப்புக்கொள்ளாமல் முகம் கசக்கினர்.
மீண்டும் மூவருமே பர்வதத்திடமே திரும்பினர். அவர் உச்சுக்கொட்டினார்.
"உனக்கு கல்யாணம் நடக்கணும்ன்ற ஒரே ஆசைக்காகத் தான் நீ சொல்றதுக்கெல்லாம் நாங்க சரின்னு ஒத்துக்கறோம். எங்க மரியாதைக்கு களங்கம் வராம, கண்ணியமா நடந்துக்க ஆதித். உன் ஆசைப்படி தனியாவே போய் பொண்ணுங்களை பாத்துட்டு வா. மறுபடி சொல்றேன், don't ever make us regret this."
ஆதித் தீர்மானமான முகத்தோடு தன் சம்மதத்தைத் தலையசைத்தான்.
*********************************
Whaaaaaaaaaaaaaaat?
ஆதி சம்மதம் சொல்லுவான்னு யாராச்சும் எதிர்பார்த்தீங்களா? இப்ப என்ன பண்ணப் போறான்?
ஆதித் என்ன ப்ளான் வெச்சிருக்கான்? பாட்டி அதுக்கு என்ன பதிலடி வச்சிருக்காங்க? தாரா இதுல எங்க வந்தா?
என்ன நடக்கும்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கா? கதை இதுவரை பிடிச்சிருக்கா?
வாசித்தமைக்கு நன்றி, வாக்களித்துப் பகிரவும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro