46
தன்பாட்டில் சாலையில் நடந்த நேரம் திடீரென மோனல் கபாடியாவின் கார் தன்னை உரசுமளவு நெருங்கி வந்து நிற்க, தாரா சட்டெனத் திகைத்து மறுகணமே கோபமுற்று பின் அவசரமாகத் தன்னை மனதினுள் ஆசுவாசப் படுத்திக்கொண்டு, முகத்தில் முறுவலை முயன்று வரவழைத்துத் திரும்பினாள் மோனலிடம்.
"ஹாய் மோனல். எங்கே இந்தப் பக்கம்?"
"அடடே! என் பேர் ஞாபகமிருக்கா? எங்கே மறந்திருப்பீங்களோன்னு நினைச்சேனே..?"
தாரா மெலிதாகச் சிரித்து, "உங்களை மறக்க முடியுமா?" என்றாள்.
மோனலுக்கு அவளது தொனி புரியாவிட்டாலும், "எதேச்சையா திரும்பினப்போ உங்களை மாதிரியே இருக்கேன்னு பார்த்தேன்.. டவுட்டா தான் இருந்தது. வாட் எ சர்ப்ரைஸ்" என்றபடி கார் கதவைத் திறந்துவிட்டாள். "வாங்க, நான் வீட்ல ட்ராப் பண்றேன். ஆதித்தை பார்க்க நிறைய தரம் அவர் வீட்டுக்கு வந்திருக்கேன்."
தாரா மறுப்பாகத் தலையசைத்து, "கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும். நான் ட்ராம்ல போயிக்கறேன், தேங்க்ஸ்" என்றவாறு நடக்கத் தொடங்க, மீண்டும் அவளை உரசும்படி வந்து வழிமறித்தது மகிழுந்து.
"சரி, லஞ்ச் டைம் ஆகிடுச்சுல்ல.. ஒண்ணா சாப்பிடலாம், வாங்க. என் ஃப்ரெண்டோட ஹோட்டல் பக்கத்துல தான் இருக்கு."
மறுக்கக் காரணங்களின்றி தளர்வான பெருமூச்சுடன் தாரா காரில் ஏற, மூன்றே நிமிடங்களில் ஒரு நட்சத்திர விடுதியை அடைந்து வாசலில் இறங்கி, கார் சாவியை அங்கிருந்த சிப்பந்தியிடம் வீசிவிட்டு வந்தாள் மோனல். அந்த உயர்தர உணவு விடுதிக்கு ஏற்றாற்போல தனது உடைகள் இல்லாதது ஏனோ தாராவைக் கொஞ்சம் உறுத்தியது அப்போது. தயக்கமாக மோனலைத் திரும்பிப் பார்த்தாள் அவள்.
"நீங்க சாப்பிடுங்களேன்.. எனக்கு பசிக்கலை.."
"கமான் தாரா.. நீங்க என் பிஸினஸ் பார்ட்னரோட --தற்காலிக-- வைஃப். உங்களோட நேரம் செலவிட வாய்ப்பு தர மாட்டீங்களா?"
தாராவிற்கு நெற்றிப் பொட்டில் விண்ணென்று கோபம் துடித்தது. அதன் காரணம் புரியாமல் திகைத்தாலும், பல்லைக் கடித்தபடி தலையசைத்து மோனலுடன் உள்ளே நடந்தாள்.
கண்ணாடிச் சுவர்கள் கொண்ட தனியறை ஒன்றினுள் சென்று மேசையோடு போடப்பட்ட சோபா நாற்காலியில் அவள் அமர, தாரா சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்தபடி வந்தாள். தங்க நிறத்தில் சாண்டலியர் விளக்கொன்று பகலிலும் ஒளிர்விட, ஏசி குளிரும் இதமான பெங்காலி இசையும் அறையினுள் தவழ்ந்து சூழலை இலகுவாக்க உதவின.
அவர்களை கவனிக்க வந்த பரிசாரகர் கூட நேர்த்தியாகக் கருப்பு நிறத்தில் கோட் சூட் அணிந்து வர, மீண்டும் ஒருமுறை தான் அணிந்திருந்த காட்டன் சுடிதாரைப் பார்த்துக்கொண்டாள் தாரா. மோனலைப் பரிச்சயப்பட்டவர் போல புன்னகையுடன் வணக்கம் வைத்தார் அந்தப் பரிசாரகர். அவளோ கண்டுகொள்ளாமல் தலையசைத்துவிட்டு மெனு கார்டில் கவனமானாள்.
தாராவிடம் நிமிர்ந்து, "இங்கே எக் ஸாலட் நல்லா இருக்கும். டூ யூ மைண்ட்?" என்க, "ஸ்யூர்" என்றாள் அவளும்.
பரிசாரகரிடம், "டூ எக் ஸாலட்ஸ்" என்றுவிட்டு, தன்முன் இருந்த கண்ணாடிக் கோப்பையைக் காட்டி, "டாண்டா ஜால்" (ஐஸ் வாட்டர்) எனக் கட்டளையிட்டாள்.
அவர் சென்றதும் தாராவை நோக்கி மேசையில் சாய்ந்து அமர்ந்தவள், "அப்பறம்.. சொல்லுங்க, எப்டி இருக்கு கல்யாண வாழ்க்கை?" என்றாள் ஆர்வமான குரலில்.
தாராவோ முறுவல் முகம் மாறாமல், " நல்லா இருக்கு. உங்க அக்கறைக்கு தேங்க்ஸ்.." என்றாள் பட்டும் படாமல்.
வேறெதையோ எதிர்பார்த்ததைப் போல மோனல் முகம் சுளிக்க, தாரா இயன்றவரை தன் முகத்தில் எவ்வித உணர்வும் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
பரிசாரகர் குளிர்நீருடன் அவர்கள் மேசைக்கு வந்தார்.
மோனல் மீண்டும், "கொல்கத்தா மாதிரி ஹைப்பர் சிட்டி, உங்களுக்கு கொஞ்சம் புதுசா தான் இருக்கும்ல? அதுவும் ஃபேமிலியை விட்டுட்டு இருக்கறது கஷ்டம் இல்லயா? ஆதித் உங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்றதில்லை தானே?" எனத் தொடங்க, கண்ணாடிக் கோப்பையில் ஊற்றப்பட்ட நீரை எடுத்து மெல்ல ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட்டு நிமிர்ந்து நிதானமாக அவளை நோக்கினாள் தாரா.
"தற்காலிகமாகவே ஆனாலும், அவர் என் ஹஸ்பண்ட். அவர்கூட இருக்க எனக்கென்ன கஷ்டம்? நான் தனியா இல்லை; வேண்டியவங்க நிறைய பேர் என்கூட இருக்காங்க. அதனால வேண்டாதவங்க வந்தா கூட சமாளிக்க கஷ்டமில்லை."
மோனல் திகைக்க, தாரா திரும்பி பரிசாரகரிடம், "ஏக்டி கரோன். தந்நோபாத்" (ஒரு ப்ளேட் போதும், நன்றி) என்றுவிட்டு தனது பையுடன் எழுந்தாள்.
"என்ஜாய் யுவர் சாலட்" என்று மோனலின் முகத்துக்கு நேராய் உரைத்துவிட்டுத் தன்பாட்டில் வெளியே நடந்தாள் அவள்.
கடைகள் எங்கும் போகப் பிடிக்காமல் ட்ராமில் ஏறி சந்தோஷ்பூருக்கே வந்து இறங்கியவள், அங்கிருந்த பலகாரக் கடை ஒன்றில் நுழைந்து, "ரோஷ்கோலா" எனக் கேட்டு ஒரு கிலோ இனிப்பு வாங்கிக்கொண்டாள் நாளை வரப்போகும் தனது குடும்பத்தினருக்காக.
வீடு திரும்பியவள், இந்திராணியைத் தேடி சமையலறைக்குச் சென்றாள். அடுப்படியில் நின்றிருந்தவரை ஒடிச்சென்று அவள் அணைத்துக்கொள்ள, அவர் திகைத்துச் சிரித்தார்.
"என்னாச்சு தாரா?"
"இல்ல.. நீங்கள்லாம் இல்லைன்னா என் கதி என்னன்னு யோசிச்சேன். தேங்க்ஸ் ராணிக்கா.."
"ப்ச்.. என்ன திடீர்னு? யாராவது எதாவது சொன்னாங்களா? எதுனாலும்--"
"ம்ஹூம்.. ஒண்ணும் இல்ல. சும்மா தோணுச்சு."
அவளைக் கரிசனமாய்ப் பார்த்தார் அவர்.
"சரி, கையில என்ன பை?"
"அழகா இருக்கில்ல? புக் ஷாப் போயிருந்தேன். காமிக் புக் ஒண்ணு வாங்கினேன்"
"இன்னும் என்ன சின்னக் குழந்தையா நீ? பொம்மை கதை எல்லாம் படிக்கிற?"
அவரது இயல்பான கேலிப் பேச்சுக்கு நாடகத்தனமாய் உதட்டை சுழித்தாள் அவள்.
"ஹும்.. உங்களுக்கு ஸ்டான் லீ தெரியுமா? மிகப்பெரிய ஆர்ட்டிஸ்ட். தொண்ணூத்தி அஞ்சு வயசு வரைக்கும் காமிக்ஸ் வரைஞ்சவர். ஸ்பைடர் மேன், அயர்ன் மேன்னு, அவர் உருவாக்கிய காமிக் ஹீரோக்கள் சுமார் ஆயிரம் பேர்! நம்ப முடியுதா உங்களால?"
ஆச்சரியமாக வாய்பிளந்து தலையாட்டி அவள் கூறும் தகவல்களைக் கேட்டுக்கொண்டார் இந்திராணி. குக்கர் விசிலில் அடுப்பில் கவனம் திரும்பியவர், "சரிடா தாரா.. கை கழுவிட்டு சாப்பிட வா. உனக்காக பருப்பு சாதம் செஞ்சிருக்கேன்," என்றார் பாசமாக.
"நாளைக்கு எங்க அம்மா வருவாங்க.. யார் சொன்னாலும் கேட்காம கிச்சன்ல நுழைஞ்சு வேலை செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. அவங்களை கிச்சன் பக்கமே விடாத அளவுக்கு நம்ம ப்ளான் இருக்கணும்."
"அதெல்லாம் நான் பாத்துக்கிறேன், சாப்பிட வா நீ!"
புன்னகையுடன் அவரைப் பின்தொடர்ந்தாள் தாரா.
உணவருந்திவிட்டு பேனர்ஜியுடன் கொஞ்ச நேரம் கதைத்து விளையாடிய பின்னர், தனது உடைகள் மற்றும் புத்தகங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு மாடியறையில் வைக்கச் சென்றாள் அவள், தனது தாய், தம்பியுடனே தானும் தங்கிக்கொள்ள.
உடைகளை அடுக்கிவிட்டு வெளிவந்த நேரம் எதிரில் இருந்த ஆதித்தின் அறை திறந்திருந்ததைக் கண்டு லேசான ஏக்கத்துடனும் ஆர்வத்துடனும் எட்டிப் பார்த்தாள்.
வண்ணக் கண்ணாடிகள் பதித்த ஆளுயர ஜன்னலில் சூரிய வெளிச்சம் பட்டுப் படரும் வர்ண ஜாலங்களைக் கண்டு மெய்மறந்து ஆதித்தின் அறைக்குள் நுழைந்தாள் அவள்.
அறையில் பெரிதாக எதுவும் மாறவில்லை. ஆதித்தைப் போலவே நேர்த்தியான, சுத்தமான அறை. கொஞ்சம் பிரம்மாண்டமானதும் கூட. தாராவை ஒவ்வொரு முறையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அவ்வறை.
சென்ற மாதம் இருவரும் இவ்வறையில் தனித்திருந்ததை நினைத்துப் பார்த்துச் சிரித்தாள். ஏதோ தோன்றவும், சற்றுத் தயக்கத்துடன் கருநிற பட்டுப் போர்வை விரித்திருந்த அந்த கிங் சைஸ் மெத்தையில் கை வைத்துப் பார்த்தாள்.
வழவழப்பான போர்வை.. அதன்கீழ் மேகத்தாலானதைப் போல மெத்தென்ற பஞ்சணை. அதில் ஈர்க்கப்பட்டு சாய்ந்து படுத்தாள் சுகமாக. மெத்தையில் வீசிய அவனது வாசத்தை தாராளமாக முகர்ந்து நாசிக்குள் பூசிக்கொண்டாள். தலையணையில் முகம் புதைத்து அவனை நினைத்தவள், அப்படியே உறங்கியும் போனாள்.
சரியாக ஏழு மணிக்குக் கல்கத்தா விமான நிலையத்தில் இறங்கி தாஸுடன் வீடு திரும்பியவன், பயணக் களைப்புடன் தன்னறைக்குப் படியேறிட, கதவைத் திறந்த மாத்திரத்தில் தன் மெத்தையில் பூப்போல உறங்கிக் கிடந்த தாராவைக் கண்டான். கண்டதும் தன்னையறியாது உதட்டில் அரும்பிய புன்முறுவலை உணர்ந்து திகைத்தான் ஆதித்.
ஓசையெழுப்பாமல் தன் பைகளை வைத்துவிட்டுக் குளியலறைக்குச் சென்று
தன் வேலைகளை முடித்துவிட்டு வந்தவன், தாராவின் அருகில் சென்று அமர்ந்தான்.
நிர்மலமான முகத்துடன் உறங்கும் அந்த எழில்மிகு பாவையைத் தன்னை மறந்து இரசித்தவன், மெல்லிய குரலில், "ஐ மிஸ்டு யூ, தாரா.." என்றான்.
அனிச்சையாக திரும்பிப் படுத்தவளின் கை அவனது கரத்தைத் தீண்டிட, ஒருநொடி திகைத்துப் போனான். விலக்கலாமா வேண்டாமா என விவாதம் உள்ளூர நடந்துகொண்டிருந்த நேரத்தில் அவளே ஏதோ உணர்வில் விழிப்பு வந்து விழிதிறக்க, ஆதித்தைக் கண்டதும் மலர்ந்து புன்னகைத்தாள் தாரா.
தூக்கம் தழுவிய குரலில், "எப்ப வந்தீங்க..? இங்கே என்ன--" என வினவத் தொடங்கி, சட்டெனத் தான் எங்கே இருக்கிறோம் என்பது புரிந்து திகைத்துப் பதறி எழுந்தாள்.
"சாரி.. சாரி.. நான்.. வந்து.."
அவளை மென்மையாய்ப் பார்த்து இரு கைகளால் காற்றை அமர்த்துவதுபோல 'அமைதி' என சைகை காட்டினான் அவன்.
"ரிலாக்ஸ். நான் எதுவும் நினைக்கல. நீ டையர்டா இருந்திருப்ப, அதனால தூங்கியிருப்ப.. சோ வாட்? நோ இஷ்யுஸ்.. இது உன் வீடு, மறந்துடுச்சா?"
"தேங்க்ஸ்.. இருந்தாலும் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன். சாரி."
காலையில் மோனலிடம் பேசியது நினைவு வர, முகம் லேசாக வாடி மீண்டது. அதைக் கவனித்தவனும், "என்ன ஆச்சு?" என்றான்.
நடந்தவற்றைத் தயக்கத்துடன் கூறினாள் அவள்.
"உங்க பார்ட்னரோட பொண்ணு கிட்ட ரூடா பேசிட்டு வந்துட்டேன்.. எதுவும் பிரச்சனை ஆகிடாதே..?"
பயமும் கவலையுமாய் அவள் கேட்க, அவன் ஏன் ஆச்சரியமாகச் சிரிக்கிறானெனப் புரியவில்லை அவளுக்கு.
****
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro