24
சோர்ந்துபோய் அமர்ந்திருந்த தாராவிற்கு அவனது குரல் தேவகானமாய் ஒலித்திட, தாயைக் காணாது தவித்த கன்றாய் எழுந்து அவனிடம் ஓடினாள் அவள். அவனோ, அருகில் நின்ற மனிதருக்கு அவளை அறிமுகம் செய்தான் சலனமே இல்லாமல்.
"இது கொல்கத்தா சிட்டி கமிஷ்னர். சார், இது என் வைஃப் சிதாரா சீனிவாசன்"
கலங்கியிருந்த கண்களை அவசரமாகப் புறங்கையால் துடைத்துக்கொண்டு, சீருடையில் நின்ற அந்த நடுத்தர வயது மனிதரை நோக்கி சன்னமாகப் புன்னகைத்தவாறு கைகூப்பினாள் தாரா.
"வணக்கம் சார்"
அவரும் பதிலுக்கு வணக்கம் கூறிவிட்டு, ஆதித்திடம் பெங்காலியில் ஏதோ கூற, ஆதித் சிரித்து நன்றி சொன்னான்.
அவரை அமரச் செய்துவிட்டு தாராவிடம் திரும்பியவன், அவள் மெலிதாக விசும்பியபடி கண்ணீரைத் துடைப்பதைப் பார்த்துவிட்டான்.
லேசாக அவள்புறம் குனிந்து, "என்னாச்சு?" என்றிட, அவள் திகைத்தவளாய் நிமிர்ந்து மீண்டும் சட்டெனக் குனிந்துகொண்டாள்.
"ஒண்ணுமில்லயே.."
ஆதித்திற்கு என்னவோ போல் இருந்தது. தான் வற்புறுத்தி அழைத்ததால்—விருப்பமின்றி வந்ததால்—இங்கிருக்கப் பிடிக்காமல் துவள்வதாகப் புரிந்துகொண்டவன், இதழ்களை இறுக்கினான் அதிருப்தியாக.
"இன்னும் ஒருமணி நேரம் தான். அதுவரை பொறுத்துக்க."
"ஹ்ம்ம்"
தூரத்தில் நின்ற ராஜீவை கைகாட்டி அழைத்தான் அவன். அவனும் ஓடி வந்தான் அவசரமாக. "என்னாச்சு சார்? என்ன வேணும்?"
"கொஞ்சம் தாராவுக்கு கம்பெனி குடு. எதாவது வேணும்னு கேட்டா செய்" என பெங்காலியில் சொல்லிவிட்டு, தனது நிறுவன நிர்வாகிகளை கவனிக்க விரைந்தான் ஆதித் நிவேதன், தனதருகே நின்ற தாராவைத் திரும்பிக்கூட பார்ககாமல்.
தாரா துவண்ட முகத்துடன் ராஜீவைப் பார்க்க, அவனோ பற்களைக் கடித்துக் காற்றை உள்ளிழுத்தான் விளையாட்டுப் பரிதாபத்துடன்.
"ஸோ... லேடீஸ் மீட்டிங் அவ்ளோ வெற்றிகரமா நடக்கலை போல?"
தாரா தலையசைத்துவிட்டு ஓரமாக இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் சோர்வாக.
"அவங்களை மாதிரி நான் இல்லைதான். அது எனக்கும் தெரியும். அதனால தான் நானும் என்னால முடிஞ்ச வரை மரியாதையோட விலகி வந்துட்டேன். ஆனா ஆதித்தும் அதையே நினைப்பார்னு நான் எதிர்பார்க்கல. நான் எதுவுமே செய்யல.. இருந்தாலும் என்னால அவர் டிஸ்ஸபாயிண்ட் ஆகறார். என் பக்கத்துல நிக்க கூட சங்கடப்படறார், அதான் உங்ககிட்ட கோர்த்து விட்டுட்டு போயிட்டார்"
"அவ்ளோ கஷ்டமா இருந்தா நான் வேணா போயிடட்டுமா?"
"ப்ச்.. ராஜீவ்..!"
"ஓகே.. ரிலாக்ஸ். காமெடி. அட்லீஸ்ட் ஒரு அட்டெம்ட்"
அவள் தலையை ஆயாசமாக அசைத்துவிட்டு, தூரமாய் நின்ற பெண்கள் கூட்டத்தை ஏறிட்டாள்.
"உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?"
"என்னது 'தெரியுமா'?"
"அதான்.. மோனல் கபாடியா.. அவங்களோட..."
"மோனல் நம்ம ஜெயந்த் சாரோட பொண்ணுன்னு எல்லாருக்குமே தெரியுமே!"
அவன் சொன்ன தொனியை வைத்து அவனுக்கு அவர்களது திட்டங்களும் எண்ணங்களும் இன்னும் தெரியாது என்று தாரா புரிந்துகொண்டாள். ஆனால் ராஜீவ் இன்னும் நிறுத்தாமல் தொடர, தாரா சற்றே அதிசயத்துடன் கவனிக்கலானாள்.
"மோனல் வருவானு தெரியாது எனக்கும்! அவ எவ்ளோ பிஸியான மாடல் தெரியுமா? அவளை வெச்சு விளம்பரப் படம் என்ன, சினிமா படமே எடுக்க லைன் கட்டி நிக்கறாங்களாம்! அவளுக்கு தான் டைமே இல்லையாம்.."
பேசியவாறே கொஞ்சம் ஏக்கம் கலந்த பெருமிதப் பார்வையோடு தூரத்தில் நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்த மோனலை ராஜீவ் பார்க்க, தாராவின் கண்கள் வியப்பின் விளிம்பிற்கே சென்று மின்னின. சற்றுமுன்னர் நடந்தவற்றையெல்லாம் மனது அதிவேகத்தில் மறக்கடித்துவிட, ராஜீவையும் மோனலையும் ஒரே விழிவட்டத்தில் பார்த்தவள், அடக்கிய புன்னகையுடன் ஏதுமறியாதவளாய்த் தலையசைத்து ராஜீவை ஆமோதித்தாள்.
".. எங்க காலேஜ்ல தான் படிச்சா. ஆனா பேசிக்கிட்டதே இல்ல. ஹ்ம்ம்.. ஆமா.. சரி, நீங்க ஏன் அவங்களை பத்தி கேட்டீங்க?"
"அ.. ஒண்ணுமில்ல, சும்மா தான்.. அப்பறம்.. ராஜீவ், எனக்கு தாகமா இருக்கு, கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?"
அவன் மற்றதை புறக்கணித்து அவளுக்காகத் தண்ணீர் கொண்டுவர விரைய, தாரா பெருமூச்செரிந்தாள்.
ராஜீவால் எப்படி இதுபோன்ற பொருத்தமற்ற இடத்திலும்கூட சுயத்தை இழக்காமல் தன்னம்பிக்கையோடு திகழ முடிகிறதோ என்றொரு மரியாதை அவன்மீது வராமலிருக்கவில்லை அவளுக்கு. அவனுடன் அமர்ந்திருந்த வேளையில் கொஞ்சம் ஆறுதலை உணர்ந்தாள் அவள்.
சில பிரமுகர்கள் வந்து அவளிடம் பேசி வாழ்த்துச் சொல்ல, அவளும் மரியாதை நிமித்தமாகத் தலையை ஆட்டி, கையை கூப்பி, பொம்மலாட்டத்தில் நூலால் ஆடும் தன்னுணர்வற்ற பொம்மையாக தன் பணியை செய்தாள்.
ராஜீவ் உடனிருந்தாலும், கண்கள் ஆதித்தைத் தேடின. அவனைக் கண்டுகொண்டபோது, அவன் கிஞ்சித்தும் அவள்புறம் திரும்பாமல் வந்திருந்த முக்கியஸ்தர்களுடன் சிரித்துப் பேசி அளவளாவிடுவதை பார்க்கையில் கலங்கின.
'பெரியவர்கள் விருப்பத்தால் நடந்தது தான் என்றாலும், இது திருமணம் அல்லவா? அவன் கட்டிய இந்த மஞ்சள் நாணை நம்பியல்லவா ஆயிரம் மைல்கள் தாண்டி அவனோடு வந்திருக்கிறோம்!? தனியே நமது ஊரில் இருந்துவிடும் திட்டம் வேறு, இப்போது ஆதரவே இல்லாமல் இவனோடு ஒரே வீட்டில் ஒன்றாக இருக்கும் நிசர்சனம் வேறு. அழைத்து வந்ததற்காகவேனும் அன்பாக இருக்கலாமே கொஞ்சம்?'
"தாரா.. என்ன அமைதியாவே இருக்கீங்க?? எதாவது வேணுமா??"
ராஜீவின் அழைப்பில் தன்னிலை திரும்பியவள், "பாத்ரூம் எங்க இருக்கு?" என்றாள் அழுகை தோய்ந்த குரலில்.
அவன் ஏதோ கேட்க வாயெடுத்து, பின் தனக்குள் விவாதித்து வாய்மூடிக்கொண்டு, கையை மட்டும் காட்டினான்.
தாரா அவசரமாக அக்கட்டிடத்தினுள் விரைய, ராஜீவ் தன் எஜமானனைத் தேடப் போனான் தோள்களைத் தொங்கவிட்டுக்கொண்டு.
யாருடனோ பேசிக்கொண்டிருந்த ஆதித்தைப் பார்த்தவன், அவர்கள் சென்றபின்னர் ரகசியமாய் அவனருகே நின்று கிசுகிசுத்தான்.
"பாஸ்.. உங்க பார்ட்டி நைட்டு வரை தாங்காது போல."
"என்ன சொல்ற, பார்ட்டில என்ன ப்ராப்ளம்?"
"இந்த பார்ட்டி இல்ல பாஸ், உங்க பார்ட்டி."
ஆதித் முறைக்க, ராஜீவ் ஓய்வறையை நோக்கிக் கண்காட்டினான். ஆதித் ஆயாசமாகத் தலையைக் கோதினான் இடதுகையால்.
"என்னதான் பிரச்சனையாம்??"
"நீங்கதானாம்!"
"ப்ச், ராஜீவ் ஐ ஸ்வேர்--"
கோபமாக அவன் வார்த்தைகளைக் கடிக்கத் தொடங்க, ராஜீவ் கையுயர்த்தி அவசரமாகத் தடுத்தான். யாரோ விருந்தினர் ஆதித்தை அணுகவும் முகத்தை மாற்றிக்கொண்டு சிரித்து வரவேற்றான் அவர்களை. சில நிமிடங்கள் அவர்கள் பேசிச்செல்ல, ஆதித் கோபமுகத்தை மறுபடி கொணர்ந்தவாறு ராஜீவிடம் திரும்பினான்.
"பாஸ்.. நான் சொல்ல வர்றதை ஒரு செகண்ட் கேளுங்க. உங்க அப்ரோச் நல்லதுதான். அதுல தப்பே இல்ல. ஆனா, நீங்க நினைக்கிறபடி தாராவும் நினைக்கணும்ல? பாவம், ஊரு உறவையெல்லாம் விட்டுட்டு உங்களை நம்பி வந்திட்டவங்களை, கொஞ்சம் நல்லமுறையா ட்ரீட் பண்ணினா தான் என்ன? ஏன் பாஸ் அவங்களை எனிமி மாதிரி நினைக்கறீங்க?"
ஆதித் முகம்சுழித்தான்.
"வாட் நான்சென்ஸ்!? நான் இப்பவும் அவளுக்கான ஸ்பேசை குடுக்க முடியாம போச்சேன்னு தான் வருத்தப்படறேன். யாரையும் சார்ந்து இருக்கவேணாம்னு நானே காலைல சொல்லிட்டு, இப்ப அதே முகத்தோட அவளை கம்பெல் பண்ணி இங்க கூட்டிட்டு வந்திருக்கேன். I feel bad about this. I feel sorry. இதுல அவளை எதிரியா எப்போ நான் நடத்துனேன்னு சொல்ற!?"
ஆதித்தின் கையறுநிலையும் ராஜீவுக்குப் புரிந்தது. ஆனால் தாரா தன்னிடம் சொன்னவற்றை அவனுக்குச் சொல்லவும் அவனது நம்பகத்தன்மை தடுத்தது.
ஒருகண யோசனைக்குப் பிறகு நிமிர்ந்தான் ராஜீவ்.
"தெரிஞ்சோ தெரியாமலோ-- நோ நோ, ஸாரி பாஸ்-- என்னென்ன நடக்கும்னு நல்லா தெரிஞ்சிகிட்டே தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்க நீங்க! ஐநூறு கிலோமீட்டருக்கு அப்பால் இருந்தாலும் இங்க யாரு பாஸுன்னு பர்வதம்மா காட்டிட்டு இருக்காங்க! அப்ப, இந்த பிரச்சனைகளை ஏன் நீங்க மட்டும் தனியா சமாளிக்கணும்னு நினைக்கிறீங்க? தாராவும் இதுல சிக்கிட்டு தான் இருக்கா. She is your team. You two are together in this. தாராவோட சேர்ந்து நின்னு போராடுங்களேன் பாஸ்."
"போராடணுமா?" சிரிப்புடன் வினவினான் ஆதித்.
"பின்ன! உங்க சுதந்திரத்திற்காக போராட வேணும்ல? அதுல தாராவோட சுதந்திரமும் தானே அடங்கியிருக்கு! ஸோ, அவங்களை சேர்த்துக்கங்க உங்களோட. தனியா நிக்காதீங்க; இங்கயும், எங்கயும்."
ஆதித் அவனை வினோதமாகப் பார்த்தாலும், ஒப்புக்கொண்டு தலையசைத்தான்.
.
அழிந்த கண்மையை சரிசெய்தவாறே தாரா வெளியே வர, சில இளம்பெண்கள் அவளைப் பார்த்துவிட்டு ஏதோ பெங்காலியில் கரிசனமாக வினவிட, எதுவும் புரியாமல் தாரா விழிக்க, ராஜீவிற்காக கண்களை அங்குமிங்குமாகத் திருப்பித் தேடிய கணத்தில், "உனக்கு எதாவது பிரச்சினையா, எதாவது வேணுமான்னு கேட்கறாங்க" எனத் தன்னருகே ஒரு குரல் வர, நிமிர்ந்து தனக்குச் சற்றுத் தூரத்தில் நின்ற ஆதித்தை வியப்போடு பார்த்தாள் அவள்.
அவனே அவர்களிடம், "It's alright. I'll take care" என்றுசொல்லி அனுப்பி வைத்துவிட்டு, தாராவிடம் திரும்பி, "பசிக்கலையா..? சாப்பிடப் போலாமா?" என்றிட, தாரா தன்னையே நம்பாமல் விழிவிரித்துப் பார்த்தாள் அவனை.
அவள் நின்றிருந்த நிலையைக் கண்டு லேசாகப் புன்னகைத்தவன், "வா போலாம்" என்றவாறு அவளை அழைத்துக்கொண்டு உணவுமேசைக்கு நடந்தான். தாராவும் பதிலின்றி உடன்நடந்தாள்.
மேசையில் கபாடியா குடும்பத்தினரும் வேறு சிலரும்கூட அமர்ந்திருக்க, தாரா ஆதித்தின் அருகே அமர்வதை அதிருப்தியான பார்வையுடன் பார்த்தார் லதா கபாடியா. ஆனால் இம்முறை ஏனோ அவர்களது பார்வைகள் பாதிக்கவில்லை அவளை. மற்ற பெண்மணிகள் வெறும் பச்சைக் காய்கறிகளை சாலட் என்று உண்டுகொண்டிருக்க, தாராவோ தன் தட்டில் நான்கைந்து ரசகுல்லாவை மீட்டி வைத்துக்கொண்டு சாப்பிடத் தொடங்கினாள். பரிசாரகர்களிடம் பதார்த்தங்களின் பெயர்களை ஒன்றொன்றாகக் கேட்டுத் தெரிந்துகொண்டாள். அனைத்தையுமே மறுக்காமல் தட்டில் வாங்கிக்கொண்டு ருசி பார்த்தாள்.
மனது ஏனோ கொஞ்சம் லேசானதுபோல இருந்தது. வெறும் சில வார்த்தைகள் தான்; ஆனால் அவன் பேசிய நொடிகள் ஆறுதலாக இருந்தன. யாருமற்ற நேரத்தில் தன்னை ஆதரவோடு அழைத்த ஆதித்தை மிகமிக மெலிதான புன்னகையுடன் நோக்கிவிட்டுக் குனிந்துகொண்டாள் தாரா.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro