Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

30

"பார்ரா.. வழக்கமா வாய்மூடாம பேசற தாராவையே பாஸ் வாயடைக்க வெச்சுட்டீங்க!? என்னாச்சு தாரா மேடம், கார் டிசைன் பிடிக்கலையா, நம்ம வேணா பிங்க் கலர்ல எதாவது பாக்கலாமா?"

ராஜீவ் கிண்டலாக வினவினான் அவளை.

"ராஜீவ்!" என அவனைத் தோளில் இடித்தாள் அவள். பின் ஆதித்திடம் திரும்பியவள், "எதுக்கு இதெல்லாம்..? எனக்கு காரோட்டவெல்லாம் தெரியாது.. நான் பாட்டுக்கு ட்ராம்ல போலாம்னு இருந்தேனே.." என்றாள் சங்கடமாக.

கைவிரல்களைப் பிசைந்தபடி தயக்கத்துடன் நின்றவளை அனிச்சையாகவே ரசித்துவிட்டு, அவன் புன்னகைத்தான்.

"அதான் தாஸ் இருக்காரே.. அவரே உன்னை ட்ராப் பண்ணுவாரு, உனக்கு கார் ஓட்டவும் அவரே சொல்லித் தருவாரு. மணி இப்ப எட்டு, ட்ராம் கிடைக்காது.. காலேஜ் முதல் நாளே லேட்டா போகக் கூடாதுல்ல?"

மணியைப் பார்த்துவிட்டு ஆமோதிப்பாகத் தலையசைத்தாள் அவளும்.

"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. எனக்காக நீங்க நிறையவே செய்யறீங்க. என்னால முடிஞ்சளவு சீக்கரமா எல்லாத்தையும் திருப்பித் தந்துடறேன்."

தோள்பையை எடுத்துக்கொண்டவள், அவனுக்குக் கையசைத்துவிட்டு, ராஜீவிடமும் சொல்லிவிட்டு காரில் ஏறிக்கொண்டாள்.

***

புனித சேவியர் கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான கலை அறிவியல் கல்லூரியாகும். மரங்கள் சூழ்ந்த வளாகத்தின் நடுவே அமைதியே உருவாக அமைந்த வெண்ணிறக் கட்டிடம் அது. தாஸ் அவளைக் அக்கட்டிடத்தின் முன்பாக இறக்கி விட்டார்.

"ஆல் தி பெஸ்ட் தாராம்மா"

"தேங்க்ஸ் தாஸ் அண்ணா.. வரேன்."

கல்லூரியினுள்ளே சென்று, பெயர்பலகைகளையும் கைகாட்டிகளையும் படித்துப் படித்து வழி கண்டுபிடித்து, ஒருவழியாகத் தன் வகுப்பை அடைந்தபோது, கிட்டத்தட்ட அனைத்து இருக்கைகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்க, கண்களை அங்குமிங்குமாக அலையவிட்டவாறே தனக்கொரு இருக்கை தேடினாள் அவள்.

கடைசி வரிசையில் ஒரு பெண்ணின் அருகே காலி இருக்கை ஒன்றைப் பார்த்துவிட்டவள், வேகமாக அங்கே சென்று அமர்ந்தாள்.

மாணவ மாணவிகள் அவரவர் இடத்தில் அமர்ந்து குறிப்பேடுகளுடன் காத்திருக்க, சற்று நேரத்தில் பேராசிரியர் வந்தார்.

"ஸ்போகத்ம், கெமோன் அச்சென் சபோய்? ச்சுட்டி கெமோன் சிலா?"

ஆரம்பம் முதலே சுத்த பெங்காலியில் அவர் வகுப்பெடுக்க, தாராவோ திகைத்துப் போனாள். இந்திராணியும் ராஜீவும் கற்றுத்தந்த நான்கைந்து வார்த்தைகள் தவிர பெரிதாக பெங்காலியில் ஒன்றும் தெரியாது அவளுக்கு. பேச வருவோரின் சைகையை வைத்தோ, சூழலை வைத்தோ ஊகித்துத்தான் பேசுவாள் அவள். இப்போதோ எவ்வித சம்பந்தமும் இன்றி படபடவென ஆங்கிலக் கலப்பற்ற பெங்காலியில் அந்த மனிதர் ஏதேதோ சொல்லிக்கொண்டே போக, மற்ற மாணவர்களும் கடகடவெனத் தங்கள் குறிப்பேட்டில் எழுதிக்கொண்டிருக்க, தாரா மட்டும் வெறுமனே அமர்ந்திருந்தாள் பதற்றமாக. அப்போது தன்னருகே அமர்ந்திருந்த மாணவி தனது குறிப்பேட்டில் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

எட்டி எட்டிப் பார்த்து அவள் எழுதுவதை அந்த மாணவியும் கவனித்து, "வாட்?" என்றிட, தாரா மெதுவாக, "பெங்காலி தெரியாது" என்றாள். அந்த மாணவி அவளை வினோதமாகப் பார்த்துவிட்டு, தன் நோட்டை அவளுக்குத் தெரியும்படி வைத்து எழுதினாள். தாரா நன்றியுடன் அவளைப் பார்த்தாள். "தேங்க்ஸ்"

"ஹ்ம், இந்த க்ளால் மட்டும்தான் இப்டி இருக்கும். மத்தவங்க எல்லாம் இங்கிலீஷ்ல தான் எடுப்பாங்க. கவலைப்படாத."

புன்னகைத்துவிட்டு அவள் திரும்பிக்கொள்ள, தாராவும் எழுதுவதில் முனைந்துவிட்டாள் தீவிரமாக.

****

"காலேஜையா கேட்கறீங்க? செம பெரிய கேம்பஸ்.. ப்ரிட்டிஷ் காலத்து கட்டடம் வேற! ஏதோ கோட்டை மாதிரி இருக்கு! செம்ம க்ளீனா இருக்கு! க்ளாஸ்ரூம் ஒவ்வொண்ணும் பயங்கர வெசாலமா இருக்கு.. அத்தோட க்ளாஸ் பத்தியெல்லாம் சொல்லணும்னா சொல்லிட்டே போகலாம்..! ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்! ஒருத்தர் இங்கிலீஷே பேச மாட்டாராம். இன்னொரு மேடம் இங்கிலீஷ்ல மட்டும்தான் க்ளாஸ் எடுப்பாங்க. இன்னிக்கு நாலு க்ளாஸ் நடந்துச்சு.. அதுலயே எனக்கு டையர்ட் ஆகிடுச்சு.. இன்னும் நிறைய படிக்கணும்.. நிறைய கத்துக்கணும்.."

அன்னை தேவியிடம் கைபேசியில் அளவளாவியபடி ஓட்டுநர் தாஸுக்காக கல்லூரிக்கு வெளியே காத்திருந்தாள் அவள்.

கல்லூரி வளாகம் வெய்யில் புகாவண்ணம் மரங்களால் நிறைந்திருக்க, ஒரு மரத்தடி பெஞ்ச்சில் அமர்ந்தபோது, அவளது பக்கத்து சீட் தோழி வந்து அவளருகில் அமர்ந்தாள்.

"என்ன தாரா, வீட்டுக்குப் போகல?"

"போகணும் ரோஸி, காருக்கு வெய்ட் பண்றேன்.."

"அடேடே.. கார்ல காலேஜ் வர்ற ஆளா நீ? உன் ட்ரெஸ்ஸை பார்த்து உன்னை மிடில் க்ளாஸ்னு நினைச்சிட்டனே.."

அவளிடம் விளக்கம் கொடுக்குமளவு தெம்பில்லாததால், "ஹ்ம்ம்" என்றுமட்டும் சொன்னாள் தாரா.

"சரி, நான்கூட நீ பஸ் பிடிக்க தெரியாம வெய்ட் பண்றியோன்னு நினைச்சேன். வரேன்."

கையசைத்துவிட்டு அவள் நகர்ந்தபோது, காருடன் தாஸ் வந்துவிட்டார்.

"ஏன் தாரா, லேட் ஆயிந்தா?"

"சேச்சே, இல்லண்ணா. வாங்க போலாம்"

மதிய உணவுக்கு வீடே மணக்கும்படி மேசையை நிறைத்துப் பலகாரங்களை இந்திராணி அடுக்கியிருக்க, தாரா ஆச்சரியமாக சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.

"ராணிக்கா.. இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல? நான் என்ன போருக்கா போயிட்டு வரேன், காலேஜ் தானே?"

அவர் பெங்காலியில் பரபரவென ஏதோ சொன்னபடி அவளைத் தோளோடு தள்ளி அறைக்குள் அனுப்ப, தாரா குழப்பத்தோடு உள்ளே சென்றாள்.

ஹாலுக்கு வந்தபோது, ஆதித் கூடத்து சோபாவில் அமர்ந்திருக்க, அனிச்சையாக சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள் அவள். ஒன்றரை என்றது அது.

"லஞ்ச்சுக்கு வந்தீங்களா? அதுவும் இவ்ளோ சீக்கிரமே?"

அவன் இல்லை எனத் தலையசைத்தான்.

கல்லூரி பற்றி அவனிடம் பேச ஆர்வமாக வந்தவள், அவனது முகத்திலிருந்த இறுக்கத்தைக் கண்டு குழப்பமாக நின்றாள். அவனிடம் என்ன ஏதென்று விசாரிக்கும் முன்பு வாசலில் கார் ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து வந்த பேச்சு சத்தங்களில் பரிச்சயமான குரலொன்றும் வர, தாராவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.

"மம்மி, டாடி, பாட்டி, மூணு பேரும் வந்திருக்காங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் ஃபோன் வந்தது."

தாமதமான தகவல் பரிமாற்றத்துடன் ஆதித் அவர்களை வரவேற்க வெளியே செல்ல, தாரா அதிர்வுடன் பின்தொடர்ந்தாள்.

"ஆதித் கண்ணா.. வீடு ரொம்ப அழகா இருக்குடா! நல்லவேளை, நீயும் மாடிமாடியா கட்டிய பொட்டி மாதிரி வீடு வெச்சிருப்பியோன்னு நினைச்சேன். ஆனா இது லட்சணமா இருக்குல்ல?"

திரும்பித் தன் மருமகளிடம் கேட்டுக்கொண்டே அவர் உள்ளே வர, அவரது மருமகள் உஷாவோ, தன்னுடைய மகனையும் மருமகளையும் பார்த்த ஆனந்தத்தில் பேச மறந்து ஓடிவந்தார் புன்னகையுடன்.

"தாராக்குட்டி, எப்டிடா இருக்க? நல்லா இருக்கியா? சாப்பிட்டாச்சா, இன்னும் இல்லையா? உனக்காக நாங்க என்ன வாங்கிட்டு வந்தோம் தெரியுமா?"

அவரது அன்பு நெகிழச் செய்தாலும், அழையா விருந்தாளிகளாகத் திடுதிப்பென வந்து நின்றதில் அதிர்ச்சியே மேலோங்கியது. எனவே வார்த்தையின்றி நின்றாள் அவள். பர்வதமும் வந்தும் வராமலேயே ஆதுரமாக அவளது நெற்றியைத் தடவி நெட்டியெடுத்து திருஷ்டி கழித்து, "என் ராசாத்தி! உன்னைப் பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமாடி?" என உச்சிமுகர, அவளோ உதவிக்காக ஆதித்தைத் திரும்பிப் பார்த்தாள்.

ஆதித் செருமினான்.

"நான் ஒருத்தன் இங்கே இருக்கேன்!"

மாதவன் பலமாகச் சிரித்து, அவனை முதுகில் தட்டினார்.

"மாமியாருக்கும் மருமகளுக்கும் நடுவுல மட்டும் நாம போயிடக் கூடாது ஆதித்.. அது சண்டையா இருந்தாலும் சரி, இந்தமாதிரி சந்தோஷமா இருந்தாலும் சரி!"

பர்வதம் பொய்யாக முறைத்தபடி, "ஏன்டா, நாங்க எப்ப சண்டை போட்டோம்? நீபாட்டுக்கு இல்லாத கதையெல்லாம் சொல்லிக்கிட்டு!" என சாட, மாதவன் சரணாகக் கையை உயர்த்தினார். "சும்மா சொன்னேன்மா, அவ்ளோதான்!"

"சொல்லுவீங்க, சொல்லுவீங்க! ஆதித் கண்ணா, நீ ஃபேக்டரில இருக்கறதா உன் அசிஸ்டென்ட் சொன்னானே..? எங்க வந்த?"

சாவதானமாகத் தாராவைத் தோளோடு அணைத்தபடி அவனிடம் உஷா வினவ, ஆதித் புருவத்தை உயர்த்தி ஆயாசமாகப் பெருமூச்சு விட்டான்.

"ஆக, எனக்கு இன்னிக்கு மரியாதை கிடையாது போல!"

அவன் இயல்பான விளையாட்டுடன் சொன்னாலும், தாரா அதுபுரியாமல் அசவுகரியமானாள். அவனுக்குக் கிடைக்கும் அன்பை, தான் இடையில் வந்து பறித்துக்கொண்டதாக நினைத்து வருந்தியவள், கண்களால் மன்னிப்பு வேண்டினாள் அவனிடம். உதட்டிலும், 'சாரி' என சத்தமின்றி மொழிய, ஆதித் அவளது வெகுளியாக சிந்தனையை நினைத்து உள்ளுக்குள் சிரித்தபடி, 'ஒன்றுமில்லை' எனத் தலையசைத்தான்.

பர்வதத்திடம் திரும்பியவள், "அ... பாட்டி.. என்ன திடீர்னு? ஊர்ல எதாவது.. இல்லை அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எதாச்சும்..?" என சந்தேகமாக இழுக்க, அவர் வேகமாக இல்லையென்றார்.

"சேச்சே, அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல தாராம்மா! மாதுவும் உஷாவும் வீட்டுக்கு வந்திருந்தாங்க, எங்க எல்லாருக்குமே உன்னைப் பார்க்கணும்னு தோணுச்சு.. அதான் கிளம்பி வந்தோம். கல்யாணம் நடந்த அன்னிக்குத் தானே உன்னைக் கடைசியா நாங்க பார்த்தோம்.. ரெண்டு வாரம் ஓடிப்போச்சு, பாத்தியா? ஊருல இருந்திருந்தா இந்நேரம் மறுவீடு அனுப்பியிருக்கணும். என்ன பண்றது, நீங்கதான் இங்க வந்துட்டீங்களே?"

"ஓ..."

என்ன சொல்லவெனத் தெரியாமல் கடைக்கண்ணால் ஆதித்தைப் பார்த்தபடி அவள் இழுக்க, அவனோ தன் தந்தையிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்க, தாரா சோர்வுடன் திரும்பினாள். சட்டென யோசனை வந்தவளாக, "அட, வாங்க பாட்டி.. அத்தை, மாமா, வாங்க. மொதல்ல சாப்பிடலாம் எல்லாரும்.. ராணிக்கா ரொம்ப நல்லா சமைப்பாங்க! வாங்க, வாங்க" என அழைக்க, மறுப்பின்றி அனைவரும் உணவருந்த வந்தனர்.

இந்திராணியை அறிமுகப்படுத்திய பின்னர் அனைவரும் அமர, அவரும் பணிவாக வணக்கம் கூறவிட்டு தட்டுக்களை வைத்தார் அனைவருக்கும்.

பேச்சுகளுடன் உணவருந்தி முடித்தபின் மீண்டும் அனைவரும் ஹாலுக்கு செல்ல, ஆதித்தின் அருகில் நின்றவள் மெதுவாக, "முன்னவே சொல்லியிருக்கலாம்ல, அவங்க வர்றாங்கனு?" என்றாள்.

"அவங்களே ஏர்ப்போர்ட்ல வந்து இறங்கிட்டு தான் ஃபோன் பண்ணாங்க.. நான் இந்திராணிக்கு ஃபோன் பண்ணிட்டு நேரா இங்கதான் வர்றேன்"

"என்கிட்டவும் ஃபோன் இருக்கு."

அதிருப்தியாக சொல்லிவிட்டு அவள் செல்ல, ஆதித் புரியாத பார்வையுடன் நின்றான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro