33
தாராவின் உலகத்தில் இதுபோன்ற செயல்கள், சொற்கள், எல்லாமே புதிது.
"நம்மளை சேர்த்துவச்சு பாக்கதான் அவங்க வந்திருக்காங்க, அவங்க இங்கேயே இருக்கறதும் கிளம்பிப் போறதும் உன் கைல தான் இருக்கு."
ஜன்னலின் வழியே வந்து விழுந்த பாதி வெளிச்சத்தில், சாம்பல் நிற சாயலில் அவனது முகம் தன்னெதிரில் தெரிந்தபோது தாராவின் நெஞ்சம் கூண்டிலிட்ட பறவையாகப் படபடத்தது. தன்னந்தனியாக அவனுடன் ஓரறையில் இருப்பது வேறு மனதை உறுத்தியது.
அது ஏனென்று தான் சரியாகத் தெரியவில்லை அவளுக்கு.
அசமயமாக நடந்ததொரு போலிக் கல்யாணம் அது. அதிலே என்ன உறவு கொண்டாட முடியும்? பொய்க் கணவனா? அந்த உறவுக்கு என்ன வரையறை? நண்பர்கள் அளவிற்குக் கூட நெருக்கமோ, புரிதலோ இல்லாதபோது, அவனிடம் எப்படி அந்நியத்தனம் இல்லாமல் பழகுவது?
கொட்டக்கொட்ட விழித்திருந்தவளின் மனதில் கேள்விகள் கொதிக்க, பதில்கள்தான் எங்கே கிடைக்குமெனத் தெரியவில்லை.
விடியல் வெளிச்சம் மெல்ல அறையில் நுழைந்தபோது ஆதித்திடம் சலனம் தெரிய, தாரா சட்டெனப் போர்வைக்குள் நுழைந்துகொண்டாள். ஆதித் அவளைப் பொருட்படுத்தாமல் உற்சாகமாக எழுந்தான் கைகளை முறுக்கி விரித்துக்கொண்டு. அடிக்கத் தொடங்கிய அலாரத்தை இடைவெட்டி நிறுத்திவிட்டு, முழுக்கை டீஷர்ட் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு தனது காலைநேர ஜாகிங் மற்றும் உடற்பயிற்சியை தொடங்கச் சென்றுவிட்டான்.
தாரா மெதுவாக எழுந்து அமர்ந்தாள். மேசைமீது இருந்த டிஜிட்டல் கடிகாரம் அதிகாலை ஐந்து முப்பதென நேரம் காட்டியது. சோர்வாக மீண்டும் படுத்துவிட்டாள் அவள்.
"தாரா.. தாரா.. ஜாகோ துரந்த்!"
வாரிச் சுருட்டிக்கொண்டு அவள் எழ, இந்திராணி இரண்டடி பின்வாங்கினார். ஆதித்தை எதிர்பார்த்து விழித்தவள் பெருமூச்சு விட்டாள்.
"அஞ்சரை தானே ஆகுது.. அதுக்குள்ள என்னக்கா?"
"கோலேஜ் ஜானா ஹி நஹி? தேக்!" என்றபடி கடிகாரத்தை அவர் காட்ட, அது இப்போது ஏழு பத்தெனக் காட்டிச் சிரிக்க, அதெப்படி இரண்டு நொடிகள் இரண்டு மணிநேரமாய் மாறுமெனத் திகைத்து விழித்தாள் அவள்.
"இப்பதானே படுத்தேன்.. அதுக்குள்ளவா ஏழு மணி ஆகிடுச்சு?"
"துரந்த்! துரந்த் ஸ்னான் கர்னா!"
"ம்ம், இதோ போறேன்.. தேங்க்ஸ்.."
சோம்பல் முறித்தபடி நடந்து சென்று குளியலறைக்குள் நுழைந்தவள், வாய்பிளந்து நின்றாள் சிலையாக. ஏதோ சயன்ஸ் லேபில் வழிதவறி நுழைந்தாற்போல, திரும்பிய பக்கமெல்லாம் தானியங்கிக் கருவிகளாக இருந்தன.
கைநீட்டினால் தண்ணீர் தரும் சென்சார் கொண்ட குழாய்கள், தலைமுதல் கால் வரை தண்ணீர் பீய்ச்சும் ஜெட் ஷவர்கள், பட்டனைத் தட்டினால் சோப், ஷாம்பு மற்றும் கண்டிஷனரைத் தரும் டிஸ்பென்ஸர்கள், காலால் தட்டினால் திறந்துகொள்ளும் பாத் டப், கைகாட்டினாலே துண்டை அருகில் தரும் இயந்திரக் கை, சொடக்குப் போட்டாலே ஒளிரும் நிலைக்கண்ணாடி என அனைத்துமே தாராவை அதிசயிக்க வைத்தன. இது போதாதென கூரையில் ஸ்பீக்கர்கள் வேறு இருந்தன.
"ஹூம், இப்டி பாத்ரூம் வெச்சிருந்தா, எப்படி நான் வேடிக்கை பாக்காம ரெடியாகி காலேஜ் போறது?"
அவளுக்கு சிரமம் வைக்காமல் பத்து நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது.
"ஒரே நிமிஷம்.. இதோ வந்துட்டேன்!"
குரல்கொடுத்தவாறே அவசரமாக மேற்சட்டையை எடுத்து அணிந்துகொண்டு கதவைத் திறக்க, வியர்வை வழிய வெளியே நின்றிருந்த ஆதித்தைக் கண்டதும் திகைத்து நின்றாள் தாரா.
அவன் பார்வையை மாற்றிக்கொண்டு இரண்டடி விலகி அவளுக்கு வழிவிட, கையிலிருந்த துண்டை உடலோடு இறுக்கிக்கொண்டு அவளும் நகர்ந்தாள் தூரமாக.
படபடத்த இதயத்தைக் கையால் நீவிவிட்டுக்கொண்டு, அதிவிரைவில் தயாராகி அறைவிட்டு வெளியேறி கீழே உணவுக்கூடத்துக்கு அவள் வந்த நேரத்திற்கு, பர்வதம்மாள் அவளை எதிர்பார்த்துக் காத்திருந்ததைப் போலப் புன்சிரிப்புடன் அமர்ந்திருந்தார்.
"வாடா தங்கம்.. என்ன, முகமே ஏதோமாரி இருக்கு? நைட்டு சரியா தூங்கலையா?"
"அ.. அதெல்லாம் இல்ல பாட்டி--"
"அட, எங்கிட்ட என்னத்தை நீ விளக்கம் குடுத்துட்டு, எனக்குத் தெரியாதா.. புதுசா கல்யாணமானவங்க.. தூக்கம் லேசுல வந்துடுமா.."
அவர் நமட்டுச் சிரிப்புடன் கூற, தாராவோ கைகளைப் பிசைந்தாள் அசவுகரியமாக.
இந்திராணி நல்லவேளையாக வந்து தட்டுக்களை எடுத்துவைக்க, பர்வதம் அவரிடம் ஏதோ பேசத் தொடங்க, தாரா நிம்மதிப் பெருமூச்சுடன் தட்டில் கவனமானாள். மாதவனும் உஷாவும் சற்றுத் தாமதமாக வந்தனர். ஆதித்தும் அப்போது வர, "ஆதித் கண்ணா, வா சாப்பிடலாம்" என அவனை அழைத்து வழக்கம்போல தாராவின் அருகே அமர்த்தினார் உஷா. இம்முறை அதை எதிர்பார்த்ததால் இருவருமே சலனம் காட்டவில்லை. ஆதித் ஒருபடி மேலே போய் தாராவைப் பார்த்துப் புன்னகைக்க முயல, அவளும் தயக்கமாகச் சிரித்துவைத்தாள்.
"ஆதித், நாங்க உன்கூட ஃபேக்டரிக்கு வர்றோம் இன்னிக்கு" எனப் பர்வதம் அறிவிக்க, "ஸ்யூர் பாட்டி. நான் ராஜீவை அனுப்பி உங்களை பிக்கப் பண்ண சொல்றேன். எனக்கு மீட்டிங் இருக்கு, அவசரமா போகணும்" என்றான் அவன்.
"அட, நாங்க பத்து நிமிஷத்துல ரெடி ஆகிடுவோம்.. உன்கூட கூட்டிட்டுப் போனாதான் என்ன?"
"ஸாரி பாட்டி, நான் ஆல்ரெடி டென் மினிட்ஸ் லேட்.."
பேசியவாறே பாதி சாப்பாட்டில் எழுந்து கைகழுவச் சென்றான் ஆதித். தாராவிற்கு அது வினோதமாக இருந்தது. தன்வீட்டுப் பெரியவர்களிடம் மறுப்புக் கூறியதாக நினைவே இல்லை அவளுக்கு. இங்கே இவன் இலகுவாகத் தன் பெற்றோரையும் பாட்டியையும் தட்டிக்கழிப்பதைப் பார்க்க அதிசயமாக இருந்தது. இருந்தாலும் எதுவும் பேசாமல் குனிந்திருந்தாள் அவள். பர்வதம் உச்சுக்கொட்டினார்.
"ஏம்மா தாரா, இவன் தினமும் இப்படித்தான் கால்ல சக்கரத்தைக் கட்டிக்கிட்ட மாதிரி ஓடுவானா? நின்னு நிதானமா உன்கிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போகமாட்டானா?"
அவள் பதிலளிப்பதற்குள் அவனே, "கைல தான் செல்ஃபோன் இருக்கே, தோணறப்போ கால் பண்ணி பேசலாம்; காலைல தான் பேசணுமா என்ன?" என்றவாறு தனது கைப்பையை எடுத்துக்கொண்டு நகர்ந்தான். செல்பவனை அனைவரும் ஆயாசமாகப் பார்த்தனர். தாரா பெருமூச்சு விட்டாள்.
சிறிதுநேரத்தில் தாராவும் கல்லூரி செல்ல ஆயத்தமாகி காருக்குச் செல்ல, அவளைக் கைப்பிடித்து நிறுத்தினார் பர்வதம்.
"தாரா.. வந்ததுல இருந்து உன்னைப் பேசவிடாம ஆதித்தே எங்களுக்கு பதில் சொல்லிட்டு இருக்கான். இப்ப கேட்கறேன்.. பாட்டிகிட்ட மனசுவிட்டு சொல்லுடா. நீ இங்க சந்தோஷமா இருக்கியாம்மா? அவன் உன்னை நல்லா பாத்துக்கறானா?"
கண்களை ஒருமுறை மூடித் திறந்தாள் அவள்.
"என் வீட்ல இருக்கற அளவுக்கே இங்க நான் சந்தோஷமா இருக்கேன் பாட்டி."
அந்தப் பதிலில் திருப்தியானவர் அவளை உச்சிமுகர்ந்தார். விடைபெற்றுக் காரில் ஏறி அமர்ந்தவள் கையசைத்தாள்.
*****
கல்லூரிப் பாடங்கள் பெரிதாக கவனத்தை எட்டவில்லை.
ஜன்னலில் தெரிந்த நீல வானமும் வெள்ளை மேகங்களும் கூட, நேற்றிரவின் நினைவுகளை அவளிடமிருந்து விலக்க முயன்று தோற்றன.
தாராவிற்குக் காதல், கல்யாணம் போன்ற விஷயங்களில் அபிப்ராயங்கள் இருந்ததில்லை. சிறுவயதில் இருந்தே வாழ்க்கையில் எதாவது பெரிதாக சாதிக்க வேண்டும், தனது சொந்தக்காலில் நின்று ஊர்மெச்ச வாழவேண்டும் என்றுதான் விரும்பினாள் அவள். தந்தையின் கடன்களைப் பற்றி விபரம் தெரிந்த வயதில், நன்றாகப் படித்துப் பெரிய வேலையில் சேர்ந்து அம்மாவையும் அப்பாவையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து, தன்னால் இயன்றவரை நல்ல மதிப்பெண்கள் வாங்கினாள்.
இதுவரை அவராகத் தருவதைத் தவிர, அப்பாவிடம் கைநீட்டிக் காசு வாங்கியதில்லை. அம்மா தரும் சில்லறைகளையே சேர்த்துத் தான் வைப்பாள் எப்போதும். பள்ளி முடித்த விடுமுறையில் பர்வதம் பஞ்சாலையின் பொருளாளர் ஒருவரைப் பார்த்து அறிவுரை கேட்டாள்; அவரைப்போலவே பெரிய காரும், பளபளக்கும் காலணிகளும், குளிர் கண்ணாடியும், கைநிறைய சம்பளமும் அடைய வேண்டுமென்றால் என்ன செய்வதென.
பலமாகச் சிரித்தாலும், அக்கவுண்டன்சி படித்து 'சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்' ஆகச் சொன்னார் அவர்.
அதைத்தான் ஒரே குறிக்கோளாக வைத்துக்கொண்டு இரண்டு வருடங்கள் உழைத்துக்கொண்டிருந்தாள் அவள். சீராகச் சென்றுகொண்டிருந்த வாழ்க்கைப் பயணத்தில் எதிர்பாராத ஏதேதோ திருப்பங்கள் நேர்ந்துவிட, கண்விழித்துப் பார்க்கும்போதோ யாரோ பழக்கமே இல்லாத ஆண்மகன் ஒருவனின் நாடக மனைவியாக அவனுடன் ஒற்றை அறையில் தனியாக இருக்கிறாள்.
வாழ்க்கையை நினைத்தபோது விரக்தியான சிரிப்புதான் வந்தது அவளுக்கு.
மணியடித்து அவளது எண்ணங்களைக் கலைக்க, மாணவர்கள் எழுந்து வெளியே செல்ல, அவளருகே அமர்ந்திருந்த ரோஸியும் எழுந்தாள்.
"கேண்ட்டீன் வரை போலாம், வர்றயா?"
சரியென அவளுடன் செல்ல எழுந்தாள் தாராவும். பேசிக்கொண்டே நடந்து சென்று சிற்றுண்டி சாலையை அடைந்தபோது மாணவர் கூட்டம் மிகுதியாக இருக்க, வெளியிலேயே மரத்தடியில் ஒரு பெஞ்ச்சில் அமர்ந்தனர் இருவரும்.
"ரோஸி.. எப்பவுமே கேண்ட்டீன் இவ்ளோ கூட்டமா தான் இருக்குமா?"
"இல்லப்பா, இன்னிக்கு பிலிம் இன்ஸ்டிட்யூட்ல ஒரு பங்ஷன். கொல்கத்தாவுலயே பயங்கர ஃபேமஸான டைரக்டர் ஒருத்தர் சீஃப் கெஸ்ட்டா வந்திருக்கார். அதான், அவரைப் பார்க்க இவ்ளோ கூட்டமும் வந்திருக்கு."
"ஓஹோ.."
வங்காள மொழித் திரைப்படங்கள் பார்க்கும் பழக்கமில்லாததால் யாரென விசாரிக்கவில்லை தாராவும்.
"சிதாரா.. நமக்கு இன்னும் இருபது நிமிஷம் ப்ரேக் இருக்கு.. நாமளும் ஆடிட்டோரியம் வரைக்கும் போயிட்டு வரலாமா?"
வேறு பணிகள் இல்லாததால் தாராவும் சம்மதித்தாள். அவர்கள் அரங்கிற்குள் நுழைந்தபோது, விழா கிட்டத்தட்ட முடிந்திருக்க, யாரோ ஒரு பிரமுகரைச் சுற்றி மாணவர் கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது. அதுதான் அந்த இயக்குநர் எனத் தாராவும் புரிந்துகொண்டாள்.
காவலர்கள் போல சிலர் வந்து மாணவர்களை விலக்கி வழி செய்து கொடுக்க, இப்போது தாராவால் தெளிவாக அந்த இயக்குநரைக் காண முடிந்தது.
மறுநொடியே அதிர்ச்சியில் தாராவின் விழிகள் விரிய, அதேகணம் அந்த ஆடவனும் அவளைப் பார்த்துவிட, மலர்ந்த புன்னகையுடன், "தாரா!? ஹாய்!!" என உற்சாகமாகக் கையசைத்தான் அவன்.
"மனு??"
**********
வணக்கம், வணக்கம்!
வார இறுதி என்பதால் ஒரு அத்தியாயம் எழுத முடிந்தது அடியேனால். எப்படி இருக்குன்னு படித்தவர்கள் கமெண்ட்டில் சொல்லிச் செல்லவும்.
இந்த வருடத்திற்கு இவ்ளோதான் (என்று நினைக்கிறேன்.. ஹிஹி... டைம் கிடைச்சா எழுதாமலா இருக்கப் போறேன்?)
கதைப்புத்தகங்களை எல்லாம் மூடி வெச்சிட்டு பாடப் புத்தகங்களை தூசி தட்டவேண்டிய நேரம் வந்துடுச்சு. அதனால, அன்போடு விடைபெறுகிறேன்.
அனைவருக்கும் எனது அன்பு.
மது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro