Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

44

நடந்துகொண்டிருந்தவன் தடத்தில் சட்டென நின்றான்.

"என்ன சொன்ன?"

"தாரா கிட்ட எப்போ உங்க லவ்வை சொல்லப் போறீங்க?"

"ராஜீவ், மைண்ட் இட்."

"சாரி பாஸ்.. கம்பெனி வொர்க்கர்ன்றதை மறந்துட்டு உங்க ஃப்ரெண்ட் மாதிரி பேசிட்டேன். மன்னிச்சிருங்க. ரியலி சாரி சார்."

"உன் வார்த்தைல கொஞ்சம்கூட வருத்தம் தெரியல."

ராஜீவ் தோளைக் குலுக்க, ஆதித் தன் முழு உயரத்திற்கும் நின்று முறைத்தான் அவனை.

"தாராவோட எனக்கிருக்கற ரிலேஷன்ஷிப்ல, உன் பங்கு என்னன்னு எனக்கு சுத்தமா புரியல. கேர் டு எக்ஸ்ப்ளெய்ன்?"

"ம்யூச்சுவல் ஃப்ரெண்டா உங்க ரெண்டு பேரையும் பார்க்கறேன்.. அதனால தலைவலி வந்து தினம் சாகறேன். அவங்க மேல இவ்ளோ அக்கறை, பாசம் வெச்சிருக்கீங்க. அவங்க கேட்டா எல்லாமே மறுக்காம செய்றீங்க. அவங்களைப் பத்தியே எப்போவும் நினைச்சிட்டிருக்கீங்க. இதை லவ்னு சொல்லாம--"

"நட்பு, பரஸ்பர மரியாதை, ஆதரவு... எப்படி வேணா சொல்லலாம். அதை நீ கொச்சைப்படுத்தற மாதிரி தோணுது எனக்கு."

"நான் ஞாபகப்படுத்தத் தேவையில்ல.. பட் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தாச்சு."

"அது நிஜம் மாதிரியே நடந்த பொய். மீனிங்லெஸ்."

"அதையே தாராவும் சொல்வாங்களா?"

ஒருகணம் மிடறு விழுங்கினான் ஆதித்.

"அதைப்பத்தி எனக்குத் தெரியல ராஜீவ், ஆனா நீ சொல்ற மாதிரியான உறவை அவ நினைக்கலைன்றதை மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்."

"சரி, படிச்சு முடிச்சு வேலைக்குப் போயிட்ட பிறகு தாராவை டிவோர்ஸ் பண்ணிடுவீங்களா?"

"ராஜீவ்.. மறுபடியும் சொல்றேன், மைண்ட் இட்."

"உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்து, அவ வாழ்க்கை இப்படி அந்தரத்துல ஊசலாடிட்டு இருந்தா, நீங்க நிம்மதியா இருப்பீங்களா?"

"வாட் ஆர் யூ டாக்கிங்? தாரா ஒரு சுதந்திரமான பொண்ணு. தன் முடிவைத் தானே எடுக்கற உரிமை இருக்கு அவளுக்கு. அவங்க வீட்ல அது இல்லை. இங்க அவளுக்கு அதெல்லாம் இருக்கு. அப்ப அதைவிட பெட்டர் தானே இது?"

"இதை நீங்க முழுசா நம்பறீங்களா?"

"ப்ச்! லுக், கல்யாணம் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிக்காது. நாட்டுல எத்தனையோ ஆயிரம் பேர் டிவோர்சுக்கு அப்பறம் ஒரு நல்ல வாழ்க்கைய வாழ்றாங்க. ரெண்டாவது கல்யாணம்.. இல்லனா சிங்கிள் லைஃப். அவங்கள்லாம் இல்லையா?"

"ஒரு முக்கியமான வித்தியாசம்: விவாகரத்தை அவங்க தேர்ந்தெடுக்க ஒரு காரணம் இருந்திருக்கும். கல்யாண வாழ்க்கையை வாழ்ந்துட்டு, அதுக்குப் பிறகு அந்த முடிவை எடுத்திருப்பாங்க. உங்களை மாதிரி ஆரம்பிச்ச நாள்லயே முடிவை எழுதி வெச்சிருக்க மாட்டாங்க."

"தேவையில்லாத பேச்சு வேணாம். எனக்கு ட்ரேடர்ஸ் அசோசியேஷன் மீட்டிங் இருக்குதானே? நான் கிளம்பறேன். ப்ரீஃப்கேஸை எடுத்துட்டு வா."

ராஜீவ் நன்றாக அவனை முறைத்துவிட்டு செல்ல, சுவரில் ஆயாசமாக சாய்ந்தான் ஆதித்.

நெற்றியைத் தேய்த்தபடி பெருமூச்சு விட்டவன், ஏனோ தாராவை நினைத்துப் பார்த்தான்.

'சின்னக் குழந்தை ஒன்றின் மீது வரும் காரணமற்ற பாசத்தைப் போன்றது அவள்மீது இருக்கும் அன்பு. நடக்கத் தெரியாத இளங்கன்றுக்குக் கைவிரல் நீட்டிடும் வாஞ்சை. அதை வேறெப்படி சொல்வது? ஏன் அதற்குப் பேர் வைத்து பிரகடனப்படுத்த வேண்டும்? அன்பென்னும் குடைக்குள் அது இருந்தால் ஆகாதா?'

ராஜீவ் எடுத்துவந்த பையைக் கையில் வாங்கிக்கொண்டு அவன் நடந்தான் தனது வேலையைப் பார்க்க.

******

"எக்ஸாம் எல்லாம் முடிஞ்சது! இனிமேல் ஜாலி தான்! பேனர்ஜீ! றெக்கை இருந்தா உன்னை மாதிரி நானும் வானத்துல பறப்பேன் தெரியுமா? ஒரு பெரிய்ய பாரம் குறைஞ்சாப்புல இருக்கு தெரியுமா?"

கிளிக்கூண்டைச் சுற்றித் துள்ளிக் குதித்த தாராவை இந்திராணி பார்த்துச் சிரிக்க, அவரையும் இழுத்துக்கொண்டு நடனமாடினாள் அவள்.

அவர் விலகிக்கொண்டார் மெள்ளமாக.

"வாரக் கடைசில உங்க வீட்ல இருந்து வர்றாங்க தானே?"

"ம்ம்! அதுல வேற நான் இன்னும் ஹாப்பி!! ஹே!!"

"உங்க அம்மாவுக்கும் தம்பிக்கும் எந்த ரூமை ரெடி பண்றது? மாடியில இருக்கற பெரிய ரூம் ஓகேவா?"

"ராணிக்கா, அவங்க என்கூடவே இருந்துப்பாங்க. தனியா எதுவும் வேணாம். தன்னுவும் நானும் எங்கம்மாவோட ஒண்ணா தான் எப்பவும் தூங்குவோம், தெரியுமா?"

"கட்டில் சின்னதா இருக்கே.. இடம் பத்தாது தாரா"

"தரையில படுத்துக்கறோம். எங்க வீட்ல நாங்க பாய்ல தானே படுத்துட்டிருந்தோம்!"

"ப்ச், இதை ஐயாகிட்ட சொல்ல முடியுமா? வீட்டுக்கு வந்தவங்களை தரையில படுக்க வைக்கவா இவ்ளோ பெரிய பங்களாவை வாங்கியிருக்கார் அவர்?"

"அவர் எதுக்கு வாங்கினார்னு அவர்ட்ட தான் கேட்கணும்!"

தோளைக் குலுக்கிக் கண்சிமிட்டி அவள் சிரிக்க, இந்திராணி அவளை முறைக்க, அப்போது வீட்டினுள் வந்த ஆதித் அவர்கள் பேசியதைக் கேட்டு சிரித்துவிட்டான்.

தாரா திகைத்துத் திரும்பிப் பார்க்க, இந்திராணி பணிவாக ஒதுங்கி நின்றார்.

"ஹாய்! எப்ப வந்தீங்க?" என உற்சாகமாக அவனிடம் வந்தாள் தாரா.

"ஜஸ்ட், இப்பதான். மாடி ரூம் நல்ல காத்தோட்டமா இருக்கும். அதுலயே உங்க அம்மாவோட இருந்துக்கலாம் தன்னுவும் நீயும். ஒருதடவை பார்த்துட்டு சொல்லேன்."

சரியென அவள் தலையசைக்க, அவளுடன் படியேறினான் அவன்.

நல்ல விசாலமான அறை. ஆதித்தின் அறைக்கு நேரெதிரில். அவனது அறையின் அளவுக்கு இல்லாவிட்டாலும், பழமை பொருந்தி அழகாக இருந்தது. அகன்ற கட்டிலும், அதே டிசைனில் கண்ணாடி வைத்த அலங்கார மேசையும், கைவைத்த நாற்காலிகளும் இருந்தன அறையினுள். ஜன்னலின் வழிய அவர்கள் வீட்டின் புழக்கடைப் பக்கமிருந்த எலுமிச்சை, கொய்யா மரங்கள் தெரிந்தன; அவற்றின் மெல்லிய வாசமும் அறையை நிறைத்தன.

"ரூம் அழகா இருக்கு, ஆனா உங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்காதா? தன்னு ரொம்ப வாய். சத்தம் போடுவான் அடங்காம."

ஆதித் சிரித்தான்.
"அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.."

தாரா அசவுகரியமாக சிரித்தாள். 'நம்மால் இவருக்குத்தான் எவ்வளவு சிரமம்.. இயன்றவரை எல்லாவற்றிற்கும் கைம்மாறு திருப்பிச் செய்துவிட வேண்டும்..'

ஆதித் அவள் மனதின் கூற்றறியாமல் யோனையாக ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்தான்.

"கல்கத்தாவில இருக்கற வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள்ல, இந்த வீடும் ஒண்ணு, தெரியுமா? இது பிரிட்டீஷ் காலத்துல துணைக் கவர்னருக்காக கட்டின மேனர். அதுக்கப்பறம் கலெக்டர் ஆபிசா மாத்திக்கப் பாத்துட்டு, அப்பறம் வேணாம்னு வித்துட்டாங்க. இதை ஒரு ஜமீன்தார் கிட்ட இருந்து நான் வாங்கினேன். கல்கத்தாவுல நான் வாங்குன முதல் அசெட் இதுதான்."

"ஓ.."

"ஏன் வாங்குனேன்னு கேட்டல்ல.. ஆசைப்பட்டு, பிடித்துப் போய் வாங்கினேன்."

"ஹ்ம்.."

அவள் ஆச்சரியப்படுவாள் என எண்ணி ஏறிட்டவன், அவளது சோர்வான பார்வையைக் கண்டு துணுக்குற்றான். "ஏன்? என்ன ஆச்சு?"

தலையசைத்தாள் அவள்.
"உங்க வாழ்க்கையில எல்லாமே நீங்க ஆசைப்பட்டு, விரும்பி எடுத்த முடிவுகளா இருக்கும்ல?"

புரியாத பார்வையுடன் ஆமெனத் தலையசைத்தான் அவன். அவளே தொடர்ந்தாள்.

"உங்க முடிவுக்கு மீறி நடந்த ஒரே விஷயம்... இந்தக் கல்யாணம் மட்டும் தான். ஐம் ரியலி வெரி ஸாரி."

இப்போது ஆதித் ஆச்சரியமாகப் பார்த்தான் அவளை. 'தானிருக்கும் மோசமான நிலையிலும் அடுத்தவரின் கஷ்டத்திற்காகக் கவலைப்படுகிறாளா இவள்!?'

"நம்ம கையில எதுவும் இல்லைன்ற போது, அதைப்பத்தி ஏன் யோசித்து வருத்தப்படணும்.. லீவ் இட் தாரா. சரி, இந்த ரூமை ரெடி பண்ணச் சொல்லி இந்திராணி கிட்ட சொல்லிடு. வேற எதாவது செய்யணும்னாலும் முன்னவே சொல்லிடறது பெட்டர். நான் நாளைக்கு ஒரு முக்கியமான வேலையா லண்டன் போறேன். ரெண்டு நாள்ல வந்துடுவேன். சமாளிச்சுக்குவ தானே?"

"நீங்களுமா?"

ஆதித் வினோதமாகப் பார்த்துவிட்டு, "வேற யாரு லண்டன் போறா?" என வினவினான்.

"என் ஃப்ரெண்டும்," என்றாள் அவள்.

கல்லூரித் தோழியாக இருக்கலாமென நினைத்துக்கொண்டு ஆதித்தும் மேலும் கேட்காமல் தலையாட்டினான்.

தாரா மனுவைப் பற்றிச் சொல்ல வந்து பின் ஆதித் மும்முரமாக அவனறைக்குச் செல்வதைக் கண்டு அமைதியானாள்.

முன்பெல்லாம் அவன்மீது ஒருவித ஈர்ப்பு, வயதுக் கோளாறு போல ஏதோ ஒன்று இருந்தது அவளுக்கு; ஆனால் கல்கத்தா வாழ்க்கையினால் கிடைத்த உலக அனுபவமும் முதிர்ச்சியும், அவனது அன்பை மிகுந்த மதிப்புடன் பார்க்கக் கற்றுக்கொடுத்தன. அவன் நினைத்திருந்தால் அவளை எவ்வளவு அலட்சியமாக நடத்தியிருக்கலாம். ஆனால், தன் வருத்தத்தையும் மீறி அவளை நட்புடன் நடத்தும் அவனிடம், நாமும் நன்றியோடு இருக்க வேண்டும் என முனைந்துகொண்டாள் அவள்.

அன்றிரவு ஆதித் விமான நிலையத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த போது, அவனை அழைத்துச்செல்ல ராஜீவ் வந்திருந்தான்.

"ராஜீவ்!!" என ஓடிச்சென்று அவன் கையைப் பிடித்துக்கொண்டாள் தாரா.

"கன்கிராட்ஸ் தாரா, எக்ஸாம்ஸ் எல்லாம் முடிஞ்சதாமே? இனி ஒரு மாசத்துக்கு ஜாலியா இருக்கப் போற!"

"ம்ம், தன்னு வரட்டும்.. நீங்களும் அவனும் செம்மையா செட் ஆகிடுவீங்க! இந்த மே மாசம் நம்ம லைஃப்லயே சந்தோஷமான மாசமா இருக்கும்! சலிக்க சலிக்க ஊர் சுத்தணும் எங்களுக்கு; அதுக்கு உங்களை தான் நம்பியிருக்கேன்!"

"ஆமி குஷ் ஹாபே, ஆப்னா கே சாஹாச்சோ கர்கே!"
(உங்களுக்கு உதவுறதுல எனக்கு சந்தோஷம்)

"ஆப்னி கூப் மிஷ்ட்டி!"
(நீங்க ரொம்ப ஸ்வீட்)

கையில் சகடைப் பெட்டியை இழுத்தபடி ஆதித் வர, ராஜீவ் விரைந்து அதை வாங்கிக்கொண்டான். "ஆஷி தாரா. க்கயால் ராக்."
(போயிட்டு வரேன், பத்திரமா இரு)

ராஜீவுக்குத் தலையசைத்துவிட்டு ஆதித்திடம் திரும்பியவள், "பத்திரம்.." என்றாள்.

அவன் புன்னகைத்தான். "கணக்கில்லாத அளவுக்கு ஃப்ளைட்ல போயிட்டு வந்தாச்சு. நீ பயப்படாத."

"இருந்தாலும்.." என்றவள் ஆதித்தின் உள்ளங்கையை விரித்து ஒரு மிட்டாயைத் திணித்தாள். "போற விஷயம் நல்லதா நடக்கட்டும். டேக் கேர்."

"தேங்க்ஸ்," என்றான் அவன், கண்ணில் வாஞ்சையோடு. உண்மையிலேயே உள்ளம் பூரித்தது அவனுக்கு.

இருவரையும் பார்த்துவிட்டு ராஜீவ் தலையிலடித்துக்கொள்ளாத குறையாக ஆயாசமானான். 'இந்த ரெண்டு பேரையும் சீக்கிரமா சேர்த்து வைக்க மாட்டியா கடவுளே!'

கார் மறையும் வரை கையசைத்து விடைகொடுத்தவள், காவலாளியிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டுப் பின் உள்ளே வந்தாள்.

கைபேசி அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து அதனிடத்தில் சென்று எடுத்தவளுக்கு, முதலில் தோன்றியது அதிர்ச்சிதான்.

அப்பா சீனிவாசன் அழைத்துக்கொண்டிருந்தார்.

தானாகவே வந்த தடுமாற்றத்துடனும் பதற்றத்துடனும் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள் அவள்.

"ஹ-- ஹலோ.. அப்பா..?"

"ம்ம், என்ன செஞ்சிட்டிருக்கற சிதாரா?"

அவள் அனிச்சையாகவே முகம் சுழித்தாள். முழுப்பெயரைச் சொல்லி அப்பா கூப்பிட்டால் அடுத்த பத்து நிமிடத்தில் கையாலோ, கட்டை ஸ்கேலாலோ அடி விழும் சாத்தியக்கூறுகள் அதீதம். ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் அந்த பயம் இன்னும் போகவில்லை.

"அது.."

"ஃபோனை எடுக்க இவ்ளோ நேரமா? சத்தம் காதுல விழுகலியா?"

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, "சொல்லுங்கப்பா, என்ன விஷயம்?" எனக் கேட்டுவிட்டாள் அவள்.

"அர்ச்சுனன் வந்திருக்கான்."

அப்பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே விக்கித்து நின்றாள் தாரா.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro