39
"மனு.. போதும்ப்பா.. எனக்கு வயிறே வெடிச்சிரும்போல இருக்கு!"
"Challenges are challenges. இருபது சான்டேஷ் சாப்பிடறதா சவால் விட்டல்ல? இன்னும் எட்டு சாப்பிடணும், கமான் தாரா!"
"நான் என்னத்த கண்டேன், இது இத்தனை தெவிட்டும்னு! நாக்கெல்லாம் ஒரே சக்கரை! ஆளை விடுப்பா சாமி!"
"ப்ச், பந்தயத்துல இருந்து கோழை மாதிரி பின்வாங்குறயே.. உங்க தமிழ்நாட்டுல இதெல்லாம் மானப் பிரச்சனை கிடையாதா?"
அவள் முறைக்க, அவனோ சவாலாக ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவாறே இனிப்புப் பெட்டியை அவள்முன் நீட்டினான். ரோஷம் வந்து ஒரேயடியாக எட்டு இனிப்புத் துண்டுகளை இடைவிடாமல் தின்றுவிட்டு வயிற்றைப் பிடித்துக்கொண்டு சாய்ந்தாள் அவள், அவர்கள் அமர்ந்திருந்த காரின் பேனட்டிலேயே.
மர நிழலில் நிறுத்தியிருந்த மனுவின் ஃபோர்ட் காரின் மீது, காலை சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள் தாரா. மத்தியான வெய்யில் கொஞ்சம் இருந்தாலும், கல்கத்தாவின் சீதோஷ்ணம் எப்போதும்போல் ரம்மியமாகவே இருந்தது. உணவுகளுக்குப் பெயர்போன ஜாதவ்பூரின் ஒரு வீதியில் நின்ற தள்ளுவண்டிக் கடைக்குத் தான் அழைத்து வந்திருந்தான் அபிமன்யூ.
வெள்ளியன்று விமான நிலையத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு சம்பாஷணையே இல்லாது ஆதித்தும் தாராவும் தனித்துப் போய்விட, விடிந்தும் விடியாமலேயே அவன் தனது சூட்கேஸைத் தூக்கிக்கொண்டு பிஸினஸ் என்னும் பெயரில் வெளியே போய்விட, வாரக்கடைசி முழுதும் ஆளரவமே இல்லாத வெறும் வீட்டில் நரகமாய் தாராவிற்குக் கழிய, திங்களன்று மதியம் மனுவின் காரைப் பார்த்ததும் ஆனந்தமாய் ஓடிவந்து அமர்ந்து அவனுடன் கதைபேசத் தொடங்கிவிட்டாள் அவள். அவனுமே அதேயளவு ஆனந்தத்துடன் தான் அவளை எதிர்நோக்கிக் காத்திருந்தான். வழிநெடுகக் கதைத்துக்கொண்டே வந்தவர்கள் கடையை அடைந்தும் பேச்சை நிறுத்திடவில்லை.
"என் வாழ்க்கைலயே இத்தனை இனிப்பை இப்பதான் சாப்பிட்டிருக்கேன்! அதுவும் லஞ்ச்சுக்கு பதிலா இனிப்பையே மொத்தமா சாப்பிட்டதும் இதுதான் ஃபர்ஸ்ட் டைம்! என்னை ரொம்ப மோசமா இன்ஃப்ளூயன்ஸ் பண்ணி வெச்சிருக்க மனு.."
அவன் வாய்விட்டு சிரித்தான்.
"நான் லஞ்ச் சாப்பிடத் தான் கூப்ட்டு வந்தேன்.. நீதான் எங்க சான்டேஷைப் பத்தி தேவையில்லாம கிண்டல் பண்ணின!"
"ப்ச், குட்டிக் குட்டியா இருக்கே, எப்படி அளவு பத்தும்னு கேட்டேன்... அது ஒரு குத்தமா?"
"சைஸ்ல சின்னதுன்னாலும், இனிப்புல குறைஞ்சதில்லை எங்க கொல்கத்தா! இப்ப புரிஞ்சதா?"
"ஹ்ம், 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது'ன்னு எங்க ஊர்லயும் பழமொழி உண்டு!"
"கடுகுன்னதும் ஞாபகம் வருது.. நாம இன்னும் சாப்பிடல! கடுகு எண்ணெயில வறுத்த டைகர் ப்ரான்ஸ் வாங்கித் தர்றேன் உனக்கு, வா என்கூட"
"மனு.. இதுக்கு மேல சாப்பிட்டா, நான் கோமாவுக்கே போயிடுவேன். என்னை காலேஜ்ல விட்டுரு. நீ போய் சாப்பிடு"
"ப்ச்.. இது உன் லைஃபோட பெஸ்ட் சாப்பாடுகள்ல ஒண்ணா இருக்கப் போகுது, மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தப்படப் போற. ஒழுங்கா என்கூட வா"
தயக்கமின்றி அவள் கையைப் பிடித்து இழுத்துக் கடைக்கு அழைத்துச்செல்ல, தாராவும் சிரிப்புடனே பின்தொடர்ந்தாள்.
அதிக அலங்காரங்கள் எல்லாம் இல்லாமல் சாதாரணமாக இருந்த தள்ளுவண்டிக் கடைதான் அது. தார்பாயை மரத்தில் கட்டி அதன்கீழ் நாற்காலிகள் போட்டிருந்தனர் வாடிக்கையாளருக்காக. தாராவை அங்கே அமரச்செய்துவிட்டு, மனு சென்று இரண்டு தட்டுக்களில் 'சிங்ரி மலாய் கறி' என்னும் இறால் உணவை வாங்கி வந்தான்.
"உலகத்துலயே பெஸ்ட் இறால் கறி! யு ஆர் வெல்கம்!" என்றபடி அவளிடம் நீட்ட, "ஹ்ம், பாக்கலாம்.." எனச் சிரித்து வாங்கிக்கொண்டாள் அவளும்.
அந்தப் பெரிய இறால்களை அவள் உண்ணத்தெரியாது தடுமாற, மனு தனது தட்டிலிருந்தே எடுத்து இறாலைப் பக்குவமாக பிரித்துத் தந்தான் அவளுக்கு. பஞ்சு போன்ற பக்குவத்தில் வெந்திருந்த கறியை அவள் ஒருவாய் சாப்பிட்டதுமே மலர்ந்து விழிவிரிக்க, பெருமிதமாய்ச் சிரித்தான் மனு.
"எப்படி?"
"சும்மா சொல்லக்கூடாது டைரக்டர் சார், நீங்க ஏதோ கதை விடறீங்கனு தான் நினைச்சேன்.. ஆனா டைரக்டருக்கு சாப்பாட்டு ஞானமும் கடலளவு இருக்குன்னு இப்பதான் தெரியுது! சொன்னமாதிரி, உலகத்துலயே இதுதான் பெஸ்ட் இறால், சந்தேகமே இல்ல!"
"ஹ்ம்! அது!"
"அதேமாதிரி.. உலகத்துலயே பெஸ்ட் நண்பன் நீதான் மனு. அதுலயும் எனக்கு சந்தேகமில்ல."
தீர்க்கமான குரலில் தீவிரமான விழிகளுடன் அவள் உரைக்க, அவன் ஒருகணம் திகைத்தாலும் கண்ணசைத்து ஏற்றுக்கொண்டான்.
பேச்சும் சிரிப்புமாய் மதிய உணவு முடிய, எழுந்திருக்கவே முடியாமல் இருவரும் மரத்தடித் திண்ணையில் சாய்ந்தனர் உண்ட மயக்கத்தில்.
"மனு.. லேட்டாச்சு, வா போலாம்.."
"ஹூம்.. எனக்கு தூக்கம் கலையவே மாட்டேங்குது.. இப்டியே காரை எடுத்தா ஆபத்துதான்.. கொஞ்ச நேரம் இருப்போமே.. லேட்டாகும்னு ஃபோன் பண்ணி சொல்லிடு வீட்டுக்கு!"
தாராவின் சிரிப்பு சற்றே மறைந்தது.
'யாரிடம் தெரிவிக்க வேண்டும்? யார் நம்மை எதிர்பார்த்து இருப்பது? யார் நமக்காக காத்திருப்பது? அவனுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அவன்தான் என்றோ சொல்லிவிட்டானே, அவரவர் வசதிக்கேற்ப அவரவர் இருக்கலாம், அடுத்தவரை இம்சிக்கத் தேவையில்லை என்று! பிறகென்ன அவனிடம் அழைத்து அனுமதி பெறுவது?'
"எவ்வளவு நேரம் ஆனாலும் தப்பில்ல. என்னை யாரும் தேடப்போறதில்லை."
அவள் சட்டென அவ்வாறு சொல்லவும் மனு துணுக்குற்று நிமிர்ந்து பார்த்தான். அவள் கண்களின் ஓரத்தில் சிறுதுளிக் கண்ணீர்.
"தாரா.. என்னாச்சு?"
"தெரில. தானா அழுகை வருது..."
அவளது குரலிலிருந்த சோர்வைக் கவனித்தவன், ஏனெனக் கேட்கவில்லை. அவளாகவே பேசினாள்.
"வீட்டிலிருந்து ரொம்ப தூரத்துல இருக்கேன் நான். அக்கறையோ பிரியமோ கொண்டவங்க யாரும், இப்ப பக்கத்துல இல்ல. இந்த இடத்துல நான் பொருந்தவே இல்ல. இது என் வாழ்க்கையே இல்ல"
"டூட்.. நல்ல ஸ்வீட்ஸ், நல்ல சாப்பாடு, நல்ல பேச்சுன்னு நல்லா கமர்ஷியலா தானே போயிட்டிருந்தது.. திடீர்னு ஏன் செண்டிமெண்ட் சீன் வருது? இப்ப ஃப்ளாஷ்பேக் போகுமோ?"
அவனது தொனியில் ஏனோ பட்டென சிரித்துவிட்டாள் தாரா. அவன் தன் கட்டைவிரலால் நாசூக்காக அவள் கண்ணோரம் துடைத்துவிட்டான்.
"தாரா, சோகம் எல்லாருக்கும் இருக்கறதுதான். அது தினம்தினம் வரும்; போகும். கண்டுக்காம இருந்தோம்னா நம்மை பாதிக்காது. எதையும் லைட்டா எடுத்துக்கோ. இருட்டில் இருந்தாலுமே வெளிச்சத்தை மட்டும் பாரு. படிப்புக்காக வந்திருக்க, ஸோ அதை கவனமா பாரு. மத்ததெல்லாம் தானா நடக்கும். ஓகே?"
தாரா நன்றியோடு அவனைப் பார்த்தாள்.
"உங்களுக்கு பேசறதுன்னா பிடிக்குமோ?"
"ரொம்ப!!! பத்து நிமிஷம் வாயை மூடமாட்டேன் நானு! வீட்டுல, வீதியில.. பாக்குறவங்க கிட்டவெல்லாம் தாராளமா பேசுவேன். எங்க ஊர் ஒரு கிராமம். ஊர்ல எல்லாருமே அப்படித்தான், எப்போதும் பாசமா இருப்பாங்க எல்லார்கிட்டவும். சிட்டிக்கு வந்தபோது இங்கயும் அப்படித்தான் இருப்பாங்கனு நினைச்சேன்-- ஆரம்பத்துல அப்படித்தான் இருந்தாங்க.. ஆனா அந்த சந்தோஷம் நீடிக்கல. எல்லாருக்குமே எதாவது ஒரு உள்நோக்கம் இருக்கும். சாதாரணமா பழகறதே இல்ல யாருமே. ப்ரெண்டுன்னு சொல்லிக்க யாருமே இல்ல எனக்கு. அப்போதான் நீ என் வாழ்க்கைல வந்த!"
உணர்ச்சிப்பெருக்கில் அவளது கையைப் பிடித்துக்கொண்டான் அவன்.
"இந்த ஊர்ல, உனக்காக நான் இருக்கேன். எப்போ என்ன உதவி வேணும்னாலும், ஒரு ஃபோன்கால் தூரம்தான்; உடனே வந்துடுவேன், சரியா?"
அவள் கையை விடுவித்தபோது கைக்குள் ஏதோ இருக்க, என்னவெனப் பார்த்தாள் தாரா. அவனது அழைப்பு அட்டை இருந்தது அவளது கைக்குள்.
பிரசன்னமான சிரிப்புடன் அவனை நோக்கினாள் தாரா.
"போலாமா?" என்றவாறு அவளுக்காகக் கைநீட்ட, தயக்கமே இல்லாமல் அவன் கையைப் பிடித்துக்கொண்டாள் அவள்.
'வாட்ஸன் ஸ்ட்ரீட்' வீதியோரமாய் அவளை இறக்கி விட்டுவிட்டு அவன் செல்ல, வீட்டுக்கு நடந்து வந்தவள் கேட்டில் காவலாக நின்ற அகமத்திடம் உற்சாகமாகக் கையசைத்தபடி உள்ளே நடந்தாள். கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த ஆதித், அவள் நடந்து வருவதைக் கண்டதும் வேகமாக அவளைநோக்கி வந்தான்.
"தாரா! எங்க போயிருந்த நீ?"
அவனது தொனியில் முகஞ்சுழித்தவள் அமைதியாக விலகிச்செல்ல எத்தனிக்க, அவனோ மீண்டும் வந்து மறித்து நின்றான். பின்னணியில் கையைப் பிசைந்தபடி ராஜீவ் நின்றிருந்ததையும் தாரா கண்டாள். கேள்வியாக அவனை நிமிர்ந்து பார்த்தபடி, "காலேஜ்... ஏன்?" என்றாள்.
"காலேஜ் முடிஞ்சு மூணு மணிநேரம் ஆச்சு. உன் ஃபோனுக்கு ராஜீவ் ஒன்றரை மணிநேரமா அடிச்சிட்டு இருக்கான்! ஃபோனையும் எடுக்கல, எங்க போயிருக்கன்னும் சொல்லல, அவன் எவ்ளோ டென்ஷனா தேடிட்டு இருக்கான் தெரியுமா?"
ஆதித் சத்தமாக வினவினான்.
ராஜீவ் மிடறுவிழுங்க, தாராவின் கண்களில் கோபம் பரவ, ஆதித் இப்போது கொஞ்சம் குழப்பமாகப் பார்த்தான்.
ராஜீவ் அவசரமாக இடையிட்டு, "ஹிஹி.. அதாவது.. பாஸ் உங்களை காணோம்னு எங்கிட்ட சொல்லி கால் பண்ண சொன்னாரு.. நீங்க எடுக்கலையேன்னு நானும் பாஸும்--" என சமாதானம் சொல்ல வர, கைகாட்டி அவனைத் தடுத்துவிட்டு ஆதித்திடம் திரும்பினாள்.
"அதான் அத்தை, மாமாவெல்லாம் ஊருக்குப் போயாச்சே? அப்பறம் ஏன் இந்த நடிப்பு? ஹும்?"
"வாட்? நீ வீட்ல இல்லாம போனதும் என்னாச்சோன்னு--"
"அதான் ஏர்ப்போர்ட்ல தெளிவா சொன்னாங்களே, பொம்மை கல்யாணம்னு ஊருக்கே தெரியும்னு! அப்பறம் ஏன் இந்த அக்கறையெல்லாம்? நீங்க பாட்டுக்கு ரெண்டு வார்த்தை நல்லா பேசுவீங்க ஒருநாள்; மறுநாளே மனசு மாறி பேசாம இருப்பீங்க. அதுல நான் தினம்தினம் குழம்பி சாகறேன்! உங்க உள்நோக்கம் எனக்குப் புரியலை. என்ன பிரச்சனை உங்களுக்கு? எங்கிட்ட என்ன வேணும்?"
"நான்.. நாம.. ஃப்ரெண்ட்ஸா.."
தாரா சத்தமாகச் சிரித்தாள் ஆற்றாமையில்.
"ஃப்ரெண்ட்ஸா?? ஒரு மாசமா உங்ககூட தங்கியிருக்கேனே..? என்னால முடிஞ்ச அளவுக்கு உங்ககூட பழக எவ்வளவோ ட்ரை பண்னேனே..? ஒரு நாளாச்சும் நீங்க பதில் முயற்சி எடுத்திருப்பீங்களா என்கூட சரியா பேசிப் பழக? ஏன், அட்லீஸ்ட் என் நம்பரை கேட்கணும்னு உங்களுக்காத் தோணுச்சா? ஒரே நாள் மீட் பண்ணி பேசின ஒருத்தன், ஆயிரம்பேர் முன்னால என்கிட்ட நம்பர் கேட்டு வாங்கினான், தெரியுமா?"
"வாட்!? வாட் த ஹெல்? யார் அது? தாரா, உன்னை யாராச்சும் தொந்தரவு பண்ணா--"
"எனக்கு இருபத்தோரு வயசாகுது ஆதித். ஒருத்தர் பழகறதை பார்த்து அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு புரிஞ்சுக்கத் தெரியும் எனக்கு. நீங்க நினைக்கிற மாதிரியொன்னும் நான் புத்திகெட்ட ஆள் கிடையாது. என் வாழ்க்கையைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்."
முகத்திலறைந்தாற்போல மொழிந்துவிட்டு அவள் காத்திராமல் அவளறைக்குச் சென்றுவிட, ஆதித் சிலையாக நின்றான்.
******************
எக்ஸாம் முடிஞ்சாச்சு!!!
மருத்துவத் தேர்வுகள் இனி வாழ்க்கையில் கிடையாது!!! ஹப்பா! இது எவ்ளோ பெரிய நிம்மதி தெரியுமா!?
ரிஸல்ட் தேதி இன்னும் தெரியல. அது வேற கதை. இப்போதைக்கு அதப்பத்தி கவலைப்பட எனர்ஜி இல்லை அடியேனிடம்.
வாசக நண்பர்கள் எல்லாரும் எப்டி இருக்கீங்க? ஃப்ரீயா இருந்தா ஒரு ஹாய் சொல்லுங்க. அப்டியே டூர் போறதுக்கு நல்ல இடங்கள் தெரிஞ்சா சொல்லுங்க.
'I am back' என்பதை பெருமையும் ஆனந்தமும் கலந்து சொல்லிக்கொள்ளும்,
உங்கள் மது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro