Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

26

"ஷீத்தல்!!"
உற்சாகத்துடன் எழுந்து ஓடிச்சென்று ஷீத்தலிடம் நின்றாள் தாரா.

"என்ன தாராபென், நேத்து பார்ட்டியெல்லாம் எப்டி போனது?"

"ஹான்.. நல்லா இருந்துச்சு. உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும். நீங்க மட்டும் இல்லைன்னா--"

அவள் முடிக்குமுன் ஷீத்தல் ஆயாசமாய் முனகியவாறு காதைக் குடைவதுபோல சைகை செய்தாள்.
"ஆ..ஊன்னா உடனே தேங்க் பண்ண ஆரம்பிச்சிடறதா? நன்றி சொல்லி சொல்லியே உன் நாக்கு தேய்ஞ்சு போயிடும் போல! ஃப்ரீயா விடு தாரா, ஃப்ரெண்ட்சுக்குள்ள என்ன தேங்க்ஸெல்லாம்?"

தாரா சிரித்தாள்.

"சரி வாங்க, உட்காருங்க.. எதாச்சும் சாப்பிடறீங்களா?"

"கொல்கத்தாவுக்கு வந்தாலும் கோயமுத்தூரு பழக்கம் விடாது போல!? எனக்கு எதுவும் வேணாம், நீ உட்கார்."

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, எதாவது சாப்பிடுங்க.. ராணிக்கா ரொம்ப சூப்பரா சமைப்பாங்க, தெரியுமா? என்னைத் தான் கிச்சனுக்குள்ள விடவே மாட்டேங்கிறாங்க. நான் உங்களை சாக்கா வெச்சு எதாவது சமைக்கறேனே..?"

"நல்ல ஆளுதான் போ! வீட்டுல எல்லா வேலைக்கும் ஆள் வெச்சு, உன்ன மகாராணி மாதிரி ஜம்முனு இருக்கச்சொன்னா, நீ என்னடான்னா சமைக்கிறேன், துடைக்கறேன்னு அலையுற!? ஆதித் சார் இதைக் கேட்டா வீட்ல இருக்கற ஹெல்ப்பர்ஸ் நிலமை என்ன ஆகும் தெரியுமா?"
ஷீத்தல் சிரிப்பும் முறைப்புமாய் வினவ, தாராவோ ஆதித்தின் பெயர் சொல்லப்பட்டவுடனேயே முகம்சிறுத்தாள்.

"அவரு என்ன சொல்லுவார், யாரும் யாரையும் டிபெண்ட் பண்ணாம தன்னந்தனியாகவே இருக்கலாம்னு சொல்லுவார்.."

கசப்பாக அவள் முனக, ஷீத்தல் வினோதமாகப் பார்த்தாள் அவளை. "என்னாச்சு தாரா?"

"இல்ல, ஒண்ணுமில்ல ஷீத்தல்.."

"அட, நான் உன் ஃப்ரெண்டு தானே.. என்கிட்ட சொன்னா என்ன? ஆதித் சார் மேல உனக்கு நல்ல ஃபீலிங் இல்லையா? கல்யாணம்.... புடிக்கலையா?"

"ப்ச்.. எனக்கு இந்த வீட்டைப் பிடிச்சிருக்கு, ஊரைப் பிடிச்சிருக்கு, சாப்பாடு பிடிச்சிருக்கு.. எல்லாமே ஓகே. ஆனா, எங்க வீட்டுல, இது எதுவுமே இல்லாதப்ப கூட, சந்தோஷமா பேசி சிரிக்கறதுக்கும், சண்டை போட்டு சமாதானமாகறதுக்கும், ஒருத்தருக்கொருத்தர் அக்கறையா பாத்துக்கறதுக்கும் மனுஷங்க இருந்தாங்க. அம்மாவும் தன்னுவும் உயிரு எனக்கு... அப்பாவுக்குத் தெரியாம எத்தனை திருட்டுத்தனம் பண்ணாலும், எத்தனைமுறை காலேஜை கட்டடிச்சிட்டு சினிமாவுக்கு போனாலும், எத்தனை தடவை படிக்கப் போறேன்னு பொய் சொல்லிட்டு ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போனாலும், ஒருதடவை கூட என்னை யாரும் எங்கப்பா கிட்ட மாட்டி விட்டதில்ல. ஒருதடவை நானே மாட்டி அடிவாங்க இருந்தப்போ கூட, தன்னு எனக்காக வந்து வலிஞ்சு அடிவாங்கினான் அப்பாகிட்ட. அம்மா ஆயிரம் தடவை கடுகு டப்பால இருந்து காசு எடுத்துக் குடுத்துருப்பாங்க எங்களுக்கு. அப்பா திட்டி நாங்க அழும்போது, மடியில சாய்ச்சுக்கிட்டு கதை சொல்லித் தட்டிக் குடுத்து சமாதானப்படுத்தித் தூங்க வைப்பாங்க... ப்ச், எப்பவும் முறைச்சிட்டே இருக்கற எங்கப்பாவை கூட, இங்க வந்தபிறகு மிஸ் பண்றேன் தெரியுமா?"

பேசப்பேசவே கண்ணீர் கன்னங்களில் வழிய, ஷீத்தல் பதறிப்போனாள்.

"அச்சச்சோ.. என்ன தாரா.. இதுக்காகவெல்லாம் யாராச்சும் அழுவாங்களா? ஊருக்குப் போகணும்னு ஆதித் சார்கிட்ட சொல்லு, உன்ன அனுப்பி வைப்பார். அதைவிட்டுட்டு ஏன் அழற நீ?"

"எங்க ஊர்ல, கல்யாணமாகி ரெண்டே நாள்ல பொண்ணு தனியா வீட்டுக்குப் போனா, ஊருக்குள்ள எல்லாரும் எப்படி பேசுவாங்க தெரியுமா?
ஊருக்குப் போகணும்னா.. ரெண்டு பேரும்தான் போகணும். போனாலும், இப்ப இருக்கற மாதிரி ஆளுக்கொரு மூலையில இருக்க முடியாது. பெரியவங்க கேள்வி கேப்பாங்க. ஸோ, ஊருக்கு போற ஆசையெல்லாம் வீண்."

ஷீத்தல் பரிதாபமாகப் பார்க்க, தாராவே கண்களைத் துடைத்துக்கொண்டு, "பரவால்ல. நான் தனியா இருக்கப் பழகிக்குவேன். காலேஜ்ல மறுபடி ஜாயின் பண்ற ஐடியா இருக்கு. காலேஜுக்கு போக ஆரம்பிச்சிட்டா, தனியா உட்கார்ந்து கவலைப்படவெல்லாம் நேரமிருக்காதுல்ல?" எனச் சிரித்தாள் மேலோட்டமாக.

ஷீத்தல் சோகமான புன்னகையோடு அவள் தலையை வருடினாள். பின் ஏதோ யோசனை வந்தவளாக சட்டென எழுந்தாள்.

"வெளிய எங்கயாச்சும் போயிட்டு வந்தா உன் மனசு மாறும். வா"

தாரா தயங்க, ஷீத்தலோ வம்படியாக அவள் கரத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

வெளியில் நின்றிருந்த பஞ்சுமிட்டாய் நிற வெஸ்பா வண்டியில் அமர்ந்து ஷீத்தல் அதேநிற தலைகவசத்தை அணிந்துகொள்ள, வாய்பிளந்து பார்த்தவாறே தாரா நின்றாள்.

"ஏ.. என்ன பாக்கற!? ஏறி உட்கார்!"

மிடறுவிழுங்கியவாறு வண்டியையும் ஷீத்தலையும் மாறிமாறிப் பார்த்தவள், தயக்கம் மாறாமல் ஏறியமர்ந்தாள் வண்டியில். அவள் அமர்ந்த மறுகணமே விண்ணில் ஏவப்பட்ட ஏவுகணையைப் போல அவ்வாகனம் புறப்பட, ஷீத்தலின் தோள்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள் தாரா.

"கொஞ்சம் மெதுவாத்தான் ஓட்டுங்களேன்.. ரோட்டுல தான் யாருமே இல்லையே!?"

"யாருமே இல்லாத போதுதானே வேகமாப் போகமுடியும்!? ட்ராபிக்ல எப்படி வேகமா ஓட்டறது??"

அந்த லாஜிக் புரிந்தாலும், இத்தனை வேகம் ஆகாதென்பதும் தெரிந்ததால் மீண்டும் கெஞ்சினாள் தாரா.

"ஷீத்தல்.. நான் விழுந்துடுவேனோன்னு பயமா இருக்கு, மெதுவா ஓட்டுங்களேன் ப்ளீஸ்..."

ஷீத்தல் ஏதோ முனகியவாறே வேகத்தைக் குறைக்க, அதற்குள் பிரதான சாலையும் வந்துவிட, வாகனத் திரளில் கலந்தபோது, நடக்கும் வேகத்தில்தான் வண்டியை நகர்த்த முடிந்தது.

"பாத்தயா..? இந்த ரோட்ல ஸ்பீடா போக முடியாதுன்னு தான், டைம் சேவ் பண்ணலாம்னு அங்கிருந்தே ஸ்பீடா வந்தேன்"

தாரா தலையாட்டினாள் அமைதியாக.

"சரி, நீதான் கொல்கத்தா வீதிகளைப் பாத்ததில்லையே.. அப்படியே வேடிக்கை பார்த்து என்ஜாய் பண்ணு.. இதுதான் எங்க ஊரு."

"நான் இங்க முன்னவே வந்திருக்க மாதிரி இருக்கு..."

ஷீத்தல் அதில் சத்தமாக சிரித்தவாறே, "எப்போ?? முன்ஜென்மத்துலயா?" என்க, "இல்ல, நேத்து" என்றாள் தாரா.

நம்பமாட்டாமல் திரும்பித் தாராவைப் பார்த்தாள் ஷீத்தல்.

"நேத்து நீ டவுன் ஸ்கொயர் வந்திருந்தியா?"

"ஹான்.. மனுவோட வந்தேன். ஸாகித் மினாரெல்லாம் பார்த்தோம் நாங்க!"

ஆட்டோ ரிக்ஷாக்களின் ஹாரன் சத்தம் அதிகரிக்க, அதற்குமேல் கேள்விகள் கேட்க இயலாமல் வாகனத்தை செலுத்தினாள் ஷீத்தல்.

ஒரு ஷாப்பிங் மாலின் உள்ளே நுழைந்து வண்டியை அதனிடத்தில் நிறுத்திய பின்னர்தான் பேச முடிந்தது.

"மனுவா? யாரது?"

தாரா ப்ரின்சியின் வார்த்தைகள் நினைவிலிருந்ததால் லேசாகத் தயங்கினாள்.
".. ஒரு ஃப்ரெண்ட்"

ஆனால் ப்ரின்சியின் பேச்சுக்கு நேரெதிராய், ஷீத்தல் பூரிப்பான புன்னகையோடு, "வாவ் தாரா!! அதுக்குள்ள லோக்கல்ல ஃப்ரெண்ட்ஸ் பிடிக்க ஆரம்பிச்சுட்டயா!? க்ரேட்!! கண்டிப்பா உனக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க; யாருக்குத்தான் உன்னைப் பிடிக்காம போகும்..!? ஆனா நான்தான் உன் ஃபர்ஸ்ட் ஃப்ரெண்ட், அதை மறக்கக் கூடாது, டீல்?" என்றிட, தாராவும் மலர்ந்து புன்னகைத்து, அவளை ஆதுரமாக அணைத்துக்கொண்டாள்.

"ஃபர்ஸ்ட் ஃப்ரெண்ட் இல்ல; ஆனா பெஸ்ட் ஃப்ரெண்ட்!!"

"ஹ்ம், சரி பரவால்ல, இருக்கட்டும்"

ஷீத்தல் விளையாட்டான ஏமாற்றத் தொனியில் சொல்ல, தாரா இன்னும் சிரித்தாள்.

"சரி சொல்லு, உன் மனு எப்படி இருப்பான்? எங்க பார்த்த? எப்டி ஃப்ரெண்ட்சா ஆனிங்க?"

பேசிக்கொண்டே அவர்கள் வணிக வளாகத்தினுள் நடக்க, தாராவும் உற்சாகத்தோடு பதிலளித்துக்கொண்டே சென்றாள்.

வழக்கமான பெருநகரங்களில் இருக்கும் மால்களைப் போலத்தான் இருந்தாலும், அதையும் வியப்பாகவே விழிவிரித்துப் பார்த்தவண்ணம் வரும் தாராவை ஷீத்தல் பார்த்துப் புன்னகைத்தாள்.

"இதுவரை மால்ல ஷாப்பிங் பண்ணதே இல்லையா என்ன?"

தாரா மாறாத புன்னகையுடன் திரும்பினாள்.

"உண்மைய சொல்லட்டுமா? இதுவரை மால்ல நான் எதுவுமே வாங்கினதில்ல!"

"அட, ஏன் டியர்?"

"ம்ம்.. அப்பாவுக்கு எங்களை வெளிய கூட்டிட்டுப் போறதுக்கே பிடிக்காது. நாங்களா போனாலும்கூட, அவர் திட்டுவார்னு எதுவும் வாங்க மாட்டோம்.. சும்மா பார்த்துட்டு திரும்பி வந்துடுவோம்"

ஷீத்தலின் முகம் புன்னகையை இழந்தது.

"தாரா..."

"சேச்சே.. நான் சோகமாவெல்லாம் சொல்லல. அப்பா கொஞ்சம் ஸ்ட்ரிட்டு, அவ்ளோதான். தன்னுவுக்கு மால்ல விக்கிற பொம்மை மேலவெல்லாம் ஆசை.. ஆனா அப்பாவுக்கு பயந்துக்கிட்டு கேட்கக் கூட மாட்டான்.."

"ஹ்ம், உங்கப்பா இங்க இல்ல இப்போ! ஸோ, நாம ஷாப்பிங் செய்யப் போறோம், சாயங்காலம் வரைக்கும்-- இல்லல்ல, எல்லா கடையையும் பூட்டுற வரைக்கும்!!"

அவளைக் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு உயர்தர ஆடையகம் ஒன்றிற்குள் நுழைந்தாள் ஷீத்தல்.

"காலேஜுக்கு போறேன்னு சொன்னல்ல!? ட்ரெஸ் எடுப்போமா?"

"ஏற்கனவே நாலு செட் சுடிதார் வெச்சிருக்கேன் ஷீத்தல்.. அது போதாதா?"

ஷீத்தல் கறாரான பார்வையுடன், "காலேஜ்ல படிக்கற பொண்ணு, கலர் கலரா ட்ரெஸ் பண்ணி ஸ்டைலா இருக்க வேணாமா? நாலு சுடிதாரை மாத்தி மாத்தி போட்டுட்டு இருந்தா, சுத்தி இருக்கறவங்களுக்கு கடுப்பாகாதா?" என்க, தாரா அமைதியானாள்.

ஷீத்தல் அன்பாக, "ஆதித் நிவேதன் பொண்டாட்டி.. உன் ஹஸ்பெண்ட்டோட ரேஞ்சே தனி.. அவருக்கு இருக்கற வசதிக்கு, நீ கல்கத்தாவையே என்ன விலைன்னு கேக்கணும்.. நீ என்னடான்னா.. மாத்துத் துணி எடுக்கறதுக்கே இப்படி யோசிக்கற!இன்னும் சின்னப்பொண்ணாவே இருக்காத தாரா. Live a little." என்று தட்டிக்கொடுத்துவிட்டு, அவளுக்காக ஆடைகள் தேடிடத் தொடங்கினாள் மும்முரமாக.

"இது நல்லா இருக்கா? இது எப்டி இருக்கு? இந்தக் கலர் உனக்கு சூட் ஆகும்ல? இந்த டிசைனை பாரேன்..!"

அவள் அங்குமிங்குமாக அடுக்கியிருந்த ஆடைகளையெல்லாம் கலைத்துக் கலைத்து எடுத்துத் தாராவிடம் காட்ட, அவளோ தயக்கமான சிரிப்புடன் தலையை ஆட்டினாள் அமைதியாக.

ஷீத்தலே இறுதியில் இரண்டு ஜீன்ஸ் பேண்ட்டும், நான்கைந்து குர்த்திகளும் தாராவுக்காக எடுத்துவிட்டு, பில் கட்டச் செல்ல, தாரா ஓடிவந்து ஆதித் தந்துள்ள க்ரெடிட் கார்டை நீட்டினாள் அவளிடம்.

"எதாவது வாங்குறதுன்னா இந்த கார்டை யூஸ் பண்ண சொன்னார்"

"நான்சென்ஸ்! இது என்னோட கிஃப்ட்! நான்தான் பே பண்ணுவேன்!"

"ஷீத்தல்.. அதெல்லாம்--"

"ச்சுப்! அந்த அட்டையவெல்லாம் உள்ள வை! இன்னிக்கு முழுக்க உனக்கு என் ட்ரீட் தான்!"

கண்டிப்பும் அன்பும் சரிசமமாகக் காட்டும் ஷீத்தலை வியப்புடன் பார்த்தவாறே அவளுடன் சென்றாள் தாரா.












Bạn đang đọc truyện trên: Truyen247.Pro