28
அந்த வாரம் முழுவதும் தாராவிற்கு மிகமிக இனிமையாகக் கழிந்தது. ஆதித் அவளிடம் யதார்த்தமாகப் பேசத் தொடங்கியது ஒரு காரணமென்றாலும், இன்னபிற காரணங்களும் இருந்தன அம்மகிழ்ச்சிக்கு.
இந்திராணியும் அவளும் நல்ல நண்பர்களாகியிருந்தனர். இப்போதெல்லாம் சமையலறைக்குள் அவளை அவரே அழைத்துக்கொண்டார் பெங்காலி சமையல் கற்றுக்கொடுக்க.
ஓட்டுநரான தாஸையும் 'அண்ணா, அண்ணா' என்றழைத்து இயைந்திருந்தாள் அவள். அவரது முழுப்பெயர் ரவிதாஸ் என்பதையும் அறிந்துகொண்டிருந்தாள். அவரிடம் ஓரிரு தெலுங்கு வார்த்தைகளும் கற்றிருந்தாள்.
வெளி கேட் அருகே காவலாளியாக அமர்ந்திருக்கும் ஐம்பதைத் தாண்டிய அப்பாஸ் அகமத்தையும் 'அங்க்கிள்' என்றழைக்கத் தொடங்கியிருந்தாள். அவரும் 'பேட்டி, பச்சா' என்று அவளிடம் அன்புபாராட்டத் தொடங்கியிருந்தார்.
அவ்வப்போது அனைவரையுமே அழைத்துத் தோட்டத்தில் அமர்ந்து ஒன்றாக கதைபேசி, சிற்றுண்டி அருந்தி, விளையாட்டுகள் புரியவும் தொடங்கியிருந்தாள். முதலில் பயந்து மறுத்தாலும், தாராவின் கெஞ்சல்களுக்கு செவிசாய்த்து, அனைவரும் மாலை வேளைகளில் அவளுக்காக ஒன்றுகூடினர்.
பகல்களில் தோட்டத்துச் செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதும், அங்கே வரும் குருவிகளுடன் கொஞ்சிப் பேசுவதுமாய்ப் பொழுதுகள் கழிய, நண்பகலில் அப்பா ஆலைக்குப் போய்விட்ட பிறகு அழைத்து அம்மாவிடம் பேசிவிட்டு, மதியத்துக்கு மேல் தொலைக்காட்சியோ புத்தகமோ எதிலேனும் லயித்துவிட்டு, மாலைகளில் தான் சேர்த்த நட்புவட்டத்துடன் அளவளாவிட விரைவாள்.
எனவே அவளைப் பொறுத்தவரை கொல்கத்தா வாசம் இனிமையாகவே சென்றுகொண்டிருந்தது.
ஆதித் அவள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவளைக் காணும்போதெல்லாம் இயல்பாக ஏதேனும் பேச முற்படுவான். சில நேரங்களில் வீட்டைப் பற்றி விசாரிப்பான், அவனது தம்பியைப் பற்றிக் கேட்பான். அவன் ஒரு கேள்வி கேட்டாலே பத்திப் பத்தியாக அவள் பதில் சொல்வாள் ஆர்வமாக. கவனித்தாலும் கவனியாவிட்டாலும் புன்னகைத்துத் தலையசைக்கக் கற்றுக்கொண்டான் அவனும்.
அன்றொருநாள் மாலை வீட்டுக்கு வந்தபோது, சோபாவில் அமர்ந்திருந்த தாரா அவனைக் கண்டதும் புன்னகைத்து எழுந்து வந்தாள்.
"உங்க AN க்ரூப்ஸ்ல, போன வருஷம் மட்டும் பதினெட்டு புது ப்ராடக்ட்ஸ் தயாரிச்சு மார்க்கெட்ல வெளியிட்டீங்களாமே?"
திடீரென சம்பந்தமே இல்லாமல் அவள் கேட்க, ஆதித் வியப்பாகப் பார்த்தாள்.
சிரித்தவள், தன் கையிலிருந்த புத்தகத்தைக் காட்டினாள். அது அவர்களது நிறுவனத்தின் ஆண்டு மலர். அவ்வாண்டின் முக்கிய நிகழ்வுகள், சாதனைகள், முதலியன அதில் வெளியிடப்படும்.
"போரடிச்சது.. ஷெல்ஃப்ல இது இருந்தது.. அதான் எடுத்துப் படிச்சேன். உங்களுக்கு போன வருஷம் 'மோஸ்ட் சக்செஸ்ஃபுல் டிசைன்ஸ்' அவார்ட் கிடைச்சதாமே..? பேர் மட்டும் இருக்கு.. ஃபோட்டோ இல்லையே..?"
"அவார்ட் வாங்க நான் இல்ல"
"ஓ.. என்னாச்சு?"
ஆதித் பொறுமையின்றி, "லேட்டானது, கிளம்பி வந்துட்டேன்" என்றான். தாரா உதட்டை சுழித்தாள்.
"ஓ.."
அவன் அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் மாடிக்குச் சென்றுவிட, தாராவும் தோளைக் குலுக்கிவிட்டு மீண்டும் சோபாவிற்கே சென்றாள்.
***
வெள்ளிக்கிழமை காலை ஏழு பதினைந்து.
தன் அலுவலக அறையில் அமர்ந்து மும்முரமாக ஏதோ தட்டச்சு செய்துகொண்டிருந்த ஆதித்தை, அப்போதுதான் உள்ளே நுழைந்த ராஜீவ் பார்த்து சற்றே திகைத்தான்.
"கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரின்னு சொல்லுவாங்களே.. அது நீங்க தானா பாஸ்?"
ஆதித் நிமிராமல், "பேசிட்டே இரு, நாளைக்கு வேற புது அசிஸ்டென்ட் வரவேண்டியிருக்கும் உன் இடத்துக்கு" என்றான் சாந்தமான தொனியில். ராஜீவ் சிரித்தான்.
"உங்களை புரிஞ்சுக்கிட்டு வேலை பார்க்கறதுக்கு, நானே தேடினாலும் இன்னொரு ஆள் கிடைக்காது!"
"தற்புகழ்ச்சி போதும், அந்த எப்சன் ப்ரிண்ட்ஸ் டீல் ரினீவல் என்ன ஆச்சு? ஊர்ல இருந்தப்ப கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க; அப்பறம் நான் வந்ததும் பேச்சே இல்ல?"
"நான் ஃபோன் பண்ணிப் பாக்கறேன் பாஸ். அப்பறம், தாரா என்ன பண்றாங்க? வீட்ல இருக்க போரடிக்குதுன்னு ஷீத்தல்கிட்ட சொன்னாங்களாம்.. இப்ப என்ன பண்றாங்க?"
"வீட்ல தான் இருக்கா."
"காலைல பேசினீங்களா? எதாச்சும் சொன்னாங்களா?"
"தெரியல, பாக்கல. சீக்கிரமா கிளம்ப வேண்டியிருந்தது"
ராஜீவ் ஏதோபோலப் பார்க்க, ஆதித் பெருமூச்சு விட்டான்.
"ப்ச், ராஜீவ்... நான் கல்யாணம் வேணாம்னு பிடிவாதமா மறுத்தது இதுக்காகத் தான். I don't have time, Rajiv. ஃப்ரெண்டா கூட சக மனுஷங்க கிட்டப் பேச எனக்கு நேரமில்லை; பின்ன எப்படி கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துறது? எங்க மம்மி, டாடியை போலவா? அவங்களைப் பார்த்த பிறகுதான் கரியரையும் கல்யாணத்தையும் பேலன்ஸ் பண்ண யாராலயும் முடியாதுன்னு புரிஞ்சிக்கிட்டேன். அதனால தான் கல்யாணத்தை முடிஞ்சவரைக்கும் தள்ளிப் போட ட்ரை பண்ணினேன். இப்ப என் நிலமைய பாத்தியா? சம்பந்தமே இல்லாம அந்தப் பொண்ணையும் கஷ்டப்படுத்திட்டு, அதை நினைச்சு நானும் ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்"
ராஜீவ் அவனருகில் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தான்.
"பாஸ், நம்மளைப் புரிஞ்சிக்கற பார்ட்னரா அமைஞ்சா, கரியரோ கல்யாணமோ எல்லாமே ஈஸிதான். தாரா உங்களைப் புரிஞ்சுக்கிட்ட காரணத்தால தான், நீங்க கேட்டதுமே இப்படியொரு போலிக் கல்யாணத்தை பண்ணிக்க ஓகே சொன்னாங்க. உங்களைப் புரிஞ்சிக்கிட்ட காரணத்தால தான், உங்ககூட ஃப்ரெண்ட்ஸா இருக்க விரும்பறாங்க. தாரா ரொம்ப நல்ல பொண்ணு பாஸ். நீங்க பேசினா அவங்க புரிஞ்சிக்க வாய்ப்பிருக்கு..."
மறுப்பாகத் தலையாட்டினான் ஆதித்.
"கொஞ்ச நாள்ல ஊரிலிருந்து அவளோட சர்டிபிகேட்ஸ் வந்துரும், சீக்கிரமே காலேஜ்ல அட்மிஷனும் கிடைச்சிடும். தாராவுக்கு நான் தேவைப்பட மாட்டேன் கூடிய சீக்கிரமாவே. Let's hope she learns to be independent."
அந்த சம்பாஷணை முடிந்துவிட்டதாக ஆதித் எழுந்து வெளியேற, ராஜீவ் கவலையாக அவனைப் பார்த்தான்.
****
ஆதித்தின் வார்த்தைகளின் ஆற்றலோ, அல்லது இந்திய தபால்துறையின் வேகமோ, அன்று மாலை தாராவின் பெயருடன் ஒரு பெரிய காக்கிக் கவர் வந்தது தமிழகத்திலிருந்து.
ஆதித் வீட்டினுள் நுழைந்ததுமே தாராவின் உற்சாகக்குரல் அவனை அடைந்தது.
"கூரியர்ல என்ன வந்திருக்கு தெரியுமா?"
"சர்டிபிகேட்ஸ்?" என்றான் ஆதித், சலனமின்றி.
"ம்ம்! கூடவே ஃபோட்டோஸ்!! காலேஜ்ல நாங்க ஃப்ரெண்ட்சோட வெளிய போனபோதெல்லாம் எடுத்த ஃபோட்டோஸ்!! ப்ரின்சி அதையெல்லாம் சேர்த்து ஆல்பமா போட்டிருக்கா!! பாக்கறீங்களா??"
"ம்ம், அஞ்சு நிமிஷம், வரேன்"
"கூடவே எல்லாருமா சேர்ந்து கைப்பட வாழ்த்து எழுதின கார்ட் ஒண்ணும் இருக்கு.. அப்பறம் என்னோட காலேஜ் அசைண்மென்ட் பேப்பர்ஸ்.. எங்க அக்கவுண்ட்டன்சி ப்ரொஃபசர் என்ன எழுதியிருக்கார் தெரியுமா? ஆல் தி பெஸ்ட்னு எழுதியிருக்கார்!!"
அவளது அதீத உற்சாகம் அவனையும் சற்றே அடைந்து பாதித்தது. அன்பாகப் புன்னகைத்தவன், "கன்கிராட்ஸ்" என்றான்.
"சரி, இப்ப இந்த ஊர் காலேஜ்ல போயி மறுபடி அட்மிஷன் போடணும்ல? எப்ப போகணும்?"
"அ.. அதை ராஜீவ்கிட்ட சொல்றேன். அவன் பார்த்துப்பான்.. எனக்கு நாளைக்கு ஒரு முக்கியமான மெர்ஜர் இருக்கு.."
"ஓ.."
"டோன்ட் வரி தாரா, நான் எல்லாத்தையும் கவனிச்சுக்கறேன். காலேஜ்ல போயி அட்மிஷன் போட்டுட்டு வர்ற வரைக்கும், ராஜீவ் உன் கூடத் தான் இருப்பான்"
"ம்ம்.. தேங்க்ஸ்"
இரவு ஏழு மணியளவில் ராஜீவ் வந்தான், கையிலொரு இனிப்புப் பாக்கெட்டுடன்.
"ஹாய் தாரா! ஷீத்தல் சொன்னா, உங்க சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் வந்திருச்சாமே..? நாளைக்கே நீங்களும் நானும் போயி யுனிவர்சிட்டில அப்ளை பண்ணிடலாம் லேட்டரல் எண்ட்ரிக்கு. கன்கிராட்ஸ். ஸ்வீட்ஸ்?"
"வாவ்.. தேங்க்யூ ராஜீவ். ஷீத்தலும் நீங்களும் எனக்கு ஸ்வீட் வாங்கித் தர்றதுக்காகவே இருக்கற மாதிரி இருக்கு!!"
அவன் சிரித்தான். மேசை மீது கிடந்த புகைப்பட ஆல்பம் மற்றும் காகிதங்களைக் கண்டவன், "என்ன அதெல்லாம்?" என வினவ, கேட்க ஆள் கிடைத்த உற்சாகத்தில், "இதுவா, என்னோட காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் அனுப்பின கிஃப்ட். பாக்கறீங்களா?" என அழைத்துச்சென்று சோபாவில் அமர்த்தி, ஒவ்வொரு புகைப்படமாகக் காட்டி விளக்கத் தொடங்கினாள் அவள்.
"இது க்ளாஸ் ரூம்ல... அப்றம் இது ஆடிட்டோரியம்ல.. இதெல்லாம் நாங்க க்ளாசை கட் பண்ணிட்டு சினிமா போனபோது எடுத்தது.. அப்பாக்குத் தெரிஞ்சா அவ்ளோதான்.. அப்பறம் இது காலேஜ் டூர்.. கொடைக்கானல் போனோம். அப்பா டூருக்கு காசு தரமாட்டேன்னு சொல்லிட்டாரு, அம்மா தான் கடுகு டப்பாவுல இருந்து காசு எடுத்துத்தந்தாங்க, தெரியுமா?"
அவர்கள் பேசிச் சிரித்துக்கொண்டிருக்க, ஏதோ அலுவலக அழைப்பைப் பேசிக்கொண்டு மாடியில் நின்றிருந்த ஆதித்திற்கும் அது கேட்டது. லேசாக சிரிப்பு வந்தது. சென்று அதில் கலந்துகொள்ள வேண்டும்போல இருந்தது. ஆனால் காதருகில் கடமை அழைக்கும்போது, அதைவிட்டு எங்கே செல்வது என சோர்ந்துபோனான் அவன்.
கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்து அவன் வந்தபோது, ராஜீவ் கிளம்பியிருந்தான். தாரா மேசையை ஒழுங்குபடுத்தி எடுத்துவைத்துவிட்டு, உணவுக்கூடத்தின் அருகே நின்றாள் இந்திராணியுடன்.
"ராஜீவ் எவ்வளவோ கேட்டும் சாப்பிடாமலேயே கிளம்பிட்டாரு ராணிக்கா.. ஷீத்துவும் அப்படித்தான், எதாச்சும் சாக்கு சொல்லி சாப்பிடாமலே போயிடறாங்க. ஒருநாள் ரெண்டு பேரையும் லஞ்ச்சுக்கு கூப்பிடணும்..."
பேசிக்கொண்டிருக்கையில் ஆதித்தைப் பார்த்துவிட்டவள், "ஆபிஸ் கால்ல பிஸியா இருந்தீங்க போல? ராஜீவ் வந்திருந்தார். காலைல காலேஜுக்கு கூட்டிட்டுப் போறேன்னு சொன்னார்.." என்றபடி மீண்டும் சென்று ஆல்பத்தை எடுத்து வந்தாள்.
"உங்ககிட்ட காட்டத் தான் காத்திருந்தேன்.. சாப்பிட்டுக்கிட்டே பாக்கலாமா?"
ஆதித்திற்கு உள்ளுற நெகிழ்ந்தது நெஞ்சம். காலையில் ராஜீவ் கூறியதைப் போல, புரிதலுள்ள துணை கிடைத்தால் வேலையையும் குடும்பத்தையும் பாதிப்பின்றி ஒருசேர கவனிக்க முடியும் போலும் என்று தோன்றியது. அந்த எண்ணத்தைத் தள்ளிவைத்துவிட்டு, அவளது உற்சாகத்தைப் பகிர்ந்தபடியே புகைப்படங்கள் பார்க்கவென அமர்ந்தான் ஆதித்.
அவனுக்கு அருகில் அமர்ந்தவள், புகைப்படங்களைத் தொட்டுக்காட்டிக் கதைகூற, வழக்கம்போல ஆதித்தின் கவனமெல்லாம் அவளது மையிட்ட விழிகளிலேயே மையம் கொண்டிருந்தது.
.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro