Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

29

"காலேஜுக்குப் போகும் முன்னால, எதாவது ஆஞ்சநேயர் கோயில் இருந்தா கூட்டிட்டுப் போறீங்களா?"

சனிக்கிழமை காலை ஒன்பது மணியளவில், கொல்கத்தா பல்கலைக்கழக சாலையில் காரை ஓட்டிய ராஜீவிடம், அருகில் அமர்ந்திருந்த தாரா தயக்கமாகக் கேட்டாள்.

அவளுக்காக ஷீத்தல் வாட்சாப்பில் அனுப்பிய அறிவுரைப்படி அவள் வாங்கித் தந்திருந்த இளஞ்சிவப்பு வண்ண குர்த்தியை அணிந்திருந்தாள். நெற்றியில் சின்னதாய் ஒரு கருப்புப் பொட்டு. தலைக்குக் குளித்திருந்ததால் இன்னும் முழுதாகக் காயாத ஈரக்கூந்தலை ஒரு க்ளிப் மட்டும் அணிந்து படரவிட்டிருந்தாள் தோளோடு.

"தாரா மேடம்.. கொல்கத்தாவுல கோயிலெல்லாம் காலங்காத்தால எவ்ளோ கூட்டமா இருக்கும்னு தெரியுமா? இப்போ உள்ள போனோம்னா மதியம்தான் வெளியில வருவோம்.. அப்பறம் காலேஜுக்கு எப்போ போறது?"

தாரா சோர்ந்துவிட, ராஜீவ் தன் கைபேசியை எடுத்து எதையோ தட்டினான்.

"இந்தாங்க.. யூடியூப் வழி லைவ் தரிசனம்.. ஆஞ்சநேயரை ஆசை தீர வேண்டிக்கங்க!"

தாரா அதில் மலர்ந்து புன்னகைத்து, கைகூப்பி கண்மூடி கண்ணாடித்திரையில் தெரிந்த கடவுளை வேண்டிக்கொள்ளத் தொடங்கினாள். ராஜீவ் அவளைக்கண்டு தனக்குள் சிரித்துக்கொண்டான். அவள் வழிபட்டு முடித்துக் கன்னத்தில் தட்டிக்கொண்டு, பின் சாலையை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். ராஜீவ் கடைக்கண்ணால் அவளைப் பார்த்தான்.

"காலைல பாஸ் கிட்ட பேசினீங்களா?"

"ஹ்ம்ம்.. நீங்க வரும் முன்ன தான். அவருக்கு கொல்கத்தா யுனிவர்சிட்டி வைஸ் சான்ஸலரை தெரியுமாம்.. பேசட்டுமான்னு கேட்டார்."

"ம்ம்?"

"நான் வேணாம்னுட்டேன்"

"அட, ஏங்க? சார் பேசியிருந்தா இப்ப அட்மிஷன் ஈஸியா கிடைச்சுடும்ல?"

தாரா நிதானமாக, "அதனால தான் வேணாம்னு சொன்னேன். கிடைக்கற அட்மிஷன் என்னோட மெரிட்ல கிடைக்கட்டும். நாளைப்பின்ன எல்லா விஷயத்துக்கும் அவரையே எதிர்பார்க்க முடியாதுல்ல..?" என்றிட, ராஜீவுக்குப் பெருமையும் கவலையும் ஒருசேர வந்தது.

பேச்சை மாற்ற நினைத்து ஷீத்தல்பற்றித் தொடங்கினான் அவன்.

"ஷீத்துவும் இதே மாதிரி தான். நான் இங்கயே எதாவது காலேஜ்ல சேர்ந்து படிக்க சொன்னேன்.. பணம்கூட கட்டிடலாம்னு சொன்னேன். ஆனா அவ பிடிவாதமா ஸ்காலர்ஷிப் எக்ஸாம் எழுதி கோயமுத்தூர்ல காலேஜ் சேர்ந்தா.. இப்பவும் வேலைக்கு யாரோட சிபாரிசும் வேணாம்னு சொல்லிட்டு, அவளும் சில ஃப்ரெண்ட்சும் சேர்ந்து தனியா ஒரு ஸ்டார்ட்டப் ஆரம்பிச்சிருக்காங்க."

"ம்ம்.. ஷீத்தல் சொன்னாங்க.. ஒருநாள் அவங்க ஆபிசைப் பார்க்கக் கண்டிப்பா வரணும்னு கூப்பிட்டிருக்காங்க"

"அடுத்ததா அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறதுதான் பாக்கி.."

ராஜீவ் இயல்பாகச் சொல்ல, தாராவோ உற்சாகமானாள்.

"வாவ் ராஜீவ்!! ஷீத்துவுக்குக் கல்யாணமா?? சூப்பர்!? எப்ப?? மாப்பிள்ள யாரு? இந்த ஊரா, உங்களுக்கு தெரிஞ்சவங்களா, சொந்தக்காரங்களா, ஃப்ரெண்ட்சா? எங்களையும் கல்யாணத்துக்கு கூப்பிடுவீங்க தானே?"

"தாரா.. தாரா.. பொறுமை! இன்னும் அவகிட்ட நாங்க கல்யாணப் பேச்செல்லாம் எடுக்கல. அவ விருப்பத்தைக் கேட்டுட்டுத் தான் மத்ததெல்லாம். எங்க குடும்பத்தில ஒரே பொண்ணு அவ. ஸோ, அவ மனசுக்கு பிடிச்ச ஒருத்தர் தான் அவளுக்கு மாப்பிள்ளை. அது ஃபைனல். நாங்க எந்த விதத்துலயும் அவளை ஃபோர்ஸ் பண்ணப் போறதில்ல.."

ராஜீவ் பேசப்பேச தாராவின் கண்கள் கலங்கின. அவன் சிலகணங்கள் கழித்தே அதைக் கவனிக்க, சட்டெனக் காரை நிறுத்திவிட்டுப் பதறினான்.

"ஐயோ தாரா.. என்னாச்சு? ஏன் அழறீங்க?? நான் எதாச்சும் தப்பா சொல்லிட்டனா--"
கேட்கக் கேட்கவே தன் தவறை உணர்ந்துகொண்டான் அவன்.

'சே.. அவசரக் கல்யாணம், பெற்றோரின் வற்புறுத்தல், மனக்கஷ்டம் என்று விடிய விடியக் கதைகேட்ட பின்னர், முட்டாள்தனமாக அவளிடம் இப்படிப் பேசிவிட்டோமே..'

ஆனால் தாரா அதற்குள் தன்னை சமன்படுத்திக்கொண்டாள்.
"இல்ல ராஜீவ்.. நீங்க எதுவும் தப்பா சொல்லல... ஷீத்தலுக்கு உங்களை மாதிரி ஒரு அண்ணன் கிடைக்க அவ குடுத்து வெச்சிருக்கணும். அவ விருப்பத்தை மதிக்கத் தெரிஞ்ச குடும்பம் கிடைச்சிருக்கு அவளுக்கு. ஒருவேளை எனக்கும் ஒரு அண்ணன் இருந்திருக்கலாமோ... தன்னுவும்தான் என்னை பத்திரமா பாத்துக்கிட்டான்.. ஆனா அப்பாவை மீறிப் பேச அவனுக்கு வயசு இல்ல. அண்ணன் இருந்திருந்தா நிலமை மாறியிருக்குமோ.."

விரக்தியாக அவள் சிரிக்க, அவள் கைகளிரண்டையும் பிடித்துக்கொண்டான் ராஜீவ்.

"கூடப் பொறக்காத சகோதரனா நான் இருக்கேன் தாரா. இங்க உனக்காக, உன்னை அன்பா, பத்திரமா பார்த்துக்க நாங்கள்லாம் இருக்கோம். நான், ஷீத்தல், நம்ம ஆதித் சார்.. எல்லாரும் இருக்கிற வரை, உனக்கு ஒரு குறையும் வராது. சிலநேரம் நம்ம கட்டுப்பாட்டை மீறி வாழ்க்கைல சில விபத்துக்கள் நடக்கும்தான்.. ஆனா அதுவே திருப்பு முனையா அமைஞ்சு வாழ்க்கையை சந்தோஷமாக்கும். அதுமாதிரி ஒரு சம்பவம் தான் உனக்கு நடந்த கல்யாணம். அதை நினைச்சு கவலைப்படாம, அதைத் தாண்டி உன் வாழ்க்கையை எப்படி எடுத்துட்டுப் போகப்போறோம்னு யோசி. மத்தபடி, உனக்கு என்ன சின்ன பிரச்சனை வந்தாலும், இந்த அண்ணனை கூப்பிடலாம். ஆனா அண்ணான்னு வாயால கூப்பிடாதீங்க, ராஜீவ்னு கூப்பிடறதே அழகாத்தான் இருக்கு..."

அவனது கடைசி வாக்கியத்தில் தாரா சிரித்துவிட, அதே சிரிப்பு வாங்கிப் பிரதிபலித்தபடி மீண்டும் காரை இயக்கினான் ராஜீவ்.

***

கொல்கத்தா பல்கலைக்கழகம். இந்தியாவின் அதிமுக்கிய கல்வி நிலையங்களில் இதுவும் ஒன்று. ஆங்கிலேயர் காலத்திலேயே சிறந்த கல்வித் தளமாக செயல்பட்ட இந்த பழமைவாய்ந்த பல்கலைக்கழகம், 2007ம் ஆண்டில் தனது நூற்றைம்பதாம் ஆண்டு வளைவைப் பெற்றது. அந்தக் கல்வளைவை வாய்பிளந்து பார்த்தவாறே ஜன்னல் வழியாக தலையை எட்டிப்பார்த்தாள் தாரா.

"எவ்ளோ அழகா இருக்கில்ல?"

"ம்ம்.. ப்ரிட்டிஷ் காலத்து கட்டடம்.."

"இதுதான் மெய்ன் ப்ளாக்கா?"

"ஹான், அட்மிஷன்ஸ் இங்கதான்."

பிரம்மிப்புக் குறையாமல் உள்ளே சென்று, வரவேற்பு மேசையில் இருந்தவரிடம் விபரம் கூறிக் காத்திருக்க, பத்து நிமிடத்தில் அவர்களுக்கு அழைப்பு வந்தது தலைமை அலுவலர் அறைக்கு.

அறுபதைத் தொட்ட பெங்காலி மனிதர் கம்பீரமாக அமர்ந்திருந்தார் உள்ளே. பற்பல ஆண்டுகள் பல்லாயிரக்கணக்கான மாணாக்கர்களைப் பார்த்த அனுபவம் மிக்கவர் என்பதை, அவர் முகத்தில் படர்ந்திருந்த சிந்தனைக் கோடுகள் கூறின.

உள்ளே சென்று, தன் சான்றிதழ்களை அவர்முன்னால் சமர்ப்பித்துவிட்டு, காலை வணக்கமும் கூறிவிட்டுப் பணிவாக அமர்ந்தாள் தாரா. வழக்கமான கேள்விகள், பதில்கள் முடிந்ததும், விண்ணப்பப் படிவங்கள், கல்லூரிக் கட்டண விபரங்கள் ஆகியவை கொடுக்கப்பட்டன. ராஜீவ் தயாராக வந்திருந்ததால் பையிலிருந்து காசோலை ஒன்றை எடுத்து அதில் விபரங்களை நிரப்பினான். தாரா அதன்கீழ் ஆதித்தின் கையெழுத்து இருந்ததைக் கவனித்தாள்.

ராஜீவிடம் தண்மையாக, "படிப்பு முடிஞ்சு வேலை கிடைச்சதும், பணத்த திருப்பித் தந்திடுவேன்" என்க, அவன் குறும்பாகப் புன்னகைத்தான். "அதுல என்ன சந்தேகம்?"

***

ஞாயிறெல்லாம் கல்லூரிக்குத் தேவையான உடைமைகளைச் சேகரிப்பதில் தீர்ந்துவிட, கண்மூடி எழுந்தால் திங்கட்கிழமை வந்துவிட்டது. தாராவின் முதல் நாள், கொல்கத்தா கல்லூரியில் கால்பதிக்க.

கால்கள் தரையில் நிலையாக நிற்காமல் அலைமோத, கொஞ்சம் பதற்றமும் கொஞ்சம் ஆர்வமும் நிறைய உற்சாகமுமாய் அவள் கிளம்பித் தயாராகி வந்தாள். வெள்ளை நிறத்தில் குர்த்தியும், ஜீன்சும், பல வண்ணங்கள் கலந்த துப்பட்டாவும் அவளுக்கு மிகமிக எடுப்பாக இருப்பதைக் கண்ணாடி பறைசாற்ற, கையோடு நெற்றியில் ஒரு கருப்புப் பொட்டும் இட்டுக்கொண்டவள், கைகளால் உடையை நீவிவிட்டவாறே வந்தாள் கூடத்துக்கு.

உணவு மேசையில் அமர்ந்திருந்த ஆதித், ஒரு கையில் யாருடனோ பேசிக்கொண்டு, மறுகையால் வேகவேகமாக உணவருந்திக் கொண்டிருக்க, அவனருகே சென்று லேசாக செருமினாள் அவள்.

கைபேசியைக் காதிலிருந்து எடுத்துவிட்டு, அவளை நிமிர்ந்து பார்த்தவன், கண்ணில் கனிவோடு, "ஹ்ம்ம்.. லுக்கிங் குட். ரெடியா?" என்றான்.

மூச்சொன்றை இழுத்து விட்டவள் ஆமெனத் தலையசைத்தாள்.

இந்திராணி ஒரு கிண்ணத்தில் பால் பாயாசம் கொண்டுவந்து பாசமாகத் தாராவுக்கு ஊட்டி விட்டார்.

"ஆமி கூப் குஷி தாரா! சஃபல் ஹாவோ!!"

"தேங்க்ஸ் ராணிக்கா.. பாயாசம் சூப்பர்!!"

"போஷூன்! காபார் தோயரி!"

"ஓ.. சாப்பிடலாமே.."

ரொட்டியும் காய்க்கூட்டும் அவளுக்காகத் தட்டில் எடுத்து வைத்தவர், கூடவே கொஞ்சம் பால்கோவாவும் வைத்தார் தட்டில்.

அவருடன் அளவளாவிக்கொண்டே உணவருந்தி முடித்து எழ, சரியாக ராஜீவ் "தாரா..!" என்றழைத்தவாறே உள்ளே நுழைந்தான்.

"வாங்க ராஜீவ்.. சாப்பிடலாமே.."

"சாப்பிட்டாச்சு! முதல் நாள் காலேஜ்.. வாழ்த்து சொல்லத்தான் நான் வந்தேன்."

"தேங்க்ஸ் ராஜீவ்.."

"அப்றம், இது உங்களுக்காக."

"என்னதிது?"

"ஜஸ்ட் எ கிஃப்ட். காலேஜுக்கு யூஸாகும்"

நீட்டிய கனமான பையை வாங்கிப் பிரித்துப் பார்த்தாள் தாரா.

ஒரு புது மடிக்கணினி இருந்தது உள்ளே.

"ஐயோ ராஜீவ்.. இந்தாங்க.."
தாரா பதற்றமாக அதைத் திருப்பித்தர முயல, ராஜீவ் புரியாமல் பார்த்தான்.

"ஏன்? பிடிக்கலையா?"

"ராஜீவ்.. இவ்ளோ விலை ஒசந்த கிஃப்ட்டெல்லாம் எனக்கு யாரும் குடுத்ததில்ல, வாங்கவும் எனக்கு மனசு இல்ல. உங்ககிட்ட நான் எதையும் எதிர்பாக்கல. இது வேணாம் ப்ளீஸ்.."

ராஜீவ் பலமாக சிரித்தான்.

"சரிதான்.. லேப்டாப் வாங்கித் தந்ததுக்கே இப்டி ஷாக் ஆகறீங்களே.. பாஸோட கிஃப்ட்டை பார்த்தா என்ன ஆவீங்க?"

தாரா கேள்வியாக ஆதித்தைப் பார்க்க, அவனோ கோட்டுப் பாக்கெட்டில் கைவிட்டபடி அசட்டையாக வெளியே நடந்து சென்றான். அவனைப் பின்தொடர்ந்து செல்லுமாறு தாராவுக்கு ராஜீவ் கண்காட்ட, அவளும் சென்றாள்.

வாசலில் நின்றது புத்தம்புதிய நீலநிற ஹூண்டாய் i10 கார் ஒன்று. காரின் அருகே நின்ற தாஸ் தாராவைக் கண்டு உற்சாகமாகக் கையசைத்தார். தாரா அதிர்ச்சியாக மூச்சிழுத்தாள். வாய்பிளந்தவாறே திரும்பி ஆதித்தை அவள் பார்க்க, அவனோ சிரித்தபடி தோளைக் குலுக்கினான்.

"ஹேப்பி காலேஜ் ஃலைப்!"

"எ.. என்ன.. இது.. இதெல்லாம்.. நான்.."

வார்த்தையின்றி அவள் தடுமாறித் தயங்க, ஏனோ அந்த அப்பாவித்தனத்தை வெகுவாக ரசித்தான் ஆதித்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro